Saturday 31 October 2015

இடங்களைப் பெயர்ந்த கதைகள்..001

சரியாக இருவது வருடங்களின் முன் இன்றைய தினம்,யாழ் குடாநாட்டை தரைவழியாக கைப்பற்றும் சூரியகதிர் இராணுவ நடவடிக்கை அகோராமாகி , வலிகாமம் வடக்கு, யாழ் நகரம் முழுவதிலும் வசித்த ஐந்து லட்சம் மக்கள் தென்மராட்சிக்கு உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர வைத்த வலி நிறைந்த வரலாற்று நிகழ்வு நடந்த நாள் என்று சொல்கிறார்கள்.
                                     அதில் நானும் என்றுமே விட்டு விலக நினைக்காத யாழ்பாணத்தை விட்டு நிலத்தால் இடம்பெயர்ந்தேன். என்னோட அம்மாவும் இரண்டு உடன்பிறப்புக்களும் தென்மராட்சியில் வந்து ஒரு தெரிந்தவர்கள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழே குந்தி இருந்தோம். பலர் வடமராட்சிப் பக்கமும் உறவுகள்,நண்பர்களை அண்டிப்போனார்கள்.
                                  " உள்ளுக்க இறங்கவிட்டு பொக்ஸ் போட்டு அடிப்பார்கள் " என்று ஆள் ஆளுக்கு கதைக்கொண்டு இருந்ததால். என்னமோ சில மாதங்களில் குந்தி இருந்த இடத்தில தற்காலிகமாக ஒட்டின குண்டி மண்ணைத் தட்டிப்போட்டு மறுபடியும் சொந்த வீட்டுக்குப் போகலாம் என்றுதான் நானும் நினைத்தேன் , பலரும் அப்படிதான் நினைத்து இருந்தார்கள்.
                                          தென்மராட்சி மக்கள் அன்பாக தங்கள் இடங்களில் இட்டு முட்டு பட்டாலும் அதைப் பொறுத்து இடம் கொடுத்தார்கள் முடிந்தவரை ,குழைக்காடு என்று கிண்டலாக அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் ஓரளவுக்கு இடம்பெயர்ந்த மக்களை முடிந்தளவு இயல்பு நிலைக்கு உள்வாங்கி கொட்டிலிலும் குடிசையிலும் ,கோவில் வெளி மண்டபங்களிலும் இயங்க வைத்தது.
                                          வன்னிக்குப் போக விரும்பும் மக்களை,வன்னியில் குடிசைக் கட்ட நிலம் ,கப்பு வளை போட தடி கம்பு , அதுக்கு கூரை மேய தென்னம் ஓலை தருகிறோம் " இதயபூமிக்கு இடம்பெயர்ந்து வாருங்கள் " என்று சொல்லி இலவசமாக படகு சேவை கொடுத்து ஏற்றிப் பறித்தார்கள். சிலநேரம் ராணுவத்தால் நேரடியாகப் பிடிக்கப்படும் சந்தர்பங்களில் மோசமான பின் விளைவுகள் வரலாம் என்று பயந்த வீரமான இளையவர்களை நாட்டுக்கு கொடுத்த குடும்பங்கள் எல்லாருமே அப்படியே வன்னிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள்.
                                               எப்படியோ சில மாதத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் வன்னிக்குப் போய் விட்டார்கள் . நான் வேலை செய்த நிறுவனத்தின் நிவாரணத்திலும்,அரசாங்க நிவாரணத்திலும் தொங்கிக்கொண்டு கிட்டதட்ட ஆறு மாதம் தென்மராட்சியில் இருந்தேன்.
                                             அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு நாள் காலை சரசாலையை நோக்கி முன்னேறி இராணுவம் அதை சண்டை இன்றியே கைப்பற்றி ,பின் வழிமறிப்பு சண்டை ," கவுண்டர் அட்டாக் " என்று வானவேடிக்கை அகோரமாகினாலும் , ராணுவம் மீசாலை வரை முன்னேறினார்கள் . அதில் வைச்சு தான் " லவுட் ஸ்பிகரில் " மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்துக்கு வருமாறு அறிவிக்க நிறைய மக்கள் உள்ளே போனார்கள்.
