Saturday, 14 March 2015

சாகனே தேவாலயம்- ஒஸ்லோவின் கதைகள் 003

கோடை காலத்தில் சைக்கிளில் நான் வசிக்கும் உயரமான புறநகர்ப் பேட்டையில் இருந்து கீழே இறங்கி வளைந்து வளைந்து செல்லும் பாதையில் ஒஸ்லோ நகரத்துக்குப் போகும் வழியில் சாகனே என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தத் தேவாலயத்துக்கு போறவழியில் ஒரு கும்பிடு போட்டு விட்டு சைக்கிளில் ஓடிக்கொண்டே போவது.

                                                            நேரம் கிடைக்கும் ஒரு நாள் ராஜகுமாரன் நூல் ஏணியில் ஏறி ராஜகுமாரியை நோகாமல் கைத்தாங்கலாக  இறக்கி வெள்ளைக்குதிரையில் கடத்திக்கொண்டுபோய் கலியாணம் கட்டும் கதைகளில் வரும் மாளிகை போல இருக்கும் இந்த இடத்தை கொஞ்சம் உள்ளிட்டுப் பார்க்க வேண்டும் என்று எப்பவும் நினைப்பது,

                                   ஒஸ்லோவில் உள்ள மற்ற தேவாலயங்களில் இருந்து மாறுபட்ட ஒரு கட்டடக்கலை வடிவில் உள்ள இந்தக் கோவிலை ஆறுதலாக கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க எப்பவுமே நினைப்பது ஒரு வெயில் எறிக்கும் நாளில் கர்த்தரின் கருணையால் சாத்தியம் ஆகியது.

                              விசுக் என்று என்னோட சைக்கில் பறக்கும் போது சில செக்கன் மட்டுமே விசுக் என்று முகம் கொடுக்கும் இந்த சாகனே தேவாலயம் இருக்கும் இடமே, அவசரமான, அலங்கார ஒஸ்லோ நகரத்தின் அபரிமிதமான நவீன நெரிசல்களில் இருந்து கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக .

                                                நகரத்தின் விளிம்பில் , ஒஸ்லோவை ஊடறுக்கும் ஆர்கிஸ் எல்வா நதியின் கரையில் இருக்கும் குன்னர் லொக்கா என்ற ஜெர்மன் பெயரில் இருக்கும் சின்ன டவுனின் நெத்தியில் வைச்ச குங்குமப் பொட்டுப்போல இருக்கும் சாகனே என்ற இடத்தில இருக்கு.

                             குன்னர்லொக்கா என்ற பெயரே ஒஸ்லோவில் உள்ள ஒரே ஒரு ஜெர்மன் எழுத்தில் உள்ள பெயர்,அது எப்படி இங்கே வந்தது எண்டு எனக்கு தெரியவில்லை,ஆனால் குன்னர்லொக்கா பெயரில் உள்ள  ü  என்ற எழுத்து நோர்வேயின் நோர்க்ஸ் மொழியில் இல்லை .

                                                    குன்னர் என்பது குறி பார்த்துச் சுடும் இராணுவ வீரர்களுக்கு மத்தியகால ஐரோப்பாவில் பாவிக்கப்பட்ட பெயர்,  லொக்கா என்பது  முகாம் அல்லது பண்டகசாலை என்ற நோர்வே மொழிப் பெயர் .ஒருவேளை ஜெர்மன் இராணுவ வீரர்கள் அந்த இடத்தில முகாம் அமைத்து நோர்வே நாட்டுப் பெண்களுக்கு பண்டகசாலையில் ரோமன்ஸ் செய்து

                                                       " இச் லைபே டிச், நெய் வர்லேசன், அல்லாஸ் கிழா அல்லாஸ் வுட்ன்டர்பார்  "

                                                                  என்று டொச்சில் சொல்லி வாழ்வு கொடுத்த இடமாக இருக்கலாம் போல

                                        தேவைதைகளின் அட்வென்ச்சர் கதைகளில் வருவது போல உள்ள சாகனே தேவாலயம் பதினெட்டாம் நுற்றாண்டில் ஆர்கிஸ் எல்லா நதியின் தண்ணியை மறித்து அதில நீர்வலு மூலம் இயந்திரங்களை இயக்க வைத்து,உடல் வலுவில் முறிந்து முறிந்து எலும்பை உறைய வைக்கும் குளிரில், பல நுற்றாண்டுகள் முன்னம் வாழ்ந்த எதையும் தாங்கும் இதயமுள்ள உழைப்பை உயிர் வரை நேசித்த நோர்வேயிய மக்கள்,

                                                                 துணி செய்யும் தொழிற்சாலை, ஆணியில் இருந்து ரெயில் தண்டவாளம்  போன்ற இரும்பு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றவற்றை உற்பத்தி செய்த உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த இடமான சாகனையில் இந்த சாகனே தேவாலயதை கடவுள் நம்பிக்கை உள்ள அந்த தொழிலார்கள் தேவனோடு வாழ்பவர்கள் தேவப் பிள்ளைகள் என்ற நம்பிக்கையில் மத்தியகால நோர்வேயின் கிறிஸ்தவ நம்பிக்கையில் கட்டி இருக்குறார்கள்.

                                       நோர்வேயிலேயே சாகனே தேவாலயம்தான்  கோத்தே ஸ்டைல் அற்கிடேக்சரில் கட்டப்பட்ட முக்கியமான தேவாலயம் ,இந்த தேவாலயக் கோபுரத்தை நியோ கோத்தே ஸ்டைல் என்று சொல்லுறார்கள், வடக்கு ஐரோப்பாவில் இப்படி கோத்தே ஸ்டைல் கட்டிடக்கலை யில் கட்டப்பட்ட தேவாலயங்களில்  சாகனே தேவாலயம் அதன் உள்ளே உள்ள பைன் மரத்தால் செய்யப்பட்ட எண்கோண வடிவ பலிபீட மேடை போல வேற எங்கேயும் இல்லை என்கிறார்கள்.

