Tuesday, 12 June 2018

ஜன்னலின் வழியிருட்டு...

மொத்தமாகவும் சில்லறையாகவும் சொல்வதுக்கே   கவிதைகளில் ஏகப்பட்ட வடிவங்கள் இருக்கு. பலரும் பலவிதமாக புதிய கட்டமைப்பு உருவக வடிவங்களை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதில உருவகித்து எழுதும் முறை ஒரு தனித்துவமானது. இன்றைக்கு எழுதுபவர்களும் புதுக்கவிதைப்பாணியில் நிறைய அவன் அவளென்றும், அவள் இவனென்றும், யாரோ ஒருவரை மனவெளிக்குள் இழுத்துக்கொண்டு நிறுத்தி   எழுதுகிறார்கள். இந்த அமைப்புக்குள்  பக்தி இலக்கிய காலத்தில்  ஒரு  தென்னிந்தியப் பெண்மணி மிகவும் சாதனை செய்து இருக்கிறார்.
                                                    
                                                                 அக்க மகாதேவி என்கின்ற கன்னட மொழிக் கவிதாயினி   சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னரே கவிதைகள் எழுதி இருக்கிறார் என்று ஒரு  பதிவில் படித்த போது ,அட அட அட , என்று ஆச்சரியம் கலந்த பிரமிப்பு வந்தது. அக்க மகாதேவி  சிவபெருமானைக் காதலனாகவும், கணவனாகவும் உருவகித்து கவிதைகள் எழுதி இருக்கிறார் சிவபெருமான் சைவ சமயத்தவர்களின் முழுமுதட் கடவுள் என்று நம்புகிறார்கள். . ஒரு எல்லாம் வல்ல கடவுளை ஒரு சாதாரண மனுஷி எப்படி அவ்வளவு சிம்பிளாக ஒரு கவிதைவடிவத்துக்குள் இணைக்கமுடியும் என்ற குழப்பம் இருந்தது.
                                        
                                                    வழக்கம் போல  என்னைப்போல  ஆர்க்கோளாறுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்ட     தேடுதளத்தில் சொடுக்கிப் பார்க்க. அக்க மகாதேவியின் கவிதைகள் பக்தி இலக்கியகாலத்தில் மீரா கண்ணனை நினைத்துப் பாடிய பாடல்கள் போலத்தான் இருந்தது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும்  கவிதைகள் அதிகம் ஆன்மிகத்தைத் தாண்டிப் போகவில்லை.  ஒரு விதமான சமய நம்பிக்கை  எல்லைக்குள் நின்று சுழண்டுகொண்டே இருக்கிறது.
                                                   
                                                    அக்க மகாதேவி பெண்ணடிமைப் போக்கையும், சாதியரீதியிலான கொடுமைகளையும் எதிர்த்துக் குரல்கொடுத்த  புரட்சியாளரும் என்று சொல்கிறார்கள்.  வசன கவிதைகளின் மூலம், சிவபெருமான் மீது இவர்கொண்ட பக்தியை ஆழமாக உணர்த்தியுள்ள அக்க  மகாதேவி கவிதைகள் " வீரசைவ இயக்கம் " என்பதுக்கு முன்னோடியாக இருந்து இருக்கு. தனிப்பட   அக்க மகாதேவியின் திருமண  வாழ்க்கை, துக்கமும் துணிச்சலும் நிரம்பியது. கன்னட பக்தி இலக்கியத்தில் பெருமையோடு கூறப்படும் இவரது வாழ்க்கை வரலாறு வீரம் செறிந்த கதை என்கிறார்கள்.


                                                       அப்புறம் இந்த வருடமும் ,சென்ற வருடமும்   முகநூலில் நிலைத்தகவலாக எழுதிய எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 
மனதாகவே செல்லும் 
வாழக்கையையே கொண்டுவந்து 
கைப்பிடித்து 
அழகான பயணத்திற்குள் 
அழைத்துச்சென்ற 
நமக்குரிய
ஆதி நிறங்கள்தான்
அழிந்து விட்டதே !
ஆனாலும் .
நீ
சமைக்க விரும்பாத
நாட்களிலெல்லாம்
அழகைத்தானே ஆராதித்தாய் !
நானும்
முன்முடிவுகளைக்
காதலின் மீது திணிக்காது
விரதமென்று
பொய் சொன்னதை
உன்
கைவிரல்
நகப்பூச்சுக்கூட
நினைவூட்டுகின்றன !
....................................................................அந்த 
மரஅணில் 
வழிதடுமாறி 
வீதிக்கு வந்திருக்கலாம்,
பாதைகடந்த 
வாகனமொன்றின் சில்லை
மர அடியென்று நினைத்திருக்கலாம் ,
நெடுஞ்சாலை
அதி வேகத்தில்
முகமிருந்து வால்நுனிவரையில்
சப்பென்று நசிந்து கிடந்தது,
ஒவ்வொரு
வாகன ஏறிமிதிப்புகளும்
கறுத்தப் பாதையிலேயே
அதையொரு
சிவப்பு நிற மழுப்பலோடு
அடக்கமாக்கிவிடலாம் போலிருக்கு !
யாவரையும் வசீகரிக்கும்
ரெண்டு பக்கமும்
இன்னும் நிறைய மரங்களும்
மர அணில்களும்
நடுவில்
விதியும் !
..................................................................…


தொடங்கிய 
இடத்தைச் சென்றடையும்வரை 
சுற்றுப் பாதையில் 
சுற்றிநகரும் 
அனைத்தின் மீதும் 
விருப்பு வெறுப்பின்றி
வெளிச்சத்தை தூவிக்கொண்டே
உரத்துக் கதைக்காமல்
புன்னகையுடன்
சகபயணியாக வருகிறது
நிகழ்காலம் !
ஒரு
விட்டேந்தியாய்
அலைந்துகொண்டிருக்கும்
மனதிலிருந்து
சொல்லவேண்டுமென்றால்
தனியாகப் படிக்க
ஓராயிரம் பேர்
பிரவேசித்திராத வெளி இது !......................................................................


