Saturday, 17 June 2017

வாதணாராணி இலைகள்....
நேற்று இரவோடு

அந்த மெழுகுதிரி எரிந்துமுடிய

காலடியில்

பற்றிப்பிடித்ததால் 

எஞ்சிப்போனதில் 
உருகிவழிந்து இறுகிய
உபரிமெழுகு திட்டாகப் பரவியிருந்தது
அதன்
மரண வெளிச்சங்களில்
கொஞ்சமாவது
சுவரில் ஒட்டிஇருக்கவேண்டும்
ஜன்னலிலது தெறித்து
வாடிப்போனத்தை
ஒரு நட்சத்திரம்
இரக்கமாகப் பார்த்திருக்கலாம்
கடந்து போன காலடிகளில்
சிலது
நசிந்திருக்கலாம்
திரியின் வாசனையோடு
இன்னும்கொஞ்சம் கருகியிருக்கலாம்
மூச்சு விட்டுக்கொண்டு
அதன் 
தற்கொடைத்தியாகத்தை
சிலமணி நேரமே
நானும் கவனித்தேன்
இன்றைய இரவு
இருட்டை ஏதோவொருவிதத்தில்
திரத்திஅடிக்கமுடியுமென்றால்
அந்த
விரட்டியடிக்கப்பட்ட 
மெழுகுவர்த்திவெளிச்சத்தை
இன்னொருமுறை 
உருவகித்துப் பார்க்கலாம்
இல்லையென்றால்
செய்வதுக்கு ஒன்றுமேயில்லை..


....................................................................................
மின்னொளி மேடையில் 

அந்தப் பெண் 

பாடிக்கொண்டேயிருக்கிறாள்

இல்லாத இடமெல்லாம்

அர்த்தம்தேடி
வெறுமையின் விளிம்புநிலையில்
அர்த்தம் கடைந்து பிரிக்குது 
அந்தப் பாடல்...
அதிகம்
ஆரவாரமில்லாத
மெல்லிருட்டு மூலையில்
டோர்பெர்க் பியர்க் கிளாசை
பார்த்துப்பார்த்து
நாக்கை நனைக்கிறேன் 
என்னைச்சுற்றி
மயக்க மன்மதலீலையில்
இடுப்பை நெளிக்கிறார்கள் இளைவர்கள்
இந்தப்பாடல்
பத்துவருடம் முன்னமேயே
பலவிதத்திலும்
கதிகலங்கவைத்த நினைவுகளை
மறந்துவிட்டுபோன வரியெல்லாம் 
வாஞ்சையுடன் வரவழைக்க
இப்போது அதுவே
வறண்ட பிரதேசத்தில் பெய்யும்
பருவ மழை.....
மேசை மெழுகுதிரியின் வாசனை
கனதியான காற்றையும்
ஈரலிப்பு ஆக்கிவிட
அவளின் முன்அழகா 
இவளின்பின் அழகா 
படைப்பின் பிரபஞ்ச அர்த்தமென்று 
குழம்பிக்கொண்டிருந்தேன்
நீறாக எரிகின்ற அதன்
லயஞான சுருதியில் 
இப்போது புதிதாக எதையும்
நிரப்பமுடியவில்லை
ஏற்கனவேயுள்ள
மிச்சசொச்ச கனவுகளின் மீதேறி
இன்னொருமுறை
வெள்ளிநிலாப் பார்த்து
உலாப்போகும் உவகையுடன்
இரவு வெளிக்கிட்டு விடியப்போனது.

..........................................................................

