Saturday 6 October 2018

நிசி விளிம்பில் ,,,

கவிதைகளை  அதன் வார்தையமைப்பில் உள்ள ரசனைக்காகவா,  காட்சிப்படுத்தலில் உள்ள படிமங்களுக்காகவா, அல்லது உணர்வுபூர்வமாக ஏதோவொன்றை அது அறுதியிடுவதாலா என்று   தரம்பிரித்தல் அல்லது எடைபோடுதல்தான் உள்ளதிலேயே மிகவும் கடினமான அதேநேரம் மிகவும் சிக்கலான  ஒரு கைங்கரியம். அது பிரபலமானவர்களின்   பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது இலக்கிய மேதாவித்தனத்தாலோ செய்யக்கூடியதுமில்லை என்கிறார்கள் .
                                                                   
                                                               எல்லாவிதமான கவிதைகளையும்  தொடர்ந்து வாசிப்போடு அணுகுவதாலே சில சமயம் ஒருவித கணிப்பீடு நிகழ முடியும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. புதுக்கவிதைகளைப் பொறுத்தவரையில்  கவிதை மொழியின் சாத்தியங்களைப்   புரிந்துகொள்ளல்  மூலமாகவே வாசகன்  கவிதைகளை நெருங்க முடியும்.

                              ஒரு கவிதை  உண்மையானவைகளோடு  நேசமாவது  எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது  நமக்குப் புரியமுடியாத வேறொரு அளவீட்டில் வருகின்ற கவி(உ)தைகளை  விட்டு விலகுதலும் என்று நினைப்பது .இப்படிச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை. நான் எழுதுவதை  நானே வாசித்து  சிலநேரம் " என்னது அரைக்கிறுக்கன் போலப் பினாத்திவைச்சிருக்கிறேனே  " என்று அங்கலாய்ப்பது , இதொன்றும் புதில்லை

                                                                       என்னதான் போட்டு முழக்கினாலும் பலசமயங்களில்   கவிஞ்சனுக்கும், கவிதைக்கும், வாசகனுக்கும் இடையில் எப்போதுமே ஒரு புகைமூட்டம்   போன்ற தெளிவின்மை இருக்கிறது. அதுக்குக் காரணம் இந்த மூன்றுமே வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தனிப்பட கவிதைகளுக்கு பரிமாணங்கள் என்பதே வேறு. இவளவு குழப்பத்தையும் ஒரு புள்ளியில் இணையவைப்பதில்  ஒருசில கவிதைகள் வெற்றிபெறலாம்

1:


மழை மீது
எப்போதும்
நல்ல அபிப்பிராயத்தைத்தான்
வைத்திருந்தேன் !


உதடுகளை

என்
காதருகே கொண்டுவந்து
துரிதப்பட்டுக்கொண்டிருக்கிற
காற்றை நிறுத்திப்
பெருமூச்சு விடுகிறது
குளிர்ச்சியான தூறல்கள் !


ஒரு வினாடி
சங்கடமாகவிருந்தது,
பிறகு
எங்களிடையே
ஒருவிதமான
அங்கீகரிப்புப் போலிருந்தது !


*

2:

பருவக்காலங்கள்
விழுந்துகொண்டிருப்பதில்
நேரம் தப்புவதில்லை ,
மிகக்கடினமாக
நானோ ...

வலுவற்றவன் போலுணர்கிறேன் !


ஆனாலும்
" வரப்போகின்ற
இலையுதிர்காலமென்பது
ஒருவகையில் கொண்டாட்டத்துக்கானது "
என்கின்றன
கடைசிப் பறவைகள்!


நான்
நினைவுபடுத்திக்கொள்கிறேன்
ஒரு வேளை
விலகியிருப்பது போலிருக்கும்
புரிந்துணர்வுகளும்
இங்கிருந்து எழுந்துவிடலாமென்று !


*

3:
கிளர்ச்சியூட்டும்
வாழ்க்கையென்று சொல்லமுடியாது !


விழித்தபோதெல்லாம்
இருக்கைகளில் நசுங்கி
சூழ்நிலைகளோடு

ஒண்டிப்படுத்திருப்பது போலிருக்கும்
விஷயங்கள்தான்
பொறுமை இழக்கச்செய்கின்றன.!


அணைப்புகள் இருந்த
பாதி இரவுகளிலும்
பரிதவிப்பான நிலை !


நம்பிக்கையைக்
காயப்படுத்தும்
பைத்தியக்காரத்தனமான

தேர்வுகள் !

இப்படி இருத்தலென்பது
ஏதோ
எனக்குள்ளே தேடுவதுதென்று
உள்ளபடியே புரியும்போது
எல்லாவற்றையும்
மறந்து விடுகிறேன்.!



