Wednesday, 5 August 2015

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா !

வாழ்க்கை ஒரு  நீண்ட  முடிவில்லாப் பயணம்  என்கிறார்கள் , அதில  ஏகப்பட்ட விசியங்கள்  குழப்பமாக இருக்கும் . முக்கியமாக  என்னைப்போல குழப்பமான ஆட்களுக்கு  நிட்சயமாகவே  குழப்பமாக  இருக்கும், அதில  என்னவெல்லாம்  பெற்றுக்கொண்டேன் என்பதில்  சொல்லும்படியான சாதனைகள்  இல்லவே  இல்லை. அனுபவங்கள் நிறையவே இருக்கு. ஒரு கற்பனைப் புனைகதை போலவே அதன்  ஒரு  பக்கம்  ஜதார்தமாய் இருக்கலாம். மற்றப் பக்கம் முசுப்பாத்தியாக இருக்கலாம் , இல்லையா,

                                        பல வருடங்களின் முன்  ஸ்வீடனில்  வசித்த போது சில வருடங்கள் , வாழ்கை வெறுத்து தனிமையில் இருந்த காலத்தில் , சந்தோசத்தை வெளியே அன்றாட உலகத்தின் இயல்பில்த்  தேடிப்பிடித்துப் போகாமல், குறுக்கு வழியில்த் தேட முயற்சித்து,  மூடிகளைத் திறந்த மதுப்போத்தல்கள்  முடியும் வரை இருந்த சின்ன சந்தோசம் அவ்வப்போது இருந்தது உண்மை , மிகப்பெரிய  உண்மையாக  என் தோல்வி முகத்துக்கு  முன்னுக்கு நின்றது . 

                                         அந்த மதுப்  போத்தல்களைத் தூர வீசி எறிந்த போது அவைகளுடன்  காற்றில்  மிதந்த இன்பங்கள்  போன அவலத்தில் , மாதன முத்தாவின் மண் பானை ஆட்டிண்ட தலைக்க போன மாதிரி மது  கடைசியில் கழுத்தில கயிறு போட்டு அலங்கோலப்படுத்த , இன்பத்தின் முடிவில்  துன்பமாக , ஒரு வருடம் ," அல்ஹோலிக்ஸ் " என்ற திருந்த முடியாத மடாக்குடியரை திருத்தும் "புனர்வாழ்வு சமூக" அமைப்பில் கவுரவ நோயாளியா /உறுபினரா ,அவர்களுக்கும்   , முடிந்தவரை அவர்கள் தந்த புணர்வாழ்வுகும்  சவாலாக இருந்தேன்!  

                                 அந்த  கவுன்சிலிங்/ குரூப் திரபி என்ற சிக்கிசை கொடுக்க எனக்கு நியமிக்கப்பட்டவள் கத்தரீனா  என்ற ஸ்வீடிஷ் 40 கிலோ தாஜ்மகால் ! அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தாறு மாறா எகிறும் . அவள் அசையாமல் நிண்டாலே அபிராமிப் பட்டர் " இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு..    " என்ற அந்தாதியை அவளை நினைச்சு எழுதின மாதிரி இருப்பாள்.  

                                     அவள் நடந்து திரிந்தால் அதே அபிராமிப்பட்டர் அவளுக்கு பின்னுக்கும் முன்னுக்கும் திரிந்து  "  நடங்கொண்ட கொள்கை நலங் கொண்ட நாயகி , நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே......."  எண்டு எழுதி முடிச்ச மாதிரி அம்சமா இருப்பாள் . கவனக்குறைவாக எதையும்  சொல்லவில்லை , கவனச் சிதறிடிப்புகள்  நிறைய இருந்த  அந்த  இடத்தில  குவிமையம் போல  இருந்தாள் கத்தரீனா .

                           அதை விட அவளே எங்களைப் போல திருந்த முடியாத மடாக்குடிய நிலையில் இருந்து மீண்டு வந்து "புனர்வாழ்வு சைகொலோயி " மாஸ்டர் டிகிரி படித்தவள் ! அதலா அந்த சமூக நிறுவனத்தில் வேலை செய்தாள்.அவளை முதல் முதல் சந்தித்தபோது, நான் இந்திய, இலங்கை  ரெண்டும் கெட்டான் உருளைக்கிளங்கு  நிறத்தில் இருந்ததால் அவள் கொஞ்சம் அதிர்ந்து

                  " ஓ , இண்டேறேச்டிங் , உன்னை சந்திப்பது, நீ இந்தியாவைச்  சேர்ந்தவனா , 

                       "    இல்லைப்பா,,,நான்  இந்தியன் இல்லை "

                         "    என்னோட வாழ்கையை மாற்றிய குருநாதர் சுவாமி பிரபுபாதாவும் இந்தியர் ,"

                            "   அய்யோ  ராமா,,நான்  இந்தியன்  இல்லை  கத்தரீனா "

                            "     அவர் தொடக்கிய ....ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.... அமைப்புதான் என்னை வழி நடத்தி இப்ப இப்படி இருக்கிறேன் "

                         என்றாள்  ,அப்படி அவள் அதிர்ந்து சொன்னதுக்குக் காரணம்  , அவள் "ஹரே ராம, ஹரே கிருஷ்ணா " அமைப்பில் இருந்து, அந்த அமைப்பின் இணைப்புதான் அவளை "மடாக்குடிய நிலையில்"  இருந்து மீண்டவர உதவியதக சொன்னாள்!
                                         
                            " நான் இலங்கையைச் சேர்தவன்,  சுவிடனில் அரசியல் அகதியா  வாழுறேன்,குடியுரிமை கிடைத்த நாளில் இருந்து ,அறம்புறமா குடிக்க உரிமை கிடைத்தால் குடிக்க ஆரம்பித்தேன் ,"

                                "   அப்படியா,,நீங்க  இலங்கை  இந்தியர்  எல்லாரும்  ஒரே  கலரில்  இருப்பதால்  குழப்பமாக  இருக்கே "

                                   "   அய்யோ  ராமா,,நான்  இந்தியன்  இல்லை  கத்தரீனா "

                               "  சரி,,உன்  கதையை  சொல்லு,,என்ன  நடந்தது "

                                    "   சுவுடிஷ்  குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,"

                                   "  அது  உன் முகத்திலையே  நல்லா  தெரியுதே, கண்  ரெண்டும்  உள்ளுக்க  இழுத்து ,கையும்  நடுங்குதே , பை போலர்  சின்றோம் போல தலையை வேற தவரவிடுகிறாய் "

                                         "  சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை  ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள்  " 

                                   "    சரி  வேற  என்ன  பிரசினை  உனக்கு "

