Thursday, 16 April 2015

ஆர்மிக்குப் போனேன் ....

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                              " நுணலும் தன் வாயால்க் கெடும் " எண்டு பழமொழி சின்ன வயசில் படித்து இருந்தாலும்,எல்லாப் பழமொழியையும் போல அதுவும் யாரோ ஒருவருக்கு சொன்னது போல தான் அப்ப இருந்தது. அதுவே என்னோட வாழ்கையின் வாசல்ப் படியைத் தட்டிய போது அதன் வீரியம் வாழ்கையை விட விபரீதம் நிறைந்ததா இருந்த ஒரு எதார்த்த சம்பவத்தில் " பழனிச் சம்பா சோறிருக்க எருமைத்  தயிரிருக்க ஏன்டி வந்தே சீமைக்கு....  " என்ற  கதை போல ஆகினது நான் சொல்லுற மிச்சக் கதை,...

                             நான் வேலை செய்துகொண்டு இருந்த ரெஸ்டாரென்ட் முதலாளி நல்லவன், அந்த  ரெஸ்டாரென்டும்  அறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி போல என்னோட  அன்றாட வரும்படிக்குக்  கஞ்சி  ஊத்திக்கொண்டிருந்தது ,  எனக்கு  அது  பிரச்சினை ஆகா  இருக்கவில்லை , ஆனால் அவனுக்கு   இதுக்கு மேலயும் என்னை வேலைக்கு வைச்சு இருந்தா  விரைவில் ரேச்ற்றோறேண்டுக்கு மூடு விழா நடக்கும் என்ற பயத்தை வெளிய சொல்லாமல், எப்பவும்

                        " ஏன்பா உன் திறமைக்கு இந்த இடம் எல்லாம் நல்லதில்லை, இதைவிட பெரிய இடங்களில் நீ வேலைக்கு முயற்சிக்கலாமேபா ..  எங்களுக்கும் பெருமையா இருக்கும் , உனக்கும் மாஸ்டர் செப் என்று பெயர் கிடைக்கும் ..ஏன்பா நான் உன் நன்மைக்குதானே  இதெல்லாம் சொல்லுறேன்,.."  

                      எண்டு என் மீது அக்கறையா சொல்லிக்கொண்டு இருந்தான் . அவனை இதுக்கு மேல வதைக்க எனக்கும் விருப்பம் இருக்கவில்லை ,,ஆனாலும் கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேறமாட்டாது போல நிலைமை இருந்தாலும்  எல்லாத்துக்கும்  நேரமும் எல்லா வர வேண்டும் சொல்லுங்க பார்ப்பம்..

                                   ஒஸ்லோவில் கோடை காலத்தில் நோர்வே ராணுவம்  கண்காட்சியும் விற்பனையும் என்று ஒரு  சந்தை நடத்துவார்கள் .அதில் அவர்களின் பாவனையில் உள்ள  பல பொருட்களை விற்பார்கள், அதில என் எதிரிகளைப் போட்டுத்தள்ள துவக்கு ஏதும் விற்பார்களா என்று பார்க்க போனேன். நல்ல காலம் அவர்கள் அது விற்கவில்லை ,ஆனால் நோர்வே நாட்டு ராணுவம் பாவிக்கும் உடுப்புகள் வித்தார்கள். 

                                      ஒரு ஆமிக்காரன் உடுப்பில் இருந்தால் நல்ல எடுப்பா இருக்கும் என்று சில உருமறைப்பு ஆடைகள் அதில வேண்டினேன். அதைப்போட்டால் ஆண்மை உள்ள ஆண்மகன் போல இருக்கும் என்று  அப்ப நினைத்தேன். நீங்களே சொல்லுங்க பார்ப்பம்  உண்மையும் தானே வெளியால நல்ல உடுப்பு போட்டு வீரன் போல இருக்கும் ஆண்களில் தானே பெண்கள் மயங்குறார்கள் என்று சொல்லுறார்கள்.  

                                       சில மாதங்களின் முன் நோர்வே ராணுவத்துக்கு இளையவர்களை சேர்த்து பயிற்சிவிக்கும் " ஹார் ப்ரிவில்லிக் உப்புலாரிங் செண்டர் " என்ற இடத்தில சமைக்கும் வேலை வெற்றிடம் இருப்தாக ஒரு வேலை வெற்றிடம் தகவல் மையத்தின் வெப் தளத்தில் போட்டு இருந்தார்கள். ஆமிக்காரங்களுடன் வேலை செய்தால் சில நேரம் வீரம் வரும் எண்டு நினைச்சு அதுக்கு  " இருப்பது  பொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே.... " என்ற  பட்டினத்தார் பாடலைப்  பாடிக்கொண்டு விண்ணப்பம் போட்டேன்.

