Saturday 1 December 2018

பெயரிடப்படாத நாள் !

எழுதுவது என்பது அனுபவங்களை நாலு பக்கமும் அதிகரிக்க அதிகரிக்க வார்த்தைகளைச் சுருக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறது. இருந்தாலும் நாள் தவறாமல் எப்போதுமே எழுதிக்கொண்டிருக்க முடிவதில்லை . சிலசமயம் பேசுபொருள் கிடைக்காது, அது  கிடைத்தாலும் கவிதைமொழி முன்வராது . அல்லது கணப்பொழுதில் உள்ளிறங்க  ரெண்டுமே பொருந்திவராத தருணமாக இருக்கும். அப்படி இல்லையென்று வலிந்து எழுதுவதென்பது  வாய்க்குள்ளே விரலை விட்டு வாந்தி எடுப்பதுபோன்ற அவஸ்தை !
 
                                                                      முகநூலில்" On this day " என்று ஒரு வாய்ப்பு அண்மைக்காலமாக என்னைப்போன்ற அரை அவியல்களுக்காகவே உருவாகி இருப்பது போல வந்துள்ளது. அதை " Each day, we'll show you all of your stories from the same date in different years " இப்படிச் சொல்லுது அதன் விவரணம். அதில பல நன்மைகள் இருக்கு.அப்பப்ப பிசதிப்பிசத்தி ஒரு கவிதை, சில நேரம் இரண்டு கவிதை கைவிடப்பட்ட மண்சுவரில வறட்டிதட்டி எறிஞ்ச மாதிரி எழுதிக்கொண்டு இருப்பதால் அவைகளை மீன்டும் ஒருமுறை தூசுதட்டிப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. பலருக்கும் அப்படி இருக்கலாம்.


                                                                                    அப்படிப் பார்க்கும்போது சிலநேரம்  எவளவு முட்டாள்த்தனமாக எழுதி இருக்கிறேன் என்று என்னையே மீளாய்வு செய்யும் சந்தர்ப்பம் வளர்சியின் பாதையில் கடந்துவந்த படிக்கற்கள் பற்றிய ஒரு படிப்பினையை வெளிப்படுத்தும் போதெல்லாம் எழுதிக்கொளுத்திப் போடுவதில் உள்ள தயக்கத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டு போகமுடிகிறது .


                                                                         இப்ப உள்ள எழுத்து அனுபவத்தில்அவைகளை வாசிக்கும்போது , அவசரத்தில் எழுதிய போலவும்,ஆழமில்லாதது போலவும்,சிலது குப்பை போலவும்,சிலது குப்பைக்குள் குண்டுமணி போலவும் உள்ளது. அதனால் முடிந்தளவு வாசிக்க அர்த்தம் கொடுத்து உருப்படியாக வரக்கூடியவைகளை கொஞ்சம் வெட்டிக்கொத்தி ஏறக்குறைய கவிதைமொழிக்குள் அடக்கி அதைத் தரமாகக் கொண்டுவருவது ஒரு அலாதியான ஆனந்தம்.
 
                                                                           கவிதை நேசிக்கும் நண்பர்கள், நண்பிகள் வாசிப்பார்கள் என்பதாலும் , ஒரு தொகுப்பாகக் கொண்டுவருவத்துக்கு ஏதுவாகவும்   அதையெல்லாம்   இன்னொரு முறை என் " மின்னெறிஞ்சவெளி " வலையில் ஏற்றிவைத்து   என் பறையை நானே தோளில கொழுவி அடிச்சு சுழறவிடுவது. அது முன்னரே வாசித்தவர்களுக்கு  இடைஞ்சல் போல இருக்கும். தயவுசெய்து என்னையும், என் கவிதைகளையும் மன்னித்துக்கொள்ளுங்கள் அப்படி உங்களுக்கு தொந்தரவாக இருந்தால்.


                                                                              எல்லாரும் எழுதுறார்கள் அதனால் தண்ணி கறுத்த நேரம் தவளைச் சத்தம் வந்த மாதிரி போனாப்போகுது என்று பலரோட பொறுமையைச் சோதித்து எழுதத்தொடங்கினேன் .அதைப் பல இலக்கிய ரசனை விசியங்கள் தெரிந்தவர்களே வரவேற்று உற்சாகப்படுத்தினார்கள்.அது என்னை அதிகம் கவரவில்லை ஆனால் அழகான இதயரானிகள் ஆகோ ஓகோ எண்டு பப்பாவில் ஏற்றினார்கள். அதால இதைவிட வேற என்ன அங்கீகாரம் வேண்டுமென்று எழுதுறேன்


                                                                                       சுவீடன் என்ற  வடதுருவக் குளிர்நாட்டில்  குந்தியிருந்து  குப்பை கொட்டும் என் அன்றாட வாழ்வியல் மொழி "சிவான்ஸ்க்கா " என்ற சுவிடீஷ். ஒரு கிறுக்குப்பிடிச்ச அந்நியமொழி . என் நிலைமையில் முகநூலில் எழுதிக் கிழிப்பதால் மட்டுமே எனக்குத் தமிழ் என்ற தாய்பாலோடு சுரந்து வந்த மொழியை என்னிடமிருந்தே அழிந்துபோவதைத் தடுக்கமுடிகிறது.




