Sunday 17 January 2016

சமாதான நீதவான்

அந்தக் காலகட்டத்தைச் சொல்வதென்றால் , எல்லா இயக்கக்கங்களும் ஊரில இரவில மண்னெண்னைக் குப்பி விளக்கைச் சுற்றிக்கொண்டிருக்கும்  ஈசல் போல இயங்கிக்கொண்டிருந்த நேரம். அதில்  என் வயது இளையவர்கள் ஏதோ ஒரு இயக்கத்தில் சிலர் ஆயுதப்பயிற்சி  எடுத்து இருந்தார்கள், சிலர் அரசியல் வகுப்புக்களில் பயிற்றப்பட்டு இருந்தார்கள்,சிலர் குறைந்தபட்சம் ஆதரவாகக்  கொள்கைகளைக் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் .

                                         இப்படி இருந்த ஒரு காலத்தில் சாதாரண மனிதர்கள் அவர்கள் வாழ்கையில் மும்மரமாக இருந்தார்கள் . அப்புறம் இதில வாற பெயர்கள் உண்மையான பெயர்கள் இல்லை, ஆனால் இப்படி மனிதரும்,கதையும் எங்கள் ஊரில இருந்தது,,சில நேரம் பல ஊர்களிலும் இருந்து இருக்கலாம் .அதில் ஒரு குடும்பத்தில் நடந்த  சம்பவங்களைக்  கதையாக சொல்கிறேன் , அது சரியா,பிழையா,அதன் சமூக நீதி, நியாயம், பற்றி நான் ஒண்டுமே சொல்ல விரும்பவில்லை. அது என்னோட வேலையும் இல்லை. 

                                        எங்கள் ஊரில ஒரு ஜே பி என்று சுருக்கமா சொல்லும், " ஜஸ்டிஸ் ஒப் பீஸ் " என்ற சமாதான் நீதவான் செல்வநாயகம்  இருந்தார், அவரிடம்தான் புதுசா பாஸ்போர்ட் எடுக்க போறவர்கள் " கரக்டர் சேட்டிபிகேட்" என்ற நல்நடத்தைப் பத்திரம் எல்லாரும் எடுப்பார்கள். நானும்  பாஸ்போர்ட் எடுக்க " கரக்டர் சேர்டிபிகட் " எடுக்க அவரிடம்தான் போனேன். அதுக்கு எனக்கு முக்கிய காரணம் பாஸ்போர்ட் இல்லை ,அவரோட இரண்டு பொஞ்சாதிகளையும் கிட்டத்தில பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் எண்ட ஆதங்கத்தில்.

                                    அதுக்கு முதல் ஜே பி வீட்டு விவகாரம் ஏன் ஊருக்குள்ள அதிகம் கவனிக்கப்ட்டது எண்டு சொல்லுறன் . ஜே பி ஆரம்பத்தில் புரொக்டர் தணிகாசலத்துக்கு உதவியா, அவரோட பைல் கட்டுகளைக் கமக்கட்டில வைச்சுக் காவிக்கொண்டு கோட்ஸ் இக்கும் அலுவலகத்தும் இழுபட்டவர் , கொஞ்சம் சட்டதிட்டம் கேள்வி ஞானத்தில் அறிந்து, பண்டாரநாயகாவுக்கு அரசியல் ஆதரவு செய்த புண்ணியத்தில், புரொக்டரின் சிபார்சில் அந்த சமாதான் நீதவான் பட்டம் கிடைத்து இருந்தாலும் , பெட்டிசம் பாலசிங்கம் மட்டும், 

                                  " இங்கிலிஸ் பேபரை தலைகீழா வைச்சு வாசிக்கிற இவன் செல்வநாயகம், ஸ்ரீமாவுக்கு பந்தம் புடிச்சு, நீதி அமைச்சருக்கு காக்கா பிடிச்சு அந்த பதவி எடுத்திட்டான் செல்வநாயகம், இவன் பெண்டுகளை மெய்கிரதுக்கு நேரம் இல்லாமல் இருக்குறான்,,இவனுக்கு என்னத்துக்கு ஜே பி வேலை  "

                                      எண்டு சொல்லுவார் , உண்மையில் அவருக்கு அந்த பெயர் கட்டாயம் கொடுத்தே இருக்க வேண்டும் எண்டதுக்கு முக்கிய காரணம், அவருக்கு இரண்டு பெண்சாதி, அதுவும் அக்காவும்,தங்கசியும் ,ஒரு பொஞ்சாதியை வைச்சே வருஷம் முழுவதும் அமைதி இழந்த வீடுகள் அதிகம் இருந்த ஒரு ஊரில ,அவர் வீட்டில மட்டும் ,சண்டை ,சச்சரவு ஒருநாளும் வராமல் தாளம் போடும், குடும்ப தலைவனா இருக்கும் ஒருவருக்கு சமாதான் நீதவான் பதவி ஊருக்கு பொதுவா கொடுத்ததில் ஆச்சரியம் இல்லைதானே சொல்லுங்க பார்ப்பம்.

                                   ஆங்கில அறிவு இல்லாத ஒருவர் ஜே பியாகா வரமுடியுமா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஜே பி செல்வநாயகம், முக்கியமான பல டாகுமென்ட் எழுதவோ,,அல்லது மொழிபெயர்க்கவோ எப்பவுமே எங்களின் ஊரில் இருந்த தத்துவஞானி சிங்கி மாஸ்டரிடம் தான்  உதவி கேட்பார். சிங்கி மாஸ்டர் அது எல்லாம் செய்து கொடுத்துப்போட்டு கைச்செலவுக்குக் காசு வேண்டுவார். சிலநேரம் ஜே பிஜோட தத்துவம் கதைக்கப் போய் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வரும்.

                             ஜே பி செல்வநாயகம், பார்க்க ஜெமினி கணேசன் போல அமரிகன் மா நிறத்தில இருப்பார்,அயன் பண்ணின வெள்ளை எட்டு முழ வேட்டி, மடிப்பு கலையாத நசினல் சேர்ட், தியாகராஜ பாகவதர் போல பின்னால விழுத்திய நீண்ட சுருள் முடி. பவுன் கலர் செயின் போட்ட மணிக்கூடு, அதுக்கு மேட்ச் பண்ண பவுன் கலர் பிரேம் போட்ட கண்ணாடி, வீட்டில நிக்கும் போதும் சோலாப்பூர் செருப்பு , சிவப்பு சொண்டில ஒரு நிரந்தரப் புன் சிரிப்பு, அந்த சிரிப்போட சரிகை போட்ட மாதிரி கீழ் வெட்டுப் பார்வை வீசும் கண்கள் அதிகம் ஒருவருடனும் பேசாத மவுனம், பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஏக பத்தினி விரதன் பண்பாடு ,

                              இதுதான் ஜே பி செல்வநாயகம், இப்படி ஒருவருக்கு இரண்டு பெண்சாதி, அதுவும் அக்காவும், தங்கசியும் மன்னவனும் நீயே வள நாடும் உன்னதுவே எண்டு மயங்கியதில் ஆச்சரியம் ஒண்டுமே இல்லை எண்டு நீங்க நினைச்சால் அதில முழுவதும் உண்மை இல்லை, ஆனால் பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஆண்களைத்தான் ,குடும்பப் பண்பாடு அதிகம் உள்ள பெண்களுக்குப் பிடிக்கும் எண்டு அவரைக் கவனித்த போதுதான் தெரியவந்தது,

                                   ஜே பீ யின் அழகை சொல்லிப்போட்டு ,அந்த இரு பெண்கள் அழகை சொல்லாம விட்டால் வீராளி அம்மன் எண்ட கண்ணைக் குத்துவா ,ஆனாலும் சில்லறைக் கடை சுப்பிரமணியம் சொல்லுறது போல ஒரு வரியில சொல்லுறன் ஜே பீ இன் இரண்டு மனவிகளும் புன்னகை அரசி கே.ஆர் விஜயாவின் அச்சுப் பிரதி, இதுக்கு மேல ஒப்பிட்டு சொல்லலாமே தவிர குறைச்சு சொல்ல ஒண்டுமே இல்லை.

