Sunday 20 March 2016

முதல்க் கதை

எழுத்து என்பது எல்லாராலும் காட்ட முடியாத வில்வித்தை . முக்கியமாக சுவாரசியமாக எழுதுவது  ஹம்தக்கினி  முனிவரின்  வரம் போல  இயற்கையாகவே கை வரவேண்டிய  அருள் நிறைந்த  அமைப்பு. அது கைவசம் இல்லாமல் அலவாங்கு போட்டு நெம்பின  மாதிரி  எழுதி, வாசிப்பவர்களின் குரல் வளையை  நெரிக்கும் ஒரு அவலத்தை   நானே  உருவாக்கக்கூடிய  ஒரு நிலை வரக்கூடாது  என்று  இளவயதில் என்னோட  முதல்க் கதையை எழுதும் வரை நினைத்திருந்தேன். 

                                                    அதனால்தானோ தெரியவில்லை முப்பது சொச்சம் வருடங்கள்  முன்னர் நானே என் முதல் கதையில் முழங்காலை முறித்துக்கொண்டேன் என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது .

                                        இந்த உலகத்தில் கபடமான  திருட்டு கப்பட்டித்தனத்தை  இரத்தம் முழுவதும்  ஓடவிட்டுக் கொண்டு உலாவும்  மனிதர்கள் மிகவும் சுலபமாக அவர்கள் சாக்கடை லெவலுக்கு  இறங்கி வந்து செய்வதில் இருந்து எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் " ப்பூ " என்று நச்சுக்  காற்றை ஊதிதள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள் .

                                                           அப்படி ஒரு   நச்சுக்  காற்றின் விஷத்தன்மை வடக்கின் வாடையோடு சுற்றிச் சுழன்றது. 

                                         
என்னுடைய  துடிப்பான இளமையில்  நிறைய ரசிய மொழியில் எழுதப்பட்டு  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  ரஷியன்  நாவல்கள், கதைகள் ,கவிதைகள் அந்தக் கால வயசில் அள்ளு கொள்ளையாக வாசித்துக்கொண்டு இருந்தேன். கதைக்கான  கதைகள் , உரையாடல்கள் , திருப்பு முனைகள்  நிறையவே  சுற்றி இருந்தும் ஒரு நாளும் நானே ஒரு கதை எழுதிப்பார்க்க ஜோசித்ததில்லை .

                                                கதை எழுதுவதுக்கு கரைகள் ரெண்டிலும்  பாதுகாப்பற்ற ஒரு நதி பற்றிய  கனவு எப்பவுமே உந்தித்தள்ள  வேணும். அதுவே  காரணமாக    இருக்கலாம்  ஒரு கதை தானாகவே எனக்கு முன்னுக்கு எழுந்து " என்னை எழுதடா என் காப்பிய நாயகனே  " என்று ஒருபோதும்  கேட்டதில்லை. ஆனால் பவதாரணி ,,ஆதவன்   இருவரும்  எழுந்து வந்த நேரம் நான் சுதாகரித்துக்கொண்டு எழுதத் தொடங்க  முடிந்தது  

                                               அந்த  முதல்க் கதையை மட்டும் எப்படி எழுதினேன் என்று இப்போது  ஜோசிக்கும் போது பல சம்பவங்கள் விட்டுப்போய் விடுகிறது . அந்தக் கதையில் வந்த சம்பவங்களே இப்ப  முதல் நினைவு இல்லை. ஆனால் அந்தக் கதைக்கு நடந்த துரதிஸ்டமான  அங்கீகார  முடிவுக்கும், தவலோகராஜா  என்ற மனிதருக்குமிடையான தொடர்புகள் ஏனோ இன்னும் நல்லாவே நினைவு இருக்கு.

                                             யாருக்கும் தெரியாத காற்றின் கனமான  செய்திகள்  தான்  காலம்  கடந்து  ஒரு அமைதியான நாளில் புயலாகி வெகுண்டு எழும் போது   வீதிக்குக் குறுக்கே ஒரு மரம் விழுந்து விடும்  அப்போது  கதையாகலாம்.  ஒரு முடிவில்லாமல்  போன  கதை பற்றிய கதையில்  அந்த சம்பவங்கள்  முடித்து வைக்க வேண்டிய மூலக் கதையை விட சுவாரசியமான  முடிச்சுக்கள்  தன்  கழுத்தைச் சுற்றியே போட்டுக்கொண்டும்  இருக்கலாம், இல்லையா , என்ன சொல்லுரிங்க , அப்படித்தானே 

                                               
எங்கள் ஊரில் இருந்த வாசிகசாலை மூலமாக ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் " வெளிச்சிறை " என்று ஒரு காலாண்டு இலக்கிய  இதழ் வெளிவந்துகொண்டிருந்தது  அந்த நாட்களில்.

                                                       சுமாரான  ஒரு நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல்  இரண்டின் அடையாளங்களையும் கொஞ்சம் கொஞ்சம் அங்கேயும் இங்கேயும் கலந்து வரைந்த ஒரு கன்வஸ் ஓவியம் போலிருந்த எங்களின்  ஊரில் இருந்து வந்த " வெளிச்சிறை " என்றதுக்கு  என்ன சிம்போலிக்  அர்த்தம் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது . இனித் தெரிந்தும்  ஒண்டும்  கிழிக்கப் போறதுமில்லை . 

                                       
" வெளிச்சிறை  " அதில சாதியத்தை  எதிர்த்து குடியான சாதியர்கள்  முதுகில  சீனியைப் போட்டு உயர்ந்த சாதியர்களை நக்க விடுற  முற்போக்கு  சிந்தனைக்  கதைகள், கருங்கட்களில் உருவான கடவுளுக்கு எங்கே கண் இருக்கு  என்ற  அனல் எரியும் கட்டுரைகள் . விறகு கொள்ளியால மாட்டுக்குக்  குறி சுட்ட மாதிரி  கவிதைகள், அறிவியல் என்ற பெயரில்  அவியல் கட்டுரைகள் , மூக்குப்பொடி போட்டுத் தும்மின மாதிரி சின்னச் சின்ன துணுக்குத் தகவல்கள்  .

                                                       கடைசி ரெண்டு பக்கத்தில் கேள்வி பதில். அதன்  ஆசிரியராக இருந்த  தவலோகராஜாவே  கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதி இருப்பார் .

