Friday, 14 August 2015

புண்ணியக்குஞ்சி !

உலகம் முழுவதும் சில மனிதர்கள் அவர்களின் விசித்திரம் நிறைந்த விந்தையான உலகின் போக்கால் எப்போதும் மனம் முழுவதும் நிறைந்து விடுவார்கள். அவர்கள் ஏன் அப்படி எல்லாரும் போகிற போக்கில் எடுபட்டுப் போகாமல் தனித்துவமாக வாழ்ந்தார்கள் என்பதுக்கு என்னிடம் விளக்கம் இல்லை. வாழைப்பழத்தை உரிச்சு வாயில வைச்ச மாதிரி  சிம்பிளா சொல்லுறேன் புண்ணியக்குஞ்சி சிக்கலான ஒரு விசயத்தை இடியப்பச்சிக்கல் ஆக்கும் ஒரு மனிதர்                                                       

                                                     எங்கட ஊரில இது நடந்தது ,இதுக்குப்பிறகு அது நடந்தது என்று எழுதிக்கொண்டியிருக்கும் எல்லா சம்பவங்களிலும் வரும் முக்கியமான ஆள் திருவிளையாடல் தருமி போன்ற புண்ணியக்குஞ்சி . அவர் வேண்டுமென்று நல்ல நிகழ்விலோ துன்ப நிகழ்விலோ வெத்திலை பாக்கு வைச்சு வாசப் பன்ணீர்  தெளிச்சோ வாறதில்லை. ஆனால் வருவார். ஏன் வருவார் என்று யாரும் எதிர்வு கூறமுடியாத ஒரு மனிதர் அவர். அவரை விட்டு ஊரில ஒரு கதையே இல்லை .

                                                         புண்ணியக்குஞ்சி என்ற பெயர் எப்படி புண்ணிய மூர்த்தி சித்தப்பாவுக்கு கல்வெட்டில எழுதின மாதிரிப் பெயரோட வரலாற்றில் வந்தது எண்டு எங்கள் ஊரில எல்லாருக்கும் தெரியும் ,காரணம் அவர், ஒரு உதவும் மனிதரா ஊருக்குள்ள எல்லாருக்கும் வேண்டிய , எல்லாராலும் நேசிக்கபடும் ஒருவராக இருந்தார்,அவரோட உதவிகளின் முடிவில் சுவாரசியமான ஒரு உபத்திரவம் இருக்கும் .

                                           புண்ணியக்குஞ்சி தேவை இல்லாத ஊரில் உள்ள அடுத்தவன் தலையில உள்ள வேலையையும் தன் தலையில தூக்கிப் போட்டு முறிஞ்சு முறிஞ்சு செய்வார் . உண்மையில் புண்ணியக்குஞ்சியம்மா எண்டு எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் மனைவியத் தவிர மற்ற எல்லாருக்கும் உதவும், வேண்டிய ,எல்லாராலும் நேசிக்கபடும், ஒருவராக இருந்தார் எண்டுதான் சொல்ல வேண்டும், இப்படி உண்மையைச் சொல்லாட்டி வீராளி அம்மாளாச்சி சிங்க வாகனத்தில வந்து, என்னைக் கனவில திரத்துவா!.

                                                சின்ன வயசில எங்களின் வீட்டுக்கு அருகில்தான் புண்ணியக்குஞ்சி இருந்தார். அவர் எங்களுக்கு சித்தப்பா முறை, நாங்க ஒரு நாளும் அவரை சித்தப்பு எண்டு சொன்னதே இல்லை, குஞ்சியப்பு எண்டு சொல்லுவம், அம்மா மரியாதையா குஞ்சி ஐயா எண்டுவா, வேறு சில எங்களின் ரத்த உறவினர் குஞ்சி எண்டுவார்கள், எப்படியோ புண்ணியக்குஞ்சி என்ற பெயர் புண்ணியமூர்த்தி சித்தப்பாவுக்கு , புண்ணியம் செய்யப் பஞ்சி பிடிச்ச ஊருக்குள்ள எல்லாருக்கும் புண்ணியம் போல பல சேவைகள் இழுத்துப்போட்டு செய்வதால் நன்றாகவே பொருந்தி இருந்தது!