                              ஜே பீ குடும்பத்தை ஊர் நன்மை தீமையில் சேர்பதில்லை,அவர்களும் அதை பெரிதா எடுபதைல்லை,வீராளி அம்மன் திருவிழாவுக்கு மட்டும் தான் அந்த இரண்டு கே.ஆர் விஜயாவும் அம்மனுக்கு போட்டியா அலங்கரித்து வெளிக்கிட்டு வர ,அவர்களுக்கு பின்னால எப்பவுமே ஜே பீ சேட்டுப் போடாமல் பட்டு வேட்டி கட்டி, பட்டு சால்வை போர்த்திக்கொண்டு வேண்டும் எண்டே எல்லாரும் அவரையும், அவர் தர்ம பத்தினிகளையும் பார்த்து வயிறு பத்தி எரியட்டும் என்பது போல கோயிலில் போய் நிற்பார் 

                                 அந்த திருவிழாவைத் தவிர ஜே பீ இன் மனுஷி இரண்டு பேரும் அதிகம் வெளியில போறது சந்தியில இருந்த சுப்பிரமணியம் கடைக்கு,ஆனால் சுப்பிரமணியம் அநாவசியமா அவர்களுடன் கதைக்க மாட்டார் , அவர்களும் வந்தமா ,வேண்டினமா ,போனமா எண்டு மறைவார்கள், மணியம் ஜே பீ க்கு பயம் அதுக்கு ஒரு காரணம் மற்றது அவரின் மனைவிகள் மனியதிண்ட உறவுகள் ,

                        ஜே பி முதல் மனைவியைத்தான் சட்டப்படி திருமணம் செய்து இருந்தார், அவர் அக்காவைத் திருமணம் செய்து கொஞ்ச மாதங்களில், குசினியில் கத்தரிக்காய் பொரிக்கும் போது நெருப்பு தாச்சியில பத்தி இருக்கு, அது நடந்த சில வாரங்களில் அக்காவையும் அத்தானையும் தனிய விட்டுப் போட்டு, தங்கசிக்கு வேற ஒரு இடதில திருமணம் நடந்தது ,நடந்து கொஞ்சநாளில் தங்கசி, அவா கலியாணம் கட்டின புருஷனை விட்டுப்போட்டு, பழையபடி அக்கா வீட்டை வந்திட்டா,

                              அத்தான் மைத்துனி கலியான பந்தத்தை உதறி திரும்பி வந்ததுக்கு கவலைப்படவில்லை, பதிலா, பொறுப்பாக ,

                      " ஏன் கட்டின புருஷனை கடாசிப் போட்டு " வந்தாய் எண்டு கேட்டாராம்,

                          அவா ,அதுக்கு " எண்ட அக்கோய் நான்  இப்ப........   இருக்கிறேன்  அக்கோய்  " எண்டு பதில் அழுதுகொண்டு சொன்னாவம்,

                                அதைக் கேட்ட அக்காவுக்கு அதிர்ச்சியா மயக்கம் வந்திட்டாம், அத்தான் அப்பவும் பெண்களை நிமிர்ந்து பார்க்காத மாதிரி சிரித்துக்கொண்டு நிண்டாராம்,அக்கா

                      " எண்ட தாலிய பங்குபோட வந்தியேடி போடி வெளியே " எண்டு தங்கச்சிய வெளிய தள்ளா,

                " என்னை அந்தரிக்க விட்டா பொலிடோல் குடிப்பன் எண்ட அக்கோய்  " எண்டு தங்கசி சொல்ல ,அக்கா ,

                    " என்ர கூடப்பிறந்த செல்லமே அப்படி செய்யாதையடி " எண்டு மறுபடியும் வீடுக்கு உள்ள எடுக்க,

                             அத்தான் அப்பவும் பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஏகபத்தினி விரதன் மாதிரி நிண்டாராம் எண்டு தான் ப்ரேகிங் நியுஸ் குஞ்சரம் காவி திரிந்து ஊருக்குள்ள கொஞ்சநாள் தலைப்பு செய்தி அடிப்பட்டது,கொஞ்சநாளில் அது எல்லா பரபரப்பு நியுஸ் போலவும் அடங்கி, அக்காவும் தங்கையும் அத்தானுக்கே அடிமை ஆக, குன்றத்தில குமரனுக்கு கொண்டாடத்தில குறைவு இருக்கவில்லை!.

                               ஜே பிக்கு அஞ்சாறு பிள்ளைகள் இருந்தார்கள்.மூன்று வளர்ந்த பெட்டைகள் இருந்தார்கள்.அழகான அம்சமான பெட்டைக்கல்.,இடுப்புக்கு கீழ நிக்கும்  நல்ல சடைச்ச தலை மயிர்.அதில எவள் அக்காவுக்குப் பிறந்தாள்,எவள் தங்கசிக்குப் பிறந்தாள் என்ற விபரம் ஜே பி வீட்டு நாலு சுவரைத் தாண்டி வேற ஒருத்தருக்கும் தெரியாது. அவரோட பெரிய பெட்டை ஓடிட்டர் வீட்டுக்கு வருவாள், அவரிட்ட இங்கிலிஸ் படிச்சாள்.  

