Wednesday, 7 March 2018

புள்ளிகளை இணைக்குமிடத்தில்!

" புள்ளிகளை இணைக்குமிடத்தில்! "  மூன்று வகையான   கற்றுக்கொண்ட முதல் பாடம் தரும்  சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட கவிதைகள். காற்றுக்கு எப்படி சுற்றுசூழல் தேவையோ அப்படியேதான் கவிதைக்கும் ஒரு சுற்றுச்ச்சுழல் தேவையாக இருக்கு. அது எந்த இடம் என்று சொல்லமுடியாது , வெல்வேறு இடமாக இருக்கலாம்.பல நேர்கொள்ளளாக இருக்கலாம்,  சில  பயணமாக இருக்கலாம், ஒரு  அனுபவமாகவும் இருக்கலாம். 


                                                     ஊரில இப்ப இருக்கிறவன் சிஞ்சக்க ஒருவன்தான் . இளவயதில்  நாங்க எல்லாரும் ஒருகாலத்தில் அடிக்கடி அரசியல் உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமில்லாமல்க்    கொழுவல்பட்டு   வெல்வேறு கொள்கை , இலட்சியம் , கோட்ப்பாடு என்று ஒவ்வொரு பக்கத்தால் இழுத்துக்கொண்டு இருந்தாலும் சிஞ்சக்க  ஒருவன் தான் எல்லாத்துக்கும் 

                                               " ஓமடா மச்சான், நீ சொன்னாய் மச்சான் அதுதாண்டா உண்மை,, ஓமடா மச்சான் இப்ப நீ ஒரு விளக்கம் சொன்னி  எல்லா அதுதாண்டா மச்சான் சரியான பொயிண்ட்    "  என்று உடன்பட்டுக்கொண்டு இருப்பான்.  

                                                     இதே வசனத்தைத்தான் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு இருப்பான். ஒருத்தரையும் அவர்கள் கொள்கைக்காக தன் நட்பைப் பணயம் வைத்து   வெறுக்க மாட்டான் . இப்படி எல்லாருக்கும் " சிஞ்ச் சக்க சிஞ்ச் சக்க சிஞ்ச் சக்க " என்று ஜால்றா போடுறதால அவனுக்கு " சிஞ்சக்க " என்று பெயர் வைச்சம், சிஞ்சக்கவுக்கு  அவனோடு அப்பா அம்மா வைச்ச  வேற ஒரு அழகான பெயர்  இருக்கு. 

அவனோடு கதைத்தபோது, அவன் காட்டிய காணொளியைப் பார்த்தபோது, சொன்ன தகவல்களைக் கிரகித்தபோது  தோன்றியது இந்த  கவிதை. 

                                                        

முன்னொரு 
பழங்காலத்தில் 
வெறுங்கால்  
கிளுவங் கதியால்களும் 
கிடுகுவேலிகளும் 


வழியெங்கும்
தேர்முட்டியிலிருந்து
செங்கழுநீர்த்தொட்டிவரை


வெய்யில் வெளுத்தபடியே
கோணலாகத்தான் இருந்தது
அம்மன்கோவில்வீதி !

பவதாரணி போல ,
சித்திரைக் கஞ்சிபோல ,
அம்மச்சியா குளம்போல
மானம்பூ திருவிழாபோல ,
சொக்கன்கடை வடைபோல,
பாசிக்கிணறுபோல ,
அன்னமடத்துத் திண்ணைபோல ,
கட்டைப் பூவரசம் பூக்கள்போல
உலகத்தில்
வேறெங்காவது அதிசயமிருக்கா
என்றெல்லாம் 

நீயும் நானும் பேசியிருக்கிறோம். !

ரெண்டு கண்ணிலும்
தூரப்பார்வை பறிபோனதுபோல
நான் 

இங்கு வந்துவிட்டேன் !

நீ
அங்கிருந்தபடியே
வெளிச்ச நாளொன்றில்
கைபேசிக் காணொளி அனுப்புகிறாய் !

நண்பா
சீமெந்துக்கொங்கிரீட்
காலூன்றிய கட்டிடங்களைத்தவிர
வேறு 

ஒன்றுமேயில்லையே அதிலே !

ஆனாலும்
எல்லாத்திலுமே 

ஒரு நேர்த்தியிருக்கு
அதில்த்தான் நண்பா
வெளியேறியேவிட்டதே
நமக்கெனவே வடிவமைக்கப்பட்ட
எல்லா விதமான இன்பங்களும் !

