Sunday, 29 April 2018

இன்னும் சலிக்கவில்லை.!

யுத்தம் அகோரமாக நடந்த ஆண்டுகளில் தாய்திருநாட்டில் படுகொலைகள் நடந்தேறின. அதைப்பற்றி  எழுதினால் " இப்ப எதுக்கு  ஆறிய புண்ணை மீண்டுமொருமுறை சொறியத்தான்  வேண்டுமா?  " என்பதுதான் முதன்மையான கருத்தாடலாக வந்து விழுகிறது.  அப்பட்டமாய் இது ஏற்றுக்கொள்ள முடியாத அநியாயம் என்று தெரிந்தும் அதையும் பத்தோடு பதினொன்றாக வாசித்துவிட்டு சென்றுவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். .  

                                            காலத்தில் பின்னோக்கி செல்லும் போது   அழுத்தமாய் இதயத்தில்  ஆணி அடித்து இறக்கியது போன்றவொரு சம்பவத்தை நாமே நேரடியாகச் சந்தித்திருக்கலாம்.. நன்கு படித்த, நல்ல மனிதநேய  சிந்தனை உள்ள,  புத்தகங்கள் வாசிக்கும் பல  நண்பர்களில் சிலரின்  விவாதப்பதிவுகளில்   வெளிப்படும் விளக்கமில்லாத காரணங்களை அடுக்கும்  சாயல் கண்டு வியப்பும், எதிர் மனநிலையும் அடைவதுண்டு. 


                                                  சக மனிதர்களின் உயிர்வாழ்தல்   மீதான அன்பைத் தவிர, எதுதான்  உயர்வானதாய், முக்கியமானதாய் நமது மனசாட்சியோடு நெருக்கமாக  இருக்கப் போகிறது? 

                                            உள்ளே கனன்றுகொண்டிருக்கும்  நினைவு வெப்பத்தை , வார்த்தைகளுக்குள்  கடத்தி  சரியாய் எழுத்தில் கொண்டுவருவது ஒரு கலை. அது  கவிதை எனும்போது இன்னும் கஷ்டமான விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. மிகக் கச்சிதமாய்க் கட்டமைக்கும் வடிவத்திற்குள் பொருந்திப்போவது எத்தனை அற்புதமான விஷயம்; அந்த அற்புதம்  நம்மை அறியாமலே சிலநேரம் நிகழ்வதற்கும் சாத்தியங்கள் உள்ளன, 

                                                           அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


நிசப்தங்களை 
நிலைகுலையவைக்கும் 
நகரத்தில் 
இரவு நடனவிடுதிக்கு வெளிக்கிடுகிறாள் 
பெரிய மகள் !


முடிவுகளை அவளே நிர்ணயிக்கும்
சட்டரீதியான வயதெல்லை
குழந்தைத்தனத்தை
இந்தப் பக்கமாக தள்ளிவிட்ட
முதல்ப் பிரவேசம் அது !


யார் யாரெல்லாம்
அவள் நண்பிகள் கூடப்போவது பற்றி
நம்பிக்கை விபரங்களை
அடுக்குகிறாள் !


தன் குழந்தை
சமாளிப்பாளாவென்று
ஓரத்தில்
அப்பாவுக்கு பயமாகவேயிருக்கு !


தேர்வுசெய்துள்ள
பழக்கமில்லா இடங்களில்தான்
வாசனைகள் இணைக்கப்பட்டிருக்கு என்கிறாள் !


அப்பா
அரண்டுபோய்க்கொண்டிருப்பதை
பலவீனமான பின்வாங்கல்
என்பதுபோலப் பார்க்கிறாள்.


அவளின் துணிச்சலில்
அப்பா இளமைக்கால அட்டகாசங்களை
மீட்டு எடுக்கிறார் !


கலைத்துப் போட்ட கூந்தலை
அள்ளிமுடிக்க நேரமில்லாமல் மேகங்கள்
அலைபாய்ந்துகொண்டிருக்கும்
இரவுவேற நெருக்கியடிக்க
நம்பிக்கை உடைப்புக்களில்
நூறு நூறு விதமான கேள்விகள் !