                                           நான் கரக்டர் சேர்டிபிகட் எடுக்க அவரிடம் போய் அவர் ரோட்டு படலைகுள்ள முக்கால் மணித்தியாலம் நிண்டன், ஜே பீ நான் போனவுடனே நான் வந்து நிக்கிறதைக் கண்டுடுடார், வீட்டுக்கு உள்ளுக்க பார்த்து என்னவோ சொல்ல இரண்டு கே.ஆர் விஜயாவும் வந்து வாசலில் பதுங்கி அரைவாசியா எட்டிப் பார்த்தார்கள்,ஜே பீ பிறகும் பேப்பர் பார்த்துக்கொண்டு வெளிவிறாந்தையில் இருந்தார்,நான் அதுக்கு மேலயும் பொறுக்காமல், தகரக் கதவில தட்ட,அவர்

                       " என்னட்டையோ அலுவல் " எண்டு கேட்டார், அதுக்குதான் நான்

                  " முக்கால் மணித்தியாலம் கால் மூட்டு வலிக்க ரோடில நிக்குறேன் ஐயா " எண்டேன்,

                                 அவர் வீட்டுக்கு உள்ளுக்க பார்த்து என்னவோ சொல்ல வெளிக்கதவு ஜன்னல் எல்லாம் மூடுப்பட்டது, கையால் வா எண்டு சொன்னார் ,நான் உள்ளுக்க போய் ,கையில கரக்டர் போர்மை சுருட்டிக்கொண்டு விறாந்தையில் கையைக்கட்டிக் கொண்டு நிண்டன், வீட்டுக்க " திருபரங் குன்றத்தில் நீ சிரித்தால் ,,," என்ற பக்திப் பாட்டுப் மெலிதாகப் பாட,அவர் திரும்ப

                        " என்ன விசியம் " எண்டு கேட்டார் , நான் கரக்டர் சேர்டிபிகட் எடுத்து பாஸ்போட் எடுக்க வேணும் " என்று சொன்னேன்,

                             " ஊருக்குள்ள இந்த நேரம் தான் நான் எல்லாருக்கும் வேணும்,காவாலி ,கடைப்புளி ,களிசறைகளுக்கு நான் அதுகளிண்ட கரக்டர் தெரியாம கையெழுத்துப் போடுறது,,,," 

                              " ஹ்ம்ம்,,உங்களைத் தேடி வாறதே உங்களுக்குப் பெருமைதானே அய்யா "

                        " சொல்லு பார்ப்பம் ,நாளைக்கு என்னோட் பதவிக்கு ஒரு பிரச்சினை வந்தா ஒரு மூதேசியலும் வராதுகள்,இன்னும் எண்ட குடும்பத்தை சீரளிசுக் கதைக்குங்கள் " 

                       நான் " ஐயா முதலில் உங்களுக்கு கரக்டர் செர்டிபிகிட் கொடுக்க என்ன நல்ல கரக்டர் தகுதி இருக்கு "

                      எண்டு கேட்க நினைச்சன், பாஸ்போர்ட் நினைவு வர பேசாம நிண்டுடன்,ஜே பீ இப்படியான நேரத்திலதான் ஊர் ஆட்கள் அவரைப் பற்றி கதைக்கிரதுக்கு பழிக்குப் பழி வேண்டுறது, நல்லா முழக்கிப்போட்டு

                              " உனக்கு சொல்லவில்லை, ஊர் சனத்திண்ட  வாயில் இருக்கும் மேலதிக கொழுப்பை எப்படி எடுக்கிறதென்று எனக்குத் தெரியுமே. ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் எல்லாரும் என்னட்டை வந்து ஆகத்தான் வேண்டும் ,  

                             "  ஹ்ம்ம் "

                               "  சந்திரனிட்ட எழுப்பதைப் பார்த்தியே "

                              "  எந்த சந்திரன் "

                                  "  உண்ட வீட்டுக்குப் பக்கத்தில விளாத்தியடி ஒழுங்கையில் தண்ணி இறைக்கிற மிஷின் வைச்சு இழுத்துக்கொண்டு திரிஞ்சானே "

                         "  ஓம்,,வாட்டர் பம் சந்திரன் ,,ஹ்ம்ம் அவன் இப்ப என்ன எழுப்பமோ "

                           " அவன் தானே இப்ப சவுதிக்கிப் போட்டு வந்து லோங்க்ஸ் கழுசான் போட்டுக்கொண்டு திரியிறான் , அவனுக்கும் நான் தான் பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்தனான் "

                               "  ஒ ,,அதுவா ,,அவன் கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கான்,,சம்பாரிச்சு இருக்கிறான் "

                                 "   அது பிரச்சினை இல்லை,,அந்த மூ தேசி நான் பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்ததை நினைக்கு இல்லையே,,எனக்கு முன்னால சேட்டைத் துறந்து போட்டு போட்டிருக்கிற சிங்கப்பூர் செயினை இழுத்து விட்டு நெளிப்புக் காட்டுது "

                                    " ஹ்ம்ம்,,அது நடக்கும் தானே "

                               " என்ன ,நடக்கும் ,,சொல்லு பார்ப்பம் பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்திராட்டி இந்தக் காக்கொத்து அரிசிக்கும் வழி இல்லாதுகள் வெளிநாடு போய் இருக்கும்களே,, சொல்லு பார்ப்பம் "

                                      "  ஹ்ம்ம்,,சரி விடுங்க அய்யா,,எல்லாரும் நல்லா வரத்தானே வேணும் "

                                   " வரட்டும்,,ஆர் வேண்டாம் எண்டது,,ஆனால் மரியாதை இருக்க வேணும் ,,நான் அவனுக்கு  பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்திராடி இப்பவும் தண்ணி இறைக்கிற மிஷினை இழுத்துக்கொண்டு திரிஞ்சு இருப்பான்,,அதை  நினைக்க வேணும் "

                                     "  ஹ்ம்ம் "

                                 "  சந்திரனுக்கு ஒழுங்கா சாரம் இடுப்பில கட்டத் தெரியாது இப்ப எஸ் லோன் குழாய் போல லோங்க்ஸ் போட்டுக்கொண்டு ,,எனக்கு முன்னால சிக்கிரட் பத்திப் புகையை ஊதிக்காட்டுறான்"

                                       " ம்ம்,,அவனைப் போலதான் பலர் இப்ப "

                               " நாய்க்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணி எண்டு இதுக்குதான் சொல்லுறது  "

                                    " ம்ம் "

                              "  சரி  ஆறுமுகப்பாட்டி இப்ப எப்படி இருக்குறா , பெட்டையள் மூன்றும் குமரி ஆகிட்டாள்கள் ,,குறிப்பைக் கொண்டுவந்து ஒருக்கா சாதகம் பார்க்க வேணும்,,இனிக் கலியாணம் காட்சிகள் அவளுகளுக்கு எப்படி அமையப்போகுதோ எண்டு பார்த்து வைச்சா நல்லம் எண்டு நினைக்கிறன் "

                             "  ஹ்ம்ம் "

                              " நீ பாஸ்போட் எடுத்து எங்க போகப் போறாய்......களோட ரகசியமா  இழுபடுறாய் எண்டு சாடைமாடையாக் கேள்விப்பட்டன் "

                                 "  ஹ்ம்ம் "

                         " உங்களை மாதிரி ஆட்கள் வெளிநாட்டுக்கு ஓடினால்,,பிறகு ஆர் இங்கே ஈழம் பிடிக்கிறது,,சொல்லு பார்ப்பம் "

                               " அப்படி இல்லை அய்யா,,சும்மா ஒரு பாதுகாப்புக்கு எடுத்து வைப்பம் எண்டு ஜோசிக்கிறேன்    "   

                           " என்னவோ,,நீ அயல் அட்டையில் அறிஞ்ச ஆள் எண்டபடியால கரக்டர் சேற்றிபிகட் தாரன் ,,இல்லாட்டி இப்ப நான் தெரியாத ஆட்களுக்கு கையெழுத்துப்போட விருப்பம் இல்லை,,அதுதான் சொல்லுறேன் "

                                எண்டு சொன்னார் ,என்னோட பாட்டி ஒரு பிரபலமான மரியாதையான பெண், நான் அவாவின் பேரன்,அதலா எனக்கும் கொஞ்சம் மரியாதை ஒட்டிக் கொண்டு இருந்தது, அது ஜே பீ கும் தெரியும். அதைவிடப் பாட்டி சாதகம் நல்லாப் பார்ப்பா 

