Thursday 3 November 2016

ஏரிக்கரைப் பல்லவிகள் ..முதல்த்தொகுப்பு

உற்சாகத்தை இழுத்துக்கொண்டு கோடை விடைபெற்றுப் போன பல மாதங்களின்பின் இன்று சொங்க்ஸ்வான் ஏரிக்கரையில் நடக்க ஆர்வம் வந்தது. இரக்கமுள்ள வெய்யில் வானத்துக்கு கொஞ்சம் நீல நிறம் பூசிவிட்டதால் நிகழ்காலத்தை நம் முன்னே கட்டமைக்கும் எந்தவொரு படைப்பாளியையும் இன்னுமொருபடி ஏற்றிவைக்கும் அதிசயம் நடந்தது .

சென்ற  வருடம் மட்டும் நூறு  சொச்சம் கவிதைகள் சொங்க்ஸ்வான் ஏரி பற்றியே எழுதியிருந்த போதும், பத்து நிமிடம் நடந்தால்,,அல்லது அஞ்சு நிமிடடம் சைக்கிளில் மிதிச்சால் போகக்கூடிய தூரத்தில் இருந்தும் ஏனோ பஞ்சி பிடித்து ,மனம் அழுத்தமாகி இந்தவருடம் அந்தப் பக்கம் போனதில்லை . 

இன்று அதையெல்லாம் உடைத்துக்கொண்டு இறங்கியாச்சு  அவற்றின் நினைவு அலைகளில் மிதந்து எழுதிய கவிதைகளில் கொஞ்சத்தை ஒரு தொகுப்பாகத் தொகுக்க. இந்தப் படங்களும் என் மொபைல் பொன் மகாலக்ஸ்மி எடுத்தவை. படங்களே ஏகப்பட்டது இருக்கு. அதையே ஒரு தொகுப்பு ஆக்கலாம்.

சில படங்கள் நிம்மி அலெக்சாண்ட்ரா என் மொபைல் பொன்னில் என்னை எடுத்தவை. நிம்மி அழகாப் படம் எடுப்பாள். அதுவும் நான் பார்க்காத போது என்னை எடுப்பாள். அந்தச் சின்னப்பெண் எப்படியோ முக்கியமான சிந்தனைப் போக்கை சடார் என்று எடுத்துவிடுவாள். நிம்மி அலெக்ச்சாண்டரா இப்போது என்னோட பேட்டையில் இல்லை. அவள் போனது என்னை விட  சொங்க்ஸ்வான் எரிக்கரைக்கே பெரிய இழப்பு

நீர்ப் பறவைகள் தண்ணீரில் கீறிக் கொண்டிருந்த கோடுகள் மெல்லிய அலைகளைக் கரைகளை நோக்கித் தள்ளிவிட குளிர்கால ஒத்திகைகளில் நிலமும்,கரையும், அலையும் மும்மரமாக இருப்பதுபோல இருந்தது. மரங்கள் மஞ்சள் காமாளை பிடித்த மாதிரி மஞ்சளாக எஞ்சி இருந்ததெல்லாம் அந்தப் படங்களே பதிவாக்கியிருக்கு

தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் குறியீடு வடதுருவ நோர்வேயின் உறைபனிக்காலம் , அதைத் திட்டிக்கொண்டு கடப்பதில் அரைவாசி உயிர் போய்விடும். மைனஸ் டிகிரி குளிர் இழந்து போன வெப்ப மண்டல நாடுகளின் புழுதி வாசத்தையும் ,வியர்வைப் பிசுபிசுப்பையும் இனி நினைவுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டுவரும்

இனி வரும் உறைபனிக் காலம் முழுவதும் தண்ணி பனிப்பாளங்களாக உறைய அதன் மீது பனிச்சறுக்கி விளையாடுவார்கள் இளையவர்கள். உறைந்து போன நேரத்தில் அதன் நினைவில் நான் இருப்பேனா என்று தெரியவில்லை.ஆனால் என் வாழ்க்கை பயணம் எங்கும் அதன் கால் சுவடுகள் என்னைத்  தொடரும்..