                                 ஆனாலும் புண்ணியக்குஞ்சியின் உண்மையான பெயர் பலருக்கு கனகாலமா தெரியாமா இருந்தது. அவர் பிறக்கும் போதே புண்ணியக்குஞ்சி என்று கர்ணனும் ,கவச குண்டலமும் சேர்ந்தே பிறந்த மாதிரிதான் அவர் பெயர்,  அவர் போலவே பிறந்து வளர்ந்து பேமஸ் ஆகா இருந்தது. மிகவும் ஆரோக்கியமான பர்மா தேக்குமரம் போல தேகக்கட்டு உள்ள புண்ணியக்குஞ்சி இள வயதில் பால்ரா கடையை சுழட்டி சுழட்டி ,பாசிப்பயறு ஊறவைச்சு நாட்டு சக்கரையோடு சேர்த்து வெறும் வயதில சாப்பிட்டு " பொடி பில்டிங் " என்ற பயிற்சி எடுத்து மாவட்ட மட்டத்தில் ஆண் அழகன் போட்டியில் முதலாவதா வந்தவர், அவரோட திருமண போட்டோவில் பிஸ் எஸ் வீரப்பா போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கும் படம் அவர்கள் வீட்டு ஹோலில தொங்கிக்கொண்டு இருந்தது.  

                                      வாய்த்திறமையால் சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக்கிய  புண்ணியக்குஞ்சி என்ன வேலை செய்தார் எண்டு சரியா சொல்லமுடியாது , கொழும்பில வெட்டுறன் , காலியில கொத்துரன், கண்டியில பிரட்டிறன் ,களுத்துறையில் உருட்டுறன், எண்டு எப்பவும் விலாசம் எழுப்புவார் ஆனால் அவர் என்ன வேலை செய்யுறார் ,எப்படி சம்பாதிகுறார் எண்டு யாருக்கும் தெரியாது !புண்ணியக்குஞ்சியம்மாவுக்கே சரியா தெரியாது ,மரியாதையாக அவர் சிங்கள நாட்டில பிசினஸ் செய்தார் எண்டு சொல்லுவார்கள். 

                                   அதுக்கு முக்கிய காரணம் புண்ணியக்குஞ்சி , சிங்களம் சிங்களவர் போல , தலை காரணமா உத்தரட்டா முதியன்சலாகே வளவுகார உயர் சிங்களம் பேசுவார் , புண்ணியக்குஞ்சி சிங்களம் பேசுறது எண்ட ஒரே காரணத்தால , ஊருக்குள்ள எல்லார் கண்ணிலையும் விரலை விட்டு ஆட்டுற பெட்டிசம் பாலசிங்கமே அவரைப் பற்றி மட்டும் ஒண்டும் வாயைத் திறக்க மாட்டார் , அதைவிட புண்ணியக்குஞ்சி தனக்கு அந்த தச நாயக்கா மினிஸ்டரை தெரியும் , இந்த திசா நாயக்கா மினிஸ்டரை தெரியும் எண்டு சொல்லுறதும் பெட்டிசம் பாலசிங்கம் கேள்விப்பட்டு இருக்கலாம்.

                                           ஆனால்  " புண்ணியம்   லேசுப்பட ஆள் இல்லை, சரியான வலம்புரி சங்கு சமுத்திரத்தில தேடி எடுக்கும் சுழியோடி  , இவன் கட்டாயம் சிங்கள நாட்டில ஒரு சுமனாவதியையோ , அல்லது ஒரு  குசுமாவதியையோ சின்ன வீடு வைக்காமால் இருக்க மாட்டான் , இவன் ஒவ்வொரு சிங்கள அழுத் அவருதுக்கும் சொல்லாமல் நழுவிப் போறதைப் பார்த்தா , இந்த ரெட்டைச் சுழியனோட  கதை  வசனம்  அதுபோலதான் போகுது போல , பெண்டுகள் வாசம்  அவனோட முகத்திலேயே அது எழுதிக்கிடக்கே  "

