Friday 4 December 2015

அலிஅப்பூசியும் ஹபீபாவும் !

நட்பு என்பது எப்போதுமே நல்ல ஆரோக்கியமான உரையாடலில் தான் ஆரம்பிக்க வேண்டுமென்று அவசியம் ஒன்றும் இல்லை . முரண்பாடுகள்  ,ஏன் சிலநேரம் மொழி, கலாச்சாரம் தெரியாத நிலையில் பியர்ப்  போத்திலை உடைசுக் குத்தப்போன வாக்குவாதத்திலும் ஆரம்பிக்கலாம் . அதன் புரிந்துகொள்ள முடியாத  தொடக்கம் அவசரத்தில் ஆரம்பித்து அலாதியான நினைவுகளை இனி ஒருபோதுமே கிடைக்காத  காலத்தின் போக்கில் கருங்கற்களில் பதிந்தும் சென்றுவிடலாம் .

                                            கன்னித்தன்மையை  இழக்காத வடவேங்கடம் தென்குமரிக் கன்னித் தமிழ்தான் பேசுவதுக்கு அழகான மொழி என்று ஒரு மடையன் போலத்தான்   ஈரான் நாட்டு  பெர்சி மொழி பேசும் அலி அப்பூசியைச் சந்திக்கும் வரை நானும் நினைசுக்கொண்டிருந்தேன்.  பெர்சி மொழியின் அர்த்தங்கள் எனக்குத் தெரியாது . ஆனால் அலிஅப்பூசி அம்பத்தைந்து வயதுள்ள மனிதர். அவர் அவர்நாட்டு மனிதர்களுடன் பேர்சியில்  பேசினால் பல்லு முளைக்காத குழந்தைகள் அர்த்தமில்லாமல் கதைப்பது போல பால்குடி வாசனை கடவாயில் வழிந்து வரும்.

                                    அலிஅப்பூசியும்  பாக்கிறதுக்கு கன்னத்தில் கிள்ளவைக்கும் குழந்தைகள் போல கொழுக்கு மொழுக்கு எண்டு உருண்ட மனிதர். அப்பிள் போல வண்டி. குள்ளமாக இருப்பார். அவர் ஒரு இடத்தில இருந்தால் பங்ஸ் சூ வாஸ்து சாத்திரத்தில வைக்கும் சைனீஸ் ஞானி போல முகம் பிரகாசிக்கும் . தலையில மயிர் தடவிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாது. இருந்த தலைமயிர் எல்லாத்தையும் புடுங்கி மீசையில் வைச்ச மாதிரி அவர் மீசை  நெல்லுக் குப்பம் போல பொம்மிக் கொண்டிருக்கும். காதிலையும் நிறைய மயிர் கிடைத்த இடமெல்லாதையும் அடைத்து நிரப்பி நீட்டிக்கொண்டிருக்கும்

                                          கர்ம வீரர் காமராஜர் போல முன்னுக்குக் குத்திக்கொண்டிருந்த அந்த மீசையை எப்பவும் ரெண்டு பக்கமும் நீவி விடுவார் அலிஅப்பூசி . சிலநேரம் நாக்கால அதன் நுனிகளை நக்கிக் கொண்டிருப்பார். வச்சிரம் போட்டு அடிச்ச சுண்ணாம்புச் சுவர் போல  வெள்ளையான அந்த மனிதரின்   மீசை வறுத்த விசுக்கோத்துப் போல பிரவுன் கலர்ல இருக்கும். அதுக்குக் கீழே மேல் நோக்கி வளைந்த மூக்கு அலிஅப்பூசியின் முக்கிய முக அடையாளம் . ஈரான் நாட்டவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் .

                                         என்னோட அறை இருந்த பக்கம் உள்ள நீண்ட கொடிறோரின் தொங்கலில் இருந்த பொதுவான குசினியின் பக்கத்தில் அவர் அறை இருந்தது. அந்த அறையின் நிலம் முழுவதும் கார்பெட் விரிச்சு இருந்தார். மிஞ்சிய கார்பெட்டை சுவரிலும் தொங்க விட்டு இருந்தார்.அந்தக் கார்பெட்டில் சவூதியில் உள்ள மக்கா மதீனா  பள்ளிவாசல்கள் அழகான பலவர்ண நூல்களில் இழையோடி வரைந்து இருந்தது. யாரோடும் அதிகம் கதைக்க விரும்பாத  அலிஅப்பூசிதனியா இருந்தார்  என்று சொன்னா இனி நான் சொல்லப்போற கதையில் எழுத ஒண்டுமே இல்லை

                                 ஹபீபா அவளும் மத்திய ஆசிய நாட்டில் இருந்த பாலஸ்தினத்தில்  இருந்து வந்தவள். ஜாசிர் அரபாத் போல வெள்ளையும் கறுப்பும் கட்டம் போட்ட ஒரு துணியை எப்பவும் தலையைச்சுற்றிக் கட்டியிருப்பாள் . பூச்சப்பரச் சகடை போல அரக்கி நடக்கும்போது பெய்ருட் தக்காளி போல தக தக என்று முன்னுக்கும் பின்னுக்கும் சுண்டி இழுத்துக் கவனித்துப்  பார்க்க வைத்துக்கொண்டிருப்பாள். அதிகம் உயரம் இல்லாமல்  மொத்தமாக இருப்பாள். வெள்ளரிக்காய் போல ஆட்டா மா குழைச்சுப் பூசின நிறம். மட்டுவில் கத்தரிக்காய் போல முட்டைக்கண். அதுக்கு ஏகப்பட்ட மைதடவி  கண்ணாலயும் கையாலையும் உலகத்தின் மொழி எல்லாத்திலும்  கதை பேசுவாள்.

