Saturday 8 September 2018

மழைச்சாரல் போலவே !

ஒரு மொழியில் இலக்கணப்  பிழை இல்லாமல் எழுதவேண்டியது எல்லாவிதமான  கேள்விகளுக்கும்  அப்பால்  கீழ்ப்படிவுடன் பின்பற்றவேண்டிய சட்டதிட்டம்  . அதுவும் தாய்மொழியில் எழுதும் போது  நிச்சயமாக இலக்கணப் பிள்ளைகளோடு எழுதுவதென்பது உண்மையில் ஒரு கனதியான மன்னிக்கமுடியாத குற்றம், அப்படியிருக்க எதுக்காக பிழைகள் வருகுது என்று ஜோசித்துப்பார்த்தால். இன்றைய காலகட்டம் ஒரு முக்கிய காரணமாக இருக்கு.
                  
                                                                     எனக்குள்ள முக்கிய பிரச்சினை  எவ்வளவுதான் தமிழில்  வாசித்தாலும்   தமிழ்மொழி விசித்திரமான   அர்த்தங்களோடு பின்வாங்கிக்கொண்டு இருக்கு . இந்த வாசிப்பு என்பது ஒருவிதமான பரந்தவெளி . சொற்களையும், வாக்கியங்களையும்  பொறுத்தவரையில்  இணையத்தில் எழுதும் தென் இந்திய  எழுத்தாளர்கள் ஒருவிதமான அன்றாடப் பாவனையில் உள்ள பேச்சுமொழியை இலக்கியத் தரம்போல கொஞ்சம் மேலே தூக்கி வைத்த   தமிழில் எழுதுகிறார்கள்.


                                                                               இலங்கைத் தமிழர்கள் இப்பவும் கட்டுப்பெட்டிப்  பண்டிதமணி  இலக்கணம் கொஞ்சம் தானும் பிசகாமல்  ஒருவித கிரந்தமாக  எழுதுகிறார்கள், புலம் பெயர் தமிழர்கள் எந்தவித பொறுப்பும் யாருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல மேலைநாட்டு சுதந்திர வீச்சில்  ஒருவிதமாக எழுதுகிறார்கள், இண்டலெக்சுவல் லெவலில் எழுதுபவர்கள் சமஸ்கிருத சொற்களை தமிழ்ப்போலவே நிறையவே நனைத்து வழியவிடுகிறார்கள்.  


                                                      இவ்வளவும் போதாது என்று மேலைத்தேச பின்நவீனத்துவ, யூன் போல்  ஸாதரிச , மார்க்கோசின்  இருப்புநிலை,  லத்தீனமெரிக்க மாஜிகல்ரியலிச, கொமினிச ,லெனினிச, சோஷலிச ,   இஸங்களை சாம்பிராணி காட்டி  வழிபடும்  மேட்டிமைவாதிகள் இன்னொருவிதமான தமிழில் போட்டு உலுப்பி எடுப்பார்கள்  , வாசிக்க விழி ரெண்டும் பிதுங்கி வெளியவரக் காதுகுள்ளே கிளைமோர் மிதிவெடி முழங்கும் . 


                                                   இவை எல்லாவற்றின் ஒட்டுமொத்தப்பாதிப்பு நிச்சயம் கலந்துகட்டி வாசிக்கும்போது நம்மை அறியாமல்  உள்நுழைந்துவிடுகிறது . இவளத்தையும் தாண்டி கணனி விசைப்பலகையில் எழுதும்போது அது கொஞ்சம் கண் அசந்தாலே  ஒரு எழுத்தை  அதுக்கு விரும்பியபடி போட்டுவைச்சு இன்னொருபக்கம் இழுத்துகொண்டுபோய்விடுகிறது . ஒரு எழுத்து சிலநேரம் அந்த வாக்கியத்தின் ஆதாரமான அர்த்தத்தையே களேபரம் செய்துவிடும் அபாயம் நிறையவே இருக்கு.


                                                            இவளவு சல்ஜாப்பு சொன்னாலும் நான் பிழையாக எழுதுவதுக்கு ஒத்துக்கொள்ளும்படியான காரணம், எனக்கு தமிழ்மொழி அதிகம் பரீட்ச்சயம் இல்லை என்பதுதான்.நானறிய  தமிழ்மொழியை ஒருபொழுதும் ஆர்வமாக மனதுக்குள் உள்ளிறங்கி  நேசித்ததில்லை . அதைவிட தமிழ்மொழி ஒவ்வொருநாளும் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டே போகிறது.  இந்த எழுத்துருக்கள் இந்தவருடம் முகநூலில் எழுதியவைகள். இயன்றளவு எழுத்துப்பிழைகளை திருத்தி  தொகுத்துப் போடுகிறேன் !