                                இந்தத் தேவாலயத்தின் கருவறையில் ஜேசுநாதர் சிலுவையில் இருந்து கழட்டி இறக்கப்படும் கிறிஸ்டியன் பேரன் என்ற ஒரு நோர்வே நாட்டு புகழ்பெற்ற வரைஞ்சரின் ஒரு ஓவியம் மட்டுமே தொங்கவிட்டுள்ளார்கள்.மிக மிக அரிதாக Hollenbach organ என்ற மரத்தால செய்யப்பட்ட ஓர்கன் வாத்தியம் உள்ளது,நோர்வேயில் இந்த ஒரே ஒரு தேவலாயதிலையே அது உள்ளதாம்,அது 1891  இல் இருந்து இப்பவும் வாசிக்கப்படுவது ஒரு அதிசயம்.

                               கிறிஸ்தவ நம்பிக்கை,அந்த சமய அனுஷ்டானங்கள் அரிதாகி ஒரு வித நளினமான நாகரிக வாழ்கையில் நோர்வே மக்கள் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இன்றைய நாட்களில் சாகனே தேவாலயம் கடந்து போன காலத்தின் ஒரு அடையாள சின்னம் போல இருக்கு  ,

                                                    ஒரு காலத்தில் வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக இருந்ததுக்கும் , அதை  விழிப்புணர்வுணர்வோடு சிந்திக்க வைத்து , அந்த  உரிமையை  இப்பவும் பறித்து எடுக்க முடியாதவாறு வரலாற்று சாட்சியாக ஒரு சின்ன ஒதுக்குப்புற நகர விளிம்பில் கம்பிராமாக நிற்கிறது சாகனே தேவாலயம்,

                                                                               அதன் மயக்கும் பிரமிப்பில் சில நிமிடங்களே கரைந்து போக எண்ணம் அனைத்தும் நின்றுவிடும் போல இருந்தது.


" நீ ஏன் குடிக்கிறாய் " ..

சென்ற வருடம் பிறப்பதுக்கு சில மணித்தியாலங்கள் முன்,மம்மல் நேரம் நல்லா மை பூசிக்கொண்டு மம்மிக்கொண்டு மெட்ரோ ட்ரெயினில் ஏறி இருந்து " உலகம் பிறந்தது உனக்காக எனக்கா இல்லை ,,இல்லவே இல்லை " என்று பாடிக்கொண்டு உலகம் மறந்து வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்த நேரம் ஒரு ஆபிரிக்க இளஞ்சன்,கொஞ்சம் நடக்கக் கஷ்டப்பட்டு நடந்து வந்து எனக்கு முன்னால இருந்த சீட்டில வந்து இடி அமின் போல இருந்தான் ,
                 நான் சந்தோசமா பாடுறேன் என்று நினைத்து சிரித்துக்கொண்டே
                " ப்ரதர் ஹாப்பி நியூ இயர் " 
                             என்று ஆங்கிலத்தில் சொன்னான்,நான் அதுக்கு பதில் சொல்ல தாமதித்தேன் ,
                 " ஏன் உனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்ல தயக்கமா " 
       என்று கேட்டான்,,

                 நான் " புதுவருடமும் புடலங்காயும்...." 

                                 என்று ஆங்கிலத்தில் வேண்டா வெறுப்பாக சொன்னேன்,அவன் திடுக்கிட்டு 
                                " ஏன்பா இப்படி சொல்லுறாய் "
                                                                                     என்று பொப் மார்லி ஸ்டைலில் கையை பொத்திக்கொண்டு கேட்டான்,நான் அதுக்கும் ஏதவாது எடக்கு முடக்கா பதில் சொல்லுவேன் போல அவனைப் பார்த்தேன் ..
                 அவன் கொஞ்சம் ஜோசிதுப்போட்டு
                                                  " நீ உண்மையில் சந்தோஷமா ஹப்பி நியூ இயர் என்று சொல்லாலம் " என்று சொன்னான், 
                                     " நீ ஏன் இப்படி சொல்லுறாய் " என்று கேட்டேன்,,,அவன்

                                        " நல்லா ஜோசிதுப்பார் நீ இப்ப அந்தா இந்தா என்று ஆசுப்பதிரியிலையோ, கம்பி எண்ணிக்கொண்டு ஜெயிலிலையோ.அல்லது விழி பிதுங்க பயங்கர அகதிகள் தட்டுப்பு முகாமிலோ இல்லை கையைக் காலை நல்லா ஆட்டிக்கொண்டு சுதந்திர மனிதன் போல இருக்கிறாய்,அதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லியாவது ஹாப்பி நியூ இயர் என்று சொன்னால் உனக்கு என்ன நாலு பணம் குறைந்து போகப்போகுது " 

                      என்று சொல்லி அவன் ருவாண்டா என்ற ஆபிரிக்க நாட்டில் இருந்து உயிர் அரசியல் அகதியாக நோர்வே தப்பி வந்த கதை சொன்னான்

                                           அவனைப் பார்க்க கொஞ்சம் பயமா இருந்து, எழும்பி என்னோட முகத்தில குத்தினான் என்றால் என்னோட சீவியமே கிழியும் போல இருந்தது அவன் தோற்றம், ஆனால் அவன் பொறுமையா " இவன் வாயை மட்டும் வைச்சுக்கொண்டு வாழ்கையை ஓட்டும் அற்ப ஜீவன் " போல பார்த்துக்கொண்டு இருந்தான் .இடை இடையே " வாழ்க்கை சுவாரசியமானது அதை ரசித்து வாழ முயற்சிக்கும் போது " என்று மெதுவா சொல்லி கொண்டு இருந்தான்
                                           நான் பொறுமையாகக் அவன் சொன்ன அவலக் கதையைக் கேட்டேன். கேட்டுப்போட்டு

                          " என்னிடம் இப்ப வோட்கா இருக்கு குடிக்கப் போறியா என்னோட சேர்ந்து " என்று கேட்டேன் ,அவன் அமைதியாக இருந்தான், கொஞ்ச நேரத்தில் ஒரு கேள்வி கேட்டான்
                             ," நீ ஏன் குடிக்கிறாய் " 