                                        ஒரு திங்கக்கிழமை

                            " உன் சமையல் அனுபவத்தை நேரடியா பரிசோதிக்க வேண்டும், எல்லா தகுதி தகவுடமை பத்திரங்களுடன் வா "

                                             எண்டு வரச்சொல்லி தகவல் தந்து இருந்தார்கள். அதால ஏழு மணிக்கே அலாரம் வைச்சு எழும்பிக் , குளிச்சு , செய்யும் தொழிலே தெய்வம் என்று அண்டா குண்டா சட்டி பானை அகப்பை கரண்டியைத் தொட்டுக் கும்பிட்டுப் போட்டு ,  வரப்போற  ஏழரை பக்க விளைவுகளை ஜோசிக்காமல் ஒரு ஆர்வக்கோளாரில் என்னிடம் இருக்கும் உருமறைப்பு ஆமி காட்சட்டையைப் போட்டுகொண்டு போனேன்.

                                  அதிலதான் நானே எனக்கு  ஆப்பு பிளந்து அதுக்குள்ள வாலை விட்ட மாதிரி பெரிய ஆப்பு விழப்போகுது எண்டு என் அப்பன் பழனியாண்டவன் எனக்கு அதை முன்னமே சொல்லாமல் போனதுதான் சோகம்.

                                        நகரத்தில் இருந்து ஒதுக்குபுறமான ஒரு காட்டுக்கு நடுவில அந்த இடம் இருந்தது. உள்ளுக்கு போக முதல் உள்ள வெளி செண்டி போயின்டில இருந்த ஆமிக்காரங்கள் என்னோட உடுப்பைப் பார்த்து நான் துணிந்து ஆமியில சேர்ந்து நாட்டுக்காகப் போராட வாறன் எண்டு நினைச்சு மிகவும் மரியாதையாக ஒரு கேள்வியும் கேட்காமல் உள்ளுக்க விட்டாங்கள்.  

                                அந்த  இடம்  எனக்கு  மிகவும் பிடித்த  விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்கா என்ற  நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டு பெண் கவிதாயினி  அம்மையார்  எழுதிய  " இராணுவத்தில் சேர்வது  போல ஒழுக்கங்கெட்ட காரியம் வேறெதுவுமில்லை  " என்ற நீண்ட  கவிதையில்  வரும்  ரெண்டாம் உலகயுத்த ராணுவ ஆட்சேர்ப்பு மையம் போல இருந்தது , பெண்களின் வாசனையே  இருக்கவில்லை,  இந்த இடத்தில வேலை செய்தால் வாழ்கையில் முன்னேறலாமா எண்டு ஆரம்பமே குழப்பமா இருந்தது ...

                                       இண்டர்வியு மேசையில் மூன்று பெரிய அதிகாரிகள் எல்லா சண்டையில் வென்ற கர்னல் மாதிரி,கடுவன் பூனை போல   முகத்தை பெருமிதத்தில் மிதக்க விட்டுக்கொண்டு இருப்பது போல அலட்சியமா என்னை கீழ இருந்து மேல வரை பார்த்தாங்கள். அவங்களும் என்னோட உடுப்பைப் பார்த்து நான் துணிந்து ஆமியில சேர்ந்து நாட்டுக்காகப் போராட வாறன் எண்டு நினைச்சு மரியாதையா " கலியாண சந்தடியில் தாலி கட்ட மறாந்தவன்  கதை  " போல என்னவும்  நடத்துவாங்க எண்டு தான் நினைச்சேன் ,அதால அவங்களின் மேசைக்கு முன்னால போய் சலுட் அடிச்சேன்.

