Monday 17 October 2016

அனுபவங்களே சமையல்....


சிங்களவர் போல " கொஸ் கறி,," , " அம்புள் தியால் மீன் கறி,," ," கொட்டுக் கொளை சம்பல் ", " சுது மாலு ஓதி ,", " தெல் தால கால் மெஸ்சோ பிறை ,", " உம்பளக்கட உருட்டல் " ," காலி மிரிஸ் தாள அள பிரட்டல் ", " அழுத் அவருது சிங்கள அச்சாறு," " பொல் ரொட்டி கட்டசம்போல் " செய்ய எங்களால் தலை கீழாக நிண்டாலும் முடியவே முடியாது,,

எனக்கு அதுகளின் டெக்னிகல் சமையல் விடயங்களை சொல்லித் தந்த குனதாதாச(வின்மில் பீச் ஹோட
்டல் ,ஏத்துக்கள ) அன்டனி பெர்னாண்டோ( சீஜோய் , குடாப்பாடுவ ) ,பீரிஸ் லியனகே (ஆசியான் இண்டர் ஹோட்டல் ஸ்கூல், நுகேகொடை) இவர்களை இன்று நினைக்கிறன் , இந்த மூன்று பேருமே இப்ப உசிரோடு இருகிறார்களா என்று தெரியவில்லை..

சிங்களவர்களின் சாப்பாடில் உள்ள உறைப்பு விசியம் அவர்கள் அரைக்கும் " துன பகாக் குடு " என்ற சரக்குத் தூள் ,இதன் ரகசியம் என்னவோ மகா வம்ச ரகசியம் போலச் சொல்லுவார்கள்,உண்மையில் அதில பெரிதா வடக்குத் தமிழர்களின் வறுத்த மிளகாத் தூளில் உள்ள அளவு விசயமே இல்லைப் போல இருக்கும்.

யாழ்ப்பாணதில பிள்ளைப் பெற்ற பெண்களுக்கு அம்மியில் வைச்சு இழுத்து அரைச்சுக் கொடுக்கும் சரக்குத் தூளின் " பண்டக்க சுண்டா சுண்டக்க பண்டா " போன்ற ஒரு எளிமையான வடிவம்தான் சிங்களவர்களின் துன பகாக் குடு சரக்குத் தூள்

ஆனால் அதை அவர்கள் போடும் நேரத்தில் ஒரு தீபிகவம்ச ரகசியம் இருக்கு ,அந்த " துன பகாக் குடு " என்ற சரக்குத் தூளை அவர்கள் எண்ணையில் போட்டு கொஞ்சம் சூடேற்றி அதன் வாசத்தைப் பிடுங்கி வெளியே எடுக்கும் நளினத்தில் சிகிரியாக் குகை ஓவிய அப்சரஸ் பெண்களின் கை வண்ணம் இருக்கு....

யாழ்ப்பாண அரைச்ச மிளகாய், கருவேப்பிலை கலந்த ஸ்டைலில் கணவாய்க்குளம்பு, நண்டுக்கறி செய்ய யாழ்பாணத் தமிழர்களை அடிக்க தலை கீழாக நிண்டாலும் சிங்களவர்களால் முடியவே முடியாது.,

சிங்கங்களே துவேஷத்தை அடக்கி வைத்துக்கொண்டு அதுக்காகவே யாழ்பாணம் வந்து ரசித்து, கடைசிச் துளி இன்பத்தையும் இழக்க விரும்பாமல் விரலைச் சூப்பி சாப்பிடுவார்கள். சாப்பிட்டு மயங்கி அதை சமைத்த யாழ் அணங்குகளின் கையில் கல்யாண மோதிரம் போட்டு வாழ்க்கையைத் தொலைத்தும் இருக்குறார்கள் எண்டு சிங்கள நாட்டில்ப் புகையிலைக் கடை போட்டு முன்னேறிய யாழ் தமிழர்கள் எண்பதுகளின் முன்னர் வரலாற்றில் எழுதி வைத்து இருக்குறார்கள்.

இலங்கையின் ஆயிரம் அரசியல் குழப்பங்களுக்கு நடுவிலும் ,அன்பாக எனக்கு சமையல் சொல்லித்தந்த அந்த சிங்களவர்களை நினைவோடு நாக்கு வெளிய தொங்குது ..." மாத்தற பத் காமே " என்ற இந்த தென் இலங்கை உணவு ஸ்டைலில் உள்ள இந்த மெனுவைப் பார்க்க,சிங்கள நாட்டில்,சிங்கள மக்களுடன் வாழ்ந்த எல்லாருக்கும் நுனி நாக்கில் இதன் சுவை சிங்கம் புலி தேசிய இனப் பிரச்சினையை ஒரு நிமிடம் மறக்க வைக்கலாம் ...


சில வருடம் முன் நான் பஞ்சம் புளைக்கும் ,என்னோட அன்றாட வாழ்க்கைக்கு கஞ்சி ஊத்திக் கொட்டும், சமையல் தொழில் பற்றி எழுதவே விரும்பாமல் இருந்தாலும் ," யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் " எண்டு ,வாய்க்கு ருசியா சமைப்பது பற்றியும் சமயல்க் குறிப்பு என்ற ரெசிப்பி பற்றியும் ஒரு பேஸ் புக் " சாப்பாட்டு ரசிகர்கள் குருப்பில் " மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவேன், 

அந்தக் குரூப்பில் இருந்த, இங்கிலாந்தில் வடக்கு லண்டனில் வசிக்கும் ஒரு யாழ்பாணப் பெண்மணி ஆர்வமா என்னிடம் நிறைய டெக்னிகல் சமையல் விஷயம் கேட்பா ,,நானும் முடிந்தளவு சொல்லுவேன்.ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கும் என்னிடம்

" இதுக்கு பதிலா அது போட்டால் என்ன,,,அதுக்கு பதிலா இது போட்டா என்ன நடக்கும் ,,இதுக்குப் பெயர் அதில்லை,,,அதுக்குப் பெயர் இதில்லை " 

என்று எப்பவும் சாப்பாட்டு ரெசிப்பியிலையே கரண்டியைப் போட்டு உருட்டிப் பிரட்டி சந்தேகம் நிறையக் கேட்பா. இவனுக்கு உண்மையாவே சமைக்க தெரியுமா அல்லது ரீல் விடுறானா என்று ஆழம் பார்ப்பது போல இருக்கும் அவாவின் கேள்விகள். அவாவின் அந்த ஆர்வத்தால் கவரப்பட்டு ஒரு அட்டமி நவமி நாள், 

" நிறைய டெக்னிகல் விசியம் எல்லாம் கேட்குறிங்க நீங்க வீடில் இதெல்லாம் சமைத்துப் பார்ப்பிங்களா " எண்டு துணித்து கேட்டேன், 

" நான் சமைப்பதில்லை ,,,நீங்க நல்லா ரெஸிப்பி எல்லாம் உங்களின் ஸ்டைலில் சொல்லுரின்ங்க,எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது " என்று கேட்டா 

" சமைக்கிறதை விட,,சமயலைப்பற்றி எழுதவது எப்பவுமே சுலபம்,,அதால் ரெசிப்பிகள் எழுதுறேன் "

" ஒ அப்படியா,,,நல்லா இருக்கும் உங்க ரெசிப்பிகள் பல நேரம் "

" நன்றி,,,நீங்க உங்க வீட்டில் சமைப்பது இல்லை என்றால் வேறு யார் தான் சமைபார்கள் என்னோட ரெசிப்பிகள் பார்த்து,,,அதைச் சொல்லுங்களேன் " 

" இல்லையே...நான் உங்கள் ரெசிப்பி இருந்த இடத்தில் இருந்து ஒன்லைனில் வாசித்து சொல்லுவேன், என்னோட ஹஸ்பன்ட் ,எல்லாம் வெட்டிக் கொத்தி , சட்டி பானையோடு மல்லுக்கட்டி சமைப்பார் , நான் கடைசியில் உப்புப் ,புளி மட்டும் டேஸ்ட் செய்து நல்லா இல்லை எண்டு சொல்லுவேன் " எண்டு சொன்னா..

" அடக் கடவுளே,,உங்க ஹஸ்பண்டும் என்னைப்போல ரெஸ்ட்றோரென்ட் குக் ஆக வேலை செய்யும் ஒரு நெருப்போட விளையாடும் பாவப்பட்ட ஜீவனா " எண்டு கேட்டேன் .

" இல்லை அவர் நோர்த் லண்டனில் ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் பெட்ரோல் பம்ப்புகலோட நிண்டு பம்புற வேலை, எனக்குதான் விதம் விதமா சமைத்து சாப்பிட விருப்பம் ,,வாய்க்கு ருசியா சாப்பாடு இல்லை எண்டா எனக்கு பாணைப் பச்சை தண்ணியில தோச்சு சாப்பிட்டது போல , நாக்கு தென்னம் கிளி பேப்பர் திண்ட மாதிரி சப் எண்டு இருக்கும் .. ,," எண்டு சொன்னா ..

விதி யாரைத்தான் விட்டு வைக்குது எண்டு நினைச்சு அதுக்கு மேல கேட்கவில்லை.



சின்ன வயசில் என்னோட அம்மா என்னை எப்பவும் திட்டுவா " ஏண்டா வேப்பெண்ணெய் குடிச்சவன் போல ஒரு இடத்தில கையையும் காலையும் வைச்சுக்கொண்டு அடக்க ஒடுக்கமா இருக்காமல் அங்கேயும் இங்கேயும் பாஞ்சு கொண்டு திரியிறாய் " என்று ,எங்கள் வீட்டில் அதிகமாக பாஞ்சு கொண்டு திரிந்த ஆர்வக் கோளாறு நான் தான். அதில் எனக்கு எப்பவுமே அதிரினலின் கிக் கொடுக்கும் திரில் இருக்கும். 

ஒரு இடத்தில கையையும் காலையும் வைச்சுக்கொண்டு இருக்க நான் என்ன பொம்பிளைப் பிள்ளையா ? அடக்க ஒடுக்கமா இருக்கிறது என் அகராதியிலேயே இல்லை அதால் வீட்டில எப்படி இருந்தேனோ அதே போலவே வளர்ந்த பின்னும் ஒவ்வொரு நாடு நகரமா ஓடிக்கொண்டு இருந்தேன்,ஒரு குறிப்பிட்ட இடத்தில இருப்பதால் ஒன்றுமே நடக்காது, மனிதர்களை அவர்கள் உருவாகும் சம்பவங்களை ரசிக்க அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டும்.இல்லாட்டி வாழ்க்கை சுவாரசியமா இருக்காது .

சில நாட்கள் முன்னர் தமிழ் புத்தாண்டு ஒஸ்லோவிலும் வந்து , வழமையான வேலை நாளான அன்று ,வந்த மாதிரியே போனது . ஏனோ தெரியவில்லை யாழ்ப்பான சின்ன வயதில் மருத்து நீர் வைச்சு நீராடிய , பழைய உடைகளைத் தோய்த்து புது உடுப்புப் போல போட்டு சோக் காட்டிய தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் அன்று அதிகம் நினைவில் வரவில்லை.

என் நினைவுகளில் பொறுத்த சிங்கள இடமான ராகமையில் சிங்கள மக்களுடன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் , ஒரு குக் ஆக அரசு சார்பற்ற சுவிடன் நாட்டு உதவியில் இயங்கும் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிங்கள மக்களே என்னை அழுத் அவுருதுக்கு சமைக்க சொல்லி இருக்கிறார்கள் .

அந்த மக்களிடம் இருந்து சுட்ட ஐடியாவை வைச்சே , தென்னம் கள்ளில் செய்யும் வினாகிரியில் செய்யும் அச்சாறு. பழுக்காத பிலாக்காயில் செய்யும் கொஸ் கறி., துணா பகாக் குடு வறுத்து எடுத்து போட்டு பிரட்டி செய்யும் அம்புள் தியால் என்ற கொரக்கா புளி அரைச்சு செய்யும் மீன் கறி செய்து தர சொல்லி அதை அவர்களுக்கு செய்து கொடுத்து வாயில ஊட்டி விட்ட சிங்களவர் கிண்டல் அடிக்கும் வார்த்தையான யாப்பனே பனங்கொட்டை தமிழன் எனபதில் எனக்கு ரெம்பவே பெருமையாக இருக்கு .

ஹிதறுறஹோம கரனே றவவட்ட அப்பே ரவட்ட ஹித்துரு ஹரனே என்று றபான் அடிப்பாங்களே அதை என் நினைவாக இப்பவும் அடிப்பார்களா தெரியவில்லை, ஆனாலும் சிங்களப் புத்தாண்டுக்கு கொசுவம் வைச்சு பற்றிக் சரம் கட்டி , சீத்தை துணியில் தோள் மூட்டில் பொம்மிக்கொண்டு நிக்கும் பிளவுஸ் போட்ட சிங்களப் பெண்களின் இடுப்பு அழகுக்கு பஞ்சாலையில் போய் தூக்குப்போட்டு சாகலாம். அவளவு அனிச்சம் பூப் போன்ற யவ்வன அழகு அவர்களிடம் இருக்கு .