நன்பா
நாங்கள் கடந்த பாதையை
நீ
இருட்டிலேயே 

எடுத்து அனுப்பியிருக்கலாம்
இதில்
வெட்கப்பட இனி ஏதுமில்லையே !


***********************************************************

ஒரு காலத்தில் நேரம் காலம் இல்லாமல் எங்களோடு வயல்வெளி, அம்மச்சியா குளத்தடி. வீராளியம்மன் கோவிலடி ,கோணல்ப்  புளியடி,பால்ப் பண்ணைவளவு, தெய்வேந்திரத்திண்ட மாந்தோப்பு  என்று தோளோடு தோழனாக  இழுபட்டுத்திரிந்த   ஒரேயொரு நண்பன் சிஞ்சக்க மட்டுமே இப்பவும் அதே வீட்டில இருக்கிறான்.  

                                                மற்றவர்கள் எல்லாரும் என்னைப்போலவே வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். சிஞ்சக்க   அலைபேசியில் தொலைபேசுவான். ஊர் நடப்பு நிலவரங்கள் சொல்லுவான், எனக்கு பல சம்பவங்கள்  மறந்து போய்விட்டது. ஆனால் சிஞ்சக்க பவதாரணி  என்ற பாவதாவைத்தான் அந்த நாட்களில் காதலித்துக்கொண்டு இருந்தான், இப்பவும் சிஞ்சக்க கலியாணம் கட்டாமல் தனியாத்தான் இருக்கிறான். 


                                                           அவனோடு கதைத்தபோது, அவன் காட்டிய காணொளியைப் பார்த்தபோது, சொன்ன தகவல்களைக் கிரகித்தபோது  தோன்றியது இந்த  கவிதை.  


மின்னேறிஞ் 
திருவிழா
மூக்குத்திக்கு மேல்
உயிர்ப்புடன் மெருகேற்றி
முகம்சுளிக்காமல் சிரிக்கும்
பவதா!

இப்போது எங்கிருக்கிறாள் ?

நல்ல வேளை,
எல்லாரும் நேசித்தும்
கடிதம் எழுதிக்காட்டி வாசித்தும்
காதலுக்கு உடன்படாத
பவதா,

எப்படிக் கலியாணம் கட்டினாள் ?

கச்சிதமான தூய்மையில்
கலையாத சேலையில்
முழுமையையும் ஒருமையையும்
ஒளியும் ஓலியுமாக
வீராளியம்மன் வீதியெங்கும்
தீராக் கனவுகளைக் கடத்திய
பவதா

இன்னுமப்பிடியேதான் 
இருக்கிறாளா நண்பா ?

நீயும்தான்
இடம்பெயர்ந்து
வட்டமடித்து சிக்கிச் சீரழிந்துவிட்டதில்
பழசுகளை நெருங்கும்போது
நினைவிழந்திருக்கலாம் !

நான் கேட்பது
எங்கட பவதா.

எங்க ஊர் பாவதாரணியடா!

அவளாவது
தேங்கியிருப்பதை எல்லாம்
இழுத்துக்கொண்டுபோகும் 
காலத்தில்
இன்னும் மிச்சமிருக்கிறாளாடா நண்பா ?


********************************************************


சில வருடங்கள் முன்னம் ஒரு முகநூல் நண்பர் கன்வஸ் திரைச்சீலைகளில் வரைந்த ஓவியங்களை நேசிப்பவர், அவரும் ஒரு சுமாரான ஓவியர் .தமிழ்ப் பெண்களை மையமாக வைத்து வரையப்பட்ட தென்னிந்திய ஓவியர்களின் ஒயில் பெயிண்டிங்ஸ், வாட்டர் கலர் பெயிண்டிங்ஸ், பென்சில் ஸ்கெச் பெயிண்டிங்ஸ் படங்கள் முன்னம் உள்பெட்டிக்கு அனுப்புவார்.