                                  என்று பெட்டிசம் பாலசிங்கம் புண்ணியக்குஞ்சி தலைக்கறுப்பு ஊருக்குள்ள இல்லாத நேரம் சுப்பிரமணியம் கடையில் நிண்டுகொண்டு சொல்லுவார். அது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியாது ஆனால் பெட்டிசம் பாலசிங்கம் புகை கிளப்பினா அதில ஒரு சின்ன தணல் துண்டளவாவது  உண்மை எப்பவும் இருக்கும்,  ஒரே ஒரு முறை எங்களின் வீட்டுக்கு முன்னால புண்ணியக்குஞ்சி நிண்ட நேரம் அங்கே வந்த  பெட்டிசம் பாலசிங்கம்  

                     "ஹ்ம்ம், கதையோட கதையா வாயால வெட்டிக் கிழிக்க வெளிக்கிட்டு இருக்கினம்,  எந்தப் புத்தில் எந்தப் பாம்பிருக்கும் என்றே தெரியவில்லை " என்று குசு குசுக்கிற மாதிரி சொன்னார் , உடன புண்ணியக்குஞ்சி 

                        "  அப்ப நீ போய் ஏன், புத்து புத்தாகக் கையைவிட்டுப் பார்க்க வேண்டியது தானே ", என்று கேட்டார், பெட்டிசம்   சத்தம் இல்லாமல் நளுவிவிட்டார். 

                                   புண்ணியக்குஞ்சி எல்லாத்தயும் இழுத்து போட்டு செய்வது தெரிந்து, ஊருக்குள்ள ஆட்கள்,காலையிலேயே அவர் வீட்டுப் படலைக்க வந்து நிக்கும்கள். புண்ணியக்குஞ்சியம்மா அப்படி ஆட்கள் வந்தா சண்டைய வீட்டுக்க தொடக்கி, அது படலை வரை கேட்கிற மாதிரி சத்தம் போடுவா, அன்று முழுவதும் முறையாக பூஜை, புனஸ்காரம், அர்ச்சனை, அபிஷேகம், மங்கள வாழ்த்துப்பா எல்லாம் குறைவில்லாமல் வீடே அதிர நடக்கும்

                      " வந்திட்டினமே மட்டி மடையன் பரமார்த்த குருவோடு அலையுற மாதிரி மந்திரம் கேட்க  உங்களிடிட்ட , நீங்க என்னப்பா சமூக சேவைத் திணைக்களமா நடத்துரீங்க, 

                           "  நீ  வாயைப் பொத்து,,என்னக்கு தெரியும் என் வேலை "

                          " இதுக்குத்தான்  உங்களை  கலியாணம் கட்டினன் ,என்று நினைக்குறிங்களோ "

                              " நீ பொத்து  வாயை,,கனக்க கதைக்காதை "

                             "   நான்  கதைக்காம வேற  யார்  கதைக்கிறது,,சொல்லுங்கோ "

                               " என்ன சொல்ல ,,நீ வாயத் திறக்காதே "

                                "   இதுக்கு  நான் பேசாமல் ஒரு அம்மிக்கல்லையோ,,ஆட்டுக்கல்லையோ கலியாணம் கட்டி இருக்கலாமே "

                               " நெடுக நெடுக சொல்லொறேன்  வாய்ப்  பொத்து "

                               " என்னப்பா நீங்க ,கரட்டி ஓணான் வெருட்டின மாதிரி,இன்னும் எவ்வளவு காலத்து இப்படியே வாயைப் பொத்திக்கொண்டு சீவியத்தை  ஓட்டுறது "

                                      " எனக்கு  இப்ப கொதி வரப்பண்ணாத்தை ,,பிறகு தெரியுமெல்லோ ,,என்ன நடக்குமென்று "

                                         " செய்யிற கோதாரி விழுந்த கோணங்கி மாணங்கியைச்  சொன்னால் மட்டும் கோபம்  மூக்கில முட்டுது "