                                 " கிளினிக்கல் டிபிரசன் "

                          "  ஒ  அது வேறையா..கொஞ்சம்  தண்ணி தெளிச்ச கேஸ் போல இருக்கே  நிலைமை ,,கிளினிகல் டிபிரசன்  எதுக்கு  வந்தது "

                                  "  செரோடொனின்,,டோப்பமின்  என்  சிஸ்டத்தில்  குறைவு  என்று  சைக்கற்றிஸ்  டாக்கடர்  சொன்னார் "

                                    "  ஹஹஹா,,அஹஹஹா  ,,பார்த்தியா  உன்னோட தோல்விக்கு  நீயே  ஒரு  நல்ல  மெடிக்கல் விளக்கம் கைவசம்  வைச்சு  எடுத்து விடுறாய்,,நீ  சொன்னது  எல்லாம் கிளினிக்கல்  டிபிரசனுக்கு முழுவதும்  காரணம்  இல்லை "

                                  " வேற  என்னதான்  காரணம்  சொல்லுப்பா "

                               "    குடி,,,குடியை  விட  முடியவில்லை,,அதுதான்  காரணம்,,அதை  முதலில்  ஒத்துக்கொள்ளு  அப்பத்தான்  நான்  உதவி  செய்ய  முடியும் "

                              "  ஓம்,,உண்மைதான்  கத்தரீனா ,,அதுதான்  உண்மை "

                                            என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்

                               " ஸ்ரீலங்கா,,,இலங்கை ,,,என்கிறாய் அந்த நாடு  எங்க இருக்கு என்று கேள்வியேபட்டதிலேயே " என்றாள்,

                                அதுக்கு நான்  

                 " இலங்கை தான் ஸ்ரீலங்கா, இந்தியாவின் தென் கோடியில் மாம்பழம் போலத் தொங்கிக்கொண்டு இருக்கும்,நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட  , தமிழர் என்ற ஒரு  சிறுபான்மை இனத்துக்கு நிம்மதி இல்லாத குட்டி தீவு தான் என் தாய்த்திருநாடு " எண்டு சொன்னேன் .

                                    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு பற்றி படித்து முன்னமே இருக்கிறேன். உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன சின்னவயசில்,   சைவசமய முறைப்படி மூன்று தீட்சை சைவாசாரிய  குருவிடம் பெற்றேன்,  ஆனால்  வளர்ந்தபின் ஒரு நாளும் அதுகள் செய்ததில்லை, ஆனாலும் ஆன்மிக விசியங்கள் கொஞ்சம் தெரியும்.  என்னிடம் ஆரம்ப விசாரணை முடித்தபின் ,

               "  உனக்கு PTSD , கிளினிகல் டிபிரசன்  இருக்கே,  அதை விட சொல்லபட்ட  அன்டபுஸ் , மருந்தே உதவி செய்யவில்லை போல இருக்கே ! கொஞ்சம் முத்தின கேஸ் போல இருக்குறியே " எண்டு ஜோசிதுப்போட்டு, அமைதியாக 

                               " எங்கள் ஆசிரமத்தில ,போய் சில வாரம் தங்கி இருந்து ...தியம்பகம் ஜெயாமகே சுகந்திம் புஸ்திவச்தனம் உருவாகுக விசி அமுதாத் தயே..... என்ற மந்திரம் சொல்லி மனதை கட்டுப்படுத்த பல  வழிகள் இருக்கு "

                               " யப்பா  சாமி  இந்த  நாசமாப்போன மந்திரம்  எல்லாம்  எங்கே  நீ  படிச்சாய்,,இதெல்லாம்  எங்க  நாட்டில்  பூசை  செய்யும் பிராமண  ஐயர்மார்தான்  சொல்லுவார்கள்   " 

                                          " தியானம்,சத்சங்கம்,பஜன் ,இவைகளை கற்றுக்கொள்,உனக்கு மனதளவில், பொசிடிவ்வாக எண்ணங்கள் உருவாகும்,நான் இப்படி இப்ப இருப்பதுக்கு அதுதான் உதவி செய்தது"

                       என்று ,அவளோட நண்பிகள் ஆசிரமத்தில் ,பருத்தி சேலை கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கோகுலத்து கோபியர் போல ஆடிப்பாடும் குரூப் போட்டோ காடினாள் ! அவர்களுக்கு நடுவில சில வெள்ளை ஆண்களும் மேளம் போல ஒன்றைத் தோளில கொழுவிக்கொண்டு,குடுமி வைச்சு,பஞ்சகச்சம் போல வேட்டியை ஐயங்கார் ஸ்டைலில் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில்  கோபியரே கோபியரே கோவிந்தன் பெயரைச்சொல்லி ,,,எண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள் .

                           வெள்ளைக்கார  ஸ்வீடிஷ்  பெண்களுக்கு சேலை கட்டினால்  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருக்கும் , அவர்கள் எப்பவுமே ஒல்லியா வெள்ளையும் சொள்ளையுமா இருப்பது சேலைக்கு நல்லா எடுபடும் , அங்கங்கே பார்காட்டியும்  பார்க்காமலே பத்த வைக்கும் அவர்களின் வசீகரம் ஒரு வித ஆன்மிகதை அறிய ஆரம்பிக்கிறவனுக்கு  வைக்கும் முதல் சோதனை போல இருந்தது .அது பார்க்க அழகா மட்டுமில்லை,  நிறய  ஆர்வ கோளாறையும்  கற்பனைகளையும்  கிளப்பிவிடும் ! அதால

                  " இதில உள்ள மாதிரியா,உங்கள் ஆசிரமதிள்ள உள்ள பெண்கள் எல்லாரும் இருப்பார்கள் எண்டு ?"

              கேட்க ,அவள்             

                             "இதில உள்ள மாதிரியா, எண்டு எண்ணத்தைப் பார்த்து சொல்லுறாய்?"

                   எண்டு ,சந்தேகமா என்னோட கண்னுக்குள்ள நேராப் பார்த்துக் கேட்டாள், நான் , சாமாளித்து 

                "படத்தில அவர்கள் முகத்தில ,தெரியுற மாதிரி ,ஆன்மீக  களையுடனையா ,இருப்பார்கள் ?"

                           ,எண்டு கேட்க, சைகொலோயி " மாஸ்டர் டிகிரி" படித்த அவள் சிரிச்சுப்போட்டு,

                          " முதலில்,ஆசிரமம் போ, முதலில் கெட்ட சிந்தனைகள் அறவே வராது !"

                           எண்டு அழுத்தம் கொடுத்து என்னோட மனசாட்சிக்கு சொன்னதுபோல சொன்னாள் !

