Monday, 27 July 2015

ஆகாயக்கடல்வெளி இளையநிலா..

தொன்நூறுகளின் ஆரம்பத்தில் யாழ் குடாநாடு குண்டு மழைக்கு மத்தியில் அதிர்ந்து கொண்டு இருந்த நேரம், கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக இசைமழை பொழிந்த நேரம், என்னோட இளவயதில் ஒரு இசைக் குழுவில் கிட்டார் வாசித்தேன். அந்த இசைக்குழு என்னோட கடைசித் தம்பியின் நண்பர்கள் நடத்தினார்கள்.

                                   நாங்க யாழ்ப்பாணம் டவுனில இருந்தாலும், நிகழ்சிகள் செய்யும் அழைப்புகள் அதிகம் கிராமக் கோவில்களில் இருந்து வரும்,அந்தப் பையன்கள் என் கடைசித் தம்பியை விட சின்னதாக இருந்தது நினைவு இருக்கு.இசைக் குழுவில் அதிகம் ஏலேற்றோனிக் கருவிகள் இருக்கவில்லை, அதனால இசை கொஞ்சம் இரைச்சல் இல்லாமல் இயல்பாக கிராமத்து ஆவாரம்பூப்  போல அழகா எப்பவும் மயங்க வைக்கும் .

                                அந்த இசைக்குழு பெயர் இப்ப நினைவில் இல்லை,அதுபோலவே அதில நான் எப்படிக் கிட்டார் வாசித்தேன் எண்டும் அறவே நினைவு இல்லை.பயணங்கள் முடிவதில்லை படத்தில வந்த இளையநிலாப் பொழிகிறது..  என்ற பாடலை தொடக்கம் முதல் இறுதிவரை கிடாரில் பொழிந்து வாசிக்கும் திறமை என்னிடம் இருந்ததால்  என்னை அந்தப் பையன்கள் ஆஸ்தான கிடாரிஸ்ட் ஆக அந்த இசைக் குழுவில் வைத்து இருந்தார்கள். 

                                          இந்தக்கதை இளையநிலா பாடலோ,அதில் வரும் கிட்டார் அதிசயங்களோ, அல்லது பிஞ்சு போன  அந்த இசைக்குழு பற்றியதோ இல்லை, இளமை  நெஞ்சமெல்லாம்   வயதுக்கோளாறு  ஹோர்மோன்கள் கொலுவிருந்த  நாட்களில்இ ளைய நிலாவை விட இளமையான ஒரு பெண்ணை அந்த இசைக்குழு நடத்திய ஒரு நிகழ்சியில் முன்னப் பின்ன தெரியாத ஒரு ஊரில சந்தித்து பற்றியது..

                                 வடமராட்சியில் சமரபாகுதேவன்குறுச்சி என்ற இடத்தில ஒரு பிள்ளையார் கோவிலில் அந்த இசை நிகழ்ச்சி நடந்த இரவு, எல்லா இரவும் போல இருட்டா இருந்தது, எல்லா கிராமத்துப் பிள்ளையார் கோவில் போல இருந்த அந்த சின்னக் கோவிலில் பிள்ளையாரும் சின்னதா இருந்தார்,கோவிலும் சின்னதா இருந்தது . கோவிலுக்கு முன்னால ஒரு ஆலமரத்திற்குப் பக்கத்தில, மேடை போட்டு,எளிமையா நடந்த அந்த நிகழ்சியில் அந்த இசைக் குழுவின் பிராதான அறிவிபாளார் அன்று வரவில்லை,பையன்கள் கேட்டாங்கள்

                 " அண்ணே நீங்க பாடல் தொடங்குமுன்,ஒரு சின்ன அறிமுக அறிவுப்பு கொடுக்க முடியுமா " எண்டு,

                              எனக்கு எனவுன்சர் என்ற அறிவிப்பாளர் போல எப்படிப் பேசுவது எண்டு தெரிந்தாலும், என்ன பேசுவது எண்டு தெரியவில்லை,நான் அவங்களிடம் அதை சொன்னேன்,அவங்கள்

                   " அண்ணே அது பரவாய் இல்லை,உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லுங்க அண்ணே ,எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை " எண்டு உற்சாகம் கொடுக்க,

                                    நான் மைக்கைப் பிடித்து,ஒரு கையால வேட்டியை இறுக்கிப்பிடித்து கொண்டு ,  என்னோட பாணியில் ஜோக் அடித்து தொடங்கினேன்,அது கொஞ்சம் வித்தியாசமா இருந்ததாலோ என்னவோ சனங்கள் ரசித்தார்கள், அப்பத்தான் மேடையின் கீழே ஒரு இளம் பெண் கொஞ்சம் அளவுக்கு அதிகமா விழுந்து விழுந்து சிரிக்கிறதை,சில நேரம் நான் மைக்கை கையில எடுக்கவே அந்தப் பெண் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க ஆச்சரியமா இருந்தது. 

                                         உங்களுக்கு உண்மையை சொன்னா என்ன நிகழ்சியில் நான் என்னோட கிடாரை விட அவளை அதிகமாக ஓரக்கண்ணால் கவனித்தேன்.....

                                       கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழா ஒரு வருடத்தில் நடக்கும் ஒரு நினைவு நிகழ்வு, சனங்கள் அது எப்படி குளறுபடி இசை நிகழ்வாக இருந்தாலும் ரசிப்பார்கள். இரவின் அமைதியில் விடிய விடிய நடந்த அந்த நிகழ்வின் நடுவில அந்தக் கோவில் ஐயருக்கு பொன்னாடை போர்க்கும் நிகழ்ச்சி நடக்கப் போறதா சொல்லி ,எங்களை மேடையில் இருந்து இறக்கி, அந்த திருவிழா உபயகாரர் வீட்டில சாப்பாடு ரெடியா இருக்கு, எல்லாரும் போய் சாபிட்டு போட்டு வந்து தொடர்ந்து இசை நிகழ்சி செய்யச் சொல்ல, ஒரு வயதான ஐயா வந்து

                  " பொடியள் உங்களுக்கு, இடம் வலம் இந்தப் புது ஊரில தெரியாது ,நான் விதானையார் வீடு காட்டுறன் எனக்குப் பின்னால வாங்கோட"

                          எண்டு சொல்ல ,நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன், அவள் நேரத்தோட எழும்பி , ஆலமரப் பக்கம் நிண்டு எனக்கு என்னவோ சொல்லுரது போல கையால சைகை செய்ய எனக்கு இருட்டில சரியா விளங்கவில்லை ,அவளவுதான் அவள் மின்னல் சொப்பன சுந்தரி நளினத்தில்  மறைந்து போயிட்டாள்,நான் கவனித்து போல அவளும் என்னைக் கவனித்து இருக்கிறாள் எண்டு விளங்கினாலும் எதுக்கு எனக்கு அப்படி சிக்னல் காட்டினாள் எண்டு விளங்கவில்லை.

                            அந்த ஐயா கல்லு ஒழுங்கை பனைவடலி வீதியால எங்களை இழுத்துக்கொண்டு போக,நாங்க பின்னால இழுபட்டுப்போக, பாதத்தியில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய வீதியில்,கோவில் லவுட் சபிகர் சத்தத்தை நோக்கி தொடர்ந்து குரைக்கும் நாய்கள் எங்களைப் பார்த்து இன்னும் அதிகமா குரைக்க தொடங்க  ,

                                  ஆரவாரமற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி அமளி துமளி குறைந்து குறைந்து அமைதியாக ஒழுங்கை முடிவில் சத்தம் சில்வண்டு இரைச்சல் அளவுக்கு நிசப்தமாக அடங்க,  நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு போக,ஒரு மரத்தில அரிக்கன் லாம்பு விளக்கு தொங்க, அந்த வீட்டுக்குள்ள அந்த ஐயா போக முதல்

                          " ராசாத்தி பிள்ளையள்  வாறாங்கள், அம்மாட்ட டக் எண்டு பந்தி விரிச்சு சாப்பாடு போட சொல்லனை "  

                              எண்டு சொல்ல,அந்தப்பெண் அந்த மரத்துக்கு பக்கத்தில், படலையில் ஓரமா நிண்டாள், பெடியங்கள் எல்லாரும் பசியில அடிச்சுப் பிடிச்சு உள்ளுக்கு உள்ளிட, நான் அவளைப் பார்த்தேன், சடார் எண்டு வேட்டிய முழங்காலில இருந்து அவிடுக் கீழ விட்டேன், அவள் எனக்கு என்னவோ சொல்ல,அல்லது கதைக்கக் காத்து இருப்பதுபோல பார்த்தாள். 

                            அவள் நின்ற அந்த படலையின் அருகில் இருந்த  மரத்தில இருந்து ஒரு முன்னம் பின்னம் அறியாத வாசம்வர

                    " இது  என்ன மரம் "  

                        எண்டு மரங்கள் பற்றி என்னவோ தாவரவியல் ஆராய்ச்சி செய்யுற மாதிரி நூல் விட்டு அவளிடம் கேட்டேன், அவள் முகமெல்லாம் சந்தோசமாகி,

                          " இது ஆமணக்கமரம், நீங்க நல்லா கிட்டார் அடிக்குரிங்க " எண்டாள் ,


                      நான் கொஞ்சம் ஜோசித்து " இது உங்களின் வீடா " எண்டேன்,

                அவள்," ஓம் ஓம் ,நீங்க நல்ல முசுபாத்தியா எனவுன்ஸ் செய்யுரிங்க, சிரிப்பு வருகுது " என்றாள் ,

                     நான், " இவங்கள் எல்லாம் என்னோட தம்பியின் பிரென்ஸ், கிட்டார் வாசிக்க தெரியுமா நீங்க மூயுசிக் படிகுரின்களா" எண்டேன்,

                           அவள்," நீங்க இளையநிலா பொழிகிறது பாடல் நிகழ்சியில் பாடுவின்களா " எண்டாள் ,

                         நான் " அப்பிடிதான் நினைக்கிறன், உங்களுக்கு அது விருப்பமா,இன்று உங்களின் திருவிழாவா எண்டு கேட்க" ,

                            " நிலாகாயும் நேரம் சரணம்.... பாடலுக்கு முதல் நீங்க சொன்ன விளக்கம் வித்தியாசமா இருந்தது " எண்டாள்,

                         " நான்  என்ன விளக்கம்  சொன்னேன் ,,எனக்கே  நினைவு இல்லை "

                             " காதலனும்  காதலியும்  கையைப்பிடித்து நடப்பது  போல  அந்த பாடலின் தாளகதி  இருக்கு  எண்டு சொன்னிங்க "

                                " அப்படியா "

                             "  ஹ்ம்ம்  என்னமோ  ஒரு இங்கிலிஷ் சொன்னிங்க  வாத்து  அப்படி  நடக்கும்  என்று "

                               " வாடலிங்  அதுவா ,,,வாத்து  அப்படிதான்  நடக்கும் "

                              " ஹ்ம்ம்  அதுதான்,,நல்லா  இருந்திச்சு ,,அப்படி  ரசித்து  சொன்னது "

                              " அப்படியா,,அது  இங்கிலிஸ்  சொல்லு " 

                              " என்ன அப்படியா என்டுரிங்க,எவளவு  ஆசையா  இருந்திச்சு  தெரியுமா  அதைக்  கேட்க  "

                             " இந்த இசைக்குழுவில் உள்ள எனவுன்சர் இண்டைக்கு வரவில்லை  அதால  நான்  சும்மா  அறிவிப்பாளர் போல  என்வுன்ஸ் செய்தேன் "

                                  " அவர் இனி வரத் தேவை இல்லை,,நீங்களே  மைக்கைப் பிடிச்சு  எனவுன்ஸ்  செய்யுங்கோ "

                               " அட அட ,,எனக்கு  அது எல்லாம் தெரியாது "

                               " வேற  என்ன  தெரியும்,,,சொல்லுங்கோ "

                              " உண்மையைச்சொன்னால் எனக்கு கிட்டார்  வாசிகிறத  தவிர வேற ஒன்றுமே தெரியாது "

                                  " உண்மையாவா சொல்லுரிங்க,,கிட்டார்  எப்படி  வாசிக்கிறது  "

                                    " ஹ்ம்ம் .அது  எல்லாரும்  வாசிக்கலாம் ." 