கொழுப்பெடுத்தவளே

என் 

அவசரங்களில்

அனுசரணையாயிரு

ஆத்மாவையே
அவிட்டுக்கொட்டுவேன்
என் 
வளைவுப்பாதையில்
எதுவும் பேசாமல்
குதிக்கால் நிழலோடு 
கூடவே சேர்ந்து நட
வழியின் முடிவில்
உனக்கே உனக்காக
வாழ்ந்தேவிடுவேன்
கொஞ்சமாவது
பொறுமையாகவிரு
புத்தம்புதியதான பொழுதுகளை
அதிர்ச்சியாக்கிக்கொடுத்துப்
பரிசளிப்பேன்
என் 
அடர்வானத்தின்
மனஅழுத்த இடறல்களில்
வார்த்தைகளை அளந்துபேசு
மவுனத்தை
பறவையின் சிறகிலேற்றிப்
பறக்கவிடுவேன்
செவ்வந்திப்பூவொன்றின்
முகம் வாடமுதல்
வெள்ளையாக 
ஓராயிரம் கதை எழுது
அதில் என்னையும் எழுது
பிறகென்ன
மல்லிகைப்பூ மாலையோடு 
மாங்கல்யம் கட்டுவதுபோலவே 
கதையை முடித்துவிடு
உனக்குத் தெரியாத கற்பனையா?

................................................................

நேற்றுப்பகல் 

வட்டமாகச் சுற்றியிருந்து 

ஆரம்பப்பள்ளிக் பிள்ளைகள் 

பிளந்த மரத்துண்டுகளில் 

நெருப்புக்கொழுத்தினார்கள் 
நடப்பதை 
நில்லென்று நிறுத்திவைத்துக் 
கவனித்தேன்
மென்மையான தொடக்கத்தில் 
நீல ஒளியின்
பேராசை நாக்குகள் 
காற்றை நக்கிக் கொண்டிருந்தது
பிறகு 
அடவுகள் அலாரிப்புகள் 
முத்திரைகள் பிடித்து
சாவோடு சரிக்குச்சரி 
ஜதிகள் உதைத்து உதைத்து 
பரதநாட்டியம் ஆடியது
குழந்தைகளின் 
கண்களில் நெருப்புப்பத்த 
வேகமெடுத்து 
ரசித்துச் சிரித்தார்கள்
இன்றுகாலை 
அந்த யாகவேள்வியின் 
இடுகாட்டைக் கடந்தேன்
வீபூதி நீறாக்கிச் 
சாம்பல் பூத்திருந்த 
முடிவுத்தடத்தின் மேலே 
ஒரு 
நாடோடிப் பறவையின் காலடிகள் 
நன்றாகவே பதிந்திருந்தது
சின்னக் குழந்தைகள் 
அவசரமாகக் கலைந்து சென்றபின் 
ஒரு 
பீனிக்ஸ் பறவை 
உதறி எழுந்து பறந்திருக்கலாம் !
 !


........................................................................................
மழையில் நனைந்ததால் 

இதழ்களில் 

இதயம் கழண்டுபோன 

அனாமிக்காவின்

நாட்குறிப்பின் 
நாலாவது பக்கத்தில் 
ஒரு 
மாரித் தவளை 
எப்படித் தன் கவிதைகளைத்
திருடி எடுத்து பிரட்டிப் போட்டு 
நேரிசையாகவே 
எழுதுகின்றதென்று 
ஒரு கவிதை இருக்கு, 
எனக்கு 
விளங்கிக்கொள்ளவே 
அரைவாசி சீவன் போகுமதை 
" அபத்தப்புனைவுப்படிமப்பிரதியெடுப்பு " என்ற
உலக இலக்கிய வகை 
என்பாள் அனாமிக்கா
எப்படியோ 
யதார்த்தப்பிறழ்வாக 
அந்த அற்புத வரிகளும் 
வார்த்தைகளின் சத்தியமும்
வர்ணனைகளின் கன்னித்தன்மையும் 
விபரிப்பில் பூ விரியும் ஓசையும் 
என்னைக் கட்டிப்போட்டது 
உண்மைதான், 
அந்தத் தவளையை 
நேற்று வரையில் 
சர்ரியலிஸ்டிக் கற்பனையென்றுதான் 
நினைத்துக்கொண்டிருந்தேன் 
இன்றுதான் தெரிந்துகொண்டேன் 
அந்தத் தவளை 
அனாமிக்காவின் 
நாட்குறிப்புப் பக்கங்கள் ஒவ்வொன்றையும் 
உருவி எடுத்து இடைசெருகி
இடஞ்சுழியாக இட்டுக்கட்டி 
எழுதி மழுப்பிய தொகுப்புக்கு 
ஒரு வயதான 
சேற்றுத் தாமரைக் குளமும் 
வாய்ப்பில்லாத 
இரண்டு கழிவுவாய்க்கால்களும்
விதைப்புகழற்ற 
மூன்று வயல்வெளிகளும் 
சேர்ந்து கொடுத்த 
விருது கிடைத்த செய்தி ..!