                                     நான் அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் நான் என்னமோ ஆன்மிகம் பற்றி தீவிரமா ஜோசிகுரன் எண்டு நினைச்சு

                                  " நீ எப்பவாது தியானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறாயா, தியானம் எவளவு முக்கியமான விடயம் எண்டு இந்தியர்கள் தான் ஆயிரம் வருடம் முன்னமே கண்டு பிடித்துள்ளார்கள்,..." 

                                     என்று சொன்னாள், நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                         " முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என இந்திய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய்  த்யான நிர்விஷ்யம் மனஹ  என்கிறார்கள், 

                                "கிழிஞ்சுது  ரம்பாவின்  லுங்கி, ,,நீ சொல்லுறதைக்  கேட்க  மண்டை  விறைக்குது  இதுக்கு  என்ன  அர்த்தம்  தாயே   " 

                                         " அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும். என்று எங்கள் குரு நாதர் பிரபுபாதா சுவாமிகள் மெடிடேசன் வேய் ஒப் லைப் புத்தகத்தில் எழுதியுள்ளார் " என்றாள்  
                                                  
                                                        நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு அவளைப்  பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                             " சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய சாதனா எனப்படும் யந்திர,தந்திர,மந்திர சாஸ்த்திரங்களில் சொல்லி  இருக்கிறார்கள்  "  

                                 "   இவளவு தானா  இல்லை  இன்னும்  இருக்கா "

                                "   ஏன்  உனக்கு  இப்ப  என்ன  "

                                 "இல்லை,,இப்பவே  எனக்கு அரைவாசி உயிர் போயிடும் போல இருக்கு  கத்தரீனா "

                             "   கொஞ்சம்  பொறுமையாகக் கேள்,,நான்  சொல்லவேண்டியதை  சொல்லிமுடிக்க விடு "

                                   "  சரி  சொல்லிமுடி ..எல்லாம்  என்னோட  காலக்கொடுமை,,நீ ஒரு முடிவோடுதான்  நிக்குறாய்   "

                                    "  இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது நான் சைகொலோயி மாஸ்டர் டிகிரி படிக்க ஒரு புத்தகம் ரிசர்ச்  பண்ணிப் படித்த போது அதில இருந்தது ஒரு ஆச்சரியமான விசியம், இதுக்கு மேல சொன்னால் உனக்கு அறுவையா இருக்கும் என்றால் சொல்லவில்லை " என்றாள் 

                            நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு  இன்னும் கொஞ்சம் சொல்லுவாள் எண்டு நினைக்க அவள்,  

                " கொஞ்சம் பொறு,சில பேப்பர் வேலை இருக்கு,அதெல்லாம் முடிக்க வேண்டும்,நீ கையெழுத்து போட வேண்டும் " 

                           எண்டு சொலிப்போட்டு கொஞ்சம் பேப்பர்களில் குனிந்து எழுத , நான் கோபியப் பெண்கள் போல இருந்த அந்த சேலை கட்டிய ஸ்வீடிஷ் பெண்களின் " குருப் " படத்தை ஆன்மீகம் பித்தம்  தலைக்கு ஏற்றப் பார்த்துக்கொண்டு இருந்தேன் .சொன்ன மாதிரியே ரெண்டு கிழமை என்னை அங்கே  அவளோட காரிலேயே கொண்டுபோய் விட்டாள் கத்தரீனா, நான்    

                           " அந்தப் பெண்கள் எங்கே ஒருவரையும் காணவில்லையே " 

                                           எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,

                          " இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் ,இதையும் குழப்பினாய் எண்டால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே  நேர்ல வந்தாலும் உனக்கு விடிவு இல்லை"  

                      எண்டு போட்டுப்போயிட்டாள் !

                             அந்த ஆசிரமம் கொஞ்சம் இந்திய முறைப்படி கட்டியது போல இருக்க ,வெளியே ஒரு கிருஷ்ணர் சிலை கோபியப் பெண்களுக்கு நடுவே ஆடுவதுபோல இருக்க , கோகுலத்து மாடுகள் கிருஷ்ணர் வாசிக்கும் புல்லான் குழகுக்கு மயங்க்கி பார்த்துக்கொண்டு இருக்க ,,ஆரம்பமே கொஞ்சம் அடகாசமா இருக்கும் போல இருந்திச்சு .ஆனால் நான் நினைத்த மணிரத்தினம் படத்தில வாற மங்கலான கனவு ஸீனில கதாநாயகி மிதந்து  நடந்து வருவது போல போல அங்க ஒண்டுமே உற்சாகம் தருவதுபோல இருக்கவில்லை.   

                                             அந்தக்  ஆசிரமத்தில " கோகுலம்" என்ற பெயர் உடைய மாடுப்பப்பன்னையில் நிறைய கறவை மாடுகள் ,கன்றுக்குட்டிகளுடன் நிண்டது, அதுக்கு பொறுப்பான ஸ்வீடிஷ்காரர்  நான் மாடுப்பப்பன்னையில் ஒவ்வுருநாளும்  என்னவெல்லாம் செய்யவேண்டும் எண்டு பொறுப்பாக சொன்னார், நான் பொறுப்பில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்!

                                          உங்களுக்கு  உண்மையை சொன்னா  என்ன,  " அல்ஹோலிக்ஸ் "வியாதியால் அவஸ்தைப் பட்டதால் நான் ஒண்டுமே அங்கே திட்டமிட்டபடி செய்யவில்லை , 24 மணித்தியாலமும் ஓடி ,ஆடி வேலை செய்யும் அதுக்கு பொறுப்பான  சாமியார் போல இருந்த  ஸ்வீடிஷ்காரர்  என்னிடம்  வந்து

                         " மன்னித்துக்கொள்,ஆரம்பமே  என்னோட பிழை ,"

                           "  ம் "

                           "     நீ வந்தவுடனே இதைக் கேட்டிருக்க வேண்டும் , "

                             "   ம் "
                                                  
                               "  பார்க்கும் போது நீ  நல்ல திடகாத்திரமாய்  இருந்ததால் நானும் உன்னை எல்லார் போலவும் நினைத்து பல வேலைகள் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டேன், "

                            "   ம் "

                                " உண்மையில்  உனக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்யத் தெரியுமா அதைச் சொல்லுப்பா ? "

                            "  ம் "

                                " குறை நினைக்காமல் அதை மட்டும் எனக்கு சொல்லுவியா "

                             எண்டு ஒரு நோயாளியை டாக்டர் கேட்பதுபோல் அன்பாகக் கேட்டார்,நான் 

                                "சமையல்காரனாகதான் வேலை செய்தேன்  , நான் அதுக்காக தான்  பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"