                     ஜே பீ அதுக்கு பிறகு, கரக்டர் சேர்டிபிகட், நிரப்பி சையின் வைச்சார் ,

                      அந்த நேரம் பார்த்து உள்ளுக்க ரேடியோவில " கம்பன் ஏமாந்தான்  இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே ,,கற்பனை செய்தானே...."    பாட்டு வர  ஜே பி சடார் என்று 

                 " இஞ்சேருங்கோ ,,இப்ப இந்த ரேடியோவை நிட்பாடுங்கோ, அண்டம் குண்டம் எல்லாம் பத்திக்கொண்டு வருகுது, நேரம் கெட்ட நேரத்தில இவங்கள் ரேடியோவில போடுற பாட்டைப் பார்  " என்று போட்டு என்னைப் பார்த்து

                          " கம்பன் தானே ஏமாந்தான்,,,வம்பன்கள் ஏமாறவில்லையே...அப்புறம் என்ன வந்தது,  " எண்டு சொன்னார் .

                          நான் இதில யார் கம்பன்,யார் வம்பன் என்று தெரியாத மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு நின்றேன்.

                                       " என்னட்ட கரக்டர் சேர்டிபிகேட் எடுத்து பாஸ்போட் எடுத்து சவுதிக்கு போட்டுவந்து, கமக்கட்டுக்க சென்ட் அடிச்சுக்கொண்டு,  சிங்கப்பூர் செயினை போட்டு நெஞ்சை திறந்து காட்டிக்கொண்டு போறதுகள்,ஒருநாளும் நன்றியோட நினைக்குதுகள் இல்லை,நான் கரக்டர் சேர்டிபிகேட் கொடுத்துதான் சவுதிக்கு போய் சம்பாரித்து இவளவு பவுசும் காட்டுதுகள் " ,    எண்டு சொன்னார் 

                        கடைசியா, என் நெஞ்சில பாலை வார்த்த மாதிரி ," வஞ்சிக் கோட்டை வாலிபனில் " எம் யி ஆர் காத்து காத்து கிடந்த நேரம் கதவு திறந்த மாதிரி 

                        " இஞ்சேருங்கோ அந்த ஸ்டாம்ப் சாமியறை மேசையில கிடக்கும் எடுத்து தாங்கோ ",

                   எண்டு சொல்லிக் கொஞ்ச நேரத்தில ,ஜன்னல் திறக்க ஒரு கை மட்டும் வெளிய வர, நான் கடைக் கண்ணால பார்த்தேன் ,ஜே பீ என்னைப் பார்த்தார், ஒண்டும் சொல்லவில்லை, அது எந்த கே.ஆர் விஜயாவோட கையா இருக்கும் எண்டு ஜோசித்தேன்,கடைசியா சீல் குத்த முதல் என்னை பார்த்து ,

                        " உன்னோட பழக்க வழக்கம் எல்லாம் எப்படி ஒழுங்கா இருக்குறியா,.....களோட இழுபடுறியாமே எண்டு சாடை மாடையா கேள்விப்பட்டன் "

                           எண்டு போட்டு, எந்த நாடுக்குப் போகப்போறாய் என்றார் ,நான் சும்மா எடுத்து வைப்பம் எண்டு சொன்னேன், ஜே பீ அதுக்கு பிறகு

                          " ஊருக்குள்ள என்னப் பத்தி என்ன கதைவளி உலாவுவது "

                           " எனக்கு ஒண்டும் தெரியாது அய்யா "

                         "  பொய் சொல்லதேவையில்லை ,,உண்மையச் சொல்லு,,புண்ணியமூர்த்தி  என்னவாம்,,என்னைப்பற்றி நாக்கு வழிச்சு கதைச்சுக்கொண்டு திரியிறாராம் எண்டு கேள்விப்பட்டேன்  "

                                 " புண்ணியக்குஞ்சியை நான் ஊருக்குள்ள கண்டே கனகாலம் "

                              "ஒ,,அப்பிடியே சங்கதி,  புண்ணியமூர்த்தி பழையபடி சிங்கள நாட்டுக்குப் போயிருப்பான்,,,அங்கே தானே அவனின்ட எடுப்பட்ட வைப்பாடிகள்  பார்த்துக்கொண்டு இருப்பாளுகளே "

                                " ஹ்ம்ம்,,அப்படியும்  இருக்கலாம் "

                           " என்ன அப்படியும் இருக்கலாம் எண்டு இழுக்கிறாய் ,,அதுதானே உண்மை, புண்ணியமூர்த்தி  கிரந்தம் கதைச்சுக்கொண்டு திரியிறது உனக்குத் தெரியாதா "