                                                 அதுக்கு எடிட்டிங் ஆசிரியர், கவுரவ ஆசிரியர் , பதிப்பாசிரியர்  என்று அரைச்சு விட்ட மாதிரி    எல்லாமாகவே   இருந்தவர்  தவலோகராஜா. அந்தக் கிராம  சஞ்சிகை நகரத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பல முக்கிய இலக்கிய மாத இதழ்களைவிடக் கனதியானது, பரமானந்தம் நடத்திய  தனலக்ஷ்மி  அச்சுக் கூடத்தில்  கவனமாக உருவாகி ,  தரமான தாள்களில் மொட்டைக்கறுப்பன்  சோற்றுக்கு மோர்க் குழம்பு அள்ளி ஊற்றி விட்ட மாதிரி பளிச் பளிச் என்று லித்தோகிராப்பிக் ஸ்டைலில்  அட்டைப்படம் போட்டு வலு கலாதியாக வரும்.  

                                                 
நீங்களே சொல்லுங்க பார்ப்பம் இப்படியான ஒரு சஞ்சிகையில் ஒரு கதை எல்லாருக்குமே தன் பெயரில் எழுதி வரவேண்டும் என்று ஆசை இருக்கத்தானே செய்யும்.  வெளிச்சிறை எங்கள்  ஊர் சஞ்சிகை, வேப்பமரக் காற்று எல்லாத்தையும் அப்பிடியே அள்ளிப்பிடித்து வைத்து  ஆர்ப்பரிக்கும் அதன் நெருக்கம்  தரும் கிளுகிளுப்பு கள்ளக் காதலர்களின்  இரகசிய இரவுகள் போல.

                                                            அதுவும் அந்தக் கதைகள் அதே ஊரில் உள்ள ஒருவரால் எழுதப்படும் போது கிடைக்கும் ஆனந்தம் நினைவில்  வரும்போது எப்போதும் நினைப்பது அதில என்னுடைய  ஒரு கதை வந்தே ஆகவேண்டும் என்று  

                                    " ஒரு பெண் ஒரு பொது வெளியில்  வரும் பிரபலமாக  வருவதுக்கு அவள் பாதையில்  எழுதப்படாத பல சட்ட திட்டப் பொந்துகளின் ஊடக நுழைந்து தன்னைச் சிதைக்காமல் வெளியே வந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் " 

                                                என்று " உரத்தநாடு  " சமூக நாடகத்தில்  கவிஞர் கந்தப்பு  அவரோட அனுபவத்தில இருந்து எடுத்து வசனம்  எழுதி இருந்தார்.  அந்த நாடகத்துக்கு  மேடையில் நான் தான் காட்சி தொடங்கும்போதும் முடியும் போதும் திரை இழுத்தேன்.

                                                       ஒரு கதையும் பதிப்பில் வருவதுக்கு எழுதப்படாத பல சட்ட திட்டப் பொந்துகளின் ஊடக நுழைந்து தன்னைச் சிதைக்காமல் வெளியே வந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்பது போல அந்த வசனம் அர்த்தம் கொடுத்தது 

                                       ஆனால்  நான் எழுதிய அந்த முதல் கதையில் இருந்து ஒரு முக்கியமான அரிவரி அடிச்சுவடி படிக்க வேண்டி இருந்ததுதான் உண்மையில்  " வெளிச்சிறை  " என்ற அந்தப் பெயரின் இன்னொரு  அர்த்ததை அந்த நாட்களில் எனக்கு உணர்த்தியது. ஆனால் யாருக்கும் அதை அப்போது சொன்னதேயில்லை.

                                                                   சொல்லி இருந்தால் இன்னும் பெரிய  குழப்பங்கள் வந்திருக்கும். எங்கள்  ஊரில் ஒழுங்கா இருக்க முக்கிய தகுதி வாயை கொட்டாவியை இறுக்கிப் பொத்தின மாதிரி பொத்திக்கொண்டு இருப்பது.                                   

                                                         
தவலோகராஜா எங்களின் ஊரில்  இருந்த  சைவமங்கை தமிழ் கலவன்  ஆரம்பப் பாடசாலையில் படிப்பித்த ஆசிரியர். நான்  அந்த ஆரம்பப் பாடசாலையில் படித்த நாட்களில் அவர் எனக்கும் சில வருடங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரை தவலோகம்  மாஸ்டர் என்று சொல்லுவார்கள்.

                                                         செருப்பு போடாமலே உயரமானவர்.  எப்பவும் முன்னுக்கு நீல நிற பிரம்பு பாஸ்கெட் கொழுவவிட்ட  இங்கிலண்ட் ஹம்பர் சைக்கிளில் வருவார். அவரோட வேட்டி வெள்ளை போலவே அவர் வைச்சு இருக்கும் கணுக்கு வைச்ச மூங்கில் பிரம்பும் வெள்ளை . மேலும் கீழும்  இடைவெளி உள்ள காவிப் பற்கள் . படிப்பிக்கும் போது ஈக்கிலை அதுக்குள்ளே விட்டு மரம் அரியிற வாள் போல இழுப்பார் .

                                        வாசிக்க சாலையின் ஆண்டு நிறைவு விழாவுக்கு  " வெளிச்சிறை " விஷேட பதிப்பு வருகுது என்றும் அதில கதை எழுதப் போட்டி என்றும் , முதலாவதாக வெல்லும் கதை அதில சிறப்புக் கதை என்று வரும் என்றும், முதல் பரிசாகாக " சோவியத்யூனியன் " என்ற ரசியன் இலக்கிய மாத சஞ்சிகை ஒருவருடம் இலவசமாக கிடைக்கும் என்றும் நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.

                                                   வாசிகசாலை இலக்கிய அரங்கில்.  கவிஞ்சர் கந்தப்பு " ஜுலிய சீசர் " நாடகம் பழக்குவதைப் பார்க்கப் போன நேரம் அந்த நோட்டிசைப் பார்த்தேன் .

                                     
வீட்டை வந்து ஒரு கதை எழுதத் தொடங்கினேன் , அந்த நேரம் வீட்டில ஹோர்ம் வேர்க் மட்டுமே எழுத அனுமதி இருந்தது, அம்மாவுக்கு கதை எழுதுறது தெரிஞ்சால் செவிட்டில அறைஞ்சு,

                               " கதையோ,,இப்ப  கதையோ  தம்பி உனக்கு தேவைப்படுது, நாளைக்குக்  கண்டறியாத  இந்தக் கதையோ  உனக்கு சோறு போடப் போகுது,,இப்ப வந்தனென்டா தம்பிக்கு  கதை  காதுக்குள்ள ஒட்டிக்  காட்டுவன்,,ஒழுங்கா  பாடத்தை படிச்சு ,ஹோர்ம் வேர்க்கை  எழுதடா,,அந்த  இந்த  விசர்க்கதைகளை  விட்டுப்போட்டு .."