..........................................................................................
வானவில்லிடம் 

உனக்குப் பிடிக்காத 

ஒரு நிறத்தை எனக்குத்தாவென்று

அடி வானம் தொடர்ச்சியாக

இடி மின்னலுக்கு
முகம் எடுத்துக் கொடுக்கத்
தயாரான மழை நாளில் கேட்டேன்


அது 


குடும்பப்பெண் போலவே 


நாணத்தில் வெட்கப்பட்டது 
அதுக்கும் 
மேகத்துக்கும் நடந்த 
கல்யான இரவுக்குச் சாட்சியான 
மாங்கல்யத்தாலியை 
தொட்டுத் தடவிப்பார்த்தது
சீமந்த வளைகாப்புக்களில் 
ஒன்றைத்தன்னும் 
கொடுக்கும் உத்தேசங்கள் 
அதன் 
பூசுமஞ்சள் குளித்த முகத்தில் 
நிழலாடவில்லை
சரி ஓடிப்போயாவது 
ஒளிந்து வாழ்ந்து விடுவோம் 
எவளவு நாள்தான் இப்படி 
ஆதிக்கும் அந்ததுக்கும் நடுவில் 
யாருமே அங்கீகரிக்காத
உன் 
ஏழு வர்ணங்களோடு 
அல்லாடுவாய் என்றும் 
ஆசை காட்டிப் பார்த்தேன்
அது அசையவேயில்லை 
எவளவு 
உறுதியாக இருக்குப் 
பார்த்திங்களா ?
அபலமான சபல புத்திகள் 
அதற்கு வரவேயில்லை !
நானும் 
வானவில்லும் கதைத்தது 
மழைக்குத் 
தெரியவந்திருக்கலாம் 
சுருண்டு படுத்திருந்த 
குளிர்காற்றைத் தட்டியெழுப்பி 
கிசுகிசு பரப்புவதுபோலவே
பெய்யெனப் பெய்யத் தொடங்கியது மழை
நடுவகிட்டு நெற்றி 
குங்குமப் பொட்டை அழிப்பதில் 
இந்தப் 
புறம்போக்கு மழைக்கு அப்படியென்ன 
குடும்ப அராஜகம் ?
இந்தக் சனியன் 
எப்பவாவது திருந்துமென்று 
ஜோசித்திருகிரீர்களா ?
நான் 
அதையெலாம் நம்பவேமாட்டேன் !

..................................................................................
காற்றை 
கழுவிவிட்டது மழை 
ஜன்னலில் இருட்டு முறைக்கும் 
யதார்த்தப் பின்னணியில் 
மின்மினிப்பூச்சிகளின் இரவை 
நட்சத்திரங்கள்
நனைத்துவிட்டது 
எனப் பகிரங்கப்படுத்தும் 
செய்தி வந்தால் 
அது நிச்சயமாகக் காதலை 
மையமாகக் 
கொண்டதாகக்தானிருக்கும்

தந்திரமாக 

வீட்டுக் கதவுகளை 

இறுக்கி அடைத்துவிட்டு

தனிமையோடு 

ஊடுருவி நேசம் தேடும் 

ஒரு நிலைமைதான் நீட்டிவைத்து 
இடம்பெயர்க்கிறது .

அதன் 

கோரக்காட்சிகளால் பீடிக்கப்பட்ட 

ஒருவன் 

புரிதலற்ற இருப்பைப் 

பிடி கொடுத்துக்கொண்டே 

மேலும் இறுக்கமாக்கி 
சிக்கலாக்குவதுதான் தரித்திரம்

எல்லையில்லா 

வானம்பாடியின் வானத்தில் 

அலைந்துகொண்டிருக்கும் 

ஆத்மாவின் கீதம் 

தனிமையோடு மனமழுத்தி 
ஆடுகிறது.