                                                  மீசாலை வீரசிங்கம் மகாவித்தியால சந்தியில் ராணுவம் நிற்பதையும், " விடமாட்டாங்கள் அடிப்பாங்கள் பிடிப்பாங்கள் " என்று உசுப்பு ஏத்திக் கொண்டு இருந்த பலரே ராணுவத்துக்குள் போவதைப் பாத்துப்போட்டு, சில நாட்களில் கிளாலிக் கடலால் நேவிக்காரனின் " லேசர் ரவுன்ஸ் " அடி தலையத் தடவிக்கொண்டு போக மறுபடியும் கடலால் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பில் காலடி வைத்து கிளிநொச்சியில் மறுபடியும் என் சகோதரியைத் தேடிப்பிடித்து, தங்க இடம் இல்லாமல் கிளிநொச்சி முருகன் கோவிலில் அகதிகளோடு அகதியாக இருந்தேன்,
                                  நல்ல காலம் நான் யாழ்பாணத்தில் வேலை செய்த நிறுவனம் பரவிப்பாஞ்சானில் இடம்பெயர்ந்து இயங்கியது, அதால் அதில வேலை கிடைக்க கொஞ்சநாள், நுளம்புக்கடி செல்லடி போல இருந்தாலும் ஒண்ட வந்த பிடாரி பிஞ்சுபோன அகதி போல இயங்குவதுக்குப் பரவாயில்லாமல் இருந்தது.
                               வன்னியில் ஸ்கந்தபுரம் ரெண்டாம் வாய்க்காலில் ஒரு சின்ன இடம் காட்டு விழிம்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அருகில் கிடைத்தது. அதில கொட்டில் ஒன்று போட்டு கொஞ்சநாள் இருப்போம் என்று காட்டை வெட்டிக் குத்துக்கால் போட " இந்தக் காட்டுக்க மனுஷன் இருப்பானா " எண்டு சொல்லி அவர்கள் இருவரும் சந்தில சிந்து பாடிப்போட்டு வவுனியாவுக்கு எஸ்கேப் ஆகி கொழும்புக்கே போய் விட்டார்கள் அதன் பின் வன்னியில் இருந்த காலம் முழுவதும் தனியாத்தான் தவில் அடிச்சுக்கொண்டு இருந்தேன்.
                                      சில மாதங்களில் கிளிநொச்சி நகரைப் பிடிக்க பரந்தன் பக்கம் இருந்து ஆனையிறவு இராணுவம் முன்னேற ,கிளிநொச்சியைக் கைவிட்டு காட்டுப்பகுதியான, முறிப்பு, கோணாவில், யூனியன்குளம், ஸ்கந்தபுரம், அக்கராயன் என்று குட்டி போட்ட பூனை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போன மாதிரி பொம்பர் அடிக்கு பாலைமரத்தையும் கிபீர் அடிக்கு முத்திரைமரத்தையும் சுற்றி ஓடி ஒளிச்சுப்பிடிச்சு, செல்லடிக்கு வாய்காலில் கவர் எடுத்து, ஹெலி அடிக்கு விழுந்து படுத்து,சின்னாபின்னமாகி அலைந்து...
                                              வன்னியின் காட்டுப்பகுதியில் மலேரியாக் காச்சல் ரெண்டு முறை மூளை மலேரியா ஆக்கி பிசதிக்கொண்டு அதில தப்பி,அகோரப் பசிகிடக்கும் குளத்து முதலைகள்,விஷம் காவிக்கொண்டு திரிந்த புடையன் பாம்புகளுக்கு உச்சி விளையாடி , ஒருமுறை கோட்டைகட்டிய குளத்தில் அலியன் யானையிடம் இரவு மயிரிழையில் தப்பி, சொந்த வாழ்க்கையையும் கண்டறியாத காதலில் சொதப்பி ரெண்டு வருடங்கள் இருந்து,
                                                 ஒரு மாதிரி பாஸ் எடுத்து, உயிலங்குளம் , மன்னார், செட்டிகுளம்,பறையணாளங் குளம் ,பூந்தோட்டம் , வழியாக வவுனியா வந்த பின் தான் பெருமூச்சு விட்டு ஒரு உடம்பைத் தடவிப்பார்த்து உயிர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருப்பி ஆர்மி பாஸ் இக்கு சுத்துமாத்து செய்து கள்ளமாக கொழும்புக்கு களைச்சுப்போய் வந்த போதுதான் நாக்கில் தண்ணி வந்தது.
