Tuesday 8 May 2018

கிராமத்துக்காற்று.

எழுதக்கூடியவர்கள் ஒரே இடத்தில ஒரே நகரத்தில் இருந்து குப்பை கொட்டுவதில் அதிகம் சுவாரசியங்கள் கிடைப்பதில்லை . அப்படி இருப்பதே குட்டையில் தேங்கிய தண்ணியின் மெல்லிய சலசலப்பு ஏட்படுத்தும் சின்ன அலைகளைத் தவிர வேற ஏதும் நடப்பதில்லை. 

                                             நகரத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள கிராமங்களில் இப்பவும் பறவைகள் பாடுகின்றன, ஊதல்க்   காற்று வீசுகிறது. குதிரைகள் எகிறிக்கொண்டு ஓடுகின்றன , நாட்டுப்புற மொழியில் கோடையின்  வாசனைகள் அதில கவிதைகளும் பறக்கின்றனகலந்திருக்கின்றன .

                                                புதிய நாடு ,,புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய முகங்கள் ,புதிய வாசங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அனுபவம் போல ஏகப்படட புது விசயங்கள் ஒவ்வொரு பொழுதும் கிடைக்குது. பழைய பழகிய பாதைகள் அவை தேக்கி வைத்திருக்கும் நினைவுகள் . கோடையும் உறைபணியும் தந்த பாடங்கள். 

                                                     2017 இல் முகநூலில் எழுதியவைகள் இவைகள். கொஞ்சம் பிரிவின் விளிம்புநிலையில் மீண்டும் சந்தித்த நினைவுகளும் நிறையவே மனதைப் போட்டுக்குழப்பிய நாட்கள் இவைகள்.  அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்,
  

முடிவில் 
வெல்வது பற்றிய 
விருபங்கலேயில்லாததாகி 
மறுபடியும் 
சுதந்திரமான அந்தக் காலத்துக்குள்
போகமுடியுமா ?


முகர்ந்து முத்தமிடுவது போல
வாசனை பார்க்கப்பட்ட
சீட்டுக்கட்டுகள்
கலைத்துப் பிரிக்கப்படுகின்றன,


தலையைக் கோதி
அடங்கமறுக்கும் சுருள்முடியை
பின்தள்ளி விழுத்துகிறாள்
அவள் !,


விசிறிபோல
பரப்பிக்கொண்டு
தலையைக்குனிந்துகொண்டு
விரல்களை நகர்த்துகிறேன் .


மைபூசிய மயில்விழிகளால் 
பச்சை 
மாவிலை தோரணங்களை 
நினைத்துக்கொண்டு  
சிரிக்கிறாள் .

வளவளப்பான சீட்டுகள்
கைமாறிமாறிக்கொண்டே
கருங்காலிக் கண்ணாடி மேசையில்
ஒன்றன்மேலொன்று
மல்யுத்தம் போடுகின்றன !


தோற்றுப்போனதுபோல
பின்வாங்கி
வாழ்க்கை போலத்தான்
கடதாசி விளையாட்டுமென்று
விளையாட்டாகச் சொல்கிறாள்,


என்
எண்ணங்களை துருப்புச்சீட்டாகித்
தூக்கிப்போடுகிறேன்,
சட்டென்று வாசித்து 

சொண்டை நெளித்தாள்,

ரம்மியமான
பொழுதொன்றைச் சிதைக்கும்
இரகசியத்திட்டத்தை
ஒத்திகை பார்க்கும்
ஓரங்கநாடகம் போலிருந்தது

அதன்பின்னான மவுனம்,
கம்பீர ராஜா
காதல்ராணி உட்பட
எல்லாப் பெறுமதியான சீட்டுகளும்
அவளிடமேதான்
அடைக்கலமாகிக்கொண்டிருந்தன,


அட சொல்ல மறந்திட்டேனே
சூதாட்டத் தொடக்கத்தில்
எனக்கே எனக்காக வந்த சேர்ந்த
முதல்ச் சீட்டே ஜோக்கர்தான் !


.....................................................................


நேர்த்தியாக 
வரிசைக்கிரமம் தவராத
புத்தக அலுமாரி ,


வெளிக்கதவு முகப்பில் 
புஷ்டியான 
மஜந்தாநிற கிரிசாந்திமப் பூக்கள்,


விசாரணையோடு
புறங்கையை நக்கும்
நாய்க்குட்டிகள் ,

ஜன்னல்த் திரைசசீலைகளில்
மூச்சுமுட்டும்
தீராத லாவண்டர் வாசனை,


ஒரு
திறக்கப்படாத வைன்போத்தல்
ரெண்டு
இடுப்பை நெளிக்கும்
சம்பெயின் கிண்ணங்கள்,


சுவரெல்லாம்
விடுமுறையில் எடுக்கப்பட்ட
உலாப்போகும் நிழல்ப்படங்கள்.
வரவேற்பு அறையை நிரப்ப
பெருமூச்சுடன்
ஞாபகங்களை எரிக்கும்
கைவிடப்பட்ட காலம் ,