மனிதர்களின் 

உயிர்வாழ்தலை 

இயங்க வைக்கும் புள்ளியில்

வடித்தெடுத்த வரிகளில் 

அடைக்கலம் தேடிய மொழியின் 

கெஞ்சல்களுக்குப் 

புதிய வரைவிலக்கணம் தான்

கவிதை என்று நினைத்தேன் 

மிக அபூர்வமாகவே தான் 

கனவும் நனவும் 

ஒளியின் வேகத்தில் 

படம் எடுத்துப் போட்டுக்காட்டி 

மிகச் சாதுரியமாகத் தேர்வெடுத்த 

ஒரு ஓவியத்தை 

கண்ணுக்கு முன்னுக்குப் 
பதிவாக்குகிறது காலம்
.....................................................................................

குழந்தைகளுக்கு 

இன்றைக்கு மட்டுமே 

பூச்சாண்டி வெருட்டும் நாள் 

அதுக்கெனவே 

நிறையப் பயங்காட்டுதல் 

அதிர்ச்சி அலங்கரிப்பு 

என்றெல்லாம் 
ஆரவாரமாயிருக்கிறார்கள்

எனக்கோ 

உள்ளுராக் கிலியாக இருக்கு 

அவர்களோ 

முழுப் பூசணிக்காயில் 

பேயின் முகத்தைக் 

குடைந்தெடுத்து 

விளக்குகள் பத்தவைப்பதை 

ஆவிக்குப் பயமில்லாமல் 

மாயவிக்குப் படையல் போலவே 
செய்துகொண்டேயிருக்கிறார்கள்

குழந்தைகளோடு 

எப்போது அதன் 

விஷமத்தனத்தை விட்டுகொடுத்து 

நடுச்சாமப் பேய் 

இவளவு இறங்கிவந்து நெருக்கமானது 

என்பதுக்கு என்னிடம்

சாத்தான்மேல சத்தியமா 
சாட்சிகள் இல்லை

வாழ்கையை 

வரையறை செய்வதை 

நாம் தான் 

கொண்டாடத்தின் கையில் கொடுத்துவிட்டோம். 

ஒவ்வொரு 

சந்தோசங்களும் எப்படி உருவானது 

என்பதைப் பற்றி 

மதம் சொன்ன

கட்டுக்கதைகளைத் தானே 
இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளோ 

இயற்கை எதைச் சொல்கிறதோ 

அதனோடு இயங்கிப்போக 

விளங்கங்கள் பற்றிய 

கற்பிதங்கள் 

ஒவ்வொரு நூற்றாண்டிலும் 

அதிகமாகிக்கொண்டே வருவதை 
நெஞ்சோடு நம்புவதில்லை

கொஞ்சம் இருங்க 

கதவை யாரோ தட்டுகிறார்கள் 

திறக்கப் போகிறேன் 

வேறயாராக இருக்க முடியும்

பிஞ்சுக் கன்னங்களில் 

கிள்ளி எடுக்கும் சிரிப்புடன் 

கொஞ்சிக்கொண்டு 

அவர்கள் தான் 
பிசாசு வடிவில் வந்திருப்பார்கள்.!

..............................................................................................
இந்தப் 