*




அவள்
பெரும்பாலும்
நேருக்குநேரராகப் பார்ப்பதில்லை
என்பதாலிருக்கலாம்
அந்தமுகமே

பகலிலும் தெளிவற்றிருந்ததுக்கு !
சமயங்களித்தான்
தயங்கித்தயங்கியே கதைப்பாள் !
முன்னமெல்லாம்
நகங்களைத் தடவுவாள் !
அவளுக்கு மிகவிருப்பமான
மரஅணில்களைப்பற்றி
உரையாடத்தொடங்கும் போதே
பிடியிலிருந்து
வெடுக்கென்று விலகிக்கொள்வதுபோல
விரல்களைத் தொடுவதையே
பின்வாங்குகிறாள் !
ஏதோவொன்றிலிந்து
அவளுக்குள்ளாகவே மெல்ல ஒடுங்குவதை
உணர்ந்துகொண்டேயிருப்பதால்
எங்கோ பார்த்து
ஏதோ ஒரிரு வார்த்தை பேசுகிறாள் !
ஒருகாலத்தில்
கண்சாடையிலேயே
அபிநயங்கள் செய்துகாட்டியவள்
இப்போதெல்லாம்
நிமிர்ந்து பார்ப்பதையே விட்டுவிட்டாள்!





*


சேலையின்
விசிறியிலை மடிப்புகளை
உதறிவிட்டுக் கொண்டிருப்பது போல
மழை பெய்கிறது ,
காற்றோட்டமாக உணரமுடிந்தாலும் ...

புழுக்கம் உண்டாக்கும்
வியர்வை மணமெல்லாம்
உப்பின் வாசம் !
நனைந்த மேல்ச்சட்டையில்
ஈரம் உலர்ந்துகொண்டிருந்ததால்
சில்லென்றிருந்தது
குரல்வளை !
அழுத்தமான குரலில் உறுமுவதுபோல
சூடானைப்புகளை
வெளியேறிக்கொண்டிருக்கிறது
நினைவு மூச்சு !
இந்தமழை
வந்து போனதிலிருந்து
மனது தத்தளித்துக் கொண்டேயிருக்கிறது!



*


விடியல்களில்
வெளிச்சங்கள் எழுந்துவிடுகிறது,
திட்டங்கள் தீட்டப்படாத
விடியல்களில்
இதயத்துடிப்போடு ...

சலிப்புகளும் வந்துவிடுகின்றன ,
முழுக்கமுழுக்க
எனக்குரியவைகளில்
விருப்பமில்லாமல்
என்னுடனே
பயணித்துக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு அதிகாலைப்
பயணங்களும் !



*


அழகான ஏரி
கரைகளைக் கடந்ததும்
வானத்தின் நிறமாக மாறத்துவங்கும்
நிர்மலமான நீரோட்டம் ,
என்னைப்போலவே ...

தயக்கத்தில் நின்றவர்கள்
முகத்தைக் கோணிக்கொண்டு
பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்க
மீதிப்பேர்
ஆடைகளைக் களைந்து
நீச்சலில்க் குதித்தார்கள் ,
மிதமான குளிரில்
வெயில் விளையாட
என்னென்னவோ தோன்றியது,
கால்களை மட்டும்
நனைத்துக்கொண்டு
தலையைத் திருப்பிக்கொண்டேன் !





*


பகல் பொழுதுதான்
நிழல்களை
உணர முடியாத அடர் காடு.
எப்போதாவது
உள்நுழைந்து அலைந்து ...

தொலைந்துபோவேன் .
நேற்றோ
முரட்டுத்தனமான
ஆர்ப்பரிப்புடன்
வரவேற்பதுபோல வீசிய காற்றில்
மஞ்சள் இலைகளை
இதழிதழாகத் தூவும் மரங்கள்;
ஒருவிதமான பதட்டத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்.
தளிர்ப் புதர்களில்
வண்ணக் கோலங்கள்;
காற்றில்ப் பரவும் சாரல்;
தூரத்து
இடி மின்னல் முழக்கம்,
இந்த மாதங்களில்
இத்தனை கலவரமாக இருந்ததில்லை
சென்றவருடம் !



*


மரங்கள் நிரம்பிய
பரந்தவெளிப் பூங்காவனம் ,
அங்குமிங்கும் அலையும்
யாரையும் கண்டுகொள்ளவில்லை
பறவைகள் ! ...

சுற்றியிருந்த நண்பர்களோடு
பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் !
என்ன வருகிறது,
என்ன போகிறதென்று தெரியாமல்
ஒட்டியாடும் குழந்தைகள் ,
யாரையும் உறுத்தாமல்
நடுவில்
பாதிக்கும்மேலாகவே
நிர்வாணமாகவேயிருந்த
இளம்பெண்கள்
வெயில் காய்கிறார்கள் !



*



ஏதோவொரு
சாவகாசமான
கனவின் பின்னணி ,
அல்லது
ஆழத்தில் எதையோ தேடும் ...

வெளிறிய சந்தனமுகம் ,
அல்லது
ஏதோவொன்றின்
தொடுகையை விலக்கமுடியாமலிருக்கும்
தெளிவற்ற அவஸ்தை ,
அல்லது
நினைவின் தொலைவிலிருக்கும்
அந்திமல்லியைப் புன்னகை ,
இதுபோன்ற
ரகளையான சமயங்களித்தான்
தத்துப்பித்தென்று உளறாமலிருக்கத்
திண்டாடவேண்டியிருக்கு !



