Saturday 19 January 2019

கவனச்சிதறடிப்புக்கள் !

நனவோடையில் நனைந்தபடியோ அல்லது எதார்த்தமாக எழுத்துவத்துக்கோ எப்பவுமே அத்திவாரம் போல  ஒரு களம் எப்பவுமே தேவையாக இருக்கு. பலவருடங்கள் இருந்த நோர்வேயில் எழுதியவைகள் எல்லாம் ஒருவிதமானவை , நோர்வே போலவே வெளிப்புற அலங்காரங்கள் அதிகம் உள்ளவை. இப்போது வசிக்கும் சுவீடன் இன்னொருவகை,  சுவிடீஷ் வாழ்வியல் அமைப்புமுறை போலவே  மனதை அதிகம் விழுதிக்கொண்டிருக்கும் வகை.





                                                                      " It took me fifteen years to discover I had no talent for writing, but I couldn't give it up, because by that time I was too famous..."  என்று Robert Benchley என்ற ஆங்கில எழுத்தாளர் ஒருமுறை எழுதியிருந்தார். ஏனென்றால் இவளவு வருடங்களின் பின்  இப்பெல்லாம் அடிப்படையில் நானொரு விவரண எழுத்தாளன் என்றுதான் நினைப்பது  .


                                                                  என் வியர்வை நடந்து கடக்கும் மொழி என் வாழ்வின் மிகத் தனிப்பட எனக்கே எனக்கான அனுபவம். அதை மண்டையைத் திறந்து அதுக்குள்ளே மயிலெண்ணெய் விட்டுப்பார்த்த மாதிரி நான் உணர்கிறேன் . நான் பார்க்கும் உலகத்தைதான் நீங்களும் பார்கிறீர்கள், ஆனால் நான் அதை எப்பவும் வேறுவிதமாகப் பார்ப்பேன்




                                                              ஒரு நாட்டை சில பல காரணங்களுக்காய் அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போட்டு திரும்பிவந்து " அடைக்கலமானானேன் உன்னிடமே அடைக்கலமானானேன் உன்னிடமே " என்று ரெம்ப நல்லவன் போல பாட்டுப்பாடி அந்த நாட்டில் இன்னொருமுறை வாழ்வதுக்கான அடுக்களைக்கு கட்டமைப்பது ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையில் மிகவும் கஷ்டமான ஒரு கைங்கரியம்.


                                                                            சுவீடனில் இப்பெல்லாம் ஒரு கழுதையைத் தேடி அதுக்குக் குதிரை போல கொம்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம் ஆனால்  எழுத்துவதுக்கென்று  உந்துதல் தரும் பொறியைக் கண்டுபிடிப்பது  பூதக்கண்ணாடி வைச்சு கிண்டினாலும் கண்டுபிடிக்க கஷ்ட்டம் போலிருக்கு  .   


                                            அதில உள்ள குழப்பங்கள் சொல்லும்படியாக நடைமுறைச்சிக்கலை இடியப்பச்சிக்கல் லெவலுக்கு ஆக்கினாலும் வாழ்க்கையை வாழ்ந்தேயாகவேண்டும் என்ற அட்ப ஐடியாவில் வாழும் எனக்கு சுவாரஸ்யமாகவேயிருக்கு,
                          
*                                                            

என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,...

அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !



*


ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் ...

பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை ! 






*

எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு ...

எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !



*

அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது ...

இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்

நான் !




*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு,

வெளியே
கறுப்புப் பகல், !
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !





*



காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,...

தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !



*

இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு ...

காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !



*




எதிர்ப்பில்லாத் திசையில்
பார்ப்பதுதான்
ஒரு
பறவையின் ...

இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !


 *



ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த ...

சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!




 *



பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !...

தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !



*


ஆசுவாசமாக 
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில், 
மூடுமுன் கதவோடு 
உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !



*
ஆக்கிரமிக்கும்
தனிமைப் பார்வையில்
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல
அசாதரணமாகவே
கண்களைத் திறக்கின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !



*
காற்று 
தெருப்புழுதி நெரிசலில் 
என்னவெல்லாமோ
மதிக்கும்படி 
சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !



*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத 
எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ? 



*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு 
மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !