Tuesday, 31 March 2015

சின்னக் குமிழிகளில் பிடிவாதங்களை...

அஞ்சு 
சதத்துக்குப் 
பிரயோசனமில்லாத
முட்டாள்த்தனமும் 
இதயத்தை 
இறுக்கிப் பிடிக்கும்
வறட்டுக் கவுரவமும்
ஒன்றுமேயில்லாத
சுய பெருமையும்
பெரிய
வட்டமாகி
அதிகம்
துன்புறுத்தி
மனதை அழுத்தும்
நாட்களில்
நிமிடங்களில்
உடைந்து போகும்
சின்னக் குமிழிகளில்
பிடிவாதங்களை
விரும்பியே
விட்டுக் கொடுக்கும்
குழந்தை மனதை
இப்போதும்
நினைக்கையில்
சுகமாயிருக்கிறது.
.


30.03.15

வடதுருவ உல்லாசம் ..

பிரமாண்டத் 
தனிமையின் 
துணையை அனுசரித்து 
துருவக் 
கரடிகளும் 
உறைபனி
ஓநாய்களும்
இரை தேடிச் சென்ற
வழித் தடங்களை
விசாரித்து விலத்தி
திசையறி கருவி
பிரித்துக் காட்டிய
சுழற்சியில்
பாதைக் குறிப்புகளும்
வரை படங்களும்
பிரயாண முகவர்களுமில்லாத
பயணத்தில்
நண்பர்களோடு
நடந்தே கடந்து
தொலைந்து போனதை
எழுதிவைத்து
மறுபடியும்
நினைத்துப் பார்த்து
ரசிக்கத் தொடங்கி
பழைய
பரிமாணத்திற்குள்
பிரவேசிக்க
எந்த அடிக் குறிப்பும்
தேவை இல்லை.
.


.31.03.15