Wednesday, 28 October 2015

இரவின் மடியில் இதயம் வரை...

வசந்தகாலம் விடைபெறும் கடைசி மாதத்தில், பேர்ச் மரங்களும் வில்லோ மரங்களும் அவைகளின் கடைசி இலைகளைக் கழட்டி மஞ்சளாகிய சென்ற வாரம், ஒஸ்லோவில் எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் என்ற தலைப்பில் இலற்றோனிக் கண்காட்சியும் " கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது " போல விற்பனையும், தலைநகரின் நடுவில் உள்ள ஒரு பெரிய மகாநாட்டு மண்டபத்தை வளைச்சுப் பிடிச்சு நடத்தினார்கள்.

                         ஜப்பான்,தென் கொரியா, தாய்வான் ,சைனா இல இருந்து பல்தேசிய இலற்றோனிக் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் சந்தைப்படுத்தல் முகவர்களை அனுப்பி வைச்சு, அந்த நிறுவனங்களின் அதி நவீன இலற்றோனிக் உற்பத்திகளின்  கண்காட்சி என்ற பெயரில், முடிந்தளவு  அவர்களின் வேறு சில தயாரிப்புகளையும் அதைப் பார்க்க வந்தவர்களின் தலையில் " நடக்க மாட்டாத லவாடிக்கு நாலு பக்கமும் சவாரி " பழமொழி போல பாசல் கட்டி ஏத்தி அனுப்பிக் கொண்டு இருந்த ஒரு இடத்துக்கு சும்மா  " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் கொஞ்சம் கவரப்பட்டு உள்ளுக்க வலது காலை எடுத்து வைச்சுப் போய்  சுற்றிப் பார்த்தேன். 

                                                அந்த மண்டபத்துக்கு வெளியேயும், உள்ளேயும் அடிச்சுப் பிச்சு இளம் பெண்கள்தான் குறுக்க மறுக்க " மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது " குறுந்தொகை போல நிறைந்து இருந்தார்கள். மண்டப வாயிலில் இன்னும் கொஞ்சம் இளம் பெண்கள் ஒரு " கட்லோக் " என்ற கடைகளின் விபரம் அவை விற்கும் பொருட்கள் பற்றி ஒரு சின்னக் குறிப்பு உள்ள துண்டுப்பிரசுரம் தந்தார்கள். அந்த இடமே ஏறக்குறைய " வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் " அகநானூறு கால இளமையா இருக்க, அதையும் வேண்டிக் கொண்டு " தந்தன தந்தன தாளம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்கு சும்மா சுற்றினேன்.

                                           எல்லா சின்ன சின்ன கடைகளிலும் நிறைய அதி நவீன , " பிளாஸ்மா " , " மட்ரிக்ஸ் ", " ஹை டேபிநிசன் ", " லேமொட்த் "தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் உலக அழகு ராணிகள் போல " என்னைப் பார் என்னைப் பார் " எண்டு ப்ளஸ் ஏற்ற  புரோட்டான்களும், மைன்ஸ் ஏற்ற இலத்திரன்களும் ஓடிப்பிடிச்சு விளையாட அவைகளுக்கு நடுவில்  நடுநிலை நியுற்றோன்கள் போல  ஒரு ஓரமாக ஒதுங்கி நிண்ட போது  அவைகளின் பாவனை ஏன் இப்ப எங்களுக்கு தேவை எண்டு ஜோசிக்க வைத்தது...

                              அந்த கண்காட்சி உண்மையில் " பணமும் பத்தாயிருக்க, பெண்ணும் முத்தாயிருக்க, முறையிலேயும் அத்தை மகளாயிருக்க " பிரமிப்பா இருந்து, எதிர் கால " ஹை டெக் " தொழில் நுட்பம் உண்மையில் பயப்பிடுத்தும் போல இருந்து, டெலிவிஷனை ஒரு சீலை போல சுருடிக்கொண்டு போய் விரும்பின சுவரில வைச்சு தப்பிப்போட்டு வேண்டிய சனல் பார்க்கலாம் எண்டு ஒரு செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள் அதைப் பார்க்க குதிக்காலில் சீனி எறும்பு கடிக்கிற மாதிரி திரிலா இருந்தது.