                                      " எடியே,,என்னை  மதிச்சு நாலுபேர் அட்வைஸ் கேட்க வாறாங்கள்   அதை  நினைச்சியே "

                                     "  அவங்களுக்கு அறளைபேய்ந்த விசர் "

                                      " யாருக்கடி  விசர்,,இப்ப  உனக்கு  உதை  விழப்போகுது ,,உரலோடு சேர்த்து வைச்சு உனக்கு இப்ப உலக்கை இடி விழப்போகுது ,பொத்தடி வாயை "

                                " சம்பளம் இல்லாத உத்தியோகம் பார்த்து என்ன சீவியமடா இந்த மனுசனோட, குருவி தலையில பனங்காய் போல

                                 "  நீ  சொல்லுறதை  சொல்லு,,நான்  செய்யிறதை செய்வேன்  "

                                       "காலங்காத்தாலையே கச்சேரி ஆரம்பிக்க பத்துப் பேர் வந்து படலைக்க  நிக்குறாங்கள் , "

                                        "  நிக்கட்டுமே  உனக்கு  என்ன இப்ப 

                                " சீ எண்டு போகுது வாழ்க்கை இந்த மனுசனோட   "

                           எண்டு சாமியாடிக்  கத்துவா ,புண்ணியக்குஞ்சியும் சின்னமேளம் ஆடுறவள் கூத்துக்   கும்மாளம் ஆக விசில் அடிச்ச மாதிரி விட்டுக்கொடுக்காமல் 

                  " இவள் காலங்காத்தாலையே ஆரம்பிச்சிட்டாள், உன்னட்ட தலையைக் கொடுத்து தர்ம அடி வேண்ட வேண்டும் எண்டு எனக்கு எழுதி வைச்சுக் கிடக்கே இதுக்குத்தான் நான் வீடு வாசலில் நிக்கிறதில்லை.."

                                  " ஒரு நாள் முழுவதும் வீட்டில நிண்டு என்றைக்காவது எனக்கு ஒரு கை  உதவி  செய்த மாதிரி சொல்லுங்கோ பார்ப்பம், "

                                     " ஓ..அதுவோ  இப்ப சில்லெடுத்த பிரச்சினை,,பொறு  வாறன்  உனக்கு பேதிக்குளிசை  தாறன்,கொஞ்சம்  இரணை,,எண்ட  ராசாத்தி  "

                                           " அதை இதை அங்கால இங்கால அரக்கி வைக்க அடுத்தவங்களைக் கெஞ்சு வேண்டிக்கிடக்கு, வீட்டில பொடி பில்டிங் செய்து கிழிச்ச பயில்வான் போல மனுசனை வைச்சுக்கொண்டு "

                         என்று கோபமாக சொல்லுவா .புண்ணியக்குஞ்சி ஒண்டும் சொல்லமாட்டார் கொடுப்புக்குள்ள சிரிப்பார், சிரிசுப் போட்டு,

                " பவுளக் நத்தம் அவுளக் நா "

                      எண்டு வாயிட்குள்ள சிங்களத்தில் புறு புறுதுக்கொண்டு, ( " பவுளக் நத்தம் அவுளக் நா " என்ட சிங்களத்தின தமிழ் அர்த்தம் " பொஞ்சாதி இல்லை என்றால் கரைச்சல் இல்லை) படலையில் வந்து, வந்த விசியத்தை சொல்லுங்கோ எண்டு வாயால கேட்க மாட்டார், கொடுப்புக்குள்ள சிரிப்பார், 

                        வந்த சனத்துக்கு புண்ணியக்குஞ்சி சிக்னல் விளங்கும், பிரசினை வெளிய வரும், ஆனால் புண்ணியக்குஞ்சி வந்தவர்கள் சொல்வதை முழுவதும் கேட்கமாட்டார், இடையில கதை போகும் போதே, கொடுப்புக்குள்ள சிரிக்க தொடங்கி நிப்பாட்டு எண்டு போட்டு,

                                     " இதுக்கு என்னட்ட ஒரு பிளான் இருக்கு "

