Monday, 22 January 2018

சொல்லமுடியாத காரணங்கள் !

கவிதைகளை எப்படி அடையாளம் காண்பது, அவற்றை எப்படி மொழியோடு விளையாடும் வார்த்தைகளில் அர்த்தப்படுத்துவது என்பதுபற்றி எப்பவுமே  விவாதங்கள் அரங்குகளில்  நடக்குது. பல பிரபலமான  எழுத்தாளர்கள் கவனிக்கும்படியான கருத்துக்கள் எப்போதும் தங்கள் பதிவுகளில்  சம்பந்தமாக எழுதுகிறார்கள்.  வாசிக்க நமக்கும் பயணிப்பதுக்கு இலக்குகள் வைத்து  நல்ல திசைவெளிகளும்  கிடைக்கலாம் , அண்மையில்   தேவதச்சன் பற்றி ஒரு கட்டுரை வாசிக்கக்கிடைத்தது .                                   
                                                                "தேவதச்சன் கவிதைகளில்  சமூக மனிதன், அக மனிதன் என இரண்டு எதிர்நிலைகள் காணப்படுகின்றன. எது சமூகமனிதனின் குரல். எது அக மனிதனின் குரல். இந்த இருவரையும் பிரிக்க முடியுமா. இந்த இரண்டின் உருவாக்கம் எவ்வாறு உருவாகிறது. உண்மையில் இது நிழலுக்கும் உருவத்திற்கும் உள்ள தொடர்பு போன்றதா என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது " என்று  கவிஞ்சர் தேவதச்சன் கவிதைகள் பற்றி ஒரு பதிவில் எழுதி இருப்பார் எஸ் ராமகிருஷ்ணன் .

                                                                     40 வருடங்களுக்கு மேலாககே கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்    கவிஞ்சர் தேவதச்சன் . அவரோட சில கவிதைகளாவது உங்களை கட்டாயம் பாதித்து ,ஜோசிக்க வைத்திருக்கும்.. அவரின் " உடுப்பு தோய்க்கும் போது குருவிகளின் குரல் " என்ற கவிதை பலவருடம் முன் படித்தும் இப்பவும் நல்ல நினைவு இருக்கு. எப்படிச் சுற்றியுள்ள உலகத்தை பரிமாணங்களில் உடைத்து அதுக்குள்ளே இருக்கும் ரசனைகளை வெளியே கொண்டுவருவது என்பதுதான்  கவிஞ்சர் தேவதச்சனின் திறமை .

                                                         வழக்கம்போல முகநூலில்  எழுதிய    என்னுடைய  சின்னக் கவிதை போன்ற பதிவுகளை  வலைப்பூங்காவில் தூவிவிட்டு   உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !
*
நிரப்ப 
வெற்றிடமில்லாமல் 
கத்திக்கதைத்துக்கொண்டு 
போதை மனிதர்கள்,
நடுங்கியபடி
சனிக்கிழமையிரவு,
முட்டிமோதிக்கொள்ளும்
மதுக்கிண்ணங்கள்,
கைகளைப்
பிசைந்தபடி
காலியான நாற்காலியில்
நான் !
*


*
தப்படிகளில் 
தாளம் தவறும் 
நடித்துடிப்பு !
ஒறு 
நொடியில்
தமனித்தசைகள்
வியர்த்துக்களைப்படைந்து
மறுகணம்
இதயலயிப்புடன்
ஈடுபாடுகள் தொடருது !
*


*
எப்பவோவொரு வயதில் 
வாசித்துமுடிக்காமல் 
மூடிவைத்துவிட்டுப்போன 
புத்தகம்தான் !
தலைப்பை
மறுபடியும்
நேற்றுச் சந்தித்தபோது
சட்டென்று
இடைமறித்தது
அமைதி !
*


*
ஒரே நேரத்தில் 
போட்டிபோட்டு
மூன்று 
சலங்கைச் சத்தம் !
நீ
நடந்து வந்துகொண்டே
வாய்விட்டுச்
சிரித்தபோது !
*