                                        அவங்கள் குழப்பமா பார்த்தாங்கள்,ஒரு அதிகாரி கோபமா

                          " என்ன கிண்டல் செய்யுறியா, உனக்கு ஒழுங்கா எகப்பை கரண்டியை கையில பிடிக்க தெரியுமா எண்டு செக் பண்ணத்தான் வரச்  சொன்னோம், "

                                    "     சரி  அய்யா "

                                   "உன்னை இப்ப சலுட் அடிக்க சொல்லிக் கேட்டமா, முதல் இந்த சலுட்க்கு என்ன அர்த்தம் தெரியுமா, "

                                    "   சரி  அய்யா "

                                 " நீ முன்னமே ஆமியில் இருந்த மாதிரி தெரியவில்லையே "

                                " சரி  அய்யா "

                                   " இந்த  பள்ளிக் கூடப் பிள்ளைகள் அடிக்கும் சாரணர் சலுட் அடிக்கிறதை பார்த்தால் "

                                       "   சரி அய்யா "

                         எண்டு கோபமாக் கேட்டார், நான் ஆர்மியில்  சேர முதலே " சரி அய்யா  சரி  அய்யா  சரி  அய்யா " என்று  ஒழுங்கு மரியாதையில்  சொல்லிக் கொண்டு இருந்தேன் . அவர்கள் துவக்கை எடுத்து நடு மண்டையில் சுட்டு இருந்தாலும் "சரி  அய்யா " என்று சொல்லியே செத்துப்போய் இருப்பேன் போல இருந்தது 

                           " ஆமாம் ஐயா படிக்கிற நேரம் ஸ்கவுட் இல் இந்த சலுட் சொல்லி தந்தாங்கள், உங்களை பார்க்க உணர்ச்சி வசப்பட்டு கை தானாவே எழும்பி சலுட் அடிக்க வைச்சிட்டுது அய்யா " 

                                        என்று சொன்னேன். ஆனாலும் அந்த அதிகாரிகள் நான் அவங்களுக்கு சமைக்கிறதை விட ஆர்மியில் சேர்ந்தால் என்னோட உடம்பு வாகுக்கு நல்லது என்பது போலதான் பார்த்தாங்கள்.


                                   அந்த இன்டர்வியுவில நான் என்ன என்ன எல்லாம் சுடுவன் எண்டு கேட்டாங்கள், மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி கதை போல அலட்டிக்கொள்ளாமல் 

                                  " பரோட்டா,றொட்டி ,தோசை ,மசால் தோசை , துருக்கி நாட்டு பித்தா ப்ரோ. பிஸ்சா ,தந்துரி சிக்கின் எல்லாம் குறி தவறாமல் பிரட்டி பிரட்டிப் போட்டு சுடுவேன் " 

                                  எண்டு விறுக்கு விறுக்கு என்று ஆமிக்காரங்கள் மாச் பாஸ்ட் செய்யிற மாதிரி சொன்னேன். ஆச்சரியாம கேட்டுக்கொண்டு என்னோட வேலை அனுபவ,சமையல் கலை படிப்பு பத்திரங்களை செக் பண்ணிக்கொண்டே ஒரு அதிகாரி

                                        "  நீ எங்கள் நாட்டு ராணுவம் சில நாடுகளுக்கு போய் தீவிர பயங்கர வாதிகளை அடக்கும் நாடுகளில் உள்ளனர், நீ அங்கே போய் முண்ணனியில் நிக்கும் அவர்களுக்கு சமைக்கும் வேலைக்கு அனுப்பலாம் போல இருக்கு,நீ போட்டிருக்கிற ஆர்மி உடை உனக்கு நல்லாவே பொருந்து " எண்டு சொன்னார்.

                               தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்ளை போல  ஆர்மி உடை எனக்கு நல்லாவே பொருந்து எண்டு  சொன்னதைக் கேட்டு நான் திடுகிட்டு  

                                          " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா , தீவிர பயங்கர வாதிகளை அடக்கும் நாடுகளில் போய் முண்ணனியில் சமைக்க என்னை விட நல்ல சமையல் செய்யும் குக் இருக்குறாங்க அய்யா,,"

                                       "  என்னது ,,ஒழுங்கா  வீரமா கதை  முதலில் "

                                     "அய்யா    எனக்கு    தீவிர பயங்கர வாதிகளை அடக்கும் ராணுவத்துக்கு சமைக்கும் வித்தை எல்லாம்  தெரியாது அய்யா , "

                                           " பிறகு  என்ன  மண்ணாங்கட்டி  இங்கே  வேலை தேடி வந்தாய் "

                                                    "  அய்யா ,   நோர்வேயில் சமையல் வேலைக்கு தான் விண்ணப்பித்தேன்,,அய்யா "

                                "  முதல் பெண்டுகளின் சேலைக்குள்  ஒளிஞ்சு கொண்டு நிண்டு  குசு  விடுற   இந்த நடிப்பை  விடு "