                                   ஹபீபா  நான் இருந்த கட்டித் தொகுதிக்கு முன்பக்கம் இருந்த பெண்கள், குழந்தைகளுடன் வசிக்கும் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் வசித்தாள். எல்லாரோடும் கலகலாப்பா பேச முடியாவிட்டாலும் சில்லறையாகக்   கிளு கிளுப்பு தரும்படியாகச் சிரிப்பாள். என்னோட அறையின் வலதுப்பக்க ஜன்னலை வேடிக்கை பார்க்கத்  திறந்தா  சில நேரம் அவளும் அவளோட இடதுபக்க ஜன்னலைத் திறந்து அதில முழங்கைகளை  வைச்சுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். ஹபீபா  தனியா இருந்தாள் என்று சொன்னா இனி நான் எழுதப்போற கதையில் எழுத ஒண்டுமே இல்லை.

                       கல் தோன்றி மண்தோன்ற முன் தோன்றிய மூத்த குடியின் வாசங்களே இல்லாத தமிழ் அடையாளமே  இல்லாத இந்தக்  விபரிப்பில் மண்டையைக் குழப்பி

                                      " டேய் மடையா  இந்தக் கதை எங்கயடா  நடக்குது எண்டு முதல் சொல்லுடா அலட்டல் மன்னா,  அலிஅப்பூசியும் ஹபீபாவும் யாரா இருந்தால் எங்களுக்கு என்ன வரப்போகுது   மோட்டுக் கழுதை "

                                 என்று நீங்க கேட்பீங்க ஏன்னென்றால் கேள்வி கேட்ப்பதுதானே உங்க வேலையே,,பதில் சொல்லுறதுதானே கதை சொல்லிகளின் தந்திரமான உத்தி . நீங்க கேட்டாலும் என்று இந்தக் கதையின் லோக்கேசனையும் சொல்லுறேன் . இந்தக்  கதையில் நான் இல்லை என்று சொன்னா இனி நான் சொல்லப்போற கதையிலயும்  எழுத ஒண்டுமே இல்லை.

                                      பிளேன் என்ற குக்கிராமம் மத்திய சுவீடனில் இருந்த பழமையான சோர்மலாண்ட் என்ற விவசாய நிலப்பரப்பில் இருந்தது. அங்கேதான் காட்டுவாசிகள் போல இருந்ததாலோ தெரியவில்லை என்னைப் போன்ற அரசியல் அகதிகளை ஒரு மரத்தால் கட்டிய தொன்மையான குடியிருப்பில் கொண்டுவந்து தள்ளிவிட்டார்கள் சுவுடிஷ் அகதிகளுக்கான அதிகாரமுள்ள அரசத் திணைக்களம். தள்ளிப் போட்டு முதல் விசாரணையில் கவடுக்க அலவாங்கு போட்டு நெம்பி எடுப்பம் என்பதுபோல அலட்சியமாக இருந்தார்கள்.

                                            பிளேன் அழகான அமைதியான சின்னக் கிராமம். அதன் இரண்டு பக்கமும் ரெண்டு சின்ன ஆறு ஓடியது. பச்சையான புல்வெளிகள், சுத்தமான பூங்காக்கள் , யாருமே கை வைக்காத காடுகள், அதன் நடுவில் ஒரு சுப்பர் மார்கெட், அதன் விழிம்பில் சில தொழிற்சாலைகள் , ஞாயிறு திருப்பலி பூசை வைக்கும் ஒரு சியோன் தேவாலயம் , அழகான மனிதர்கள் அவர்களின் முகங்களில் தனிமை. இப்படித்தான் சுவீடனில்  பருவகாலம் வருடத்தில்  நாலுமுறை மாறும் போதும் பிளேன் நகரம் ஒரு கன்வாஸ் ஓவியம் போலிருந்தது.

                                                    முக்கியமாக வீதிகளில், நடை பாதைகளில் வைகுந்த ஏகாதசிக்கு கழுவித் துடைத்த மாதிரி சுத்தம் . அளவுக்கு அதிகமான மயான அமைதி சுடலையை ஞாபகப்படுத்தும் பகல் நேரமே  .இது ரெண்டும் கச கச எண்டு காலுக்கையும் கையுக்கையும் குப்பைகளோடு உருண்டு பிரண்டு, காதைக் கிழிக்கும் சத்தங்களில் வாழ்க்கையைத் தேடிய எனக்குக்  கொஞ்சமும்  அந்த கிராமத்தோடு  ஓட்ட முடியாமல் தடுத்துக்கொண்டு இருந்தது .