              என்றேன்,அவர் ,நாடிய தடவிக்கொண்டு

                       "அப்ப நீ ,ஸ்டோக்கொலமில் உள்ள எங்களின்  கோவிந்தா ரேச்டோறேண்டில் போய் மிகுதி நாட்களைஅவர்களின் சமையல் வேலையிலும். அங்கே உள்ள கோவிலில் பயனை பாடி அவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவி செய்வியா  ,

                              "  ஓம்..மரக்கறி  சமையலும்  நல்லா  தெரியும் "

                             "   சரி    அங்கே  எங்கள்  பிருந்தாவனம்  கோயிலும் அதோடு உள்ளது,,உனக்கு  நிறைய மன அமைதி கிடைக்கும் பயனை பாடும்போது "

                                 என்றார் " நான் அது எப்படி இருக்கும் " என்டுகேட்டேன், இப்படி இருக்கும் எண்டு ஒரு DVD செருகி படம் போட்டுக் காட்டினார்!

                                          சும்மா சொல்லவிலை, மாடுப்பன்னையை விட நிறைய இண்டேறேச்டிங் விசியன்கள் கலர் கலரா தெரிந்ததால், " ஆதிசங்கரர் போல  " கோவிந்தா கோ "  எண்டு அந்த இடைத்தை முதலில் விழுந்து கும்பிடுடு , வலது காலை எடுத்து வைத்து உள்ளுக்குப் போய் " ஆன்மிகம் பாடல்கள் கிடாரில் நல்லா வாசிப்பேன் " எண்டு பொய் சொல்லி அங்கே  ஒரு கிழமை இருந்தேன், அங்கேதான் M .S .V யின் "கிருஷ்ணா காஹனம்  "LP ஐ முழுமையாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது !  

                                                அதோட  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும்  இருந்த ஸ்வீடிஷ் பெண்களிடம் இருந்து எப்படி " கோவேறு வளஞ்சேர் கோவிந்தா " எண்டு வாற  ஆழ்வார் பாடலுக்கு என்ன உண்மையான அர்த்தம் என்பதையும் கண்டு பிடித்தேன் .  அந்த அழகான  இளம் சுவிடிஷ் பெண்கள் காலையில் சேலை  கட்டிக்கொண்டு  ஹரே  கிரிசுனா  ஹரே கிருசுனா  ஹரே  ராமோ  ஹரே  ராமோ  என்று  பஜன் பாடுவார்கள் ,நான் அவர்களுக்கு நெருக்கமாக  இருந்து  ஜால்ரா  போடுவேன். 

                                                அழகான பெண்களுக்கு  ஜால்ரா போடுறது  இந்த உலகத்தின் அலாதியான இன்பம், அந்த அனுபவம் எனக்கு நிறைய இருந்ததால் நல்லா  ஜால்ரா போட்டேன். ஆனால் அந்தப் பெண்கள் படு பனங்காட்டு நரிப்  புத்திசாலிகள்  .நான் ஒரு உதவாக்காரை என்று ரெண்டாவது நாளே கண்டுபிடித்துவிட்டார்கள். நானும்தான் முன்னம் பின்னம் ஜோசிக்காம ஒரு குளறுபடியை செய்துபோட்டேன். 

                                 நீட்டி முழக்கி கதை எழுதிப்  போட்டு உங்களை அறுக்க விருப்பமில்லாததால் ,மிகுதிக் கதையை  இரண்டாம் பகுதியாக எழுதுறன், சரிங்களா?.
 .
.

பேரிச்சம்பழக் குற்றவுணர்வு....

புலம்பெயர்   வாழ்க்கை  என்பதே இன்னொரு  கலாச்சரம்  நம்மை  விழுங்கக்  காத்திருக்கும்போது  அதன்  நெளிவு சுளிவுகளில்  சுழி  ஓடுவது  போல  இருக்கும்.  அதன்  நல்ல  பக்கத்தில்  நல்ல  விசியங்களும்  துன்பமான  பக்கங்களில்  விடைபெற்றுப்  போன  பல  வேற்றின   நண்பர்களின் நினைவுகள்  பலமுறை வாழ்தல்  என்பதே  இருத்தலின்  இன்னொரு  பரிமாணம்  என்று  பதிவுசெய்துவீட்டுப் போயுள்ளது .

                                                   ஒஸ்லோவில் சில வருடமாக  சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த  நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும்  நண்பராக இருந்தார். அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பியர் குடிக்கும்  பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நோர்வேயிய நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். 

                                                           என்னைப் போன்ற வந்தேறுகுடிப் பல்லினக்  கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார். நெறய கீளைதேய சமய நம்பிக்கை, தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும். இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத்  தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ்டிரா  தத்துவ புத்தகத்தை சப்பித்  துப்புவார்.

                                                  முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பேசிப்  பல விசியங்களை அறிந்து, முடிந்த வரை அதை என்னோட மூளையில் ஏற்றுவதுக்கு. இந்தக் கதை சிவைன் எரிக் வன்விக் என்ற அந்த மனிதரின்  அறிவு வீச்சு பற்றியதல்ல, அவரின் முடிவு பற்றியது...

                                                   சிவைன் பென்சன் எடுக்கிற வயதில் தான் சென்ற வருடம் இருந்தார், நோர்வேயில், சுவாரசியமே இல்லாத புள்ளிவிபர திணைக்களத்தில் ,புள்ளி விபரம் எடுத்து அதை அறிக்கையாக தயாரித்து திட்டமிடும் குழுக்களுக்கு அனுப்ப,அந்தக் குழுக்கள் அவர் அறிக்கையின் படி, நிதி வழங்குவதில், எதில் வெட்ட வேண்டும்,எதில் இன்னும் அதிக உதவி கொடுக்க வேண்டும்,எதை நிரந்தரமா நிற்பாட்டி வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எண்டு முடிவு எடுபார்கள் எண்டு அவரே சுவாரசியமாகச்  சொன்னார் தன்னோட வேலையை.

                                 சிவைன் சுவாரசியமே இல்லாத புள்ளி விபர திணைக்களத்தில் வேலை செய்தாலும் அவர் மாஸ்டர் டிகிரி படித்தது கிரேக்க தத்துவம்,சோகிரடிஸ்,அறிச்டோடல்,பிளேடோ , மார்க்ஸ் அரேளியசின் மேடிடேசன் புத்தகத்துக்கு நோர்வே மொழியில் விளக்கம் எல்லாம் அருமையா சொல்லுவார், எல்லாம் அத்துப்படி அந்த மனுஷனுக்கு. நான் அவரிடம் இருந்து நிறைய குழப்பம் உள்ள விசியங்கள் கேட்பேன்,அவர் குழம்பாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லுவார்.

