Wednesday, 16 May 2018

தனியிரவு !

கவிதைகள்  எழுதவைக்கும் சந்தர்ப்பங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை . இன்றைய இந்த  அவசர வாழ்க்கை  தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் படைப்புத்  துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை.   பல சமயம்  எதுக்கு எழுதவேண்டும் ?  என்று அங்கலாய்க்க வைத்து , இன்னொருசமயம்  உச்சக்கட்ட  வேகத்துடன் இயங்க வைக்கும். 

                                                          மொழி இன்னொரு பிரச்சினை , சில சமயம் ஒரு காலத்தில் படித்த இலக்கிய,இலக்கண அடித்தளத்திலிருந்து அமர்க்களமான சொற்கள் நினைவுக்கு வரும், இன்னொரு சமயம்  இன்னொரு கணத்தில் நினைவுத்தடம்  மந்தமானவை ஆகிவிடும்  . ஒவ்வொருமுறையும் நினைப்பது இதைவிடவும்  இன்னமும் செறிவான அர்த்தமுள்ள  கவிதைகளை  எழுத வேண்டும் என்று . அந்தத் திருப்தியின்மைதான் இன்னும் இன்னும் எழுதவைக்குது. .

                                                             2016 இலும்    2017 இலும்  முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   எல்லாவற்றையும் புத்தகம் ஆக்கும்  ஒரு திட்டத்துக்கு முன் முயற்சியாக  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகின்றேன்.


முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு

நம்பமுடியாதவாறு
பின் வந்துதொடரும்
அனுபவத்தோடு
முரண்டுபிடிக்க விரும்பாமல்
என்பாட்டில்
போக எத்தனித்தேன்.

....................................................


பச்சை விளக்கை
நிறுத்த அவதியாகி
மஞ்சளில் கடக்க நினைத்தவன்
சறுக்கினான்,

மூக்கு அழகான
கிழக்கு ஐரோப்பியப் பெண்
ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாள்,

வெறித்து பார்த்த
ஜன்னலிலிருந்து
ஒருவன்
இருமித் துப்பிக்கொண்டிருந்தான்!

...............................................

ஓ,,,மனசே
ஓட்டிகொள்ளாத
இரண்டு கோணங்கள்
எப்போதும் வேண்டுமென்பதை
சங்கீதங்கள்தான்
ஆத்மாவைப் பிசைந்து
சொல்லித்தரவேண்டுமா ?
வாதாபிகனபதேம்
இன்றைய காலையை
ஹம்சத்வனியில் தொடக்கியது!
கடந்த பாதையில்
இத்தனை தடுமாற்றங்களா
நினைக்கவே
ஆயாசமாக இருக்கிறது!
அலைச்சல் நாட்களுக்குப் பிறகு
வரும் ஓய்வில்
ஆரபி இராகம்
சாடிஞ்சனே ஓமனசாவில்
எங்கேயோ ஆரம்பித்ததை
எங்கேயோ இணைக்கும்
பிராயத்தனங்கள் !
குத்துமதிப்போடு
ஏக்கமாக எதிர்பார்த்ததெல்லாதையும்
இந்தாபிடி என்று அள்ளிக்கொட்டுது
கீர்த்தனைகள் !

....................................................................


ஏதோவொரு
வானவில் நிறத்தில்
ஏதோவொரு பூவைப் பார்த்துக்கொண்டு
ஏதோவொரு அந்நிய மொழியில்
வாழ்தல் பற்றிக்
கதைத்துகொண்டு
ஏதோவொரு
வரைவிலக்கணத்தில்
அர்த்தங்களை
மட்டமாக மொழிபெயர்துக்கொண்டு
விலகலைவிலத்தி நகரும்
இந்த நொடியிலும்
ஓர்
உணர்வுப் பிணைப்பை
நிசப்தங்களுக்குள்ளாக
நுழைத்து  வெளியேற்றி
ஏற்படுத்தியேவிட்டது
கடைசியான
உன்
பெருமூச்சு !