வெளி முற்றத்தில்
சிவாலோப் பறவைகள்
கைவிட்ட காற்றில்

கேவிக்கொண்டிருந்தன!
வெளியே புன்சிரித்தும்
உள்ளுக்குள்
அப்பா பதட்டமாகவே !


" எத்தனை மணிக்குத் திரும்பி வருவாய் ?"
என்கிறார் அப்பா தவிப்பாக.!


தைரியமாகவே
தயத்தமனிகள் ததும்பவைக்கும்
அப்பா தொலைத்த சிரிப்பை
முன்னுக்குத் தூக்கிப் போட்டுச்
சவாலாகவே சிரிக்கிறாள்
பெரிய மகள் !


...............................................................................

விஸ்தீரணமான 
கருவூலமாக முஸ்தீப்புக்கள் 
பழக்கப்பட்டுப்போயிருந்த 
அந்தக் காலத்தில் 
ஒரு 
கோடை நாளில்
இரவுகளில் நடமாடியதால்
வெளிச்சத்திட்க்குப்
பழக்கப்படாமலிருந்த கண்களில்
கொலைவெறி !


கங்குவேலிகளுக்கு மேலாக
மிடுக்கான முகத்துடன்
நடுவில்
தயார் நிலைப்படுத்தப்பட்ட
தானியங்கிச் சுடுகலன்களோடு
அவர்கள்
மூர்க்கமாக வந்தார்கள் !


யார் அவர்கள் ?

பருவமழைக்கு முன்னதாக
மண்டியிட்டுருந்த
செம்பாட்டு மண்புழுதி
காற்றில் மிதந்துகொண்டிருந்தது !


பிறகு
கந்தகம் கக்கி வாந்தியெடுக்கும்
இலக்குகளற்ற
மரண வெடியோசைகள் !


கண்டுபிடிக்கும் சாதியங்களுள்ள
காலத் தடயங்களும்
தப்பிஓடிவிட்டது !


சுவாரசியமான வியப்போடு
வரிசையாக நின்ற முத்திரைமரங்கள்
அவர்கள் ஓடிப்போன
காஞ்சோண்டிகள்
தலையைக்கவிழ்க்கும்
காட்டுப்புதர்ப் பாதையை
வெறித்தபடியேதான் இருக்கின்றன !


சரி
யார் அவர்கள் ?


........................................................................................

மழை 
தண்ணியாகிய தண்ணியோடு 
வட்ட வட்டமகாக 
யாரோ ஒருவர் வந்திறங்கி
தெருவோரத்தில் 
வாழ்க்கையாக்கிவிட வைத்திருக்கு,


இப்போதைக்கு
அதன் வட்டங்கள் வெறும் வட்டங்களே
ஏனென்றால்
வானவில்லின் வளைகாப்பைப்
பிரதியெடுக்கிக்கொண்டிருக்குமதன்
சுழிக்கும் வளைகோடுகளை
யாரும் தீண்டப்போவதில்லை !


ஒரு வயதில்
பெரிய மகள்
வெறும் பாதங்களோடு
சேறுகளைச் சதுப்பாக்கி
என்முகத்திலும் விசிறியடித்து
நாலு பக்கமும் சிதறடிக்க
உந்திக் குத்தி விளையாடி
நனைந்தே நனைந்து போவாள்!


தெறித்த தென்பாண்டி முத்துக்களை
நானாக ஒருநாளும்
துடைத்ததில்லை
வரம்போல வேண்டிக்கொண்டிருப்பேன்


வளுக்கான உலகத்திலிருந்து
குளம்போலவிருக்கும்
சின்ன ஆழத்தையே
ஆழ்கடல் என்பாள் !


இப்போதெல்லாம்
வடிவமைக்கப்பட்ட சப்பாத்துகளில்
பொறுப்புணர்வு வந்ததுபோல
தேங்குதண்ணியை

விலத்தியே போகிறாள்

நான்
ஆயிரம் நேசமான ரசனைகள்
இழந்துவிட்டேன்
அதில இதுவுமொன்று !


..............................................................................

