Saturday 5 September 2015

சாந்தன் மாஸ்டர்..

யாழ்பாணத்தில சின்ன வயசில், கிட்டாரை ஒழுங்கா முழங்காலில் வைத்து, அதை இடுப்பில முண்டு கொடுத்து, கைக் குழந்தை போல அதை விளாமல் பிடித்துக் கொண்டு, தாறு மாறா கம்பிகளை மைக்கள் ஜாக்சன் ரேஞ்சுக்கு அறுத்து எறியிற மாதிரி தட்ட தொடங்க, அதை பொறுமையா, முறைப்படி வாசிக்க கற்றுத் தந்தவர், திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசித்த, கிட்டார் மாஸ்டர் அனுக்கிரக விநாயக மூர்த்தி சிவனுசாந்தன் என்ற சாந்தன் மாஸ்டர். 

                                                     யாழ் பல்கலைக்கழக வின்ஞானப் பட்டதாரியான அவர் யாழ் பரியோவான் கல்லூரியில் அட்வான்ஸ் லெவல் பிசிக்ஸ் ஆசிரியரா இருந்தார்,அவரோட மூத்த மகளின் பெயரான அபர்ணாவின் பெயரை வைத்து உருவாக்கிய " அபர்ணாலயா " என்ற இசைக் குழுவையும் சில வருடம் நடத்தினார்.

                                             நான் அவரிடம் கிட்டார் படித்தது கொஞ்சம் சொந்தமாக நோன்டத் தொடங்கும் நேரம் என்னை அந்த இசைக்குழுவில் " பேஸ் கிடாரிஸ்ட்" ஆக ரிஸ்க் எடுத்து ஒரு நம்பிக்கையில் வைத்து இருந்தார், நான் அவர் நம்பிக்கை பொய்த்துப் போகாத மாதிரி " பேஸ் கிட்டார் " வாசித்தேன் எண்டு தான் கொஞ்சம் தன்னும் இசைஅறிவு இல்லாத பல நண்பர்கள் என்னைப் புகழ்ந்தார்கள் அந்த நாட்களில்.

                                நானும் என்னோட நண்பர்கள் சயந்தன் என்ற சயந்தநாதன்  , ஜெனாத் என்ற ஜெனகன் மூன்று பேரும் கிடாரிஸ்ட் ஆகியே வேண்டும் என்ற ஒரு கொலை வெறியில பழகினோம், ஆனாலும் என் நண்பர்கள் வேலை,படிப்பு காரணமா அதை இடையில் விட நான் கிட்டார் வாசித்தால் பெட்டைகள் மயங்குவார்கள் என்று ஒரு பரவலான வதந்தி அந்த நாட்களில் ஊருக்குள்ள உலாவியதால் ,வேற வழி இல்லாமல் இயன்றவரை அதைப் பழகினேன்,


                                  பின் நாட்களில் என் இளையநிலா பாடலின் இசையில் மயங்கிய, என்னோட கிட்டார் வாத்தியத்தின் வடிவில கண் வைத்த, கிட்டார் கம்பிகளின் நளின நாதத்தில் சுருண்ட பெண்கள் , மறந்தும் என் அழகை ஏறெடுத்தும் பார்கவில்லை. அப்படி எனக்கு நடக்காததால் அது உண்மையில் ஒரு வதந்தியா தான் இருக்கவேண்டும் ,எப்படியோ என் கிட்டார் வாசிப்பைப் பார்த்த பல பெண்கள் குரங்கின் கையில குங்குமப்பூவைக் கொடுத்த மாதிரி பார்த்ததுதான்   அதிகம் நினைவு இருக்கு  .

                                       சாந்தன் மாஸ்டர் அன்பானவர், அடக்கமானவர், அமைதியானவர் ,ஒவ்வொரு நாள்க் காலையிலும் ஒரு மணித்தியாலம் சொல்லி தருவார், வார விடுமுறை நாட்களில் அதிகமாக அவரும் நாங்களும் சேர்ந்து பாடல்கள் வாசிப்போம் , ரிதம் கிட்டார் வாசிக்கும் நுணுக்கம், பேஸ் கிட்டார் எப்படி விரல்களை வைத்து தாள கதியில் விளையாடுவது போன்ற விசியங்களை, மிக எளிமையான " போர்- போர்- பீட், திரி -திரி -பீட் "என்ற எளிமையான முறையில் நோட்ஸ் எழுதி தந்து சொல்லித்தந்தார்.

                                                 யாழ்பாணத்தில் அந்த நாட்களில் கிட்டார் படிக்க ஒரு குரு இருந்தே ஆகவேண்டும், இப்ப போல " இன்டர்நெட் ஆன்லைன் " குரு வசதி எல்லாம் இருக்கவில்லை, ஆனாலும் பல இசை ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் சொல்லி கொடுப்பார்கள்,அதுக்கு மிஞ்சி சிஸ்சனுக்கு சொல்லிக் கொடுத்தா குருவை மிஞ்சி, கடைசியில் துரோணர் போல கட்டை விரலை வெட்டித் தர சொல்லும் ஒரு நிலைமை இருந்தாலும் ,சாந்தன் மாஸ்டர் அப்படி ஒரு மனநிலை இருக்கவே இல்லை. 