                                                                     என்று சங்காபிசேகம் தொடங்கும் என்று தெரியும். அதனால  சமய பாடப் புத்தகத்தை எடுத்து வைச்சுக்கொண்டு, அதில  சேக்கிழார் எப்படி பெரிய புராணத்தை சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் அரங்கேற்றினார் என்ற விவரணத்தை விரிச்சு வைச்சுப்போட்டு  அதுக்கு மேலே வெள்ளை புல்க்ஸ்காப் பேப்பரில் உ  எழுதி பிள்ளையார் சுழிபோட்டு, சிவமயம் என்று அதுக்குக் கீழே எழுதி, வலது கையால பேனையைப் பிடிச்சு ...

                                " குச்சு ஒழுங்கையில் கவசமணிந்த  பின்மாலைக்                     கும்மிருட்டு மெல்லிய லில்லி மலர்கள் வாசத்துடன்                                                  இரவுக்குப் பாய் விரிக்க, கிளுவை மரங்கள் வரிச்சுப் பிடிச்ச                                 மணல் தரவையில், மாதவிலக்கு  மஞ்சளாகி வாடி விழுந்த                                 பூவாரசம்பூ தவிர வேறு யாருமே  இல்லை,

                                                 ஆதவன் சொல்லியே வாக்குக் கொடுத்த மாதிரி  ஒழுங்கையின் வடக்கு வளைவில் சைக்கிளை மதிலோடு சாத்திப்போட்டு ,அதே  சீமெந்து சுவரில்  ஒரு காலைப்  பின்னுக்கு வைச்சு ஒருக்கழித்து மற்றக் காலை சுவரோடு தேய்ச்சு உரசிக்கொண்டு  கவரிங் பொசிசன்  எடுத்து பவதாரணி வாறதைப்  பார்த்துக்கொண்டு நின்றான்,

                                            அம்மச்சியாகுள  தொடக்கக் ஒழுங்கைப் பக்கமாக பவதாரணி டியூசன் புத்தகத்தை நெஞ்சோடு இரண்டு கையாளும் இறுக்கிகொண்டு  ஒழுங்கை முடிவில் நிக்கும் சைக்கிளின் பின் ரெட் லைட்டை வைச்சு நிக்கிறது ஆதவன் என்று தெரிந்த போது சிரித்துக்கொண்டே பின்னால் திரும்பி வேற யாரும் வருகிறார்களா  என்று பாக்க,,,

                                      இந்திய இராணுவ சீக்கிய ஜவான் ஒருவன் எஸ் எல் ஆர் ரைபிளை ஒழுங்கை முடிவை நோக்கி நீடிக்கொண்டு  அவளுக்கு மிக மிக சமீபமாக வந்தான் , ஆதவன் சடார் என்று  பையரிங் பொசிசன்  எடுக்க , முன்னுக்கு  வந்த  பஞ்சாப் மேஜர்தர  சிங் அதிகாரியின்   பின்னே நிறைய முண்டாசு தாடி மீசை ஜவான்கள் ரைபிள்களை நீட்டிக்கொண்டு வந்தார்கள் ..."

                                         
அந்தக் கதை இப்படிதான் தொடங்கியது. கொஞ்சம் எழுதிப்போட்டு ஏன் சேக்கிழார் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்த நாயன்மார்கள் எல்லார் பற்றியும் பெரியபுராணம் எழுதி அதில் சும்மா அவர் புத்தகத்தை வெளியிட மட்டும் பந்தா போட்ட சிதம்பரக் கோவில் பிராமணர்களைத் "  தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் " எண்டு சொன்னார் என்று ஜோசிதேன்.

                                                            அந்த அந்தணர்கள்   மொஹாலாயப் படை எடுப்பு நேரம் சிதம்பரம்  கோவிலை அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போனவர்கள் .  சேக்கிழார் பெருமான் அவர் புத்தகம் வெளிவர அப்படிக் காக்கா பிடித்து தூக்கிப்  பிடித்தாரோ என்றும் ஜோசிக்க வைத்தது.  

                                     
 நான் எழுதிய அந்த முதல் கதை இந்திய இராணுவம் அமைதி இராணுவம் என்ற நிலையில் இருந்து மாறி ஆக்கிரமிப்பு நிலையில் இருந்த நேரம் நடக்கும் ஒரு காதல் கதை. நானே செக்கிங்  நெருக்குதல் , இரவுகளில் சுற்றி வளைப்பு,  நடு இரவு காதைக் கிழிக்கும் டாம் டூம் குண்டு வெடிப்புகள், அதிகாலை தெருவோரதில் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் என்று பலவற்றை அந்த நேரம்  அதற்குள் நின்றே அனுபவித்துக்கொண்டு இருந்ததால் இலகுவாக எழுத முடிந்தது. ,

                                                பவதாரணி  என்ற இளம் படிக்கும் பெண் ஆதவன் என்ற ஒரு  இளைஞனைக் காதலிக்கிறாள்,  இருவரும் ஒன்றாகப்  படித்தார்கள், ஒவ்வொரு பாட இடைவெளிக்கும்   பாடசாலை மணி அடிக்கும்போது உருவாகிய காதல் . நல்லாப் படிக்கக்கூடிய அந்த ஆதவன் தொடர்ந்து  படிக்கவில்லை. .. .......என்ற  இயக்கத்தில் சங்கீதன்  என்ற பெயரில் இயங்குகிறான்.

                                                அவர்களின் முதல்  காதல்  தொடங்கிய  அந்த ஒழுங்கையில்   ஒருநாள் வழமை போல சந்திக்க அவளும் அவனும்  பிளான் போடுகிறார்கள், நிலைமையோ டைம்  செட்  செய்யப்பட்ட வெடிகுண்டுக்கு மேலே நிற்பது போல.. 