                                              "   தெரியாத்தனமா ஆர்வகோளாரில் இந்த ஆர்மி காட்சடையை போட்டுகொண்டு வந்திட்டேன் , அதைப் பிடிச்சு  புளியமரம்  போல இந்த உலுப்பு உலுக்குரின்களே அய்யா,,,"  

                               "  சண்டை  என்றால் சாவு  வரும், சண்டை  என்றால்  என்ன  ஆளை  ஆள் மாறி  மாறி  மசாச்  செய்து  தடவுறது என்று  நினைச்சியா "


                                     "    இல்லை  அய்யா,, சண்டை  தெரியும்,  எங்கள்  நாட்டில்  சண்டை  பார்த்து இருக்கிறேன், ஆனால்  நான் கொஞ்சம் வாழவேண்டும் எண்டு  நினைக்குறேன்  அய்யா "

                                                      என்றேன், அந்த அதிகாரி ,

                       " அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,,நீ பார்க்கவே  அதி  தீவிர பயங்கர வாதிகளை விடப் பயங்கரமாய் இருக்குறாய்,,ஏன் சண்டை நடக்கும் இடத்துக்கு போகப் பயபிடுறாய் " 

                                                     என்று வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு பழமொழி போலக் கேட்டார்

                    நான்,மறுபடியும் ,

                    " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா,நான் இந்து சமயத்தை தீவிரமா பின்பற்றுபவன்,,அதில உயிர்களைக் கொல்வது பாவம் ,என்னோட பாட்டி தீவிர கிருஷ்ணா பக்தை, அகிம்சை விரும்பி " தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்...."   என்று  எனக்கு சொல்லி சொல்லி வளர்த்தா , அவா ஆத்மா சாந்தியடையாது அய்யா, ,நான் ஆர்மியில் சேர்ந்தால் " என்று கெஞ்சிக் கேட்டேன்,,

                     அந்த அதிகாரி கோபமாகி,,

                                " என்னப்பா புரியாத எதோ மொழியில் பிசத்துறாய் , எங்களுக்கு அந்த இந்தக் கதை தேவை இல்லை ,,

                                "அய்யா  என்  பாட்டி  மகாத்மா காந்தியின்  அகிம்சை  எவளவு  பலம்  என்று  சொல்லி  வளர்த்தா   " 

                                        "   இந்துசமய ராமாயணம்,மகாபாரதம் இல தானே அண்ணன் தம்பி,சித்தப்பன் பெரியப்பன்,மாமன் மச்சான் எல்லாரும் ஆளை ஆளை மாறி மாறி லட்சம் பேரைக் கொன்று குவித்த யுத்தமே நடந்ததே,,

                                "அய்யா  அது  இதிகாச புராணம்,  இது  என்னோட  வாழ்க்கை  அய்யா   " 

                                " அந்த வரலாறு எங்களுக்கும் தெரியும் , உன்னை அடிப்படை ட்ரைனிங் எடுக்க முதல் அனுப்புவோம் "  என்று சொன்னார் ..

                      நான்,மறுபடியும் ,

                                        " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா,,அடிப்படை ட்ரைனிங் எடுக்க என்னோடு இடுப்பு நல்லது இல்லை அய்யா , பலமுறை ஸ்நோவில் வழுக்கி விழுந்து  இப்ப இடுப்பு தனியா கிடந்தது சுழருது அய்யா, பெண்டுகளோடு பப்பில் லத்தின் அமரிகன் நடனம் ஆடவே  இப்பெல்லாம் என்னால முடியுதில்லை ,  என்னை விடுங்க அய்யா " என்று கெஞ்சிக் கேட்டேன் , 

                    அவர் அதுக்கு , 

                                        ," எங்களுக்கு அந்த இந்தக் கதை இப்ப தேவை இல்லை,,உனக்கு நம்பர் தகடு அடிக்கவும் ஏற்பாட்டு செய்ய இப்பவே ஓடர் எழுதியுள்ளேன் " என்று சொன்னார்,

                                                                        அடப்பாவிகளா "அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டவள் அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்  போல  நான் இன்னும் ஒரு கோவிலுக்குமே நேர்த்திக்கடன் வைக்கவில்லை,அதுக்குள்ளே நம்பர் தகடு அடிக்கவும் ஏற்பாட்டு செய்ய இப்பவே ஓடர் கொடுகுரின்களே,,இது கடவுளுக்கே பொறுக்காது "  என்று சொன்னேன்,,