                                   "  என்ன ஹ்ம்ம்,,வேற  சொல்ல  மாட்டிங்களா  "

                                 " வேற சொல்ல ஒன்றுமில்லை ..."

                       "  என்ன ஒன்றுமில்லை,,ஹ்ம்ம், கோபம்  கோபமா வருது  " 
                                
                                   "    எதுக்குக் கோபம் வருகுது "

                                "  அதுதான்  தெரியவில்லை ..."

                              நான் " நீங்களும் சினிமாப் பாட்டு எல்லாம்  பாடுவின்களா " எண்டு கேட்க,

                            அவள், " நீங்க இனியும் உடுப்பிட்டிக்கு வருவிங்களா " எண்டு கேட்டாள்,

                       நான் தலையைச் சொறிஞ்சு  " உடுப்பிட்டி எங்க இருக்கு " எண்டேன்

                                       அவள் " இது தான் உடுப்பிட்டி " எண்டு சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்,

                         அவள் சிரிக்கிறதைக் கேட்டு,எங்களைக் கூ டிக்கொண்டு வந்த ஐயா,

                                 " அது ஆர் பிள்ளை ராசாத்தி படலைக்க நிக்குறது "  

                            எண்டு கேட்க நான் கதையை நோர்மல் ஆக்கி விடுப்பு கேட்கிற மாதிரி,

                                " ஏன் அரிக்கன் லாம்பை சுற்றி பூச்சி பறக்குது, இது என்ன பூச்சி " எண்டு கேட்டேன் .

                               " இது விட்டில் பூச்சி. இன்று இரவு மழை சிலநேரம் வரலாம் போலக் கிடக்கு ,கவலையா இருக்கு மழை வந்தா நீங்க எல்லாரும் இடையில இசை நிகழ்ச்சி செய்யாமல் போயிடுவின்களே , இந்த விட்டில் பூச்சிகள்  சிம்மினியில் மோதி மோதி செத்துப்போகும்,அதன் வாழ்கை ஒரு இரவுதான் "

                    எண்டு  மெதுவாக சொன்னாள்.

                          " அவங்கள் இடையில  போனானாலும் ,நான் மழையில நனைத்து கொண்டு ,மைக்கைப் பிடிச்சு எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பேனே "

                                எண்டு சொன்னேன்,வாய் விட்டு சிரித்தாள், சல்லி முட்டி  உண்டியலை உடைச்சு சில்லறைக் காசு வெள்ளித் தாம்பாளத் தட்டில கொட்டின மாதிரி இருந்தது. 

                           அதுக்குப் பிறகு ,என்னோட ஊரைக் கேட்டாள்,சொன்னேன், அவள் வட இந்துவில் படிகிறதா சொல்லிக்கொண்டு இருக்கும் போது, வீடுக்க உள்ள இருந்து

                           " கோகிலா,கோகிலா ,இருட்டில எங்க ராசாத்தி சிலமன் தெரியேல்லையே பிள்ளை, பெட்ரோல் மக்ஸுக்கு மண்எண்ணை குறையுது, எண்ணைக் கானை எங்க பிள்ளை வைச்சனி "

                      எண்டு கேட்டு ஒரு குரல் அந்த வயதான அய்யாவின் குரல் போல  வர, அவர் யார் என்று கேட்டேன், தன்னோட பெரியய்யா   என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் அவள் சத்தம் இல்லாமல்

                        " அம்மா கூப்பிடுறா , நீங்க பசியோட இருபிங்க உள்ள வந்து முதலில்  சாப்பிடுங்க " எண்டாள்,

                                 படலைக்கு உள்ள போகும் போது தலையை திருப்பி பார்த்தாள் , தேவதை போல சிரிச்சு மின்னல் போல மின்னிப் போட்டு உள்ளுக்குப் போயிடாள்,

                                எனக்கு விளங்கிட்டுது இந்தக் கதை இதோட முடியாது போல இருக்கு எண்டு எண்டாலும் ஆரம்பம் விளங்காத ஒரு விசியம் எப்படி இனித்தொடரும் எண்டு குழம்பிக்கொண்டு, நான் கொஞ்சம் பிந்தி சாப்பிட வர சாபிட்டுக்கொண்டு இருந்த பெடியங்கள் என்னை சந்தேகமாப் பார்த்தாங்கள்,

                      " அண்ணே இடியப்பம் முடியப் போகுதண்னே "

                           எண்டாங்கள்,நான் ஒண்டும் சொல்லவில்லை. சின்னப்பொடியன்களை முதல் சாப்பிட விட்டுப்போட்டு பிறகு அண்ணே கடைசியா சாப்பிட வாரார் ஆக்கும் எண்டு ஜோசித்திருப்பான்கள் போல.  நான் சாப்பிட ஒரு மூலையில இருக்க, அவள் கதவுக்கு மறைச்சு அரை வாசியா என்னைப் பார்க்க, அவளோட முகம் அஷ்டமி சந்திரன் போல பாதியாக , இமைகள் மட்டும் மூன்றாம் பிறை போல இருட்டில தெரிந்து,

               அவளின் அம்மா

                               " எங்கட ஊர் இடியப்பம் சொதி, உங்களைப் போல டவுனில வளரும் பிறத்தி ஆட்களுக்கு நல்லாப் பிடிக்கும் போல "

                           எண்டு சொல்ல, நான் அவளைப் பார்த்தேன், அவளே கடுகு தாளிச்சுப்போட்ட தேங்காய்ப் பால் சொதிபோல தான் இருந்தாள், சிரிப்பு வந்தது.

                   அவள் என்னைப் பார்த்துக்கொண்டே  

                             " எணை அம்மா,   பச்சை மிளகாய் வெள்ளச் சம்பலும் இவயளுக்குக் பிடிகுமாமம், அங்கே போடணை "

          எண்டு என்னோட இலையை அவளின் அம்மாவுக்கு காட்டினாள். 

                     நான்  பச்சை மிளகாய் வெள்ளைச் சாம்பலைப் ரசித்துப் பார்க்கிற மாதிரி ஒரு கோணத்தில்,தலையை அதிகம் நிமிர்த்தாமல்  அவளைப் பார்த்தேன்.

                                        கோகிலா இளமையா என்னோட வயசு போல இல்லை ,கொஞ்சம் குறைவு போல சின்னதாக இருந்தாள். இருட்டிலையும் அவள் தலை மயிர் நல்ல வள வள எண்டு வழுக்கி வழுக்கி அலைபாய , காதில போட்டு இருத்த பெரிய வளையத் தோட்டுக்க கொஞ்ச தலைமுடியை வேண்டும்  எண்டே வளைச்சு விட்ட மாதிரி இருக்க,முகம் சின்ன சிட்டுக்குருவி போல அப்பாவியா இருந்தது, முழங்காலுக்கு கீழ வரை வரும் ஒரு நீண்ட பாவாடை அணிந்து, ஒரு சில்க் துணியில தைச்ச பிளவுஸ் மேல போட்டு, கையில நிறைய வளையல்கள் அணிந்து இருக்க, அவளின் உருவம் கன்னியாகுமரி அம்மன் சிலைபோல கலர் புல்லா இருக்க கையில ஒரு கிளி வைச்சிருந்தா மதுரை மீனாட்ட்சி அம்மன் போல இருப்பாள் போல இருந்தது.

                               அந்த வடலிப் பாதையில இருந்த பனை மரங்களின் காவோலையில் காத்து மோதி சர சர சர எண்டு சருகுகளுக்குள்ளாள சாரப்பாம்பு போற மாதிரி சத்தம் வந்தது அவள் சத்தம் இல்லாமல் இருந்த சில நிமிடங்கள். தலையைப் பக்கவாட்டில் சரிச்சு, ஒரு கையால தலை மயிரை அள்ளி எறிஞ்சு பின்னுக்கு விழுத்தி, சின்னக் குழந்தைகளின் உலகம் தெரியாத பூரிப்பில் சந்தோஷமா சிரிக்கும் போதெல்லாம்.... 

                                     நான் கடைசியா சாபிட்டு,வெளிய வர பொடியன்கள் எண்ணப் பார்த்துக்கொண்டு வடலிப் பாதையில் நிண்டாங்கள்,நான் ஆமணக்கம் மரத்தையும் அரிக்கன் லாம்பையும் பார்க்க கோகிலா மறுபடியும் அதில நிண்டாள், ஆனால் கொஞ்சம் பதட்டமா நின்றால் என்பதை இருட்டு வெளிகாட்ட, இருட்டில வேற சில உள் ஊர் இளஞ்சர்கள் கொஞ்சம் தள்ளி அந்த வடலிப் பாதையில் நிக்குறது எனக்கும் தெரிய, நான் கொஞ்சம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                              " உங்களின் அரிசிமா இடியப்பம்,தேங்காய் சொதி, பச்சை மிளகாய் வெள்ளைச் சம்பல்,சும்மா நாதம் பேசியது, அதுக்கு நன்றி. உங்க விருப்பமா சாப்பாட்டுக்கு நன்றியாக இளையநிலா பொழிகிறது பாடல்.. எப்படியும் இன்று பாடுவம் ,அதுக்கு நான் தான் இன்ற்றடக்சன், இண்டர்லுத், பினிசிங் எல்லாம் கிடாரில் வைச்சு தட்டப் போறேன் "  

                                  எண்டு கொஞ்சம் விபரமா சொல்லிப் போட்டு ,அவள் பதில் என்ன சொல்லப்போறாள் எண்டு ஜோசிதுக்கொண்டு நின்றேன்,

                                அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆமணக்க மரத்தில தொங்கின அரிக்கன் லாம்பை எடுத்துக்கொண்டு படலையை மெள்ள சாத்திப்போட்டு, வீட்டுக்க போயிட்டாள்.