                                               இடையில் எப்படியோ  புலனாய்வு செய்து மோப்பம் பிடித்த  இந்திய இராணுவம்,,அந்த சந்தர்பத்தை வைத்து ஆதவனைப் போட  வர,  ,,கதையின் முடிவில் ஆதவன்  காயங்களுடன்  மரவள்ளித்  தோட்டத்து வாய்க்காலில் நிலை எடுத்து தட்பாதுகாப்பாக சுட்டுச் சுட்டு தப்பிப் போய் விடுவான், பவதாரனி இந்திய இராணுவ துப்பாக்கி ரவைகள் தோள்பட்டையில் பாய்ந்து முன்னுக்கு வலது மார்பைப் பிய்துக்கொண்டு போய்  அந்த செம்பாட்டு வீதியில் இறக்கிறாள். 

                                    "    ஒழுங்கை முழுவதும்  துப்பாக்கிச்சூடுகளின் அதிர்வும் , செம்பாட்டு மண்ணில் சிதறிஓடிய நாய்க்களின்  ஒலமும்  ஓய்ந்து முடியும் போது ஒரு பூவரசம் பூ பவதாரனி நெற்றியில் நேராக  கும்குமப் பொட்டுப் போல  விழுந்தது .."

                                          இதுதான் கதையின் கடைசி வரி , ஏன் பவதாரணி இறந்தாள் என்பதுக்கு அவள் ஆதவனைக் காப்பாற்ற ஒரு தந்திரம்  செய்வாள். பெண்களுக்குத்தான் துணிவு வரும் இந்த நேரங்களில் . பயங்கரமான யுத்த நிலைமை, இந்தியன் ஆர்மியின்  எஸ்எல்ஆர் செல்ப்  லோடிங் துப்பாகிகள் வெடிக்கப் போகுது , ஆதவனின்  ஆட்டோமாடிக் கலாஸ்நிக்கோவ் ரைபிள் எப்பவும் மனுவல் செட்டிங்கில்  பிபி  பாக் இல் லோட் செய்து சேம்ம்பரில் ரவுன்ஸ் ஏற்றி வைச்சிருப்பான். அதுவும்  அவளுக்கு தெரியும் ,

                                             அப்பவும்  அவள்  ஆதவனைக் காப்பாற்ற ஒரு தந்திரம்  செய்வாள். அதுதான் கதையின் " செண்டிமெண்டல் ஹய்லைட்ஸ் " 

                                 ஆனாலும் பவதாரணி  துணிந்து வைக்கும் ரெண்டாவது  காலடியில் ..கதையை எகிறிப்பாய வைக்க  அப்பிடியே  கேர்பின்  வளைவுபோல நூற்றி எண்பது பாகை  டிகிரியில் ஒரு திருப்பம் வைச்சேன்.

                                                    ஏனென்றால்  அந்தக் கதையில் ரஷியன்கிர்கீசிய  மொழி எழுத்தாளர்  சிங்கிஸ் ஜேமேதாவின்  ஜமீலா போன்ற ஒரு பெண்ணாக யாழ்ப்பாணத் தமிழ் பெண் பவதாரணியை சிருஸ்டிக்க நினைத்தேன்...அதனால கதை எனக்குப் பிடித்து இருந்தது. மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்பது பற்றி ஒன்றுமே நான் நினைக்கவில்லை. 

                                 

இந்திய ராணுவம்  எங்கள் பிரதேசத்தை விட்டுப்போன  பின் சில வருடங்களில் அதை எழுதி இருந்தேன். அந்தக்  கதையைத்தான் வெளிச்சிறைக்குப் போட்டிக் கதையாகக் கொடுத்தேன், நேரடியாகவே கொண்டு போய்  தவலோகராஜாவிடம் கொடுத்தேன். அவர் வேண்டி மேலோட்டமாகப் சர் சர்  என்று  கண்ணை  கடுக்காய் நண்டு போல இழுத்துக்கொண்டு போய்  வசன  முடிவுவரிகளில்  செருகி வைச்சு பார்த்தார். அப்பிடிதான் அவர்  வாசிப்பார்  போல  இருந்தது.  

                                       "   உன்னோட கை எழுத்து நல்லா இருக்கு,,கதை  எழுத்து  எப்படி  இருக்கும் என்று முழுக்க வாசிதுப்போட்டு சொல்லுறேன்,,"

                                           "   ஓம்..  சேர் "

                                     " ஆனாலும் இது  போட்டி  கண்டியே,,அதால  இப்ப  நான்  இதை  வேண்டீனா,,இனி  முடிவு வரும் வரை  யாருக்கும்  எதுவும் சொல்லக்கூடாது.."

                                        "   ஓம்..ஓம்,   சேர் "

                                " அதுதான் போட்டிக் குழுவின்  சட்டம்  தெரியும்  தானே "

                                    "   ஓம்..ஓம்  தெரியும்  சேர் "

                                  "   கதை என்ன இயக்கக் காலக்  கதையோ,,இந்தியன் ஆமியோடு பூனையும்  எலியும்  பிடிச்சு விளையாடின கதையோ "

                                 " ஓம்,,ஓம்  சேர்..கொஞ்சம் அப்படிதான் "

                               " இதென்ன கதையின் தொடக்கம்,,ஒரு மாதிரி  சக்கரைச் சாக்கு சளியிற மாதிரி  வர்ணனையில்  தொடங்குது,,"

                                           "   ம்..ம்  ....... சேர் "

                                " இப்பிடி எங்கட ஆட்கள்  எழுத மாட்டினமே "

                                " ஓம்,,,சேர்  ,,நான்  நிறைய ரஷியன்  மொழிபெயர்ப்பு கதைகள்  படிப்பது,,அவைகளின்  பாதிப்பு "

                             "  ரஷியன்  கதைகள்  நீ படிச்சா  நீ என்ன  கொம்போ, இப்புடி  வர்ணனை வாக்கியம்  எல்லாம் கொமிடியில் உள்ள மற்ற மெம்பர்களுக்கே காதுக்க  சில்வண்டு  சுத்துமே "

                                     "??????????????? "..