வெளியே
போண்லேதர்மர இலைகளைக்
கிச்சுகிச்சுமுட்டி
அசைத்துவிடும் கிராமத்துக்காற்று,


வருடங்களாகி
விட்டுவிலகிக்கொடுத்து
சிக்கல்கள் இல்லாமல்
பாதைகள் தேர்வுசெய்த
இருமனங்களின் திருமணமுறிவு ,


விதி
அழுத்தி எழுதிய
நேற்றைய நாளொன்றில்
மிக மிக இயல்பாக
ஐந்தடி தள்ளிவைத்த இடைவெளியில்
பழகிய உரையாடலில்
பழக்கமான பார்வைகளில்
பழைய நானும்
பழையபடி அவளும் !


.......................................................................

நகரங்களை விட்டு
ஓடிவந்து
தட்டான்பூச்சிகளோடு
தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும்
கிராமங்களின்
அழகே நிறங்கள்தான் .


அதன் இன்னொரு நளினம்
புற்களின் நுனியைக்
கவிக்கொண்டிருக்கும் பனித்துளிகளின்
அதிகாலை வாசனை ,


அது
எல்லா அவநம்பிக்கைகளையும்
பிடித்து வெளியே தள்ளிவிட
அலாதியாகி
வசதி பார்த்து வாய்ப்புக்கள் தேடாமல்
நட்பாகிவிடும் நெகிழ்ச்சி!


பகலில்
ஒரே மாதிரியான
வெளிப்படையான ஓசைகள்
இரவுகளில்
எப்போதும் மெல்லிய பதற்றம் !


சங்கிலியால் பினைக்கப்பட்ட
அடிமையின் அவலக் குரல் போல
ஏமாற்றத்தில் புலம்பியது போல
முடியாத வார்த்தைகளில் எழுதியது போல
நினைக்கக்கூடாத கற்பனைகள்
கடைசியில் நடந்தது போல
ஒரு
ஏக்கமாகவிருக்கலாம்!


அதுவும்கூட
உண்மையேதான் !


ஆனால்
நாட்குறிப்புப் போலவே
ஒவ்வொருநாளும் எழுதவைத்தது .
அதிலென்
அந்தரங்கமான ஆத்மா
நனைந்துகொண்டேயிருக்க
அட்டகாசமான சம்பவங்கலேயில்லாத
சூனியவெறுமையில்
அடங்கமறுக்கும்
உயிர்
மெல்லவே எழுந்து நடமாடியது. !


..............................................................................


தமிழ்செல்வி 
அவளின் தேனீர்கோப்பையை 
ஆவியடங்கும் 
உள்ளங்கைச் சூட்டை 
இறுக்கி அனைத்துப்பிடித்தபடி
நெருக்கமான ஸ்ரிசமொன்றை
நினைவுபடுத்தி
நீண்ட பெருமூச்சுகள் சிந்தி
எச்சில் நாக்கு தீண்டும்
இங்கிதம் பற்றி எழுதுகிறாள் !


தாண்டவராயன்
மூக்குப்பேணியில்
இலையான்களை விரட்டியபடி
கடை விரலிலும்
சுட்டு விரலிலும் கசியும்
நாட்டுச்சக்கரையை
அப்பப்ப சொண்டில இழுத்துவிட்டு
அவுக்குஅவுக்கெண்டு
சொப்பன சப்பணத்தில் குந்தியிருந்து
ஆறிப்போய்க் கசப்பதிகமான
தேத்தண்ணியை
மொண்டுகொண்டிருக்கிறான் !


தமிழ்செல்வி
அவளின் தேனீர்கோப்பை
மேலைநாகரீகமாக
" டப்பிளின்தெரு கோப்பிக்கடை "
ஆங்கிலக் கவிதையிலிருந்து
உருமறைப்பில் 

உருவியது போலிருந்தது !

தாண்டவராயன்
நம்ம நாட்டு ஆள்
அவனின் சிந்தனையில் எதுவுமில்லை
அடுத்த நேரக் கூலி வேலைக்குத்
தயாராவதைத்தவிர !


.........................................................................


கண்ணாடி ஜன்னலின் 
இந்தப்பக்கம் 
காலப்பிசகுகளின் இடைவெளியில் 
கூரான ஆணிகள் 
மன்டைக்குள் இறுங்குவது போல 
நான் !


எதையெல்லாமோ
நிரூபித்துவிடுவதுபோலவே
துறுதுறுவென்று துருவிக்கொண்டு
அந்தப்பக்கம்
மழை !