                                                                                                       எனக்கு அதிகம் அதன் டெக்கனிகள் விசயங்கள் பற்றி ரசனை இல்லை. ஆனால் அதைப் பார்க்க நிறைய ஐடியா வரும் எழுத. அதனால தொடர்ச்சியாக பல தம...ிழ் கலாச்சரதில் பெண்களின் வாழ்வியல் முரண்பாடு, காதல், கலியாணம், குடும்பம், என்று எழுதிக்குவித்தேன் அந்தப் படங்கள போட்டு நிறைய கவிதைபோல எழுதிய பதிவுகள் ஒரு அலைபோல எழும்பி வேறுபலரையும் என்னைப் போல எழுத வைத்தது. நல்ல காலம் அவற்றை உதிரிப்பூக்கள் போல கூட்டிஅள்ளி என் வலைப் பூங்காவில் சேமித்து வைத்துள்ளேன்.

                                                                                                                அவை இப்பவும் மின்னெறிஞ்சான்வெளியில் இருக்கு. பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே அதுகள் சரபோஜி மகாராஜாவின் சமையல் குறிப்பில் வாற அரைச்சுவிட்டசாம்பாரு போல சுவாரசியம் இழந்து விட அந்த நண்பரும் என் பதிவுகளிலும் , நானும் அவர் பதிவுகளிலும் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் போய்விட்டோம். இந்த வருடம் பிறந்த போது மறுபடியும் உள்பெட்டி வந்து ,அன்புடன் வாழ்த்து சொல்லி, படமும் அனுப்பி , வரைந்த பெண் ஓவியனி பெயர் சாயுச்சி கிருஷ்ணன் என்றும் குறிப்பு அனுப்பி இருந்தார்.

                                                                        அந்தப் படத்தில் ஒரு பெண்ணின் முகத்தில் ஏக்கம் இருந்தது , கொஞ்சம் அவதானிக்க வேறுசில விபரங்களும் இருந்தது . அது என்னைக் கலவரமாக்கியது
பெண்களின் பிரச்சினைகளும் ஆண்களின் பிரச்சினைகளும் ஏறக்குறைய ஒன்றுதான் என்று நினைப்பதால் எப்பவுமே பெண்ணியம், பெமினிஸம், என்று வெளிப்படையாக சொல்லி எதுவுமே நான் எழுதுவதில்லை.  

                                                                    பழையபடி இந்தப் புதுப் படத்தை உற்றுப்பார்த்து வழக்கம் போல கிணறு வெட்ட " collectivistic social cohesion and interdependence " என்ற சென்டிமென்டல் பொயடிக் ஐடியா பூதம் போல கிளம்பியது. அது எழுத வைத்தது. !

*
வருடங்களாய்த்
தாம்பத்தியமில்லை !
இந்திர
மை விழிகளில்
இமைகள் செருகிக்கொல்லும்
அடங்காத ஏக்கம் !
படிதாண்டாதவள்
அதனால்
புராணத்தனமான
அகலிகையின் பொறுமை !
சன்னதமாடுமிரவுகள்
வெண்சங்குகளில் முத்துக்களைத்
திறக்கின்றன !
பதிவிரதையல்லவா
கும்பகர்ண உறக்கத்தையும்
சகித்துக்கொள்கிறாள் !
மதனமூர்க்கங்களை
மந்திரம் சொல்லி
மவுனத்தை நிரப்பிவைத்து
பொருத்தமில்லா
மூன்று முடிச்சுகளை
இறுக்கியே வைத்திருக்கிறாள் !
மடி கிழிபட்டு
மண்டியிட்டுக்கொண்டிருக்குமவள்
தளர்மேனி
தளரவேயில்லை !
பதிவிரதையல்லவா
தவறாமல்
நாள்ப் பார்த்து
ஆசாரமாய் விரமிருந்து
தாலிக்கயிற்றுக்கு
சுமங்கலிப்பூசையும் செய்கிறாள் !******************************************************ஒரேயொரு நாளில் பலவிதமான மன உந்துதலில் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத மனச் சுவாச கட்பனை வெளிக்குள் தென்றல் போலவே நுழைந்து வெளியேறி எழுத்தமுடியாமா ?சரியாக ரெண்டு வருடங்களுக்கு முன் இதே தை மாதப் பனிநாளில் கார்குழல் வடிவாக மேகங்கங்கள் கலைந்தோடிக் கொஞ்சிக்கொண்டிருந்த நாளில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வசித்த போது எழுதியவை.