............................................................................


எப்போதுமென்
நம்பிக்கைக்குரிய பிசாசு
தன்
திருமணமுறிவு பற்றி
ஒருநாள் என்னிடம் புலம்பியது!

ஒரு
ரத்தக்காட்டேரி திருவிழாவில்
தன்
காதலி பசாசைச் சந்திச்சுதாம்!

ஒரு
பரிபூரண அமாவாசை இரவு
சவுக்கம்தோப்பு மயானத்தில் வைச்சுக்
காதலை சொல்லிச்சாம் !

பிறகு
சாத்தான்கள் வேதமோத
இரத்தத்திலகமிட்டு
தேடாவளயத்தில் மூன்று முடிச்சுப்போட்டு
ஒரேயொருவருடம்
புளியமரமொன்றில் தனிகுடித்தனமாம் !

பிறகு வந்ததுதான்
செய்வினை சூனியமாம் !

பக்கத்து முருங்கை மரத்தில்
தனியாகத்தொங்கிகொண்டிருந்த
வேதாளன் என்ற கட்டழகனுடன்
கள்ளத்தொடர்பாம் !

அகோரப்பற்களை
நறநறநறநறநற வென்று நெரிச்சு
குரல்வளையை அறுத்துப்
பழிவேண்டப்போவதாக சபதம்செய்தது !

பிசாசின்
வேதாள  விபரிப்புகளில்
எனக்கு நம்பிக்கை வரவில்லை !

உன்
காதலுக்கும் கலியாணத்துக்கும்
இறுக்கமான ஆதாரம் என்னவிருக்கென்று கேட்டேன் !

பிசாசு
சடாரென்று உருவி எடுத்துக் காட்டிய
நடுநிசிப்   படத்தில
ஒரு
சவக்குழிக்குக்கு மேலே
இதழ்களை ஒட்டிவைச்சு முத்தமிட்டபடி
பிசாசும் பசாசும் நெருக்கமாக
மன்மதனும் ரதியும் போலிருந்தார்கள் !

அந்தப் படம்
மங்கிய கறுப்பிலும்
வெளிறிய வெள்ளையிலுமிருந்த போதும்
மதன சந்தோஷங்கள்
அதிகப்படியான
நிறங்களை அள்ளிக்கொட்டியது  .

....................................................................

பாதைக்குக் குறுக்காக
போலீஸ்காரன்
வெறித்துப்பார்க்கும் பார்வையில்
துவேஷத் தூவானம்,


தோல்வியைப் பாடும்
தெருப்பாடகனின்
பூனைக் கண்களில்
நம்பிக்கை !

..............................................

பிரத்தியேக வாசனையோடு
கும்பலாகப் கடக்கும்
பதின்வயதினரிடம்
பொறுப்பற்ற  சிரிப்பு.

புகைபிடிக்க
குடிவரவுக்  கட்டிடடத்துக்கு
முன்னால் நின்ற
நிறைவேற்று அதிகாரி
என்னைவிட அகதிபோலிருந்தார் !

.......................................................

என்னைச் சுற்றி
எனக்குத் தேவையான
எதுவுமே
நடக்காததுபோல
ஒடுக்கமாக
நழுவிக்கொண்டிருக்கிறேன்..

............................................................

புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
மழையின்
கவிதைத் தொகுதி.....

...............................................................


தனியாகக்
குறுக்கிக்கொண்டு
மழை அழுதுமுடித்த கணம்
நடைப்பாதையில்
வட்டமாகத்
தேங்கும் தண்ணியில்
முகத்தைப் பார்த்தால்
ஞாபகம் வரும்,
பூர்வீக வீட்டுக்
கட்டுக்கிணறு

......................................................


சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....

.................................................................................