                                         எங்கள் அகதி முகாம் அந்தக் கிராமத்தின் காடுகளுக்கு நடுவில் இருந்தது. அந்தக் காட்டைத் தாண்டி பிளேன் கிராமத்தின் சன சந்ததிக்கு வர ஒரே ஒரு மண் பாதைதான் இருந்தது. நாகரிகமான சுவுடிஷ் மக்கள் பல்லின நாடுகளில் இருந்து வந்த பல்லினக் கலாச்சார அகதிகளை அப்படிதான் தீண்டத்தகாதவர்கள் போல என்னைப்போல வந்தேறுகளை ஒதுக்கி ஒரு மூலையில் வைச்சு இருந்தார்கள். அது கொஞ்சம் கோபமாக இருந்தது.ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில் அர்த்தமிருக்கு என்று அந்த அகதிமுகாம் வந்த சில மாதங்களில் உணரமுடிந்தது.

                                               அந்த அகதி முகாம் தான் என்னோட முதல் சுவுடிஷ் அனுபவம். ஒரு வருடம் அதில ஒரே ஒரு இலங்கைத் தமிழனாக நாடியைத் தடவிக்கொண்டு இருந்தேன். ஜன்னலுக்கால் காலையில் சுவிடனைப் பார்ப்பது. கோடையில் மஞ்சள் வெய்யில் மிகவும் சுத்தமாக இருக்கும். மத்தியானம் அதே ஜன்னுக்கால சுவிடனைப் பார்ப்பது. மருந்துக்கும் ஒரு வெள்ளை இன மக்களைப் பார்க்க முடியாது .பின்னேரமும் அதே ஜன்னுக்கால சுவிடனைப் பார்ப்பது , பறவைகள் மரங்களில் இருந்து என்னைப் பார்க்கும்.

                                            ஐரோப்பாவில் அகதி அந்தஸ்து எடுக்க என்ன என்ன பொய் சொல்லல்லாம் என்று ஜோசித்துக்கொண்டிருப்பதில்தான் என்னோட ஒரு நாளின் முழு நேரமே போய்க்கொண்டு இருந்தது. முகாமின் வாசலில் எனக்கு என்று கொடுத்து இருந்த தபால் பெட்டியை காலையில் போய்த் திறக்கவே பயம். அவடதில வைச்சுதான் பொலிஸ்காரன் உரிமையோடு அமத்துவான்.  இரவிலையும் யாரும் எசகு பிசகாத் தட்டினா என் அறையின் ஜன்னல்களை திறந்து பாய்ந்து ஓடிப்போக உள்ள மாதிரிதான் யாரும் மாஸ்டர் கீ இல்லை என்னவிதமான மசிராண்டிக் கீ போட்டும்  திறக்க முடியாதவாறு அறையின் உள்க்கதவுக்கு இரும்புக் கம்பி செருகி வைச்சு இருந்தேன்

                                                         நாசமாப்போன இந்தக் குக்கிராமத்தில் வந்து சுவாரசியம் இல்லாமல் நகரும் நாட்களை எண்ணிக்கொண்டு குளிர் காற்றை உள்ளுக்கு இழுத்து அதைச் சூடாக்கிக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பதுக்கா இவளவு காசு செலவழித்து வந்தேன் என்று ஜோசிக்க விசர் வந்தது. ஆனால் அந்த ஒருவருட முடிவில் மார்கிட் எலிசபெத் நிலாண்டர்ஸ் என்ற சுவுடிஷ் பெண்ணை சந்திக்கும் வரை வாழ்க்கை கொல்லன் பட்டறையில் வாட்டி வாட்டி இரும்பு அடிச்ச மாதிரிதான் இருந்தது.நாளைக்கு நடக்கப் போவது இன்று விடியும் போதே தெரியுமென்றால் வாழ்க்கையே சுவாரசியம் இல்லாமல் போயிடும் தானே,,இல்லையா சொல்லுங்கோ பார்ப்பம் 

                                                   பிளேன் என்ற அந்தக் குக்கிராமத்தில் ஒரு இரவு நடன விடுதியில் நடனமாடி முடிய சந்தித்த உலகம் தெரியாத அப்பாவியான மார்கிட் எலிசபெத் நிலாண்டர்ஸ் என்ற சுவுடிஷ் பெண் என்னோட மனைவியாகியது, வாழ்வின் மிகச்சிறந்த சந்தோசங்களை என்னோடு பகிர்ந்து கொண்ட அந்தப் பெண்ணின் மண்டையைக் கழுவியது , பிறகு அவளை ரெண்டரை வருடம்  இலங்கைக்கு அழைத்துக்கொண்டுபோய் அவளோட பல்லாங்குழி விளையாடியது  போன்ற ரொமாண்டிக் கதையைவிட இன்னுமொரு அனுபவம் அந்த பிளேன் அகதிமுகாமில் நடந்தது


நாங்கள் வசித்துக்கொண்டு இருந்த  கட்டிடத்  தொகுதிக்கு ,ஒருநாள் புதிதாக வந்த அகதிகளோடு அலி அப்பூசி வந்த நாளில் இருந்து பிளேன் அரசியல் அகதிமுகாம் கலகலப்பா மாறியது. அந்த கட்டிடத் தொகுதியில் நான் உட்பட  கிட்டதட்ட பதினைத்து பல்வேறு நாடுகளில் இருந்த சண்டைகளில் தப்பி வந்த அகதிகள் வசித்தோம். நான் மட்டுமே ஒரேயொரு இலங்கைத் தமிழன் . மற்றவர்கள் அதிகம் பேர் நட்பான எதையும் தாங்கும் ஆபிரிக்க, சந்தேகமாய்ப் பார்க்கும் மத்திய ஆசிய நாட்டவர்கள். இஸ்லாமிய சமய நம்பிக்கைப்   பின்னணி உள்ளவர்கள் அங்கே அதிகம் பேர் இருந்தார்கள் .