                                       அந்தப் பொருட்களை உலகத்தின் வேற ஒரு மூலையில் இருந்து கொண்டு எப்படி யாரோ ஒருவர் கண்டு பிடிக்கிறார் என்ற ஆச்சரியதைவிட,  இவளவு அழகான பெண்கள்  ,அவைகளை வாயில தேன் போத்திலை வைச்சு சரிச்சு ஊத்தின மாதிரி தேன் ஒழுகப் பேசி , சிக்கலான டெக்நோலோயில் உருவான சாதனங்களை இலகுவாக விளங்கப்படுத்தி விற்பனை செய்த இளம்பெண்களை  யார் எங்கிருந்து கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி மிகவும் ஆச்சரியமா இருந்தது.

                             எல்லாக் கடைகளிலும் இருந்த விற்பனைப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எண்டு " ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க.... " அபிராமிப் பட்டருக்கே சவால் விடுற மாதிரி இருக்க பேசாமல் இந்த கண்காட்சிக்கு " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற பெயரை விட " எதிர்கால வாழ்க்கைத் துணைகளின் சாத்தியம் " எண்டு பெயர் வைச்சிருக்கலாம் போல இருந்தது..,,

                       வளர்ச்சியடைந்து கொண்டு வரும் நாடுகளின் உற்பத்திப்பொருள்கள்,  வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை ஆகுது.  அதுக்கு காரணம் மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் திருப்பி இல்லைப் போல இருக்கு, அதிகமாக இளம் பிள்ளைகள் தான் விடுத்தது விடுத்தது கேள்வி கேட்டு அதுகளை வேண்டி  " பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டு வந்த மாதிரி " பாவித்துப் போட்டு, அதன் நவீனம் கொடுக்கும்  பெறுமதி குறைய,  ஏற்கனவே வீட்டில் இருக்கும் மற்றபல இலற்றோனிக் குப்பைகளுடன் அதை எறிஞ்சு போட்டு மறுபடி அதி நவீனம் தேடுவார்கள்,

                                இப்படியான கண்காட்சி விற்பனை ஒழுங்கு செய்பவர்கள் அவர்களுக்கு கடன் கொடுக்க கையோடு சில " பேங்க் " குகளையும் ஒழுங்கு செய்து வைச்சு இருப்பார்கள், அந்த விற்பனை நிலத்திலேயே " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்கிறோம் "  எண்டு பெருமையா விளம்பரம் எப்பவும் டெலிவிசனில் செய்யும் ஒரு பேங்க்,  
                                      
                                  "  ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை, போனா வராது ,வந்தாப் போகாது  ...ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை .."

                                   எண்டு விளம்பரம் செய்து கொண்டு, எவன் வந்து மாட்டுவான் " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்க " என்று ஒரு " மினி பேங்க் ஸ்டால் " திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார்கள். கொள்ளை அடிப்பவர்கள் இப்படிதான் எப்பவுமே திட்டம் போட்டு கும்பலாகக் கொள்ளை அடிப்பார்கள் என்று கொமினிசம் சார்ந்த புத்தகங்களில் சின்ன வயசில் படித்து இருந்தாலும் அன்றுதான் நேரடியாப் பார்க்க முடிந்தது.

                          ஒரு கட்டத்தில் இப்படி பேங்க் கடனுக்கு  அழுது வடிந்து வேண்டிய இலற்றோனிக் பொருட்கள்  " கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது " போல நீர்த்துப்போனாலும் பேங்க் இல் எடுத்த கடன் முடியும் வரை கட்டத் தான் வேண்டும். அதைதான் பேங்க்காரங்கள் " வந்தாப் போகாது " எண்டு சொல்லி சொல்லியே எல்லாரையும் மயக்கும் வித்தை போல இருந்தது.

                                  நான் அந்த இடம் முழுவது சுற்றி,பல விஞ்ஞானம்  விந்தைகளில் ஆர்வம் உள்ளவன் போல பல அதி நவீன பொருட்களையும்,  அழகுப் பெண்களையும் மேஞ்சு போட்டு, அந்த மண்டபத்தின் நடுவில் பேப்பர் கப்பில் கோப்பி விக்கும் கடை போட்டு இருந்தார்கள் அதில இருந்து ஒரு கோப்பியை வேண்டி உறுஞ்சிக்கொண்டு, சின்னப் பிள்ளைகள் உலகம் மறந்து கேம்ஸ் விளையாடும் விளையாட்டு சாதனங்களுடன்  தோற்று தோற்று விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். வயதான ஒரு பெண்மணி " ரிமொர்ட் கொன்றோல் " போல இருக்கும் பழைய நோக்கியா பழைய போனை வைச்சு ஆருக்கோ நம்பர் தேடி தேடி அதில குத்திக்கொண்டு எனக்கு முன்னால வந்து இருந்தா, 