                    பெடியங்கள் வந்து

                      " அண்ணே அந்த அக்கா யார் " எண்டு கேட்டாங்க,

                      நானும் " அது தான் எனக்கும் பிரச்சினை ,அந்த அக்கா யார் எண்டு எனக்கும் தெரியாது " எண்டு சொன்னேன்,

                அவங்கள்

                       " அண்ணே இந்த ஊர் எங்களுக்கு தெரியாது ,வீண் சோலி வரும் அண்ணே, நீங்க வாங்க நாங்க மேடையில ஏறப்போரம் "

                  எண்டு சொல்ல, நானும் அவங்களோட வந்து மிச்ச நிகழ்ச்சி முழுவதும் கிட்டார் வாசித்தேன்,  இளையநிலா பாடல் பாடி வாசிக்க இளையநிலா இருந்த இடம் வெறுமையா இருந்தது. அவள் வரவே இல்லை, அந்த வெறும் இடத்தைப் பார்த்து பார்த்து கொண்டு இருந்தேன், கடைசியா " நாளை நமதே எந்த நாளும் நமதே...." பாடல் வாசித்து நிகழ்ச்சி முடிய,எல்லா வாத்தியமும்,ஒலி பெருக்கி சாதனங்களும் வானில ஏற்றி முடியவும் அந்த இடம் வெறுமையா இருந்தது .

                           திருவிழா முடிய எல்லாசனமும் வீடுகளுக்குப் போக, அந்த கோயில் நிர்வாக வயதான மனிதர்கள் கோவிலுக்கு வெளிய நிற்க ,நாங்களும் எல்லா மூசிக் சாமான்களும் வானில ஏற்றி முடிய நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு வெளிக்கிட, நாலு சங்குமார்க் சரம் கட்டின வாட்ட சாட்டமான இளைஞர்கள் எங்களின் வானுக்கு கிட்ட வந்து,என்னோட மட்டும் கதைக்க வேண்டும் எண்டு சொன்னார்கள்,பெடியங்கள் என்னை ஏதோ வில்லங்கத்தில மாட்டுற மாதிரி பார்த்தாங்கள்,நான் சாமாளிப்பேன் எண்டு அவங்களுக்கு சொல்லிப் போட்டு தனியப் போனேன்,

                           அவங்களில் ஒருவன் ,

                                   " வதனியை  முதலே தெரியுமா " எண்டு மரியாதையைக் கேட்டான்,

                            விலங்கமான நேரத்தில ஓவரா மரியாதை வெளிய வருவது நல்லதில்லை எண்டு தெரிந்தாலும் ,

                       நான் " யார் வதனி ,அப்படி யாரையும் தெரியாதே  " எண்டு கேட்டேன்,

                             " அவ தான் விதானையின்ற மகள்,நீங்க இருட்டில நிண்டு என்னவோ குசு குசுதின்களே அவளோட " என்றான் 

                             " ஒ,  அவங்களுக்கு  வதனியா  பெயர் "

                            " ஏன்,,வேற பெயர்  சொன்னாளா "

                           "  இல்லை,,நான்  கேட்கவுமில்லை,,சொல்லவுமில்லை ,கோகிலா  என்று அவர்கள் வீட்டில ஒரு அம்மா  கூப்பிட்டா "

                         " ஓம்,,அதுதான் வீட்டில பெயர் , என்ன கதைத்தாள் "

                           "  ஒன்றும் விசேஷமாக  கதைக்கவில்லை,,இசைக்குழுவில் என்ன பாட்டு வாசிப்பிங்க  என்று  கதைத்தாள் "

                               "   அப்படியா ,,அவளவுதானா  "

                                "   அவளவுதான்,,"

                              நான் நடந்ததை சொன்னேன், அந்த நாலு பேரில் ஒருவன் நான் எதிர் பார்த்த கேள்வியை அவனே சொல்லி அதுக்கு கச்சிதமா பொருந்தும் பதிலையும் அவனே சொன்னான், இதெல்லாம் உலகம் முழுக்க கிராமம்,நகரம் வித்தியாசம் இல்லாமல் நடக்கிற விசியம் எனபதால் நான் ஒண்டுமே சொல்லவில்லை ,நான் என்ன சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்பம் ,முதல் அவன் சொன்னது அவனுக்கு மட்டும் உள்ள ஆதங்கமா எண்டும் எனக்கு தெரியாது,அவங்களில் கொஞ்சம் சண்டியன் போல இருந்த ஒருவன், கொஞ்சம் வெருட்டுற மாதிரி சில விசியம் சொன்னான், அது எனக்கு இன்னும் குழப்பாமா இருந்தது ,,,

                                  அந்த நிகழ்சியின் பின் அந்த இசைக்குழு பிரிந்து  என்னோட தம்பி ஒரு முன்னணி இசைக்குழுவில் தபேலா கலைஞ்சனா முன்னணி மேடைகளில் ஏறப்  போக , என்னைப்போன்ற மற்ற சில்லறைகள் எல்லாரும் பிரிந்து எல்லாரும் கொஞ்ச நாளில் காணாமல் போக ,ஒரு கட்டத்தில் அதுக்குப் பிறகு நான் எல்லாத்தையும் மறந்து விட்டேன்,கோகிலாவின் முகத்தை மட்டும் மறக்கவே இல்லை,அது பார்க்கிற இடம் எல்லாம் முன்னுக்கு வந்து மறைக்கிற மாதிரி இருந்தது, 

                                          ஆனாலும் அஞ்சு நிமிடம் பேசியதை வைத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணில் காதல் கோட்டை கட்ட அத்திவாரம் போட முடியாது எண்டு நல்லா தெரிந்தாலும், அந்த இளம் பெண் நிறைய விசியம் என்னோட பேச விரும்பி இருக்கலாம், சந்தர்ப்பம் கிடைக்காத போது தான் பேசாத விசியங்கள் இதயம் முழுவதும் இறுக்கிக்கொண்டு பாரமாக இருக்கும்.எப்படியோ அந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா அழியத் தொடங்க ...

                                        ....சில வருடங்களின் பின் அந்த முகத்தை வேற ஒரு இடத்தில,ஆணையிறவு ஆகாயக் கடல் வெளிச் சண்டையில வீரச்சாவடைந்த போராளிகள்  .விபரம்,ஈழ முரசு  இல வந்த நேரம் பார்த்தேன். சண்முக சுந்த..... .. கோகிலவதனி , மேயர் இளையநிலா எண்டு படம் போட்டு அதில அவள் என்னையே பார்ப்பது போல இருந்தது, இளையநிலா அப்ப வரிப் புலியில் வீரமாக இருந்தாள்,,பாவம் உசிரோட இல்லை!

                                                யுத்தகாலத்திலிருந்து  அந்த நேரம் வாழ்ந்த  எல்லாரையும் போல  இழப்புக்கள்  பற்றி அலைந்துகொண்டு  இருந்த  எல்லா இடங்களிலும் பதில்கள்  இல்லாத  கேள்விகளுடன்  வெயிலோடும்  மழையோடும் தனிமையிலும் ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஜதார்த்த   வாழ்க்கை என்பது  எப்போதும்  உண்மையோடு என்னிடம் ஏராளமானவற்றைப்   பகிர்ந்துகொண்டிருக்கிறது.

                                               இதில மறைக்கவோ திரிபுபடுத்தவோ ஒன்றுமேயில்லை அப்படி நினைத்து   நல்லா உத்துப்பார்த்த போது முகத்தில அஷ்டமி சந்திரன் ,இமைகள் மூன்றாம் பிறை.பின்னணியில் ஆமணக்க மரம்,அதில அரிக்கன் லாம்பு, பாதத்தில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய கல்லு ஒழுங்கை , தொடர்ந்து குரைக்கும் நாய்கள். இரவு நேர இசை  நிகழ்ச்சி, ஆகாயக் கடல் வெளியில் இளையநிலா !
.

Sunday, 26 July 2015

" முதல்ச் சந்திப்பு "

பல வருடம் முன்னர் புலம்பெயர்ந்து சுவீடனில் அரசியல் அகதி முகாமில், புலியையும்,சிங்கத்தையும் பயங்கரமாச் சித்தரித்து உலகத்துப் பச்சைப் பொய் எல்லாம் சொல்லியும் " நிரந்தர வதிவிடக் காட் " கிடைக்குமா, கிடைக்காதா எண்டு அல்லாடிக்கொண்டு மண்டையைப் பிச்சுக்கொண்டு இருந்த நேரம், அந்த முகாம் இருந்த இருட்டு விழுங்கிய அத்துவான காட்டுக்கு நடுவில் புள்ளிபோல இருந்த " பிலேன் சோர்ர்மலான்ட் " என்ற சிறிய நகரத்தில் சில வருடம் வசித்தேன்.

                                 அந்நிய தேசத்தில் தனிமையில் வாழ்ந்ததால் புலன்பெயர்ந்து, ஒரு நாள் என் முன்னாள் மனைவியை " பிலேன் சோர்ர்மலான்ட் " இல் நடந்த ஒரு இசை நிகழ்சியில் , சந்தித்து அவளுக்கு அந்த இடத்தில வைச்சே மண்டையைக் கழுவி , அடுத்த நாள் மாலை, விண்டர் குளிர் கால  ஸ்னோ உறைபனி விழுந்து இருந்த ஒரு  பார்க்கில் சந்திக்க வைத்து , அப்போது சந்தித்த போது நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி ஒரு கவிதைபோல ஒன்று " முதல்ச் சந்திப்பு " என்று தலைப்பிட்டு எழுதினேன் .


                           சில வாரங்களின் பின் , காதல் அவளை முழிச்சுப் பார்க்க விடாமல் கண்ணை மறைச்சதால் என்னோட எல்லா குளறுபடிகளையும் எடை போட முடியாமல் மயங்கிக் கவுண்டு விழுந்த அதிஸ்டத்தால், அவளோடு குடும்பமாகி வாழ்ந்த போது, அந்தக் கவிதையைப் குற்றப்பத்திரிகை போல சுவுடிஷ் மொழியில் எழுதிக் கொடுத்தேன்,

                                 அதை அவள் வாசித்துப் போட்டு ரெண்டு ரெண்டு ரெண்டு துளிக் கண்ணீராக கண்களில் வழிய விட்டாள். அதை ஆனந்தக்கண்ணீர் என்று நினைத்து பார்க்க எனக்கு சந்தோசமா இருந்தது. என் கவிதை ஒருவரின் மனதுவரை இறங்கி இதயத்தை அசைத்துப் பார்த்தது என்று நினைத்து இன்னும் கவனித்து எழுதும் அனுபவம் வர பின் நாட்களில் கவிதை எழுதுவேன் என்று சபதம் எடுத்து, இன்றைக்குப் பலரை வாசித்து அழ வைத்து உசிரை எடுக்கும் ஐடியா அப்போதுதான் வந்தது,

                                      வருடம் முழுவதும் ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் உலகத்தரமான புத்தகம் காசு கொடுத்து வேண்டி வாசிக்கும் அவளுக்கு இப்படி , இலக்கியம் , கவிதை , கதை என்று நான் ஏதாவது ரீல் விட்டு எழுதிக் காட்டினால் அதிகம் அதைக் கவனிக்கவே மாட்டாள். அதை வாசிப்பது எப்பவுமே நேரவிரயம் என்று நினைப்பவள் அவள், அதால ஒரு சந்தேகத்தில்,

                                       " பரவாயில்லை சும்மா தான் எழுதிப் பார்த்தேன் ,நீ அதிகம் ஒன்றையும் உணர்ச்சிவசப்பட்டு எமோஸனலா எடுக்காதே, காதல் வந்தால் கவிதை இலவசமாக் கொட்டும் என்று சொல்லுறார்கள்,அதால எழுத முயற்சித்தேன் , அது உன்னை இவளவு இம்பிரஸ் செய்து இருப்பது ஆச்சரியமா இருக்கு ,முதலில் ஆனந்தக்கண்ணீர் விட்டு அழாதே " என்றேன். அதுக்கு அந்த அகராதி பிடிச்சவள்

.                                  " அடப்பாவி என்னோட தாய் மொழியான ஸ்வான்ஸ்க் சுவுடிஷ் மொழியை இப்படி தாறுமாறா இலக்கணப் பிழையாக எழுதி கொலை செய்கிறாயே, நீ எங்க உருப்படப் போறாய், உன்னை எங்கள் நாட்டில் இருக்க விட்டதுக்கு இப்படி என் தாய் மொழியைப் பழி வேண்டுறாயே ,அதை நினைக்க அடக்க முடியாமல் அழுகை அழுகையா வருகுது " என்று சொன்னாள்...

