Thursday, 21 April 2016

சிவலிங்கப் பூ..

யாழ்பாணத்தில சின்னவயசில சிவலிங்கப்பூ என்ற ஒரு பூவை அறிந்த நினைவு இருக்கு,அந்தப் பூ எல்லாப் பூப் போலவும் அதன் இதழ்கள் நாலு பக்கமும் மலர்ந்து சமச்சீராக விரியாமல், வேறு ஒரு வடிவத்தில் கொஞ்சம் சுருண்டு, அதன் கடினமான ஒரே ஒரு இதழ் பக்கவாட்டில் கணவனுடன் கோவித்த மனைவி ஒருக்களித்துப் படுத்த மாதிரி இருக்கும். அது மற்ற எல்லாப் பூக்களின் அடிப்படையான வடிவத்தில் இருந்து வேறுபடவைத்தது
                                               அதைவிட வளைந்த அந்த கடின இதழின் நிழலில்,ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் , அதன் நடுவில் வண்டுகள் வந்து லான்ட் பண்ணும் இடத்தில் சடைமுளைகள் போல மகரந்த மணிகள் பெருவாரிய இருக்க, காதில பூ செருகின மாதிரி இரண்டு பக்கமும் மஞ்சள் நிறத்தில் புசு புசு எண்டு பஞ்சு போன்ற மிக மிக மெல்லிய இதழ்கள் குஞ்சமாக் வெளித்தள்ள்ளிக் கொண்டிருக்கும் .
                                                    சிவலிங்கப்பூ என்ற அந்தப் பூ கிடைக்கும் போதெல்லாம் சிவபெருமானே கிடைத்த மாதிரி சாமி அறையில் கொண்டுவந்து வைக்க வீடு முழுவதும் அதன் வாசம் சாம்பிராணிப் புகை போட்ட மாதிரி வீசும், இங்கே நான் இனிச் சொல்லப்போறது அந்த பூ , அரும்பாகி ,மொட்டாகி, மலராகி மலர்ந்த அந்த மரத்தின் வரலாற்று, தேசிய முக்கியத்துவம்......
                                                 உலகம் எல்லாம் உள்ள நாடுகளில் உள்ள மாதிரி, இலங்கைத் திருமணி நாட்டிலும், மன்னிக்கவும் அந்த நாட்டை இப்படி எழுப்பமாகச் சொல்வதுக்கு, மரங்களோடு மரமா ஒரு தேசிய மரம் இருக்கு. அது என்ன எண்டு அண்மையில் நாகதீபம் தங்கசியின் பதிவில் படித்த போது, அது நாகமரம் எண்டு எழுதி இருந்தா,
                                                    இலங்கைக்கு தேசிய மரம்,தேசிய பறவை,தேசிய கீதம், தேசிய சமயம் ,இவைகளுடன் தேசிய இனம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். இலங்கையின் தேசிய கீதம் கொஞ்சம் நாங்கள் சின்ன வயசில் பள்ளியில் காலையில் " நமோ நமோ தாயே ,ஸ்ரீலங்கா மாதா... "எண்டு உளறிக்கொட்டியதால் கொஞ்சம் பிரபலம்,
                                           ஆனால் இலங்கையின் தேசிய இனம்.தேசிய சமயம் பிரபலமான அளவுக்கு, தேசிய மரம்,தேசிய பறவை பிரபலம் ஆகவில்லை, பெரும்பான்மையான சிங்கள தேசிய இனத்தை அந்த புண்ணியவான்களே,சிறுபான்மை இனங்களை மரங்கள் ஆக்கி ,வேண்டிய அளவு அட்டகாசம் செய்து கொஞ்சம் உலக அளவில் பிரபலம் ஆக்கியிருக்குறார்கள்.
                                                            அந்த தீவின் தேசிய மரம் நாக மரம்.ஈரவலயக் காடுகளில் வளரும் பெரிய மரம் . அதை தேசிய மரம் எண்டு 1986 இல் தான் நிர்ணயித்து இருக்குறார்கள். அதுவும் புத்தபிக்குகள் சொன்ன அட்வைசில் தான் அப்படி சட்டரீதியாக ஆக்கினார்கள் எண்டு அறியும் போது அந்த தேசிய இனம் இன்னுமொரு அட்டகாசம் சத்தம் இல்லாமல் சயின்ஸ்ல செய்து இருக்குறார்கள்..