                                                அவைகளைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருக்கு .ஜோசித்துப் பார்த்தால் , ஒரு மோசமான சந்தியில் முகம்மாறிய மனநிலையில் இருந்து இருக்கிறேன், அல்லது சிந்தையில் சிலையாக பொழுது போகாமல் வேலை வெட்டி இல்லாமல் இருந்து இருக்கிறேன், அல்லது அந்த ரோகிணி நன்னாளில் தண்ணி அடிச்சுப்போட்டு பினாத்திக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறன், இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.
                                              அந்த எழுத்துக்களை தொகுத்துப் போடுகிறேன். நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க !
*
உப்புமாவையும்
வெந்தயக் குழம்பையும்
மிளகு சாம்பாரையும்
உன்னை
நினைத்துக்கொண்டு
சுட்டு விரலால்
தொட்டு ருசிதுப்
பார்த்துப் பார்த்துச்
சமைச்சேன் என்கிறாய் நீ,
சாப்பிடாமலே
வெறும் வயிற்றில்
உன்
வியர்வைதான்
வாசமாய் இருக்குதடி
என்கிறேன்
நான்!
*
12 January 2016 at 20:18
**
அவள் எங்கோ
போய்க்கொண்டிருக்கிறாள்.....
பழைய
கருங்கல்லுப் பாதை
சப்பாத்துக் கால்களில்
தீர்க்கமான
டொக் டொக் டொக்
இறுக்கிக் குத்தி
வெறுத்துப் போன
தனிமையின் நடை
சந்துச் சுவரில்
படபடப்பான எதிரொலி
முடக்கு முடிவில்
அவசரத்துக்கு உதவாத
வெளிச்சம்
ஓரங்களில்
மூக்கைப் பிடுங்கும்
மூத்திர வாசம்
ஜன்னல்களில்
அலட்சிய முகங்கள் !
அவள் எங்கிருந்தோ
திரும்பிவந்துகொண்டிருகிறாள்.......!
.
12 January 2016 at 20:18
***
கச்சிதமான
பொய்களை
நாலு இடத்திலிருந்து
பகல் முழுவதும்
திருடி எடுத்து வைத்து
நிச்சயித்த
இரவோடிரவாக
உண்மை போலவே
உருவகித்து எழுதிவிடுகிறது
விசுவாசத்தை
ஆராதிக்கின்ற
கற்பனை !
*
12 January 2016 at 09:56
****
வெளிச்சம்
நம்பிக்கையின்
அடி ஆழத்திலிருந்தது
பல நேரங்களில்
காதலின்
குறியீடாகவுமிருந்தது
இருட்டு
அதன் எல்லைகளைப்
பலாத்காரமாகப்
பகலிலும் விஸ்தரித்துபோது
அதற்குள் சேரமறுத்த
வெண்பனி
தனக்கெனவே தனியொரு
உலகத்தையே உருவாக்கியது.!
*
12 January 2016 at 10:26
*****
வழக்கம் போலவே
மின்னல்
கொடியாகித் திரிந்து
வளைந்து
நடு நெற்றியில்
நெளியுதொரு பொட்டு
அது
மின்னும் போதெல்லாம்
இமை வெட்டித்
திகைத்து முடிக்க
அவகாசம் கொடுக்காமல்
விடிவெள்ளி என்று சொல்லியே
இதயத்தில் இறங்குதடி
இடி முழக்கம்.!.
*
12 January 2016 at 11:37
******
ஆத்மாவை
அமைதியாக்கி வைக்க
ஏரிக்கரையில்
நடை போனேன்
அடக்கிவைக்க முடியாத
கோபத்தை
இரைச்சலாக்கியே
காலுக்குள்
நசிபட்ட நடுநிசி
உரிமையோடு
உன் குரலில்
உரையாடிக்கொண்டே வந்தது
அன்பில்லாதவரோடதான்
அதிகம் பேச வைக்குது
உறைபனி !.
*
12 January 2016 at 17:54
*******
முகஸ்துதிகளை
ஒதிக்கிவிட்டு
யாருக்கும் பயப்பிடாமல்
வெளிப்படையாகவே
சொல்வதென்றால்
கவிதையும்
காதலும்
ஒன்றுதான்
வேறொரு பொருளில்
அர்த்தமிழந்து
பிறிதொரு பிறப்பில்
நிராகரிக்கப்பட்டு
ஒரு பொழுதுக்குள்
அழுகிவிடும்.!
*
12 January 2016 at 19:57 ·


..