வெண்மஞ்சளாகப்
புளியமிலை அவிச்சநிறத்தில்
துளிகளை நெருக்கிக்கொண்டு
கோடைப்புழுதியில் உள்ளிறங்க
மாதவிலக்கு
வாசனை வேற,!


இது
எத்தனையாவது மழையென்று
நினைவெடுத்துச் சொல்ல முடியவில்லை ,

மலைப்பாம்புபோல
சாலை மருகிரண்டிலும்
வெள்ளம் நெளியுது !


என்
களங்கப்படுத்தப்பட்ட நிலைமைக்கு
நானே
ஏகோபித்த
காரணமாயிருப்பது
எரிச்சலூட்டிக்கொண்டிருந்தாலும்
மழையை
வெறுக்கும் முடிவை
நினைக்க முடியவில்லை !


.....................................................................


பழக்கமான அந்தப் 
பரதேசிப் பிசாசின் 
தந்திரமான சமையலை 
மண்டியிட்டபடியிருந்து சுவைக்கும்படியான 
சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது! 

அச்சுறுத்தும்படியான மேசையில்
பழுதுபட்ட பித்தளைப்பாத்திரம்
அதனுள்ளே எதுவுமேயில்லை !


பிசாசு
ஏற்கனவே சொன்னபடி
அடுப்புப் பத்தவைக்குமுன்
என்
கண்களைக் கட்டிவிட்டது !

பிசாசின் பேய்த்தனங்கள்
எனக்கெப்பவுமே 

அத்துப்படியானவைதானே !

பிறகு
கொஞ்சம் தூரத்தில்
ஒரு அலுமினியப் பானை
துலாவப்படும் மெல்லிய ஓசை ,

அதன் பிறகு
ஒரு மண்குடம் அடிவரை 

துலாவப்பட்டது,

அதன் பிறகும்
ஒரு வெள்ளிப்பானை

வழிக்கப்பட்டது !
நான்
ஓசைகளோடு உன்னிப்பாகவிருந்தேன் !


பிசாசு
ஆணவத்தோட அடையாளமாகி
உட்சாகக் குரலெடுத்து
பித்தளைப்பாத்திரத்தை
நொண்டிக்கையால் கிண்டியெடுத்த
திரிசூலக் கரண்டியை
உள்ளங்கையில் வைத்தது!


சும்மா சொல்லக்கூடாது
அறுசுவை நளபாகம் தான்!


அதன் பின்
எப்போதும் பிசாசின் முதுகுசொறியும்
முப்பது பேர் வந்து சுவைத்து
தேசிய அளவில்
பிசாசுக்கு முதலிடம் 

பிரகடனப்படுத்தினார்கள் !

பிசாசு
உலகளாவிய அளவிலும்
சமைக்கப் போகும்
ஒப்புகையில் மங்கிப்போன நாளுக்கும்
என்னை வரச்சொல்லியிருக்கு !


அன்றைக்கு
என்
கண்களைக் கட்டுவது மட்டுமில்லை
என்
காதுகளை அடைப்பதையும்
பிசாசு மறவாதிருக்கட்டும் !


................................................................................

தோய்த்த துணிகள் 
கச்சான்காற்றிலாடுவது போலவே 
வெள்ளைக்கொடிகள் !


உத்தியோகபூர்வ 
இறுதிமரியாதைகள் 
புறக்கணிக்கப்பட்ட 
ஒரு
விருப்பமில்லா நாள் !


பிரபலமான பெயரையோ
தாண்டமுடியாத சாதனைகளையோ
உறுதிசெய்யமுடியாமல்ப்போன
மனிதன் !


அவனின் அகாலமரணத்தோடு
எப்படியெல்லாம்
அருகில் வந்து உடன்படுகிறீர்கள் ?


கீழ்வானம் போல சிவத்துப்போன
அவன் மனைவியின்
சந்தேகமற்ற கண்களில்
பிரசவவலிபோலக் கண்ணீர் !


மரணச்சடங்கின்
இடைநிலை ஸ்திதியில்
மவுனமான அஞ்சலிகள்
சிலநொடித் தோற்றமயக்கத்தில்
எதிர்காலமென்பதை நிராகரித்து
நிகழ்காலமாகி
மீண்டும் இறந்தகாலமாகிவிட்டது!


இப்போது அவன்
கல்லறையைச் சுற்றி வரவும்
சாவின் விழிம்பைத்
பிரியமறுப்பதுபோல
அம்புரோசியோ மலர்கள்
சடைச்சுப் பூத்திருக்கின்றன 1


அதனால்
அந்தநாளை
நினைக்கும்போது
வலிக்கிறதாலோ தெரியவில்லை
வலிக்கும்போதும்
நினைக்கத்தோன்றுகிறது !