                                                 அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை தங்கி இருக்க  , ஒவ்வொருவருக்கும் புறாக்கூடு  போல கொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு அறையில்,  தனியான ஆண்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்ட அந்த கட்டிடத் தொகுதியில் வசிப்பதுக்கு வந்த  ஈரான் நாட்டைச்சேர்ந்த  அலி அப்பூசி ஈரானில் இருந்து வரவில்லை பதிலாக அமரிக்காவில் இருந்து வந்தார் . இலற்றோனிக் டெக்னிக் படித்தவர். அதை வைச்சுதான் அந்த முகாமில் பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்தார் .அவர் அவிக்கிற உளுத்தம் பருப்பை நான் கண்டுபிடிச்சு அதில அவருக்கு உளுந்துவடை சுட்டுக் காட்டினேன் . இப்பிடி வடைமாலை போட்டால்  அவருக்குப் பொறாமை வருமா வராத நீங்களே சொல்லுங்க பார்ப்பம்.

                                             சுவிடன் உலகத்தின் அதி நவீனங்களில் முன்னேறிய நாடு. அந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்கையில் நவீனம், புதுமை இது இரண்டுக்கும் எப்பவுமே அளவுக்கு அதிகமான  முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதை அவர்கள் வீசி எறியும் குப்பைத்தொட்டியில் சந்தோஷமாக இறங்கித் தேடிய போதுதான் நான் அறிஞ்சேன். அலிஅப்பூசிக்கு அது முதலே தெரியும். அதில்தான் நான் தேடி எடுத்த ஒரு டெலிவிஷனை  ஹபீபாவுக்குக் இனாமாகக் கொடுக்கப் போய் முதலாவது முரண்பாடு எனக்கும் அவருக்கும் வந்தது .

                                         நாங்கள் இருந்த அகதி முகாமுக்கு கொஞ்சம் தள்ளி சுவுடிஷ் மக்கள் தங்களுக்கு தேவை இல்லாத பொருட்களை எறியும் ஒரு பெரிய குப்பைத்தொட்டி இன்ன இன்னதை இதுக்குள்ளதான் எறியவேண்டும் என்று நிறைய இரும்பு கொண்டைனர்கள் வைச்சு அந்த இடமே என்னவோ அதியுயர் பாதுகாப்பு வலயம் போல முள்ளுக்கம்பி வேலி எல்லாம் அடைச்சு, சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திறந்துவிடப்படுவது போல இருந்தது.

                                  என்னோட முகாமில் இருந்து அந்த இடத்துக்கு போறதுக்கே ஒரு பெரிய ஆற்றுப் பாலத்தையும்,இன்னுமொரு பயங்கரமான ரெயில்வே பாலத்தையும் கடக்க வேண்டும் .பாலத்தைக் கடக்கும்போது கீழே ஓடும் ஆற்றைக் குனிந்து பார்க்க தலை சுற்றும், அவ்வளவு ஆழமான பள்ளத்தாக்கு அதுக்குமேல இரும்புப்புப் பாலம் கட்டி இருக்கிறார்கள். அந்த ஆபத்தான வீதியில் நடந்தோ,அல்லது சைக்கிளிலோ கடக்கும் போது காரில் வேகமாகக் கடக்கும் சுவிடீஷ் மக்கள் எங்களை பார்த்து  விசில் அடிப்பார்கள் . மாமா கண்டால் நிச்சயம் காரை நிட்பாட்டி விசாரிப்பான். அதிகமாய்

                                 " எங்கே இதால போறாய் இந்தப் பாதையில் வாகனம் தவிர யாரும் நடமாட முடியாது, அதுக்கு போலீஸ் அனுமதியும் இல்லை, நீ எங்கப்பா  புதுப் பெண்டாட்டியாக் கூட்டிக்கொண்டு  ஹனிமூன்   போறவன் போல கையை விசுக்கிக்கொண்டு  உலாத்துறாய், பிசகிச்சு என்றால் நேராவே பரலோகம் போகவேண்டி வரும் பா..உன்னோட நன்மைக்குத் தான் சொல்லுறேன் எங்கே இதால போறாய்.. எங்கே இதால போறாய்.."