என் மீள் வருகை எவளவு தூரம் அதுக்கு முக்கியமென்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் இப்போதைக்கு ஏரிக்கரையும் அதன் சுதந்திரங்களை எல்லைப்படுத்திக்கொண்டு பருவ மாறுதலோடு சில நிபந்தனைகளுடன் வாழ்வது போலத்தான் தெரிகிறது !

பழைய மரவாங்கில்
நெளிந்தபடி
சமீபத்தில் 
ஏரிக்கரை வரைந்த
வரிகளைப் பிரித்து
முதலிலிருந்து
வாசிக்கத் தொடங்குகிறேன்...

அனுபவப்பட்ட
குளிர் வரமுதலே
பயத்தில்
பியேர்க் மரம்
மஞ்சள் இலைகளைக்
கொட்டி விட்டது

நன்னீர்ப் பறவை
வெப்ப இறக்கைகளை
சுதாகரித்துச்
சுத்தமாக்கி
இறுக்கித்
தயாராகி விடுகிறது,

கோடைக் காற்று
தவற விட்ட
சருகுகளை
வெய்யில்
இன்னும் அதிகமாக
வறட்டி எடுக்குது

எந்தவித முன்
அறிவிப்புமின்றி
ஏதாவதொரு வெள்ளிக்கிழமை
புற்களுக்கு
ஓய்வுகிடைக்கிறது

வழமைபோல
காத்திருக்கச் சொல்லி
எழுந்து போனபோக்கில்
திரும்பி வர
மறந்து விடுகிறது
கவிதை !

உந்திப் பறக்கும் 
நீர்ப்பறவைகள் 
விசிறும் 
பன்நீர்த் துளிகள், 

சமவெளியைப்
பிரித்து வைத்துக்கொண்டு
எம்பிக் குதிக்கும்
மலைகள்

ஆர்ப்பரிக்க விரும்பாத
உறவுகளை
முறித்துக்கொண்ட
ஏரியின் அலைகள்,

ஓலமிடாது
தனியாக ஒதுங்கிவிடும்
ஆதாரமாகிய
அசாதாரண அமைதி,

அடிப்படையில்
அடையாளமே தெரியாத
சமதளத்தில் நகரும்
காற்றின் சலசலப்பு,

வசந்தத்தைச்
சொந்தம் கொண்டாடும்
பறவைகளின் நினைவோடு
பேர்ச் மரங்கள்

இயற்கை
அதன் எதிரொலிகளில்
வழிகாட்டும் வாய்ப்புக்களை
நேர்மையாக
மொழிபெயர்க்க

அம்மாவின்மடி பாதுகாப்பான
தாய்மை உணர்வு
அது எப்போதுமே எதிலுமே
அபாயகரமானது
நடந்து விடுமென்று
குழந்தையின் உலகத்தில்
கனவு காணவும் விடுவதில்லை.
இந்த இடத்தில்
பேசிக்கொண்டே
முடிக்க விரும்பாத
சந்திப்பு
கால்களைத் தொங்கவிட்ட 
சிற்றோடையின்
சலசலப்பு

பிளாஸ்கில்
சூடான காப்பி
இறுக்கமில்லாத
புகை தந்த
மால்பரோ லைட்

பிறகு
ஏரியைச் சுற்றி
வியர்க்க வியர்க்க நடை
வளைவுகளில்
தாமதம்
என் நிழலில்
நீ ஒதுங்கி எடுத்த
சின்ன ஓய்வு

இன்னுமொரு முறை
படித்துப் பாரடி
வருடங்கள் சந்திக்கும் நிகழ்வு
மறுபடியும்
இப்படி இருக்குமா
தெரியவில்லை...!

