Sunday 29 March 2015

ஒரு ஞாபகம் மட்டுமே...

மரம் 
விழுத்திய 
இலையின்
நல்ல நினைவுகள்
நிறமற்ற 
வெய்யிலில்ப்
பரவலாகப் பறந்து
கொண்டிருக்கு...

கோடை மழையில்
உறை பனியில்
மஞ்சள் வெயிலில்
மெல்லிய தென்றலில்
பறவையின் இறகில்
அதன் அந்தரங்க
நினைவு நிறங்கள்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கலாம்

இறப்புப் போல
நேரம் குறித்த
உடைப்பின்
தொடர்ச்சியாக
இலை
கடைசிவரை
மரத்தின்
காலடி உறவை
உதறி விட்டு
எங்கேயும்
செல்வதில்லை....

மரம்
நம்பும் உலகத்தில்
இலை
ஒரு ஞாபகம்
மட்டுமே,
இடைவெளிகளை
நிரந்தரமாக நிரப்பும்
இருப்பு
அல்ல............... 
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 10.06.14

செபமாலை மாதவே!

செபமாலை மாதவே! புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்க்கடைகளில் பச்சைக் கலரில், பச்சைப் போத்தலில் அடைத்து விற்கப்படும்  திரவம் வெறும் சீனியும், பச்சை கலரிங்கும் போல தான் இருக்க, அதன் உண்மையான வடிவம் ஒரு காலத்தில் யாழ்பானத்தில வசாவிளான் என்ற  வலிகாமம் வடக்கில் உள்ள இடத்தில இருந்த தோலைக்கட்டி " மவுன விரதப் பாதிரி " மார்களின் ஒரு தியான மடத்தில், அதனுடன் இணைந்த ஒரு செறிவுக் குளிர்பான உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தோலக்கட்டி நெல்லி கிரஸ்  என்ற உண்மை இப்பவும் நெல்லி மரங்கள் சாட்சியாக உலகப்புகழ் வரலாறாக இருக்கு.

                                 இலங்கை தீவின் வடக்கு தொங்கலில் இருந்த அந்த,  தற்சமயம் புத்தபெருமானின் புதல்வர்கள் பலாலி அதியுர் பாதுகாப்பு வலய ராணுவமயமாக்கலில் அடி வேண்டித் தரை மட்டமாக்கிய தோலைக்கட்டி பாதிரிகள் மடத்தில் இருந்துதான், ஐக்கிய இலங்கையில் எல்லா இனமும்,மதமும் ஆளை ஆள் சந்தேகிக்காமல் அருகருகே இருந்த போது தென்பகுதியின் பொறுத்த சிங்கள நகரங்களான காலி ,மாத்தறை, உட்பட ,சண்டைக்கு முந்திய இலங்கை  எங்கும் தாகம் தீர்த்த " தோலைக்கட்டி நெல்லி கிரஸ்-" தயாரிக்கப்பட்டது யாழ்ப்பான  ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குப் பின்னர் நடந்த ஒரு  ஆச்சரியம் ,

                                   அதைவிட அதை "கொக்க-கோலா "  போன்ற ஒரு ரகசிய " ரெசிப்பியாக " வைத்து உற்பத்தி செய்தவர்கள் "கிறிஸ்தவ  மவுன விரதப் பாதிரிமார்கள் " என்பது இன்னுமொரு ஆச்சரியம்! அந்த நெல்லிகிராஸ் அடைத்து வரும் பச்சைக் கலர் போத்தல் ,அந்த போத்தலின் லேபலில் உள்ள ஒரு சின்னத் தேவாலயத்தின் படம், இது ரெண்டுமே காணும் பார்க்கவே வெய்யில் நாட்களில்  நுனி நாக்கு வெளியே தள்ளி  நடு நாக்கில நெல்லிக் கிரஸ் ஊறவைக்க ...