                         " ஹாய் "

                            எண்டு சொல்லி  என்னைப் பார்த்து சிரிச்சுப்போட்டு,

                         " என்னோட பேரப்பிள்ளைகள் வந்து நிக்குதுகள் அதுகளோட வந்தேன், என்னோட பென்சன் காசில கொஞ்சம் கொஞ்சமா சேமித்த காசு கொண்டு வந்து அதுகளுக்கு சில பொருட்கள் வேண்டிக் கொடுக்கத்தான் நானும் வந்தன், இப்ப என்னடா எண்டால் என்னோட சேமிப்பு காசு  முழுவதுக்கும் ஒரு வழி பண்ணிப்போட்டு தான் அதுகள்  வெளிய வரும்கள் போல இருக்கு "

                      எண்டு விபரமா சிரிச்சு சிரிச்சு சொல்லி முடிய, 

                   " நீ ஒண்டும் வேண்டவில்லையா ,நிறைய மொபைல் டெலிபோன் எல்லாம் போட்டு இருகுரான்களே, சும்மா அதில விரலை வைக்கவே இழுத்துக் கொண்டு தண்ணியில அன்னம்போல வழிக்கிக்கொண்டு போகுதே ஒரு சேர்விஸ் பெண் பிள்ளை எனக்கே செய்து காட்டி வேண்டச் சொன்னாள் " , 

                               என்று போட்டு மறுபடியும் கையில வைச்சு இருந்த பழைய நோக்கியாவில் கல்லு உரலில நெல்லு நிரப்பி  உலக்கையால குத்துற மாதிரி குத்திப்போட்டு, 

                   " என்ர  மனுசன் போன் எடுக்குதில்லை, அந்தாளுக்கு காதும் ஒழுங்கா கேட்காது , "

                    எண்டு போட்டு மறுபடியும்

                " நீ ஒண்டுமே வேண்டவில்லையா ,ஏன் உன்னிடம் காசு இல்லையா,அல்லது நீ அகதியா வந்து அகதி முகாமில் இருக்குறியா  "   எண்டு  " சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டது " போலக்  கேட்டா,, 

                            நான் "  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, இதுக்குள்ள ஒரு மண்ணும் வேண்ட விரும்பவில்லை "  

                                 எண்டு நல்ல  கவுரவமான நோர்க்ஸ் உச்சரிப்பில் சொல்லி சிரிச்சேன்,மனுசி நான் வெறியில இருக்றேன் எண்டு நினைச்சோ என்னவோ கொஞ்சம் என்னை சந்தேகமாப் அக்கம் பக்கம் பார்த்திட்டு 

                       " போட்டு வாறன்,நோர்வே சரியான வாழ்க்கைத் தரம் உயர்வான ,அதே நேரம் வாழ்க்கைச் செலவு அதிகமான நாடு, கவனம்பா காசு கண்ட பாட்டுக்கு செலவழிப்பதும் நல்லதில்லை, ஹா டே ப்ரோ , ஹா டே குட்  , ஹா என் பின் டாக் " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போயிட்டுது. 

                                  நோர்வே போன்ற நாடுகளில் வீடுகளில், அன்பாக ஆதரவாக நாலு வார்த்தை அக்கறையாகப் பேச யாரும் இல்லாமல்,  நிறைய மனிதர்கள் பேசுவதுக்கு உயிர் உள்ள மனிதர்கள் இல்லாமல் தனியாக இருக்குறார்கள்,ஆனால் அவர்கள் வீடு முழுவதும் இலற்றோனிக் தொடர்பு சாதனங்கள் நிறைந்து கிடப்பதைக் கண்டு இருக்குறேன். அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய், பூனையோடு கதைத்துக்கொண்டு வாழுங்கள்.