                             " அவயளுக்கே கொஞ்சம் கஷ்டமே  விளங்க "

                                " இல்ல,,சேர்,,நான்  தவறுதலா ரஷியன்  கதை  பற்றி  சொல்லிப்போட்டேன்  சேர்.. "

                                 " டேய்,,நீயே  ஒரு  கழிசடை,,,என்னட்ட தவண்டு தவண்டு  படிச்சனி தானே,"

                                                 "   ஓம். ... சேர் "

                                    " ,ரெண்டு  வருஷம் மட்டில்  நான் தானே  உனக்கு  கிளாஸ்  மாஸ்டர்   நினவு இருக்கோ  "

                                 " ஓம்..ஓம் ,,சேர்,,,ரசியன்  கதை  யாரும்  வசிக்கலாம்  ,,சின்னப்  பிள்ளைகளை  நித்திரை கொள்ளவைக்கும்  போது சொல்லுற மாதிரி இலக்குவான கதைசொல்லிகள்  அவர்கள்..  சேர் "

                                "   ஓ ,,அப்படியோ ,இப்ப என்ன நாவல்  படிச்சுக்கொண்டு  இருகிராய் ,,,சும்மா  பொய் அவிட்டு விடாதை  ,,பிறகு பிடிபடுவாய் "

                              " லேர்மன் தாவ் எழுதின நாவல்  சேர் "

                             " அவர்  தானே  கரமசோவ் சகோதரர்கள் நாவல் எழுதினது "

                           " இல்லை சேர்  அது  பியோடர்  தவஸ்தேயாஸ்கி "

                            " அவர் தானே  தானாபாய்  என்ற  விவசாயி ஒரு குதிரை  வைச்சு  இருந்தான்  எண்டு  எழுதினது,,,அந்தக்  குதிரைக்கு  என்ன பெயர்"  

                           "  குதிரைக்கு  குல்சாரி  பெயர், சேர் , அதை  எழுதியது    பியோடர்  தவஸ்தேயாஸ்கி இல்ல சேர்   அதை  எழுதியது  சிங்கிஸ்  ஜமாதவ் "
                           
                                " ஒ...அப்பிடியே,,ஆனாலும்  நீ  கனக்க  தெரிஞ்ச பன்னாடை போல    எனக்கே  பிழை பிடிக்கிறது  நல்லதுக்கு  இல்லை  தெரியுமே.."

                          " ஓம்,,சேர்,,நான்  எனக்கு  தெரிஞ்சதை  மட்டும் சொன்னேன்  சேர்..நீங்க  இலக்கியம்  நல்லா  படிச்சவர்  சேர்..."
                               
                         " சரி,,இப்ப  நீ வாசிக்கிற புத்தகம்  என்ன,,எனக்கும்  சொல்லு,,எப்படி  என்று  ஜோசிக்கலாம் "

                          " --நம் காலத்து நாயகர்கள் ---- என்ற நாவல் சேர் ,,லேர்மன்  தாவ்   எழுதி  இருக்கிறார் "

                            " ஓ.. அப்படியே,,,அவர்  உந்த  ளார்ர்மன் தாவு எப்படி  உந்தக் கதை தொடன்குறார் ,,எங்க கொஞ்சம் சொல்லு பார்ப்பம்,,"

                         "அவர் பெயர் ளார்ர்மன் தாவு இல்லை சேர்..லேர்மன் தாவ்  சேர்,,அந்த  நாவல்  ---- ரஷியக் கடற்கரைக் கிராமங்கள் எல்லாவற்றிலும்  கேடு  கெட்டது தமாம்----- இப்படி  தொடங்குது .  சேர் "

                          " டேய்..என்னடா..நீ  என்னட்ட  பிரம்பால அடிவேண்டிப்  படிச்ச  கழுதை  எனக்கே  பெயர்  திருத்துது,"

                                      "   சொறி  சேர் ...நான், ,  சொறி  சேர்,  வாய் ,  சொறி  சேர்,,,,குளறி,,,   சொறி  சேர் "

                                     ," நாலு பேப்பரில்  உள்ள கதையைக்  கிழிச்சு ஏறிஞ்சு போடுவேன்  தெரியுமா ,,சேட்டை விட்டாய் என்றால் "

                     " சொறி  சேர்..நான்  வாய் குளறி அப்படி சொல்லிட்டேன்.."

                   " நான் தான் வெளிச்சிறையின்  ஆசிரியர்  தெரியும்  தானே,,"

                                        "   ஓம்..ஓம்  தெரியும்  சேர் "

                                           " ஒண்டவிட்டு ஒருநாள்  பின்னேரம்  வீட்டுக்கு  வா,,நாலு வாளி  தண்ணி அள்ளி முன்னுக்கு நிக்கிற செவ்வரத்தம் பூக்கண்டுகளுக்கு  ஊத்து  ,, என்ன நான் சொல்லுறது  விளங்குதே "

                  " ஓம்,,சேர்..இது  நான்  எழுதின  முதல் கதை  ,,சேர் "

                      " ம்..ம்ம்... நான்  இரவுக்கு  வாசிப்பேன் ..தண்ணி வாளி நினைவு இருக்குதானே .."

                     " ஓம் ஓம் சேர்,,இது  முதல்  கதை,,ஆர்வத்தில்  எழுதியது,,சில  பிழைகள்  இருக்கும்ம் சேர்.."

                          " டேய்..அதுக்குதானே  நான்  வெளிச்சிறை  ஆசிரியரா  இருக்கிறேன்,,என்னைவிட இந்த  ஊருக்குள்ள வேற ஆருக்கும்  தகுதி  இருக்கோ,,சொல்லு  பார்ப்பம்," 

                      " இல்லை,,சேர்,,நீங்கதான்  ஒரே  ஒரு  தகுதியான ஆள்  சேர்  " 

                        " கதை  கொஞ்சம்  நல்லா  இருக்கு  தொடக்கத்தில்,,எண்டாலும்  நான்  முழுதும் படிக்காமல் சொல்ல மாட்டேன்.  " 

                           " ஓம்..ஓம்...ஓம்..சேர்,,மற்ற ஆட்களும் அனுப்புவினம் தானே,,அதுகள் இதைவிட நல்லா இருக்கும்  சிலநேரம்,,ஆனால் வெளிவராட்டியும் பரவாயில்லை ,சேர் "

                               " சரி,,கனக்க  வள வள எண்டு கதைக்காதை,  ஒண்டவிட்டு ஒருநாள்  பின்னேரம்  வீட்டுக்கு  வா,,நாலு வாளி  தண்ணி அள்ளி முன்னுக்கு நிக்கிற செவ்வரத்தம் பூக்கண்டுகளுக்கு  ஊத்து  "

                                   " ஓம்..ஓம்...ஓம்..சேர் "

                                 " , என்ன நான் சொல்லுறது  விளங்குதே" 

                                       " ஓம்  சேர்  ..நினைவு  இருக்கு, திறந்தவெளிச்சிறைச்சாலையும் நினைவு  வருது,,,,"
                 
                           " என்ன  பிறகு  வாய்க்குள்ள  முனுமுனுக்கிறாய் "

                       " இல்ல,,சேர் ,திறந்த  மனதுடன்  வெளிச்சிறைக்கு  நீங்க  ஆசிரியரா இருப்பதால்,,,நல்ல தரமாக வருகுது  என்று  சொன்னேன் "

                         
ஒரு கதை ஒரு சஞ்சிகையில் வருவதுகுக்காக  அதன் பதிப்பு ஆசிரியர் வீட்டுக்கு  ஒண்டவிட்டு ஒருநாள்  பின்னேரம்  போய் நாலு வாளி  தண்ணி அள்ளி முன்னுக்கு நிக்கிற செவ்வரத்தம் பூக்கண்டுகளுக்கு ஊற்றிகொண்டிருந்தேன்,  அவர்  நாலு  வாளி என்று  கதையைக்   கையில வேண்டும்போது சொன்னார்  ஆனால் அவர் வீட்டுக்குப்போக அது  பத்து வாளி ஆகிட்டுது.