பால்
நிலவு நாட்களில்
பாக்குமரங்களின்
நிழலசைவுகள்
குளிக்கும் தொட்டியில்
முங்கி இறஙகி முழுகி விளையாடும்,
விடிவை முந்திய
காலை
பாதிவரை தேய்ந்த படிக்கல்லில்
வாசசந்தனம் அரைக்கும்
பாட்டி ஞாபகம் ,

.........................................................

புயல்
வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு

............................................................

ஒரு
திருக்கார்த்திகை
விளக்கீட்டுநாள்
தட்செயலாகத் தவறிவிழுந்த
பித்தளை சொம்பு
நீர் மொண்டு அமிழ்ந்துவிடும் ,

மனஅழுத்த நாட்களோடு
போராடிக்கொண்டு
தோய்கல்லில
யோசித்து உட்கார்ந்திருந்த
பெரியக்காவின்
உயிரோடிருந்த வருடங்கள்
ஞாபகத்திலேறிவரும் !

...............................................................

உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..

.....................................................

பார்த்திங்களா
மழை
அள்ளிக்கொட்டிப்போட்டு
தவறவிட்ட எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கி எடுத்ததால்
நினைவுகள்
தாழ்வாரங்களில்
சொட்ட
நேற்று
ஒருநாள் மட்டும்
எங்கள் வீட்டுக்
கட்டுக்கிணற்றடியில்
நிறைவாக வாழமுடிந்தது.

..................................................

மலர்களின்
அவல ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.

.................................................................


நிறைமாத மேகத்துக்கு
பிரசவ இடமொதுக்கும்
வானம்,

ஒழித்துப் பிடித்து விளையாடும்
ஒட்டுப்பொட்டு
நட்சத்திரங்கள்.

உருப்பெருக்கிக் கொண்ட
அலைகளின் விளிம்பில்
கடல்

கட்டாக்காலியாக அலைச்சலுறும்
சாம்பல்க் கழுதைகள்
வெளுத்தபாலைப் பிரதியெடுக்கும்
வெள்ளைப் பவுர்ணமி

நிலவு
இப்படியேதான்
கனவில் வந்து உட்காரும்
முடியாத வாசம் !

.....................................................................

மிச்ச ஆயுளையும்
வாழ்ந்துவிடச் சொல்லும்
ஆசைகளோடு
பிரிந்து சென்ற இடங்களுக்கு
மீண்டும் செல்லவேண்டும் !

பிடிப்புக்கள்
நெருங்கி வருகிறதெல்லாம்
எப்பவோ முடிந்த எதற்காகவா ?

இல்லையேல்
யாருமில்லாத யாருக்காகவா ?

இல்லையேல்
பழங்கனவிலிருந்து முழிக்கவா ?.

.............................................................................


கிணற்றைச் சுற்றிக்
இரவாகவும் பகலாகவும் காவல் நின்ற
தலையைக்குணியமறுத்த
இப்பில்இப்பில் மரங்கள்
நினைவுகளில் இலை துளிர்க்கும் ,
சேறையும் பாசியையும்
அள்ளிக்கொண்டு
நாலுமுறை
அடிநெளிந்த தகரவாளி
ஏறிவருவார
கொட்டுத் துலாமரத்தில்
பிரயாசையோடு துளைப்போட்டு
தன்னம்தனியாகக் குடியிருந்த
கரிச்சான் குருவி முன்னுக்குவரும்,

................................................

சொல்லமுடியாத
கதை
எழுதவிரும்பாத
வார்த்தைகள்
தனியாகக்
காற்றில் அசைந்து
யாருக்கு
அர்த்தம் கொடுக்கப்போகுது ?
நடுநிசிக்கு
சற்று முன்னதாக
தொடக்கங்கள்
முடித்துவைக்கப்பட்ட
நாட்களை
மறந்தும் விடமுடியவில்லை !

.............................................................................