                               எண்டுவார், எப்படி புண்ணியக்குஞ்சி முழு பிரச்சினை கேட்காமல் பிளான் இருக்கு எண்டு சொல்லுறார் எண்டு இண்டுவரை ஒருவருக்கும் தெரியாது. ஆனால் புண்ணியக்குஞ்சி கொடுப்புக்குள்ள சிரிச்சு பிளான் போட்டா, ஆடிக் மாதக் காத்தில அம்மி, ஆட்டுக்கல்லு வேணும் எண்டா அசையும்,ஆனால் புண்ணியக்குஞ்சி போட்ட பிளான் ஒரு நாளும் அசையாது......

                        புண்ணியக்குஞ்சி எங்கட வீட்டுக்கு வருவார்,வந்து ஒருதரோடும் முதலில் கதைக்கமாட்டார், கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டே வீட்டை சுற்றிப்பார்க்க தொடங்க எங்களுக்கு வேலை காட்டப் போறார் எண்டு விளங்கிடும், பின்னுக்கு போய் ஆட்டுக் கொட்டிலில் நிண்டு

                       " எடுங்கடா மண் வெட்டிய "

                          எண்டுவார், நாங்க எடுத்துக்கொண்டு பின்னால போவோம், கிணத்தடியைச் சுற்றி நின்ற வாழை மரங்களை சுற்றி அதல் வெட்ட சொல்லுவார்,

                     " என்னதுக்கு புண்ணியக்குஞ்சி இப்ப இந்தக் கிடங்கு " எண்டு கேட்டா,

                    " ஆட்டுப் புழுக்கை குவிஞ்சு கிடக்கு அள்ளி கொண்டுவந்து போடப்போறன் "எண்டு, கடகத்தில அள்ளிக்கொண்டு வந்து போடுவார் புண்ணியக்குஞ்சி ,

                     " இந்த மாரியோட வாழை, குலை போட்டு அமோகமா தள்ளும் பாருங்கடா "

                        எண்டுவார் புண்ணியக்குஞ்சி, சொல்லி வைச்ச மாதிரி வாழை குலை போட்டுத் தள்ளும் .

                          போட்டுமுடிய, துலாக் கிணறை எட்டிப் பார்த்து,

                      " பாசி அள்ளு கொள்ளையா பிடிசிக்கிடக்கு கிணறை இன்றைக்கு இறைக்க வேண்டும் " எண்டுவார்,

                  நாங்க வாளியால மூச்சு வாங்க மாறி மாறி துலாவால அள்ளி இறைக்க தொடங்க, தேடாவளயக் கயிற்றைக் கொய்யா மரத்தில, கட்டிப் போட்டு,சாரத்தை மடிச்சு ஐயர்மார் போல கொடுக்குக் கட்டிக்கொண்டு,விறுக்கு விறுக்கு எண்டு ஓனான் போல கிணத்துக்க இறங்குவார், இறங்கி பாசி அவளத்தையும் சுரண்டி விழுத்தி, தண்ணியை பச்சை நிறமாகக் கலக்கி, சேறு எல்லாத்தையும் கலக்கி அள்ளி வாளியில் நிரப்பி , கிணத்துக்க நிண்டுகொண்டு,

                    " எங்கே நின்மதி எங்கே நின்மதி, அங்கே எனக்கொரு இடம் வேண்டும்..." எண்டு பாடுவார்,

                   அந்தப் பாட்டு நின்மதி இழந்து கிணறு முழுவதும் அதிர்ந்து, வளைஞ்சு வளைஞ்சு வெளியவரும், புண்ணியக்குஞ்சி மறுபடியும் கயிற்றில ஏறிவந்து, கிணத்துக்கட்டு விளிம்பில தொங்கிக்கொண்டு நிண்டு ,

                        " கலியாணம் காட்டுறதும் ,இப்ப கையை விடுறதும் ஒண்டுதான் " எண்டுவார்,

                 எங்களுக்கு பயம் வரும் புண்ணியக்குஞ்சி கையை விடப் போறாரோ எண்டு, வாழ்கை தத்துவத்தை கிணதுக்கட்டு விளிம்பில நிண்டு சொன்ன ஒரு ஒரே மனிதர் புண்ணியக்குஞ்சி..