*


4:


மழையின்
துவக்கநிலை
அர்த்தமற்ற ஆத்திரம்போலிருக்கு !


விரட்டப்பட்டதுபோலப்
பார்க்கும்போது

நானதன்
வெளிறிய முகத்தில்
ஒரு
ரசமிழந்த கண்ணாடியில்

பார்ப்பதைப் போல்
மங்கலாகிவிடுகிறேன் !

என்
வாழ்க்கையையே காண்கிறேன் 

விழிப்படையவைக்கும்
மழையிடம் !


நனைவுகளை  விலத்தி
ஒளித்திருந்தாலும்
என் சாயல்
சாரல் போலிருக்கு !


*


5:



நகரத்தின்
விபரங்களற்ற
சலசலப்புகளைத் தாண்டி ,
நுண்ணுணர்வுள்ள
நடைபாதைகளைக் கடந்து .

ஏதோவொன்றில்
அடைக்கலம் புகுந்தது போல
மனதை
நெகிழச் செய்யும் பகுதியொன்றில்
அந்தத் தனிவீடு !


தவிர்க்கமுடியாத
ஒரு குறியீடாய் நின்ற
கட்டிடத்தில்
மயக்கத்துக்கு நிகரானதாக
கடந்த காலத்தினுள் பயணம் 


நேற்றைய உலகுக்குத்
திரும்பிப்போய்விட்டாற்போல
ஒரேயொரு
ஜன்னல் திறந்திருக்கு 


*
6:

என்னதான்
துயரமான நேரமென்றாலும்
சந்தோஷ நினைவூட்டும்
மென்தொனியில்
நிலைபிறழாத குரல் !


எப்போதுமே
இருண்ட மூலையொன்றிலிருந்து
தன்னுள் அடங்கிய
அந்தரங்கமானதாகவிருப்பதால்
அது
தொலைந்து போகக்கூடாதென்று
அச்சப்பட்டேன் !


உண்மையாகச் சொன்னால்
தனிமையை நினைவூட்ட
ஒரு
விபரீதமான
அவல சத்தத்தை
ஓவெண்டு எழுப்பியபோது
அது
எல்லா அளவையும் மீறிவிட்டது !


*
7:

முட்டாள்தனமாக
முன்கோபப்படும்போது
சில சமயம்
எதையாவது
எனக்கு நானே சொல்லிக்கொண்டு

அதையும்
நம்புபவனாக மாறமுடியாது !


என்னவென்று
கண்டுபிடிக்கமுடியாத
அதனோடுதான்
ஆரம்பிக்கிறது
பிரிந்து கொண்டிருக்கிற
தத்தளிப்பான வாழ்நிலை!


எனக்கு
உறுதியாகத் தெரியும்.
அத்திவாரத்தோடு
தொலைந்து போகக்கூடியது
இன்னுமொரு தடவை
வழியனுப்புதல் !


*
8:

பூங்காக்கள்
பின்னிரவுகளில்
அந்தரங்கத்துக்கு
மிக தொலைவிலிருக்கிறது !


கடினமாக இருக்கிறது

நினைவிலகற்ற
அந்த இளம்ஜோடிகளின்
நிர்வாணத்தை !


குழல் விளக்குகள்
எரிந்து கொண்டிருக்க
சுற்றுச்சூழல் பீதியில்லாமல்
எப்படித்தான்
ஆனந்திக்கமுடிகிறது ?


நானேன்
வெளிப்படையென 

நினைக்கப்படக்கூடிய
அவ்விடத்துக்குள் போனேன்
அந்த விரக்தி

மனதை அரிக்கிறது !.

சிலசமயம்
இந்த உலகம்
அதன் கற்பனையால்க்கூட
திடுக்கிடச் செய்யலாம் !



*
9:

சம்பிரதாயங்களில்
அலுப்போடு நடந்துகொள்ளும்
பழைய நண்பன் ,


முகத்தைப் பார்த்ததுமே
அந்த சமயத்தில் .

எங்களுக்குளிருந்த
நெருக்கத்தை இழந்திருந்தோம் !


எதற்காகவும்
நல்லவிதமாக நடந்துகொண்ட
மற்றவர்களுக்கு
அவனாகவே நன்றி சொல்லி
இதுவரை கண்டதில்லை !


 " விரும்பும்படி வலுக்கட்டாயமாக
மீறி ஒத்துழைக்காத
எனக்குள் என்னை
மாற்றிக்கொள்ள அவசியமில்லை "
என்று கத்துவான் ,


ஒருகாலத்தில்
விடுதலை உணர்வைத்தருகிற
மிகநெருங்கிய நண்பன்
எப்போதும்
நல்லவனாவிருக்கவேண்டிய
அவசியம் இல்லைப் போலிருக்கு !


