Sunday 14 January 2018

தழும்புகள் !

ஒரு கதையோ, அல்லது கவிதையோ அதை சின்னதாக சுருக்கிய வடிவில் அதன் ஆதார செய்திகள் உரசப்படாமல் எழுதுவது எப்பவுமே கடினம். வடிவத்தில் கொஞ்சம் எழுதத்தான் நேரத்தில் நிறைய ஜோசிக்க வேண்டும் . சின்னக் கவிதைகளின் பலமே தீப்பொறிபோல அர்த்தம் பத்தவைக்கும் மொழியும், ஆடம்பரங்கள் இல்லாத சம்பவங்களும் அது உருவாக்கும் ரம்மியமான உணர்ச்சியும்.

                                                             பலர் சின்னக் கவிதைகளை ஜப்பானியர்களின் ஹைக்கூ வடிவம் என்று குழம்புகிறார்கள். ஹைக்கூ அதன் கட்டுமான வடிவத்தில் வேணுமென்றால் மேலோட்டமாக கவிதை போல இருக்கலாம். ஆனால் அதன் ஜீவநதிப்பிரவாகம் ஆரம்பிப்பது தத்துவத்தில் இருந்து. உலகம் பற்றிய பார்வையில் ஜென் தத்துவத்தின் ஜன்னல்கள் சாதரண மனிதர்களின் பார்வை நோக்கில் ஹைக்கூவில் திறக்கப்படுகின்றன .

                                தழும்புகள்  இப்போது அடையாளமாக இருக்கலாம் ! ஆனாலும்  ஆழமான வலியை ஒருபொழுது தந்து சென்றவை ! காலத்தின் நீடிப்பில் இப்போது மறந்துபோனவை !  நானும் குட்டிக் கவிவிதை வடிவில் எழுதிப்பார்த்த பெரிய வானத்தில் ஒரு  சிட்டுக்குருவியின் பறத்தல்போன்ற  சின்னச்சின்ன முயட்சிகளை உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !

 *
நாலுநாட்கள் 

முன் வாங்கிய
உறைபனிச்  சப்பாத்து
காலைக் கடித்துக்கொண்டிருந்தது
இன்றோ
வாழ்க்கை போலவே
இங்கிதம் சேர்த்து 

இதமாகிவிட
இப்போதைக்கு 
கொஞ்சம்  எதிர்பார்ப்பு !
*
*
தென்கிழக்கு சூரியனில்
வெளிச்சமான வீதி
சிரிக்கிறது  நகரம்

அரக்கப்பரக்க அவசரத்தில்
கண்ணாடி 

இழுத்து வழிப்பவன்
பிரகாசமான ஒளியில்
தன் 

முகத்தைப் பார்க்கிறான் 
*

*
சிவப்புநிற பாதைக்கடப்பு
வேண்டுமென்றே 

ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியமென
அலட்ச்சியமாய் 

நிலைமாறுகிறேன் !
*

*
கன்னங்களில் 

மதுக்கு கிண்ணங்களைத்
தாங்கிறாள் லாமியா லாரின்னா
பிடிக்காத நகரத்தின்
மிக உயரமான கட்டிடங்களின் கீழே
அவசர மனிதர்களைத் 

திட்டிக்கொண்டு
மெதுவாக அலைகிறேன் 

*

*
மனவோசை மொழியை
ஆவணப்படுத்திவிடு என்கிறது
ஆத்மா
இன்றய நிலைமையும்
தட்காலிகமானது என்கிறது 

காற்று
திசைவழியிழந்து
அன்புக்குரியவளே 

உன்னிடம்
அடைக்கலம் கிடைக்கும்வரை
நான்
மவுனமாகி
க்கொண்டிருக்கிறேன்
*

*
உறை குளிர் 
காற்றின் விருப்பமில்லாக் 
காதலோடு மல்லுக்கட்டி 
அடைக்கலம் தேடத்தொடங்குகிறது 
பார்த்துக்கொண்டிருக்க
நினைவெழுதிக்காட்டி
அள்ளிக்கொண்டுபோகும் 

வீதிகள்!
*

*
மழுங்குத் திருப்பங்களில்
ஒடித் தப்பிக்கிறது
மழை
எல்லா நிறமான மனிதர்களில்
யாருமே 

குடை பிடிக்கவில்லை .
மழை தலைகளை
உரிமை எடுத்தபடியிருக்கிறது !