                                       என்று கேட்பான், நான் தங்கச் சுரங்கம் சோதிக்கப் போவது பற்றி  சொல்வதில்லை. ஆபத்துக்கள் பற்றிக்  கடுமையாக   எச்சரிப்பான்


அலிஅப்பூசியின் அறை முழுவதும் நிறைய இலற்றோனிக் சாமன்கள் குவிந்துபோய்க் கிடக்கும். சின்னச் சின்ன பிழைகள் இருந்தால் அதைத் திருத்தி அதை ஒரு விலைக்கு அவர் விற்பார். அகதி முகாமில் எங்களுக்கு அம்மன் கோவில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரனின் அலுமினியத் தட்டில் பிச்சை போடுற மாதிரி கொஞ்சம் காசுதான் ஒவ்வொரு கிழமையும் தருவார்கள்.அதை வைச்சு பலர் பல பொருட்கள் வேண்டுவார்கள் . அந்த அகதி முகாம் வந்த ஆரம்பத்தில் ஒரு நாள் அலி அப்பூசியிடம் கேட்டேன் இதெல்லாம் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்குது என்று...

                            " இன்ஷா அல்லா , இதெல்லாம் உழுத்துப் போன சாமாங்கள்  இங்கனேக்கதான் எங்கயும் இருந்து கிடைக்கும் , உனக்கு என்னவும் வேண்டுமா ,,தேடி எடு இதுக்குள்ள இருந்து "

                           " ஹ்ம்ம்,,அலி இந்த  முகாமுக்கு மேற்கால இருக்கிற ஜட்த்ருணா ஆற்றுக்கு அந்தப் பக்கம் குப்பை போடுற கொண்டைனர் இருக்கு என்று சொல்லுறாங்க உண்மையா "

                                " இன்ஷா அல்லா , ஒ, அப்பிடியா,,எனக்கு யாரும் சொல்லவில்லையே,உனக்கு யார் சொன்னது ,,சொல்லு "

                             "  டானியல் சொன்னான் "

                    "  டானியல்,அவன்  யார்,, டானியல்  இங்கே  எங்கே இருக்கிறான் சொல்லு    "

                             " கழுத்து முழுக்க நாய்ச் சங்கிலிபோல கொழுவிக்கொண்டு , நீளக் காட்சட்டை கழண்டு விழ அதை ஸ்டைல்போல அப்பிடியே விட்டு நிலமெல்லாம் கூட்டிக் கொண்டு திரிவானே  அந்த எதியோப்பியாக்காரன் ,,

                              "  அந்த எதியோப்பியாக்காரன்   இங்கே  எங்கே இருக்கிறான் சொல்லு    "

                     " என்னோட ரூமுக்கு பக்கத்துக்கு ரூமில இருக்கிறானே,,அவன்தான்  சொன்னான் "

                       " இன்ஷா அல்லா,  பொப் மார்லியின் ரெக்கே பாட்டு அதிர வைச்சு போட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பானே அந்த காப்பிலி அவனா "

                        " ஓம், அலி,  அவன்தான் சொன்னான், அவன் இங்க காம்பில ரெண்டுவருஷம் இருக்கிறான் என்றும் சொன்னானே "

                         " இன்ஷா அல்லா,,அந்த ஆபிரிக்கக் காப்பிலி அவனே ஒரு குப்பைவாளி ,,அவன் சுவீடனுக்கு வந்ததுக்கு ஒருக்காத் தன்னும் குளிச்சு இருப்பனா ,அந்தக் குப்பைவாளி உனக்கு குப்பைவாளி எங்க இருக்கு எண்டு சொல்லி இருக்கு "

                          " ம் , அவன் தான் சொன்னான், மற்றப்படி அவன் எனக்கு ஒன்றும் பிரென்ட் இல்லை அலி அப்பூசி,,சும்மா பழக்கம் அவளவுதான்   "

                              " இன்ஷா அல்லா,,,அவனே ஒரு கள்ளன், பொதுச் சமையலறை குசினியில் ஒரு சாமானும் பாதுகாப்பா வைச்சு எடுக்க முடியவில்லை,அந்தக் காப்பிலி ஸ்காப்பை உடைச்சு திருடுறான் ,அது தெரியுமா உனக்கு   "

                                " அப்படிதான் நானும் கேள்விப்பட்டேன் "

                             " இன்ஷா அல்லா,,அவன் ஒரு கள்ளன்,,சிலநேரம் கள்ளருக்குத்தான் எங்க களவெடுக்கலாம் என்றும் தெரியும் போல ,,ஆனால் நீ சொல்லுற மாதிரி ஒண்டும் என்  காதுக்கு கேள்விப்படவில்லை "

                              "  ஹ்ம்ம்,,கதைகள் பரவலாகக் கிடந்தது சுற்றுதே ,,நீங்க கேள்விப்படவில்லை என்று சொன்னா நான் ஒண்டும் சொல்லமுடியாது "

                                " இன்ஷா அல்லா, குப்பைத்தொட்டியைக் கிளறுவது பிச்சைகாரநாடுகளில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டது ,உன்னோட ஷிரீலங்காவும் பிச்சைக்கார நாடு போல இருக்கே,,உனக்கு குப்பையைக் கிளற ஆசை வருகுது பார் "