நேற்றைக்கு
வெட்டியாகவிருந்த பொழுதொன்றில்
வடமேட்கு வானத்தை
எல்லைகளை
மிக எளிதாக்கிவிட்டு 
தகர்த்துத் தாவிச்சென்று
உடைத்தெடுத்துக்கொண்டுவந்து
தாழ்வாரத்தின்
மறைவில் வைத்திருக்கிறேன் !


சாமத்தில் களவாடப்பட்டதால்
நட்சத்திரங்களுக்குத்

தெரியவர வாய்ப்பில்லையென்றே
நினைத்திருந்தேன்
ஆனால்
கீழ்வானில் ஒருபெரிய ஜன்னல்
திறக்கப்பட்டது பற்றியவை
விடியவிடிய விவாதித்திருக்கின்றன !


ஏற்க இயலாத
அவ்வளவு அகலமான வெற்றிடம்
விரித்துவைக்கப்பட்டதால்
தென்திசையிழந்த பறவைகள்
பதட்டமாகியிருக்கின்றன !


சூரியன்
உதித்தெழுந்த முதல் வேலையா
விசிறி அழுதழுது
முறைப்பாடு வைத்துக்கொண்டிருக்கு!


அலைந்தோடிய மேகங்கள்
மறுக்க இயலாத
கலைந்தோடிய பகுதியைத்
சல்லடைபோட்டுத் தேடுகிறன !


கல்லறை மீது சத்தியம் செய்து
ஒப்புக்கொடுத்தபடியே
இற்றை இரவுக்குள்
மறுபடியும் 

வானத்தைத் தூக்கிப்பொருத்தப்போறேன்

ஆனால்
சண்டமாருதம் வீரியமானது போல
வந்து ஒருநாளுக்குள்
கனதியாகி உருப்பெருந்துவிட்டது
இப்போது
உதவிக்கு நாலுபேர் தேவையாகவிருக்கு


யாராச்சும் வர்றேளா ?

..............................................................................................

அந்த
அமைதியலைந்த சனிக்கிழமை ,
அந்தத்
தந்திரச் சுற்றிவளைப்பில்
செம்பாட்டுமண் செறிவில் 
கிழக்குப் பார்த்த புகையிலைத்தோட்டம் ,


சீமைக்கிளுவை வேலிகளில்
ஆங்காங்கே

முருங்கைப் பூக்களையும்
பதறவைத்த
காட்டுத்தனமான கூச்சலடங்க
தனித்து ஒருமித்த
தானியங்கித்

துப்பாகியொன்றின் முழக்கம்!

பிறகு
செம்புலப் பெயர் நீர் போல
அன்னங்கை மண் உறிஞ்சிய இரத்தம்
பிறகுகளை முடிவாக்கிவைக்க
ஒரு
சுருக்கமான விளக்கம் !


வன்முறைகளை
முடிந்தவரை எதிர்ப்பதுபற்றி
அனுதாபங்களை வேண்டிக்கொள்ள
எதிர்பார்க்கப்படும் மொழியில்
அந்த
முடிந்துபோன சம்பவத்தை
சுழண்டுகொண்டிருக்கும்
மனதின் கண்களிலிருந்து
வெளியேற்றி
இனியொருபோதும்
நகரவேமுடியாதவாறான
சதுரமொன்றுக்குள் அடக்கிவிடுவது
என் நோக்கமல்ல !


ஆனால்
வரலாற்றின் விருப்பம்

அதுவாகவேயிருக்கும்
மயக்கம்தரும் பொழுதொன்றில்
முகத்தைப்
புறமுதுகின் பக்கமாகத்
திருகித் திருப்பி வைத்து ,
தீக்கோழிகள் போலவே
தலைகளைப் புழுதியில் ஆழப்புதைத்து ,
குரல் அடைத்த அத்தனை
மனிதாபிமான மனசாட்சிகளும்
குற்றவாளிகளே !


.................................................................................

நம்பமுடிகிறதா ?
ஏதுமறியாமல்
அதுபாட்டுக்குப் பூவரசம் பூக்களோடும்
தைலமர வண்டுகளோடும்
உச்சிக்கொட்டி விடிகாலை,!


திட்டமிடுதல்கள்
கசிந்துகொண்டிருப்பது பற்றியெல்லாம்
நாலு திசைகளிலும்
வெக்கப்பட்டுக்கொண்டே
இயலாமையில் மவுமான
அந்தரங்க அமைதி,!