                                            என்று கேட்டான் ,நான் அதை விட நினைத்தாலும் அது என்னை விடுகுது இல்லையே என்று " வாயல வங்காளம் போகும் மகாரசன் பெண்சாதி மர்மக்காரி யாருடன் சொன்னாலும் திறமைக்காரி " கதை போல வித்தையைக் காட்ட நினைத்தேன் ,ஆனாலும் அது எடுபடாது என்று நினைச்சு வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தேன்..
                                                            இந்தக் கேள்வியோட அவன் கொஞ்சநேரம் என்னைப் பார்த்திட்டு ,
                                      " சில நேரம் நீ உன் கடந்தகாலக் கவலையை மறக்கக் குடிக்கலாம் ஆனாலும் இந்த உலகத்தில் பெண்கள் எவளவு கஷ்டத்தை தாங்கி வாழுறாங்க,அவர்கள் எல்லாரும் குடிகுரார்களா " 

                                             என்று கேட்டுப்போட்டு,நொண்டி நொண்டி அடுத்த ஸ்டேஷனில் இறங்க வெளிக்கிட அவனோட காலைப் பார்த்தேன் ,அவன் இரண்டு காலும் பிளாஸ்டிக் கால் போட்டது போல இருந்து,
                                    " என்ன பார்க்கிறாய், கண்ணி வெடியில சிதறிப் போய் விட்டது என்னோட இரண்டு காலும் முழங்காலுக்கு கீழே " 

                                  என்று சொல்லிப்போட்டு கெந்திக் கெந்திக் இறங்க முதலும் " ஹாப்பி நியூ இயர் " என்று சொல்லிப்போட்டு போயிட்டான்

                          அவன் கேட்ட , " நீ ஏன் குடிக்கிறாய் " என்ற கேள்வி சென்ற வருடம் முழுவதும் மனடையைக் குடைந்துகொண்டே இருந்தது ,பல சமயங்களில் நாங்கள் எல்லாருமே கிருஷ்ண பரமாத்மா ஜீவாத்மாக வாக வரும் மகாபாரத்தில் கிருஷ்ணனிதும் யாதவ குலத்தினதும் அழிவு ஏற்பட்ட " எந்தக்கடலில் இரும்பு உலக்கை பொடி செய்யப்பட்டு கரைக்கப்பட்டதோ அதே கடலின் கரையிலேயே இவர்கள் மது அருந்தி களி நடனம் புரிந்தனர்." போன்ற .....வாக்கியங்களையும் அதலா வந்த சாத்யகி , கிருதவர்மன் மது உறக்கத்தில் இருந்த உபபாண்டவர்களை அஸ்வத்தாமனுடன் சேர்ந்து கொன்ற சம்பவங்களை என்னமோ உலக மகா தத்துவம் போல திருப்பி திருப்பி படித்தும்,ஜோசிதுக்கும் கொண்டும் இருக்கிறோம்,ஆனால் சாதாரண ஒரு மனிதன் கேட்ட ஒரு சின்னக் கேள்வி இப்பவும் என்னை சித்திரவதை செய்கிறது....
                      .....என்ன சீவியமாட இது .....


Friday, 13 March 2015

ஒருங்கிணைந்து செல்லும் போது

உறைபனிக்கு
இடம்பெயர்ந்து போன
பறவைகள்
திரும்பி வரும் போது
வெயிலோடு போராடி 
நிறங்கள்
மாறினாலும்
வாழ்வு கொடுத்த
மரங்கள்
வாக்குத் தவறி
மற்றொன்றாக
மாற முயல்வதில்லை..
பயனற்ற பேச்சுக்கள்
உறைந்து போய்
நிகழ்காலத்தில்
சலிக்க விடாமல்
கூட்டிக்கொண்டு வந்த
குஞ்சுகள்
கிளைகளில் அலகு தீட்டி
அனுபவிப்பதை
அவைகள்
தடுப்பதுமில்லை .
இயற்கையில்
எல்லாமே அழகாக
ஒருங்கிணைந்து
செல்லும் போது..
வாழ்வின்
அற்புதங்களில் இருந்து
நம்மைப்
பிரித்துப் போடும்
அறிவு தான்
எப்பவுமே எதிரி.
கோடை காலம்
முழுவதுமே
பறவைகளும்
மரங்களும்
ஏற்படுத்திக்கொண்ட
புரிந்துணர்வுதான் தான்
முதலும்
கடைசியுமான
சுதந்திரம்.
.

Thursday, 12 March 2015

புறாக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்……

விட்டுப் பறந்து
போய் விடுமோவென்ற
பயமெல்லாம்
நமக்குள்
கூடு கட்டி வாழ
வாய்ச்சண்டையைக்
விரும்பாத
புறாக்கள்
என்றும் தனித்து
வாழ விரும்புவதில்லை...
சுமையாகிப் போன
சின்னஞ்சிறு
விஷயத்தையும்
பார்ப்பதற்கு
கொண்டாட்டமாக
மாற்றி விட்டு
எந்தவித
எதிர்ப்பார்ப்புகளையும்
பதிலுக்குக்
கேட்பதில்லை.
குறைத்து மதிப்பிடுவது
கூடவே பிறந்த
எங்களிடம்
அன்பைக் கொடுத்து
நீங்கள்
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளுங்களென்று
முழு சுதந்திரத்தையும்
அனுமதிக்கிறது.
தலைக்கனத்தால்
கற்றுக் கொள்ள
தவறிய
தன்னடக்கத்தை
புறாக்களிடம்
கற்றுக்கொள்ளுங்கள்..
முட்டாள்தனத்தை
குணங்களின்
குறியீட்டு சொல்லாகப்
பழக்கத்தில்
வைத்துள்ள
மனிதர்கள் போல
மற்றப் பறவைகள் பற்றிய
கதைகளை
அவை கேட்பதில்லை.
தத்திச் செல்லும்
நடையால் கவர்ந்து
வாஞ்சையோடு
பழக விரும்பும்
புறாக்கள் போல்
சில நிமிடங்களே
நடக்க முயற்சிக்கவும்
முடிவில்
மனிதன்தான் என்ற
நினைப்புக்கு
வந்து விடுகிறது
.
.// சில வாரம் முன்னர் வேலைக்குப்போகும் போது ஒஸ்லோ நகரத்தில் சந்தடியான ஒரு இடத்தில் இந்தப் புறாக்களைப் மொபைல் போன் கமராவில் படம் எடுத்தேன்///

இதுக்கு மேல என்ன வேண்டும் ! ஒஸ்லோவின் கதை 001.