.........................................................................

குதிரைகள்
சடையைக்கிளப்பி
முந்தின பிறவியொன்றின்
எஞ்சிப்போன வேகங்களை
மெலிந்த மூட்டுக்கால்களில் 
மீட்டு எடுத்துக்கொண்டு பாய்கின்றன !


பந்தயம் கட்டியவர்களின்
பேரவையில்
பார்வைக்கு எட்டியவரையில்
வெற்றிமமதை ! .


சிலர்
கைகளைப் பினைகிறார்கள் !
கோரைப்புட்கள் போன்ற
பொன்மேனி ரோமத்தில்
வியர்வை வீழ்ந்துகொண்டு பிரகாசிக்குது !


ஒரு
பார்வையாளனாக எனக்கு
மிரளாமல்
பின்னம் காலில் எம்பிக் குதித்த
குதிரைகள் ஓடிப்போன
தடத்தின் நீளத்தையும்
வளைவுகளையும் பார்க்கும்போது
மட்டமான
சூதுவிளையாட்டுப்போல
அனுமானிக்கமுடியவில்லை !


கெண்டைச் தசைகள்
களைத்துப்போன
குதிரைகளின் வாய்நுரையில்
இன்னும் கொஞ்சம் உயிர்மிச்சமிருக்கு !


மற்றப்படி
யார் எல்லாம் வென்றது
யாரெல்லாம் தோற்றது என்பதுபற்றி
பந்தயக்குதிரைகள்
அலட்டிக்கொள்வதில்லை !


.......................................................................

அவ்வளவு
ஆத்மநெருக்கமான
மரணம் போன்ற அமைதி,


ஒரு வாகனம்
உறுமிக்கொண்டு போகும்
இரைச்சலான நேரநிறுத்தங்களில்
எத்தனிப்போடு மொத்தமாக
காற்றின் வேகத்தில்
ஒரு
கனதியான கதையைத்தான்
இரைமீட்டுக்கொண்டிருந்தேன்!


கை வீசிக்கொண்டு
மனிதர்களே இல்லாத இடத்தில்தான்
மனதோடு
உரத்துப் பேசமுடிகிறது !


முடிச்சவிழக்கூடிய
திருப்பங்களோடு
ஜவ்வாது பூசிய
பளிச்சென்ற சுகந்தங்களோடு
புல்வெளிகள் ,


நிசப்தத்தை
உத்தரவாதமாகக்
கதையாக்குவதென்ற
நிச்சயப்படுத்தலோடு
கதாசிரியனாகிக்கொண்டிருந்தேன் ,


இந்தத் தொலைதூரக்கிராமம்
என்னிடமிப்போது
வேறென்ன எதிர்ப்பார்க்கமுடியும் ?


ரெண்டு சோடி
இளமான்கள் பரந்தவெளியைப்
பதட்டத்தோடு பாய்ந்து கடந்தன 

அவளவுதான்,
கதை அந்தக் கணம்
சொற்பவார்த்தைப் பொழிவுகளோடு
கவிதையாகிவிட்டது !


..............................................................


அகலமான 
தொடக்கம் போலத்தான் 
நெடுஞ்சாலையோடு 
கைகொடுத்து இணைந்துகொள்ளும் 
முடிவும் ! 

எப்போதாவது தான்
தனிமைக்குள்ளிருந்து
வெளியே எடுத்து விடப்பட்டதால்
பிரசன்னமாகும் ஒருவர் ,

அல்லது
தவிர்க்கமுடியாத கேள்விகளோடு
ஓரங்களில்
தடம்புரண்டு நடக்குமொருத்தி,

அல்லது
பறத்தலுக்கும்
இருத்தலுக்குமிடையிலான
அந்நியத்தை
பெரிய வானத்தால் நிரப்பும்
ஒரு தவிட்டுக்குருவி ,

அல்லது
எல்லை வரையறைகளில்லாப்
பெருவெளிக்குப் பின்னால்
பறித்துக்கொள்ளமுடியாத
சுதந்திரத்தில்
பாதைகடக்கும் மான்கள் ,

அல்லது
கண்களைப் பொத்திக்கொள்ளவைக்கும்
ஜூன்மாத வெய்யிலுகேயுரித்தான
பகல் வெளிச்சம் ,

அல்லது
உறுதியற்ற கனவுகளின் மீது
இழுத்துப்போர்த்தப்பட்டிருக்கும்
அழுக்கான இருட்டு,

அல்லது
வெற்றிடத்தில் அடிமையாகி
இலட்சியங்கள் இழந்துபோன
மவுனம் ,
¨

இந்தப்பாதையின்
இப்போதைய சாத்தியங்கள்
இவளவும்தான் !