                                         எப்படியோ அந்தக் ஆனந்தக்கண்ணீர் அர்த்தம் தவறிப் போயும் ,அந்தக் கவிதை தனக்கு எப்பவும் பிடிக்கும் என்று நாங்கள் சட்டரீதியாகப் பிரிந்து பல வருடம் பின்னர் ஒரு நாள் சொன்னாள் , சொல்லிப் போட்டு நான் சுவுடிஷ் மொழியில் எழுதிய அந்தக் கவிதையை எனக்கு மெயில் இல் ஸ்கான் செய்து அனுப்பியும் இருந்தாள், அதில ஆச்சரியமாகி

                                                 " என்னோட கவிதையைப் புரிந்து கொள்ள உனக்கு இவளவு வருஷம் எடுத்ததா ,, மறக்காமல் அதை நினைவு வைத்து இன்று அனுப்பி வைத்ததுக்கும் நன்றி. நான் பல வருடம் முன் எழுதியதை இப்ப தமிழில் மொழிபெயர்து என் ரசிகப் பெருமக்களுக்கு போடுகிறேன்.." என்று பதில் மெயில் அனுப்பி கொஞ்ச நேரத்திலேயே

                                         " அடி செருப்பால,..நான் இப்ப வேற ஒரு எங்கள் சுவிடிஷ் இனத்து ஒரு மனிதருடன் என் வீட்டில் வாழுறேன்,அவன் உன்னுடைய கவிதையை எடுத்து வாசித்தால் சில நேரம் சந்தேகம் பிடிச்சு பிரசினை செய்து என்னோட நின்மதியைக் கெடுப்பான்,உலகம் முழுக்க ஆம்பிளைகள் வெள்ளையோ,கறுப்போ, பிரவுன் கலரோ எதுவாக இருந்தாலும் சந்தேகத்தில் பெண்களைப் பிடிச்சு உலுப்புரதில உலகம் முழுக்க ஆம்பிளைகள் ஒரே மாதிரி, அதால் இந்தக் கவிதைப் பேப்பரை ஸ்கேன் செய்து உனக்கு அனுப்பிப் போட்டு, பேப்பரைக் கிழித்து எறிஞ்சு போட்டேன்,...." என்று நீண்ட மெயில் விளக்கம் எழுதி இருந்தாள்.

                                                ஏனோ தெரியவில்லை அந்தக் கவிதைபோல எழுதியதை இவளவு நாளும் நானே மொழி பெயர்த்து போடவில்லை, வாழ்கையில் விதி எழுதி வைத்து கிளித் தட்டு எப்ப விளையாடும் என்று சொல்லவே முடியாது.ஜோசித்துப் பார்த்தால் மறுபடியும் ஒரு முதல் சந்திப்பு அதே போல நடக்கவே முடியாது என்று யாருமே சொல்லமுடியாது...

" முதல்ச் சந்திப்பு "
-------------------------------

மகிழ்ச்சியை
வரவேற்கத்தக்கதாக
மனமெல்லாம்
நாற்று நட்டு
விடை பெற்ற
நிமிடத்திலிருந்து
விட்டுப் போன
உள்ளங்கையின்
வியர்வை வாசம்
பிலேன் சோர்ர்மலான்ட்
ஒதுக்குப்புற
அகதிமுகாம் வரை
பின் தொடர்ந்து வந்தது..

கைவிடப்பட்ட
அடிமைபோல
அன்புக்கு
ஏங்கும் இதயத்துக்குதான்
அரவணைப்பின்
பெறுமதி
தெரியும் ..

வீசி எறியப்படவர்களின்
வீதியில் தான்
கை கோர்த்து நடப்பதன்
நேசிப்புக்கள்
விருப்பமோடு
காத்திருக்கும்..

ஏக்கங்களின்
அர்த்தம் நெஞ்சோடு
நெரிக்க
என்
நாடித் துடிப்பைப்
பார்த்த போதே
உன்
இதயத் துடிப்பை
உணர வைத்தவளே...

மென்மையாகவே
விரல்களின் மீட்டலை
எண்ணி முடிக்க
நானே
வரைந்து வைத்த
சின்னஞ் சிறிய உலகம்
எல்லாப்
பயங்களையும்
களை பிடுங்கி
எறிந்து போட்டு
பனி உருகும்
பாதையெல்லாம்
நம்பிக்கைகளை
விதைத்தது.
.
.
10.03.15

.

Thiruppukal in Guitar

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

எனக்கும் இளகிய இதயம் இருக்கு...

நோர்வே அதன் மேற்குக்கரையில் ஒரு நீண்ட கடற்கரை உள்ள நாடு கொஞ்ச நாளா வடக்கு ,வடமேற்கு நோர்வேயில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு பிரயாணிகள் கப்பல் எப்படிப் போகுது.அது எப்படி மனிதர்களை பிரயாணம் செய்ய வைக்குது என்று அந்தக் கப்பல் போகும் இடங்கள் எல்லாத்தையும் ரியல் டைமில் போடும் ஒரு நிகழ்ச்சி முக்கிய நோர்வே டெலிவிசனில் ஓடுது.
                                          சென்ற நூற்றாண்டில் ரெயில்வே, நெடுஞ்சாலைகள் போடப்பட்டு தரைவழி பிரயாணம் இணைக்காத நேரத்தில் .தொலை தூர வட மேற்கு கடற்கரை நகரங்களின் முக்கிய இணைப்பாக அந்தக் கப்பல் இருந்தது. இப்போது அதிகம் உல்லாசப்பயணத்துறை அதைப் பயன்படுத்தி கொண்டு இருக்கு .ஆனாலும் இப்பவும் பல நோர்வே மக்கள் தங்கள் நகரங்களுக்கு அந்தக் கப்பலில் தான் பிரயாணம் செய்வார்கள்
                                                இந்த நிகழ்ச்சி வடமேற்கு நோர்வேயின் மலைகளுக்கு நடுவில் கடல் வரும் பிஜோர்ட்ஸ் என்ற இயற்கையான இடங்களை அந்தக் கப்பல் வளைந்து வளைந்து கடந்து செல்வதைக் காட்டும் ஒரு கப்பல் பயண நிகழ்ச்சி .நோர்வேயின் அழகை பார்க்கவேண்டும் என்றால் கட்டாயம் இதை யாரும் தவறவிட முடியாது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடக்குது.
                                       என் வேலை இடைவெளி நேரங்களில் அதையும் நான் பார்ப்பேன். அந்த படத்தொக்குப்பில் வட மேற்க்கு நோர்வே பகுதிக்கு அந்தக் கப்பல் போகும்போது அந்த இடங்களில் உள்ள மனிதர்கள் தங்கள் பகுதிக்கு அந்தக் கப்பல் வரும்போது தங்களின் அன்புக்கு உரியவர்க்களின் பெயர்களை ஒரு பெரிய மட்டையில் எழுதி வாழ்த்துச்செய்தி போல காட்டுவார்கள்
                                             நோர்வே டெலிவிசனில் வருவதாலோ என்னவோ நேற்று அந்த படத்தொகுப்பில் ஒரு வயதான தம்பதிகள் தங்கள் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஒரு மட்டையில்
                                          " இஸா. மாரியா , மார்க்கோ ,அன்றியாஸ் , கிறிஸ்டினா ,,நீங்கள் எங்களை விட்டு சிதறிப் போனாலும் நாங்கள் உங்களோடு எப்போவும் இருப்போம் "
                                     என்று தங்கள் பிள்ளைகள் பிரிந்து போனதை அப்படி எழுதி அந்தக் கப்பலுக்கு காட்டிக்கொண்டு இருந்தார்கள்,இதைப் பார்த்த போது என் சொந்த அனுபவ இழப்பு மனத்தைக் கனதியாக்கியது. நானே ஒரு பெரிய குடும்பதில் உடன்பிறப்புகளோடு பிறந்தவன்,என் நிலைமையும் ஏறக்குறைய இது போலத்தான் .நான் முகத்தைச் துடைச்சுப் போட்டு என் வேலையைப் பார்க்கப் போனேன்.
                                        இந்த உலகத்தில் அன்புக்கு உரியவர்கள் கை விட்டுப் போவதுதான் உலகத்தின் மிகப்பெரிய கொடுமை.அதை என்னோட தனிப்பட்ட தோல்வியாக நானே நினைத்துக்கொண்டு இருப்பதால் அதுக்கு மேலே என்னால் ஒண்டுமே செய்ய முடியவில்லை.l
                                  உலகம் மற்றப்பக்கம் சுத்தினாலும் நான் லேசில தடுமாறமாட்டேன்.பல விசியன்களில் இந்த உலகத்தை தெளிவான " அஸ்ட்ரோ பிஸிக்ஸ் மார்க்ஸ் பிளான்க் குவாண்டம் மெக்கானிக்ஸ் தியரியில் " குழப்பமான அணுகுமுறையில் ஜோசிப்பவன்.
                              ஆனாலும் என் ரெஸ்ட்ரோடிண்டில் முன்னுக்கு பரிமாறும் வேலை செய்யும் இளம் பெண்கள் என்னை கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள் நான் ஏன் எமோசனலா குழம்புறேன் என்று, ,ஒருத்தி வந்து
                                    " நீ இரும்பு மனிதன் போன்ற ஒருவன் ஏன் இப்படி சென்டிமென்டலா பீல் பண்ணுறாய் "
                                            என்று கேட்டாள். நான் அதுக்குப் பதில் சொல்லவில்லை .ஆனால் எனக்கும் இளகிய இதயம் இருக்கு என்று விடிய விடிய அவளுக்கு விளங்கப்படுதிக்கொண்டு இருக்கவா முடியும். சொல்லுங்க பார்ப்பம். 
.
..

" சொங்க்ஸ்வான் " ஏறக்குறைய சொர்க்கம்....