                                              ஒரு முறை
                     
                                         "சிவைன் நீங்க இவளவு தெரிந்தும் ஏன் ஒரு ஆசிரியரா இருக்காமல் எப்படி அலட்டிக்  கொள்லாமல் புள்ளி விபரம் எடுகிற வேலை செய்யுரிங்க,அதைவிட என்னைப்போல அரை அவியல்களுடன் இயல்பாக பேசுறிங்க ,எப்படி முடிகிறது  " எண்டு கேட்டேன்,

                                        அவர் அதுக்கு பதில் தெரியாத மாதிரி இருந்தார், கொஞ்ச நேரத்தில் கிரிக் மொழியில் ,
                               
                                 "Pensa como pensam os sábios, mas fala como falam as pessoas simples"

                                       எண்டு மென்மையாக பதில் சொல்லி போட்டு இருந்தார். இதுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டேன், ஜோசிச்சுப் போட்டு அதன் அர்த்தத்தை நோர்வேயிய மொழியில் சொன்னார்,எனக்கு அந்தளவு தத்துவ நோர்க்ஸ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சொல்ல சொன்னேன்,அவர் இப்படி சொன்னார்,
                               
                                        "Think how they think the wise, but talk like simple people talk"    இதை யார் சொன்னது எண்டு கேட்டேன், அறிச்டோடல் சொன்னார் என்றார், சிவைன்ஸ் இப்படிதான்,கேள்வி கேட்டால் வள வள எண்டு பதில் சொல்ல மாட்டார்,ஆனால் குடைஞ்சு குடைஞ்சு கேட்டால் ஒரு பல்கலைக்கழக பேராசியர் அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.

                                              சிவைனிடம் ஒரு முறை 
         
                  " ஏன் வருசத்தில் ஒரே ஒரு முறை குளிக்கும் சோக்கிரடிசுடன் ஒரு அழகான திராட்சைப்பழம் போன்ற இளம் பெண் விரும்பி வந்து வாழ்ந்தா, அதை விட தன்னோட வாழ்நாள் முழுவதும் பெண்களைக் கிண்டல் பண்ணிய சோக்கிரடிஸ்,அவரோட அழகான, மண்டரின் ஒரேஞ் கலர் இளம் மனைவியைக் கலியாணம் கட்டியவுடன் பல்டி அடிச்சு ஏன் பல முரணான கருத்துக்களைச் சொன்னார் " எண்டு கேட்டேன்,

                                           சிவைன் அதுக்கு வாயைத் திறக்காமல் சிரித்தார். இதுக்கும் கிரீக் பாசையில் ஏதாவது சொல்லுவாரோ எண்டு நினைக்க,  நோர்வே பாசையில் 

                                        "    நேரம் வரும் போது சொல்கிறேன்,,சொல்லுக்கும்  செய்யலுக்கும்  நடுவில்  எப்பவுமே  காலம்  பதுங்கி  இருக்கும்  "

                                                          எண்டு சொன்னார்,சிவைன் ஒரு நாள் கட்டாயம் சொல்லுவார் என்று  தெரியும். ஆனால் அந்த நாள் எந்த நாள் எண்டு அவருக்கு மட்டுமே தெரியும். அதுதான் நான் அவரை அந்த பப்பில சந்தித்த கடைசி நாள் எண்டு இப்ப நினைக்கிறன்.

                                      ஏனென்றால்  இடைப்பட்ட  அந்தக்  காலத்தில்  ஒருநாள்  சிவைனிடம்  நான்  காசு  கொஞ்சம்  கடன்  வேண்டினேன். அவரே  மனமுவந்து  வந்து  அதை  தந்தார்.  உன்னிடம்  காசு  வரும்போது தா  இல்லாட்டி  அதைப்பற்றி  அலட்டிக்கொள்ளாதே  என்று  வேற சொன்னாரா,,அதை  வைச்சு  நான்  சில  மாதங்கள் கடனை  இழுத்துக்கொண்டு  இருந்தேன் .  அதை  அவர்  மற்ற நோர்வ்ய்யிய நண்பர்களுக்கும்  சொல்லவில்லை ,ஆனால்  மார்டின்  எப்பவும்  சிவைன்  உன்னைத்  தேடுறார்  எண்டு  சொல்லுவார் டெலிபோனில் 

                                    எந்த  விதத்திலும்  சமாளிக்க  முடியாமல்    மண்டை  வெடிப்பது  போல உள்ள  நேரங்களில்  நாங்கள்  கடன்  யாரிடமாவது வேண்டுறோம், வேண்டி  அந்த  நேர  அந்தப்  பிரசினையை  முடிக்கிறோம்,ஆனால்  அந்தக்  கடன்காசு  எப்பவுமே  காற்றில்  கரைந்து  போன ஒரு  வெற்றிடம்  போல  இருக்கும்  திருப்பிக்  கொடுக்கும்போது. என்னமோ  சொத்துப் பத்து   எல்லாத்தையும் விருப்பம் இல்லாத  பொண்டாட்டி  பேர்ல  எழுதி வைப்பது  போல இருக்கும் .

                                      நான்  அவர்  எனக்குத்  தந்த  கடன்  காசை  திருப்பி  வேண்டத்தான் தேடுறார்  எண்டு  நினைச்சுக்கொண்டு  அவரை  சந்திப்பதைப்  எப்பவுமே  தவிர்த்துக்கொண்டு  இருந்தேன். ஆனால்  சிவைன்  என்னை  தேடியதே  அவர்  எனக்காக  பல  ஆங்கிலப்  புத்தககங்கள்  வேண்டிவைச்சு  இருக்கிறார்  என்றும்  அவைகளை  என்னிடம் கொடுப்பதுக்கே  தேடுறார்  என்றும்  அறிந்தபோது  காலம்  கொஞ்சம்  வேகமாகவே  ஓடி  விட்டது 

                           கொஞ்ச நாள் லீவு கிடைக்காததால்  சிவைனயும் ,அவர் நண்பர்களையும் சந்திக்கவில்லை,ஒருநாள் சிவைன் இன் நண்பர் மார்டின் போன் பண்ணி
   
                                " சிவைன் உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரியில் இந்தா அந்தா எண்டு படுத்து கிடகுறார் " எண்டு சொன்னார்.