                     " தோலக் கட்டி மடம் 1928 இல் பாதிரியார், சன்யாசி தோமஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அன்றைய பாப்பரசர் பியஸ் XI, இன் அழைப்பின் பேரில் அமைதியான வாழ்வில் வாழ இதை ஆரம்பித்த  இவர்களது கத்தோலிக்கப் பிரிவு ரோஸரியன்ஸ் என்றும் . இவர்களது நோன்பு 24 மணி நேரமும் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருப்பது. அதாவது விழித்திருக்கும் நேரமெல்லாம் மாதாவை நினைத்து செபம் செய்வது, அதனால்தான் அவர்கள் யாருடனும் அனாவசியமாகக் கதைக்கமாட்டார்கள். கதைப்பதைக் கண்டவர்கள் எனக்குத் தெரிந்து யாருமில்லை. "  என்று அவர்களை நேரடியாப் பார்த்த சுவிடனில் வசிக்கும் சிந்தனையாளர்  சார்ல்ஸ் போமன் சொல்லியுள்ளார்.

                                   மவுன விரதப் பாதிரிமார்கள், அவர்கள் தங்களுக்குள்ளும், வெளிஆட்களோடும் அதிகம் பேசவே மாடார்களாம். அவர்களைப் போலவே, இங்கிலாந்தில் இருந்து வந்து குடியேறிய , ஒரு கத்தோலிக்க  மவுன விரதப் பாதிரிமார்களின் "மிசனரி 1300 வருடங்களின் முன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இருந்து சில மையில் துரத்தில் உள்ள ஹோவ்ட் ஓயா என்ற தீவில் இருந்து இருக்கு ! நோர்வே அகழ்வாராச்சி திணைக்களம் பாதுகாத்து வைத்துள்ள  அவர்கள் வாழ்ந்த அந்த  சிதைவடைந்து போயும் காலம் கருங்கல்லில் வரலாற்றைப் பதிந்துவிட்டுச் சென்ற பாழடைந்த வாழ்விடத்தை  பார்த்த போதுதான்  " செபமாலை  மாதவே.."   என்று சொல்லத் தோன்றியது....

                       அந்த தீவுக்கு கோடை காலத்தில் ஆண்களும், பெண்களும் உடுப்புகளை மிச்சம் பிடிச்சு வெய்யில் காயப் போவார்கள், இப்ப உண்மையை உங்களிட்ட மட்டும் சொன்னா என்ன..."அரை நிர்வாணப் பெண்கள் வெயில் காய்வார்கள் அந்த அழகிய தீவில் ..".என்ற ஒரு தகவல் கிடைத்த உட்சாகத்தில பார்க்கப் போய் தான் நானும், நோர்வேயின் ஆதியான மக்கள் வசித்த ஹோவ்ட் ஓயா மிசனரி பாழடைந்த தேவாலய வாழ்விடம் என்ற இந்த  இடத்தைப்பார்க்க வேண்டி வந்தது.

                     சென்ற வருடக் கோடை காலம் ,நேரம் கிடைத்த போது ,ஒஸ்லோ நகரின் முக்கோணக் கழிமுகத்தில் ஒஸ்லோ பிஜோர்ட் என்ற கடலின் நடுவில் ,ஒஸ்லோவை பார்த்தவாறு சில நிமிட நேர பாடிக்கொண்டே போகும்  படகுப் பயணத்தில் உள்ள  தீவுகள் எல்லாத்தையும் பொதுப் போக்குவரத்துப் படகில் சென்று சுற்றிப் பார்த்த போது, ஹோவ்ட் ஓயா என்ற தீவில் அரை நிர்வாணப் பெண்கள் கடற்கரை ஓரம் வெயில் காய்வார்கள் எண்டு ஒரு நண்பர் பல வருடங்களின் முன் சொன்னது  கேள்விப்பட்டு,கடற்கரைகள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை அதால் கடலும் அலையும் கரையும் தேடி அந்த தீவை நடந்து சுற்றிப் பார்த்த போது இந்த பாழடைந்த வாழ்விடத் தொகுதி அரை நிர்வாணப் பெண்களை விடக் கவர்சியாகா இருக்க, கொஞ்சம் விவரமா ஆராய்ந்து பார்த்தேன் !