                                 " ஹ்ம்ம்,,எங்கள் நாட்டில் குப்பைகளுக்கு நடுவேதான் வாழ்ந்து,,வளர்ந்தேன் அலி . அந்த வாசமே எனக்கு மிகவும் பிடிக்கும் அது வேற கதை, இப்ப அதுவா முக்கியம் ,,நான் கேட்டதுக்கு இப்ப பதில் சொல்லுங்க "

                           " இன்ஷா அல்லா, யாரோ ஒருவன் தேவையில்லை எண்டு எறியிரதை போய் தேடி எடுப்பது பெரிய கவுரவம் என்று நினைக்கிறாயா "

                               "  யாரோ ஒருவருக்கு ஆடம்பரமாகத் தேவை இல்லாதது யாரோ ஒருவருக்கு அடிப்படைத் தேவையாக இருக்கலாம்,அலி "
                               
                                  " இன்ஷா அல்லா, அது சரியெண்டு நான் சொல்லமாட்டேன் , அதை என்னோட அறிவில் சொல்லுவது எண்டா எப்படி சொல்லுவேன் சொல்லு பார்ப்பம் "

                                   "  நீங்களே ,,சொல்லுங்க "

                                "  ஹ்ம்ம்,, நமக்கு உரிமை இல்லாத பெண்டாட்டியின் சீலையைக் கிளப்பிப் பார்ப்பது போல "

                               "  ஹஹஹஹா ,,எங்கிருந்துதான் இப்படி எல்லாம் வார்த்தைகள் பிடிக்கிறிங்களோ தெரியலை அலி "

                               " இன்ஷா அல்லா, உனக்கு இதுக்குள்ள ஒரு பழைய கிட்டார் இசைக்கருவி ஒண்டு கிடக்குது வேணுமா, அதுக்கு கம்பி ஒண்டும் இல்லை,வேண்டிப் போடு , சின்ன வெடிப்பு இருக்கு, ஆனால் சத்தம் வரும் ஒரு இருநுறு குரோனரை தள்ளிவிடன் "

                             " என்னட்ட அவளவு காசு இல்லை,அலி, ஹ்ம்ம்,,,உண்மையா அந்தக் காட்டில ரீசைக்கிளிங்  கொண்டைனர் இருக்கா அலி .."

                         " இன்ஷா அல்லா, இப்ப நீ சொன்னாய் பார்  ரீசைக்கிளிங்  கொண்டைனர் அதுதான் நல்ல வார்த்தைப் பிரயோகம் , சிலநேரம் இருக்கலாம் ,ஆனால்  அந்தக் காட்டில் கரடி இருக்கு என்று சொல்லுறார்கள் "

                               " யார், சொன்னது உங்ககளுக்கு அப்படி "

                           " இன்ஷா அல்லா,  இங்கே முகாமில் உள்ள ஒரு அதிகாரி சொன்னார், பின் கரியலில் பெரிய கம்பி வலைப்பெட்டி வைச்சு கட்டின சைக்கிளில் அந்தப் பக்கம் உள்ள ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கப் போனேன் ,என்னை கூப்பிட்டு சொன்னார் "

                  " ஒ, அப்ப அந்தக் காட்டுப்பகுதிக்குப் போறது பயங்கரம் போல "

                           " இங்கே எல்லா இடமுமே பயங்கரம் தான், நீ என்னத்துக்கு இப்ப விடுத்தது விடுத்துக் கதை கேட்கிறாய்,"

                            "   சும்மா நாங்க வசிக்கும்  அகதி  முகாமின் சுற்றுவற்றாடத்தில்  என்ன எல்லாம் இருக்கு என்று அறிய முயட்சிக்கிறேன் அலி அப்பூசி "

                              "  அப்படியா  ,நீ என்ன பெரிய புவியியல் படிச்சனியோ,,இங்கே சுற்றுவற்றாடத்தில் காடும்,,நதியும், பள்ளத்தாக்கும் ,,கரடியும் தான் இருக்கு,,வேற என்ன இருக்கு "

                              " அட அவ்வளவுதானா " 

                            "   அப்பிடி என்றால்  என்ன அர்த்தம் "

                      "அவளவுதான் என்ற அர்த்தம் ஆச்சரியமா இருந்தது, அவளவுதான் அலி அப்பூசி "

                   " ,நான் முந்தி ஈரானில ஷா ஆட்சி நடந்த நேரம் ரகசிய போலீசில் வேலை செய்தவன் ,என்னட்ட  செம்மறியாட்டு வாலைக் காட்டிப்போட்டு நடுதுண்டுக்கு விலை பேசுறது வேகாது,,அதை தெரிந்துகொள் "
                     
                                    " இல்லை சும்மா கேட்டேன் "

                                 " இன்ஷா அல்லா , என்ன சும்மா கேக்கிறது ,நீயும் என்னைப்போல தொடங்கப் போறியா "

                               " அதுக்கு இல்லை, அலி  நீங்கள்  உண்மையில் பெரிய விஞ்ஞானியா இருக்க வேண்டியவர் , இதெல்லாம் எல்லாருக்கும் செய்ய முடியாது "

                              " இன்ஷா அல்லா, இப்ப நீயும் இந்த வேலை தொடங்கப்போறியா, ஏன் உனக்கு வொட்கா விக்கிறதில பொல்லால அடிச்ச மாதிரி நல்ல வரும்படி வருகுதே "

                                 "  இல்லை அதைநான் விடப்போறேன் ,

                            " அதுதானே நல்ல வரும்படியே உனக்கு, பெட்டைகள் வேற நேரம்காலம் இல்லாமல் உன்னோட கதவுக்க நிக்குறாளுகளே , அதைப்பார்க்க எனக்கே வயித்தெரிச்சலா இருக்கே "

                             " இங்கே அநாவசியமான பிரச்சினைகள். அலி அப்பூசி .அதைவிட.."