                                                     " Mesua Ferrea " தான் நாக மரத்தின் லத்தின் விஞ்ஞான தாவரவியல் பெயர் எண்டு சொல்லுறார்கள், இலங்கையில் ஈரவலயக் காடுகள் அதிகமுள்ள , பருவமழை அதிகம் பெய்யும் ,பழைய சிங்கள பவுத்த விகாரைகள் , சிங்கள மன்னர்களின் ராஜதானிகள் இருந்த கலாசார முக்கோண வலயத்தில் உள்ள தம்புள்ளையில் இது அதிகம் இருக்கு என்கிறார்கள்,
                                              புத்த பெருமான் முதல் முறை இலங்கைக்கு வந்த போது,வேலை மினகெட்டு இந்த மரத்தை நாட்டினாராம்,அப்புறம் அவரின் சமயத்தை இந்தியாவில் அழியும் போது, தலையில் தூக்கிக் கொண்டு இலங்கைக்கு கொண்டு வந்து தம்பபன்னியில் இறங்கிய சங்கமித்தை அந்த மரத்தை வழிபட, பிக்குகள் இந்த வரலாற்றை பிடிச்சு இப்ப நாக மரம் தேசிய மரம் ஆக்கிவைத்திருகிறார்கள்
                                                        இந்த மரத்தை வெட்டுவது புத்தசாசனத்துக்கு எதிரானது எண்டு சொல்லி,சட்டம் வேறு இருக்குதாம் என்கிறார்கள் . சில நேரம் யாரவது தமிழர் இந்த மரம் என்ன மரம் எண்டு தெரியாமல் அவசரத்துக்கு இதன் அருகில் மறைந்து நிண்டு மூத்திரம் பெஞ்சால்,பிடிச்சு பயங்கரவாத சட்டதில உள்ளுக்கு போடவும் புத்த சாசன சட்டத்தில் வழி இருக்கலாம் போலிருக்கு .
                                                          நாக மரம் தான் சிவலிங்கப் பூ மரமும் என்கிறார்கள் ,ஊரில எங்களின் அயலில்,செட்டி தெருவில் இருந்த ஒரு வீட்டை சிவலிங்கபூ வீடு எண்டு சொல்லுவார்கள். அந்த வீட்டின் சுவர் ஓரமா இந்த மரம் நிண்டு அதன் சிவலிங்கப் பூக்கள் சில நேரம் வீதியில் விழுந்து கிடக்கும் ,சிவலிங்கப் பூ எண்டு பெயர் இருந்தாலும் அது, ஆட்டுக் கல்லுப் போல இருக்கும் சிவன் கோவில் சிவலிங்கம் போல இருக்காது,
                                                     கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தல் சில நேரம் சிவலிங்கம் போல இருக்கும், அந்தப் பூவை மரத்தில் இருந்து பிடிங்கினால் சிவபெருமான் கோவித்து கொள்வார் எண்டும் சொன்னார்கள் அந்த நாட்களில். சிவலிங்கப் பூ இருந்த வீட்டு மதில் சுவர்கள் மிகவும் உயரமா இருந்து, ஒருவேளை சிவலிங்கப்பூ போல அழகான பெண்கள் அந்த வீட்டில இருந்தும் இருக்கலாம்,,,சிவபெருமானுக்கே வெளிச்சம்,
                                                     யாழ் சுப்பிரமணியம் பூங்கா ஒரு காலத்தில் பூங்கா போல ரம்மியமா இருந்த காலத்தில் அங்கே அந்த பூங்காவின் நடுவில் இந்த மரம் இருந்து சாமத்தியப்பட்ட பருவப் பெண்ணின் ஜவ்வன நளினங்களுடன் வஞ்சகம் இல்லாமல் பூத்துக்குலுங்கிய நினைவு இருக்கு. அந்த மரத்தில் பூ அதிகம் உள்ள நேரத்தில் ஒரு வித மயக்கும் வாசம் வரும், அந்த மரத்தில நாக பாம்பு இருக்கும் எண்டும், அந்தப் பாம்பின் கொட்டாவி வாசம் அது எண்டும் சிலர் சொன்னார்கள்,
                                                    பாம்பு இருந்தா யாரும் அந்த பூக்களைப் பறிக்க மாட்டார்கள் என்ற ஐடியாவில் அப்படி புரளி விட்டார்களா தெரியலை, ஆனால் நிறையக் காதலர்கள் அந்த மரத்துக்கு அருகில் ஒளிஞ்சு மறஞ்சு இருந்து கொண்டு காதல் செய்ததை நான் பார்த்திருக்றேன் சில நேரம் அந்த மரத்தில இருந்த நாகபாம்பும் பார்த்துக்கொண்டு இருந்து அதன் இயலாமையை நினைத்துக் கொட்டாவி விட்டு இருக்கலாம்,......
.
ஒஸ்லோ
21.04.14