                                 நான் அடுத்தநாள் அவரைப் பார்க்கப் போனேன், ஒரு அறையில் கட்டிலில் படுத்து கிடந்தார்,சில வயர்கள் முகம் முழுவதும் கொழுவிக் கிடந்தது, என்னைக் கண்டவுடன் வாயில செருகி இருந்த வயரை இழுத்து எறிஞ்சு போட்டு, அவரை நான் நலம் விசாரிக்க முதல் என்னை நலம் விசாரித்தார்,

                          " எப்படி நான் வாசலில் நிக்குறது தெரியும் " எண்டு கேட்டார்,

                                   " எந்த வாசல் " எண்டு கேட்டேன் ,சிரித்தார்.

                                "     சிவைன்  நான்  உங்களுக்கு  கடன்  காசு  தரவேணும்  அது  நினைவு  இருக்கா ,,கையில  காசு  இல்லை  அதால  கொஞ்சம்  பயந்து  பயந்து  பதுங்கிக்கொண்டு  திரிஞ்சேன் "

                                     "    ஹஹஹஹஹா "

                                   " உண்மையாவே  உங்களை  சந்தித்தால்  இப்ப  வையடா  கடன்  காசை  என்று  கேட்பின்களோ  என்ற  பயத்தில  பம்மிக்கொண்டு  திரிஞ்சேன்  சிவைன் "

                                    "     ஹ   ஹ      ஹ  ஹா   "

                               "    ஏன்  சிவைன்  இப்பிடி  சிரிகுரிங்க "

                                 "  ஆனால்  நான்  உன்னைத்  தேடியாது  உனக்கு  வாசிக்க  என்று  தேடி  தேடி  புத்தகங்கள்  வேண்டி  வைச்சு இருந்தேன்  அதை  உன்னிடம்  கொடுப்பதுக்கு "

                                    " ஆனாலும்  நான்  கடன்காரன்  தானே,,காசு  உங்களுக்கு  தரவேண்டும்  தானே ,,அந்தப்  பயத்தில ஒளிச்சு  திரிஞ்சேன்  சிவைன் "

                          " காசு  ,,ஹ்ம்ம்,,அதுக்கு  என்ன  அர்த்தம் தெரியுமா "

                                 "  அது  ,,சரியா  தெரியவில்ல,,காசு  உள்ளவனை  நாலு  பேர்  நிமிர்ந்து  பார்க்கிறார்கள்  ,,காசு  இல்லாதவன்  நாலு  பேரை  நிமிர்ந்து  பார்க்கிறான் "

                                       "     ஹ்ம்ம்,,,,அது உண்மைதான் ,,காசு  இருந்தாலும் பிரசினை  இல்லாட்டியும்  பிரசினை  அது  உனக்கு  தெரியுமா "

                                என்று அவரின் கட்டிலுக்கு அருகில் இருந்த ஜன்னலைக் காட்டி ,எட்டிப் பார்க்க சொன்னார்,எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது. இந்தாள் ஜென்னலால பாஞ்சு தற்கொலை செய்யப்போகுது போல இருக்கே எண்டு ஜோசித்தாலும் சிவைன் சாவுக்கு அர்த்தம் விளங்கிய மனுசன் அப்படி எல்லாம் கோழையாக முடிவு எடுக்க மாட்டார் எண்டு நினைத்து கொண்டு எட்டிப் பார்த்தேன்,

                                                ஜன்னலுக்கு மிக அருகில் பழைய சவுக்காலை இருந்தது,  உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரி நோர்வேயின் ,ஒஸ்லோவில் மிகப் பழைய ஆசுபத்திரி, ஒரு காலத்தில் அங்கே சிகிச்சை பெற வநதவர்கள்,மறு படி வீடு திரும்பி போக உத்தரவாதம் இல்லாததால் ஒரு வேளை அருகிலேயே சவுக்காலை வைத்து அடக்கம் செய்து இருந்து இருக்கலாம் போல,இப்ப அப்படி இல்லை ஒரு சிலரைத் தவிர் பலர் நல்லபடியா வீட்டுக்கு போவதை நவீன அறிவியல் சாத்தியம் ஆக்கி இருக்கு. நான் சவுக்காலையைப் பார்த்து கொண்டு ஒண்டுமே பேசமால் நின்றேன்,

                                      சிவைன் ," நான் பிறந்த தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் சின்னக் கிராமத்தை விட ,உங்களைப்போன்ற வெளிநாட்டு மக்களுடன் வாழுந்த ஒஸ்லோவில் தான்  நான் இறந்தால் என்னோட சில உறவினர்கள் அருகில் இந்த சவக்காலையில் புதைக்கும் படி சொல்லி இருக்றேன், " எண்டு சொல்லி கொஞ்சநேரம் மவுனமா இருந்தார்.

                              " சவுகாலையில் கிடங்கு வேன்டினவன் பொம்பிளைப் பேயைக் கலியாணம் கட்டின ஜோக் தெரியுமா "

                                                    எண்டு சாதரணமா கேட்டார். ஆச்சரியமாகி தெரியாது என்றேன் , மூச்சு மேலயும் கீழயும் வாங்க மெல்ல மெல்லச் சொன்னார். 

                                           சவுக்காலையில் இறந்த ஒரு பிரேதத்தை தாக்க இரண்டு பேர் அந்த நாளில் கிடங்கு வெட்டிக் கொண்டு இருந்தாங்களாம் ,ஒருவன் கிடங்குக்கு உள்ளுக்க நிண்டு வெட்ட, மற்றவன் வெளிய மேல நிண்டு மண்ணை வேண்டி எடுத்துக் கொட்டிக்  கொண்டு நிண்ட நேரம்,ஒரு அழகனா இளம் பெண் அந்த யாருமற்ற சவச்சாலையில் வெள்ளை உடுப்போட மிதந்து நடந்துவர ,மேல நிண்டவன் கீழ நின்டவனுக்கு

                                  "  ....... " என்றானாம்,,,,கீழ நிண்டவன் அதைக் கேட்டு மேல நின்டவனுக்கு

                               " ............." என்றானாம், இதைக் கொஞ்சம் நிண்டு கேட்ட அந்த இளம் பெண்,,,மேல நின்டவனிடம்

                                  " ......... " எண்டு கேட்டாளாம்,,,அதுக் மேல நிண்டவன்,

                                 " பொறு வாறன் என்னோட நண்பனைக் கேட்டு சொல்லுறேன் " எண்டு கீழ நின்டவனிடம்

                                          "  ..... " எண்டு கேட்க...கீழ நிண்டவன் " பொறு வாறன் " எண்டு மேல ஏறி வரமுதல்,மேல நிண்டவன்,,,,,போக வெளிக்கிட ,,இதுக்கு மேல சொல்ல முடியாது, அவளவு கொசப்பு ஜோக் அது...கடைசில சிவைன் அந்த ஜோக்கை முடித்த விதத்தில் நான் கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்,சிவைன் சிரிக்கவே இல்லை முகத்தை இறுக்கி வைச்சுக்கொண்டு நான் சிரிப்பதை சின்னக் குழந்தைகள் போல ரசித்துக்கொண்டு இருந்தார் .