இலங்கையை விட்டு மறுபடியும் ஸ்கண்டிநேவியா போக வேண்டி வந்த, அன்பான மனிதர்களின் அடையாளத்தை மட்டும் சேகரித்துக்கொண்டு தாய்த் திருநாடு என்னை விட்டுப் போக வைத்த என் திருகுதாளங்கள் சேர்ந்த நிகழ்வு இன்றுவரை ஒரு சாபம் .

என் வயதுக்கு முப்பத்தாறு மொட்டைகள் செய்ய வேண்டிய அட்டகாசத்தை நானே தனியா செய்து இருக்கிறேன், அது ஒரு சாதனை.வேற என்ன சொல்லுறது நீங்களே சொல்லுங்க பார்ப்பம் அவன் அவன் செய்யக்கூடிய ஏரியாவில் தானே சாதனை செய்ய முடியும்.

என்றாலும் .சில நாட்கள் முன் படித்த .." மனசாட்சி உள்வர்களுக்கு மட்டுமே தவறுகள் அதிகம் தண்டனை தருகிறது " என்ற ஒரு வாக்கியம் நிறையவே அர்த்தம் உள்ளது போல இருக்கு.


சைனிஸ் வெல்வெட்டிங் இது முக்கியமான ஒரு சைனிஸ் இறைச்சி வகையை வாய்க்குள் கடிபடாமல் சுவிங்கம் போல மென்மையாக ரசித்து உள் இறக்க வைக்கும் சமையல் டெக்னிக். கொஞ்சம் பொறுமையும் நேரமும் வேணும் இதை இப்படிப் பதப்படுத்தி எடுப்பதுக்கு. 

நீங்கள் எல்லாருமே சைனிஸ் ரெஸ்டோரென்ட் போய் இருந்து, பல வகையான டெவில், சொப் சூயிய் ஓடர் கொடுத்து சாப்பிட்டு இருப்பிங்க. அந்த டெவில் இல் இருக்கும் இறைச்சி வகை மிக மிக மென்மையாக வெளித்தோற்றதில் வெளிச்சம் பட்டுத் தெறிக்க வெல்வெட் போல வழு வழுப்பாக இருக்குமே.உண்மையில் பலருக்கு அதன் மர்மமான பதம் தெரியாமல் அலாலதியாக சாப்பிட்டும் இருபிங்க.

டெவில், சொப் சூயிய் என்ற இந்த ரெண்டுவகை உணவிலும் சேர்க்கப்படும் இறைச்சித் துண்டுகள் உண்மையான சைனிஸ் முறைப்படி வெல்ட்டிங் முறையில் பதப்படுதப்பட்டே பின்னர் டெவில், சொப் சூயிய் செய்யும் போது அதை அதில போட்டு செய்ய வேண்டும். அது தான் அங்கீகரிக்கப்பட்ட சைனிஸ் கலுனேறி சமையல் முறை

ஆனால் சைன்ஸ் அல்லாத பல ரெஸ்ரோறேன்ட்களிலும் இப்பெல்லாம் இந்த டெவில், சொப் சூயிய் செய்கிறார்கள். முக்கியமாக இலங்கையில் நீங்க பல சிங்கள ரெஸ்ட்ரோறேன்ட்களில் டெவில், சொப் சூயிய் சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு தெரிந்தவரை அங்கே அவர்கள் வெல்வெட்டிங் டெக்னிக் பாவிப்பதில்லை. கொதி நிலை எண்ணையில் இறைசியப் பொரித்து எடுத்து செய்கிறார்கள்

இந்த சைனிஸ் வெல்வெட்டிங் அதுதான் சைனிஸ் சாப்பாடுகளைப் பதப்படுத்தப்படுதுவதில் ஒருவித சிதம்பர இரகசியம் போல பல நூற்றாண்டுகளாய் இருந்தது. இப்ப அப்படி நிலைமை இல்லை. என்னைப்போல சமையல் தொழிலில் வேறு வழியில்லாமல் சைனிஸ் குக்மாருடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த பலர் அந்த இரகசியத்தை உடைத்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த ரெண்டு முறையில் இலகுவான ஒரு முறையை உங்களுக்கு சொல்லித்தாறேன்.

தேவையானவை முட்டை வெள்ளைக்கரு, முக்கியம் மஞ்சள்கரு சேர்பதில்லை. கோரன்பிளவர்என்ற சோளம் மா, சைனிஸ் ரைஸ் வயின், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சீனி ,சைனிஸ் டார்க் சோயா சோஸ். இறைச்சியைக் கழுவி சிறிய குயுபிக் துண்டுகளாக வெட்டி அதற்குள் மேலே சொன்னவற்றைப் பிரட்டி எடுத்து ஒரு இரவு மெல்லிய பொலித்தீன் கொண்டு மூடி அதன்ஈரலிப்புத் தன்மையை வெளியேற்றாமல் குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள்.

இதில ஒரு முட்டையை கையில் வைத்தே உடைத்து அதில உள்ள மஞ்சள் கருவை இரண்டு பாதியிலும் மெல்ல மெல்ல நயன்தாராவின் இடுப்புப் போல அசைத்து டெக்னிகலாக வெளியேற்றுவது ஒரு சமையல் டெக்னிக். அதை எழுத எனக்கு முடியவில்லை. செய்து தான் காட்டவேண்டும். நீங்கள் வீட்டில் ஒரு சின்னப் பாத்திரத்தில் ஒரு முட்டையைத் தட்டி உடைத்து ஊற்றி அதிலிருந்து மஞ்சள் கருவை வேறாக்கி கரண்டியால் எடுக்கலாம்.அது எவளவு தூரம் வொர்க்அவுட் ஆகும் என்றும் எனக்குத் தெரியலை

பின்னர் தண்ணியைக் கொதிநிலையில் கொதிக்க வைத்து அது ஆவி பறக்கக் கொதிக்கும் போது, வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு ஒன்றோடு ஒன்று ஓட்ட விடாமல் அரைவாசியில் அவித்து எடுங்கள். போடும் போது கவனம் கொதி தண்ணி தெறிக்கலாம்.பிறகு கையைக் காலைச் சுட்டுப் போட்டு என்னைத் திட்ட வேண்டாம்

அப்படி எடுத்த இறைச்சியை சைனிஸ் வூக் தாச்சியில் கொஞ்சம் எண்ணை விட்டு ,அதில் டெவில் செய்யும் போதோ,,அல்லது சோப் சூய் செய்யும் போது ஒயிஸ்டர் சோஸ் கொஞ்சம் சேருங்கள் ,போடவேண்டிய வூக் மரக்கறிகள் அரைப்பதத்தில் வேகும் போது வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு கிளறிக்கொண்டே இருங்கள். இறக்கும்போது கொஞ்சம் செசமி ஒயில் சேர்த்து விடுங்கள்.

வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியின் மெதுவான, வழுவழுப்பான சுவையை சைன்ஸ் நூடில்ஸ் செய்யும் போதும் சேர்க்கலாம் ,சஞ்சுவான் மண்டரின் சிக்கின் என்பதுக்கும் அதைப் பயன்படுத்தலாம் .அதிலும் அதன் சுவை அமர்களமாக இருக்கும்.


                                                  பல வருடங்களின் முன் ஒஸ்லோ தமிழ் நண்பர்கள் நல்ல சாப்பாடு நாக்கைத் தொங்கவிடுவது போல இரவில கனவு வரும் போதெல்லாம் அடுத்தநாள் காலை என்னை அழைப்பார்கள் சமைச்சு தரச்சொல்லி. முக்கியமாகத் தண்ணி அடிச்சுப்போட்டு நிற்கும்போது டெலிபோன்னில் எடுத்துக் கேட்பார்கள். தண்ணி அடிச்சு வெறியில் நிற்கும்போதுதான் அவர்களுக்கு என் நினைவு வரும்.
                                         நேரம் இருந்தால் நானும்போய் எனக்காக வேண்டி வைத்திருக்கும் ஸ்பெசல் தண்ணியை அடிச்சுப்போட்டு நட்பாக சமைப்பது. எனக்கும் சமையல்தான் தெரிந்த ஒரேயொரு " ப்ரோபோசனால் " வேலை ,வேற ஒரு வேலையும் எனக்கு தெரியாது, இப்பவும்தான் அப்பவும்தான் அது தான் உண்மை. அதில " மெக்சிகன் டோர்டிலா " ஸ்டைல்லில் நிறைய சாப்பாடு செய்து கொடுப்பேன்,அவர்கள் ரசித்து சாப்பிடுவார்கள் .
                                               உண்மையில் என்னோட கிரியேடிவ் பரிசோதனை ரெசிப்பிகளை அவர்களின் நாக்கில வைச்சுதான் விளையாடுவேன், பல காரணங்களால் அந்த நண்பகள் நான் நோர்க்ஸ் ஸ்டைல் இக்கு ஒதுங்கிப் போனதால் அவர்களும் " நாய்க்கு நடுக் கடலிலும் நக்குத் தண்ணி , இவன் இனி நம்ம கூத்துக்கு எடுபடமாட்டான், மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேதுனா என்று வெள்ளையின் சொள்லையில் மயங்கிப் போயிட்டான் " என்று சொல்லி ஒதுக்கிப்போய்விட்டார்கள்.
                                                     இன்று " லா மிக்சிகானா தாக்கோ கிரைடர் பீப் வித் டார்க் கிட்னி பீன்ஸ் அண்ட் புலோம்கோல் " என்ற மெக்சிகன் சாப்பாடு செய்தேன். உண்மையில் நண்பர்களோடு சமைத்து அடிப்பிடிச்ச சட்டியையும் வழிச்சு துடைச்சு சாப்பிட்ட நாட்கள் இனி என் வாழ்நாளில் வருமா தெரியவில்லை..
                                                  சில காரணங்களால் எனக்குப்பிடித்த ஒஸ்லோ நகரின் அலாதியான ஆர்ப்பரிப்புக்களில் இருந்து விலத்தி ஒரு மூலையில் அடங்கிப் போனாலும் வாழ்வின் சந்தோஷ நாட்கள் அந்த நண்பர்கள் , அவர்கள் இப்போது தொடர்பில் இல்லாவிட்டாலும் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்க இன்று மறுபடியும் நினைவுக்குள் வந்தார்கள்.


முன்னப் பின்ன ஜோசிக்காமல் ,மண்டைக் கிறுக்கில இன்று வட இந்திய குர்வாரா பங்காரா லம்ப் பாயா இன்றைய ஸ்பெஷல் போட்டேன் எங்க ரேச்டோறேண்டில் ,நான்தான் மெனு போட்டேன். அதைப் போட்டு இப்ப மாட்டிக்கொண்டு அலுமினியப் பானைக்க எலி விழுந்த மாதிரி அண்டா குண்டா சட்டி பானையோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறேன். 

அவன் அவன் பொஞ்சாதி பிள்ளை குட்டிகளோடு " ஏலேலம் குயிலே என்னைத் தாலாட்டும் இசையே,உன்னைப் பாடாத நாள் இல்லையே " என்று பொஞ்சாதியை மடியில வைச்சுப் பாடிக்கொண்டு வார இறுதி நாளில் சனி பகவான் புண்ணியத்தில் பொங்கு சனி திசை வேலை செய்ய வாழ்கையை என்ஜோய் பண்றாங்க,

வாழ்கையில் மங்கு சனி பிடிச்சு சமையல்காரன் வேலைக்கு மட்டும் யாரும் போகவே கூடாது. வேறு வழி இல்லாமல் அப்படிப் போனவன் வாழ்க்கையில் விதி ஏழரைச் சனி பிடிச்சது போல நெருப்போடு விளையாடும். 


கந்தசஸ்டி நேரம் இந்தப் படம் போடுவதுக்கு பாலும்பழத்தோடு பக்திமயமாக உபவாசம் இருக்கும் நட்புக்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு கந்தனும் இல்லை, வீட்ல மண் சட்டியும் இல்லை, கந்தனின் கருணையும் சொல்லும்படியாக இல்லாததால் இன்று ப்ளோசெல் "Blåskjell " என்ற நீலச்சிப்பியும், ஸ்பகத்தி பிலோங்கனைஸ் பாஸ்தா, பரமன்சீன் சீஸ் சகிதம் சரவணப்பொய்கையில் சாப்பாடு. 