சில நேரம்
கொட்டித்தீர்ப்பதற்கான
ஒரு சந்தர்ப்பமாக
இதை
எழுதியிருப்பதால் 
என் வார்த்தைகளை
நிலம்
நம்பப்போவதில்லை
தண்ணீர்
அக்கறையான
உணர்வுகளை
ஒருபோதும்
புறக்கணிப்பதேயில்லை
ஆனாலும்
இரண்டுமே
அடுத்தவர் உரிமைகளை
வானத்தைப்போல
அங்கீகரிப்பதில்லை


கோடையில் 
சிதறிய சொற்களிலிருந்து
இறங்கி வந்து 
அதன் வழியில் 
போய்க்கொண்டிருக்கிறதில்
இனி உருவி எடுத்து
எதைத்தான் எழுதுவது ?
.
வாழ்கையில்
அடிக்கடி வரும்
பிரக்ஞைப்பூர்வமான
மௌனங்களை
மதிக்கத் தெரிந்த
வெய்யிலும் வெளிச்சமும்
இனி
ஏரிக்கரையில் இல்லை !
.
சம்பவங்கள்
முக்கியத்துவம் பெறுவதுக்கு
அபத்தத்தை
தூக்கி எறிந்துவிட்டு
முதல் பக்கத்திலிருந்து
ஆரம்பிக்கும்
வெளிப்படைகளுக்கு
கரைகளின் பாதையில்
கவனிப்புமில்லை

அர்த்தமுள்ள
வாசிப்பை என்றுமே
எழுத்துக்களால்
கலைக்க விரும்பாத
சில கவிதைகள்
மரியாதையின் நிமிர்த்தம்
இன்னும்
எழுதப்படாமலே
தள்ளிப்போடப்படுகிறது.

இந்தக்
பாதையின் பயணத்தில்
உன்னைப்பற்றிய
பாதச் சுவடுகள்
ஒரு
திருப்பத்தில்
சரிவில்
ஏற்றத்தில் இறக்கத்தில்
பதிந்திருக்கலாம்
அல்லது
முற்றுமுழுதாக அழிந்துமிருக்கலாம்
உன் 
சமனற்ற 
வெற்றுப் பக்கங்களால் 
நிறைந்து போன 
இது போன்ற 
கரைகளில்
நேரத்தை விழுங்கி
வீணடித்துத்
தேடமாட்டாய்
என்றுதான்
நினத்துக்கொண்டிருக்கிறேன்
கரையில்
விழுந்து மோதி
திரும்பிச் செல்லும்
அலைகளும்
அதைத்தான் சொல்கிறது

அசைந்தாடியே
இரவெல்லாம் 
ஜோசிக்க வைத்தேன்
மரங்கள் இலைகளை உதிர்த்துவிட்டு 
உதறிக் கொண்டு நிற்கும்
ஏரிக்கரையில்
உன்னைச் சந்திக்கும்
நேரத்தை

முடிவாகப்
பேசிமுடிக்க வேண்டிய
பெரிதாக்கப்படாத
அற்ப விசியம்
காலையில்
ஒத்திகையிலேயே
மோத முடியாமல்
வாசல்படி வெளிச்சத்தில்
இடறிவிட்டது
.
தறிகெட்டு
திசைதெரியா அலையில்
வழிகாட்டலின்றி
நிலை தடுமாறும்
ஒரு சந்திப்புத் திட்டம்
கோடை அள்ளிக்கொட்டியது போல
எண்ணமாக
உருவெடுக்குதில்லை

சொல்லடி லூசு மவளே
இதுக்குப் பிறகு
இந்தப் பாறையில்
நாடிக்குக் கொடுத்த கை முண்டில்
நீயும்
அதன் காலடியில்
சப்பாணிகட்டி குந்தி இருந்து
நானும்
முகங்களில்
அறிகுறிகள் தேடியெடுத்து
அப்படி என்னதான்
முடிவு எடுக்க முடியுமடி ?