மூச்சடங்கிய இருட்டில்
வரலாற்று ஆவணத்தில்வராத
ஒரேயொருவனின்
இலட்சியத்துக்கும்
அவனைத் தவிர்த்த
மற்றெல்லாரின் விருப்பத்துக்கும்
மத்தியில்
நழுவுகிறது
நிஜமான உண்மை.

அசரீரி இடைவெளிகளில்
இன்னொருமுறை
நடந்துபோய்த்
தேடியடைய முடிந்தால்
இன்னொருமுறையும்
வெறுங் கால்கள்
வண்டல் மண்பாதையில்
ஆழப்பதிந்த
காலடிச்சுவடுகளைக்
கண்டுபிடிக்கலாம் !

...........................................................................

ஒரு கணம்
ஆழ்ந்த மௌனம் நிலவிய
அவள் முகத்தில்
வெட்கம் நிரப்பி
கிறுகிறுக்கவைக்கும் புன்னகை,.
சங்கடப்பட்டு நின்ற
உரையாடல்
வாக்கியங்களின் கைகோர்த்து
நீடிக்கும் போலிருக்கிறது .
இது
அவளைப்பொறுத்தவரை
ஆழ்ந்திருக்கும் கனவாயிருக்கலாம்
இது
மகோன்னதமான
என் கொண்டாட்டம் !

.............................................................

மௌனமாய்
பின்விளைவுகளில்
மறையும் நினைவிடங்கள் ,
விரட்டும்
நிரந்தரமற்ற கனவுகளில்
கொடுமைகள் ,
அவற்றைவிட
விரைந்து பின்வாங்கும்
நெகிழ்வான நினைவுகள்,
ஆர்ப்பரிக்கவேண்டிய
நம் காலத்தில்
நமக்குரியவைகளே
உக்கிரமாக
இறந்தகாலமாகிவிடுகின்றன !

................................................................

அலங்காரங்கள்
அனைத்துக்கும் அப்பால்
ஒரு
பூஞ்சோலையின்
துவக்கத்திலும் முடிவிலும்
அப்படியென்னதான்
இருக்கிறது ?
ஒரு
புல்லாங்குழல்
ஊஞ்சலாடிக்கொண்டே
உள்ளிழுக்கும்
இளவேனில்க் காற்றின்
ஓசை நயத்தில்
உங்களைத்
தொலைத்துப் பாருங்கள்,
அப்போது தெரியும் !

.....................................................................

பொருந்தி வாசிக்கும்
கண்களும்
இட்டு நிரப்பும்
செவிகளும்
விருப்பத்துக்குரிய
நிழல் சாய்த்து
அசைகளை உருவாக்கி
அபூர்வமாகவே
ஆழ்மனத்தேவைகளை
ஒப்புக்கொள்கிறது !
ஏனெனில்,
அவற்றுக்கான குரல்
உள்ளத்தில்
எப்போதும் இருப்பதில்லை. !

...........................................................

அவ்வப்போது
தவறான முடிவுகளோடு
அழைத்துச் செல்லும்
அச்சுறுத்தலான
பாதைகளில்க்கூட
விசித்திரமான
சுவாரஸியங்களிருக்கலாம் ,
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
வெகு நேரம்
நீடிக்கும் போலிருக்கிற.
மிகவும் பிடித்தமானது
மிக ஆழமான
ஏதோவொன்றைத்
தேர்வு செய்வதுதான்
கடினம். !

...........................................................
ஊடுருவிச் செல்லும்
எண்ணங்களின்
மாய உள்ளடக்கம் ,

அதன்பின்…
தொடர்நிகழ்வுகளாய்
மீளமுடியாத
அசாதாரண ஒலிகள் ,

தேர்ந்தெடுக்கப்பட்ட
எதையெல்லாமோ நம்புகிற
பயம்கள் ,

சிந்திக்கமுடிந்த
ஓர் கட்டத்தில்
ஆவிகளின் நிழல்கள் போலவே
பிரதிபலிக்கப்படுகிறது
தனியிரவு !