ப்ளோசெல் சிப்பி சேற்றில் இருந்து வளர்த்து எடுக்கும் மட்டி வகை. நோர்வேயில் இது கொஞ்சம் விலை குறைந்த என்னைப்போல அன்றாடம் காச்சிகளுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வேண்டலாம். இதில சதை குறைவு ஆனால் இருக்கும் கொஞ்ச சதையே வெடுக்கு மணத்துடன் சுவையாக இருக்கும், பில்கிரிம் மோசல்லா என்று ஒன்று இருக்கு அதுதான் விலை அதிகமான ப்லோசெல்

இந்த ப்ளோசெல் நோன்டிச் சாப்பிட சின்ன ஒரு முள்ளுக்கரண்டி இருக்கு. ஆனாலும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இதை ரெண்டாகப் பிளக்க வரும் ஓட்டுச் சிறகில் ஒன்றை எடுத்து அதால் சுரண்டி சாப்பிடுவதை பார்சிலோனா போன போது பார்த்துள்ளேன், அது சிரட்டையில் ஒடியல் கூள் குடிப்பது போன்ற ஒரு வித சுதேசிய உணர்வோடு ருசியா இருக்கும்,

இந்த சிப்பியில் இருந்து சதையை எடுத்து அதை எண்ணையிலும், சில டப்பியில் தண்ணியிலும் சேர்த்து இறுக்கி அறைந்து மூடிய தகர டப்பாவில் அடைத்தும் விற்கிறார்கள். அதில் இப்படி பிரெஷ் ஆக வேண்டுவதில் உள்ள சுவை இல்லை. அவசரத்துக்கு வேண்டிச் சாப்பிடலாம்,பலருக்கு இப்படிப் பார்த்தால் என்னமோ எல்லாம் நினைவு வர சாபிட்ட வயித்தைக் குமட்டும் ஆனால் டப்பியில் வாறதில் அந்தளவு கற்பனைக் குழறுபடிகள் இல்லை.

நோர்வேயில் உள்ள கடலுணவு ரெஸ்டோரன்ட்டில் " Blåskjell gryteklare" என்றவகை பிரபலம். அதில பல வகையான சுவையூட்டிகள் சேர்த்து செய்வதால் பல பெயர்கள் வைப்பார்கள். அடிப்படையில் அது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை சமைப்பது, நீராவியில் இந்த ப்ளோசெல்லை சில வாசனை இலைகள் தூவிக் கொதி நிலையில் அவிச்சு இறக்கின உடன ஐஸ்கட்டியில் கொஞ்ச நேரம் வைச்சிட்டு அதுக்கு ஒரு சோஸ் செய்து அதன் மேலே ஊற்றிக் கொடுப்பது.

" கொதி நிலையில் அவிச்சு இறக்கின உடன ஐஸ்கட்டியில் கொஞ்ச நேரம் வைப்பது " ஒருவித சமையல் டெக்னிக், அப்படிச் செய்தால் இரண்டு விசியங்கள் உணவுக்குக் கிடைக்கும் என்பார்கள், அவைகளின் பெயர் ஆங்கிலத்தில் " consistency,texture " என்பார்கள். இது இரண்டுக்கும் என்ன தமிழ் சொல்லு பாவித்து எழுதலாம் என்று யாராச்சும் எனக்குச் சொல்லுங்களேன், பழனியாண்டியான தண்டபாணியின் புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்

முடுக்குச்சந்து முனியாண்டி விலாசில் இன்றைய ஸ்பெசல் ,மைல்ட் அவென் ஸ்டேக் அத்திலாண்டிக் சலமோன் லக்ஸ் மீன், மெடிற்றேனியன் ரெக்குலா சலாட், டில் போட்டு அவிச்ச உருளைக்கிழங்கு, மீனுக்கு மேலே நோர்க்ஸ் ரேக்க டிப்பிங் சோஸ், இடையிலசெருகிவிட்ட ரைஸ் வைன் வினாகிரியில் ஊற வைச்ச அக்குர்க்!

ம்ம் வெட்டலாம் வாங்க,! என்ன என்னமோ கோர்டன் ராம்சே மாஸ்டர்செப் போல மெனு போட்டு எழுதின மாதிரி குக்கிங் பெயர்கள் டெக்னிகல
ா சொல்லுறேனா,

உண்மைதான் சமைக்கிறது எல்லாரும் செய்யலாம் அதை சரியாக காட்சிப்படுத்தி நாக்கில உமிழ்நீரை சொல்லாமலே யார் கேட்டது என்று அழைக்க வைப்பதுக்கு " பிரசன்டேசன் " என்று என்னைப் போல சமைக்கும் தொழிலில் தலையைக் கொடுத்தவர்கள் சொல்லுவார்கள்.

சுமாரான ஒரு பெண்னையே " பவுண்டேசன் " என்ற " மேக் அப் கிரீம் " எப்படி நயன்தாரா ஆக்குதோ அதுபோல " பிரசன்டேசன் " கொடுக்கும் ஆரம்பங்கள் எந்த உணவையும் ஒரு கை ருசி பார்க்கவைக்கும். ஒரு சமையல் குக் ஆக தொழில்ரீதியாக இருப்பதால் இப்படி ஒரு படத்தைப் போட்டு ஊரை ஏமாற்றுவது எனக்குச் சாத்தியமாயிருக்கிறது .

.

டெக்னிகலா சொல்லுறது என்றால் டெக்னிகலா எனக்குத் தெரிந்த ஒரே வேலை சமையல்தான். அதில்தான் உருப்படியாவும் டெக்னிகலாகவும் ஏதாவது என்னால் செய்யமுடியும். சமையல் ஒரு கலை என்கிறார்கள். எனக்கு அது வேலை. அதிலயும் ஏகப்பட்ட பரிசோதனைச் சாத்தியங்கள் இருக்கு. எனக்கு அது ஒன்றுதான் அந்த வேலையில் மிகவும் பிடித்தமான விசியம். ஏனென்றால் சமையலிலும் மரபை உடைக்கும் அனுபவங்களே நம் வாழ்வின் மிகப் பெரிய சொத்து.

யாழ்ப்பாண ஸ்டைல் கோதுமைமா வெள்ளைப் புட்டு, மெட்ராஸ் ஸ்டைல் சென்னாமசாலா சிந்தாமணிக் கடலைக் கறி, டூபூ போட்ட மெடிட்டரினியன் ஸ்டைல் சீசர் சலாட். ஹ்ம்ம், என்ன டெக்னிக்கலாப் பிசத்துறேனா, என்ன செய்யுறது என் ப்ரோபோசனால் வேலை சமையல். அதில் உள்ள எல்லாவிதமான சாத்தியங்களையும் என் வீட்டு சமையல் அறையிலும் அப்பப்ப போட்டுத் தாக்குவது, எல்லாத்தையும் மறந்திடுங்க. எக்ஸ்ராவா ஸ்டைல் போட டூர்பேர்க் டென்மார்க் பியரும் இருக்கு...வாங்க சாப்பிடலாம்.