                                     ஏன் அவங்களைச் சொல்லுவான் " சேணியனுக்கு ஏன் குரங்கு? " என்று அந்தக் காலத்தில் பழமொழி  எழுதி வைச்ச மாதிரி என்னுடைய வீட்டிலேயே நிறைய இலற்றோனிக் டீவி, டிவிடி , சிடி பிளையர், மைகிரோவேவ் அவன், அறுவத்தெட்டு டெலிபோன்,மோடெம், சடளைக்ஹ்ட் பொக்ஸ், அதிவேக ஜிகா மெகா வேக இன்டர்நெட் இணைப்பு .லாப் டாப் கணணி,டிஜிட்டல் கமரா , இசைக்கருவி சம்பந்தமான அம்பிளிபயர் சாதனங்கள் எல்லாம் கச கச எண்டு வீடு முழுக்க லொட்டு லோடுக்கு இலத்திரன் ஓடும் சாதனங்கள் அம்முக்கி கொண்டு குவிந்து கிடக்குது, அதை வைச்சு உலகத்தை வேகமாக இயக்கலாம், வாழ்க்கையை அடுத்தவனுக்கு கலர் படம் காட்ட  " ஹை டெக் லெவலில் மெயின்டேயின் " பண்ணலாம்.... ஆண்டவன் புண்ணியத்தில் அவளவுதான்செய்யலாம்! 

                                           ஆனாலும் உண்மையில்  சின்ன வயசில் யாழ்பாணத்தில்  எங்க வீட்டு ஹோலில் இருந்த மரத்தால செய்த பெட்டி போன்ற  பழைய ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ  இரவின் மடியில் இதயம் வரை தந்த இன்பம் இதுகளில் இல்லை. கோப்பிக் கோப்பையை உள்ளங்கையில் வைச்சு நசிச்சு போட்டு குப்பைக் கூடையில் எறிஞ்சு போட்டு வெளிய வந்தேன்..

                                        வந்து வெளியே என்ன சோடினை போட்டு இருக்கிறாங்கள் எண்டு பார்த்தேன்,மண்டபத்தின் முக்கிய வாசலுக்கு மேலே நியோன் குழாய் விளக்கில் வளைச்சு ,  " அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கின கதை  போல வெளியால விசியங்கள் வேற மாதிரி இருந்தது,  

                         " நாளைய உலகம் இன்றைக்கு ஒஸ்லோவில்  "

                               என்று அந்த லைட் சுழண்டு சுழண்டு ஓட,  

                         " இந்த உன்னத நிகழ்வில் இணைவதில் ஒஸ்லோ நகரம் பெருமைப்படுகிறது "

                                          என்று ஒஸ்லோ நகரத்தின் நகரபிதா மேன்மை தங்கிய பேபியான் ஸ்டெங் வாழ்த்து சொல்லும்  பெரிய விவரண வர்ணப்  படம்  இணைத்த இன்னுமொரு அழகான விளம்பரப் பலகை அதுக்குக் கீழ வைச்சு இருக்க,  அதுக்குக் கீழே இரண்டு வசிக்க வீடு இல்லாத தெருவோரம் வசிக்கும் வெள்ளை இன நோர்வேயிய ஹோம்லெஸ் மனிதர்களில் ஒருவன் பேப்பர் கோப்பி கோப்பையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க ,மற்றவன் கம்பி அறுந்து போன கிடாரில்

                                 " jeg sto i skyggene i regn og vind
                           
                                   jeg var en fremmed til du åpnet deg og lot meg inn

                                   jeg sto alene helt til du steg frem " 

                                    " நான் ஒரு வீடு இல்லாத மழையிலும்,குளிரிலும் வாழும் மனிதன்,தயவு செய்து கதவை திறந்து உள்ளே அனுமதி , " என்ற ஜோஹனாஸ் பிஜெல் என்ற நோர்வே நாட்டவர் பாடிய  நோர்வே மொழிப் பாடலை இரவின் மடியில் இதயம் வரை உலகம் இறந்து கொண்டு இருப்பது போன்ற குரலில்ப்  பாடிக்கொண்டு இருந்தான்....
 .
.
.

ஜோர்ச் ஹரிசன், இந்தியாவை நேசித்த இதயம்!