பாவத்தை இனிச் 

செய்வதேயில்லை என்றுசொன்ன 

நாளில் இருந்து 

செய்துகொண்டுதானிருக்கிறேன் 
சில பழக்கத்தை 
அவளவு சுலபமாக உதறி 
விடவேமுடியாது 
உள் சுவாசம் போலவே 
மூச்சோடு ஒட்டிவிட்டது
கோடை வியர்வை போலவே 
கசிந்துகொண்டிருக்கு 
கொலைப் பசி போலவே 
நேரங்களில் தேடவைக்குது
அடம்பிடிக்கும் காலம் போலவே 
இடங்களை நிரப்புகிறது
பழிக்கும் வெய்யில் போலவே 
வெளிச்சத்தில் தீக்குளிக்குது 
இருட்டைப் போலவே 
நடுச்சாமத்தில் பதுங்கியிருக்குது 
விடிவதுக்கு முன்னமே அது 
விழித்துக்கொண்டுவிடுகிறது 
மர்மமரணம் போலவே 
மண்டியமாட்டேன் என்கிறது
அப்படி என்னதான் 
உன் வதையின் கதையென்று 
வியந்து கேட்கிறீர்களா 
வேறென்னவாகத்தான் இருக்க முடியும்
சத்தியமாகவே 
கவிதை எழுதுவதைதவிர
என்கிறேன் நான் 
அடப்போடா லூசு மடையா 
என்கிரிங்க 
சமார்த்தியமாக நீங்க.


.....................................................................................................
மூன்று காலில் 

அந்தப் பூனை கெந்திக்கெந்தி வந்தது 

அதன் நாலாவது காலுக்கு 

என்ன நடந்திருக்குமென்று 

கற்பனை செய்தபோது 
ஐஞ்சு காலில் ஒருமுயல் 
குறுக்கே கடந்தது 
அந்தப் பூனைக்கு
மீசையில் பாதிதான் இருந்தது 
மிச்சப் பாதி 
மழுப்பி வழிக்கப்பட்டிருந்தது 
எங்காவது 
எலி பந்தயம் வைத்தவொரு போட்டியில் 
தோற்று இருக்கலாம் 
அல்லது 
அதுதான் இப்ப 
பூனைகளின் உலகத்தில் 
லேட்டஸ் ஸ்டைலா 
அதுவும் உண்மையறியத் தெரியாது
நான் என் வலது காலை 
நொண்டிக்கொண்டு வந்து 
மரவங்கில் முண்டு கொடுத்தேன் 
அந்த அஞ்சுகால் முயல் 
பூனையையும் 
என்னையும் 
கேவலமாகப் பார்த்தது
கேவலம் ஒரு ஆமையிடம் 
தோற்றுப்போன 
குற்றவுணர்ச்சியே அதன் 
முயலாமைக் கண்களில் இல்லை 
ஏன்தான் இப்படி 
சம்பந்தா சம்பந்தமில்லாமல் 
சம்பவங்கள் சந்திக்குது என்று 
முகத்துக்குப் பவுண்டேசன் கிரீம் போட்டு 
இளமையாகிக்கொண்டிருந்த காலத்தைக் கேட்டேன் 
எசகு பிசகாக அதுவும் 
இதுதான் மேஜிக்கல் ரியலிசமென்றது


........................................................................................................
எனக்குத்தெரியாதது போலவே

உங்களுக்கும் 

கவிதை எழுதமுடியாவிட்டால் 

நெருக்கமாகும் 

அன்பு வார்த்தைகளை 
அதிகம் தள்ளிவைக்க வேண்டாம் 
குறைந்தபட்சம் 
கடிதம் ஆக்கிவிடுங்கள்
பின்னொருநாள் 
வரிகள் வசமாகவில்லையென்று 
வானத்தை முறைக்க வேண்டாம் 
நமக்குத்தான் 
விசேடதள்ளுபடியில் சீரழிவுகள் 
நாலு பக்கமும் 
மொழி என்னவோ இப்பவும் 
நலுங்குபோட்ட பூரிப்போடும் 
வலம்புரிச் சங்குகளோடும் 
வாசலில் வலம் வருகிறது 
தோல்வி உணர்ச்சி 
உங்கள் தோள்களில் ஏறி
முழங்கைகளை 
எழுத முடக்கும் போது
வழியில்லா இன்னொருவரின் காலத்தில் 
பழிபோடவேண்டாம் 
அதை 
வலிந்து நியாப்படுத்தக் 
காழ்ப்புணர்ச்சியோடு 
கூட்டுச் சேர்ந்துவிடாதீர்கள் 
தயக்கமின்றி நல்லாவே தெரிகிறது
உங்களுக்கு இப்பவும் 
தேவையானது கதை மட்டுமே 
சிங்கம் போலவே 
தட்பெருமைகளைத் 
தானம் கொடுக்கத் துணியவேண்டாம் 
இன்றுமுதல் 
திறனாய்வுசெய்யமுடியாத 
அசிங்கமான நரிகளிடம் 
கவிதையை விட்டுவிடுங்கள்