குளிர்
அலைக்கழிக்க
வருவது தெரிந்தும்
மோக்கே பறவை
அது 
உள் நுழைந்து
வெளியேறுவது பற்றி
அலட்டிக்கொள்ளாமல்
தன்னைப்
படமெடுக்கச் சொன்னது

இனிக்
காலையில்
எழுந்து பறப்பது முதல்
இரவு வரை
உயிரைப் பிடித்து
சுவாசிக்க
ஒருமுகமாக இருக்கும்
தருணங்கள் சிறிதளவிலேயே
இருக்குமென்று
நான் நினைத்தேன்

உறைபனிக் காலமெல்லாம்
என் கவிதையின் மனம்
எப்படித் தர்க்கம் புரியுமென்பதே
அதன்
நிலைமைக்கு
என்னோட ஆதங்கம்

எல்லாமே கிட்டத்தட்ட
ஒரே மனஅமைப்பைச்
சார்ந்தது போல
இயங்கக்கூடிய
சொங்க்ஸ்வான் ஏரிக்கரையில்

இந்த முறையல்ல
அடுத்த முறையும்
வெற்றி பெற்றுவிடுவேன்
என்று
சிறகுகளால்
காற்றில் எழுதியது
பறவை.

நம் 

கைகளை பிடித்த

விருப்பங்களை

நிறைவேற்ற 

சில அனுபவங்கள்தான் 

இன்னும் ஏனோ

உயிர்ப்புடன் காத்திருக்கின்றன 

அடையாளப்படுத்த முடியாத 
அலைக்கழிப்புக்கள் 
அழுத்தங்களில் 
உடைந்து போக 
கரைகளற்ற 
சமுத்திரத்தில் 
நீச்சல் தெரியாமல் 
நீந்திக் கொண்டிருக்கிறது 
மனது 

கனவுகளிலிருந்து 
விடுவித்து 
நிகழ்காலத்தில் 
நிமிர்த்தி வைக்கக்கூடிய 
வலிமையுடையவர்கள்
நட்பை 
நிழல் ஆக்கி வைக்க

தேவையில்லாத 
எல்லாவற்றையும்
புரிந்துகொள்ள நினைக்கும்
அறிவு
வெளியேற முடியாத 
அலைகளோடு 
விழுந்து கொண்டே
தனித் தீவாகிவிடுகிறது.


நீண்ட 

மனவெளியில்

பிரியமில்லாமல் நடக்கும் 

வாக்குவாதம் 

திறனாய்வுகளின் வழிகளைப்

புரட்டி போடுகிறது.


வருடமெல்லாம் 
கதைசொல்லி 
உள் நுழைந்து சம்பவங்களை 
அதற்கேற்றாற் போல
வரிகளாக்கப்
புலனாய்வு செய்கிறது 
ஆழ் மனது

ஓரிடத்தில் 
இத்திறமையை 
எப்படியாவது கையாண்டு 
பெறுமதியுள்ள போதே 
பதிவு செய்துவிடத் 
துள்ளுகிறது 
ஆர்வம்

போலித்தனமான ,
அடையாளத்தை 
அதன் 
அசலான தன்மையுணர்த்தி 
விரிவாக எழுத விரும்ப
நாலாவது 
இடைவெளிக்குப் பிறகு
சொல்லவென
நினைத்ததெல்லாம் 
மறந்துபோய்விட்டது.