                                                   அந்த மூன்று  அதிகாரிகளில் , இதுவரைக்கும் எதுவுமே பேசாமல் , மிகவும்  பெரிய உருவத்தில் ,எல்லா சண்டையிலும் வென்ற ஜெனரல் போல  போல முகத்தை வைச்சுக்கொண்டு இருந்த  அதிகாரி

                                          " நீ ஏன்பா, இப்படிப் பயந்து சாகிறாய், வீட்டில பொஞ்சாதியை சமாளிப்பதை விட ஆர்மியில் வேலை இலகுவானதுப்பா, "

                                 "அய்யா  உங்க  ஆதங்கம்  எனக்கு  நல்லாவே  புரியுது  " 

                                       " சுண்ணாம்பு தேடிப்போன சுண்டெலியின்  உள்க்  காட்சட்டை காணாமல் போக அது அலியன் யானையிடம் போய் என்ன கேட்டது தெரியுமா,,,,,அது போல  வீரமா இரு ,,பயந்து  சாகாதை .."  

                                               என்று  அவர் வீட்டில இருப்பதை விட    ஆர்மியில் நின்மதியா இருப்பது போல சொன்னார். நான் கடைசியா பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல

                                " அய்யா, நான் இங்கே நோர்வேயில் சமையல் வேலைக்குதான் விண்ணப்பம் போட்டேன் அய்யா,,இப்ப எனக்கு இங்கே நோர்வேயில் சமையல் வேலையே வேண்டாம் அய்யா,,ஆளைவிடுங்க அய்யா " என்று காலில விழாத குறையாக கெஞ்சிக் கேட்டேன் 

                அதுக்கு அவர் ,

                               ," இனிக் கதைச்சு ஒன்றையும் மாற்ற முடியாது,,நேரம் வரும் போது உனக்கு அறிவிப்போம் , ஒழுங்கா வந்து சேரு ,  எங்களின் வெளிநாட்டு சேவையில் நீ இறந்தால் ,உனக்கு தாய் நாட்டு அதியுயர் சேவைப்  பதக்கம் கிடைக்கும்,,உன் மனைவி பிள்ளைகளுக்கு வாழ்நாள் உதவித்தொகை கிடைக்கும் ,ஏன் பா சும்மா கிடந்தது பயந்து சாகிறாய் "

                          என்று சொல்லி என்னோட பைலை அடுத்த மேசைக்கு எறிஞ்சு போட்டு 

                             " உனக்கு பதட்டமா இருந்தால், இந்த அறையின் தொங்கலில் வெளியே கண்டின் இருக்கு அதில ஒரு கோப்பி குடிச்சுப்போட்டு ,போய்ச் சேரு. " 

                                      என்று போட்டு ,

                                            " நல்லநேரம் வரும் போது எல்லாம் நல்லபடியே நடக்கும் "

                              என்று சொல்லிப்போட்டுப் போயிட்டார். இதுக்கு மேல இனி எனக்கு எங்க நல்ல நேரம் வரப்போகுது எண்டு ஜோசிதுத்கொண்டு பேசாமல் , அந்தாள் சொன்ன மாதிரி ஒரு கோப்பியையாவது  கடைசியாக் குடிச்சிட்டு போவம் எண்டு வெளிய வந்தேன் . 

                   நான் எனக்கு மனைவி பிள்ளைகள் இப்ப இல்லை, தனியாதான் வாழுறேன் என்று   சொல்ல நினைச்சேன்,,ஆனால் அது இன்னும் இவங்களுக்கு பிடி கொடுக்கும், அதோட என்னைக் ஈரச் சாக்குப் போட்டு கோழியை அமுக்கின மாதிரி அமுக்குவான்கள்  போல இருந்ததால் சொல்லவில்லை ,பேசாமல் நல்லநேரம் வரும் போது எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நினைச்சுக்கொண்டு " நல்லகுருநாதன் நம்மை வருத்துவது, கொல்லவல்ல கொல்லவல்லப்  பொல்லா  வினை அறுக்க "  என்று என் பாட்டி எப்பவும் சொல்வதை நம்பிக்கொண்டு கோப்பி குடிக்க கண்டினுக்குப் போனேன் ,