யாழ்பாணத்தில, என்னோட இளவயதில் கிடார் பயின்றது மட்டுமில்ல , பின்னாட்களின் அதை சொல்லித்தந்த மாஸ்டரின் இசைக் குழுவான, திருநெல்வேலி ,கலாசாலை வீதியில் இயங்கிய " அபர்ணாலயா " என்ற அவரின் சிறிய, உள்ளுர்ப் பாடகர்கள் பாடிய , கோவில் திருவிழாவில விடிய விடிய இசை மழை பொழிந்த, ஒரு இசைக்குழுவில் bass கிடார் வாசித்த போது, நீண்ட தாடி, நீண்ட தலைமயிர் வளர்த்து இருந்தேன் . பார்க்க ராப்பிச்சைகாரன் ஒருவன் தவறுதலா  கிட்டாரோடு மேடையில் தோன்றியது போலவே ஒரு  ஸ்டைலில்  வாசித்தேன்!                                                         

                       பலநண்பர்கள் , உறவுகள் அந்த நேரம்  நேரடியாவே கேடார்கள்                                                                                     
                               "உனக்கு என்ன ஏதும்  காதல் தோல்வியா? அல்லது வேற என்னவும் பிரசினையா,,,,என்னத்துக்கு இப்பிடி  பிடிவாதமாக அலங்கோலமாக  , ஏன்  இப்படி தலைமயிரையும் ,தாடியையும்  விசர் ஆசுப்பத்திரியில் இருந்து தப்பி வந்தவன் மாதிரி வளத்துக்கொண்டு திரியிறாய்,  " என்று கேட்பார்கள். அதுக்கு  நான் எப்போதும் சொல்வது                                              

                                    " ஜார்ஜ் ஹரிசன் என்ற கிட்டாரிஸ்,,,அவரின்  பாதிப்பு இது ,,அவரை மாதிரி கிட்டார் வாசிக்க முடியாவிட்டாலும் அவரைப்போல தாடி,,தலைமயிராவது  வளர்த்து  என் ஆசையை  நிறைவு செய்கிறேன்,,,ஹ்ம்ம்,,,பார்க்கலாம் ஒரு நாள் அவர் போலவே கிட்டார்  கையில் எடுத்து இசைமழை  பொழியும் நிலைக்கு  வரவேண்டும் என்று வெறியிருக்கு  " எண்டு சொல்லுவது                                                          

                                      இப்ப எப்படியோ தெரியாது ,,ஆனால் பலருக்கு அந்தகால யாழ்பாணத்தில விளங்கவில்லை நான் என்ன சொல்லுறன் எண்டு ! அதனால ஒரு குத்துமதிப்பா எனக்கு மனநிலை சரி இல்லை எண்டு என் காதுபடவே புரளியக் கிளப்பி , அதையே கொஞ்சம் நாலு பக்கமும், உண்மை போலவே ஊதி விட்டார்கள் ! ஜோசிதுப்போட்டு, அவர்களின் கேள்விக்கு வாயை அடைக்கும் பதில் ஒன்று சொல்லாமல் அவர்களின் புரளியை நிறுத்தமுடியாது என்று நினைத்து ,அதுக்குப்பிறகு என் அடையாளத்தைக் கேலி செய்பவர்களுக்கு                                   

                                   "செல்வ சன்னதி முருகனுக்கு நேர்த்திக்கடனுக்கு வளர்கிறேன்" 

                                         என்று சொல்லத் தொடங்கினேன் , அதன் பின் பலர் நண்பினார்கள் ! இப்படிதான்,தமிழ் கலாசார சூழலில் ஒருவன் தாடி ,மீசை ,தலைமயிர் வளர்க எப்பவுமே வலுவான காரணங்கள் தேவை!                                                    

                                      சரி ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு இப்ப உங்களுக்கே குழப்பாம இருக்கும் இல்லையா ? சொல்லுறன் .

                                பீட்டில்ஸ் ,இந்தப் பெயர்  உலகைக் கலக்கிய பெயர். ,இந்த  இசைக்குழு உலகத்தின் அதிகம் பேர் கேட்ட பாடல்களை இசைஅமைத்து பாடிய இசைக்குழு , அவர்களின் இசை,பாடல், வரலாற்றின் பெறுமதி இன்றய நிலவரத்திலும் பில்லியன் டாலர்கள் வருமானம் புரட்டிய அதிசயம், நான்கு இசைக்கலைஞர்கள்  சேர்ந்து அந்த சாதனையைச் செய்தார்கள். அவர்களின் இசை நாடித்துடிப்புப் போல தாளம் போட வைக்கும் "ராக் அண்ட் ரோல் " என்ற வகை அதில் இருந்த கிடாரிச்ஸ் ஜோர்ச் ஹரிசன்                                    
                                                     