ஒரு 

மனநோயாளியின் 

குறிப்புக்களில் 

நீங்கள் எதிர்பார்க்கும் 

நல்ல மனிதன் 

இருக்கவேண்டிய அவசியமில்லை


பலவீனமானவர்களை 
ஏறி மிதிப்பர்கள் 
ஒன்றில் 
கருத்துகளைக் கேட்கலாம்,
அல்லது 
விலத்திப் போகலாம் ,
இல்லையென்றால் 
எதிர்ப்பு தெரிவிக்கலாம்,

தவறானது 
எல்லாவற்றிலும் .
இடையில் மறுத்து 
உங்களுக்கு 
தெரிந்த நியாயத்தை 
ஏளனமாக 
விவாதிக்க ஆரம்பிக்கலாம்

முடியுமாயின் 
உங்களின் 
கேலிக் கூத்து 
இயல்புகளிலிருந்து 
நிறையவே 
கற்றுக் கொள்ள 
சந்தர்ப்பம் கொடுத்து 
விலகியிருங்கள்

உதவியாக
விரும்பாவிட்டாலும் .
யாரோ ஒருவருக்கு 
அது 
ஆத்மாவின் அலைகளையாவது 
அமைதிப்படுத்தும்.

கோடைவெய்யில் , 
நீல வெளிச்சம், 
அமைதியான அலைகள் , 
சாம்பல் வாத்துக்கள்,
சீகல் வெண்கொக்குகள், 
அஞ்சன நீர்ப் பறவைகள், 
காடெல்லாம் பேர்ச் மரங்கள், 
கரையெல்லாம் மஞ்சள் மலர்கள் 
வேறென்ன வேண்டும் 
சொங்க்ஸ்வான் ஏரிக்கரைக்கு 
அதன் 
தனிமையை விரட்ட. 
அதை 
வாஞ்சையுடன் 
வளைத்துப்போட 
இயற்கையோடு 
மனிதர்கலோடு  உறவாடும் 
ஊடுருவல்களில் 
இதுவும் ஒன்று. 
சின்னப் பிள்ளைகள் 
என்ன செய்தாலும் 
காரணங்கள் தேடாமல் 
நெடுநேரம்   ரசிப்பது . 
நம்மையும்  
வருடங்களைக்  குறைத்துக்  
குழந்தையாகவே  அழைத்துவிடுகிறது.  

பறவைகளும் அப்படிதான் நினைக்கும் போல..
உனக்குள் 

விழுந்து கடந்து 

உதறி எழும்பிப் போனவர்கள் 

இப்போது யாராக 

இருக்கிறார்கள் 

என்பது கூட 

தற்செயலாகவும் 
மெலிந்து போன காற்றுக்குத் 
தெரியவர வாய்ப்பேயில்லை

உன் 
ஆழமான காதல் 
அதை மறுதலிக்கும் அனுபவம்
தோல்வியுற்ற
எதிர்பாராத 
குற்றவுணர்ச்சியில் 
நிறையவே ஆதங்கம்
ரெண்டுபேரையும் 
நெருக்கடிக்கு உள்ளாக்கியது 

நீ 
உருவாக்கிய 
பெரிதான ஆணவத்தின் 
வெளிப்பாடுகளே
பின் வாங்கிய 
இடைக் காலத்தில் 
இதெல்லாம் சரியே வராதென்ற 
பயத்தைக் காட்டிவிட்டது

எனக்கு இப்பவும்
ஒவ்வொரு வார்த்தையிலும் 
நம்ம்பிக்கை 
நழுவிக்கொண்டிருக்கிற நேரத்தில் 
எளிதாக எடுத்துக்கொள்ள
ஆத்ம திருப்தியைத் தவிர 
வேற என்னதான்
நிரந்தரமாக 
இருக்கப்போகிறதடி.




வெய்யிலோடு அளந்த

கோடைமுழுவதும்

முடிவு வரை 

எனக்குள் நடந்ததில்

இருந்த

என்னைப் பற்றி எழுத

அதுக்குள் 
நீ தானடி 
முழுவதுமாய் 
வந்து நிறைந்துவிட்டாய்...!