                                கண்டினில் நிறைய நோர்வே ஆர்மியில் இணைத்து இருந்த இளம் நோர்வே பெண்கள் நோர்வே ஆர்மி மிடுக்குடன் இருந்தார்கள், நான் போய் ஓரமா இருக்க இடம் தேடினேன், நாலுபேர் இருக்கும் மேசையில் மூன்று இளம் நோர்வே ராணுவப் பெண்கள் நாலுக்கு நாலு  தீராந்தி அறுக்கக் கூடிய தென்னம் குத்திபோல  குந்திக்கொண்டு இருக்க, நாலாவது கதிரை காலியாக இருக்க, நான் நாலாவது கதிரையை  கூலிக்குக் குந்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா?போலப் பார்த்தேன். அவர்கள் என்னை மேலயும் கீழையும்  பார்த்திட்டு  அந்தக் காலியான கதிரைக்கு  வந்து குந்து என்று நோர்கிஸ் சொல்லும் " வார்சி குட் ..." என்று அழைத்தார்கள்  ..

                                 அந்த அழகான இளம் பெண்கள் அளவுக்கு அதிகமா " அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் மரம்செல மிதித்த மாஅல் போல ..." அழகா ஆர்மிக்கு சம்பந்தம் கொஞ்சமும் இல்லாமல் இருந்தார்கள், அவர்களின் முக அழகுக்கு  அவர்கள் போட்டு இருந்த காக்கி இராணுவஉடை தக்காளிக்கு தார் பூசின மாதிரி இருந்தது . என்னைப் பற்றிக் கேடார்கள் ,

                             " நீ எந்த ரெயிமெண்டில் இருக்குறாய்,உன்னை நாங்கள் இங்கே கண்டதே இல்லையே ,"

                                       என்று ஆர்வமாகக் கேட்டார்கள், நான் ஆர்மிக்கு சமையல் வேலைக்கு இண்டர்வியூவுக்கு வந்தேன் எண்டு சொல்ல நினைச்சேன் ,ஆனால் பெண்டுகளுக்கு உண்மையச்  சொல்லிக் கவுலுறதைப் போல கேவலம் இல்லை , அது மரியாதையாக இருக்காது , வீரம்  இருக்கோ , ஆண்மை  இருக்கோ , உணர்ச்சி இருக்கோ என்பது முக்கியமில்லை. ஆனால்  இதெல்லாம்  இருக்கு எண்டு கடுவன் பூனை போலப் பெண்களுக்கு முன்னால் காட்ட வேணும். இல்லாட்டி இந்தத் தோல்வி எப்பவுமே நிரந்தரமான தோல்வி   என்று  நினைச்சு 

                             " ஆட்டிலறி ரெயிமெண்டில் இருக்குறேன், பல்குழல் பீரங்கிகள் இயக்கம் பிரிவில் இருக்குறேன், ஒரே நேரத்தில் ரெண்டு கையாலும் புட்டுக் குழல் போல இருக்கும் பீரங்கிகளை இயக்குவேன்  "

                      என்று சொன்னேன் ,அவர்கள் ஆச்சரியமாகி,  

                                   " அப்படியா அதென்ன புட்டுக் குழல் ,  நாங்க கேள்விப்பட்டதே இல்லையே , 

                                   "  அது  பயங்கர ஆயுதம், ராணுவ  ரகசியங்களை  சொல்ல  எனக்கு  உரிமை  இல்லை  "

                               "   நீ பெரிய ஆள்தான் போல, நாங்களும் தான் அப்படி அட்வென்ச்சர் போல ஆர்மியில் ஏதாவது செய்யத்தான் விருப்பம்,எங்களை விடுறாங்கள் இல்லையே "

                                   "  அதெல்லாம்  என்னைப்போல  வந்தா  மெடல்  போனா  உயிர்  என்று  நினைக்கும்  வீரமான  ஆட்கள்தான்  இயக்க முடியும் "

                                        "    நீ உண்மையில் ஒரு வீரன்தான், அதுவும் நீ ஒரு வெளிநாட்டுக்காரன்,நோர்வே ஆர்மியில் உன் பீரங்கி திறமையையும்  உன்னையும்  நினைக்கவே பெருமையா இருக்கு "

                                        "   இதெல்லாம்  சிம்பிள்  எனக்கு,,எத்தினை சண்டையில்  மல்டி பரல் பீரங்கியை  சும்மா  குருவி சுடுற மாதிரி அடிச்சு  இருப்பன்  தெரியுமா "

                                         " அட,  எங்களுக்கு  இப்படி  சான்ஸ்  கிடைக்குது  இல்லையே,  சும்மா மெடிக்கல் யூனிட் அது இது  எண்டு சொல்லி எங்களையே  கேவலப்படுதுறாங்க  இந்த  ஆர்மியில் "

