Wednesday, 3 October 2018

அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து

சிலசமயம் ஜோசித்தால் இன்னொருவர்போல நமக்கு ஜோசிக்கமுடியுமா என்று ,முக்கியமாக ஒரு ஆண் பெண் போல ஜோசிக்கமுடியுமா என்று . ஆனாலும் அதுக்கும் சாத்தியங்கள் இருக்கு , ஒரு பெண்ணின் மனதை   ஒற்றியெடுத்து எழுதுவதில் ஒரு திரில் இருக்கு.   அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து என்ற இந்த எழுத்துருக்கள் ஏழுமே ஒரேநாளில்   3 October 2016 இல்  நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வசித்தபோது எழுதியவை.


                                                                     இரண்டு வருடங்களின் முன் சரியாக இன்றையதினம் எழுதியவைகளை  இப்போது சுவீடனில் வசித்துக்கொண்டு திருப்பி வாசித்தபோது ஹிஸ்டிரியாவில   பிசத்துறது போலிருந்ததால்  கொஞ்சம் கலவரமாக இருந்தது. எப்படி ஒரு பெண்ணின் உணர்வோடு ஒரு பெண் டயரி எழுதுவதுபோல  எழுத்தமுடிந்தது என்று ஆச்சரியமாகவும் இருந்தது.


                                                                            அனாமிக்கா சிவப்போ, வெள்ளையோ , கறுப்போ இல்லை. ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நிறமுடையாள் . பயங்கரப் புத்திசாலி. எப்பவுமே ஏதாவது ஜோசிக்கொண்டிருப்பாள். நிறைய  விசியம் தெரிந்தவள் . மல்டிபிள் பெர்சனாலிட்டி . அனாவசியமாகப் பினாத்திக்கொண்டிருக்கும் வகையும் இல்லை. ரத்தினச்சுருக்கமான வார்த்தைகளில் கத்திமுனையைத் தீட்டுகின்றவள் .


                                                             இப்படி இருந்தும்  வாழ்க்கையின் சில பல கட்டங்களில்  அடுத்த மனிதர்களால் பாதிக்கப்பட்ட   பெண் . அதனால சூழ்நிலைக் கைதி.


                                                                       எப்படியோ அநாமிக்கா ஒரு உருவகம். அவளின் மொழி அவளின் எண்ணங்கள். அவற்றை என் கற்பனையில் நினைத்துப்பார்த்து கொஞ்சம் போல நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையில் ஒரு பாலம்போல   படிமங்களையும் உள்ளே செருகி வைத்த சித்துவேலை . படிமங்கள் ஒரு கவிதையை இழுத்துச்செல்லும் குதிரைகள் என்று நவீன கவிதை விமர்சகர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் .
*


லுவிழந்து
கொண்டிருக்கின்றது
இரவு பூத்த நிலவு,
பொறுமையோடு காத்திருக்கு
பொலிவான வானம்,


நீறு பூத்த மனது
விழுந்துவிடவில்லை,
சூடேற்றிக்கொண்டிருக்கு
குளிர்ந்த நிலம் ,


நீங்காத நேயத்திலும்
தத்துவம் சொல்வேன்,
உனக்கே உனக்காக
பரிவுணர்வுதான்
என் பிரதானமான
உள்ளுணர்வு,


நெளிவுசுளிவுகளோடு
ஓடிக்கொண்டிருக்கு
வற்றாத ஜீவநதி


 என் நாட்குறிப்பின்
முதலாவது பக்கத்தைத்தான்
நீ
ரகசியமாக வாசிக்கிறாய்
அதுவும் எனக்குத்தெரியும்.!( இந்த இரவு ஒரு நோயாளியின் இரவுபோல நீண்டுகொண்டேயிருக்கு ,,சே..! )


*
இரக்கமுள்ளவன்  என்பதும்
விட்டுக்கொடுத்துப் போகும்
நனவிடை வெழிகளில்
வாழக்கூடியவன் என்பதும்
எவளவு பெரிய பொய்


மாறாக

நீ
சுயநலமானவன்.