நாலாபக்கமும்

இருட்டு நெருக்கி நெருங்க 

கடைசிப் 

பகல் வெளிச்சம் 

தன் 

அடையாளத்தை 

அவசரமாகத் தேடுது

எந்த மதிப்பீடும் 
இட்டு வைக்காமல் 
நீல அலை விரிப்புகள்
பழக்கப்பட்ட
நகர்த்த முடியாத
கரைகளின்
மனதை ஏக்கமாகப் பார்க்க 
ஆரம்பிக்கிறது

நாளெல்லாம் அலைந்து
விடுப்புப் பார்த்துக்
களைத்த பிறகும் 
சிதறிப் 
போக விரும்பாத 
சின்ன மேகக்கூட்டம்

ஒளியில்லாத தருணங்களில்
தவறிவிடக்கூடிய
எச்சரிக்கை உள்ளுணர்வை
குஞ்சுகளுக்கு
முக்கியத்துவம் 
தரும் பாவத்துடன்
சொல்லிக் கொடுகிறது
நீர்ப் பறவை

பதற்றமே இல்லாத
ஆயத்தங்களுடன்
ஏரிக்கரை நித்திரைக்குப் போக 
ஆச்சரிய நிகழ்வின்
ஒரு சாட்சியாக 
அதன் விளிம்பில்
இன்று
நானிருக்கிறேன் ! 




அனுபவங்கள் 

முடிந்த வரை 

பரிமாணங்கள் 

எல்லாவற்றையும் 

இணைத்துவிடுகிறது 



உன்னிப்பாகக் 
கவனிக்க 
பேசிக்கொண்டிருக்கிற
மரங்களின் 
புத்துணர்வைப் 
புதிதாக்குகிறது 

ஒளி முறிவின் 
தெறிப்புக்களில் 
விலகிப்போகும் 
அலைகளை 
மனதிற்கு நெருக்கமாக்க 
முயற்சிக்கிறது 

நிறங்களில் 
விரியும் உலகத்தை
புள்ளியாக்கிப் 
புரிந்து கொள்ளும்
போக்கில் 
தியானமாக்குகிறது 

மேகங்களுக்கு 
வழி காட்டும் 
பாதைகளை 
ஆகாயத்துக்கு 
எழுத முடியுமென 
நிருபிக்கின்றது 

ஒவ்வொரு 
காட்சியும் 
வேறு ஒருவரின் 
பார்வை போலவே 
இருக்க விரும்புகிற
அந்த
கணத்திற்கு 
உயிர்ப்புக் கொடுப்பது 
புகைப்படக்கலை !
பூத்துச் சொரியும் 
ஏரியை 
நிரம்பி வழியவிடாமல்
அன்போடு 
அணை போட்டு 
தீர்த்தக் கரை

சீமெந்துக்
படிக் கட்டுக்களை
மென்மையாக்கிறது
நேரமாவதை விரும்பாத
வாத்துக்களின்
ஈரமான
இறக்கைககள்

எதிர்பார்ப்புகள்
இழந்திருக்கும்
தருணங்களில்
ஒரு அன்னம்
மெல்லென நடந்து
நம் நினைவிற்கு வந்து
மன இறுக்கத்தை
விடுவிக்கும்

கடக்க வேண்டிய
ஏதோ ஒன்றைப் பற்றிய
ஒரு
நம்பிக்கை
நிதானமாக
விரிந்து கிடக்கும்
காட்சியே போதும்
இப்போதைக்கு
நமக்குத்
தைரியம் அளிப்பதற்கு !


பல நேரம்
நமக்கு வழி காட்டும்
பாதைகளை
நம்மால் மட்டுமே
தேர்ந்தெடுக்க முடிவதில்லை ,
அது
அலாதியாக இருக்க வேண்டுமென்று 

அவசியம் எதுவுமில்லாத
ஒரு கட்டத்தில்
அனுபவங்கள்
சேர்த்துக் கொள்ள
சும்மா
பார்துவிட்டுப்
போவதை விட
எழுதிக்கிழிக்க
எதுவுமே இருப்பதில்லை !