                                   "  அதெல்லாம்  என்னைப்போல உசிர் ஒரு மசிர்  என்று  நினைக்கும்  ஆட்களுக்குத்தான்  கிடைக்கும் "

                                              "    அப்படியா அதென்ன புட்டுக் குழல்,அப்படியா அதென்ன புட்டுக் குழல்,"

                              என்று  " பொட்டு வச்சுக்கோ மாமியாரே பூ வச்சுக்கோ மாமியாரே என்றாளாம் கொண்டு வந்த மகராசி "  பழமொழி போலப் பிசதிக் கொண்டு இருந்தார்கள்,

                            நான் கோப்பியைக்  குடிச்சிட்டு , போக வெளிகிட்டு அவளுகளுக்கு சலுட் அடிப்பமா எண்டு ஜோசித்தேன் ,பிறகு அவளுகளும் நான் அடிப்பது சாரணர் சலுட் எண்டு கண்டு பிடிச்சா இவளவு நேரமும் சொன்ன உண்மைகள் பொய் ஆகிவிடும் எண்டு பயந்து பேசாமல் எழும்பி ,,

                          " சில நேரம் அடுத்த கிழமை ஆப்கானிஸ்தான் போக வேண்டி வரும்,  இப்ப போய் பீரங்கிகளுக்கு ஒயில் விட்டு தயார் செய்யப்போறேன் " 

                                                 என்று சொன்னேன், அவர்கள் மறுபடியும்  வாயைப்பிளக்க நைசா எழும்பி  ஜுலிய சீசர் சொன்ன " அஞ்சியவர்க்கு சதா மரணம் அஞ்சா நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணம்  " என்று சொல்ல ,அவர்கள் மறுபடியும்  வாயைப்பிளக்க அந்த இடை வெளியில் நழுவி வெளியே வந்திட்டேன் .

                                  கன்டின் வாசலுக்கால வெளிய வர ,என்னை இண்டர்வியு செய்த மூன்று அதிகாரிகளில்,என்னிடம் எந்தக் கேள்வியுமே கேட்காமல் இருந்த ஒரு அதிகாரி அந்தக் கட்டிடத்தின் ஒரு மூலையில் நின்று கொண்டு இருந்தார், அந்தாள் ஒருவேளை இரக்கம் உள்ள மனிதரா இருக்காலம் கடைசியா ஒரு முறை அந்த ஆளிடமாவது கெஞ்சிக்கூத்தாடி கேட்டுப் பார்ப்பம் என்று போய் .

                          " அய்யா,உங்களைப் பார்க்க இரக்கம் உள்ளவர் போல இருகுரிங்க,அய்யா எனக்கு இங்கேயே இந்தக் காம்பில் ஒரு வேலை போட்டுத்தாங்க அய்யா,என்னை சண்டை நடக்கும் நாட்டுக்கு உங்க ஆர்மிக்கு சமைக்க அனுப்ப வேண்டாம் அய்யா,அய்யா என்னோட வாழ்கையில் இதுவரை ஒழுங்கான கலியானம்  காட்சி என்று ஒன்றையும் இன்னும் நான் பார்கவில்லை, இனிதான் அதை உருப்படியா செய்ய போறேன் அய்யா,அதுக்கும் வேட்டு வைசிடாதிங்க அய்யா , உங்களைப்பார்கவே கவுதம புத்த பெருமான் போல இருகுரிங்க,,கருணை காட்டுங்க அய்யா " 

                           என்று கேட்டேன் .அவர் , கொஞ்சம்  ஜோசித்தார்,  

                          " சரி ,ஆனாலும் நீ இன்டர்வியுவில் சமைக்க தெரியும் என்று சொன்ன உணவுவகைகள் இங்கே நாங்கள் எங்கள் ராணுவத்துக்கு சமைச்சுக் கொடுபதில்லையே, அதுவே ஒரு பிரசினையே, மேஜர் ஆர்னேயும்., கர்னல் கார்ல்சனும் அதைதான் நீ இண்டர்வியு முடிச்சுப்போட்டு போக கதைத்தார்கள், நீ ஏன்பா இந்த ஆர்மி உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்தனி, முன்னுக்குப் பின் ஜோசிக்கமாட்டியா , இப்ப வேற  என்ன வேலைதான் இங்கே கொடுகிறது, நீயே சொல்லு பார்ப்பம் , நீ பேசாமல் ட்ரைனிங் எடுத்துக்கொண்டு ராணுவத்தில் அடிப்படையில் சேர்,,பயப்பிடாதை,"  