அப்படித்தான்
நீயே உனக்காக
பரிணாமத்தில்

உருவாக்கப்பட்டிருக்கிற
மூளையையும்

அதற்கேற்ப
மாற்றியமைத்திருக்கிறாய் ,


அளப்பரிய பலம் பற்றிய
ஆய்வு முடிவுகள்
கருத்துக்களையெல்லாம்
தனி மனுஷியாக
விழுங்கவேண்டிய அவசியமெல்லாம்
எனக்கில்லை,


வலியறிந்த
ஒவ்வொரு நினைவிலும்
நீயொரு
வினோத விலங்கென்று
நீயேதான் நிரூபிக்கிறாய்.

( நோ சான்ஸ் ,,,நினைப்பதையெல்லாம் தெரியப்படுத்துகிறது ,,ரூபீஷ்ஷ் !!!!! )


*


உன்
மனப்பான்மையே
இப்போதுமென்
எண்ணங்களை வடிவமைக்கிறது,


என்னில் குதித்து ...

எனக்குள் ஆழம்காண
நான் ஒன்றும் ஞானி அல்ல
மிகச்சாதாரண மனுஷி,


நதியைப் பார்கிறேன்
தவறிய இலைகள்
தப்பமுடியாத தழைகளை
இழுத்து ஓடும் வேகம்
கரையில் கைகட்டி நின்று
நீ
வேடிக்கை பார்க்கிறாய்,


பின்னர்
நீரலைகளின் துள்ளோட்டத்தை
ரசானுபவக் கண்களோடு
கவிதை படைப்பாய்.


நானோ 


 நதியின் பிரவாகத்தை
என்னையே
விழுங்கப்போகிற அரக்கனாய்த்தான்
உருவகித்து அச்சமடைகிறேன் !
 

( இன்றைய மாலைமுழுதும் மழையும் குளிரும் தரும்  மந்தகாசங்கள் ,,பட் ஐ லைக் தட் )


*


நாளைய நாளுக்கு
நாலு வாரம்முன்னே
திட்டுமிடுபவள் நான்
நீயோ
இன்று விடிந்ததே.

இப்பவரை தெரியாதவன்,


பிறகு எதுக்குக்காக
இலையுதிர்காலம் பற்றிக்
குறை சொல்கிறாய் ?


ஒரு
தனிமனுஷியின் வைராக்கியத்தை
பணயம் வைத்து
காம்பு பழுத்த
மஞ்சள் இலையின் விழுதலோடு
நானும்
புறப்பட்டுப்போகும் திட்டத்தை
சென்ற வருடக் கோடையில்
முடிவுசெய்தேன்.


நீ
இதை வாசித்துச் சிரிப்பாய் !


நல்லாவே சிரித்துகொண்டிரு !


ஒன்றுசொல்கிறேன்
ஏற்கனவே
பேசிமுடித்து ஒப்பந்தமாகியபடியே
வேர்களுக்கு
உரமாகத்தான் அதிலும் போகிறேன்.

(திஸ் டைம் ,, வெரி ப்ரௌட் எபவுட்  மை  இன்டென்சன்,,கமிட்மெண்ட்ஸ் ,,தட்ஸ் மீ அண்ட் மை  சோல்  ! )


*


நீ
திருந்தி வந்துவிடுவாய்
என்பதில் நம்பியே
தளராத நம்பிக்கையில்
நம்பிக் கையை வைத்தேன்,...