ஐரோப்பாவின் மிகப் பழமையான கடலோடிகளின் வரலாற்றில் நிரந்தரமா முக்கியத்துவம்  சேர்த்த நகரம் ,வட துருவ நோர்வேயின் கலாச்சாரப்  ,பொருளாதாரத்  தலைநகர் , என்னைப்போல பல வந்தேறு குடிகள் ஆறு மாதம் குளிரைத் திட்டிக்கொண்டும் ,ஆறு மாதம் கொஞ்சம் மிதமான வெய்யிலில் சுகமான காற்றைச் சுவாசித்து  வருடக்கணக்கில் வசித்துக் கொண்டும்  இருக்கும் இந்த ஒஸ்லோ நகரம், தலைக்கணம் இல்லாத  சின்னத் தலை நகரம்.

                                     பல வருட அயல் நாடுகளின் கழுத்தறுப்புக்களை , இரண்டாம் உலக யுத்த நாஸி  ஜெர்மனியின் அழிப்புக்களை மவுனமாகத் தாங்கிக்கொண்டு , ஒரு காலத்தில் வைக்கிங்குகள் என்ற கடல்க் கொள்ளைக்காரரின்  தற்காலிக தங்குமிடம் இருந்த, ஒரு பக்கம் கடலும் மற்றைய மூன்று பக்கமும் மலைகளும் சூழந்த, நீண்ட நோர்வே நாட்டின் தெற்கில் கடல் விளிம்பில் இருக்கும்  விடிவெள்ளி நகரம் ஒஸ்லோ.

                                             " ஒஸ்லோ " என்று பெயர் வரக் காரணம், அந்தப் பெயரின் முதல் எழுத்தான  " ஒஸ் " என்பது பழைய நோர்வேயிய மொழியில் , வடக்கு கடலையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கண்னுக்குள்ள  விரலை விட்டு ஆட்டிய வைகிங்குகள் என்று அழைக்கப்படும் கடல் கொள்ளைகாரர்களும் , வடக்கு நோர்வேயில் வசித்த  லாபியர்கள் என்ற நோர்வேயின் முப்பாட்டன் காலத்து   ஸ்கண்டிநேவியப் பழங்குடி மக்களும்  இயற்கையை வழிபட்ட காலத்தில், அவர்கள் வழிபட்ட ஒஸ் என்ற கடவுளின் பெயரை முன்னுக்கு வைத்துள்ளார்கள்.

                    ஒஸ்லோவின்  பின்  அடியாக வரும்  " லோ "  என்பது மலைகள், காடுகள் ,கடல் சூழந்த மலைகள் உள்ள நிலப்பரப்பு என்று பழைய நோர்வேயிய மொழியில் உள்ள வார்த்தையையும் இணைத்து ஒஸ்லோ எண்டு பெயர் வந்தது எண்டும் சொன்னாலும், எல்லா வரலாறுக்குக்  குழப்பம் போல இந்தப் பெயர் வரவும்  வேறு சில விளக்கம்களும் இருக்கு எண்டும் சொல்லுறார்கள்.

                                          பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னமே, கடல் வழி வியாபாரத்தில் பொருளாதார ரீதியாகப்  புகழ் பெற்று , புழக்கத்தில் இருந்த ஒஸ்லோ என்ற பெயரை, 1624 இல்  நோர்வே, சுவிடனை ஆண்ட டன்மார்க் நாட்டு சக்கரவர்த்தி கிறிஸ்டியான் IV தன்னோட பெயரையும் ,அவர் அம்மாவின் பெயரையும் இணைத்து கிரிஸ்தானியா என்று மாற்றி இருக்குறார்.

                                       1905 இல் நோர்வே அந்த சக்கரவர்தியின் டேனிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் 1925 இல் தான் மறுபடியும் , ஆக்கிரமிப்பின் அடாவடித்தனத்தில் இழந்து போன ஒஸ்லோ என்ற பெயர் உத்தியோக பூர்வமாக இந்த நகரத்திக்கு மறுபடியும் கிடைத்து இருக்கு. இன்றும் ஒஸ்லோவில் கிரிஸ்தானியா என்ற பெயரில் பல பழைய ஹோட்டல்  கட்டிடங்கள், சதுக்கம் வளைக்கும் இடங்கள், சிற்பங்கள் நிறைந்த பூங்காக்கள் , பழைய கருங்கல்லுப் பதித்த வரலாற்று வாசம் வீசும் வீதிகள் இந்த நகரத்தில் வரலாற்றின் கறுத்தப் பக்கத்தின் சாட்சியாக இருக்கு. 

                           இன்றைய திகதியில் இந்த நகரத்தின் முக்கிய லேன்ட் மார்க் என்று சொல்லப்படும் ஒஸ்லோ ஒபேரா ஹவுஸ் இருக்கும் பியோர்விக்கா என்ற இடத்திலும்,அதற்கு வெளியே ஒஸ்லோ பியோர்ட் கழிமுகத்தில் உள்ள ஹுவாட் ஓயா என்ற சின்ன தீவிலும் ,ஒஸ்லோ பியோர்டில் உள்ள இன்னொமொரு பெரிய தீவான மால்ம்ம் ஓயாவிலும் ஆயிரம் வருடம் முன்னமே எலும்பை உறைய வைக்கும் விண்டர் கால உறை பனியைச்  சமாளிக்கும் வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மக்கள் வசித்து இருக்கும் அடையாளங்களைத் தோண்டி எடுத்து அந்த இடங்களில் இப்பவும் அந்த ஐஸ் ஏச் கால வாழ்விடங்களின் அடையாளங்களைப் பார்க்க முடியும். 

                                               இந்த சின்ன நகரத்தில் அண்மையில் செய்த கணக்கெடுப்பின் படி ஆறு அரை லட்சம் மக்கள் சண்டை சச்சரவு இல்லாமல்  அருகருகே அண்ணன் தம்பி போல வாளுறார்கள் எண்டும் ,இன்றைய திகதியில்  நகரத்தின் கால் வாசி சனத்தொகை நோர்வேயில் பிறக்காத வேற்று நாட்டு மக்கள், அவர்களின் பிள்ளைகள் என்றும்  சொல்லுறார்கள்.