                               என்று சொன்னார். நான் அவரிடம்

                              " அய்யா இங்கே நிறையப் பெண்கள் ஆர்மியில் வேலை செய்கிறார்களே,நான் அந்தப் பெண்டுகளின்  பாவாடையை ஆவது தோய்சுக் கொடுத்துக் கொண்டு இங்கேயே இருக்கிறேன் அய்யா , என்னை சண்டை நடக்கும் நாட்டுக்கு உங்க ஆர்மிக்கு சமைக்கிற கேவலம் கெட்ட வேலைக்கு மட்டும் என்னை  அனுப்ப  வேண்டாம் அய்யா, அய்யா நான் இன்னும் சாவதுக்கு என்னைத் தயார் செய்யவே இல்லை ஐயா " என்றேன்.  

                                அந்தாளுக்குக் கோவம் பொத்திக்கொண்டு வந்திட்டுது,நோர்வே மொழியில் உள்ள கெட்ட வார்த்தை எல்லாத்தையும் வடிகட்டாமல் பச்சையாகவே வெளிய எடுத்து ஒவொன்றா ஒவ்வொரு வசனத்தில் வைச்சு திட்டிக்கொண்டு ,

                             "  இப்ப இந்த இடத்தை விட்டே ஓடிப் போ ,இல்லாட்டி இப்ப என்னக்கே நான் என்ன செய்யப்போறேன் என்று தெரியாமல் வருகுது "

                                  என்று பல்லை நரி போல நெரிக்க தொடங்க,,நான் சடார் என்று எஸ்கேப் ஆகி வெளிய பாஞ்சு வந்திட்டேன் 

                                  வெளியே சென்றிப் பொயிண்டில் நின்ற ஆமிக்காரங்கள் எனக்கு சலுட் வேற அடிச்சாங்கள், அதைப் பார்க்க வயித்த கலக்கும் போல இருந்தது ,சும்மா வீரமா இதெல்லாம் ஜூசுசுபி என்பது போல சிரிச்சுப் போட்டு திரும்பிப் பார்க்காமல் வந்திட்டேன் . 

                    இந்தக் குளறுபடியை ,நான் வீட்டை வந்து நிம்மி, அவளிண்ட மம்மி, இங்கிலீசில் கதைக்கும் என் மூத்த அண்ணர் ,இலங்கையில் இருக்கும் பிசினஸ் மக்நெட் தம்பி ,உலகம் தெரியாத என்   அம்மா, அமரிக்காவில் ஆடு வளர்க்கும் சாட்டத் அக்கவுன்டன் படிச்ச தம்பி , எதுக்குமே  வாயே  திறக்காத  என்னை எப்பவும்  நேசிக்கும்  காவேரி  அக்கா,    ஏன் ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம் என்று என்னைத்  அடிச்சுக் கலைச்ச என் முன்னாள் மனைவிக்கும் சொன்னேன் . ஒருவரைத் தவிர யாருமே உருப்படியா ஒண்டுமே சொல்லவில்லை...

                               எங்கள் வீட்டிலேயே மிகவும் அமைதியான,அறிவான,அடக்கமான ,சரஸ்வதி போல இருக்கும் என்னோட காவேரி அக்கா மட்டும் தான் இதில இருந்து எப்படி தப்புவது என்று ஐடியா தந்தா,இந்த உலகத்தில் பெண்கள் அறிவாளிகள் என்று சொன்னா யாரும் நம்பமாடார்கள். சொல்லுங்க பார்ப்பம் காவேரி அக்கா மட்டும் இல்லை என்றாள் என் கழுத்துக்கு கயிறு விழுந்து இப்ப இறுக்கி இருக்கும்.

                                இந்தக் கதையில்  இதுக்கு மேல புண்ணியக்குஞ்சி  மயில் எண்ணை போட்டு  உருவி உருவி  இழுத்த கதை போல முக்கியமான சம்பவங்கள் வந்தாலும் , டெலிவிசன் சீரியல் போல நீட்ட விரும்பாததால்,காவேரி அக்கா எப்படி என்னை  தப்ப வைச்சா என்று மிச்சம்  பிறகு  எழுதுறேன்...
.
.
.


நாவுக் அரசன் 
ஒஸ்லோ .