                                   அது இன்றைக்கு இசைத் துறையில் இருக்கும் பலரின் ஈகோ ,பொறாமை போன்ற குழறுபடிகளை நினைக்கும் போது அவர் ஒரு வித " எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் " என்ற மனநிலையில் இருந்து சொல்லி தந்தது ஆச்சரியமா இருக்கு.

                                                அந்த நாட்களில் " வெஸ்டர்ன் கிட்டார் இசை " பற்றிய குறிப்பு உள்ள புத்தகங்கள் ஆங்கிலத்தில் வேறு இருந்ததால், ஆங்கிலம் வாசிப்பது வேப்பெண்ணெய் குடிக்கிறதுக்கு சமன் போல இருந்ததால்,சும்மா அந்தப் புத்தகங்களை படம் பார்த்து வெளிநாட்டு " ராக் அண்ட் ரோல் " இசைக் குழுக்கள் போல மாசக்கனகில் தோய்க்காத இறுக்கமான டெனிம் ஜீன்ஸ் உடை, சலூன் பக்கம் போகாத ஹிப்பி தலை மயிர் ஸ்டைல மட்டும் படம் பார்த்து " ராக் அண்ட் ரோல் " கொப்பி அடிக்க முடிந்தது.

                                                     கிடாரை வைத்து உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக் குழுவின் " insider story of Beatels " என்ற ஒரு புத்தகம் யாழ் முனிசிபல் லைபிறேரியில் இருந்தது, யாழ்பாணத்தில அந்த ஜார்ஜ் ஹரிசன் ,ஜோன் லெனன் ,போல் மக்ட்னி என்பவர்கள் கிடார் வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் . 


                                      எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் என்னோட பெரிய அண்ணனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுத்து இருந்தார் அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது.,

                                               " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது. அதில் வாசித்த கிட்டார் இசைக்கலைஞர்கள் வாழ்க்கை வெறுத்த தேவதாஸ் சாயல் போலவே தாடி ,மீசை ஹிப்பி ஸ்டைலில் ,சாப்பாட்டுக்கும் வழி இல்லாதவர்கள் போல இருந்த அந்த இசைக்குழு கலைஞ்சர்களின் படத்தை நான் எங்கள் வீட்டு அறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து ,கொஞ்சநாள் அதை எப்பவும் பார்த்து கொண்டே இருப்பேன், அம்மா வந்து


                                                  " என்னத்துக்கடா இந்த பரதேசி போல இருக்குரவங்களின் படத்தை இங்கே ஒட்டி வைத்து இருக்குறாய். மூதேவி வீட்டுக்க வரப் போறா " 

                                            எண்டு சண்டை பிடிப்பா.

                                                    சாந்தன் மாஸ்டரின் இசைக்குழுவில் " Bass "கிடார் வாசித்த போது, நீண்ட தாடி, நீண்ட தலைமயிர் வளர்த்து ராப்பிச்சைகாரன் போலவே மேடையில் வாசித்தேன்! பலர் நேரடியாவே கேட்டார்கள்


                        " உங்களுக்கு என்ன தேவதாஸ் போல காதல்த் தோல்வியா? " என்று, நான் சொன்னேன் 

                                   " பீடில்ஸ் ஜார்ஜ் ஹரிசன் பாதிப்பு" எண்டு .

                                        இப்ப எப்படியோ தெரியாது , ஆனால் பலருக்கு அந்த கால யாழ்பாணத்தில விளங்கவில்லை நான் என்ன சொல்லுறன் எண்டு ! அதனால ஒரு குத்துமதிப்பா எனக்கு மனநிலை சரி இல்லை எண்டு என் காதுபடவே புரளியக் கிளப்பி , அதையே கொஞ்சம் நாலு பக்கமும், உண்மை போலவே ஊதி விட்டார்கள் !

                                    ஜோசிதுப்போட்டு, அவர்களின் கேள்விக்கு "செல்வசன்னதி முருகனுக்கு நேர்த்திக்கடனுக்கு வளர்கிறேன் " என்றேன்,அதன் பின் பலர் நண்பினார்கள்! இப்படிதான்,தமிழ் கலாசார சூழலில் ஒருவன் தாடி ,மீசை ,தலைமயிர் வளர்க எப்பவுமே வலுவான காரணங்கள் தேவை, இல்லாட்டி முழு விசரன் ஆக்குவார்கள்.