                           பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் இந்த நகரத்தில் கையைக் காலை நீட்டி வைச்சு ,நெருக்கம் இல்லாமல் ஆசுவாசமாய் வெறும் முப்பதுணாயிரம் மக்களே பரந்து வாழ்ந்த இடத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சடார் எண்டு சனத்தொகை இரண்டு இலட்சத்தி இருவதுணாயிரமாக  உயர்ந்து உள்ளது எண்டும் புள்ளி விபரம் புள்ளி புள்ளியா சொல்லுது.

                               அதுக்கு காரணம் நோர்வேயையும் சுவீடனையும் இணைத்து காலுக்க வைச்சு நெரிசுக்கொண்டு இருந்த குட்டி நாடான டென்மார் இந்த இரண்டு நாட்டுக்கும் போனாப் போகுது எண்டு சுதந்திரம் கொடுத்துப் போட்டுப் போனது எண்டு சொல்லுறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனாலும் எவளவுதான் பல்லின மக்கள் வாழந்தாலும் இன்னும் இந்த சின்ன நகரம் மற்ற ஐரோப்பிய மெட்ரோபொலிட்டன்   ஆடம்பர அலங்காரத் தலை நகரங்களுடன் ஒப்பிடும் போது இன்னும் வயசுக்கு வராத பெண்ணின் அடையாளங்களுடன் தான் இருக்கு....

                                       ஹென்றிக் இப்சன் என்ற உலகப் புகழ் நாடக எழுத்தாளர் வசித்த, உலகம் வியக்கும் குஸ்தாவ் வியிலான்ட் என்ற சிற்பி கருங்கல்லில் சிலைகளுக்கு உயிர் கொடுத்த , உலகம் ரசிக்கும் எட்வார்ட் முன்ச்ச் என்ற ஓவியர் அபத்த நிறங்களில் வாழ்வின் அவலத்தை வரைந்த , மிகப் பழமையான பூங்காக்கள் , இயல் இசை நாடகக்  கலாச்சார  மையங்கள் இருக்கும்  ஒஸ்லோ ஐரோப்பாவின் குளிர்கால விளையாடுக்களின் தலை நகரம்.

                              இந்த நகரத்தில் இருந்து ஒரு இருபது நிமிடம் மெட்ரோ ட்ரெயினில் பிரயாணம் செய்தாலே உலகப் புகழ் பெற்ற ஹோல்மன் ஹொலன் குன்றுகளில், உலகத் தரமான ஒலிம்பிக் நடத்தக் கூடிய முக்கிய விண்டர் உறை பனியில்  சறுக்கும் செயற்கைத் தடம் இருக்கு, ஐரோப்பாவில் வேறு எங்கேயும் இப்படி நகரத்தில் இருந்து ஒரு இருபது நிமிடம் ட்ரைன் போகும் தொலைவில் உறைபனி சறுக்கும் மலைகள் இல்லை என்கிறார்கள். 2020 இல் ஒஸ்லோ விண்டர் ஒலிம்பிக் நடத்தும் சாத்தியம் இருக்கு எண்டும் சொல்லுறார்கள், 

                                    உலகத்திலேயே அதிகம் காப்பி உறிஞ்சிக் குடிக்கும் மக்கள் வாழும்,கடவுளை விடக் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் இதயத்தில் ஈரம் உள்ள மனிதர்கள் வாழ்கையை அழகாக்கும் ஒஸ்லோ,  நோர்வேயிய இளம்  பெண்களின் இடுப்புப் போல சின்ன நகரம்,அதன் பிரகாசம் நோர்வேயியப் பெண்களின் கண்கள் போல எப்பவும் பணிவுடன் மின்னும், உதவும் குணம் உள்ள மக்கள் எப்பவும் இயல்பாக இந்த நகரத்தை இயங்க வைக்கிறார்கள்.

                                  இந்த நகரத்தின் கவர்ச்சி கோடை காலத்தில் வானம் பாடிகள் நீல வானத்தில் எழுதிச் செல்லும் ஒரு புதுக் கவிதை, வெயில் கால அடர்ந்த இரவில் எண்ண முடியாத நட்சத்திரங்கள் அள்ளிக்கொட்ட,  மென்மையான,அதிர்ந்து பேசாத நோர்வேயிய மக்களின் மனம் போல விண்டர் உறை பனி வெள்ளைக் கம்பளம் விரிக்க, அமைதி அதன் அர்த்தத்தைத் உலகெல்லாம் தேடிக் கடைசியில் இங்கே கண்டு கொண்டது.

                                தெற்கில் நோர்டறஆர்கிர்  சின்ன மலைகள் மார்பை மூடித் தாவணி போட ,  பாதம் வரை சருகைபோட்டு மறைக்கும் குருறுட் டாலன் பள்ளத்தாக்குகள் பாவாடை கட்ட, இந்த சின்னப் பெண்ணின் இதயத்தை ஊடறுத்து ஆர்கிஸ் எல்வா ஆறு சலங்கை கட்டிச்  சதிராட,  காடெல்லாம் பேர்ச் மரங்கள்,  அதன் கரை எல்லாம் லில்லி மலர்கள், நாடெல்லாம்  நல்ல தண்ணி நளினம் காட்டும் ஏரிகள் ,  உயரத்தில் இருந்து விழியெல்லாம் மை பூசி ,  மொழி பேசி விரைந்தோடும் மேகங்கள்  விலாசம் சொல்லியே விரைந்தோட , கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடல் அலைகள் நகரத்தின் தெற்கு  விளிம்பில்  " இதுக்கு மேலே சொர்க்கம் தான்.... " என்று நோர்வேயின் இசைப் பிதா எட்வார்ட் கிரிக் எழுதிய சிம்போனிகளை இசைக்க....,    

                                 இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த நகரத்துக்கு..