கற்றைக் கோடு கிழிக்கும்
விசிலடிப்புச் சத்தங்களுடன்
குறிபார்த்து நேர்கோட்டில்
தணல் உரசிய
சடசடசடசடசட என்ற
சனங்களின் சிதறல் வெடிப்புகள் !


தெருவோரப் பாதிகளில்
சிதறி விழுந்த தசைகள் ,


வைகாசி வெய்யிலில்
சட்டென்று
காய்ந்து போன இரத்தம்,


மின்விளக்குகளில்
விரல்கள் முறிக்கப்பட்டுப்
பிணைக்கப்பட்ட புறங்கைகள் ,


சந்தையருகில்
சவுக்கம் தோப்பில்
முச்சந்திமுடுக்கில்
முகங்களில் இலையான் மொய்க்கும்
உருக்குலைந்த சடலங்கள் !


வாய்திறக்க முடியாத
இனமொன்றின்

ஈரமில்லா ஓரவஞ்சனை
நடுவில் முறிக்கப்பட
அதட்டி சிதிலமாக்கப்பட்ட

நீண்ட கனவு , !

ஒரு கணம்
நம்பத்தான் முடிகிறதா ?


முப்பத்தியொரு வருடங்களின்முன்
இந்த வாரத்தில்த்தான்
இதெல்லாம்தான் நடந்தேறியதை ?


................................................................................

மிகச் சிறந்த 
பல்லின நிறங்களையே 
ஆத்மாவைக் கிண்டியெடுத்துத் 
தேர்வுசெய்கிறேன் !


தலைக்கறுப்புநிறத்தவனும் 
வெள்ளைவெளீர்த் தேவதையும்
நடைபாதையில்
நின்று நிதானமாக மூச்சுவிட்டு
முத்தமிட்டுக்கொள்கிறார்கள் !


கேட்க மனமிருக்கும்
எல்லாருக்குமாகவே
மரங்களின் கிளைகளோடு
மெல்லெனவே அலைகிறேன் !


மிகச் சரியான
சுரக்கோவை அளவுகளில்
வயலின் வாசிப்பவனின்
விரல்கள் நகருகின்றன !


உன்
கண் காண்பதெல்லாம்
உனக்கு மட்டுமில்லை
எனக்குள்ளேயே
இறங்கித் தேடியெடுத்துவிடு !


ஏழு வர்ணங்களில்
துப்பட்டாவை விரித்து
மேக மெகந்திக் கைகளால்
முகத்தை மூடிக்கொள்கிறது
வானவில் !


நீயென்
இதழ்களைப் பார்க்கிறாய்
நானுன்
விருப்பங்களாகியேவிடுகிறேன் !


இலைகளை வீழ்த்துவது பற்றி
மொழி பேசி கொஞ்சமும்
விழிசிந்திக் கவலைப்படாத
மேப்பிள் மரங்கள் !


என்
அவசரங்களைப் பற்றிக்கொண்டு
அர்த்தங்களில் ஊறி
இப்படித்தான்
விவரணங்கள் தருகிறது
இயற்கை !


...................................................................................

இரண்டு தளபதிகளும் 
கிழமையொருநாள் 
நட்பாகக் கை குலுக்கினார்கள்,


ரகசியமான 
முன் எச்சரிக்கைகள் 
மொத்தத்தையும் திரட்டிக்கொண்டு
தீர்ப்பு நாளுக்குள்
இறங்கியடிக்கக் காத்திருந்தது,


பனி மூடியிருந்த
அராலித் தரவைக் கடலும்
வெள்ளைவாய்க்காலும்

சந்திக்குமிடத்தில்
ஆள்காட்டிக் குருவிகள்
தயங்கியபடியே
நாடோடி யாத்திரைக்காரணின்
அகாலமான முடிவுபற்றிப் பாடுகின்றன,


எதிர்காலத்துக்கு எந்தவிதமான
உத்தரவாதங்களும் தரமுடியாத
இந்த
ஒடுக்கமான வர்ணனையை நீங்கள்
பொய்யென்று சொன்னாலும் பரவாயில்லை


சொல்லியேவிடுகிறேன்
பொழுதொன்றில்
அவர்கள்
ரவைகள் ஏற்றிவைத்த
துவக்குகளை நீட்டிக்கொண்டு வந்தபோது
இவர்கள்
வீங்கிச் சிவந்து கசியும்
கண்கள் திறக்க முடியாத
நோயின் உபாதையில்
அரண்டு கலைந்து

சுருண்டு கிடந்தார்கள் !

