Tuesday 17 March 2015

1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன்..

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் ,முக்கியமான வீதியான கால்ஜோஹான்ஸ் காத்தாவில் உள்ள இந்த சிலை ,1940 இல் இருந்து 1945 வரை தொடந்து ஐந்து வருடம் நோர்வே தழுவிய சைக்கிள் மிதிப்புப் போட்டியில் முதலாவதாக வந்த குன்னர் சொன்ஸ்டபிசன் என்ற இந்த வீரனின் சைக்கிகிள் சம்பியன் ஓடின 1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன் நிக்கும் வெண்கலச் சிலையைச் சென்ற கிழமை சாம்சுங் கலக்ஸ்ஸி என்ற என் மஹாலட்சுமி போன்ற மொபைல் போனில் எடுத்தேன்.
                                         நோர்வே அரைவாசி வருடம் குளிர் உயிரை எடுக்கும் நாடு,கோடைகாலத்தில் மட்டும் சைக்கில் ஓடலாம், அதைவிட ஒஸ்லோ நகரம் வாழ்க்கை போல மேடு பள்ளம் அதிகம் உள்ள பிரதேசம், ஆனாலும் என்னைபோல இங்கே சைக்கில் ஓடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,கோடையில் வீதிகளில் வயது,பால் வேறுபாடு இன்றி இந்த இரண்டு சில்லு இரும்புக் குதிரைகள் பாய்ந்து போவது இயல்பான காட்சி.
                                          கழுத்தில கமராவைக் கொழுவிக்கொண்டு திரியும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர் " போலப் பல படங்கள் சரிஞ்சு சுழண்டு, நெளிஞ்சு சுழண்டு ,உருண்டு பிரண்டு ,விழுந்து கிடந்தது பரதநாட்டியம் ஆடி இந்த ஒரு சிலையையே ஒரு மணித்தியாலம் பல கோணங்களில் ,முன்னால ,பின்னால ,பக்கவாட்டில் , என்று பாலு மகேந்திரா போலக் கனவு கண்டு கேவலம் என்னோட மொபைல் போன் கமராவில் எடுத்தேன். அதில வந்த ஒரு நல்ல " டைமென்சன் டீட்டேயில் ", " கொன்ச்பெட் டெப்த் " என்று " ப்ரோபோசனல் ஸ்டில் போட்டோ கிராபர் " சொல்லும் விசியங்கள் தற்செயலாகப் பின் பக்கமாக எடுத்த நிலையில் கமராவிற்குள் அகப்பட்ட படம் இது என்று நினைக்கிறேன்.
                                      நேற்று பெய்த இலற்றோனிக் தொழில் நுட்பம் மழையில் இன்று எங்கள் உள்ளங்கையில் உள்ள இன்றைய டிஜிட்டல் உலகத்தில், காளான்கள் போல முளைச்ச இன்பில்ட் கமரா உள்ள மொபைல் போன் வந்தபிறகு தவிச்ச முயல் அடிச்ச நிண்டவன் வந்தவன் போனவன் எல்லாரும் போட்டோக்கிராபர் போல படங்கள் தாறுமாறா கிளிக் கிளிக் என்று கிளிக்கோ கிளிக்கி , அதுகளை வளவுக்குள்ள ஆரும் வரலாம் ஆரும் போகலாம் என்று படலை திறந்து விட்டுக் கிடக்கும் சமூகம் வலை வீசிக்கொண்டிருக்கும் இன்டர்நெற்றில் எல்லாருக்கும் வேலிக்கு மேலால போட்டுக் காட்டி " பழைய பொஞ்சாதி கை வெல்லத்தைப் பார்க்கிலும் புதுக் காதலியின் கைத் தவிடு ருசிபோல " அமர்களமாக்கி அதிர வைக்கிறார்கள்.
                                       என்னதான் நாங்கள் படம் எடுத்தாலும் ,பல வருடமா புகைப்படக் கலையைப் படித்து, கைகளால் கமராவின் கழுத்து லென்ஸ்சைத் திருகித் தூரம் பார்த்து, தொட்டுத் தடவி எட்ட வைச்சுக் கிட்டப் பார்த்து பிரேம் பிடிச்சு ,உள் நுழையும் ஒளியின் அளவை அப்பாச்சரில் அளந்து விட்டு , கமரா கண்ணடிக்கும் சட்டர் பீட் வேக இமைகளைச் சரி செய்து, நிழல்களால் கமராவின் விழிகளுக்கு மஸ்காரா மை பூசி , நிறங்களைத் தேர்ந்தெடுத்து லிப்ஸ்டிக் தடவி, பளிச் பளிச் என்று பிளாஷ் மின்னல் அடிச்சு , மழை பெய்த மாதிரி விரல்களால் ரீலோட் செய்து " மனுவல் செட்டிங்கில் " உண்மையான கலை அம்சமுடன் ஸ்டில் படங்கள் எடுக்கும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர்களின் " கலைப்படைப்புகள் செலுலோயிட் திரையில் இல் விழுவது போல தலைகீழாக நின்றாலும் நம்மைப் போன்ற அரை அவியல்களால் அவர்கள் போல சொல்லிவைச்சு எடுப்பது கஷ்டம்தான்.
,
.