 .
நாவுக் அரசன் 
ஒஸ்லோ 05.09.14

Wednesday, 11 March 2015

அளவெட்டி என்.கே.பத்மநாதன்....நாதமும் பிரம்மமும்

யாழ்பாணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர்களில் இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் அளவில் பிரபலம் ஆகிய பலருள் ஒரு நாதஸ்வர மேதை அளவெட்டி என்.கே.பத்மநாதன் என்று சொல்லுறார்கள். அப்படி பலர் சொல்வதில் நிறைய அசைக்கமுடியாத உண்மை இருக்கு என்பதை அவர் வாசிக்கும் போது ஸ்வரம்களை மரத்தால் செய்த ஒரு நீண்ட ஊதுகுழலில் வழிய விட்ட நாதஸ்வரம், அதில் அவர்கள் வாசித்து அசத்திய கர்நாடக சங்கீதம் என்றால் என்ன எண்டு தெரியாத காற்சட்டை போட்டுக் கொண்டு விடலையாக அலைந்த சின்ன வயசிலேயே அந்த இசை பலமுறை மயக்கிய விதத்தில் அறிய முடிந்தது.
என்.கே.பத்மநாதன் தந்தையார் கந்தசாமியும் ஒரு நாதஸ்வரக் கலைஞரே. இவர் கும்பழாவளை என்ற ஒரு சின்னப் பிள்ளையார் கோவிலோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலைஞர். மகன் பத்மநாதனும் இளம் வயது தொடக்கம் வலிகாமம் வடக்கில் இருந்த கும்பழாவளைப் பிள்ளையாருக்கு நாதஸ்வர ஓசையிலே ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்க வைத்ததால் அளவெட்டி என்.கே.பத்மநாதன் என்று அவரை எல்லாரும் அழைக்க வைத்தது.
பத்மநாதன் அவரோட இளம் வயது தொடக்கமே மிகவும் ஒழுக்கத்துடன், கும்பழாவளைப் பிள்ளையாருக்கு அவரின் தந்தையார் நாதஸ்வரக் கலைஞர் கந்தசாமியுடன் சேர்ந்து வாசித்து இருக்கிறார். அவருடைய மூத்த சகோதரர் பாலசுப்பிரமணியம் என்பவர்தான் இவரை விடவும் நாதஸ்வர ஞானம் அதிகமாக சிறு வயதில் இருந்த போதும், அவர் ஆங்கிலங் கற்று இலங்கை நிர்வாக சேவையில் அரசாங்க உத்தியோகம் கிடைத்ததால் நாதஸ்வரத்தை தொடரவில்லை என்கிறார்கள். தன்னைவிடவும் தன்னுடைய தமையனார் சிறந்த சங்கீத அறிவு இயற்கையாகவே உள்ளவர் என்று என்.கே.பத்மநாதன் தன்னடக்கமாகச் சொல்லி இருக்கிறார்.
பத்மநாதன் இளவயதிலேயே இசைக் கலையில் ஈடுபாடுள்ளவராக தமது தந்தையாரையே குருவாகக் கொண்டு அதன் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்த போதும், அவரிடம் பெற்ற பயிற்சியோடு நில்லாது மேலும் பயில்வதற்காக யாழ்ப்பாணம் பி.திருநாவுக்கரசுபிள்ளையிடமும் நாதஸ்வர இசைப்பயிற்சி பெற்றார். மேலும் இசைப்பயிற்சி பெற இவருக்கு உதவியாக இருந்தவர் இவரது மாமனாராகிய கணேசரத்தினம் என்பவரே.
கணேசரத்தினம் அவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வந்து தம்முடன் தங்க வைத்திருந்த நாதஸ்வர மேதாவிகளின் வழிகாட்டல் இவருக்குக் கிடைத்ததே இவர் அத்துறையில் மேலும் மேலும் முன்னேற வாய்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் அவ் வித்துவான்களுடன் இணைந்து வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததும் அவர் முன்னேற வழி வகுத்தது..
நாதஸ்வரக் கலையில் சுருதி சுத்தமாக, மேளகர்த்தா ராகங்களின் உருப்படிகளை ஒரு தனி ஸ்டைலில் வாசிப்பதில் வித்துவான்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். நா. க. பத்மநாதன் என்பது போட்டி பொறாமை அதிகம் இருந்த யாழ்பாணத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. கேள்வி ஞானமும், கடின பயிற்சியும், விடாமுயற்சியும் இவர் தமக்கென ஒரு தனியான நாதஸ்வர வாசிப்பு வழியை உருவாக்க வழிசமைத்தது.
இவர் தாமாகவே ஒரு இளம் இசைவல்லார் குழுவை உருவாக்க எண்ணி, நாதஸ்வரம் நன்றாக வாசித்த கோண்டாவில் பாலகிருஷ்ணன், தவில் வாசிப்பதில் திறமையுடன் இருந்த இணுவில் தட்சணமூர்த்தி, குமரகுரு முதலியவர்களையும் தம்முடன் இணைத்து ஒரு குழுவை அமைப்பதில் வெற்றி கண்டார். அதில் கோண்டாவில் பாலகிருஷ்ணன் இளவயதிலேயே இறந்துவிட்டார். நாதஸ்வரக்கலையில் பல சாதனைகள் செய்ய நாதஸ்வரக் கலாநிதி, இன்னிசை வேந்தன், கலாசூரி முதலிய பட்டங்கள் அவரின் அசாத்திய திறமைக்கு கிடைக்கப் பெற்றன.
நல்லூர் முருகன் கோவில் பிரதான கலைஞராக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் பல ஆண்டுகளாக இவருக்குக் கிடைத்தது இவரின் நாதஸ்வரக் கலைத் திறமைக்கு கிடைத்த பாராட்டு. இருவத்தி ஐந்து நாள் திருவிழாவிலும் அவர் வாசிக்கும் போது அதைக் கேட்க என்றே இசை ரசிகர்கள் அவரைச்சுற்றி மெய் மறந்து நிற்பார்கள்,
மேற்கு வீதியில் முருகக் கடவுள் உலா வரும்போது எப்போதுமே " நகுமோ கனலே நீ நாதாலி " என்ற ஆபேரி ராகக் கீர்த்தனை வாசிப்பார். தெற்கு வீதியில் " தெலி சினோடு ராமா " என்ற முத்துசாமி தீச்சிதர் உருப்படி வாசிப்பார் . அவர் எந்த நிகழ்சியிலும் குத்துப்பாட்டு மெட்டில் உள்ள சினிமாப் பாடல்கள் வாசிப்பதில்லை,நல்ல ராகங்களில் வந்த பழைய சினிமாப் பாடல் சில நேரம் வாசிப்பார், அதைத் தன்னுடைய பிரத்தியேக தரமாக வைத்திருந்தார்
இலங்கையில் தயாரான ஈழத்து இரத்தினம் எடுத்த முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப்படம் "தெய்வம் தந்த வீடு " நாதஸ்வரக்கலையை முக்கியமான கருப்பொருளாக வைத்து எடுக்கப்பட்டது . அந்தப் படமே நாதஸ்வரக்கலைஞன் என்.கே.பத்மநாதன் இசை அமைத்து வெளிவந்தது. 1979ல் இங்கிலாந்தில் வாழுந் தமிழர்களால் அழைக்கப்பட்டு அங்கு இசை பரப்பக்கிடைத்த வாய்ப்பினைத் தொடர்ந்து பல நாட்டுத் தமிழர்களிடமிருந்தும் இவருக்கு அழைப்புக்கள் கிடைக்க அங்கெல்லாம்சென்று அந்த நாட்டு மக்களின் பாராட்டினையும் பெற்றார்.
நாதஸ்வரக் கலையைப் பரப்பத் தமக்கொரு நிலையான வாரிசு வேண்டுமென்பதால் தமது புதல்வர்களில் ஒருவரான முரளி என்பவரை அக்கலையின் நுணுக்கங்களை அறிய இந்தியாவுக்கு அனுப்பிப் படிப்பிக்க விரும்பினார். முரளியை இந்தியாவுக்கு அனுப்பி அங்கு கலைவன்மை பெற்று முரளி இலங்கை திரும்பிய சில மாதங்களில் அந்த நேரம் யாழ்பாணத்தை அரசாண்ட இந்திய அமைதி காக்கும் IPKF படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டார்.
இது கலைஞர் பத்மநாதனது வாழ்வில் ஆறாத மனப்பாதிப்பாக அமைந்துவிட்டது. அவருடைய மகள் கனகாம்பரியை ஒரு சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகியாக்கி அந்த சோகத்தை ஒருவிதத்தில் அவரால் மறக்கடிக்க முடிந்து இருக்கிறது.கனகாம்பரி யாழ்பாண இசைக் கச்சேரி மேடைகளில் மிகச் சிறப்பாக கர்நாடக சங்கீதம் பாடிய
ஒருவர் .
அவர் மகன் முரளி படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்த பின்னும் கலைப்பணியைத் தொடர்ந்து வந்தார். இங்கிலாந்திலிருந்து இவருக்கு மேலுமொரு அழைப்பு வந்தது. அழைப்பை அனுப்பியவர்கள் அவரது இசை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கலைஞர் பத்மநாதனும் இங்கிலாந்து செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.சில நாட்களில் அவரின் இசை விழாவுக்கு போகுமுன்னரே அவர் நாதமும் பிரம்மமும் ஆகி இயற்கையுடன் சங்கமித்து விட்டார்..
நாவுக் அரசன்
ஒஸ்லோ 11.03.15