உலகம் எங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஒருநேரச் சாப்பாட்டுக்கே அல்லாடும் நிலை எப்போதும் இது போல சாப்பாட்டுப் பதிவுகள் படத்தோடு போடும் போது மனதை நெருடும். என்னைப் படைத்த கோவணத்தாண்டி என்னை ஒரு சமையல்காரன் ஆக்கி வேடிக்கைபார்த்து வாழவைத்ததுக்கு நன்றி பழனி ஆண்டவனே. 

என் உடன்பிறப்புக்களோடு ஒப்பிட்டால் நான் ஒருவனே சமையல்காரன் . மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக மிகவும் சுவாரசியமான ப்ரோபோசனல் வேலைகளில் காசை இருந்த இடத்தில இருந்தே நோகாமல் சுளையாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிறந்த வெள்ளிதிசை வேலைசெய்யும் ராசிபலன் அப்படி.

வெளியே வெய்யில் வெளிச்சங்கள் பரவலாக வீசி எறிஞ்சாலும் ஜன்னல் ஊடக சமையல் அறைக்கு விசாரிக்க வந்த சில ஒளி விளையாட்டில் ஒரு சமையல்க்காரனின் திருவிளையாடல் . இன்னும் சமையல் முடியவில்லை. மெல்லனவே அத்தை மகளே என் சக்கரை நிலவே என்று பாடிப்பாடி நடந்துகொண்டிருக்கிறது.

குடிகாரக் குப்புசாமி விலாசில் இன்றைய ஸ்பெஷல் நோர்வேயின் தேசிய கடலுணவு சிவப்பான சதுரத் துண்டுகளில் வெட்டி வைச்ச லக்ஸ் என்ற அத்திலாந்திக் சாலமன் மீன்.உமிஞ்சு வடிக்கும் தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ், ஒரு பச்சைநிற சலாட் ஒலிவன் வினிகரட்டி டச் சோஸ்உடன் .

இன்றைய இரவுக்குக் கொண்டாட்டம் போட இது போதும் வாங்க சாப்பிடலாம்..


காலை எழுந்தவுடன் பேஸ்புக். நல் மாலை முழுதும் நல்ல பேஸ்புக். கோப்பி குடிக்கும் போதும் பேஸ்புக். குளிச்சு சாப்பிடும் போதும் பேஸ்புக். சாப்பிட்டுக் கை கழுவ விருப்பமின்றியும் பேஸ்புக். இப்பெல்லாம் கனவிலேயே போஸ்டிங்குக்கு வரும் நோடிபிகசன் சிவப்பா வருது.

நோர்வேயில் " பொஸ்கே " என்ற கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டாட இன்றும் நாளையும் இரண்டு நாள் அரசாங்கப் பொது விடுமுறை. நோர்வே மக்களின் கலாச்சாரத்தில் " போஸ்க்கே " கொண்டாடத்தில் முக்கியமானது இந்த மஞ்சள் நிற " போஸ்க்கே லில்லி " மலர்கள் வேண்டி வீட்டை அலங்கரிப்பது.

தமிழில் இந்த கிறிஸ்தவ விடுமுறை நாட்களை முறையே பெரிய வியாழன்,பெரிய வெள்ளி என்று சொல்கிறார்கள். சென்ற தலைமுறை போல இன்றைய மொடேர்ன் தலையாலதெறித்த நோர்வே மக்கள் சமய பக்தியோடு இதைக் கொண்டாடுவதில்லை.ஆனால் அரசாங்கம் ரெண்டு நாள் விடுமுறை தந்தே ஆகவேண்டும் என்பதில் அழுங்குபிடியில் நிற்பார்கள்.

எப்படியோ ஒஸ்லோ இந்த ரெண்டு நாளும் வெறிச்சோடி அழுது வடியும். வெளிநாட்டவர் கடைகள் மட்டுமே திறந்து இருக்கும். வந்தேறுகுடிகள்கள்தான் டக்சி ஒடி, பஸ் ஓடி, ட்ரைன் ஓடி, கழுவித் துடைத்து நகரத்தை இயங்க வைப்பார்கள். பெருங்குடியில் பிறந்த நோர்வே மக்கள் பெருங்குடி விடுமுறை உல்லாசத்தில் இருப்பார்கள்.

ஒஸ்லோ மையநகரத்தில் உள்ள அஞ்சலோ அண்ணையின் தமிழ்கடைக்கு சாமான் சக்கட்டு வேண்டுவம் என்று போக அவர் கடையை மூட்டை கட்டி லொறியில் ஏற்றிக்கொண்டு நிக்கிறார். இனி " ஜப்ப்னா பூட் " என்ற அந்தக் கடை அவடதில இல்லையாம். இனி அவசர அந்துப்பறிக்கு தமிழ்உணவு வேண்ட வயித்வியட் என்ற தூரமான இடத்துக்கு போகவேண்டும்

ஹ்ம்ம்..இன்றைக்குக் கு. குப்புசாமி விலாசில் " சிம்பிள் இத்தாலியன் பிலோங்கனைஸ் பாஸ்தா " வும் " லோமண்டர்ஸ் வைட் சோஸ் " சும், இன்றைய மதிய உணவு ரெடி. அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வாங்க சாப்பிடலாம். உங்களுக்காகவே ஸ்பெஷலா முந்திரிப்பருப்புப் பால் பாயசமும் செய்து வைச்சிருக்கிறேன்.


கல்யாண வீட்டில பருப்பு எப்படி அமர்களமா இருக்கவேண்டுமோ அதுபோல சாப்பாடு ருசியா இருக்க வேண்டும் . அதே நேரம் அதே கல்யான வீட்டில பெண்களின் பட்டுச் சேலைகள் எப்படி அட்டகாசமாக இருக்க வேண்டுமோ அதே போல சாப்பாடும் கலர் கலரா இருக்க வேண்டும், கத்தி கரண்டி மேல சத்தியமா இது ரெண்டுமே சமையலில் முக்கியம் என்கிறார்கள் என் தொழில் முன்னோடிகள்.