சொங்க்ஸ்வான் ஏரி பற்றி எப்பவுமே புலம்பிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியும். அதுக்கு காரணம் அதன் இயற்கைக் கவர்ச்சி அப்படி பிசத்த வைத்தது. அதனால ஒவ்வொருமுறை அந்த இடம் போகும்போதும் ஜோசிப்பது ஏன் இந்த இடத்தை ஒஸ்லோ பெருநகர நிர்வாகம் ஒரு ப்ரோமோசன் வீடியோ தயாரித்து இந்த இடத்தை பலரும் அறியும்படி செய்யவில்லை என்று,
                                                  நான் நினைத்த மாதிரியே இந்த மாதம் ஒஸ்லோ நகர நிர்வாகம். ஒரு அருமையான ,கவர்சியான வெறும் 49 செக்கன் ஓடும் ஒளித்தொகுப்பு ஒன்றை கையடக்கமா அதேநேரம் அமர்களமாக ஒரு உற்சாகப் பாடல் பின்னணியில் தயாரித்து இன்டர்நெட்,டெலிவிசனில் இப்ப அதன் விளம்பரம் அமோகமா ஓடுது. அதை நினைக்க உண்மையில் சந்தோசமாக் இருக்கு. என்னோட ஒரு அடையாளம் அதில ஒட்டிக்கொண்டு இருப்பது இதமான இன்பம்.
                                               என் வாழ்விடத்தில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ள சொங்க்ஸ்வான் ஏரிக்கரை ஒஸ்லோ நகர வடக்கு விளிம்பில் ,கடல் மட்டத்தில் இருந்து 210 அடி உயரதில் இருக்கு.நான் வசிக்கும் பேட்டை 240 அடியில இருக்கு . ஒரு பதினோருமாடி தொடர் குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் இருக்கும் என் வீடு 300 அடி உயரத்தில் இருக்கு .ஆச்சரியமா எனக்கே இருக்கு கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் நான் வசிப்பது. கடவுள் செய்த புண்ணியம் தான் காரணம். நிட்சயமாக நான் காரணம் இல்லை.
                                                      சொங்க்ஸ்வான் என்ற இந்த சொர்க்கம் நோர்ட் மார்க்கா என்ற பிரதேசத்தின் கடைசி இடம். அதுக்கு மேலே ஒன்றுமே இல்லை,வெறும் காடு ,மலை.அவளவுதான் ஆனால் உண்மையில் ஒஸ்லோவின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் பிரயாணம் செய்ய இலகுவான இடத்தில இருக்கு. சொங்க்ஸ்வான் என்ற பெயரில் ஒரு மெற்றோ ட்ரைன் ஓடுது அது நிற்கும் கடைசி ஸ்டேஷன் சொங்ஸ் வான். அதில இறங்கி கையைக் காலை உதறிப்போட்டு அஞ்சு நிமிடம் கையை வீசிக்கொண்டு நடக்க சொங்க்ஸ் வான் ஏரிக்கரை வா வேண்டு வெத்திலை பாக்கு நிறைகுடம் வைச்சு, வாய் நிறையப் புன்னகையுடன் பன்னீர் தெளித்து அழைக்கும் .
                                                       இந்த ஏரிக்கரை என்னோட ஆத்ம தேடலின் அத்திவாரக் கல்லு. இங்கே நான் அதைச் சுற்றி பந்தயக் குதிரை போல ஓடுவேன், வில்லோ மரங்களிருந்து வீ ப்பர் பறவைகள் நையாண்டி செய்வதை ரசித்துக்கொண்டு நடப்பேன், ரெண்டு சில்லும் சல்லிக்கல்லில் நெரிந்து கதறக் கதற சைக்கில் ஓடுவேன், எப்பவாவது வாத்துப்போல வலிச்சு வலிச்சு நீந்துவேன் , சும்மா போய் சின்னப் பிள்ளைகள் மணலில் வெள்ளை எலிகள் போல விளையாடுவதை விடுப்புப் பார்ப்பேன், பைன் மரங்களுக்கு கீழே இருந்து உலகம் ஏன் இவளவு அழகா இருக்கு என்று அநாவசியமா ஜோசிப்பேன். அழகான இளம்பெண்கள் வெய்யில் காய்வதை இளமை ஏன் இவளவு அள்ளிக்கொட்டுது என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆராய்ச்சி பண்ணுவேன்.
                                                      சொங்க்ஸ் வான் ஏரிக்கரையில் எல்லாரும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. நோர்வே நாட்டவர் ஆழ்கடல் சுழி ஓடுவார்கள். வெளிநாட்டவர் கிறில் என்று நெருப்பில் வாட்டி சாப்பிடுவதில் மும்மரமாக இருப்பார்கள். சிலர் மரத்துக்கு முண்டு கொடுத்துக்கொண்டு புத்தகம் வாசிப்பார்கள்.ஒரு இஸ்லாமியப் பெண் முகம் மட்டும் தெரிய உடை அணிந்து ஒரு பெரிய கல்லில இருந்து திருக்குர்ரான் போல என்னமோ ஒரு புத்தகம் ஆழ்ந்த வாசிப்பில் உள்வாங்கிக்கொண்டு இருந்தா.
                                                 பஞ்சு போலப் பெண்கள் பூப் பந்து விளையாடுவார்கள் .அவர்களுக்கு தசைகளின் வலிமை காட்ட காளை போல இளம் ஆண்கள் கால்ப் பந்து விளையாடுவார்கள் . கயாக் என்ற சின்ன மிதவையில் தண்டு வலிப்பார்கள் சிலர். தண்ணிக்குள்ள அடியைப் பார்க்க சிநோர்க்கிளின் அடிப்பார்கள். அடர் மரங்களுக்கு நடுவில் காதலர்கள் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கனவில கலியாணம் கட்டிக்கொண்டு இருப்பார்கள். வயதான தம்பதிகள் இழந்துபோன இளமையை நினைத்து கைகளை இறுக்கிப்பிடித்து கண்களில் காதல் வழிய நடப்பார்கள். சின்னக் குழந்தைகள் அம்மணமாக மணலில் விளையாடி மறுபடியும் பிறப்பார்கள்.
                                                        உறைபனிக் காலம் முழுவதும் சொங்க்ஸ்வான் தண்ணி வெள்ளித் தாம்பாளம் போல உறைந்துவிடும், ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு குறுக்குவாட்டில் அதன் மேலே நடந்து செல்லலாம். இளையவர்கள் கோலம் போட்டு அதுக்குமேலே பனிச் சறுக்குவார்கள். சிலர் பனிக்கட்டியில் துளை போட்டு பொழுதுபோக மீன் பிடிப்பார்கள் . தன்னை நம்பியவர்களை சறுக்க வைத்தும்,வழுக்க வைத்தும் அழகு காட்டி கொஞ்சம் கொஞ்சமாக கோடையின் வரவில் கரையத் தொடங்கும்
                                                 யாழ்பாணத்தில் பனங்காய் சூப்பிக் கொண்டு இருந்து போட்டு புலம் பெயர்ந்து வடக்கு ஐரோப்பா வந்ததில் செய்த ஒரு உருப்படியான காரியம் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை பற்றி, அது தந்த உந்துததால் கிட்டதட்ட ஐம்பது கவிதைகள் அந்த இடம் பற்றியே அதைச் சுற்றியே எழுதி இருக்கிறேன். பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். சில இயற்கையை மொழிபெயர்க்கும் நிழல் படங்கள் எடுத்து இருக்கிறேன். என்னோட மொபைல் போன் வீடியோவில் சின்ன ஒரு ஒளிப்படத் தொகுப்பும் செய்துள்ளேன்.
                                                  என்னோட வீராளி அம்மாளாச்சி மேலே சத்தியமா சொல்லுறேன் இப்படி ஒரு இடத்தில வசிக்கக் கிடைத்து இருக்கவிட்டால் இதெல்லாம் சாத்தியமாகி இருக்காது. உங்களையே இயற்கையிடம் கொடுங்கள் அது இரண்டு மடங்கு சக்தியுடன் திருப்பிக்கொடுக்கும் என்று துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் நவீன வாழ்வை நகர்த்தும் என்னோட அற்ப அறிவுக்கு பாடம் புகட்டியது " சொங்க்ஸ்வான் " .
                                    ஹ்ம்ம்.. என்னத்தை இதுக்குமேல சொல்ல. " சொங்க்ஸ்வான் " என்னைப் பொறுத்தவரை ஏறக்குறைய சொர்க்கம்..
.
.

சின்னக்காவும் பெரியண்ணையும்...

மனதில் தோன்றிய எண்ணங்கள் சரியான இடத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் பயணம் எளிதாக இல்லாமல் போகலாம். வாழ்கையில் அந்த சரியான இடம் எது என்றே தோன்றாமல் குழம்பிக் கொண்டிருக்க, மிகச் சரியான இடத்தில் ஆரம்பித்திருந்தும், தொடர்ந்த பயணங்கள் திருப்தியை அளிக்காமல் திசை மாறி நீர்த்துப் போகலாம். அந்த மாதிரியான நிலைமை நிஜவாழ்கையில் பலருக்கு நடக்குது. சிலரோட வெற்றியும் தோல்வியும் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமில்லை, சூழ்ந்து வரும் நிலைமைகளாலும் ஏற்படலாம்.

                                              சின்னக்காவின் உண்மையான பெயர் யாருக்கும் ஊருக்குள்ள அவா உசிரோடு இருந்த காலத்தில் தெரியாது, அது என்ன என்று , இந்தக் கதையின் முடிவில் நடந்த சம்பவத்தில்  ஒரு நாள் அவா உயிர் இல்லாமால்ப் போன அந்த  நாளில் தான் அறியமுடிந்தது.  சின்னக்காவின் புரியனின்ட பெயர் பெரியண்ணை அவரோட உண்மையான பெயரும்  யாருக்கும் ஊருக்குள்ள தெரியாது . சின்னக்கா,பெரியண்ணை இந்த இருவரின் பெயர்கள் நெருக்கமாக இருந்த மாதிரி அவர்கள் நெருக்கமாக வாழவில்லை. இருவருமே வேறு வேறு குணாதிசியங்கள் உள்ள இரண்டு துருவங்கள்

                                     எங்களின் ஊரில் இருந்த வீராளி அம்மன்  கோவிலின் முன் வீதியில்  அம்மச்சியா குளத்துக்கும் கொஞ்சம் அருகில் இருந்த பழைய ஒட்டிசுட்டான் ஓடு போட்ட, முன் விராந்தைகள் திறந்து கிடந்த, தேக்குமரங்கள் நின்ற பெரிய வளவில இருந்த கல்லு வீட்டிலதான் அவர்கள் வசித்தார்கள்.நாங்கள் கட்டைக் காட்சட்டை போட்டுக்கொண்டு அது கழண்டு விழ விழ இழுத்து விட்டுக்கொண்டு இருந்த வயதில் அவர்கள் நாற்பது சொச்சம் வயசில் இருந்தார்கள்.

                                               நாயுண்ணிப் பத்தைகள்  அள்ளு கொள்ளையாக  வளர்ந்து நின்ற அந்தக் காணிக்கு கருப்பங்கொல்லை என்று பெயர் சொல்லுவார்கள். அது பெரியன்னைன் பிறந்து வளர்ந்த  சொந்தக் காணி ,பரம்பரை வைப்புச் சொப்புக்  காணி. பெரியண்ணை சின்னக்காவைக் காதலித்து கலியாணம் கட்டின நேரம் அவர் சி டி பி பஸ் டிப்போவில் என்னவோ வேலை செய்தார் என்று சொல்லுவார்கள்.ஆனாலும் சின்னக்கா வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடி வேண்டிக்கொண்டுதான் கருப்பங்கொல்லைக்கு வந்தா. அவாவின் தாய் தெகப்பன் கட்டிக் கொடுத்த நேரம் வெறுங் கழுத்தோடு அனுப்பாமல், கழுத்தில காதில கையில தங்கம் போட்டுதான் கட்டிக்கொடுதார்கள்.