                          ஒரு வெள்ளை நேர்ஸ் வந்து எட்டிப் பார்த்து

                " இது ஆசுப்பத்திரி இங்கே உங்கள் வீடு போல நினைச்சு கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரிக்கக்  கூடாது "

                         எண்டு சிரிக்காமல் சொன்னாள், அவள் சொன்னதை சிவைன் கேட்டார்,அவள் போன வுடன கதவை இறுக்கி சாத்தச் சொன்னார், சாத்தினவுடன் சிவைன், வயர் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு,

                                           " இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக்  கூடாதாம், இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக்  கூடாதாம்"
                                                     
                                                                 எண்டு உயிர் உள்ளவரை  கடைசியா சிரிக்கிற மாதிரி  விழுந்து விழுந்து சிரிச்சார். அவர் சிரிக்க சிரிக்க வாயாலும், மூக்காலும் ரத்தம் வந்தது,நான் திசு பேப்பர் எடுத்து துடைக்கப் போனேன், " துடைக்க வேண்டாம் " எண்டு சைகை காட்டினார், நான் நேர்சைக் போய்க் கூடிக்கொண்டு வந்தேன்,கொஞ்ச நேரத்தில் அவள் சிவைன் முகம்,ரத்தம் எல்லாம் துடைத்து வயர் எல்லாம் கொழுவி முடிய,

                                       " சிவைன் நான் போகப் போறேன்,உங்களுக்கு ஒண்டும் வராது,நான் சில நாளில் மறுபடி வாரன்,உங்கலோடு பேச  டெலிபோன் நம்பர் இங்கே வேண்டிக்கொண்டு போறேன் " என்றேன்,

                                              " வரும் போது பேரீச்சம்பழம் வேண்டிக்கொண்டு வருவியா " எண்டு கேட்டார்,

நான் கட்டாயம் வேண்டிக்கொண்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டு வெளிய வந்து நேர்சிடம்

                                                   " சிவைனுக்கு என்ன வருத்தம் " எண்டு கேட்டேன் லுக்கேமியா என்ற ரத்தப் புற்றுநோய் எண்டு சொன்னாள், நான் வீட்டை உடைந்து போய் வந்திட்டேன்.

                                                      பின்னேரம் அன்று வேலையில் நிறையக் குழப்பமா வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்  எண்ணங்கள் ஓடியது, வாயாலும் மூக்காலும் ரத்தம் வாறது கொஞ்சம் கை விட்ட கேஸ் எண்டு கேள்விப்பட்டு இருக்றேன். சிவைன் லுக்கேமியாவால் பல வருடம் அவதிப்படுவதை  எனக்கு சொல்லவே இல்லை. அவர் தனி மனிதர் எந்தப் பெண்ணையும் கலியாணம் கட்டாமல் வாழ்ந்தவர்,அதுக்கு காரணம் அவர் சொல்லி இருக்குறார்,தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் இல பிறந்த சிவைன் ,சின்ன வயசில் தன்னோட அம்மாவை அவரின் அப்பா எப்பவும் அடிச்சு நொறுக்குவது எண்டும், அதால இளவயதில் ஒஸ்லோ வந்து தனிய இருந்து படிச்சு, அதில இருந்து அவர் திருமணத்தில் ஆர்வம் அற்று,வேறு சில காரணங்களாலும் தனியா வாழ்ந்தார்.

                                                 தான் இறந்தால் தன்னுடைய வீட்டை தன் சகோதரிக்கும் ,சொத்துகளை தன் சகோதரியின் பிள்ளைகளுக்கும் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தார், தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன்சான்ட் இல வசிக்கும் அவரின் ஒரே ஒரு சகோதரி தன்னை கடந்த இருவத்தைந்து வருடமா ஒஸ்லோவுக்கு  பார்க்க வரவில்லை எண்டும்,தன்னையும் ஒரு நாளும் அங்கே அழைத்தது இல்லை எண்டும்  ஆசுபத்திரியில் வைத்து சொன்னார். எப்படியோ,நானும் வேலை பிசியில் வேலை,வெட்டி,சோலி,சுரட்டு அதிகமாக் கொஞ்ச நாள் சிவைனை மறந்திட்டேன்.

                 ஒருநாள்....

                                  முஸ்தபாவின் துருக்கி கடையில் ஆட்டு இறைச்சி வேண்டப் போன நேரம், அவனின் மேசையில் அரபு நாட்டுப் பேரிச்சம் பழம் பெட்டியில்  அடைச்சு வந்து இருந்த சின்னப் பெட்டிகளை அழகாக அடுக்கி  காட்சிக்கு வைச்சு இருந்தான். அதைப் பார்க்க சிவைன் நினைவு வர, சடார் எண்டு போனை எடுத்து அவர் தொடர்பு கொள்ள சொன்ன இலக்கத்தைக் குத்தினேன்,மறு முனையில் ஒரு நடுத்தர வயதுள்ள பெண் குரல்  தெற்கு நோர்வே நாட்டவர் பேசும் நோர்ஸ்க் உச்சரிப்பில்க் கேட்டது,

                                   நான் " சிவைனின் ப்ரென்ட் கதைகுறேன் ,சிவைனுடன் பேச முடியுமா " எண்டு கேட்டேன், கொஞ்ச நேரம் அந்த லைன் மவுனமாகி, மீண்டும் உயிர் பெற்று,

                          " அப்படியா,நீங்க சிவைனின் ப்ரென்ட் எண்டு சொல்லுரிங்க, சிவைன் மேல போய்ச் சேர்ந்து ஒரு கிழமைக்கு மேல ஆகி விட்டதே,

                                  "   அடக்  கடவுளே ,,இது  எனக்கு  இப்பதான்  தெரியும் "

                                  "  ஒரு நண்பன் இறந்தது தெரியாமல், நண்பன் எண்டு அவரைச்  சொல்லுறிங்களே,நீங்க என்ன விதமான நண்பன் எண்டு எனக்கு விளங்கவில்ல "

                                 "  உண்மைதான்  நான்  அக்கறை  இல்லாமல்  அலைந்துகொண்டு  இருந்தேன் "

                                 " ஹ்ம்ம்,,,ஆனாலும்  இது  மனதுக்கு  மிகவும்  வேதனையாக  இருக்கு "