....................................................................................
பதினைந்து 

வருடங்களின் பின் 

பார்க்கவேண்டிய ஒருவரை 

முந்தநாள் 

முகத்தில் அடிச்சமாதிரி 
முன்னுக்கு வைச்சுச் சந்தித்தேன்
நிகழ் காலத்தில் 
டை அடித்த அவர் மீசையும் தாடியும் 
பழுப்பிலிருக்க 
இறந்துகாலக் கண்களில் 
பஞ்சு அடைந்திருந்தது 
எங்கே இதுக்குமுதல் 
சவகாசம் வைத்தேன் 
வீட்டின் சுவரில் 
அவர் படமாகத் தொங்கிய 
இடுக்கில் 
ஒரு சிலந்திவலை
கண்ணாடியில் 
ஒரு விபத்தைச் சந்தித்த 
சின்னஞ்சிறு சிராய்ப்புக்கள் 
நேற்று 
அந்த ஓவியத்தை உற்றுப்பார்த்தேன் 
அவர் இறந்துபோனதுக்காய் 
சமாதானப்படுத்தும் 
கறுப்பு நிற வாசம் வந்தது
இன்றுகாலை 
படத்தைக் கழட்டி
காளான்கள் வளர்த்த தோட்டத்தில் 
சுழட்டி எறிஞ்சேன் 
வெள்ளைச்சுவர் 
விட்டேந்தியான வெறுமையில் 
சம்பல் நிறம் பூசிக்கொண்டு 
சாந்தியடையாத 
ஆத்மாவின் சாபத்தைக்காட்டியது
இன்னொருமொரு பதினைந்துவருடங்களை
அகால மரணங்களில் 
வாசிப்பதுக்காய் 
அந்த இடத்தில இப்ப 
" மேஜிக்கல் ரியலிசமென்று "
எழுதி வைத்திருக்கிறேன்


.......................................................................................................
என் 

கற்பனைகள் 

என் மனசாட்சியை 

வெட்கப்படுத்தியதில்லை

எனக்கான 
அதிசயங்களை
எல்லார் கண்களிலும் 
திணிக்கவேண்டிய அவசியமுமில்லை 
எனக்கு முன்னுள்ள 
நியாயங்களை 
அப்படியே 
திறந்து காட்டி 
வேகமாக நடந்துபோகிறேன் 
சில பல நேரங்களில் 
ஆரோக்கியமற்ற வசனங்கள் 
வழிகளில் தப்பிவிடுவது 
உண்மைதான் 
ஆனாலும் 
விரோதமாய் விபரிப்பில் 
பாவங்கள் செய்வதுக்கென்றே 
இதயத்தில் 
எதையும் சேர்த்து வைத்ததில்லை 
ஆத்மா 
எக்காலத்துக்கும் 
பொருந்தாதபோது 
வாஞ்சையோடு தொய்ந்துவிடுகிறது 
அதனால்த்தான் 
புதிய பரிமாணங்களைத் 
தியானிக்கிறேன் 
அதில் நல்ல செய்திகளுக்குக் 
காத்திருப்பவர்கள் 
என்னைக் கண்டுபிடித்திருந்தால் 
சந்தோசப்படுவார்கள் 
மற்றவர்கள் 
என் மரணக்குழியை 
இப்பவே வெட்டத் தொடங்கலாம்.