*
அச்சுறுத்தலிலும்
மரணத்தோடு
விளையாடுவது போல்
அப்போதெல்லாம்
அவர்களின்

எண்ணங்கள்
வீரதீரமாகவேயிருந்தன,
மீசை தாடியென்று
அவர்கள்
முகத்தைக் கூட
சரியாக வைத்திருக்கவில்லை .
அதனாலென்ன ?
எல்லாம் கடந்த
அவர்கள் எல்லோருக்குமே
ஒரேமாதிரியான முகங்கள்..
அவை
இறுக்கமானவை.
கொடுங்கனவை ஏந்தியவை.
உறைந்த மௌனத்தை,
நதிகளின் சிரிப்பொலியை
கடலின் புன்னகையைப் போல !



*


இறந்து போயிருந்தது
பின்மாலை நிழல் நகரம் ,
நகராமல் நின்ற
மலர்ச்சோலை நடைபாதையில்
அக்கறை இல்லாமல்...
ஒருவரை ஒருவர் பார்க்காமல்
மௌனமாகக் கடந்துபோகிறார்கள்
அவசர மனிதர்கள் !
அவர்களுக்குப்
பூந்தளிர் மரங்களின்
கிளை நுனிகளில்
மந்திர இலைகளை அசைத்து
சைகை மொழியில்
என்னவோ
எல்லாம்தெரிந்தமாதிரி
புதிர்க்கதைகள் சொல்லிக்கொண்டிருக்கு
ஊமைக்காற்று !




*

அப்போது
தொலைதூர வெளிச்சங்கள்
கொஞ்சம்தான் எஞ்சி இருந்தன ,
ஒன்றுதிரண்ட
பிரசவப் பெறுமாதமுகில்கள் ...

மீதமிருந்த வெள்ளை முகில்களைத்
தவறவிட்டிருக்கலாம் ,
காரையைக்காணமுடியாதவாறு
மறைந்திருக்கும்
தென்மேற்குத் தரவைக்கடலில்
அலைகள் தலைகளை மோதியடித்து
ஒதுங்கியபடியிருந்தன .
எந்தவித அசுமாத்தமுமில்லாமல்
உறக்கத்துக்கு அருகே போய்க்கொண்டிருந்தது
திசையில்லாத தனியிரவு,
இப்போது
யாருக்கு யார் வழி சொல்வது?
யாருக்கோ
கண் சிமிட்டியபடியிருக்கும்
நட்சத்திரங்களுக்குத்தான்
எங்கே போகிறோமென்று
தெரிந்திருக்கலாம் !




*

சேலையில் மடிப்புகளை
உதறி விட்டுக் கொண்டிருந்தாள்.
கோடைகால
நீராம்பல் மலர்களில்
ஊடுபரவுவது போலவே

மௌனமாகக் கடந்து போன
வாசனையை
யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைத்திருந்தேன் .
சொல்லப்போனால் என் கனவே அதுதான்.
ஆனாலுமென்ன
யாரோ ஒருவரின்
புல்லாங்குழலைத் திருடியெடுத்து
பிரியமான ராகமொன்றில்
சம்பந்தமேயில்லாத
எல்லாருக்குமதை
விபரித்துச் சொல்லி விட்டது
காற்று !




*


யுத்தமொன்றில்
உயிரோடிருந்தலென்பதை
என்னவென்று
நீங்கள் அறிவீர்களா ?
ஒரே ஒரு காவலரணில்

பதுங்கியிருந்தார்கள் 
அத்தனை பெரிய பனம்தோப்பு
ஒருசில தென்னைமரங்கள் ,
புழக்கமில்லாத மயானம்
துாசிகளால் மூச்சிழுக்கும் பற்றைகள் .
பயத்தில் உறைந்து கிடந்த
கிராமத்து கோவில் ,
பிணமாவதற்காகத் தன்னும்
மனிதர்கள் யாருமில்லை ,
எறிகணைகள்
விழும் சத்தம்
கேட்டுக்கொண்டேயிருந்ததில்
பூமியே அதிர்ந்தது.
ஒவ்வொரு வெடிக்கும்
இருக்கிறோமோ
இல்லையோ என்று
ஒருவரையொருவர்
தொட்டுப்பார்த்துத்தான்
உறுதிப்படுத்திக்கொண்டார்கள் !