                                                 போட்டிருந்த அண்டவியர் கிழிஞ்சு தொங்கும் அளவுக்கு வழியெல்லாம் கஷ்டம் தந்த இந்தப் பாதையில் இன்னும் திரும்பிப் போகவில்லை, எப்படியோ ஒரு பிரயாணம், இடங்கள், சம்பவங்கள் என்று சுருக்கமாக மேலே ஒரு " ஸ்கெட்ச் " போல சொல்லியுள்ளேன். ஆனால் இந்த இவ்வளவு இடங்களிலும் நடந்த சம்பவங்கள் ஒரு வாழ்நாளுக்குப் போதுமடா சாமி என்பது போல அவளவு அலங்கோலமாய் வாழ்க்கை சிதறியது,
                                              பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி கிரவல் மண்ணோடு மண்ணாகப் பிரண்டு உருண்டு ,எமனோட கை குலுக்கி ,அதிஷ்டம் அரைவாசியாவது அனுதாபப்பட்டதால் உயிர்தப்பிய அதையெல்லாம் " இடங்களைப் பெயர்ந்த கதைகள் " என்ற தலைப்பில் எழுத நினைப்பது. நினைப்பது அவளவுதான் இன்னும் எழுதவே தொடங்கவில்லை,,சிலநேரம் நினைப்பது எழுதித்தான் என்னத்தைக் கிழிக்கிறது என்று வெறுப்பும் வரும்.
                                                                தென்மராட்சி இடபெயர்வில் ,என்னிடம் இருந்த இரண்டு கிட்டார்களை இழந்தேன்,அவை இரண்டும் நானும் என்னோட தச்சுத் தொழில் செய்யும் நண்பனும் சேர்ந்து சொந்தமாக கையால் உருவாக்கியது.வன்னியில் இருந்து மன்னாருக்கு தவளை போலப் பாஞ்ச நேரம் வைத்து இருந்த மூன்றாவது கிட்டாரையும் இழந்தேன். அதெல்லாம் ஒரு இழப்பே இல்லை மற்ற மனிதர்களின் இழப்போடு ஒப்பிடும்போது .
                                                 திசைகள் தெரியாமல் திட்டிக்கொண்டு , பழங்கஞ்சிக்கும் அல்லாடி பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி புறுபுறுத்தாலும், இந்த உலகத்தின் அழகான பல அறியப்படாத பிரதேசங்களில் வாழ்ந்து , பல்வேறு மக்களுடன் உறவாடி உணர்ந்து, அன்பு, பாசம், கருணை, இழப்பு, வெறுப்பு ,உதவி, உழைப்பு, பொறுமை,துரோகம் எல்லாவற்றையும் இன்னுமொரு " வொல்காவில் இருந்து கங்கை வரை " போல புதிய கோணங்களில் இருந்து வாழ்க்கை யதார்த்தத்தை திறந்து விட அதில் இடறி விழுந்து எழும்பிய அனுபவங்கள் இப்படி ஒரு இடபெயர்வில் அலைக்கழிக்கப்படாமல் நிட்ச்சயமாக் கிடைத்தே இருக்காது
                                            இன்றைக்கு யாழ்பாணத்தை " யூ டுயுப் " போன்ற கானோளிகளில் பார்க்கும்போது அதன் அலங்கார நாகரிகம், நாயைப்பிடி பிச்சை வேண்டாம் என்பதுபோல இனி பழசையெல்லாம் கொத்திக் கிளறி புரட்டி எடுத்தால் எடுபடுமா என்று பிரமிக்க வைக்குது. ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் எப்படி விடுதலைக்கு சமாந்தரமாக அதன் வீரம்மிக்க அர்பனிப்புகளுக்கு தங்கள் விலையைக் கொடுத்தார்கள் என்று கதைகள் போல எழுதினால் அதை யாரும் வாசிப்பார்களா என்று தெரியவில்லை.
                                                    ஒரு வரலாற்று ஆவணம் போலவாவது இருந்திட்டுப் போகட்டுமே என்ற ஒரு அற்ப ஆசை எட்டிப்பார்க்க சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும் எண்டு ஆத்மாவை அரிக்குது அடிமனது அதனால் பார்க்கலாம்...
.
.30.10.15
,