......................................................................................................
மஞ்சள் நிலாவுக்குப் 

பிரசவ வேதனை போலிருக்கு 

எதற்காகப் 

பூரண பவுர்ணமியில் 

இங்கேயும் அங்கேயும்
பெரிதாக உருவெடுத்து 
பிதுக்கிக் காட்டியே 
அடிவயிற்றைச் சளிக்கிறாய்

உன் 

மாதவிடாய்கள் 

தேதி தவறாமல் 

அம்மாவாசைகளில் 

ஒழுங்கு தவறமால் 
வந்துகொண்டுதானே இருந்தது

யாரடி 

அந்த மலையாளக்கந்தர்வன் 

இரவோடு இரவாகக் 

கலியாணம் காட்டிப்போட்டு 

விடியலுக்கு முன்னமே 
விரகதாபத்தை விதைத்த 
கரும்புவில் மன்மதன்

உன் 

சுமாரான அழகை 

அளவுக்கு அதிகமாகக் 

கவிஞ்சர்கள் வர்ணித்த போதே 

நினைத்துக்கொண்டேன் 
ஒரு நாள் இல்லை ஒரு நாள் 
ஒரு பொறுக்கி அயோக்கியனிடம் 
நீயாகவே மயங்கி 
அசிங்கப்படுவாய் என்று

இப்பிடி எல்லாம் 

நீயாகவே சோரம்போனால் 

பால்வீதி வான்மதியே 

ஆகாய வெண்ணிலாவே 

என்றெல்லாம் வேலைமினக்கெட்டுக் 
இனியுனக்குக் கவிதைகள் 
எழுத மாட்டோம்

எடுபட்டுப் போனவளே 

இனியும் தொடசல் வேண்டாம் 

நீ எடுத்த முடிவிது 

மாட்டுப் பெண் போல 

நீ மாட்டின இடத்திலேயே 
வாழ்ந்துகொள் 
எங்கள் கவிதைமொழிக்கும் 
கொஞ்சம் போல 
சூடு சொரணை இருக்கு !

........................................................................................
இந்த நகரத்தில் 

இனி எப்போதும் 

கவிதைகளின் தொந்தரவு 

இருக்கவே இருக்கக்கூடாது 

என்பதைத்தான் 
நேற்று மாலையோடு 
முடிவாக்கி வைத்திருந்தேன்

நடக்கத் தொடங்கிய 

நாலாவது நிமிடத்தில் 

ஒரு பறவையின் 

கிறீச்சிட்ட குரலில் 

மரணம் அப்பிக்கொண்டது
மவுனத்தை உடைக்க 

மொழிக்கு அதீத அதிகாரம் 

யாரெல்லாம் எப்போது 

கொடுத்தார்களென்று இறுமாந்தேன்

பாதணிகளைப் 

பத்தடி தள்ளி உதறிப்போட்டு 

வாழ்க்கையைத் 

தலையில் தாங்கியபடியிருந்த 

இளம்பெண்னின் 
தலை மயிர்கள் 
வாதணாராணி இலைகள்

அப்பவும் 

எதையும் எதனோடும் 

தொடர்புபடுத்தவிரும்பவில்லை

உலகத்தின் அழிவு 

இப்போதே வரவேண்டுமென்று 

திட்டிக்கொண்டு 

தெருவுக்குச் சொந்தமான 

ஒரு பிச்சைக்காரனின் 
முடக்குவாதக் கால்கள் 
கருனக்கிழங்கு

அப்பவும் 

உவமான உவமேயத்தை 

உள்ளே நுளையவிடாமல் 

உதைத்துக்கொண்டிருந்தேன்

குளிரோடு போராடி 

மிச்சமிருக்கும்ம் உயிரின் 

மேல் மிதித்து நடப்பதில் 

மஞ்சள் இலைகளுக்கான 

ஓர வஞ்சனையில்
ஒளி இழந்த சிட்டி விளக்கு

அப்பவும் 

குறியீட்டுப் படிமங்கள் 

குறுக்கிடாதபடி எச்சரிக்கை

நீயென்னை 

இறக்கிவிட்டுப் போன இடத்தில 

இப்பவும் நிக்குது 

உன் 
கூந்தலின் சொடுகு வாசம்

அது வந்த போதுதான்
எழுதாமலிருந்தால் 
தொலைந்தேபோய்விடுவேனென்ற
ஆத்மாவின் 
ஆணவம் அடங்கியது.