Tuesday 19 March 2019

ஆதிமனது !

புத்தகங்கள் ஒருகாலத்தில் நம்மை எல்லாம் இழுத்தி இருத்திவைத்து வாசித்து மகிழ்வடையவைத்த காலம் இப்போது எங்கேயோ போயே போவிட்டது. அந்த அலாதியான காலத்தை இப்போது அப்பப்ப  அசைபோடவே முடிகிறது. வேறு ஒன்றும் செய்வதுக்கும்  இல்லை . வாசிப்பு என்பது இப்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளேயே நடந்தேறுகிறது.  அவ்வளவு அவரசமாகக் காலம் தள்ளிக்கொண்டு நம்மை முத்தி ஓடுகிறது.


                                                                              எழுத்தாளர்  திரு  . ராராஜி ராஜகோபாலன்  அவர்கள் எடுத்த  இந்த ஒளிபடத்தைப் பார்த்தபோது இளவயதில் நிறைய புத்தகங்கள் வேண்டி வாசித்த  " சோவியத் யூனியன் புக் சொப் " தான் நினைவுக்கு வந்தது. ஒரு அமைதியான சூழலில் இருக்கும் ஒரு புத்தகநிலையத்தை  அவர் விரும்பி  எடுத்த இந்தப் படத்துக்கு "
 ஒரு கவிதை போல இருக்கு இந்த இடம்  " என்று உளறிக்  கருத்திட்டேன் , அவரோ இன்னும் அழகாக  "
ஹியூறோன் வாவிக் கரையின் சிறிய ஊரில் பெரிய இதயம் " என்று அவருடைய பாணியில் பதில்க் கருத்திட்டு மிக உயர்ந்த ஒரு அர்த்தத்தில் அதைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்



                                                                            பலாலி வீதியில் இருந்த அந்தச் சின்னஞ் சிறிய புத்தக நிலையம்  ஒரு கட்டத்தில் அந்தப் புத்தக நிலையம் பலாத்காரமாக மூடப்பட்டு அதை நடாத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் கூடவே நினைவுக்கு வந்தது. அந்த புத்தகசாலை  நிறைய ரஷிய நாவல்கள், கதைகள் வாசிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. அதில் புத்தகங்ககளும் விலை குறைவு . இப்பவும் அங்கே வேண்டி வாசித்த புத்தக தலைப்புகளும், அதை எழுதியவர்களின் பெயர்களும், கதைகளும் நினைவு இருக்கு. அப்படியான ஒரு காலம் இனி வருமா தெரியவில்லை.


                                                                          அப்புறமாய், இந்த எழுத்துருக்கள் எப்ப எழுதியவைகள் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. மின்னேறிஞ்சவெளி வலைப்பூங்காவில் ஒரு பக்கமாக இவ்வளவுநாளும் இருந்த இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்




ஒருசமயம்
இரக்கத்தின் விளிம்பிலும்,
பாட்சாதாபதிலும்
இன்னுமொருமுறை
உன்னிடம் திரும்பிவந்தால்

முடிந்தவரையில்
நிதானமாக
சாகும்வரைவாழ்ந்துவிடு !


இப்படிக்கு
அவசரமான வாழ்க்கை !



*


என்னைசத்
தேடிக்கொண்டு திரியும்
என்
கவிதைகளையே
சந்தர்ப்பம் இருந்தும்

நானின்னும்
சந்திக்கவில்லை !
உங்களை
நானெப்படி
மதிப்பிடமுடியும் !



*


இதற்குப்பிறகு
எனக்கு

என்ன நிகழும் ?
நலிவடையவைக்கும்
இதைக் கேட்கவே வேண்டாம் ,

இதற்குப்பிறகு
எனக்கு

என்ன விருப்பம்
அதைமட்டும்
விசாரியுங்கள் !



*


சொந்தமென்று
எனக்குள்
விதைக்கப்பட்ட கனவு,
அதிலேயே
சுவாச நேசிப்பைத்

தேடி எடுத்துத்தந்து
மிகவும் ரம்மியமானவற்றை
உதாரணமாக்கியவள்
நீயடி....!



*


நாட்பட்ட முதுகு
நாரி முறிக்கும்
விலா எலும்புகள்
நகரமறுக்குமிப்போதே
சேமித்துவைக்கும்நோக்கத்தில்

நிறுத்தக்குறிகள்
வைக்காமலே நிரம்பிவிட்டது
உளைவு வலி !