Tuesday, 10 March 2015

" முதல்ச் சந்திப்பு " ..

பல வருடம் முன்னர் புலம்பெயர்ந்து சுவீடனில் அரசியல் அகதி முகாமில், புலியையும்,சிங்கத்தையும் பயங்கரமாச் சித்தரித்து உலகத்துப் பச்சைப் பொய் எல்லாம் சொல்லியும் " நிரந்தர வதிவிடக் காட் " கிடைக்குமா, கிடைக்காதா எண்டு அல்லாடிக்கொண்டு மண்டையைப் பிச்சுக்கொண்டு இருந்த நேரம், அந்த முகாம் இருந்த இருட்டு விழுங்கிய அத்துவான காட்டுக்கு நடுவில் புள்ளிபோல இருந்த " பிலேன் சோர்ர்மலான்ட் " என்ற சிறிய நகரத்தில் சில வருடம் வசித்தேன்.
                                      
                                                          அந்நிய தேசத்தில் தனிமையில் வாழ்ந்ததால் புலன்பெயர்ந்து, ஒரு நாள் என் முன்னாள் மனைவியை " பிலேன் சோர்ர்மலான்ட் " இல் நடந்த ஒரு இசை நிகழ்சியில் , சந்தித்து அவளுக்கு அந்த இடத்தில வைச்சே மண்டையைக் கழுவி , அடுத்த நாள் மாலை ஒரு பார்க்கில் சந்திக்க வைத்து , அப்போது சந்தித்த போது நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி ஒரு கவிதைபோல ஒன்று " முதல்ச் சந்திப்பு " என்று தலைப்பிட்டு எழுதினேன் 

                                            பின்நாட்களில், காதல் அவளை முழிச்சுப் பார்க்க விடாமல் கண்ணை மறைச்சதால் என்னோட எல்லா குளறுபடிகளையும் எடை போட முடியாமல் மயங்கிக் கவுண்டு விழுந்த அதிஸ்டத்தால், அவளோடு குடும்பமாகி வாழ்ந்த போது, அந்தக் கவிதையைப் குற்றப்பத்திரிகை போல சுவுடிஷ் மொழியில் எழுதிக் கொடுத்தேன்,

                                                            அதை அவள் வாசித்துப் போட்டு ரெண்டு ரெண்டு ரெண்டு துளிக் கண்ணீராக கண்களில் வழிய விட்டாள். அதை ஆனந்தக்கண்ணீர் என்று நினைத்து பார்க்க எனக்கு சந்தோசமா இருந்தது. என் கவிதை ஒருவரின் மனதுவரை இறங்கி இதயத்தை அசைத்துப் பார்த்தது என்று நினைத்து இன்னும் கவனித்து எழுதும் அனுபவம் வர பின் நாட்களில் கவிதை எழுதுவேன் என்று சபதம் எடுத்து, இன்றைக்குப் பலரை வாசித்து அழ வைத்து உசிரை எடுக்கும் ஐடியா அப்போதுதான் வந்தது,