                                           எங்கள் வீட்டில் கடைசி தம்பி புகழ் பெற்ற தபேல ,மிருந்தங்கம் வாசிக்கும் கலைஞணா இருந்தான் , என்னோட அம்மா நான் கிட்டார் வாசிப்பது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பா, அவாவுக்கு என்னில பெரிதா நம்பிக்கையே இல்லாமல் இருந்து இருக்கலாம், ஒரே ஒரு முறை சாந்தன் மாஸ்டரின் " டிக்கெட் ஷோ " ,காலையிலும், மாலையிலும் நடந்த இசை நிகழ்வு யாழ் பல்கலைக் கழக கைலாசபதி மண்டபத்தில் நடந்து, அதில கன விசியம் செய்தோம் ,நானும் சாந்தன் மாஸ்டரும் சிட்டி பாபுவின் " க-ப-த க-ப-த " என்ற வீணை துக்கடாவை வாசித்து அசத்தினோம்,

                                                உலக அதிசயமாக அந்த நிகழ்வின் முதல் பார்வையாளர் வரிசையில் இருந்து என்னோட அம்மா உலக அதிசயமாக என்னை நம்பமுடியாமல் ஆச்சரியாமா பார்த்துக்கொண்டு இருந்தா, நான் உலக அதிசயமாக அம்மாவை நம்பமுடியாமல் ஆச்சரியாமா பார்த்துக்கொண்டு மேடையில் கிட்டார் வாசித்த அதுதான் யாழ்பாணத்தில் என்னோட கடைசி மேடை நிகழ்ச்சி ,பின் யாழ் ரமணன் அண்ணாவின் ராஜன்சில் வன்னியில் ,உலக அதிசயமாக அவர் வாசிக்கும் கிடாரில் ஒரு மேடை நிகழ்சியில் ரிதம் கிட்டார் வாசித்தேன்,,அதுக்குப் பிறகு இலங்கையில் வாசிக்கவே இல்லை........இன்னும் !


                                            நான் உட்பட இப்படிதான் புலம் பெயர்ந்த பலரோட நிலைமை, சாந்தன் மாஸ்டரே எங்கே எண்டு இன்னும் எனக்கு தெரியாது,சில நேரம் இந்தப் போஸ்டிங் ஹெல்ப் பண்ணலாம்,அதாலதான் அவர் பெயர் விபரம் எழுதி இருக்குறேன்..

                                               இன்றைய இனைய உலகத்தில் இசை பற்றி ஆயிரம் பதிவுகள், காலுக்கையும் ,கையுகையும் வெப் பேஜ் , இன்டர்நெட் லிங்க், பேஸ் புக்கு MUSIC குருப் எண்டு நிறைய இசை அமைப்பாளர், இசை அமைத்த விதம், வேறு பல டெக்னிகல் விசியம் கொம்புயூட்டர் எலியை கிளிக் பண்ணி சுண்டினால் நிமிடத்தில் அறியாலாம். இருவத்தி ஐந்து வருடங்களின் முன் அப்படி இல்லை ,வெறுமே பாடல்கள் மட்டும் மொனோ ரேடியோவில தகரப் பேணியில தட்டின மாதிரி நெளிஞ்சு நெளிஞ்சு வரும், அவளவுதான்,

                                                பல வருடங்ககள் பல காரணங்களால் கிட்டார் தொடவே இல்லை,சுவிடனில் என்னோட முன்... மனைவிக்கு நான் கிட்டார் வாசித்தால் பிடிக்காது


                      " என்னைக் கலியாணம் கட்டினாயா ,இல்லை இந்தக் கிடாரைக் கலியாணம் கட்டினாயா " 

                                         எண்டு சண்டை தொடக்குவாள்,

                                    இப்ப சில வருடமா, கிட்டார் இசை ரசிக்கும் என் நட்புக்களை என்ஜாய் பண்ண வைக்க மட்டும் ,புரோபோசனால் போல இல்லாமால் சும்மா வீட்டில கிடாரைப் போட்டு முழக்குவேன்,என் வீட்டின் ஒரு பக்கத்தில் வசிக்கும் மனிதருக்கு காது கேட்காது,மற்றப் பக்கம் ஒரு " .............. புகையை இழுத்து உலக இசை ரசிக்கும் யிப்சி ஜோடி " இருக்கு, அவன்கள் " நல்லா போட்டு முழக்கு நாங்க ஆடுவம் " எண்டு சொல்லுவார்கள், அதால துணிந்து வாசித்து வாசித்து " யூ டுப்பில் " போட்டு அதை பேஸ் புக்கிலும் பகிர்வேன்,.........

                                  அதில் , நான் வாசித்த " Evita " என்று உலககத்தை கலக்கி சக்கைபோடு போட்ட இசை நாடகத்தில வந்த " Don't Cry for Me Argentina " என்ற ஆங்கிலப் பாடல் வீடியோவை, இளையநிலா பாடலுக்கு இளையராஜவுக்கு கிட்டார் வாசித்த மதிப்புக்குரிய திரு. சந்திரசேகர் ரகுநாதன் அவர்கள் கேட்டு ஒரு சின்ன லைக் செய்து இருந்தார், 


                                        அந்த ஒரு சின்ன லைக் எனக்கும் கொஞ்சம் கிட்டார் வாசிக்கும் விசியம் தெரியும் என்ற பெரிய  உற்சாகம் கொஞ்சம் தந்தது , அதிகம் அதன் புகழ் முழுவதும் என்னோட குருநாதர் சாந்தன் மாஸ்டருக்கு கிடைத்த ஒரு விருது எண்டு பெருமைப்படுகிறேன்.,,,

                              ,,,,,.http://youtu.be/CdJBCKXFPGs

.