Wednesday, 20 April 2016

வேலவா வடி வேலவா..

யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் இருந்த, பெண்ணாம் பெரிய பித்தளை உண்டியல் பளபளக்கும் ஆடம்பரக் கந்தனின் நல்லூர் கந்தசாமி கோவில் எப்படி ஆடம்பர மக்களின் பிரசித்தமா இருந்ததோ, அதுபோல கொஞ்சம் அடிபட்ட மக்களின் பிரசித்தமாக இருந்த கோவில், அல்லப்பட்ட அடியார்களின் அடையாளமாக பிச்சைக்காரனின் அலுமினியத் தட்டுப் போல இருந்த முருகன்
வடமராச்சியில் இருந்தார்.
                                            வருடம் முழுவதும் அன்னதானம் கொடுக்கும் மடங்கள் சூழ்ந்து இருந்ததால் அன்னதானக் கந்தன் என்ற அடைமொழியில் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதி முருகன் என்ற செல்வச்சந்நிதி முருகன் கோவிலும் அடக்கமான பெயரோடு, ஒரு சின்னக் கிராமத்துக் கோவில் போல, ஆன்மீகத்துக்கு நெருக்கமாக, அலட்டிக் கொள்ளாமல் அமைதியா, இருக்கும் தொண்டைமான் ஆற்றங்கரையில் இருந்தது .
                                            சந்நிதி முருகன் கோவிலின் தேர் திருவிழாவுக்கு என்னோட அயல், " குளத்தடிக் குளப்படிக் குரூப் " நண்பர்களுடன் சைக்கிளில் சாப்பாடு கட்டிக் கொண்டு, புத்தூர், ஆவரங்கால் வெங்காயத் தோட்ட வெளிகள் ஊடாகப் போகும் யாழ்ப்பான இராஜதானியை ஆண்ட சங்கிலிய மன்னனின் இராஜதானிக் குதிரை சாணம் போட்ட இராஜ வீதி முழுவதும் மூச்சு வாங்க சைக்கிளில் மிதிச்சு, நிலாவரைக் கிணத்தடியில் கொஞ்சம் இளைப்பாறி, அந்த அடிமுடி இல்லாத கிணத்தை எட்டிப் பார்த்திட்டு மீண்டும் அச்சுவேலியில் திரும்பி .........
                                                           அச்சுவேலியில் இருந்து பல பாதைகள் சன்னிதிக்குப் போனாலும்,வல்லை வெளியின் அழகை ரசிக்கவும் தென்னை மட்டை வைச்சு வரிஞ்ச அழகான கட்டை வேலிகளுக்கு மேலால தெரிந்த கிணத்துக் கட்டுகளில் துலாவில அள்ளிக் குளிக்கும் வடமாராட்சி இளம் பெண்களின் அழகை ரசிக்கவும் கொஞ்சம் குளிச்சியா சைக்கில் மிதிக்கவும் நாங்கள் அந்த வழியை தேர்ந்தெடுத்தோம்
                                                        ஊருக்குள்ளால போகும் பாதையில் பக்தியோடு பரவசமாய்ப் பயணிக்க திட்டமிட்டு வல்லை வெளிப் பாலம் பாதையில், சேட்டைக் கழட்டி எறிஞ்சு போட்டு " சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே...." பாட்டைப் பாடிக்கொண்டே மிதித்து.......
                                                     புறாப் பொறுக்கி, குஞ்சர் கடை, எல்லாம் தார்ரோடில அமத்தி மிதிச்சு தாண்டி , வடமாரட்சி ரெண்டாகப் பிரியும் வதிரியில் வடக்கால போற கல்லுப் போட்டு கிரவல் மண் மேவிய சந்நிதிப் பாதையில் பனை மரங்களுடன் சமாந்தரமாகப் பயணித்து போன பாதையின் முடிவில் வல்லை வெளிக் காற்று பருத்தித்துறைக் வங்கக்கடலில் கலக்கும் ஒத்திகைகள் நடக்கும்
                                               தொண்டைமான் ஆற்றங்கரைத் தரவை வெளிகளின் முடிவில் சன்னதி முருகன் கோவில் இருக்கும் இடமே தெரியாமல் ஒரு சின்னக் கோவில் பக்தர்களால் மறைக்கப்பட்டு,வெளிச்சமான தொண்டைமான் ஆற்ருக்கு அருகில் கொஞ்சம் மங்கலாக இருந்தது.
                                             நாங்க போய் சேர்ந்த நேரம் ,வெயில் மண்டையப் பிளக்க முதல் வேலையா, கோவிலுக்கு போகும் பாதையின் தொடக்கத்தில், நிறையத் தண்ணீர்ப் பந்தல் போட்டு தாகசாந்தி செய்யும் சின்ன ஓலைப் பந்தலில், லவுட் இஸ்பீக்கரில், " நம்புங்கள் முருகன் நல்லவன் ,தன்னை நாடி வரும் அடியார்க்கு நல்லவன்...." என்ற பக்கதி பாடல் போட்டு பச்சை மிளகாய்,வெங்காயம் மிதக்கும் மோர்த் தண்ணி கொடுத்து கொண்டு இருக்க, அதை வேண்டி மண்டி முடிய....