*


நினைவு
அருகில் இருப்பதால்
மகிழ்ச்சி நிறைந்து வழியும்
தனியிரவு !
நட்சத்திரங்கள்

ஒவ்வொன்றும்
விளக்கனைத்துப்போய்விட
விடியும் பொழுதில்
வேறு பலது
பிழைத்து விடுகிறது



*


ஓட்டைகளால்
உள்நுழைந்து வெளியேறுகிறது
தந்திரமான குளிர் !
முடிந்தவரை
தேசியக்கொடியால்
இறுக்கிப்போர்த்தபடி
நடுங்கும்
பிச்சைக்காரன்!
தைக்கப்படவேண்டிய
கிழிசல்கள்
இன்னும்தான்
நிறையவேயிருக்கு !



*


யாராயிருக்கும்
நிலவின் நிழலுக்குக்
குறிவைத்து
காறிக்குதப்பி
உமிழ்ந்து துப்பியது ?
ஒரு
அலையைப்
பின்தொடர்ந்து
விரட்டியபடியேயிருக்கு
தெருத்தண்ணி !



*


சும்மா தன்னும்
எட்டிப்பாரேன் என்றது
வழிவிடுதலைத்
தீர்மானிக்கும்
வெளிக்கதவு ,
மெதுவாகத்திறப்பதட்குள்
தோச்சுப்பிழிந்த
குளிர்காற்றை
புறங்கையால் வழித்து
முகர்ந்து பார்குது
முகம் !



*


நிலைப்பாடுகளில்
நடுக்கொள்ள
ஒரு பூனைக்கு
ஏகப்பட்ட சாத்தியங்கள் !

சுவருக்கு
அந்தப்பக்கமும்
சுவர் !
இந்தப்பக்கமும்
சுவர்தான் !



*


விவரணையை
உசுப்பிவிட்டுப் போகவும்
மேகமில்லாத
வெற்று வானம்!
கைகளை அகலவிரித்து

கொட்டாவி
பின்மூச்சு மூட
அழைப்பிதழ்கள் இல்லாமல்
எதற்காக
உள்ளே வந்தாய் என்றது
வெளி  !



*


இன்னும்
தூக்கம்விடியாத
மூஞ்சியில்
அதிகாலைப் புகார்,
தண்ணி தெளித்து
எழுப்பிக் கொண்டிருக்கு
ஜன்னலோரக்
கண்ணாடியெங்கும்
பேர்ச்மரங்கள்!



*


தன்
நிலைபடுத்தி
விமர்சிக்குமளவுக்கு
பெருமையாக
உளறிப்போட்டேன்!
அவ்வளவுதான்!
என்
தொடர்கதை
முடித்துவைக்கப்படலாம் !



*


நிசிநேரத்திற்கு
முன்னோடியாக
நம்பமுடியாத
எல்லாவற்றையும்
மனமழுந்தி உச்சரிக்கும் 
பன்னிரண்டுமணி !
சிணுங்கல்
மொழியலைகள்
இங்கிருந்துதான்
கதைக்கத் தொடங்குகிறன !



*


அலட்டிக்கொள்ளாமல்
மேனியுரசி
ஆடையவிழ்க்குது
வெள்ளுறை
வெண்பனிவெய்யில்
எனக்கு
மூக்கு நுனி மட்டுமே
வேர்க்கிறது !



*


பலவீனங்களைப்
பலப்படுத்தமுடியாத
ஊனுடம்பு,
பழையன
கழிதலுக்குள்
ஒடுங்கிவிடுகிறது
மரணம் !



*


இனிமேலாவது
ஏதாவது நடந்தேறுமா ?
நினைப்பை
முடிப்பதுக்குள்ளாகவே
இச்சை

மோப்பங்களை
அவிழ்த்து விடுகிறது
ஆதிமனது !



*


பல்லை
நெரித்தபடியேயிருக்கிறது
கையலைபேசி ,
விலகி ஓடச்சொல்லுதா ?
அல்லது

இயலாமையின்
சமீபங்களை நெருங்கச்சொல்லுதா?
அதுதான்
குழப்பமாகவிருக்கிறது. !



*