                                                வருடம் முழுவதும் ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் உலகத்தரமான புத்தகம் காசு கொடுத்து வேண்டி வாசிக்கும் அவளுக்கு இப்படி , இலக்கியம் , கவிதை , கதை என்று நான் ஏதாவது ரீல் விட்டு எழுதிக் காட்டினால் அதிகம் அதைக் கவனிக்கவே மாட்டாள். அதை வாசிப்பது எப்பவுமே நேரவிரயம் என்று நினைப்பவள் அவள், அதால ஒரு சந்தேகத்தில்,

                                     " பரவாயில்லை சும்மா தான் எழுதிப்பார்த்தேன் ,நீ அதிகம் ஒன்றையும் உணர்ச்சிவசப்பட்டு எமோஸனலா எடுக்காதே, காதல் வந்தால் கவிதை இலவசமாக் கொட்டும் என்று சொல்லுறார்கள்,அதால எழுத முயற்சித்தேன் , அது உன்னை இவளவு இம்பிரஸ் செய்து இருப்பது ஆச்சரியமா இருக்கு ,முதலில் ஆனந்தக்கண்ணீர் விட்டு அழாதே " 

                                              என்றேன். அதுக்கு அந்த அகராதி பிடிச்சவள்
.                             
                                          " அடப்பாவி என்னோட தாய் மொழியான ஸ்வான்ஸ்க் சுவுடிஷ் மொழியை இப்படி தாறுமாறா இலக்கணப் பிழையாக எழுதி கொலை செய்கிறாயே, நீ எங்க உருப்படப் போறாய், உன்னை எங்கள் நாட்டில் இருக்க விட்டதுக்கு இப்படி என் தாய் மொழியைப் பழி வேண்டுறாயே ,அதை நினைக்க அடக்க முடியாமல் அழுகை அழுகையா வருகுது " 

                                                     என்று சொன்னாள்...

                                          எப்படியோ அந்தக் ஆனந்தக்கண்ணீர் அர்த்தம் தவறிப் போயும் ,அந்தக் கவிதை தனக்கு எப்பவும் பிடிக்கும் என்று நாங்கள் சட்டரீதியாகப் பிரிந்து பல வருடம் பின்னர் ஒரு நாள் சொன்னாள் , சொல்லிப் போட்டு நான் சுவுடிஷ் மொழியில் எழுதிய அந்தக் கவிதையை எனக்கு மெயில் இல் ஸ்கான் செய்து அனுப்பியும் இருந்தாள், அதில ஆச்சரியமாகி

                                                    " என்னோட கவிதையைப் புரிந்து கொள்ள உனக்கு இவளவு வருஷம் எடுத்ததா ,, மறக்காமல் அதை நினைவு வைத்து இன்று அனுப்பி வைத்ததுக்கும் நன்றி. நான் பல வருடம் முன் எழுதியதை இப்ப தமிழில் மொழிபெயர்து என் ரசிகப் பெருமக்களுக்கு போடுகிறேன்.." 

                                              என்று பதில் மெயில் அனுப்பி கொஞ்ச நேரத்திலேயே

                                         " அடி செருப்பால,..நான் இப்ப வேற ஒரு எங்கள் சுவிடிஷ் இனத்து ஒரு மனிதருடன் என் வீட்டில் வாழுறேன்,அவன் உன்னுடைய கவிதையை எடுத்து வாசித்தால் சில நேரம் சந்தேகம் பிடிச்சு பிரசினை செய்து என்னோட நின்மதியைக் கெடுப்பான்,உலகம் முழுக்க ஆம்பிளைகள் வெள்ளையோ,கறுப்போ, பிரவுன் கலரோ எதுவாக இருந்தாலும் சந்தேகத்தில் பெண்களைப் பிடிச்சு உலுப்புரதில உலகம் முழுக்க ஆம்பிளைகள் ஒரே மாதிரி, அதால் இந்தக் கவிதைப் பேப்பரை ஸ்கேன் செய்து உனக்கு அனுப்பிப் போட்டு, பேப்பரைக் கிழித்து எறிஞ்சு போட்டேன்,...."

                                            என்று நீண்ட மெயில் விளக்கம் எழுதி இருந்தாள்.

                                            ஏனோ தெரியவில்லை அந்தக் கவிதைபோல எழுதியதை இவளவு நாளும் நானே மொழி பெயர்த்து போடவில்லை, வாழ்கையில் விதி எழுதி வைத்து கிளித் தட்டு எப்ப விளையாடும் என்று சொல்லவே முடியாது.ஜோசித்துப் பார்த்தால் மறுபடியும் ஒரு முதல் சந்திப்பு அதே போல நடக்கவே முடியாது என்று யாருமே சொல்லமுடியாது...

" முதல்ச் சந்திப்பு "
-------------------------------
மகிழ்ச்சியை
வரவேற்கத்தக்கதாக
மனமெல்லாம்
நாற்று நட்டு
விடை பெற்ற
நிமிடத்திலிருந்தது 
மிகப்  பிரியமான  நேசங்கள் 

விட்டுப் போன
உள்ளங்கையின்
வியர்வை வாசம்
பிலேன் சோர்ர்மலான்ட்
ஒதுக்குப்புற அகதிமுகாம் வரை
பின் தொடர்ந்து வந்தது..

கைவிடப்பட்ட
அடிமைபோல
அன்புக்கு
ஏங்கும் இதயத்துக்குதான்
அரவணைப்பின் பெறுமதி தெரியும் ..

வீசி எறியப்படவர்களின்
வீதியில் தான்
கை கோர்த்து நடப்பதன்
நேசிப்புக்கள்
நெருக்கமாகும்  விருப்பமோடு
காத்திருக்கும்..

ஏக்கங்களின்
அர்த்தம் நெஞ்சோடு
நெரிக்க
என்
நாடித் துடிப்பைப்
பார்த்த போதே
உன்
இதயத் துடிப்பை
உணர வைத்தவளே...

மென்மையாகவே
விரல்களின் மீட்டலை
எண்ணி முடிக்க
நானே
வரைந்து வைத்த
சின்னஞ் சிறிய உலகம்
எல்லாப் பயங்களையும்
களை பிடுங்கி
எறிந்து போட்டு
பனி உருகும்
பாதையெல்லாம்
நம்பிக்கைகளை விதைத்தது.



 10.03.15