                                               எப்படியோ  அவர் வீட்டுக்கு தண்ணி ஊற்றப் போனால் அவர் கதைக்க மாட்டார். என்னைக் கூலி வேலைக்கு வந்தவன் போல கண்டும் கானானது போல இருப்பார். வெளி விறாந்தையில்  ஈசிசேரில்  இருந்துகொண்டு காலச்சுவடு, கணையாழி, கசடதபற போன்ற இலக்கிய சஞ்சிகைகள்  வாசித்துக்கொண்டிருப்பார்.  

                                 எப்படியும் பின் வளவில இருந்த  கட்டுக் கிணற்றில் இருந்து  வாளியில்  தண்ணி நிறைச்சு முன்னுக்குக்  கொண்டு வந்து   தண்ணி ஊற்றி முடிய  அதிகமாக  மாட்டுக்கு புல்லு அரிஞ்சு போடச் சொல்லுவார், சில நேரம் அவர் மனைவி அள்ளிக் குளிச்சு  முழுக  பெரிய தொட்டியை நிரப்பிவிடச் சொல்லுவார்,  சின்ன மாதுளம் கண்டுகளைச் சுற்றி கிண்டிப் பசளை போட்டுவிடச் சொல்லுவார்.

                                         இதெல்லாம் சொல்லுவார் என் கதையின் நிலை பற்றி ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.

                               
ஒரு கதை  எழுதி அதை ஒரு உலகமகா  இலக்கிய ஆசிரியரின் கையில கொடுத்த துணிவில் அதுக்குப்பிறகு  அடிக்கடி  வாசிகசாலை இலக்கியமன்றம்  பக்கம்  போறது. ஆனால் தவலோகராஜாவை அங்கே  காணமுடியவில்லை .

                                           ஒருநாள் ஆண்டிறுதி கணக்கு வழக்குப்பதிவு சம்பந்தமான ஒரு அறிக்கை தயாரிக்க  வந்திருந்தார் . நான்  என் கதை பற்றிக் கேட்டேன் . ஆச்சரியமாக அவரே வந்து 

                                  " டேய்..செம்மறி,,சும்மா சொல்லக்கூடாது...கடவுளே என்று  கதை  நல்லா  இருக்கடா..நான்  மூன்று  தரம்  த்திருப்பி  த்திருப்பி வாசித்தேன்,,,"

                                 " அப்படியா,,நன்றி  சேர்.."

                         " ஆனால்,,அந்த  குளத்தம்  கரையில்  அந்தப்  பெடிச்சியும்,,பொடியனும்  கதைக்கிற  உரையாடலை  கொஞ்சம்  அதிகமா  நீட்டி  எழுதி  இருக்கலாம்  போல  இருக்கு  "

                            " அப்படியா,,ஏன்  சேர்  அதை  நீட்ட  வேணும்  "

                            "  அவளவு ருசியா  இருக்கடா, படலையத்  திறந்து  கொண்டு  போய்க் கேட்காமல்  பக்கத்தில  வேலிக்கால  எட்டி நிண்டு  விடுப்பு  கேட்கிற  மாதிரி  இருக்கு "

                        " அப்படியா  சேர் ,, நல்லது  ,,இனி  ஒண்டும்  செய்ய  ஏலாதுதானே,,"

                        " டேய்  எருமை  மாடு //    படலையத்  திறந்து  கொண்டு  போய்க் கேட்காமல்  பக்கத்தில  வேலிக்கால  எட்டி நிண்டு  விடுப்பு  கேட்கிற  மாதிரி ///  இப்பிடி இந்த  வசனம்  நீ தானே  அதில  எழுதி  இருகிறாய்,,அதை  நான்  திருப்பி  சொன்னேன்,,நல்ல  வசனமடா அது  வாற  இடம்  "

                       " ஓம்,,சேர்...நான்  தான் எழுதி  இருக்கிறேன் ,,எனக்கும்  குழப்பமா இருந்தது  நீங்க  சொல்லும்  போது.."

                        " சரி விடு  விசியத்துக்கு  வாறன் ,,இந்தக்  கதை  என்னட்ட தந்த கதை சிலமன் வேற யாருக்கும்  சொன்னனியே "

                    "  இல்லை,,சேர்..உங்களைத் தவிர வேற யாருக்கும்  தெரியாது " 

                    " ஏன்,,வீட்டில கொம்மாவுக்கும்  சொல்லேல்லயா "

                      " வீட்டில கொம்மாவுக்கும்  சொல்லேல்ல சேர் "

                      " அறைஞ்சன் என்றா  இப்ப காதில , நான் கேட்டது , உன்னோட  கொம்மாவுக்கும்  தெரியாதோ  என்று "

                  "  இல்லை சேர்,,வீட்டிலயாருக்கும்  சொல்லவில்லை சேர் "

                    " ஏண்டா  டேய் கொம்மாவுக்கும் சொல்லேல்லயா ,,உன்ட கொக்கா இங்கிலிஸ் பொயம்ஸ்  எல்லாம் தேடித் தேடி  மொழி பெயர்ப்பாளே  அவளுக்கும் தெரியாதா "

                   " ஒருத்தருக்கும் தெரியாது,  சேர்,  அம்மா கதை எழுதினது தெரிஞ்சால் தோலைக் கண்டம் கீறி கருவாடு போட்டுடுவா சேர், "

                      " கந்தப்பருக்குத் தெரியுமே,,அந்தக்  காளமேகப்புலவருக்கு  என்னவும்  பறைஞ்சனியே "

                           " இல்ல,,,சேர்,,,கவிஞ்சர்  கந்தப்புக்கும்  தெரியாது "

                      " சரி,,நான் ஒண்டு சொல்லுறேன்  இந்தக்கதை  இந்த  ஆண்டுவிழாப் பதிப்பில்  நீ எழுதியதாக வர சான்ஸ்  இல்லைப்  போல  இருக்கு,,,,"

                                 " ஏன்   , சேர்,  "

                                           " ஏன்னென்றால் வேறு ஒரு  பொடிச்சி  ஒரு  பெண்விடுதலைக் கதை  எழுதி  இருக்கிறாள்  அதுதான்  செலக்சன் கொமிட்டி ஆட்களுக்குப் பிடிச்சு இருக்கு.."