                                      யாழ்பாணத்தில அந்த ஜார்ஜ் ஹரிசன் என்பவர் ககிட்டார்  வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் ,எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் ,அவரின் மகனுக்கு கணக்கு சொல்லிகொடுக்கப் போன என்னோட பெரிய அண்ணனனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுக்க அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது , 

                                          அதுக்குப் பிறகு " பீடில்ஸ் " இசைக்குழுவின் விபரம் அறிய , "ஜப்னா முநிசிபால்டி பப்ளிக் லைபெறேரியில்" இருந்த " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது. அவர்களின் பாடல்கள்,,இசை  இந்த உலகத்தை திருப்பி மற்றப்பக்கமா சுழற விடுவது போல இருந்தது                                               

                                              அந்த பீடில்ஸ் இசைக்குழுவின் கலர்ப்படம் ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியின் மேலே ஒட்டி வைச்சு இருந்தேன் .அதில அந்த இசைகுழு அங்கத்தவர் எல்லாருமே ஜிப்ப்சி ஸ்டைலில் தாடி ,மீசை,தலைமயிர் எல்லாம் அக்கறை இல்லாமல் வளர்த்து, மாதக்கணக்கில் தோய்க்காத டெனிம் காற்சட்டை போட்டுக்கொண்டு நிற்பார்கள். இவளவு கேவலமாக இருந்தாலும் அவர்கள் உலகத்தின் நம்பர் வான் இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள்.                                              

                                 அந்தப் படத்தை , முகக் கண்ணாடியில் முகம் பார்க்க மறந்து எப்பவுமே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த என்னோட அம்மாவே ஒரு கட்டத்தில்                                    " 

                                  " டேய்..இவங்கள் யாரடா,, பார்க்கப் பரதேசிகள் போல இருக்கிறவன்களோட படத்தை ஒட்டி வைச்சு ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டு இருகிறாயே  ,,மூதேவி வாலாயம் பிடிச்சவங்கள் போல இருக்கே இவங்கட மூஞ்சியும் முகரக்கட்டையும் ,,இது   வீட்டுக்கு முழுவியளத்துக்கே உதவாத படமடா,, இதை  நீயா இப்ப கிழிச்சு எறியப்போறியா, இல்லாட்டி இப்ப நானே  கிழிச்சு அடுப்பில நெருப்பில  எறியப் போறேன்.."                                 

                                    என்று ஒரு நாள் சண்டை பிடிச்சா. ஒரு மாதிரிக் கெஞ்சி மன்றாடி அதைக் உரித்து எடுத்து கொண்டு வந்து என்னோட அறையில் இரகசியமாக வைச்சு சில வருடம் அந்த இசைக்குழுவின் மானத்தைக்  காப்பாற்றினேன்.                                                 

                                       ஜார்ஜ் ஹரிசன், இங்கிலாந்தின் மேற்க்கு கரையில் உள்ள துறைமுக நகரமான ,லிவர்பூலில் ஏழ்மையான  உழைக்கும் வர்க்கப் பெற்றோர்களுக்கு பிறந்தவர், அவரோட லிவர்பூலில் நகரத்தில் பிறந்த , பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற "Beatels "இசை குழு உருவாகிய போது  , அந்த இசைக்குழுவில் lead கிடாரிஸ்ரா இருந்தவர்,

                                பின்னர் அந்த இசைக்குழுவில் இருந்த உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜோன் லென்னன் உடனும் ,லென்னனின் ஜப்பான் நாட்டுக்  காதலி ஜோகோ ஓனோவுடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தில் பீட்டில்ஸ் இசைக்குழுவை விட்டு  பிரிந்து போய் தனியாக அல்பம் இசை அமைத்தவர் , அவரின் பாடல்கள் இசைக்காத நாடுகளே இல்லை, பாடாத மேடைகளே இல்லை , மயங்காத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்குக் கலக்கியவர் !                                                  

                                                       பின்னர்  அவரின் செவ்விகளில் விமானத்தில் பறந்து சென்று இசைநிகழ்ச்சி செய்ய பயந்து, அதை ஒரு காரணமாக சொன்னாலும் ,  ஜான் லனன்னின் ,காதலி  ஜோகோ ஓனோ இன் இம்சையைப்  பொறுக்கமுடியாமல் ,அந்த குழுவில் இருந்து விலகி தனியானதா சொன்னார் ! 