நான் 
நாடற்றவன் என்பதை 
நேரடியாகச் 
சொல்லியிருக்கலாம். 
ஆனால் 
அவர் சொல்லவில்லை
நிரப்பிக் கொள்ளச் சொன்ன
இரவல் வாங்கிய
இடங்களில்
வெளிச்சங்களேதுமில்லை !
நேராகச்
சுட்டுக்காட்டுவதில்
உடன்பாடுகள் இல்லையென்றார்,
எனக்கு
ஊகிக்கக்கூடியதாகவிருந்ததெல்லாம்
அடைக்கலமாகி
இருட்டில்த் தடவிப்பார்த்து
ஒரு
சூனியவெற்றிடத்தில்
அமர்ந்துகொள்வது போலிருந்தது !........................................................................…முகத்தை மறைத்து 
இருள் விலகுவது போல
உட்காந்திருந்தாள் !
உள்ளங்கையில் 
அனாதரவாகக் கிடந்தது
மருதாணி ஓவியங்கள்,
அவளின்
நீள் மயிர்க்கற்றைகளில்
சிக்கெடுத்து
அள்ளிமுடிய முன்னர்
திசையறிந்து செல்லும்.
நட்சத்திரங்களை
ஆங்காங்கே
பின்னிச் செருகிவிட்டேன் !
இப்போது
இன்னுமிருட்டாகவிருக்குக்
கருங்கூந்தல் !....................................................................


தாழ்வாரக் குரலில் 
கதைத்துமுடிய 
உரத்து வாயெடுத்துச் 
சிரித்துக் கொண்டிருந்தார்கள். 
அது 
அனிச்சையாய்
வழிந்து பரந்து பரவி
என்னை வந்தடைந்த போது
சட்டென்று
திருப்பத்தில் சுதாகரித்தேன்,
என்னவாக இருக்கும்?
இதுவரை
எங்கோ இருந்த
என்னைமறந்து சிரித்த
ஒருநாளில்
சத்தமாகச் சிரிக்காவிட்டாலும்
உள்ளுக்குள்
நானும்
இப்படிதானே இருந்தேன். !
.............................................................


விளிம்பு தெரிந்த
சிவந்தநிலா
உறங்கியிருக்கலாம் !
பால் வீதி
முழுமையாக ஒளிந்து 
தென்கிழக்கில்
ஒரேயொரு விண்மீன்
மூக்குத்தி சிமிட்டியது !
மின்விளக்குகளில்
சூழ்ந்து கொண்டிருந்த
நேரம்
ஏதுமின்றி நகர்ந்தது.!
இரவுகளில்
இந்தமாதிரி
எண்ணங்களைத் திரத்திவிட்டு
வானத்தை
வேடிக்கைப் பார்க்க
அடிப்படைக்காரணங்கள்
தேவையில்லைதான்.!
..........................................................................


சாயுங்காலம்
முழுநிலாநாள்.
கிழக்கில்
ஜன்னலின் வழியிருட்டு
பச்சைமலைகளில் 
எழுந்திருக்க வேண்டும்!
அலங்கார
நகர வெளிச்சம்
நட்ச்சத்திரங்களைக்
கூட்டி அள்ளிக்கொண்டுபோய்
ஒதுக்கிவிட்டது,
தொடர்வண்டிகளின்
இரைச்சல்களில்
குருவிகளின்
பாடல்கள்
கேட்கமுடிவதில்லை,
உயிர்த்தெழுந்த
ஞாயிற்றுக்கிழமை
வெறித்தபடி
திராட்ச்சைப்பழரசத்தை
நிரப்பிய
கிண்ணத்தை
முட்டி முகர்ந்து பார்க்கிறேன்
வாசனையில்
இயற்கையிருந்தது !
....................................................................ஒரு 
தனிப் பறவை 
எதிர்வினைகளில்லாத 
மழை மேகத்தை ,
சுழல் காற்றின் 
வாய்ப்புகளில்ப்
புறக்கணிப்புக்களை,
எல்லைகளை
நீட்டி வைக்கும்
ஆழ்கடலின் வானத்தை,
சமரசம் செய்துகொள்ளாத
பெரும் புயலின்
சமிக்ஞைகளை
எதிர்கொள்ளவேண்டிவந்தால் .
சரியான நேரத்தைத்
தேர்ந்தேடுத்து .
சிறகுகளை மட்டும்
விரிக்கத் தெரிந்தால்
வேறெந்தத்
திசைகளும் தேவையில்லை !.
.........................................................................


.

ஒரு
அமைதிப் பூங்கா,
ஒரு
போர்வீரனின் சிலை,
ஒரு 
பள்ளி ஆசிரியை
ஆரம்பக் குழந்தைகளுக்கு
அதிதீரவரலாறு விளக்குகிறாள்!
அவன் கையில்
பதம் பார்க்கின்ற
கூர்மழுங்காத வாள்,
விசுவாசத்தின்
ஆதிக்கக் குறியீடாக
இரும்புக் கவசங்கள்,
முன்னம்கால்கால்களில்
எகிறிப்பாயும் வெள்ளைப் புரவி ,
கண்களில்
ரத்த நிறத்தில் கொலைவெறி,
அதிகாரமென்றால்
அடுத்தது அராஜகம்தானே!
குழந்தைகள்
தமக்குரிய
எல்லைக்குள் நின்று
குதிரையின் வாலைத்
தடவி விளையாடுகிறார்கள் !