இன்றைக்குக் கு. டி. குப்புசாமி விலாசில் இத்தாலியன் லசானியா ஸ்டைலில் மரக்கறியுடன் பிஷ் போட்ட சீஸ் அவன் வெதுப்பி ஸ்டேக் உடன் டொபூ ஐஸ்பேர்க் சலாட். இது ஒரு பச்சைத்தண்ணிக்கு சர்பத் கலரின் போட்ட மாதிரியான பியூசன் வகை சமையல். அதிரடி அவசரத்துக்கு டண்டனக்கா டக்கா டண்டனக்கா டக்கா என்று கொட்டு அடிக்க கை கொடுக்கும் உணவு.

மெடிடேர்நியன் நாட்டு உணவுகளோடு பரிட்சயமான பலருக்கு ப்ரோவேன்சியே லசானியா, புரோவேன்சியே பசானிய என்ன என்று ஓரளவுதெரியும். அதுதான் இதன் அடிப்படை இரகசியம். முக்கியமாக நல்ல வெதுப்பி என்ற தூயதமிழில் சொல்லப்படும் மேலும் கீழும் சரியான அளவு வெப்பம் கொடுக்கும் OVEN என்ற அவன் தேவை

சுவையாக்க இதில பெரிய டெக்னிக் ஒன்றும் இல்லை. லசானியாவுக்கு பாவிக்கும் பீBச்சாமல் சோஸ் , டொமாட்டோ பேஸ் சோஸ் செய்ய தெரிந்தால் காணும். அது தெரியாட்டி சூப்பர் மார்கெட் கடையிலேயே ரெண்டு சோஸ்களையும் கேட்டு வேண்டலாம்.

அப்புறம் கரட்,லீக்ஸ், காலிபிளவர், புருக்கொலி, உருளைக்கிளங்கு இதெல்லாம் சின்ன கியூபிக் சதுரமா வெட்டிக்கொள்ளவேண்டியது.

இந்த லசானியா ஸ்டைல். பாஸ்தா பிளேட் என்ற தட்டு தட்டா செய்வது. அந்த தட்டு போன்ற இடைச் செருக்கும் மெல்லிய மக்காச்சோளக் கோதுமைமா தட்டும் வீட்டில் தட்டித் தட்டி உருட்டுக்கட்டையால உருட்டி சதுரமாக வெட்டி எடுத்தும் செய்யலாம். இப்பெல்லாம் அது இத்தாலியன் சூப்பர் மார்கெட் கடையிலும் பாஸ்தா பிளேட் வேண்டலாம். வேண்டி வேட்டி விரிச்ச மாதிரி விரிச்சுவிட்டா வேலை முடியுது.

ஒவ்வொரு தட்டுக்கு நடுவிலும் பீBச்சாமல் சோஸ் கொஞ்சம் சேர்த்து அதில் மீன் துண்டுகளை ஒரு அடுக்கிலும்,பின் டொமாட்டோ பேஸ் சோஸ் சேர்த்து மரக்கறித் துண்டுகளை அடுத்த அடுக்கிலும் அடிக்கி முடிய மேலே பீBச்சாமல் சோஸ் கொஞ்சம் சேர்த்து அதுக்கு மேலே மொசரில்லா சீஸ் பரவி வெதுப்பி அவனில் ஸ்டேக் செய்யவேண்டும்.

ஒவ்வொரு தட்டு அடுக்கும் போதும் கொஞ்சம் உப்பு மிளகுதூள் தூவி, கொஞ்சம்எக்ஸ்ட்ரா வெர்யின் ஒலிவ் எண்ணையும் தெளிச்சுவிடுங்க. மிகவும் காரம் தேவையானவர்கள் மிளகாய்தூள் சேர்த்துக்கொள்ளுங்க. அல்லது பச்சைமிளகாய், மெக்ஸ்சிகன் ஜெல்ப்பிநோஸ் குடமிளகாய் இருந்தா தட்டுக்கு இடையில் ஆங்காங்கே சொருகிவிடுங்க

எல்லாவிதமானா ஸ்டேக் உணவுகளும் பார்க்கும் போது காஞ்சிப் பட்டுப்போல வறுத்த பொன்னிறத்தில் இருப்பது மட்டுமல்லாமல் உள்ளே எல்லா சேர்மானங்களும் சரியான பதத்தில் வெந்து அவிந்திருக்கவேண்டும். 180 பாகையில் கிட்டதட்ட 30 நிமிட வெப்பம் போதுமானது. சீஸ் பொன் நிறம் அடிக்கத் தொடங்குவதை அவன் கண்ணாடிக்கு வெளியே கண்ணோட்டம் பார்க்கத் தெரியும்.

இடையில் வெதுப்பி அவனைத் திறந்து கலவை சேர்மானங்கள் வெந்து அவிந்திருக்க்கா என்று கரண்டியைப் போட்டுக் கிண்டித் துலாவி குதறாமல் வேறு ஒரு முறையில் பார்த்து அறிய ஒரு டெக்னிக் இருக்கு. சிம்பிள் சமையல் டெக்னிக் அது . அந்த தொழில் இரகசியங்களையெல்லாம் இன்னொரு பதிவில சொல்லுறேன் .

இவளவு அறுசுவை அறுவையையும் வாசித்தே வேர்த்து விறுவிறுத்து கிலோக் கணக்கில் கலோரி சக்தியை வீணாக்கி களைத்துப்போய் இருப்பிங்க. இப்ப எல்லாத்தையும் அப்படி அப்படி போட்டுடு அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வாங்க சாப்பிடலாம்..


  பாகற்காய் மேலை நாடுகளில் அதிகம் கிடைப்பதில்லை. தமிழ்க் கடைகளில் சிலநேரம் கிடைக்கும். அதுவும் சோர்ந்துபோய் அல்லது மஞ்சள் நிறமடித்து வாடிப்போய் இருக்கும். அதன் கயர்புச் சுவை நினைக்க நினைக்க இனிக்க வைக்கும். நல்ல முத்திய தேங்காயின் இளநீர்  விட்டு அதை மேரினேட் செய்து இந்த உணவு செய்த போது உண்மையில் சைவ மரக்கறிகளின் சமையல் வீச்சு, அதன் சாத்தியங்கள்  ஆச்சரியமாய் இருந்தது 

கேரளவில் செய்யும் பாகற்காய் பிரடல்கறி. பாவக்காய ( என்ன பாவம் செய்ததோ !) தோலை சீவி உப்புதடவி ஒரு மணிநேரம் வெய்யிலில் உலர வைத்தபின் கரம்மசாலாவும் காய்ந்த மங்கோ பவுடர் (?) சின்ன பெரியசீரகம் எல்லாம் போட்டு கேரளத்து நமபுஉதிரி மாமிகள் கைவண்ணத்தில இது செய்வாங்களளாம் என்று ஒரு சமையல்க் குறிப்பில் படித்த போது தக தக என்று இருக்கும் கேரளத்துப் பெண்கள் தான் நினைவு வந்தார்கள் .