                                " இப்ப ஏன் அவரை இதுக்குள்ள இழுத்துக் கதைப்பான்,,அய்யா "

                       " புண்ணியமூர்த்தி கோவில் நிர்வாகத்தில் என்னை சேர்க்கக்கூடாது எண்டு முண்டு கொடுத்துக்கொண்டு நிக்குராராமே "

                                    "  எந்தக் கோவிலில் "

                                   " வீராளி அம்மன் கோவிலிலதான் "

                                " ஒ இப்பிடி ஒரு பிரச்சினை வேற நடக்குதோ "

                             " உது கன வருஷமா நடக்குது,,புண்ணியமூர்த்திக்கு என்னோட ஜே பி பவர் விளங்கவில்லை.. புண்ணியமூர்த்தி ஆரோ எடுப்பட்ட நொத்தாரிசைப் பிடிச்சு கையுக்க போட்டு  கள்ள உறுதி எழுதி தென்னம் காணி வேண்டினத்தை பிடிச்சுக் கொடுத்தாதான் என்னோட ஜே பி பவர் தெரியும்,,,அப்ப  தெரியும் "

                                    " ம் .சரி விடுங்க அய்யா,,எனக்கு இந்த போர்மில ஒரு சீலைக் குத்தி கையெழுத்து போட்டு விடுங்கோ,,நான் என்பாட்டில போறேன் அய்யா ."

                             " பொறு வாறன்,,அதுக்கு முதல் சொல்லுறதை சொல்லி முடிக்க வேணும்,  புண்ணியமூர்த்திக்கு வாயில சனியன்,,கதைக்கப் பேசத் தெரியாது,,தனக்கு சிங்களம் தெரியுமெண்ட நினைப்பு, சரி அதை விடு என்னத்துக்கு எண்ட வீட்டுக்க நடக்கிறதை நாலு இடத்தில கதைக்க வேணும் சொல்லு  "

                                " புண்ணியக்குஞ்சிக்கு  வாயைச் சும்மா வைச்சுக்கொண்டு இருக்க ஏலாது ,,அவல் இடிக்கிற உரல் போல அவரோட வாய் ,  என்னவும் எப்பவுமே சொல்லிக்கொண்டு இருப்பார்,ஆனால் யாரும் அவர் கதையைக் கணக்கில எடுப்பதில்லையே "

                               "மதவடிச் சந்தியில்  புண்ணியமூர்த்தி  வாய்க்காலுக்கு மேலே கடை கட்டி இருக்கிறான்,,அது என்ன சட்டம்,,எந்தத் ஊரில அப்பிடி ஒரு சட்டம் இருக்கு,,சொல்லு பார்ப்பம்    "

                                 "அதில என்ன பபிழை இருக்கு எண்டு எனக்குத் தெரியவில்லையே,,அய்யா   "

                                   " வாய்க்கள் என்பது முனிசிப் பால்டிக்கு சொந்தமான உரிமை, அது தண்ணி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடம் ,அதுக்கு மேலே யாருமே எதுவுமே கட்ட முடியாது, புண்ணியமூர்த்தி இதெல்லாம் ஆருக்கும் தெரியாது என்று நினைச்சுக்கொண்டு குறளி வித்தை காட்டுறான் "

                              " புண்ணியக்குஞ்சி நல்ல வேலைகளும் ஊருக்குள்ள செய்யுறார் தானே ,,அய்யா "

                                       " எங்க புண்ணியமூர்த்தி என்னத்தை வெட்டிக் கிழிச்சான் எண்டு சொல்லு பார்ப்பம்,,ஆரும் இளிச்சவாயுள்ளதுகளுக்கு மண்டையில் ஏறி நிண்டு ஆடி இருப்பான்,சிங்களவனை சிரிச்சு மளிப்பி சுழிக்கிற சேட்டை இந்த ஜே பி செல்வநாயகத்திட்ட நடக்காது   "

                               "   ஹ்ம்ம்,,"

                               " இப்பிடித்தான்  உதவாத வேலைகள் செய்துகொண்டு திரியிரதுகள் என் பாட்டில இருக்கிற என்னைப் பளிச்சுக் காட்டுதுகள் .. சரி,,நீ என்ன அறிஞ்சாய்,,கதை வழிகள் அதைச் சொல்லு ,,சொல்லு,,பயப்பிடாமல் சொல்லு "