*
தூக்கம் 
முன்னொரு காலத்தில் 
வடிவமைக்கப்பட்ட 
குறுகலான பாதை ,
முடிவுகள்
பூதாகரமாகத் தெரிய
அவரவர்
கனவின் கதவுகள்
திறக்கப்படுகின்றன !
*


*
அச்சடிக்கப்பட்ட 
விடைத்தாள் போலிருக்கு 
அடையவேண்டிய 
இலட்சியங்கள் ,
கீறிட்ட
இடங்களில்
புள்ளடி போட்டபடி போகுது
வாழ்க்கை !
*


*
யாரோ
காலடியில் 
வந்ததுபோனதுக்கு
அடையாளமாய் 
புதைத்துவிட்டுப்போன
ஒற்றைச் சப்பாத்து,!
கொஞ்சம்கொஞ்சமாக
திமிராகவே
விழுங்கிக்கொள்கின்றது
பனிப்பொழிவு !
*


*
தும்பிக்கையோடிருப்பதால் 
வேழமுகத்துப் 
பிள்ளையார் 
ஆனை போலப் 
பலமென்கிறார்கள் !
எனக்கென்னவோ
அந்தக் கையில்
நம்பிக்கையின்
சாயல்தான்
அதிகம் !
*


*
அலைச்சல் 
முடித்து திரும்பும் போது 
இருள் விரியும் 
வெண்பனி நடைபாதைகள் !
திணறலால்
தவறி விடப்பட்ட
குளிர் மூச்சில்
சுவாசிக்க ஒன்றுமில்லை !
நடுக்கத்தை மட்டுமே
பரிசளித்துவிட்டுத்
தொலைகிறது வெளிச்சம் !
*


*
வருத்தம் 
தெரிவிக்கவேண்டிய
சூனிய சூழலுக்குள் 
காலப்பிரஞ்சை !
பெயரளவிலும்
ஒரு
எதிர்வினையை ப்
பதிவுசெய்யாமலேயிருக்கு
வாழ்வு !
*


*
என் 
பலவீனத்தையும் சேர்த்தே 
இந்த வரியைச் 
சொல்கிறேன்! 
பேசுவதுக்கு
எதிர்பார்ப்பு வேண்டுமே ஒழிய
இடையே நிகழுமிந்த
பனிப்போரை
முடித்து வைக்க விரும்பும்
அறிவுரைகள்
அல்ல !.
*


*
எது எப்படியோ 
ஒரு 
குருட்டு 
நம்பிக்கையில் 
கனவாவது
கண்டுகொண்டே கடைசிவரை
உனக்கு
நண்பனாகவே
நான் இருப்பேன் !
*


*
" வேறென்ன ? "
இந்த வார்த்தையோடுதான் 
நீயும்
உரையாடலிருந்து
அறுந்து போகிறாய்
நேரத்தை வீணடித்த
இருவருக்கும்
கிடைத்த எதிர்பார்ப்பு
முழுக்க முழுக்க
ஏமாற்றம் !
*


*
இரவெல்லாம்
விறைத்துப் போய்
வெளி வாசலில்
சிதைந்து கிடக்கிறது
உறைபனி !
காலை எழுந்துகொள்ளும்
உற்சாக தருணங்கள்
சிறிதளவே மிச்சம் !
வேறென்ன ?
இந்த வார்த்தையோடு
நான்
சலித்துப்போகிறேன் !
*


*
கனதியான
அந்தக் கசப்பு வார்த்தையை 
நீ 
விரும்பியே
சொல்லாமலே விட்டிருக்கலாம்,
விட்டிருந்தால் ,
சொல்ல முடியாத
காரணங்களாவது
இறவாதிருந்திருக்கலாம் !
*


*
பொறுப்புகள் 
செழுமையாக 
வாய்க்கப் பெற்றிருந்தாலும் 
உன் 
பொறுமையை
உலகளாவிய விஷயமாக
மாற்றுவதில்
எதிர்மறையாகத்
தோற்றுப்போகிறதடி
எந்தக் கவிதையும் !
*