                          ஆனால் சின்னக்கா மஹாலட்சுமிபோல வீட்டுக்கு விளக்கு ஏற்ற வந்த நாளில் இருந்து பெரியண்ணை அந்த வேலையை விட்டுப் போட்டு எங்களின் ஊரில இருந்த களுத்துறையில் ஒரு பொம்பிளை,காலியில் ஒரு பொம்புளை, ஊருக்குள்ள புன்னியக்குஞ்சியம்மா இவர்களுடன் வாழ்ந்த மாஸ்டர் மைன்ட்  புன்னியக்குஞ்சியோட சேர்ந்து,

                                      " புண்ணியம் சிங்கள நாட்டில அள்ளுகொள்ளையா சம்பாரிக்கிறான், ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழிக்கூட்டி அனுப்பினவள் நல்லவள் போல பெண்டுகள் நாட்டாண்மை செய்யிற வீட்டில இருந்துகொண்டு இனி ஒன்டும் செய்யேலாது , இதுகளில் ஒன்றிலுமே உருப்படியா ஒண்டுமில்லை, பொய்க்கு   இல்லை மெய்யாத்தான் சொல்லுறேன் , இந்த சி டி பி பஸ்ஸைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்கிற வேலை சரிவராது,நான் புண்ணியத்தோட போய் பிசினஸ் செய்யப்போறேன்   "

                          என்று  சிங்கள நாட்டில பிசினஸ் செய்யுறேன் என்று  சின்னக்கா போட்டுக்கொண்டு வந்த  நகை நட்டு எல்லாத்தையும் வேண்டிக்கொண்டு போனார். போட்டு ஆறுமாதம் கழித்து வந்த நேரம், நகையும் இல்லை அதில நட்டும் இல்லை, பிசினசும் இல்லை, அதில லாபமும் இல்லை.அதுக்கு பிறகு  கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம் கதை போல புண்ணியக்குஞ்சிய தூசனத்தில  திட்டிக்கொண்டு கொஞ்ச நாள் இருந்தார்.  சின்னக்கா என்ன ஏது நடந்தது என்று கேட்கவேயில்லை .

                                சின்னக்கா குடும்பப்பெண் என்ற வகையில் ஊரில் வாழ்ந்துகொண்டு இருந்த பெண்கள் போல அவா அமைதியாக வாழ்ந்தாலும், அவா புருஷன், அதுதான் சொல்லுவார்களே குடும்பத் தலைவன் என்று அப்படி சும்மா பேருக்கு இருந்த பெரியண்ணை அதுக்குப் பிறகு வீட்டிலையோ அல்லது வெளியிலையோ ஒரு வேலையும் செய்வதில்லை.  வேலையேதும் செய்யச்சொல்லி  கேட்டால் வீடு ரெண்டாகும் .ஒரு கிழமைக்குப் பிரளயம் வெடிக்கும் .

                                   மிகவும் பிரயாசையான சின்னக்கா,வடக்கன் மாடு ரெண்டு வளர்த்தா, கட்டு வண்டில் வைச்சு இருந்தா,  வீட்டில பின்னுக்கு நின்ற தென்ன மரங்களுக்கு நடுவில புல்லு  வளவில ஆடு வளர்த்தா,  வீட்டு ஒரு பக்க  தாழ்வாரத்தை பத்திபோல இறக்கி அதில கோழி அடைச்சுவைச்சு வளர்த்தா, இதை எல்லாம் மிஞ்சுற மாதிரி பொதுவாக ஆண்களே செய்யத் தடுமாறும் ஒரு பிசினஸ் செய்தா. அதுதான் சின்னக்கா என்ற பெயரை ஊருக்குள்ள பேமஸ் ஆக்கியது.  

                 பெரியண்ணை மெலிந்த ஒல்லிப்பிச்சான் போல இருந்தாலும் காமராஜர் போல அடர்த்தியான மீசை வைச்சு இருப்பார். ஆனால் கமுகு மரம் போல உயரமா இருப்பார். சரத்தை எப்பவும் சேட்டுக்கு மேலே வரிஞ்சி முறுக்குக் கட்டிக்கொண்டு, சின்ன வயசில் அவருக்கு வாதம் வந்திருக்கலாம் போல கொஞ்சம் கெந்தல் நடையில நடந்துபோவார். வெளி ஆட்களோட அதிகம் வள வள ராமாயணம் வள வள மகாபாரதம் என்று கதைக்கமாட்டார்.  கொஞ்சம் உண்மையைச்சொன்னால் ஊருக்குள்ள சோலி சுரட்டுக்க தலையை விடாத மனிதர். அவரோட ஒரேயொரு  வீக் பொயின்ட் கள்ளுக்குடி , அதைக் குடிச்சுப்போட்டு வந்து நாக்கால மேல் சொண்டில் முன்னுக்கு விழுந்த நுனி மீசையை பூனை போல அங்காலும் இங்காலும் இழுத்துக்கொண்டு இருப்பார்.    

                                   சின்னக்காவுக்கு ஒரு மகன் இருந்தான் ,அவனுக்கு எங்களின் வயதுதான் ,அவனுக்கு பெயர் சிம்மேந்திரன். ஆனால் வீட்டில அவனை பபா என்றுதான் சொல்லுவார்கள்.பபா எங்களைப்போல பள்ளிக் கூ டம் தொடந்து படிக்கவில்லை,ஒரு வயதில் அவனுக்கு ஒரு மன வியாதி வந்து வீட்டை விட்டு வெளிய போக மாட்டான், வீட்டு முற்றத்தில் நின்ற வேப்ப மரத்துக்குக் கீழே கதிரையைப் போடட்டுடுடு அதில இருந்து கொண்டு தனக்குள்ள சிரிப்பான்,தனக்குள்ள கதைப்பான்.அவளவுதான் அவன் உலகம்

"குறுக்கால போனதுகள் , போக்கற்றதுகள்  பொழுது விடிஞ்சதும் சீரளிஞ்ச மாதிரி, தேவையில்லாமல் சனியன் மூதேசிகள் யாரோ கழிப்பு கழிச்சுப் போட்ட பூசனிக்காயை சந்தியில போட்டு அதை எண்ட பொடி மித்திசு இப்ப மூளை மாறாட்டத்தில் அவதிப்பட வைச்சுப் போட்டுதுகளே தூமைகள் "

                             என்று பெரியண்ணை எப்பவும் திட்டிக்கொண்டு இருப்பார். சின்னக்கா அதுக்கும் ஒன்றும் சொல்ல மாட்டா. பபா என்ன விதமான மன வியாதியில் அவதிப்பட்டான் என்று எங்களுக்கும் அப்ப தெரியாது ஆனால் ஓரளவு இப்ப தெரியும்.தெரிஞ்சும் என்ன அவனும் சின்னக்கா கதை முடிந்த கொஞ்ச நாளில் அவனின் கதையும் அவலமாக முடிந்து போனதால் இப்ப அதைக் கதைத்து வேலை இல்லை.

                            சின்னக்கா வீட்டில கலர் டிவி அந்த நேரமே இருந்தது. பல வீடுகளில் அந்த நேரம் ரேடியோதான் உலகமா இருந்ததால் இரவு சனம்கள் ரூபவாகினி செய்தி, நிகழ்சிகள பார்க்கப் போவார்கள்.சின்னக்கா டெலிவிசனைப் போட்டுட்டு வெளி விறாந்தையில் தனியா இருந்து உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று கொழுவி வைச்சுக்கொண்டு அடுத்த கட்டப் பிளான் போட்டுக்கொண்டு இருப்பா. ஆனால் புதன் கிழமை நடக்கும் கலையரங்கம் நிகழ்ச்சி மட்டும் டெலிவிசனுக்கு முன்னுக்கு இருந்து

                            " மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்? ஈசா மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்? " 

                         என்று பாடிக்கொண்டு ரசித்து ரசித்து பார்ப்பா. வேற ஒரு நாளும் ஒரு நிகழ்ச்சியும் பார்க்க மாட்டா. கலையரங்கம் ஆர்வமா அவா பார்பதுக்கு ஒருவேளை அவாவும் நடனம்.சங்கீதம் படிக்க ஆசைப்பட்டு இருக்கலாம்,அல்லது அது இடையில குழப்பப்பட்டு கலியாணம் நடந்து இருக்கலாம், எப்படியோ சரியான காரணம் தெரியாது..

                           சின்னக்காவின்  " பிசினஸ் மனேஜ்ச்மென்ட் டக்டிஸ் " சிம்பிள்.  " புத்திசாலிகளால் எது ஒன்றிலிருந்தும் எதையும் விடுவித்துத் தனதாக்கிக்கொள்ள முடியும் " என்பதுதான் அது. அதில தொடக்கி சின்னக்கா செய்த பிசினஸ், ஒரு மினிவான் வேண்டி அதுக்கு "சந்நிதியான் " என்று பெயர் வைச்சு, அதை யாழ்பாணம் அச்சுவேலி லைனில ஓடவிட்டா, காலையில் வான் வெளிக்கிட்டா இரவு தான் அவாவின் வீடுக்கு உள்ள உள்ள வளவில கொண்டுவந்து விடுவார்கள்,அதை ஓட்டும் டிரைவரும்,கிளினரும். சின்னக்கா அன்றைய கலக்சனை கணக்குப் பார்த்து எடுத்து ,கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் டைவருக்கும்,கிளினருக்கும் அன்றன்றே கையில சம்பளம் கொடுப்பா.

                               அவர்கள் போனபின் வானுக்க ஏறி கூட்டுவா, கதிரைகளின் சீட் கிழிஞ்சு இருந்தா அதுகளை மாற்றுவா, முன்னுக்கு எஞ்சினைக் திறந்து ஒயில் பார்ப்பா, பெட்ரோல் டாங்கில் கம்பியை விட்டு அதன் அளவை செக் பண்ணுவா, பட்டரிகளை அசிட் இருக்கா என்று ஆட்டிப் பாத்து போட்டு எல்லாம் முடிய வான் டாஸ்போட்டில இருக்கும் சன்னதிமுருகன் படத்துக்கு சாம்பிராணிக் குச்சி கொழுத்தி வைச்சு கும்பிட்டுப் போட்டு வந்திடுவா.

                                 இப்படிதான் வழமையாக ஒவ்வொருநாளும் நடக்கும், இதெல்லாம் நடக்கும் போது அவா புருஷன் பெரியண்ணை பனை ஓலைப் பாயிட்கு மேலே தென்னம்ஓலை வெட்டிப்போட்டுட்டு, அதில கடுக்காய் கோப்பிறேசனில் கள்ளு அடிச்சுப்போட்டு வந்து காலுக்கு மேல காலைப் போட்டு ஆட்டிக்கொண்டு வதனமோ சந்திரப் பிம்பமோ என்று பாடிக்கொண்டு அரை நித்திரையில் மம்மிக்கொண்டு கிடப்பார்.

