Thursday 12 July 2018

சில முற்றுப்புள்ளிகள் ...

என் 
பக்கங்களை
நீங்கள் 
வாசிப்பதில்லையென்று 
சொல்வது 
எனக்குப் பிடித்திருக்கிறது !
இந்தத்
திருப்புமுனைத் தருணங்கள்
கவனப்படுத்தப்படும்போது
புதிய
புத்தியிர்ப்புக்கள்
பிரசவிக்கப்படுகின்றன !
ஏனென்றால்
இதயத்தைத்
தொட்டுணரக்கூடிய விதமான
வலுவானவொரு
அந்நியனாக இருப்பதே
என்னை
முழுமையடையவைக்கிறது !


.................................


இனி
எல்லாவற்றையும்
அறிந்துகொள்ள முடியாது ,
அடையாள
முகமில்லாதவைகள் 
அதனதன் போக்கில் போகட்டும் !
முகவரி
விலாசங்களையும்
விட்டுவிடலாம் !
தெரியாதென்று சொல்வதில்
உங்களுக்குப்
பெரிய நஷ்டமொன்றுமில்லை !.
யாருமற்ற கடற்கரையில்
டால்பின்களைத் தொடர்ந்து
நீந்திச் செல்லும்
அலைகளின்
முழுப்பெயரே கூட
நமக்குத் தெரிவதில்லை !


........................................................................


வெளியே
உஸ்ஸென்று சத்தமிட்டபடி
பனிக்காற்று ,
வேறெங்கோ
எடுத்துச் செல்லப்படும் 
வாசனைகள் !.
ஆணையிடப்படி
முன்னேறிக்கொண்டிருக்கும்
உறைகுளிர் !
தொலைவில் மறைகின்ற
காலடிகளின்
நினைவுகளெல்லாம் கூடக்
குழப்பம் !
பயமாயிருக்கிறது
அப்பாவி
வெள்ளையிரவுகளுக்குள்ளும்
அளவுக்கதிகமான
அதிகாரங்களிருப்பதை
நினைக்கும் போதெல்லாம் !


.....................................


எனக்கொரு
தீராத ஆசை,
மேகங்களைத்
திரத்திக்கொண்டு
ஒரு கவிதை எழுத வேண்டும் !
அதுவென்
இருப்பு நிலைகளை
மாற்றிவைத்து
இளங்காற்றில்
நேசிப்புகளை அரவணைத்து ,
உதட்டால்த்
தொட்டபடி முத்தமிட்டு
விருப்பமான
வெற்றிகளுக்கு ஆணையிட்டு
பறைவைகளோடு
மிதந்தபடி
என்னை
தொடுவானத்துக்கு அப்பால்
வேறெங்கோ
எடுத்துச் செல்லவேண்டும் !


..................................


வெளியேறினால்
திரும்பி வர முடியாதென்பதை
காதல்
நன்றாகவே அறிந்திருந்தது !
புதிதாய் 
ஒவ்வொரு அடியெடுக்கும்போதும்
பாதப் பதிவுகளை
உற்று நோக்கி
ஒரு
சாகசமாய்க் கருதியே
புறப்பட்டது !
புதிய வாய்ப்புக்களில்
உணர்விப்பும்
எதிர்பார்ப்புத்தான் !
அறியப்படாதவொன்றை
நோக்கிய
நேசிப்பேன்
நீண்ட பாய்ச்சலில்
தீர்மானிக்கப்பட்டதென்று
எதுவுமேயில்லை !
எல்லாமே சாத்தியம்தான் !


..................................


தனியொரு
வாழ்க்கை பற்றிச் சொல்லி
ஓர்
பிரத்தியேக அடையாளத்தைச்
சுவீகரித்துக்கொள்ளக் 
கதைகள் இருக்கின்றன!
நேற்றைகளைத்
திரும்பிப் பார்க்கையில்
நாளைப்போலிருக்கும்
ஒவ்வொரு
இன்றைய
சம்பவத்திலும்
ஒரு மைய நிகழ்வு
மேலோங்கி நிற்கிறது.!
அது
பின் வரும் அனைத்தையும்
உருவமளித்துத்
திரித்துவிடுகிறது !


...............................