*
10:

உள்ளுணர்வினால்
உந்தப்பட்டிருந்தாலும்
இரவென்பது சொந்தமாக
இருட்டு வார்த்தெடுத்த

பாதை !

அது வெளிச்சங்களில்

விருது கிடைக்காத படைப்பு !


ஒருசில
விண் மீன்களையும்
ரகசியமான சத்தங்களையும்
நிசி விளிம்பில் வைத்துக்கொண்டு
தனக்குளாகவே
சுய முயற்சியோடு
சாதித்து காட்டிய அற்புதம் பற்றி
ஒருநாளும் புகழ்ந்ததில்லை !


அதன்
மர்மங்களைத்
பொதுவாகப் பார்பதைத் தாண்டி
தனியாகக் கதைத்திருக்கிறேன் !


அதன் வேதனைகள்
உண்மையானவையென அறிந்த
நாளிலிருந்து
சேர்ந்து விழித்திருப்பதைக்கூட
நிறுத்திவிட்டது !


யாருமே கவலைப்படாத
அந்த இரவை
நினைத்துப்பார்க்கிறேன் !


*

11:



விறைப்பாகவேதான்
ஆனாலும்
சமநிலை தவறிப்போகாத
தட்பநிலை,


மெலிதாக ஊளையிட்டு ...

காற்றை முகர்ந்து கொண்டு
நிறைய தூரம்
ஓடிக்கொண்டிருக்கும்
வாசனைகள் !


புகார்ப்பனியால்
போர்த்தி மூடப்பட்டிருந்த
மர அடிகளில்
கண்டுபிடிப்பதுக்கு
ஏதோ விசித்திரமானவை
பதுங்கியிருக்கலாம் போலிருக்கு !


முன்னதாக
ஆழக் கிளறப்பட்ட
மணல் வெளிகளிலிருந்து
யாரோ கண்காணிக்கிறார்களா ?


பொழுதுகளை
நுழைவாயிலில் மோதியபடி
எடுத்துக்கொண்டாலும்
பதிலில்
அக்கறைகொள்ள நேரமில்லை !


இந்தஇடம்
வழக்கத்தை விட
எதையோ கொடுக்கிறது…
கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. !


*
12:

முகமும்தான்
மற்றவற்றிலிருந்து வேறுபட்டது
கண்களெல்லாம்
வானவில்லுப் போல
குறுக்குச் சாய்வான புருவம் ,


நீண்ட மூக்கும்
பிளவுடைய வாயும்
இது
எல்லாம்விடப் பெரியதான
பொன்முடிக் கூந்தல் !


கனமான
கலைந்திருந்த முடியோடும்
உற்று நோக்கும் நிறத்திலும்
அது
ஆடம்பரமாகவும்,
பயங்கரமாகவும் இருந்தது .!


இருந்தாலும்
நளினமாகவே
இதழ்களைவிட
மிக மென்மையான உதடுகள்.!


*

13:

சில
ஒற்றை வரிகளில்
ஒரு தசாப்தத்தை
எங்கேயோ கொண்டுபோய்
நிறுத்தியிருக்கிறாள் !


காலத்தை
இவளவு இலகுவாக
ஒரு
குறிப்பிட்ட அலைவரிசையில்
இயங்கியபடி
சிதைக்கமுடியுமா ?


எதிரொளிக்கும்
தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள்
என்
கவனத்திலிருந்து தப்பிவிட்ட
அனுபவங்கள்போலிருந்ததால்
முன்னுரையை
ஊன்றிப்படித்தபோதே
மேலும் படிக்க முடியாமல்
அலைக்கழித்தது
மனவெடிப்பு !


*

14:

வயதான பாட்டி
விழி ஆர்வம் துரத்தும்
பேத்திக்கு
கதை சொல்கிறாள்.
உரையாடல் இடை

சில கற்பனைகள் போலிருக்கு .


நெகிழ்ந்து
சில வாழ்வின் உண்மைகள்
விரிந்துகொண்டே
பலதுமான அனுபவங்கள். 


பாட்டியின் காலத்திலிருந்து
மாற்றிச் செருகிவைத்திருப்பது போலிருக்கு
வருணனை !


மெலிதாகப் புன்னகைத்தபடி ,
டெலிவிஷனைப்பற்றி பேத்தி
விடுத்துக் கேட்கிறாள் 


 பாட்டியால்
அனுபவித்ததை மீட்டுடெத்தும்
நிலைப்படமாக வந்த
கிராமபோனுக்கு பின்னதான காலத்துக்குள்
நகரவேமுடியவில்லை ,


ஓரமாக
ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த
நானும்தான் !


*