*


இறுக்கிப் பிடித்தபடி
மடிப்புமடிப்பாகக் கவிந்து
உள்ளும் புறமும்
இயல்பல்லாத நிலை
ஆகாசம் !...

விழுவதைப் பற்றுவதைப் போலவோ
திசைகளை
இழுத்துப் பிடிப்பதைப் போலவோ
மேகங்களை
ஊதித் தள்ளுகிறது
காற்று !
திரைமறைவில்
நீலநிறத்தைத் தொலைத்ததால்
கலங்கிவீங்கியிருக்கும்
நடுநிசி !
மிக இரகசியமாக
கூடவேயிருந்து அலைக்கழிக்கும்
இந்தச் சூதாட்டத்தின் நியதிகளை
வென்றுவிடுகிறது
சிறகுகளை ஒருசேரவிரிக்கும்
இரவுப் பறவை !



*


வழியில்ப் பார்த்த
மீதி எல்லாவற்றிலும்
மழைச்சாரல் போலவே
நினைவுத் திரைகள் ,
சுற்றித்திரிந்த தெருக்களும் ...

பதின்வயது நண்பர்களும் ,
எப்படியாவது
ஊருக்குப் போய்விடவேண்டும் !
வடதுருவ ஐரோப்பிய
நகரத்தின்
உரசல்களிலிருந்து விலகமுடியாதிருப்பது
அயர்ச்சியாக இருந்தபோதும்
இங்கிருந்தே
ஊருக்குச் செல்வத்துக்கு
இத்தனை வழிகள் இருப்பதையே
அப்போதுதான் கண்டேன்.!



*




எனக்கு முடியவில்லை
உண்மைதான்
ஒத்துக்கொள்கிறேன் ,
ஆனாலுமது
நிராகரிக்கப்படுவதால்

ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக
எனக்குள்
ஒருநாளும் தோன்றியதில்லை,
சுறுசுறுப்போடும்
ஆச்சரியமாகவுமிருந்த
வேர்த்து கொட்டும் முகத்தில்
உட்பக்கமாக தேய்ந்த சப்பாத்தோடு
இளையவர்கள்
வேகமாக ஓடிக்கொண்டிருப்பதை
சமாளிக்க வேண்டிய
பார்வையோடு
நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறேன் !





*


ஒன்று
தூக்கமில்லாத
பின்னிரவுகளில்
நேரத்தைக் கடத்துவது
பெரும்பாடாகவே முடிவது !...

இரண்டாவது
நடக்க இருக்கும்
மற்ற வேலைகளும்
நடக்கப்போவதில்லை என்கிற அலுப்பு!
மூன்றாவது
அதன்பின் எப்போதுபோல
துருவ வெள்ளிகள் நகர்ந்துகொள்ள
விடிந்துவிடுகிறது !
இந்த மூன்று
செய்திகளும்
அபத்தமாகவிருந்தாலும்
சுவாரஸ்யமாகத்தானிருக்கு !




*


அது
அவநம்பிக்கைதான் என்கிற
மற்றொரு குரல்
பூனையின் மெல்லிய அழைப்புபோலக்
கேட்டுக்கொடியிருக்கிறது ,...

வெளியே
சொல்ல முடியாத வலிகளை
எப்படி உள் வாங்குகிறாள்
சின்னவள் ?
மாற்றிவிடமுடியாது
ஒவ்வொரு நாளும்
கடந்து செல்கிற
கேள்வி மனதில் இருந்தது!
அதைத் தவிர்க்கவே
வேறு என்னவெல்லாமோ
அவசர வேலைகள் இருப்பதுபோன்ற
பாவனையோடு
அவள்
கண்களைப் பார்ப்பதேயில்லை. !





*


காலத்தோடு
தூக்கிவைக்க முடியாத கால்கள்,
தேய்ந்து போன
பறவையின் கூவல் போலப்
பின்வாங்கும் குரல் ,...

தூண்டிலைப் போல
தோளில் மாட்டியிருக்கும் பையில்
என்ன இருக்கும் ?.
தன்
இரக்கமான பார்வையால்
சொல்ல முடியாதவைகளை எப்படி
வெளிப்படுத்த முடியும் ,?
தள்ளாட்டத்தினால்
கவனத்தை இழக்கும்
முதுமை
தெளிவாகத் தெரிவிக்கின்ற
கொடுமை !
பெரும் சிரமமாகவிருந்தது
அவரைக்
கொஞ்சநேரம் கவனிப்பதே !



'


அதன் முகத்தில்
தயக்கம், கோபம்
அல்லது
வெறுப்போ எதுவும் இல்லை.
அதனாலேயே என்னவோ ...

இருட்டுவதுக்குள்
எல்லா தெருக்களுக்கும்
சென்றுவிடவேண்டுமென்கிற
வேகத்தில்
தடுமாற்றத்தில் சறுக்கி,
தேவையானளவு மென்மையை சேர்த்து,
அடையாளக் குறி வைத்து
உறுதி செய்துகொண்ட
உப்பலாகக் கிடந்த
சில நடைபாதைகளை மட்டுமே
தேர்தெடுத்து
நனைக்கிறது
மழை !.