அதனாலேயே  இதை ஒருநாள் செய்து பார்த்தேன் மலையாள ஜீவதததின் அத்தனை சாத்தியங்களையும் இந்த பாகக்காய் கறி சம்சாரிக்க வைத்தது  சட்டி பானை ஏகப்பை கரண்டி மேலே சத்தியம்  செய்து  சொல்லுறேன் அது உண்மையேதான். 

கேரளாவின் பழைய  பெயர் மலபார் என்கிறார்கள். போத்துக்கீசர் ஐரோப்பாவில்  இருந்து அந்த இடதுக்குகு உயிரைப்  பணயம் வைத்து  கடல்ப் பயணம் செய்து வந்ததே அந்த வாசனைத்திரவியங்களைத் தேடித்தான். இன்றும் கீழைத்தேய உணவு வழித்தடத்தை ஆராயும்  வரலாற்று ஆசிரியர்கள் கேரளத்தின் வாசனைத்திரவியங்களில் சொக்கிப் போய் மயங்கிப் போய்விடுகிறார்கள். 

இந்தப் பாகக்காய் உணவு  நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது எப்படி சமைப்பது என்பது ஒரு நீண்ட ரெசிப்பி. அதை எழுத விருப்பம் ஆனால் எழுத அலுப்பாக இருக்கு. வேணுமென்றால் ஒருநாள் சமைத்துத் தாரேன் !



லக்ஸ் என்ற அத்திலாந்திக் சாலமோன் நோர்வேயின் தேசிய மீன் .நன்னீrரும் உப்புக் கடல் நீரும் சந்திக்கும் இடங்களில் அமைக்கப்பட்ட நீர் நிலைகளில் வளர்க்கப்படும் அந்தமீன் அதிகம் நோர்வேயில் இருந்து மற்ற எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிப் பணக்கார நோர்வேயிட்கு அந்நியச்செலாவணி கொண்டு வருகிறது .

                                                           நோர்வே பெண்களின் சொண்டு போல சிவப்பாவும், மென்மையாகவும் இருக்கும் லக்ஸ் மிகவும் புரோட்டின் உள்ள கடல் உணவுகளின் சத்துணவு. குளிர் நாட்டில் வளர்வதால் கொழுப்பும் நிறைய இருக்கு. இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மீன் போல வெடுக்கு மணம் இல்லை. அந்த மீனை முழுதாகப் பார்க்கவே பவுண்டேசன் மேக் அப் போட்ட பெண்களின் முகம் மாதிரி அழகா இருக்கும்.

                                                           ஒரு காலத்தில் உலக அளவில் விலாசம் எழுப்பிக்கொண்டு இருந்த லக்ஸ் மீன் உற்பத்தி, நோர்வே அதன் வடக்குக் கடலில் நிலத்தடிப் பெற்றோலியம் காஸ் கண்டுபிட்டிக்கப்பட்டபின் ஏனோ தானோ என்று அதிகம் ஆர்வம் இல்லாமல் உற்ப்பத்தி செய்யப்படுவதாக சொல்லுறார்கள். ஆனால் லக்ஸ் மீன் வளர்வதுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலைமை நோர்வேயில் மட்டுமே இருக்குது என்றும் சொல்லுறார்கள்.

                                               எனக்குத் தெரிய அதைப் பதினைந்து வகையில் பதப்படுத்துவார்கள். அதில் ஒண்டு வில்லோ மரத்துண்டுகளைப் போட்டு புகை கிளப்பி அதில் நோகாமால் வாட்டுவது.உப்பும் சீனியும் தடவி ஊற வைத்து அதன் பின் அதைக் கழுவி புகையில் வாட்டுவார்கள். அது பரம்பரையான நோர்வ்யியர்களின் டெக்னிக் . சாப்பிடும்போது அது கொஞ்சம் பச்சையாகவே இருக்க வில்லோ மர வாசம் உப்போடு சேர்ந்து வரும்.
                                           இன்று ஸ்பகத்தி பிலோங்கனைஸ் சைனிஸ் சிர்பிறை நூடில்ஸ் இக்கு கரட்ஸ்,,லீக்ஸ், பயத்தம் குருத்து ,அரிந்த கோவா இலை இவைகளுடன் அதையும் போட்டு வூக்கில் செய்தேன். வூக் டிப்பிங் சோஸ், டார்க் பிரவுன் சோயாசோஸ், சைனிஸ் ரைஸ் வைன் ,ஜிங்கர் கார்லிக் பேஸ்ட்,வால் மிளகு ,கடல் உப்பு எல்லாம் போட்டு இவைகளுடன் இப்படி செய்வதுக்கு ஒரு ரெஸிப்பி பெயரும் இல்லை.

                                       சமையலிலும் மரபை உடைக்கும் அனுபவங்களே நம் வாழ்வின் மிகப் பெரிய சொத்து

                                                   மெல்லிய சீலை போல சீவி எடுத்தது ,விறகு வைத்து எரித்த புகையில் நோகாமல் வாட்டிய நோர்வே நாட்டு சல்மான் லக்ஸ் மீன் , டென்மார்க் நாட்டு க்கசெல்லோ சீஸ் துண்டுகள், இத்தாலியன் ஸ்டைல் ஸ்பகற்றி பிலோங்கனைஸ் பாஸ்தா. சைனிஸ் கண்டனிஸ் ரைஸ் வையின், தக தக தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு ,வெள்ளை வெங்காயம், அரைத்த கிரீம் கடுகு, கொஞ்சம் கடல் உப்பு, கொஞ்சம் வால் மிளகு, ஒரிகானோ வாசனை இலை, எக்ஸ்ட்ரா வர்யின் ஒலிவ் எண்ணை சேர்த்துச் செய்த இத்தாலியன் ப்ரோவேன்சே ஸ்டைல் பாஸ்தா இரவு உணவு. நல்ல நாள் பெருநாள் நாட்குறிப்பில் இல்லாத வாழ்கையில் நம நம என்று அரிக்கும் நாக்குக்கு இதுக்கு மேல என்னதான் வேண்டும் இந்த முரட்டுக்காளைக்கு .!!!!!!!!!!!

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க.
இமைப் பொழுதும் மறவாத
இத்தாலியன் பாஸ்தா வாழ்க.