சிதைக்கப்பட்ட
அறைக்குள் வைத்துதான்
நினைவுக் கதவுகளை
இறுக்கமாக மூடியிருக்கிறார்கள் !


தாழ்வாரத்திலும்
வாசல்ப் படிகளிலும்
விழிசொரிந்த மேகங்களின்
மேமாத மழை நீராலும்
ரத்தத்தைக் கழுவமுடியவில்லை !


ஆயிரம்முறையும்
மன்னிக்க மனதில் இடம்வைக்காமல்
கடைந்தெடுக்கிற கண்களில்
தளபதின் கையில்
ஆட்டொமேடிக் கலாஸ்னிக்கோ 47 !


அந்த இவர்கள்
கண்களை ஒருமுறை திறக்கவே
நேரம் இருக்கவில்லை
அதட்குள்
எல்லாத் தலைகளுமே சிதறிவிட்டது!


...............................................................................

பழக்கதோஷப் பாவனையில்
கண்களைச் சிமிட்டி
மின்மினிகளுக்கு அழைப்புவிடும் 
தெருவிளக்குகள் !


காத்திருப்புக்காகவென்றே 
அலைக்கழித்தும்
மீட்டுக் கொண்டிருத்தலை
வெறுப்படையவைக்காத
பயணம் !


முழுகாமலிருக்கும்
பெரிய இச்சைகளையடைக்கி
உறைபணியை
உருட்டித் திரட்டி இறக்கிவிடும்
ஆலங்கட்டிமழை !


இரவெல்லாம்
பின் உளைச்சலாகவிருந்த
ராத்திரியை
ஆவேசமெடுத்துக்கொண்டு
துரத்தும் உத்தேசங்களுடன்
முன் வெளிச்சங்கள்!


தனித்துவக் குரலில்
உள்ளுக்குள் ஆழ்ந்துவிடுவது போன்ற
வசந்தப் பறவைகளின்
விடியல்ப் பாடல்கள் !


உணர்ச்சிகளை வெளிக்காட்டி
வாழ்க்கையை அலசுவதை
தவிர்க்க நினைத்து
தோற்றுக்கொண்டிக்கும்
ஒவ்வொரு
அதிகாலையிலும்
மீண்டும் மீண்டும்
இந்தக் காட்சியை
பார்த்துக் கொண்டிருக்கிறேன். !


ஹ்ம்ம் !
இன்னும் சலிக்கவில்லை.!

............................................................................

என் 
இழிநிலை மனதின் 
அடங்க மறுத்துத் திமிரும் 
ஓயாத பெருங்கூச்சலுக்கு 
ஒருநாளுமே 
என்
மனசாட்சியை
ஒப்புக்கொடுத்ததில்லை !


அதில்
அப்பாவிகளான நீங்கள் ,
தேர்ந்தெடுத்த
வெறிக்கூத்தாடல்களைத்
திட்டமிட்டு மறைக்கும்
தந்திரமான
நான்,


ரத்தக் கறைபடிந்த
கைகளுடன் அவர்கள் ,


கொஞ்சம்
முகமூடித்தனத்துடன் இவர்கள்,


எல்லாவற்றையும்
சகித்துப் பொறுத்துக்கொள்ளும்
எல்லாரும்,
என்றெல்லாம்
நீளும் பட்டியலில்
விபரங்கள் மேலெழுந்துகொள்கிற
வெளிப்படையில்
உண்மை என்பது அத்தனை
முக்கியமானதா என்ன?


சிலநேரம்
ஆம் !

பலநேரம்
இல்லை !


இந்த எடுகோள் இரண்டில்
எந்த பதிலை தேர்ந்தெடுத்தாலும்
அதில்
இந்தக் கவிதை
தோற்றுப்போவது
கொஞ்சம் வினோதம்தான்.!