                      " என்னோட  கதை  அவர்களுக்கு  பிடிக்கவில்லையா  சேர்,,"

                     " உன்னோட  கதை...அது  வந்து,,,ஹ்ம்ம்,, அதை  அவர்கள்  யாருமே  வாசிக்கவில்லை......"

                     "சரி,,,சேர்,,,இன்னும் அவர்களுக்கு  என் கதை  வாசிக்க  நேரம்  கிடைக்கவில்லை என்று  நினைகேறேன் ,,வாசித்தபின்  சொல்லுவார்கள்,,,"

                                  " .அது  வந்து,,,ஹ்ம்ம், "

                                " எனக்கு  யாராவது  வாசித்தால்  போதும்,,அதுக்கு  பரிசெல்லாம் தேவை இல்லை..தகுதி  இருந்தால் பரிசு  கொடுக்கட்டும் "

                        " ஹ்ம்ம்,,அது,,வந்து,,,சரி  விடு,,,எனக்கும்  ஒரே  கரைச்சல் இவங்கள்  சிறப்புக்கதை   எழுதி தரசொல்லி , சுடுகுது  மடியைப் பிடி என்று நிக்குறாங்கள் "

                                       " ஏன்   , சேர்,  "

                                        "   அனுவல் பப்பிளிசிங் கொமிட்டி ,,என்னத்தைப்  பிடிச்சு  எழுதுறது  என்று தெரியவில்லை,,நாள்  வேற  நெருங்குது ...".

                        " ஹ்ம்ம்,,,அது  பரவாயில்லை,,நீங்க  ஒருவர்  வாசித்ததே  எனக்கு  மனநிறைவு சேர்.."

                     "  டேய்,,உண்மையாதானே  சொல்லுறாய் இந்தக்  கதை  என்னட்ட தந்த கதை சிலமன் வேற யாருக்கும்  சொல்லவில்லை  என்பது  "

                                   " ஏன்   , சேர்,  "

                                "  அது  உண்மைதானே  நீ படிக்கிற சரஸ்வதி மேல சத்தியம் செய்து சொல்லு "

                  " சரஸ்வதி மேல சத்தியமா சரஸ்வதியைத் தவிர வேற   ஒருத்தருக்கும் தெரியாது "

                    " சரி,, அப்ப இதை  உனக்குள்ளே மட்டும் வைச்சிரு,,இனிப்   பூக்கண்டுக்கு தண்ணி ஊற்ற வராதை ,,சரி  தானே,,"

                                       " ஏன்   , சேர்,  "

                                       " வாயையும்  கண்டபடி திறக்காதை,,,தளராமல் உன்னோட ரெண்டாவது  கதையை  எழுது.....ஹ்ம்ம்,,,ஆனால்  யாருக்கும்  கொடுக்காதே,, ஹ்ம்ம்,,,"

                    "  சரி சேர்,,நீங்க  சொன்னபடியே  செய்யுறேன்  சேர்,"

                   
அதுக்குப்பிறகு  நான்  கதையே  எழுதவில்லை..சும்மா வேற விசியங்களில் ஓடுப்பட்டுக் கொண்டு திரிந்தேன்.  ஆனால்  பவதாரணி  ,ஆதவன்  என்ற  அந்தக்  கதை அந்த வருட ஆண்டு விழாவில் இருந்தது . அது
                               
                                                   " குச்சு ஒழுங்கையில் கவசமணிந்த  பின்மாலைக்                     கும்மிருட்டு மெல்லிய லில்லி மலர்கள் வாசத்துடன்                                                  இரவுக்குப் பாய் விரிக்க, கிளுவை மரங்கள் வரிச்சுப் பிடிச்ச                                 மணல் தரவையில், மாதவிலக்கு  மஞ்சளாகி வாடி விழுந்த                                 பூவாரசம்பூ தவிர வேறு யாருமே  இல்லை,

                                           இப்பிடித் தொடங்கி

                           "    ஒழுங்கை முழுவதும்  துப்பாக்கிச்சூடுகளின் அதிர்வும் , செம்பாட்டு மண்ணில் சிதறிஓடிய நாய்க்களின்  ஒலமும்  ஓய்ந்து முடியும் போது ஒரு பூவரசம் பூ பவதாரனி நெற்றியில் நேராக  கும்குமப் பொட்டுப் போல  விழுந்தது .."             

                                      இப்படி  முடிகிறது. அதை தவலோகராஜா அவரின்  எழுத்துலகப்  புனைபெயரான கூளங்கைச் சக்கரவர்த்தி  என்ற  பெயரில் எழுதியதாகப் போட்டு இருந்தது. சிறப்புச் சிறுகதை என்று பெரிதாக மூன்று இடத்தில விளம்பரம் போட்டு இருந்தார்கள்.


கவிஞ்சர் கந்தப்பு  ஒருநாள் அந்தக் கதையை சிலாகித்து " ஜுலிய சீசர் " நாடகம் பழகும்போது சொல்லிக்கொண்டிருந்தார் 

                            " தவலோகம் ஒரு  கதை  எழுதி இருக்கிறான்  எங்கட  வெளிச்சிறை ஆண்டு விழா மலரில சும்மா சொல்லி வேலை   இல்லை,.."