                                 "  சிவைன்  எனக்காக  சில  புத்தகங்கள்  வேண்டி  வைச்சு  இருப்பதாய்  ஆசுப்பத்திரியில்  இருந்த  நேரம்  நேரம்  சொன்னார் "

                                   "!  அதென்ன  புத்தகங்கள் "

                              " அதுதான்  எனக்கும்  தெரியவில்லை "

                                  "இங்கே  அவர்  வீடு  முழுவதும்  புத்தகங்கள்  தானே  நிரம்பிக்கிடக்கிறது  இதுக்குள்ளே நான்  எதை  தேடுறது  "

                                    "    சரி  அப்ப  விடுங்க ,,பிரசினை  இல்லை "

                                   "ஹ்ம்ம்,,உனக்காக  அவர்  வேண்டி  வைச்ச  புத்தகங்களை  நீயே  அந்த  நேரம்  வந்து  வேண்டி  இருக்கலாமே,,எனக்கு  ஒரு  காரணமும்  புரியவில்லை  ஏன்  நீ  அவரை  சந்தித்து அவர்  உயிரோடு  இருந்த நேரம்   வேண்டவில்லை  "

                                               எண்டு என்னோட மனசாட்சிக்கு சொல்லுற மாதிரி  சொன்னாள், அவள் பேசிய உச்சரிப்பு கொஞ்சம் கஷ்டமா இருந்தது விளங்கிக்கொள்ள ,என்றாலும் நான் சுருக்கமா சொன்னேன் நான் யார் எண்டும் , சிவைனை எப்படி எனக்கு தெரியும் எண்டும்.

                                           அவள் மவுனமாக இருந்த சின்ன காலமற்ற இடைவெளியில், கொஞ்சம் ஜோசிதேன்,சிவைன் வயதானவர்,அவர் வியாதிக்கு மருந்தும் இல்லை, அவரே சாவை தனிப் பாடல் திரட்டில் சொன்ன மாதிரி  "..நரை கோட்டிளங்கன்று நல்வளநாடு நயந்தளிப்பான் விரையூட்டு தார்ப்புயன்வெற் பீழமன்னனெ தேவிரும்பி " என்று பயப்பிடாமல் எதிர் கொள்ளும் மன நிலையில் இருந்தார் ,

                                  வயதான காலத்தில் வாழ்ந்து முடித்து அவரோட நேரத்தில் அவர் விடை பெறுவது ஒண்டும் கவலையான விசியம் இல்லை போல இருந்தாலும் சிவனைப் பார்க்க பேரிச்சம்பழத்தோடு வாறன் எண்டு சொல்லிப்போட்டு போகாமல் விட்டது குற்றவுணர்வு போல தொண்டைக்குளியில் வந்து குந்தி இருந்தது மனதுக்கு நெருடலாக இருந்தது .

                                  அந்தப் பெண் தொடர்ந்து  தான் சிவைனின் சகோதரி எண்டும்,சிவைன் இறந்த நாலாம் நாள் அவரை அடக்கம் செய்து,தான் இப்ப ஒஸ்லோவில் அவரின் வீட்டில் நிற்பதாகவும் சொன்னாள்.என்னோட நோர்க்ஸ் உச்சரிப்பை வைத்து என்னை ஒரு வெளிநாட்டு வந்தேறு குடி எண்டு கண்டு பிடித்து,

                                   " சிவைனுக்கு நிறைய வேற்று இன மக்கள் நண்பர்களாக இருந்து இருக்குறார்கள்,பலர் போன் பண்ணினார்கள், அவர் அவர்களுடன் சந்தோசமா இருந்து இருக்குறார், அவர் இந்த வீட்டை என்னோட பெயரில் எழுதி வைச்சு,அவரின் வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் என்னோட இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளின் பெயரில் பகிர்ந்து எழுதி இருக்குறார், நான் அவரின் ஒரே ஒரு சகோதரி பல வருடமா அவருடன் அன்பாக ஒரு வார்த்தை பேசவில்லை என்பதை நினைக்க கவலையாக இருக்கு "

                              என்று அழுதாள், கடைசியாக

                                              " அவருடன் ஆசுபத்திரியில் இருந்த போது சில நிமிடங்கள் டெலிபோனில் பேசினேன், ஒரு ஸ்ரீ லங்கா தமிழர்  ஒருவர்  மட்டுமே தன்னை ஆசுபத்திரியில் வந்து பார்த்ததாகவும்,அதை தான் மிகவும் பெரிய ஒரு விசியமாக நினைபதாகவும் சொல்லி இருந்தார்,அது யார் எண்டு உனக்கு  தெரியுமா,அவரை நான் சந்திக்க முடியுமா "    எண்டு கேட்டாள்.

                               நான் அதுக்கு பதில் சொல்லவில்லை,

                  " சிவைனின் ஆத்மா சாந்தி அடையப் பிராதிக்குறேன் " எண்டு சொல்லிப்போட்டு வைச்சிட்டேன்,

               முஸ்தப்பா வந்து

                              " என்னப்பா பேரிச்சம்பழப்  பெட்டியப் பார்த்துக் கொண்டு டெலிபோனில யாரோட வைச்சு அறுக்கிறாய், காசில்லாட்டியும் பரவாயில்லை ரெண்டு பெட்டிய கொண்டு போ பிறகு காசைத் தா, இன்று இரவு பொப் மார்லியின் பாடல்களை இசைக்கும் இசை நிகழ்ச்சி  பிஸ்லெட் அரினாவில நடக்குது  வாவன் பியர் நாலஞ்சை உள்ளுக்க விட்டுப்போட்டு கும்மாளம் போடலாம்,இளம் பெட்டையள் மயக்கத்தில நிப்பாளுகள்,மடக்கலாம் வாரியா, " என்றான்,

                             நான்  " பேரிச்சம்பழம் இனிக் கொண்டு போய்ப் பிரிஜோசனம் இல்லை  " எண்டு சொல்லிப்போட்டு ,

                                        பேரிச்சம்பழப்  பெட்டிய உற்றுப் பார்த்தேன் ,அந்த சின்னப் பெட்டிகளின் மேலே  ஒரு படம் போட்டு இருந்தது , ஒரு பேரிச்ச மரத்தை சுற்றி சில ஒட்டகங்கள் நிக்க, அதுக்கு அருகில் யாழ்பாணத்தில செத்த  வீட்டில ஆட்கள் குந்தி இருக்கிற மாதிரி சில அரபுக்கள் குந்தி இருந்தார்கள். அவர்களோடு என்னோட குற்ற உணர்வும் சேர்ந்தே குந்தி இருந்தது.....
.
.


 05.08.14