*. 

*
விறைத்து நடுங்கியபடி
பதுங்கிக்கொண்டேயிருக்கிற
தெருவிளக்குகள்
அணைத்துவிடும் போதெல்லாம்
பொண்ணுச்சி மலர்களின்
தளிர் மென்மையை
தனிமை இரவுகளுக்குள்
படபடப்புடன் சேர்ந்துவிடும் !

*

*.
நேற்றுவரை
அழகற்றதை எழுதியதற்காக
விரோதம் காட்டிய நகரத்தின்
அடங்காத கோபம்
தனியாதபடியேதானிருக்கிறது
அழகை நிராகரித்தவன்
நான்

*

*

எனக்கு 

வெறுப்புக்கள் தருவதில்தான்
தெரிவுகள் பதுங்கியிருக்கு
ஆனால்
எனது நிலைப்பாட்டில்
இப்போதுவரை 
மாற்றமில்லை.
*

*
அவதானிப்பில்
நீட்சிகுறித்த பயம்
ஓய்வாக
மரக்கிளையிலும் ...

சிறகை
நீள விரித்தபடியே
பறவை !
*



*
வெள்ளைத்தாடி
மிக மெல்லவே நடக்கும்
வயதானவர் ,
மிச்சமின்றி ...

ஓடிக்கழைத்துப்போன
காலம் !
*


*
பின்னிரவின்
பிரத்யேகப் பார்வை
திருடப்படுகிறது
தீங்கிளைப் ...

பயங்கள் அடர்த்தியான
கறுப்புநிறத்தில் !
*


*
மழை
தேங்கவைத்த
சிதறல் வெள்ளத்தில்
காணாமல்ப்போன ...

நிலவின்
நீர்த்த வாசனை !
*


*
மூன்றாம்
சாமக்கனவு
ரகசியமாக ஏற்படுத்தும்
உக்கிர சலனங்கள்,...

ரெண்டாவது
வெண்பனிப்பொழிவு,
*


*
வெளிச்சம்
உந்திப்பறக்கமுடியாமல்
உறைந்துவிடத் தொடங்குகிறது ,
குளிர்காற்றில் ...

செதுக்கிக்களைந்த
இலைகள் !
*


*
முந்தநாளிருந்து
பிரிந்துபோன நேற்று
நாளையிலிருந்து
இடப்பெயரும் நாளைமறுநாள் ...

தத்தளிப்பு
இன்றைய மனநிலை !
*


*
வலியைக்
கவிதைக்குள்
வழிக்குக்கொண்டுவந்ததே
வெளிப்படும் பாவத்தில்...

நுழைந்துகொண்ட
விதி !
*


*
ஏராளம்
காதல் உத்தரவாதங்கள்
ஒன்றாகவே
விசிறிக்கொள்ளும் போதும் ...

மொழியை
விறைக்கவைக்குது
நினைவிலொரு
தனிக்கவிதை !
*


*
வழி தளரும்
நடைபாதை
விழிக் காத்திருப்புகளின்
சூட்ச்சுமங்களை ...

நிலைமழுங்க வைத்த
நாட்க்குறிப்பு !
*


*
செறிவான
முன்னேற்பாடுகள்
குறைவான
அத்தியாவசியங்கள் ...

இத்தனை
சுழிப்புகளை எதிர்பார்க்கவில்லை
வாழ்க்கை !
*


*
விவாதங்களின்
பயங்கர விரட்டல்
துல்லியமான
எதிர் விமர்சனம் ...

எதிர்பார்ப்புகள் தரும்
ஏமாற்றம்
இடையில் நிகழும்
பயணம் !
*


*
ஒரு பக்கம்
நிறையா வெறுமை
இன்னொரு மறுபக்கம்
தோல்விகள் ...