                                                   சைக்கில் எல்லாத்தையும் ஒன்றாக வைத்து பூட்டிப் போட்டு, நாங்க போனதே தொண்டைமான் ஆற்றில குளிக்க எண்டது போல ஒன்றாகவே எல்லாரும், உடுப்பெல்லாம் கழட்டி, சுழட்டி எறிஞ்சு போட்டு, பழனி ஆண்டவர் போல ஒரே ஒரு உள்உடுப்போட," கந்தனுக்கு வேல் வேல்,முருகனுக்கு வேல் வேல்..." எண்டு சொல்லி மாதக் கணக்கா குளிக்காத மாதிரி, கருணாகரத் தொண்டைமான் தோண்டின தொண்டைமான் ஆற்ருக்குள்ள குதித்து, வருசக் கணக்கா ஆற்று தண்ணியக் காணாத மாதிரி நீந்தி விளையாடியதில் செல்வச்சந்நிதி முருகனை மறந்திட்டம்.

                                                          சந்நிதி முருகன் கோவிலுக்கு எதிரில், தொண்டைமான் ஆற்றங்கரையின் மறுகரையில் வெளிக்கள நிலையம் இருந்தது,அதில இருந்துதான் நாங்க படிக்கிற காலத்தில், வழமையான ஆண்டு இறுதிப் பரீட்சையின் சயன்ஸ் பாட கேள்வித்தாளை விட, எச்ற்றாவ ஒரு பயங்கர விஞ்ஞான கேள்வித்தாள் வரும், அது ஆண்டு இறுதிப் பரீட்சை அரசாங்க் கேள்வித்தாளை விட கடினமா இருக்கும், முதல் கேள்வியிலேயே வயித்தைக் கலக்கும். ஏதோ விஞ்ஞானிகள் அந்த கேள்வித்தாள் தயாரித்த மாதிரி இருக்கும் படு பயங்கரமான ,கொஞ்சம் பாட திட்டத்துக்கு வெளியே கேட்கப்படும், விடை தெரியாத கேள்விகள் உள்ள அதன் கேள்வித்தாள்.
                                                        நாங்க போன நேரம் வயித்தைக் கலக்கும் கேள்வித்தாள் தயாரித்த அந்த வெளிக்கள நிலையம் அருகில் இராணுவ முகாம் இருந்ததால், சண்டையின் இடையில் அம்புட்டு அந்த நிலைய கட்டிடங்கள் கைவிடப்பட்டு இடிந்து காணப்பட்டது. என்னைப் போன்ற பல அறிவு ஜீவன்களின் மண்டையில் மணி அடித்த அந்த வெளிக்கள நிலையம் இருந்த கேவலத்தைப் பார்க்க ,ஒரு பழி வேண்டின திருப்தியில், மனதுக்கு ரெம்பவே சந்தோசமா இருந்தது.
                                                                      யாழ்ப்பாணத்திலையே மிகப் பெரிய தேர் இருந்த செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் தேரை வெளிக்கள நிலைய இராணுவ முகாமில் இருந்து வந்த ராணுவம் எரித்து மிஞ்சிய நாலு தேர்ச் சில்லு மட்டும், அந்த மிக உயரமான தேர்முட்டியின் உள்ளே இருந்தது,
                                                           அந்த தேர் இழுக்கும் வடக்கயிறு கடலில் இருந்து அதிசயமா மிதந்து வந்தது எண்டு சொன்னார்கள். அது மிதந்து வருவது கப்பிறாளை என்ற அந்தக் கோவில் ஐயரின் கனவில் வந்தது என்றும் சொன்னார்கள்.அது உண்மையா,அல்லது பொய்யா என்று தெரியவில்லை .
                                                          இலங்கை ராணுவம் பெட்ரோல் ஊற்றி எரித்த போது தப்பிய அந்த தாழம் வடக்கயிறு பார்த்த போதும்,மிக மிக உயரமான அந்த தேர் முட்டியைப் பார்த்த போதும் அந்த தேரின் பிரமாண்டம் கற்பனை பண்ணிப் பார்க்க இன்னும் பிரமிப்பாய் இருந்தது,
                                               மற்றப்படி சந்நிதி முருகன் கோவில் சந்நிதானத்தில் ஒரு பெரிய கறுத்த மரப் பெட்டி இருக்க, அதைதான் வாய் வெள்ளைத் துணியால கட்டிய கப்புறாளை என்ற ஐயர் போன்றவர் ஆராதனை செய்ய அதை ஒரு சின்ன தேரில் வைத்து இழுத்தார்கள். அந்தக் கறுப்பு மரப் பெட்டிக்குள் உள்ள வேல் தான் கதிர்காமம் கோவில் கொடியேறும் போது அங்கே பறந்து செல்வது என்றும் பெரியவர்கள் சொல்லுவார்கள்.