                                                  ஜோர்ச் இன் ஆழ்மனது  இசைப்பொறி உண்மையில் " ராக் அண்ட் ரோல் "  இல்லை.  இசையின் உண்மையான சோடனைகள் அற்ற அதன் உண்மையான முகத்தை அவர் தன்னுளே தேடினார். அவரின் அந்த  இசைத் தேடல் கீழத்தேய இந்தியாவுக்கு அழைக்க , இந்தியாவுக்கு போய் ரவிசங்கரிடம் சித்தார் பயின்றவர்,"here comes the sun " என்ற உலகப் புகழ் பெற்ற பாடலில் கிடாரில் , ரவிசங்கரின் சிதார் போல இசை அமைத்து வாசித்தவர்!                                              

                                                               இந்தியாவின் ஆன்மிகத்தில அலாதியான அமைதி இருப்பதை உணர்ந்து , ஹரிசன் ஒரு கட்டத்தில் "ஏகம் தத், அகம் பிரம்மாஸ்மி " எண்டு சொல்லி முழுவதும் இந்திய ஆன்மீகத்தில் இறங்கியவர்! இமயமலை அருகில் , ரிசிகேஸ் மலையடிவாரத்தில , ஜோகி ஒருவரின் ஆசிரமத்துக்குப் போய், உலகத்துடன் தொடர்பைத் துண்டித்து வருடக்கணக்கில் தியானம் செய்தவர் ! அவரின் இசை  அடையாளம் ஒரு கலாச்சார  அடையாளமாகவே மாறியது.                                     

                                                   இந்திய ஆன்மீகப் பாதிப்பால் ,அதன் பின் அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் "everything must pass "  ,"Oh ,my sweet loard " ,"while my guitar gently weeps..."  எண்டு பாடிய அவரோட ஆன்மீகத் தேடல்கள் நிரம்பி வழிந்து," ஆன்மீக வரட்சி " நிரம்பிய மேலை நாடுகளில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்த "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா " பக்தி இயக்கம், அவரின் பாடல்களைப் பாட , இன்றைக்கு ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு, இசை உலகில் எல்லாருக்குமே தெரியும்.

                                                 அவர் நிறைய ஆன்மிக தேடல் ,நிலையாமை , கடவுளின் கருணை,பாவங்களின் மன்னிப்பு என்று  நிறைய ஆன்மீகப் பாடல்கள் இசை அமைத்து அல்பங்களாக வெளியிட்டார்,கோடிக்கணக்கில் அவை விற்றன . எழுபதுகளின் இறுதியில் ஹிப்பிஸ் ஸ்டைலில் வாழ்ந்த இளையவர்கள் அவர் பாடலைப் இபேச என்ற ஸ்பானிஸ் தீவில் பாடி,ஆடிப் பிரபலம் ஆக்கினார்கள். ஜார்ஜ் ஒரு சாமியாரா இருந்து  இருக்க வேண்டிய ஆள், தவறாக கிட்டாரிஸ்ட் ஆகிவிட்டார் போல இருந்தது அன்றைய வருடங்கள் என்று சொல்லலாம்.                                               

                                                        ஜார்ஜ் ஹரிசன் ,பங்களாதேஸ் வெள்ளத்தில் மிதந்தபோது "Banagaladesh we love you " என்று பாடி"  live concert "  இசை நிகழ்ச்சி செய்து வந்த காசு முழுவதையும் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்தவர்! தான் இறந்தால் உடலை எரித்து அதில் ஒரு பகுதியை புனித கங்கை நதியில் வீசும்படி சொன்னவர்! ஜார்ஜ்சோட ஆன்மீக தேடல் வித்தியாசமானது,அப்படி இருந்தும் ,பைபிளையும்,ஜேசுநாதரையும் கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட  படமான "life of brian "எண்ட படத்தையும் அவர் தான் காசு  கொடுத்து  தயாரித்தார்!                                             

                                                             ஜார்ஜ் புற்று நோய் வந்த இறந்து அவரோட பூதவுடல் வைக்கப்படிருந்த அறையில் எந்த விளக்குகளுமே இல்லாமல், அந்த அறை மிகவும் பிரகாசமாக இருந்ததாக அவரோட மனைவி ஒலிவியா எழுதியுள்ளா!.இதைவிட வேற என்ன ஆத்மா விடுதலை வேண்டும் இந்தியாவை நேசித்த இதயத்துக்கு .
.

.