                             " .கதை ????தவலோகம்  மாஸ்டர் ???கதை  எழுதி ??? "

                       " . அஞ்சிலே ஒண்றாராக ஆருயிர்க்காக ஏகி  அஞ்சிலைலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு  என்று  ....கம்பநாட்டாள்வான்  சொல்லுவான் ,,அதபோல  ஒரு  காதல்  கதை "

                             " அதென்ன  கதை  ,,கவிஞ்சரே "

                      " டேய்,, அது  எங்கட  ஊர்  காதல்  கதை,,ஒரு  ஒழுங்கையில் முடியுது..கோதாரி  விழுந்த  இந்தியன்  ஆமிக்காரன்  அந்தக் குமர்ப்   பிள்ளையை   சரிச்சுப் போட்டாங்கள்,,"

                                    "பிறகு என்ன நடந்தது..கவிஞ்சர் ஐயா   " 

                                   "அந்தப்  பெடிச்சி  அந்தப்  பொடியனை  ஒரு  ட்ரிக்ஸ்  விட்டுக்  காப்பாற்றிப் போட்டு  செத்துப் போனாள்..புண்ணியம் செய்த  சீவன்  "

                              "  ம்....பிறகு  .."

                           " கதை  உண்மையான சம்பவம்  போல இருக்கு  வாசிக்க, குருக்கள் வளவடிப்  பெட்டை  எண்டு தவலோகம் எழுதி இருக்கிறான், "

                                         "பிறகு என்ன நடந்தது. .."

                             " குருக்கள் வளவடி  எண்டா  , அவடதில  ஆர்  ஆட்கள் ,"

                                     " எனக்கு  எப்படி  தெரியும்  கவிஞ்சர் அய்யா "

                            " குருக்கள் வளவடியில்  அருளானந்தம் வாத்தியாரின்   ஒரு  மகள், ரெண்டாவது  எண்டு  நினைக்கிறன் , வாசிட்டியில் படிச்சுக்கொண்டு  இருந்தாள்,,"

                                            " தெரி....  எனக்கு  சரியா..தெரி....பிறகு...  "

                                     அவள்  தானே  இயக்கத்துக்குப்  போனது "

                                       " அதுவும்  எனக்கு  சரியா  தெரியாது,,அருளானந்தம் மாஸ்டரின்    கடைசி  மகள் என்று  நினைகிறேன்  "

                               " அப்பிடியே,,ஆனால்  அவள்  இந்தியன் ஆமியுடன்  அடிப்பட்டு  எல்லோ  சண்டிலிப்பாயில்   அவங்கட  கவசவாகனத்தைக் கவிட்டுப் போட்டு  எல்லோ  செத்தவள்   "

                                 " ஹ்ம்ம்,,,ஒரு  கதைக்கு  சில  விசியங்கள்  அதில்  இருந்து  அவருக்கு  கிடைச்சு இருக்கலாம்,  அப்படி  எடுப்பது  பிழை  இல்லைதானே " 

                         " எண்டாலும்,,கண்டியே , யாரையும் கொப்பி  அடிக்காத  தனித்துவமான  எழுத்து நடை  எங்கட  தவலோகதிட்ட இருக்கு "

                            "  ம் "

                 " ஒவ்வொரு  திருப்பமும்  பார்த்தியே எண்டால்   ,,கடுகண்ணாவை ஏத்தம்  இறக்கம்  போல  புல்லரிக்கும்  "

                               "   ம் "

                             "  யாருமே  தொடாத சப்ஜெக்ட் என்ன   சொல்லு  பார்ப்பம்,,,இந்தியன் ராணுவம் இருந்த நேரம்  இதை  எழுதி இருந்தான் எண்டால்,,தவலோகத்தை  இழுத்துப்போட்டு சுட்டு இருப்பாங்கள்  அந்த எளிய இந்திய ஆமி  நாயள் "

                          "     ம் " 

                     " இந்த  மாதிரி அடுத்தவனின்டைக்க  கையைவிட்டுத் துலாவி  எடுக்காமல்  யூனிக் ஆக  சிந்திக்க எங்கட தவலோகம் ஒருத்தனுக்குதான்  தெரியும். "

                        "ம்  ம் .. " 

                       " மற்றவங்கள்  சும்மா  தார் ரோட்டுப்போல  சும்மா சங்கானை மனியத்திண்ட வெங்காய லோறிபோல  இழுத்துக்கொண்டு  போறது,,,ஒரு அறுப்பும்  இல்லை  அதை  வாசிக்கிறதில "

                           "   ம் "

                   "  நீ  இருந்துபார்  தவலோகம்  இதோடு  ஒரு  எழுப்பம்  எடுப்பான்  பார்,, "
                                  "  ம் "

                         " பாரன்  அவனிண்ட  அடுத்த  கதையை அது   மாதா கொடி திரி எண்டு  இதைவிட  எழுப்பமா  இருக்கப்போகுது ,,"

                        " அது  எப்படி  அவளவு  உறுதியா சொல்லுரிங்க  கவிஞ்சர் "

                        " டேய் ,  நீ  இருந்து  பார்.. நான் சொல்லுறன்  எல்லோ,,நீ இருந்து பார்," 

                                   
அதுக்குப்  பிறகு பல வருடம்  நான்  இருந்து பார்த்தேன் அப்பிடி  ஒரு  கதை  தவலோகம் என்ற கூளங்கைச்சக்கரவர்த்தியிடம் இருந்து எழுதப்படவில்லை.

                                            அதற்கு அடுத்த ஆண்டும்  சிறப்பு மலர் வந்தது. அதுக்கும் தவலோகராஜா சிறப்பு ஆசிரியர் ஆக இருந்தார். அப்படி  வந்த ஆண்டுவிழா சிறப்பு இதழிலும் ஒரு சிறப்புச் சிறுகதை வெளிச்சிறையில்  இருந்தது .

                                  " பூக்களுடன்  பேசுவதை நிறுத்தியவள் "

                                             என்று அந்தக் கதைக்கு  தலைப்பு இருந்தது 

                                             
அதை எழுதியிருந்தது  இப்போது இங்கிலாந்தில் வேல்ஸ் என்ற  இடத்தில கைனகோலோயிஸ்ட்  என்ற பெண்நோயியல் வைத்திய நிபுணராக இருக்கும் கவ்சல்யா . டாக்டர் கவ்சல்யா  எங்கள் ஊரில் அயலில்  பார்வதம்   மாமியின் மகள் .

                                            அந்தக்  கதை கவ்சல்யாவின்  சொந்த வாழ்வின் கதை. உண்மையைச் சொன்னால் யாராலும் திருடி எழுத முடியாத, ஒரு ஆண்  தான் எழுதியதாகப் பெயர் போட விருப்பப்படாத கதை.

                                    அதால் அது எழுதியவரின்  சொந்தப்பெயரில் தப்பி இருக்கலாம்..!!!!


           

Sunday, 20 March 2016.