                                                        கோவிலைச் சுற்றி நிறைய வசதியான நடுத்தர வயதுப் பெண்கள், வாட்ட சாட்டாமான உடம்போடு , கையில, காதில ,கழுத்தில ஒரு தங்க நகைக்கடையையே அள்ளிப்போட்டு அசைந்தாட, காஞ்சிபுரம் சேலைகளில் பட்டு மினுமினுப்புக் காட்ட, அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் இந்திர விழாவிற்கு வந்த சந்திரிகள் போல, மாதவிக் கண்ணால கதை சொல்ல, அலட்சியமான அவர்களின் அழகு சிலப்பதிகாரத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுத, ஆர்வக்கோளாறு அதிகமாகி, ஒரு வயதான ஐயாவிடம் விசாரித்த போது
                                   " அவயல் எல்லாரும் வல்வெட்டித்துறை ஆட்கள் கண்டியளோ, நீர் ஏன் காணும் இதெல்லாம் குடையுரீர் " 

                                         எண்டு சொன்னார். அன்னதானக் கந்தன் என்ற அடைமொழியில் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதியில் வாட்ட சாட்டாமான வல்வெட்டித்துறை ஊர் பெயரை கேட்டவுடனே, தீவிர முருக பக்தன் போல கொஞ்சம் பயத்தில ஒதிங்கியே இந்திர விழாவிற்கு வந்த சந்திர மாதவிகளை அவதானித்த போது அவர்களும் எங்களைப்போல தான் இயல்பாக அந்த கோவில் திருவிழாவை என்ஜோய் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்,
                                                  கோவிலைச் சுற்றி நிறையக் காவடிகள் " வேவா வடி வேலவா, ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா.. " என்ற பெங்களூர் ரமணியம்மா பாடலை நாதஸ்வரத்தில வாசிக்க, முள் குத்திய முதுகில் இருந்து ரத்தம் வடிய,நேர்த்தி வைத்த அடியார்கள் ஆட்டம் போட ,நிறையப் பெண்கள் வேப்பிலை வைத்த குடத்தை தலையில வைத்து குன்றத்தின் குமரனுக்கு பக்தி மயமாக,ஒரு கிராமக் கோவிலின் அடையாங்களுடன் சந்நிதி முருகன் கோவில் இருந்தது.
                                                     நாங்க போன நேரம் தொண்ணுறு ஆரம்ப வருடம் சிங்கம்/புலி சண்டையில் ,,சந்நிதி மடம் ஒன்டுமே இயங்கவில்லை...கட்டிடம் மட்டும் இருந்தது. சந்நிதி முருகன் கோவிலுக்கு பின்னால தென்னத் தோப்புகளுக்கு நடுவில் ஒரு காலத்தில் இலங்கை முழுவதுமே புகழ் பெற்ற அன்னதானம் கொடுக்கும் மடங்கள் இருந்தது,
                                                   அதுவும் சண்டையில அழிந்து,இடிந்து, கைவிடப் பட்டிருக்க அந்த மடத்துக்கு வருடம் முழுவதும் நடக்கும் அன்னதானதில் ஒவ்வொரு நாள் யார் யார் உபயம் செய்தவர்களின் பெயர்கள் ஒரு பலகையில் தொங்க ,புண்ணியம் செய்தவர்களின் விபரம் உள்ள அந்தப் பலகை மட்டும் இவளவு யுத்த அழிவிலையும் அழியாமல் இருக்க , அதில இன்னுமொரு ஆச்சரியமா ஒரு நாள் இலங்கை பொலிஸ் திணைக்களம் கொடுத்து அன்னமிட்டுப் புண்ணியம் சேர்த்த விபரமும் இருந்தது.
                                                    அன்னதானக் கந்தன் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதி முருகன் மடங்கள் இருந்த தென்னத் தோப்பு அமைதியா இருக்க,அதில இருந்த கொஞ்சநேரமே வயிறாற சாப்பிட்ட ஒரு உணர்வு வந்தது. நிறைய மனிதர்கள் வந்து அந்த மடங்களை சுற்றிப் பார்த்தார்கள், அந்தக் கோவில் சுற்றாடலில் தொண்டைமான் ஆற்றங்கரையின் கரையில், தென்னத் தோப்புகளுக்கு நடுவில் இருந்த மடம் இருக்கும் பகுதி உண்மையில், " கந்தக் கடவுள் எங்கள் சொந்தக் கடவுள் " போல இந்த உலகத்தின் ஒரு அழகான பிரதேசம் போல இருந்தது அந்தநேரம்....
...                                         தொண்டைமான் ஆற்றைக் கிண்டிய செங்கையாரிய கருணாகரத் தொண்டைமான் என்ற மன்னனின் " லொக்கேசன் செலக்சன் " உண்மையிலேயே பிரமிக்க வைத்தது.. .
..