உனக்கு
யாத்திராவும்
மாயாவும்
கந்தர்வனும்
இரவிரவா இங்கிதம் செய்வதும்
நல்லாவே தெரியும்,


அது முற்றுப் பெறாத
படுக்கையறையில்
இச்சைகளைச் சுற்றிவைத்து
வாழ்வின் மீதேறி
ருசியைத் தூண்டுவதும் உண்மை,


அப்படியில்லாமல் 


 நிறைவை ஏற்படுத்துமாயின்
அது அனுபவமல்ல
விரட்ட முடியாத குற்றவுணர்வு,


அதை
தைரியமாய் எதிர்கொண்டால்
ஏணிப்படிகளாய் உன்னைச் செதுக்கும்
உளிகளாய் அமையுமென்று
தனித்த மனுஷியாய்
சொல்லியே அலுத்துப்போனேன்,


நீ
இப்பவும் என்னைக்
கடைநிலையில்
வாசல்படியாகவே வைத்திருக்கிறாய்.!(மல்டிபிள் பெர்சனாலிடி டிஸோடர் ?  MPD ? ,,அந்த வருத்தமா உனக்கு,,,? அதுக்கும் மருந்திருக்குத் தெரியுமா ?   ஒப்ப்ப்ஸ் ! )


*


ஒன்பது மாதங்கள்
நீ
ஓடிப்போய்ஒதுங்கி நின்று
ஒழித்துக்கொண்டிருந்தாய்,வாயும்வயிறுமா...
வாந்தியை வாய்வரை எடுத்தே
தனி மனுஷியாக வாழ்ந்தேன்,

அம்மா வீட்டிலேயே
பன்னீர்க்குடம் உடைந்து
பாடை ஏறுவதுபோலவே ஏற்றி
அழுக்கான பிரசவவாங்கில்
கடைசி நிமிடம்
எங்கள்
மகள் பிறந்தாள்!நான் தப்பிவிட்டேன்
ஆண்டவனுக்கு நன்றி
அவளும் தப்பியேவிட்டாள்!நேற்று நீவந்து
உன் உயிரை மறுபதிவுசெய்த
எங்கள் மகள்
யாருக்குப் பிறந்தாள் என்று
இரத்தமரபணுப்பரிசோதனை
செய்தேபார்க்கவேண்டும் என்கிறாய்!உனக்கு எதுக்கு
இல்லாத பிள்ளைக்கு வீண் செலவு?அதைக் கேட்டபோது
அந்த ஆசுப்பத்திரியில்
நானும்
உன்மகளும்
செத்தேபோனோம்


 இப்ப சந்தோஷம் தானே உனக்கு.?
 

 ( பனுவல் போற்றுதும்.!!!!! ..போதுமடா சாமி… வெளியே ஜன்னலில் தத்துப்பூச்சிகள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன ..லவல்லி  பட் சூசைட் ?  மே பி )
 

*
சந்தோஷங்களில்
சந்தேகத்தை வேண்டுமென்றே
உள்நுழைத்து
வானவேடிக்கையாக்கிப் பார்த்ததே
நீதான்,...
எனக்குதான்
உன்னைத்தவிர
எல்லாமனிதர்களும்
அன்பின்வடிவாகவேயிருந்தார்கள்,அதிகாலை
அலாரத்தோடு
மணியடித்த பால்க்காரன்,


மொட்டைமாடியில்
உடட்பயிட்சி செய்த

பக்கவீட்டுக்காரன்,

அம்மி பொழியவந்த
சின்னதான 

 நோஞ்சல்ப் பையன்,

ஐயப்ப சாமி கோவிலில்
அப்பாவின் வயது 

 ஐயர்,

மின்சார இணைப்ச் சீராக்கிச்
சரிசெய்தவந்த

வயதான ஐயா,

கொஞ்சம் தாமதித்த
தபால்க்காரன்,


நீதான் 

முடிச்சுப்போட
யாரையுமே விட்டுவைக்கவில்லையே!நீ
எல்லாரையும் திட்டிக்கொண்டு
போயேபோய் விட்டது சந்தோஷம் !இப்போதுதான்
தனித்த மனுஷியாக
எல்லா ஜன்னல்களையும்
வாசல்க் கதவுகளையும்
அகலத் திறந்து வைத்திருக்கிறேன்
காற்று
சுதந்திரமாக வந்து போய்க்கொண்டிருக்கு!

( ஹ்ம்ம்,,,,இன்றைய இரவு துக்கங்களின் ஆக்கிரப்பு,,தூக்கத்தின்  முதல் எதிரி ,,,ஹ்ம்ம்,, )

 .