                       எண்டு கேட்டார் ,நான் பேசாம நிண்டன்,அவரே எல்லாம் சொன்னார் ,அவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும் எண்டு ஆச்சரியமா இருந்தது,

                              " பெட்டிசம் பாலசிங்கம் கிட்டடியில் என்னட்ட அடிவேண்டி சாகப் போறான், அவனுக்கு என்னோட ஜே பீ பவர் தெரியேல்ல ,என்னட்டை இருந்து அந்த பதவிய எடுக்க அந்த செம்மறி படாத பாடு பட்டு பெட்டிசம் எழுதுறான் " ,

                                எண்டு போட்டு ,வேறு சில விசியம் சொன்னார் , அவர் சொன்ன விசியங்கள் அவர் இரண்டு குடும்பக் குத்துவிளக்குகளை ஒரே வீட்டில வைச்சு குடும்பம் நடத்துறது பிழை இல்லை எண்டு , பாரதம் ,இதிகாசம் ,கெருட புராணம், மனு நீதி, எல்லாத்திலையும் இருந்து விளக்கம் சொல்ல அவர் இன்னும் இரண்டு பெண்சாதி கொண்டுவந்து நாலுபேரையும் வைச்சு நடத்தினாலும் பிழை இல்லை போல இருந்து, அப்படி " லோயிக்கா " வைச்சு வாங்கினார் . சொல்லிப் போட்டு

                                " உனக்கு இப்ப கேள்வி ஏதோ கேட்க வேண்டும் போல கழுத்தில நரம்பு துடிக்குதே, நீ கேட்கிரதைக் கேள் "

                              என்றார். அந்த நேரம் வீடுக்குள இருந்து ரேடியோவில் " இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாடா,,அவை இரண்டும் சேர்ந்தொரு,,,," ,சினிமா பாடல் கசிந்து வர .... 

நான் மெல்ல குரலை தாழ்த்தி,நான் நிழலா இயங்கிய .... இன் துணிவில ,

                          " ஐயா நீங்க சொல்லும் சமூக நீதிப்படி பார்த்தா " எண்டு இழுத்தேன் ..

                         " என்ன பார்த்தா , அதையும் சொல்லு "என்றார் ,நான் என்னோட சந்தேகத்தைக் கேட்டேன்,

                             " ஒரு ஆண் ஒரே வீட்டில இரண்டு பெண்ணுடம் வாழலாம்  என்றால் அது தமிழ் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகும் நிலைமையில் இல்லையே அய்யா ....." 

                            எண்டு உளற ,எனக்கே பயம் வந்திட்டது ,ஜே பீ கரக்டர் செர்டிபிகேடை பிடுங்கி கிழிச்சு எறிஞ்சு உதைஞ்சு கலைக்கப் போறார் எண்டு நினைச்சேன்,ஜே பீ கையை முகவாயில வைச்சு ஜோசித்தார், காலுக்கு மேல காலை தூக்கிப் போட்டுட்டு ,

                       " நீ சொல்லுறது நியாயம்,  நான் நீ இப்படிக் கேட்பாய் என்று எனக்கு முதலே தெரியும்  ",என்றார்  ,

                    நான் கொஞ்சம் தயங்கி ,  "  சமுகசிந்தனையோடு எனக்கு கேள்வி கேட்க  தெரியாது ,அந்தளவு அறிவு எனக்கு இல்லை அய்யா  ,அது எல்லாம் சீரியஸ் அறிவுக்கொழுந்துகள் செய்யிற வேலை ,எனக்கு என்ன அடிப்படையில் தோன்றியதோ அதைக் கேட்டேன் அய்யா " என்றேன் .   

                              அதுக்கு அவர்    " உனக்கு ஒரு விசியம் தெரியுமா " எண்டு ,

             " திருமணத்தில் மணவறையில் வைச்சு மணப்பெண் தாரை வார்த்துக் கொடுக்கும் போது, மாப்பிள்ளைக்கு அருகம் தரப்பை விரலில் போட்டு, ஐயர்  என்ன சொல்லுறார்  தெரியுமா " எண்டு கேட்டார்,

                               நான் தெரியாது எண்டேன்,அவர் விளக்கமா அந்த

                      ''சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ'''',

                       சம்ஸ்கிருத மந்திரம் முழுவதையும் சொல்லி,அதன் ஒவ்வொரு வடமொழி வரிக்கும் விளக்கம் சொல்ல ....


                                             எனக்கு மண்டை விறைச்சுப் போச்சு .!

.