                        "   என்னப்பா  பிரச்சினை,,யாரால இங்கே உனக்குப் பிரச்சினை  சொல்லு "

                       "நானே தான்  எனக்குப் பிரச்சினை,அதை நானே குடிச்சுப்போட்டு விடியிறதும் இருடுறதும் தெரியாமல் நரி தேங்காய்ப் பொச்சை அடைஞ்சுகொண்டு கூழ்ப்பானைக்க விழுந்த மாதிரி உருண்டு கொண்டு திரியிறேன் "

                          " இன்ஷா அல்லா , உனக்கு இலற்றோனிக் திருத்த தெரியுமா ,ஒரு நல்ல ஜப்பானிஸ் கொடேக் கமரா இருக்கு எடுத்துக்கொண்டுபோ, காசில்லாட்டி உன்னட்ட வேண்டுற வோட்காவில் கழியன் ,"

                                      என்று சொன்னார் ,அலிஅப்பூசி இரவில என்னட்டைத் தான் குடிக்க வருவார். நான் அந்த நேரம் அதே காம்பில் ரசியன்காரங்களிடம் இருந்து வோட்கா வேண்டி ரகசியமா வித்தேன்.அது வெட்கா போல வெள்ளையாக இருக்கும் ஆனால் கோண்டாவில் கிழக்கு வெட்டிரும்பு போல வெட்டிக்கொண்டு போறதில ஓரியினல் உரும்பிராய்க் கசிப்பு போல இருக்கும் மூக்கை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு  உள்ளுக்க அண்ணாந்து விட்டால் சமாளிக்கலாம்.


கீரைக் கடைக்கே எதிர்க் கடை போடும் தமிழ் ரத்தம் ஓடும் ஒரு தமிழன் நான் என்பது  தெகரானில் பிறந்து வளர்ந்த அலிஅப்பூசிக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அலிஅப்பூசி பின் கரியலில் ஒரு கம்பிவலை போட்டுப்  பின்னிய பெட்டி கட்டின ஒரு சைக்கில் வைச்சு இருந்தார். அதில்தான் உழக்கிக்கொண்டு அந்த குப்பைதொட்டிக்குப் போவார் என்பதை கண்டு பிடிச்சேன். நானும் ஒரு சைக்கில் வைச்சு இருந்தேன். ஒருநாள் அவர் போற பாதையில் அவர் அறியமுடியாத தூரத்தில்  பின் தொடர்ந்து போய் அந்தக் குப்பைத்தொட்டியைக் கண்டு பிடிச்சேன்.

                                              அன்றைய நாள் சுவுடிஷ் மக்கள் குப்பை எறியும் நாள் இல்லை . அதெல்லாம் தெரிந்துதான் அலிஅப்பூஸி அதுக்குள்ளே போனார். நானும் அந்த நாட்களை மட்டும் வடிவா வாசித்தேன் . அந்த இடத்துக்குக் உள்ளே யாரும் போய் குப்பை கிளற முடியாது என்றும் கிளறினால் தண்டனை எண்டும்  சுவுடிஷ் மொழியிலயும், ஆங்கிலத்திலும் பெரிய போட் சுவுடிஷ் பொலிஸ் எழுதி வைச்சு இருந்தார்கள் .

                                        நிறைய ரீசைக்கிளிங் கொண்டைனர் இருந்தது. அவற்றில் சிலது நிறைந்து இருந்தது. நான் போய் அந்த இடத்துக்கு அருகில் இருந்த காட்டுக்குள்ள ஒழிச்சு இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன் . அலிஅப்பூஸி ஒவ்வொரு குப்பை கொண்டைனரா இறங்கி தடவிப்பார்த்து தேடிக்கொண்டு இருந்தார் . நான் பார்த்து நல்லா ரெக்கி எடுத்துப்போட்டு வந்திட்டேன் .

                                          அதுக்கு அடுத்த சுவுடிஷ் மக்கள் குப்பை எறிய முடியாத நாள் நானே காலையில் நேரத்தோட போய் அந்த இடத்தில பதுங்கி இருந்தேன் . அலிஅப்பூஸி வழமைபோல வந்தார்,வந்து சைக்கிளை பொலிஸ் போட்டு இருந்த தடைக்கு மேலால தூக்கி இறக்கினார், நான் கரடிபோலக் கத்தினேன்.  சுவுடிஷ் காட்டுக் கரடி எப்படிக் கத்தும் என்று எனக்குத் தெரியாது.ஆனாலும் சும்மா கத்தினேன். எனக்கே பயம் வந்திட்டுது நான் கத்துறதைக் கேட்டு உண்மையான சுவுடிஷ் கரடியே வந்தால் எப்படிக் கரணமடிப்பது எண்டு பயமா இருந்தது