பின்னுக்கு
அந்நியமாகிப்போனவர்கள்
ஒரே ஒரு குறை.
எதிரில்
நீங்கள் !

*

*
அந்தத்
தேன்வண்டின்
முதல்க் காதல்த்தோல்வி
முதல் சந்திப்பில் ...

முத்தமிட்ட
வாசமில்லாத மலர்!
*


*
குரைக்கவைத்து
நாயை
உறங்கவிடாமலாக்கியது
சதிரான சத்தங்களும் ...

திகிலான இரவும்
பழியெல்லாம்
அப்பாவி நிலவுக்குமேல் !
*


*
மழைக்கூந்தல்
துவட்டியபடியே
விரதமிருந்து
பனிப்பூக்கள் சொரியும் ...

நீர்மேகம் !
*


*
மவுனம்தான்
இட்டுநிரப்பிக்கொண்டிருந்தது
அதுக்குப்பிறகு
நானாகி நீயும் ...

நீயாகி நானும்
பேசவேயில்லையே !
*


*
காற்றில்
உல்லாசமாய்
ஏறிப்பயணிக்கும்
இன்றைய மனம் ...

கதை சொல்லியினுடைய
விதை !
*


*
உருவப்
புரிதலின்றிதான்
நிராகரிக்கப்படுகின்றன
ராத்திரிகளை ...

விடியலாக்கிவைக்கும்
வெள்ளிகள் !
*


*
நுனிக்காம்பில்
காலைப் பனித்துளி
அந்தநேரம்தான்
விடாப்பிடியாக ...

ஊஞ்சலாட விரும்புகிறது
இலை !
*


*
வானம்
அடர் இரவுகளில்
சில்லறைத்தனமாகப்
பிச்சைதான் எடுக்கிறது, ...

அலுமினியத்தட்டில்
சிதறிக்கிடக்கும்
நட்ச்சத்திரங்கள் !
*


*
தந்திரமான
குளிர் நீரோடை
தலைகுனிவு நாணல்கள்
பிறகெப்படி...

தனித்துவமிழக்காத
நிலவும் சேர்ந்தே
மிதந்து கிடக்குது ?
*


*
தவறி விழுந்த
சருகின் மேல்
நீர்ப்போக்கில்
ஆற்றுக்கு ...

அடங்காத பெருமிதம்
வழிகாட்டி நகர்த்தும்
இரு கரைகளை
யாருமே
மதிப்பதில்லை !
*


*
அமைதி நகரம்
நீண்ட நிசித்தூக்கம்
வழிதவறிய
பெருவெளிகளிலும் ...

காத்திருக்கிறது
வெண்பனி !
*


*
நான்
அவஸ்தைகொடுத்துத்தான்
பிறந்திருக்கிறேன்
அம்மாவின் ...

மடிவயிறு முழுவதும்
தழும்புகள் !
*


*
எல்லாத்தையுமே 
கொடுத்துவிட்டுப்போய்விட்டது   
நடுக்கோடைமழை !
நனைத்த யாருமே
நன்றியோடு இரங்கவில்லை !
கூரைக்கு மட்டும்
அடங்காத சோகமுகம் !  
தாள்வாரத்தில்
சொட்டுச்சொட்டாக  
கண்ணீர்த்துளிகள் !

*

*
புயல் 
அறிகுறிகள் ஆரம்பமே 
நீ 
ரகசியமாக 
குமிழி விழுத்தி
வாய்பொத்திச் சிரித்தபோது,
வெளிப்படையாக
அடியோடு பிடுங்கி ஏறியப்பட்டது
கரையைக்கடந்தபோது
மனது !
*


*
எவளோடோ
படுத்துக்கிடந்தது போட்டு
எழும்பிவருவதாக
நேற்றுமட்டும் 
மஞ்சள் முகம்காட்டிய
அரிதார வெயிலை
வெளிச்சத்தில் திட்டினேன்,
என்னை
நேராகப் பார்ப்பதை
இன்று
நிராகரித்துவிட்டது !
*