                         நாங்கள் வசிக்கும் பூமி  உருண்டை,அதே நேரம் அது தன்னைத்தானே சுற்றி உருளுது, அப்படி உருளுரதை  தன்னோட ஒவ்வொரு செயலிலும் செய்துகொண்டு இருந்த ஒருவர் புண்ணியக்குஞ்சி. இப்படி மனிதர்களை ஆங்கிலதில் " ஹைப்பர் அக்டிவ் பெர்சனாலிட்டி " என்று சொல்லுவார்கள் என்று எங்கள் ஊரில இருந்த உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர் எப்பவும்  கனகலிங்கம் சுருடுப் பத்திக்கொண்டு சொல்லுவார் 

     
                        ஒரு நாள் , கார்த்திகை விளக்கீட்டு நாள் எண்டு நினைக்கிறன், புண்ணியக் குஞ்சியம்மா

               " குளிக்க நாலுவாளி தண்ணி அள்ளி தாங்கோ எண்டு சொல்ல " , சண்டை தொடங்கி இருக்கு,

               " பொடி பில்டிங்   செய்து மாவட்ட மட்டத்தில் ஆண் அழகன் போட்டியில் முதலாவதா வந்து ஊருக்கு பவர் காட்டின இந்த மனுஷன்  நாலுவாளி தண்ணி அள்ளித்தர அலுப்புப் பிடிச்ச மனுஷனாகி ,  வீடில பிரேதம்  விழுந்தாலும் அக்கறை இல்லாத மாதிரி இப்ப ஊருக்கு இந்த முறி முறிஞ்சு உதவி செய்யுதே "

                               எண்டு அவாவே போய் ,கிணத்தடியில வழுக்கி விழுந்து கிடக்க ,திருக் கார்த்திகை விளக்கு வைக்க கிணத்தடிக்கு போன மூத்த மகள் கண்டு குளறி அடிச்சுக்கொண்டு எங்களின் வீட்டுக்கு வர, நாங்கள் ஓடிப்போய் இருட்டில தடக்கி விழுந்து முழங்கை முறிஞ்சு கிடந்த அவாவை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் கிடதிப் போட்டு, டக்சி பிடிக்க அமளிப்பட்டு புண்ணியக்குஞ்சியைத் தேட, அவர் சிலமன் அயல் அட்டையில் இல்லை.

                                   புண்ணியக்குஞ்சி அதிகம் அவர் வீட்டில நிற்க மாட்டார் , குட்டி போட்ட பூனை போல ஓடிக்கொண்டு மற்ற எல்லார் வீடுகளிலும் நிற்பார்,வீராளி அம்மன் கோவிலில் நிற்பார் எண்டு தேட அங்கே ஆலமரத்தில சாஞ்சு கொண்டு காந்தி ஐயருக்கு பிளான் போட்டு சொல்லிக்கொண்டு இருந்தார், குஞ்சியம்மா கை முறிஞ்சதை சொல்ல, ஒரு உணர்ச்சியும் இல்லாமல்

                       " பவுளக் நத்தம் அவுளக் நா " எண்டு சொல்லிப்போட்டு,

                      " இப்ப இதை என்னத்துக்கு இங்க அவசரமா ஓடி வந்து, மலடி பிள்ளப் பெத்த மாதிரி அதிசயமா சொல்லத்தான் வேண்டுமா " எண்டு கேட்டார்,,

                  .....புண்ணியக்குஞ்சியின் மிச்ச அட்டகாசம் , புண்ணியக்குஞ்சி எப்பவும் சிங்களத்தில் சொல்லும் " பவுளக் நத்தம் அவுளக் நா " என்ற சிங்கள வார்த்தையின் அர்த்தம் எப்படி கடைசியில் புண்ணியக்குஞ்சி கொல்லப்படக் காரணமா இருந்ததை  இரண்டாம் பதிவில் எழுதுகிறேன் ....
.


.