                  ‘பாட்டுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை....கோயில் வாசல்லயும் கிணத்தடியிலும் எனக்காக வந்து பல்லை இளிச்சுக்கொண்டு நின்ற நேரம், இதெல்லாம் தோன்றவில்லை போல, ஹ்ம்ம்..தலையில  எழுதியதை யாராலும் மாற்ற ஏலாதே,  சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவங்கள் , வாழ்க்கையிலும் இப்ப நடக்குதே "

                              என்று அலுத்துக்கொண்டு போவா..

                        " எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும் ஏறுமாறாக இருப்பளேயாமாகில்  கூறாமல் சந்நியாசம் கொள் எண்டு உன்னைப்போல பெண்டுகளுக்குதான் எழுதி வைசாங்களடி அந்தக் காலத்தில் "

                             என்று சொல்லிக்கொண்டு தென்ன்னம் மட்டையைக் கையில எடுப்பார்  பெரியன்னை .

                        "  இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ,பார்க்கப் பட்டினத்தார் போல இருக்கு  " 

                           என்று சிரிச்சுப்  போட்டு சின்னக்கா அந்தாள் இருகிறதே தெரியாதமாதிரிப் போவா .

 பெரியன்னைக்கு பகல் பன்னண்டு மணிக்கு வீராளி அம்மன் கோவில் வைரவர் மணி அடிக்க கை நடுங்கத் தொடங்கும். தலைச் சொறிஞ்சுகொண்டு

                      " பிச்சை எடுத்தானாம் ஆண்டி அதைப் பிடிங்கிச்சாம் அனுமார் போல இவள் அறுதளியிட்ட படியளக்க வேண்டி கிடக்கே " 

                                   என்று புறுபுறுதுக்கொண்டு அங்கேயும் இங்கேயும் , குதிக்காலில ஆணி  வளர்ந்து அது குத்தக் குத்தக்  கெந்துற மாதிரி ஒரு இடத்தில நிக்க முடியாமல் நடந்து திரிவார். சின்னக்கா

                                " குசினி மேசையில தானே கொட்டிக்கிடக்கு " என்று சொல்லுவா ,அவர் போய் அதில கிடக்கிற காசை எடுத்துக்கொண்டு கடுக்காய் கோப்பிறேசனுக்கு வெளிக்கிடுவார். அவருக்கு காசு கண்ணிலபட்டவுடன  உடம்பு ஒருக்கா உதறும்.

                             " எண்ட ராசாத்தி,  நீயல்லால் தெய்வமில்லை " 

என்று பாடிக்கொண்டு அவரோட ரலிச் சைக்கிளை எடுப்பார்.  

                                சின்னக்கா நல்ல தோற்றமான, உயரமான பெண். அவா நடக்கிறதே ஆம்பிளைகள் கையை விசுக்கி விசுக்கி நடப்பது போல நடப்பா. அவாவுக்கு பாம்புக் காது.ரோட்டாலை போறவங்கள் என்ன கதைகுரான்கள் என்று வீட்டில இருந்துகொண்டே சொல்லுவா. அவாவின் வலது நெற்றியில் ஒரு வெட்டு விழுந்த தழும்பு  இருந்தது. அது எப்படி வந்தது என்று தெரியாது. சின்னக்கா என்று அவா ரோட்டில போற நேரம் நாங்கள் யாரும் அக்கோய் என்று கூபிட்டால் நேர கிட்ட வந்து கண்ணுக்குள்ள பார்த்து

                             "  என்னடா மருமோன் என்ன சிலமன் , கேள்விக் குறிபோல வளைஞ்சு வளைஞ்சு போறாய், இளந்தாரிகள் கலியாணம் கட்ட முதல் இப்பவே இப்பிடி வளஞ்சா வாற பொம்பிள துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்டு எடுபட்டு ஓடப்போராளுகள் " 

                      என்று சிரித்துக்கொண்டே சொல்லுவா.

                              சில நாட்களில் அவா வீட்டில நின்ற மினிவான் சிலநேரம் காலையில் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாது. நாங்கள் போய் கிளினருடன் சேர்ந்து அதைப் தள்ளுவம் . அப்பவும் அது மக்கர் பண்ணும் .சின்னக்கா பார்த்துக்கொண்டு நிண்டுபோட்டு வந்து 

                              " பெடியள் ஒரு கை பிடியுங்கடா, சந்நிதியான் என்னட்ட என்னத்துக்கு இன்றைக்கு குழப்படி விடுறான்,எங்க ஒருக்கா இறுக்கித் தள்ளுங்கடா ,சன்னதி முருகா நீ என்னைப்போட்டு இப்படி சோதிக்கலாமா " 
                         என்று போட்டு எங்களோடு வந்து ரெண்டு உள்ளம் கையையும் அகட்டி வைச்சு எங்களுக்கு உற்சாகம் தர  

                      " எங்க பிடியுங்கடா , இந்தா பிடி,, இந்தா பிடி , அடே வழுக்கி  உருள அச்க்சிலேடரை  குத்திப் போடுங்கடா ,,இந்தா பிடி ,,இழுத்துப்போடு  ,,இந்தா பிடி  சந்நிதியான் ,,அவன் விடமாட்டான்  இந்தா பிடி  "  

                                 என்று  தள்ளுவா, அந்த ஒரு தள்ளில மினிவான் விக்கி விக்கி இழுத்துப்போட்டு சடார் என்று ஸ்டார்ட் ஆகி  அசுவத்தாமா குதிரை போல எகிறிப் பாயும்..

                         சின்னக்கா சந்நிதியான் மினிவான் நல்லா ஓட அதில வந்த லாபத்தில் இன்னொரு மினிவான் வேண்டினா அதுக்கு " வல்லிபுரத்தான் " என்று பெயர் எழுதி அதையும் வடமராட்சி யாழ்பாணம் லைனில ஓட விட்டா.ஆனால் அதில வேலை செய்த டிரைவரும் கிளினரும் கலக்சன் காசில கொஞ்சக் காசு அடிச்சுக்கொண்டு இருந்தது ஒரு நாள் பிடிபட்டது. ரெண்டு பேரையும் வீட்டு செவ்விழனி மரத்துக்கு கீழ நிக்கவைச்சு விசாரணை செய்தா. அவங்கள் கையைக்கட்டிக்கொண்டு களவெடுத்ததை ஒத்துக்கொண்டு தலையைக் குனிஞ்சுகொண்டு நிண்டாங்கள்

                            "  தம்பியவை வாகனம் ஓட்டினால்தான் எனக்கும் வருமானம், உங்களுக்கும்  வீட்டில அடுப்பு எரிஞ்சு உலை வேகும், காசைக் கண்டால் எல்லாருக்கும் தான் கை இழுக்கும், ஆனால் செய்யும் தோழியே தெய்வம் எண்டு சொல்லிதானே உங்களை வேலைக்கு சேர்தனான் ,பிறகு என்னத்துக்கு எண்ட சீவியம் தாற சீதேவி குடத்தை சரிச்சுப் பார்த்த மாதிரி இந்தப் பொறுக்கி வேலை செய்த நீங்கள், சொல்லுங்கடா " 

                         என்று கேட்க ,கொஞ்சம் வயதான  டிரைவர் " சீட்டுக் காசு கட்டப் பிந்திப் போச்சு அக்கோய் " என்று தலையச் சொறிஞ்சான், இளமையான கிளினர் அதுக்கு பதில் சொல்லவில்லை, " இதில்லாட்டி இன்னொரு வேலை இருக்கு " என்றது போல விறைப்பா பார்த்துக்கொண்டு இருந்தான். சின்னக்கா ரென்று பேருக்கும் மூன்று நாள் சம்பளமும் கையில கொடுத்து அதோட நிட்பாட்டிப்போட்ட. வேற ஆட்கள் அடுத்த வாரம் எடுத்த போது " கட் அண்ட் ரைட் " ஆ களவு மட்டும் செய்யக்கூடாது என்று உறுதியுரை வேண்டிக்கொண்டு தான் வேலைக்கு எடுத்தா.

                          யாழ்ப்பாணத் தீபகற்பம்,  பெருநிலப் பரப்பு  வன்னியுடன்  பாதைகள் தடைப்பட்டு இருந்த நேரம், ஆணையிறவு , நாகதேவன்துறை நேவிக்காரன் இரவு இரவா கடலில பலரின் கதையை முடித்த கிளாலி கடலுக்கால பிரயாணம் நடந்த போது  சின்னக்கா மூன்றாவதா இன்னுமொரு இன்வெஸ்ட்மென்ட் செய்தா. அது எங்களின் ஊருக்க இல்லை.  பூநகரிக்குப் போய் தென்னம் காணியும், சிறுபோகம் பெரும்போகம் ரெண்டு செய்யக்கூடிய வயலும் வேண்டினா, வேண்டி அந்த ஊர் ஆட்களை வைச்சு வருசா வருஷம் ரெண்டு போகம் விதைப்பா 

                               அதால அடிக்கடி வயல்வெட்டு நேரம் கிளாலிக் கடல் பாதையால் போவா .போய் வயல் வேலை ஆட்களுக்கு கணக்கு வழக்கு பார்த்து முடிச்சுப்போட்டு, நெல்லை அங்கேயே மில்லில் உடைச்சு வித்துப்போட்டு, வரும்போது கையோடு கொஞ்ச புழுங்கல் அரிசி நெல்லு மூட்டை ,ஆடுக்கு தவிடு, மாட்டுக்கு  வைக்கல் ,கொஞ்சம் மொட்டைக்கறுப்பன் அரிசி  வீட்டுக்கு தேவையென்று  மூட்டையா வள்ளத்தில  ஏற்றி இறக்கிப் பறிச்சு பிறகு  லாண்ட்மாஸ்டர் ஒன்றில ஏற்றிக்கொண்டு அந்த லான்ட் மாச்டரிலையே அவாவும்  ஏறி வருவா.