*
பத்து வருடம்
கதைவழி இல்லை
நேற்றுக்
ஹலோ என்கிறாள் 
இந்தப்பக்கம்
அவனுக்குள்
சன்னமான எதிரொலிகள்
காலப்பிரிவில்
பெருமவுனமாகிறது !
*


*
நினைவுப்
பெரு மூச்சை
நாலுபக்கமும் உடைக்கிறது
ஒரு 
மழைத்துளிக்குள்
உள்ளிட்டு
விழுந்து சிதறித் தெறித்த
உன்
விம்பம் !
*


*
ஒரு
சமுத்திரக்கரையில்
எங்கிருந்தோ
அலை தள்ளி வந்து சேர்த்த
ஒரு
சின்னஞ்சிறிய
படகு
மணல்தட்டிக் கரைஏறியும்
தனை நம்பி இறங்கிய
நாலு மனிதருக்காய்த்
தத்தளிக்குது !
*


*
ரெண்டாயிரம்
ஆண்டுக்கணக்கு
மக்கிய மரச்சிலுவைக்கு,
அந்தத் 
திருமனிதன்
உள்ளங்கை ஒழுகிவழியும்
ரத்தத்தில்
நேற்று அறைந்ததுபோலிருக்கு
ஆணிகள் !
*


*
எதுக்கடி
தலையைக் குனிகிறாய்
உன்
வெட்கத்தையெல்லாம்தானே 
போகிறபோக்கில்
காற்று
அள்ளியெடுத்து
சொந்தம்கொண்டாடுதே !
*


*
வேகமாக
நடை நடக்கிறாள்
கடக்கமுடியாமல்
பின்தள்ளிச் செல்கிறது 
ஈரக் கூந்தல்
வாசம்
*


*
இன்று
விரியத் தயங்கும்
மொட்டுக்குள்
நாளைய பொழுதுக்கென்று 
ஒரு
பூந்தோட்டமிருக்கலாம் !


*


*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு
...

மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !
*


*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத ...

எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ?
*


*
ஆசுவாசமாக
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில்,
மூடுமுன் கதவோடு ...

உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !
*


*
காற்று
தெருப்புழுதி நெரிசலில்
என்னவெல்லாமோ
மதிக்கும்படி ...

சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !
*



*
ஆக்கிரமிக்கும் 
தனிமைப் பார்வையில் 
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல்கள்
அசாதரணமாகவே   
கண்களைத் திறக்கப்படுகின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி 
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !

*

*
அலட்சியங்களுக்குள் 
தலை நுழைந்துகொண்ட 
கோபத்தைக் 
கணக்கில் எடுக்காமல்
நீ ,
மன்னிப்புக்காக
மன்றாடும்
ஒவ்வொரு முறையும்
கீறல் விழுந்த
இதயமே பலவீனமடைகிற
நான்  !

*

*
அடங்கிப் போகவேண்டிய
தேவைகள் இல்லாத
வெண்பனி
பிறப்பிவிக்கப்படுவது
அதன்
அனுபவத்தை
மிதித்துக்
கேவலப்படுத்தி
நடுத்தெருவிலிருந்து
நடைபாதைக்கு
இழுத்து
விவாதிப்பதற்க்காக
அல்ல !

*

*
விரிசல்கள்
தொடுவான எல்லையில்
போய் முடிகிறது,
பறவைக்கு
மிகப்பிடித்தமான இடத்தில
சிறகுகள்
உடைய முன்னர் நிறுத்த
எவ்வளவு தூரம்
பறக்க முடியுமோ
அவ்வளவே அவ்வளவுதான்
வானத்தின் எல்லை !
*


*
இது
வெய்யிலைத்
தோற்கடித்து
பெரும்பான்மை
வாக்குக்களில் வென்ற
உறைபனியின்
ஆட்சிக் காலம் !

*

*
மென் பாதைகளின்
பரிந்துரைப்புக்களில்
வாழ்ந்து கடப்பதென்பது
மரணத்தில்
பயணம் செய்யும்
மனிதர்களின்
சுயநிர்ணய உரிமை !

*

                 அன்புகலந்த தமிழர் திருநாள் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!