*
என் 
மன அழுத்தம் 
வடிவமைக்கும் 
தலை குனிவுகள், 
கால்கள்
சுமையாகி விட்டபோதும்
தோல்வியிலும்
உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உன்
இறுகப்பற்றிய
கைகள் !
*


*
எந்தவொரு 
வர்ண ஓவியனும்
மென்மைகளில் 
அதீத முயற்சி செய்து 
வரவழைக்க முடியாத
பிரமையின் பிரதி
உன்
புன்சிரிப்பு முகம் !
*


*
முழுக்கவே 
வர்ணனைகளற்ற 
வசனங்களில் 
ஈரநெஞ்சின் மொழியில் 
நம்
இருவரிடையே
நிகழும் உரையாடல்
மவுனம் !
*


*
பிடிவாதக் 
கொள்கைகளும் 
புதிர்க் குழப்பங்களும் 
பிரமாண்டங்களோடு 
நீர்த்து விடுவதால்
பலநேரங்களில்
யாரோடும் கதைக்கவே விடுகுதில்லை
தனியறுநிலையில்
அதுவாகவே ஒதுங்கிப்போகும்
பிடிவாதம் !
*


*
சோடனைகளோடு
பெரிதுபடுத்தவிரும்பவில்லை 
கடைசிப் புகலிடம்,
நிறை நம்பிக்கை,
வாழ்வியல்ப்பிடிப்பு ,
சாதிக்கும் பேராசை ,
உதவும் மனது,
இப்போதைக்கு இதுவேதான்
இருப்பு முன்னிறுத்தும் வாய்ப்புகளெனில்
எதைத் தேர்ந்தெடுப்பது?
*


*
நாளையதினம் 
என்னவாகவிருக்கும் என்பதைக் 
குறிப்பறிந்து 
சோம்போறித்தனமான 
இரவுக்கள் 
நேரத்தையும் காலத்தையும்
சமாந்தரமாகச்
சுற்றிவளைத்து
வெளிச்சங்களை விழுங்குது !
*


*
நினைவிருக்கிறதா ?
உனது 
கண்ணீர்த்துளிகளை
நீயும், 
என்னுடையதை
நானும்,
அவரவர்
விரல்களால்
வழித்துத் துடைத்துத்தானே
பிரிந்தே போனோம்
நினைவிருக்கிறதா ?
*


*
இன்னும் 
என்னவெல்லாமிருக்கோ 
மடைதிறந்த 
கதைத்துக்கொண்டேயிரு,
சலித்துப்போய்
சுரமிழந்து நிறுத்திவிடாதே !
எங்கோவொரு
அலைவரிசையில்
உனக்குள்ளிருந்து
என்னை
கண்டுபிடிப்பேன் !
*


*
நீ
விரும்பும்வரையில்
மரங்கொத்தி,
நான் 
திரும்பும் வழியில்
திசைகளை வெறித்த
பட்டமரம் !
உனக்காகத்தானே
வாறதெல்லாம்வரட்டுமென்று
காத்திருக்கிறேன் !
*


*
நெறிப்படுத்த 
மேட்கொள்ளப்பட்ட 
எல்லா 
முன்முயற்சிகளும் 
பின்வாங்கிவிட்டன
அபத்தமான
வார்த்தைச்சிக்கலில்
தன்னை மாட்டிக்கொண்ட
கவிதையில் !
*


*
மவுனச்சிறையில் 
முடங்கிப்போன 
காலத்தை 
பாழ்வெளியெங்கும் 
சுமந்துகொண்டு
இடம் தொலைத்ததுபோல
நடந்து திரிந்து
எனக்குள்ளே வந்துசேர்ந்தேன் !
*


*
மவுனச்சிறையில் 
முடங்கிப்போன 
காலத்தை 
பாழ்வெளியெங்கும் 
சுமந்துகொண்டு
இடம் தொலைத்ததுபோல
நடந்து திரிந்து
எனக்குள்ளே வந்துசேர்ந்தேன் !
*


*
எதிர்ப்பில்லாத் திசையில் 
பார்ப்பதுதான் 
ஒரு 
பறவையின் 
இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !
*


*
ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து 
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த 
சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!
*