                           ஆயிரம் வருடம் முன்னர் இந்தப் பாதிரிமார்கள் வாழ்ந்த முறை பற்றி இந்த பாழடைந்த கருங்கல் கட்டிடத்தின் முன் ஒரு பலகையில் விரிவாக எழுதி இருந்தார்கள். மிசனறிப் பாதிரிமார்கள் வாழ்க்கை கண்டிப்பு நிறைந்தது எண்டு கேள்விப்படதுக்கு எதிராக, இந்தப் பாதிரிமார் ,சமய நம்பிக்கை இல்லாதவர்களையும் தங்களோடு வைத்து இருந்து இருக்குறார்கள், என்ன மவுனமாக  இருக்கவேண்டும். அவளவுதான் கொண்டிசன்!

                                    இப்ப  இந்தப் கத்தோலிக்க  மவுன விரதப் பாதிரிமார்களின் "மிசனரி 1300 வருடங்களின் முன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இருந்த பாழடைந்த அவர்களின் வாழ்விடங்கள் சிதைந்து உள்ள பகுதியில் நோர்வேகாரர்கள் நவீன இலத்திரன்  எலட்ரிக் கருவிகளால் தோண்டி தோண்டி ஆராய்ச்சி செய்கிறார்கள் ஆயிரம் வருடம் முன்  எப்படி எலும்பையும் உறையவைக்கும் உறைபனிக் குளிரை சாமாளித்து பாதிரிகள் ரோசரி மாலையை உருடிக்கொண்டு வாழ்ந்தார்கள் என்று அறியவும் , அடிப்படைத்தேவைகளை சமாளிக்கத் தேவையான வசதிகளை  எப்படி அவர்கள் உருவாகினார்கள் என்பதையும் அறிய.

                                      இந்த மிசனரி பல வருடங்கள் இன்றைய வெள்ளையும் சொள்ளையுமான நோர்வே மக்களின்  கொள்ளுத்தாத்தாகளான வைகிங்குகள் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் காலத்திலும்  இதே இடத்தில இருந்து இருக்கு. மிகவும் கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொல்லும் ,சண்டை பிடிக்கும் மனப்பான்மை உள்ள வைக்கின்குகள் இந்தப் பாதிரிமார்களின் கழுத்தில கயிறு போட்டு நெரிக்காமல்  மவுனமாக இருந்தது இன்னுமொரு ஆச்சரியம்.

                                     அதன் பின் வந்த சில நூற்றாண்டில் நோர்வே ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து ப்றோடாஸ்தான் கிறிஸ்தவத்துக்கு மாற ,அரசாங்கம் இந்த மிசனரி இடத்தை பலவந்தமாக கைப்பற்ற ,மவுனமான அந்தப் பாதிரிமார்களின் கதை அதோட  மவுனமாகிவிட்டது! இப்ப இந்த இடம் ஒரு கோடை காலஅரை நிர்வாணப் பெண்கள் வெயில் காய் சுற்றுலா மையம் .அவளவுதான் !

            மவுன விரதப் பாதிரிமார்களின் மிசனரி 1300 வருடங்களின் முன் இருந்த இடத்தில நல்லாப்  புல்லு முளைத்து இருந்தது, கருங்கல்லு சுவர்களில் கடல்ப் புறாக்களின் எச்சங்கள் மிச்சங்களாக இருந்தது, உப்புக் கடல்க் காற்று  பல கருங்கல் சுவர்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்த அடையாளங்கள் இருக்க, அப்படியே  அந்த இடத்தின்  பெயர் மட்டும் இன்னும் " மவுன விரதப் பாதிரிமார்களின் வாழ்விடம் " எண்டு நோர்வே மொழியில்  ஒரு மொத்தமான மரப்பலகையில் உளியால தோண்டி எழுதி இருந்தது , அந்தப் பெயர் மட்டும் இன்னும் ,உலகம் எங்கும்  பலவருடங்களின் முன்னமே அழிந்து, உற்பத்தியை  நிற்பாட்டிய  " தோலைக்கட்டி நெல்லி கிரஸ்-" பெயரில் இன்றும் ஒரு பச்சை கலர் திரவம் உலகம் எங்கும்  உலாவுவதைப்போலவே  ஒரு பெயராகவே உலவிக்கொண்டே இருக்கலாம் ......

.


நாவுக் அரசன்

ஹுவாட் ஓயா ,ஒஸ்லோ பிஜோர்ட்
நோர்வே.