              அவா வீட்டுக்கு அன்றாட வாழ்க்கை வாசல்படியில் விளக்குமாற்றை வைச்சு விடியாமல் கொஞ்சம் இடைஞ்சல்பட்ட அந்தரிச்ச  சனம்கள்

           " அக்கோய்,,,எண்ட....  அக்கோய்  ,,காத்தால போன மனுசனை இன்னும் காணேல்ல   அக்கோய் . வடக்கால பலாலி பக்கம்  ஹெலி அடிக்கிறான் அகோர அடி அக்கோய் .பெடிசுகள் பச்சை தண்ணிய குடிச்சுப்போட்டு கிடக்குதுகள்  .உண்ணான சீவியம் போற போக்கு பிடிபடுகுதில்லை அக்கோய் ..,இன்னும்  உலை வைக்கேல்ல அக்கோய் "

                         எண்டுகொண்டு பகல் போனால் ,முதல் வேலையா ஒரு மாட்டுத்தாள் பையில் மொட்டைக்கறுப்பன் அரிசி கொண்டுவந்து கொடுதுப்போட்டுதான் மிச்சம் ஹெலி அடிக்குதா,,புலி அடிக்குதா என்ன ஏது என்று விசாரிப்பா. வேலியில முருங்கக்காயும் பிடிங்கிக்கொண்டு வந்து கொடுப்பா, " வாறநேரம் தா " என்று சொல்லி கைச் செலவுக்கு காசும் கொடுப்பா  

                      "  மெய்யாதான்  கேட்கிறேன் , உனக்கு என்னத்துக்கு இந்த ஊருக்கு சம்பளம் இல்லாமல் உதவுற வேலை, காக்கொத்து அரிசிக்கு வழியில்லாத  சனம்கள் என்னவோ உன்னட்ட பொன்னம்மா மில்லுக்க திரவியம் கிடக்கிற மாதிரி வருகுதுகள், உன்னான , நாலுமுழம் வேட்டி கட்டின  பூனையைப் பார்த்து எலி உடுப்பிலாமல்  ஓடிபோன மாதிரி இந்த வீட்டில   நான் சொல்லி நீ எண்டைக்குத்தான் கேட்டனி  "

                                 என்று கை நடுங்க தொடங்கப் புருபுறுப்பார். சின்னக்கா அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டா. கேட்டுக்கொண்டு இருப்பா. கொஞ்ச நேரத்தில் குசினிக்க போட்டு வந்து  ரலிச் சைக்கிளை எடுத்துக்கொண்டு,மீசையத் தடவிப்போட்டு  பெரியண்ணை கடுக்காய்மரத்தடிக்கு போயிடுவார்..

                       சின்னக்கா பூநகரி போறதெண்டால் வீட்டில புருசனுக்கும். மகனுக்கும் சமைக்க  கீரை விக்கிற வயதான குஞ்சரம் என்ற கிழவியத் தான் ஒழுங்குபடுத்திப்போட்டுப் போவா . ஒரு முறை சின்னக்கா பூநகரி போய் நின்ற நேரம் கிளாலியில் அடிபாடு  சண்டை  ரெண்டு பக்கமும் அகோரமாக நடந்தது. போன சின்னக்கா ஒரு கிழமைக்கு மேல திரும்பி வரவில்லை. அதுக்குள்ளே நாலு தரம் பிரயாணிகள் படகுகள் நேவி திரத்தி சுட்டு அதில இறந்த பலர் ரெண்டு பக்கமும் உப்புத் தண்ணியில் ஊறி வீங்கிக் கரை ஒதுங்கினார்கள் என்று செய்திகள் உள்ளூர் பேப்பரில்  ஒரே செத்தவீடு மயமாக இருக்க. போன சின்னக்க  ரெண்டு கிழமை வரவில்லை.

                                 பெரியண்ணை அவர் பாட்டில சின்னக்கா இல்லாததால் மினிவான் கலக்சன் காசில விளையாடிக்கொண்டு ஏறக்குறை காலையிலேயே குடிக்கப்போய் நல்லா இருட்டின பிறகுதான் தலைகரணமா வருவார். மினிவான்கள் சரியான கவனிப்பு இல்லாமல் கொற இழுவை போல என்ஜினில சத்தம் வர ஓடிக்கொண்டு இருந்தது. பபா எப்பவும் போல வேப்ப மரத்துக்கு கீழே இருந்து தனக்குள்ளே சிரிச்சுக்கொண்டு இருந்தான்.

                                ஏதோ ஒரு சந்தேகத்தில் ,கன நாளா பெரியண்ணையோடு கதைவழி இல்லாமல் இருந்த புண்ணியக்குஞ்சி தான் வந்து பெரியண்ணையோடு வீட்டுக்கு வெளிய நின்று விசாரித்தார்  ,,

                              " உண்ட வெறிக் கதையை விட்டுப்போட்டு ஏன் உன்ட மனிசியின் சிலமன் இல்லை ஏன் காணும் இன்னும் தேடாமல் இருக்கிறாய் என்று . " கேட்டார் , அதுக்கு பெரியண்ணை

                         " உண்ட விசர்க்கதை அங்கால் போடு, என்ட பொஞ்சாதி போனவள் வரவில்லை என்றால் உனக்கு என்னடா அக்கறை ,அவளுக்கு அள்ளி வைச்சது போதாது எண்டு இப்ப கொள்ளி வைக்கவும் தேடுறாய் போல கிடக்கே,போய் உண்ட பெண்டுகளிண்ட .....ஒழுங்கா இருக்க எண்டு ஆராச்சி பண்ணுறதை விட்டுப்போட்டு  அடுத்தவன் பொஞ்சாதிக்கு......"

                             என்று கொளுவல் தொடக்கிற மாதிரி கதைக்க தொடங்க கடைசியில் கொளுவல் வந்து புண்ணியக் குஞ்சி

                               " இங்கவா  ,உன்னோட விழல் கதையை முதல் விட்டுப்போட்டு , மனுசர் மாதிரிக் கதை , உனக்கு என்ன மூதேவி வாலாயம் வந்த மாதிரி கையில சனியன் காசு உலாவுது நீ எங்க தேடப்போறாய் "

                                 என்று சொல்லிப்போட்டு வந்து பெட்டிசம் பாலசிங்கத்திட்ட நடந்ததை சொல்ல ,பெட்டிசம் தான்

                      " புண்ணியம்... இதுக்குள்ள என்னவோ பிரகண்டம் இருக்கு,எதுக்கும் நீ சைக்கில் எடு நானும் வாறன் பெரியாஸ்பதிரி சவச் சாலையில் கிளாலியில் செத்துப்போன சனம்களிண்ட பிரேதம் அடையாளம் காட்ட வைச்சு இருகிறாங்களாம் எண்டு காலங் காத்தாலை பேபரில் போட்டு இருந்தாங்கள்,எதுக்கும் ஒருக்கா போய்ப் பார்ப்போம். "

                              என்று சைக்கிள் ஓடத் தெரியாத பெட்டிசம் பாலசிங்கம் பின்னால கரியரில் ஏறி இருக்க,வயதான புண்ணியக்குஞ்சி கனகலிங்கம் சுருட்டைப் பத்திக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு மூச்சு வாங்க மிதிசுக் கொண்டு போனார்.

                         உங்களுக்கு ஒரு விசியம் இந்த இடத்தில சொல்ல வேண்டும் பெட்டிசம் பாலசிங்கமும் புன்னியக்குஞ்சியும் நரகத்து நடு முள்ளுகள் போல ஆளையாள் முகத்தில முன்டுற எதிரிகள்,ஏனோ அன்றைக்கு ரெண்டு பேரும் ஒன்றானது ஒரு அதிசயம். அவர்களின் சண்டை சச்சரவு அட்டகாசம் பற்றி நானே ரெண்டு கதை தணியத்  தனிய எழுதி இருக்கிறேன் என்றாலே  பாருங்களேன் ஆட்கள் எப்படிப்பட்ட   பேர்வழி என்று.

                             பிரேத சவக்காலையில் இடம் இல்லாமல் பிரேதங்கள் வெளிய போட்டு இருந்தார்கள். எல்லா பிரேதமும் உப்புத் தண்ணியில ஊதிக் கிடந்தது. புண்ணியக்குஞ்சிதான் சின்னக்காவை நெத்தியில இருந்த  வெட்டை வைச்சு அடையாளம் கண்டார். பிசுக்கங்காய் போல அவா உடம்பு சளிஞ்சு போய்க் கிடக்க  சூ ட்டுக்காயம் ஒன்றும் இல்லை, அடிபாட்டுக்கு நடுவில பிளாஸ்டிக் போட்  அகப்பட்டு குண்டு துளைத்து தண்ணி நிரம்பி கவுண்டு விழுந்ததால் தண்ணியில தத்தளித்து மரணம் அடைந்து இருக்கலாம் என்று கொஞ்சம் ஊகமான விசியங்களை உண்மையாகச் சொல்லிக் கூடிய, அரசாங்க உத்தியோகம் பார்த்த பெட்டிசம் பாலசிங்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். 

                         பிறகு செத்த வீடு ரெண்டு நாள் சாம்பல் வாழை , மாவிலை தோரணம், தகரப்பந்தல் ,வாடகைக் கதிரை , பறை மேளம் எல்லாம் பிடிச்சு நடந்தது. பெரியண்ணை கேவிக் கேவி ஒரு மூலையில் இருந்து அழுதுகொண்டு இருந்தார். புண்ணியக் குஞ்சி அவருக்கு ஒரு போத்தல் திக்கத்து தென்னம் சாராயம் கொண்டுவந்து கொடுத்து

                        " இண்டைக்கு ரெண்டு நாளாவது  வீட்டில இரு , பொறுப்பில்லாத மோட்டுக் கழுதை , " என்று சொன்னார்.

                கொஞ்சநாள் பெரியண்ணை போத்திலில் கள்ளு வேண்டிக்கொண்டு வந்து வீட்டில வைச்சே குடிக்கத் தொடங்கிட்டார். அடுத்த வாரமே சின்னக்கா இல்லாததால் பெரியண்ணை ரெண்டு மினி வானையும் ,

                               " உதுகளை இந்த உருப்படிகளை என்னால வைச்சு  மேய்க்க ஏலாது ,,இப்பிடியே உருட்டித்  தள்ளிக் கொண்டு போறது எண்டாலும் போங்கோடா " 
                                   என்று கேட்டு வந்த அற விலைக்கே  வித்தார், பபா கொஞ்சநாள் என்ன நடக்குது என்று விளங்காமல் யாரோடும் பேசாமல் இருந்தான்.முக்கியமா அவன் தனக்குளே சிரிப்பதை நிப்பாட்டிப்போட்டு தலையைத்  தீடிர் திடீர் என்று திருப்பி யாரையோ உற்றுப் பார்ப்பது போலவும், கேள்விக்குப் பதில் சொல்ல்வது போலவும் வித்தியாசமாக அவன் மனநிலை அலைபாய, அடிக்கடி கிணற்றை எட்டிப்பார்க்க தொடங்கி,ஒரு நாள் வயித்தில் சீமெந்து அரிகல்லை கட்டிக்கொண்டு பாஞ்சிட்டான். 

                 வீட்டுக்கு வந்து ஒருவரின் சிலமனும்  இல்லை என்று குஞ்சரம்  பெரியன்னையத் தேட அவர் இல்லை, அவர் ரலிச்  சைக்கிளும் இல்லை , வீட்டு வளவு முழுவதும் தேடிப்பார்த்த குஞ்சரம் தற்செயலாக கிணத்துக்க எட்டிப்பார்த்துக் குழற....அந்த ரெண்டாவது செத்தவீடு சின்னக்கா போய்ச் சேர்ந்த ரெண்டாவது வாரம் நடந்தது ..

                        சின்னக்காவின் முப்பத்தி ஒண்டுக்கு  ஒரு சின்ன கல்வெட்டு நினைவுப் புத்தகம் கவிஞர் கந்தப்பு எழுதிய கலித்தொகை வெண்பாக்கள் எல்லாம் போட்டு அடித்தார்கள். அதில்தான் சின்னக்காவின் பெயர் ஆனந்தகிருஷ்ணாவேணி  என்றும் பெரியண்னையின் பெயர் தில்லைஅம்பல நடராசன் என்று அறிய முடிந்தது .
.
.