*
மெதுவாக அசையும் 
விடிகாலைப்பனி ,
அசையாத 
நீலாம்பரி நீரேரி,
அக்கறையோடு அணைப்பதுபோல
நெஞ்சோடு நீரலைகள்
நீந்தியதால்
பருவ இலையொன்று
பக்குவமிழந்து விட்டது !
*


*
எதிர்பார்த்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் !
இரண்டு புள்ளிகளை 
இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய
தற்கொலை போலிருந்தது
அலைக்கழித்தும்
கலையாமலிருந்தவந்த
சந்திப்பு !
*


*
ஆவிபறக்கும்
கடுங்கோப்பி
பூனைகள்
நடமாடித்திரியும் 
இருட்டை கொண்டுவருகிறது,
அதன்
வறுத்தெடுத்த வாசனையில்
பிரியங்களேதுமில்லை
பால்
கலந்தபோது
உன்
நிறம் வந்துவிட்டதடி !
*


*
வயதுக்குவந்த
மழைத்துளியின்
சோம்பல் முறிப்பில்
அலைந்தோடி 
தூரத்தில் சென்ற
தாவனித் துப்பட்டா
வானவில் !
*


*
தீராப் பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத 
தவிப்பு
காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
சருகு !
*

*
இருட்டில்
கலவி நெருக்கமாகும்
ஒரு
பெண் பூனையின் 
விலகி வெளிப்படும்
உச்சக்கட்ட அலறல்
ஒரு
இரவு முழுவத்துக்குமான
பதற்றத்தை
உருவாக்கிவிடுகிறது !
*


*
நுட்பமான
உணர்ச்சிப்பரிமாற்றங்களோடு
வயதான
நேரமெழுப்பி மணிக்கூடு , 
அதிகாலை
இயக்கி வைத்தபடியே
எழுப்பிவிடும்
மிரட்டலான
அகங்காரத்தைத் தவிர்த்து
அதற்கென்று
சுயவிருப்பங்களேயில்லை !
*


*
நிலவு
போதை மேகங்களோடு
வெறித்தூறிக்கிடந்த
நிசிகடந்த நேரம் 
தேவதைகளின்
குரலெடுத்துப்பாடிய
முகமூடி
ஜன்னல் முகம்
யாருடையது ?
அதன்பிறகு
இருட்டு நிசப்தமாகிவிட்டதே !
*


*
அங்கேதானே 
மாக்கோலத்துக்குப் போட்டியாக 
பொங்கலுக்கு 
நிறச்சேலை உடுத்தினாய்,
இங்கே
எதட்காக
பால் பொங்கி
கரும்பு வில்லோடு
அடங்காப் பெருங்கனவு ?
*

*
எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு 
எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !
*


*
அறைக்கதவை
அகடித் திறக்கச்சொல்லும்
வெளிச்சங்கள் !
கழட்டித் 
துடைக்கும் போதுதான்
கவனித்தேன்
வார்த்தோல்ச் சப்பாத்தின்
பாதங்களில்
பனி சிதறி உதறிய
வைரங்கள் !
*


*
அமரஜீவிதக்
காதல்
தென்றலோடு
மேலோட்டமாகச் 
வாழச் சம்பந்தப்பட்டது !
அசட்டுத்தனமான காமம்
குற்றத்தையும்
அதுக்கான தண்டனையையும்
பேய்க்காற்று
நேரடியாகவே உரசிச் செல்வது !
*


*
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்த
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில்
ரெண்டையும் சேர்த்து
மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
*


*
அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது 
இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்
நான் !
*


*
ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் 
பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை !
*


*
பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !
தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !
*


*
நான்
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
அலட்டிக்கொள்ளவில்லை !
பிறகு
நாலாம் நிசியில்
நம்பிக்கைகள்
உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தில்
மறப்பதை விடவும்
மன்னிப்பதிலேயேயிருந்தாள்
அவள் !
*


*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு, 
வெளியே
கறுப்புப் பகல்,
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !
*


*
இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு 
காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !
*


*
காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,
தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !
*


*
என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,
அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !
*