பின்னோக்கி பார்க்கையில்,
இழக்க விரும்பாதவொரு
கிறக்கமொன்றை
என்
விதியில் ஏற்பட்ட
யாத்திரையின்
திசை திரும்பல்கள்
எனக்குள்ளே நிரப்பியதில்லை !
அபூர்வமான
உறுதிப்பாடுகளை
ஏற்றுக்கொள்வது போலவே
நம்பிக்கை
தந்ததேயில்லை
பெயர்ந்த தேசங்கள் !
சன்னமான
கருநீல வண்ணக்
கோடுகளின் பின்னல்
நான் யாரென்பதை
அறிந்து கொண்டபின்தான்
நானாயிருக்கிறேன் !


..........................



தேசங்களை 

மாறுவதென்பது 
கடினமான 
துயரப் பருவமொன்றை 
விரும்பிக்கடப்பது போல் 
கத்தரிக்கப்பட்ட
வாழ்வொன்றை மீட்டெடுக்க
அவள்
திரும்பிச் செல்கிறாள் .!
அங்கிருந்தபடி
மனதோடு
முழுமையாய்ப்
பொருந்தியிருக்க
எப்போதும் முடியுமா ?
வளர்ச்சியின்னும்
முழுமையடையாத
அவர்களின்
தலைமுறை இடைவெளி
வேறொரு வண்ணம் பூசுகிறது !


..................................


மரங்கள் அகற்றப்பட்ட
ஓரிடத்திலிருந்தேன்
இடம் வெட்டவெளி ,
தலைமறைவு
அல்லது பின்வாங்கல் போலப் 
பேரமைதி .!
முன் பின் அறியாதவர்கள்
ஒவ்வொருவராய்
வந்து நின்று தோப்பானார்கள் !
மிகக் குறைவான
ஆதிவாசிகளின்
தொலைந்துபோன பாடல்களிலிருந்து
மெட்டுப் பிடித்து.
மீண்டும் மீண்டும் பாடினார்கள்!
ஏதோவொரு தந்தியை மீட்ட
மார்பெலும்புக்குள்
இதுவரையில் அறியாத
உணர்வு சிலிர்த்துக்கொண்டது.!
அவர்களைப் பார்த்து
வேர்களை
நினைத்துக்கொண்டேன் !
இன்றும்கூட
நினைவுகூர முடிகிறது
புல்த்தரையில்ப் பரவியிருந்த
வெட்டப்பட்ட மரத்துண்டங்களின் மீது
அவர்களின் முகங்களை !


................................


அனைத்திலிருந்தும்
தன்னை விடுவித்துக் கொள்ள
விரும்புகிறதா ?
அல்லது
சன்னமானவொரு 
முன் யோசனையாய்
காதலை
அடியோடு வெறுப்பது
போலிருக்கிறதா ?
அல்லது
மெல்லமுடியாத எல்லாவற்றையும்
சொல்லித் தீர்க்கிறதா ?
அல்லது
மரணத்தை
ஆனந்தமாய்த் தழுவிக்கொள்ள
நினைக்கிறதா ?
ஏனென்றால்
மீட்க முடியாதவாறு
அடியறுத்து விடுகிறது
காற்றில்
மிதந்துகொண்டிருக்கும்
பறவையொன்றின்
பாடல் !


.............................


அதிகாரப்பூர்வ
உரிமையுடன்
இரட்டை ஜன்னல்கள்,
திறக்கப்படும்போது
கண்கள் 
இரண்டாய்ப் பிளந்து கொள்ளும்
அரைகுறை முயற்சியில்
சில மரங்கள்,
பழுப்புநிறத் தொடுவானம்,
மிகச் சிறிய புல்வெளி ,
சீனப்பட்டு போன்ற உறைபனி,
தொடர்சாலை,
தலைகீழாய் புரண்டு கிடக்கும்
ஒரு பகுதி நகரம்,
தூரத்தில்
ஒவ்வொரு நொடியையும்
ஆக்கிரமிக்கும்
நீயும் நானும்
நடந்த பாதையும் தெரிகிறது !
மிச்சம்
பகல்க்கனவு !


.............................


சில 

முற்றுப்புள்ளிகள் 
கண்களுக்கு ஓய்வு தருகின்றன, 
இல்லையா? 
ஆனால் 
எப்போதும்
அடுத்ததொடர்
வாக்கியத்துக்குத்
திரும்பவே விரும்புகிறது
யதார்த்தம் !
அனுபவித்துக் கொண்டிருக்கும்
சுவாரசியங்களை
மீளுருவாக்கம் செய்யும்போது
குறிப்பாகக்
கனவு காணும் பகுதியில்
முற்றுப்புள்ளிகள்
நமக்குரிய
சுதந்திரத்தைக்
கட்டுப்படுத்திவிடுகின்றன !