*

திரை போல இருள்
நெருங்குகிறது
ஏரியின் கரையோரம் ,
மின்மினி வெளிச்சங்கள்
முளைக்கத்தொடங்குகின்றன ,

குடைக் காளான்கள் போன்ற
கூடாரங்களில்
வித விதமான இசைக் கருவிகளோடு
மனிதர்கள் ,
இலைகளின் நுனிகளை
மோகத்தோடு தொடுகிறது
குளிர் காற்று ,
அவர்கள்
காய்ந்த மரங்களைப் பற்றவைத்து
ஆடினார்கள்,
பாடினார்கள்,
போதையேற்றும் நினைவுகளை
தென்றலில் ஏற்றிவைத்து
மீட்டுவதுக்கு
என்கையில்
ஒரு கின்னரமில்லையேயென்று
ஏக்கமாக இருந்தது.!




*


மெல்லிய விரிசல்களை
நிரப்பமுடியாத
பகல்க்கனவு,
வாசனையிலும் 
வெவ்வேறு பாவனைகாட்டும்
கார்த்திகைக் குளிர்,


மொட்டை மரங்களைக்
கையகல விரிக்கும்
அமைதிப் பூங்கா ,

சில்லென்ற
நிலக்காட்சிகளில்
பசுமையின் போதாமை,

அசைவின்றிக் கிடக்கும்
இசைவுக்கேற்ப
நடைத் தெருக்கள் ,
பரபரப்பான வாழ்க்கையைக்
கடத்திச்செல்லும்
அவசர மனிதர்கள்,
கைகளை உதறியபடி
தெளிவற்ற
காலப்பயணம் ,
இத்தனை வெளிப்பாட்டிலும்
பெரும்பாலான தருணங்கள்
தன்னிச்சையான
மௌனத்தையே
நிரப்பிக்கொண்டிருக்கின்றன.!

*

நிறைவில்லா
ஒழுங்குமுறை
ஒவ்வொரு கணமும்
முகம் மாற்றிவைக்கிறது ,
இன்று
நிகழ்வுகளேதுமில்லா
பெயரிடப்படாத நாள் !
குளிர்காலையை
ஆதரிப்பதுபோலவே
கொஞ்சம் வெய்யில் ,
பகலெல்லாம்
நடுநிலைமையைப்
புறந்தள்ளும்
வெளிச்ச இருட்டின்
சாம்பல்க் கலவை ,
வருவது தெரியாமல்
ஆச்சரியப்படுத்துகிறது
முன்மாலைப் பின்னிருட்டு ,
பின்னிறுதி
வருடப்பருவங்கள்
அதற்குரித்தான
அணுக்கமானமுறையில்
தன் தரப்பு
பிறர் தரப்பு பாகுபாடின்றி
நேர்கோடுகளை நிராகரிக்கின்றன !

*

மின்சாரக்கம்பி
உட்கார்ந்த வாக்கில்
ஒரு குருவி
அதன் பெயர் ?
தெரியாது !
என்னை வேடிக்கை பார்க்குது
ரெண்டுபேருக்கும்
விரிவான பின்புலம்
திரைபோடும் குளிர் !
அப்பப்ப
" கிலீர் " என்று சத்தம் எழுப்புகிறது
மிகத்தெளிவாக,
அலங்காரமில்லா
அதன் பாடல்
சொற்களை நிறைக்கவில்லை ,
தர்க்கபூர்வமாகக்
காலத்தையும் அடுக்கவில்லை ,
இலையுதிர் பருவத்தைச்
சபிக்கவில்லை ,
பறவைகளின்
பரிந்துரைகள் சிக்கலானவை !
சிலசமயம்
ஒலிச் சுட்டுதல்கள்
மேற்கோள்களாக இருக்கலாம் !
எல்லாவற்றுக்கும் மேலாக
நம்
தனிமை
எண்ணங்களுக்கு
ஏற்றதாகவேயிருந்தது !

*

ஒரு நாளிலே 
பேசுபொருள் கிடைக்காத
தென்றல் வருடிப்போகும்
கருக்கல் ,

மூழ்கித் திளைக்க
மூச்சுச்  திணறவைக்கும்
கவிதைமொழி ,

கணப்பொழுதில் உள்ளிறங்க 
ரெண்டுமே
பொருந்திவராத தருணம்!
கற்பனையில்
இணைந்து நடந்தபடி 

நெஞ்சம் தரும்
 ஒருசில 
வார்த்தைகளையும்,
பிரமையைக்

கையில் பிடித்தபடி
ஒருசில
எழுத்துக்களையும் ,
சிந்தைவெளி
உலாப்போகவிட்டு
நிஜத்துக்கு வெளிவருகையில்
நடைபாதையில்
கலைத்துப்போட்டபடி கிடந்தது
ஒரு கவிதை !