                                    அலிஅப்பூஸி  சைக்கிளையும் தூக்கி எறிஞ்சுபோட்டு வியர்க்க விறுவிறுக்க நாலுகாலில் துள்ளிய நடையில திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு ஓடத்தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் அவர் உருவம் மறைந்த நேரத்தில ,அந்தக் காட்டுக்க இருந்து ஒரு பெரிய கரட்டி அதன் பிள்ளைக் கரடியை இழுதுக்கொண்டு சர சர எண்டு குப்பைத்தொட்டி இருந்த இடதுக்கு கிட்ட உள்ள காட்டு விளிம்புக்கு வர நான் ஓடிப்போய் ஒரு இரும்புக் கொண்டைனருக்க ஏறிப் பாஞ்சேன் ,அதுக்குள்ளதான் ஹபீபாவுக்கு நான் கொடுத்த டெலிவிசனும் இருந்தது.

                      மிச்சம் பிறகு சொல்லுறேன் ..

Chennan Chiru Vayathil .Guitar Live Cover





ஒரு பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவிக்கும் இடையில் நடக்கும் புரிந்துணர்வை எடைபோட்டுப் பார்க்கும் ஜதார்த்தம் அது உருவாகும் பல குழப்பங்ககளை ஒரு சினிமாவாக எடுத்தார்கள். கணவன் வேலைசெய்யும் இடத்தில வேலைசெய்யும் ஒரு பெண்ணுடன் தன் கணவனுக்கு தொடர்பு இருக்கு என்று தெரிய வந்த போது வழமையாக எல்லாக் குடும்பங்களிலும் வெடிக்கும் சண்டையும் சந்தேகமும் தான் " மீண்டும் கோகிலா "என்ற படம்.
                                               உலகம் தெரியாத பதிவிரதையான மனைவி , உலாசமான பொழுதுபோக்கு உள்ள வக்கீல் வேலை செய்யும் கணவன்.இவர்கள் இருவருக்கும் நடுவில் ஆடம்பரமான ஒரு பெண் இப்படியான களமுள்ள ஒரு கதையை முதலில் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன்தான் அரைவாசி வரை இயக்கினார். அவர் இயக்கத்தில் படம் சீரியஸ் ஆக வரவே, அந்தக் கதையின் படி அது ஒருவித காமடியாக வரவேண்டுமென்று அவரை தூக்கிப்போட்டு ரங்கராஜன் என்ற இயக்குனரைப் போட்டு புதிதாக இயக்கி இருக்கிறார்கள்.
                                                        அச்சொட்டாக ஸ்ரீதேவியே பாடுவது போல எஸ். பி. ஷைலையாவின் சின்னஞ்சிறு குரலில்,இடையில் வரும் ஹம்மிங்கில்,தயக்கத்தில் கோகிலாவுக்கு ஒரே ஒரு பாடலில் உயிர்கொடுத்த இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் பாடல் ஒலி வடிவில் கேட்பதை விட விசுவலாகப் படத்தில் முதல் முதலாக மாப்பிளையைக் கல்யானப் பெண் பார்க்கும் ஒரு பிராமண வீட்டில் எப்படி நிகழ்வுகள் இருக்கும் என்று ஒரு பாடலோடு படமாக்கியிருந்தார்கள்.
                                                               திருமணம் முடிக்கக் காத்திருக்கும் பெண்கள் கர்நாடக சங்கீதம் கொஞ்சமாவது படித்து அதைப் பாடவேண்டும் என்ற அந்தப் பழையகால சம்பிரதாயங்கள் இப்போது அருகிவிட்டது போல இருக்கு. கிளி போலப் பெண் இருந்தாலும் " பெண்ணுக்குப் பாடத் தெரியுமா " என்ற ஒரு டயலக் எப்பவுமே பெண்பார்க்கும் போது வந்து விழும். இப்ப உள்ள நிலைமையில் கல்யாணப் பெண்ணைப் பாடச்சொன்னால் ஐ போனில MP3 Download பாட்டைப் போட்டு அதுக்கு வாயசைப்பார்கள். வேற என்னதான் செய்யமுடியும் அவர்களால்.
                                                     இசை படித்த பெண்களின் எண்ணங்கள் எப்பொதுமே மென்மையாக இருக்கும். அது கணவனுடன் சேர்ந்து வாழும்போது குடும்பத்தில் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் நம்பி இருக்கிறார்கள். மனதைச் சாந்தப்படுத்தும் இசை என்பதே இதயம் வரை இறங்கி இசைந்து போவது தானே.
                                                 இந்தப் பாடலின் பல வரிகள் சுப்பிரமணிய பாரதியார் அவரின் கனவுக் காதலி செல்லம்மாவை நினைத்து எழுதியவை. கவியரசர் கண்ணதாசன் அந்த வரிகளையும் தன்னோட வரிகளையும் இணைத்து இந்தப் பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடல் எப்படி அதன் கதையோடு ஒட்டி உறவாடிப் போகுமென்று வரைவிலக்கணம் போல இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்த பாடலிது.