Wednesday, 4 April 2018

அசாதாரண முயற்சிகள்...

கவிதைகளில் சொல்லும் செய்தியிலும்,சொல்லப்படும் விதத்திலும் நவீனத்துவத்தைக் குறியீடாக உருவாக்கி இலக்கியவெளியில் தங்களை முன்நகர்த்திக்கொண்டு போகும் நண்பர்கள் முகநூலில் பலவித பரிசோதனை முயட்சிகளில் மொழியின் அசாத்தியமான எல்லைகளை தொட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
                                                        நவீன தமிழில் ஆக்கபூர்வமான இந்தத் தீவிர படைப்பு முயற்சிகள் சமகாலத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கு .
                                                         ஊர்கூடித் தேர் இழுத்தது போன்ற மனநிறைவில் புனைவு மனவெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இவர்கள் நிறையவே ஜோசிக்கும்படியா எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வாசித்து இருப்பீர்கள். தமிழ் இலக்கிய மொழியில் அதிகம் பாவனையில் இல்லாத அல்லது மறைந்திருக்கும் சொற்களை இவர்கள் அதிகம் பாவிப்பார்கள். அதுவும் நல்ல முயட்சியே .
                                                                   இன்னொரு வகையினர் இருக்கிறார்கள் வடமொழியின் பாதிப்பில் தமிழில்க் கலந்த சமஸ்கிருத மணிப்பிரவாள வார்த்தைகள் எப்போதும் மென்மையான அனிச்சம் பூப் போன்ற உணர்வை எழுப்புவதால் அந்தச் சொற்களை அதிகம் கலந்துவிடுவார்கள்.
                                                               இந்தக் கலவை பல நேரம் சாதாரண வாசக மனதுக்குள் குழப்பமாக இருக்கும் . ஆனால் அவர்கள் நினைப்பது இப்படியாக நாலு வார்த்தை தேவையில்லாத இடத்தில போட்டால்த் தான் " ontological argument, " என்று ஆங்கிலத்தில் சொக்கிறார்களே அது  கவிதைக்கு அபரிமிதமான ஒரு அந்தஸ்துக்கு கிடைக்க வைக்கும் என்று.
                                                                மொத்தத்தில் காரண காரியங்களுக்கு விளக்கம் தேடும் மூளையைக் கழட்டி ஒரு பக்கமாக வைத்துப்போட்டு ஜோசித்துப் பார்த்தால் இவர்களின் " நவீனத்துவப் புனைவு மரபு " சாதாரண வாசகர்களுக்கு விளங்குமா? , இல்ல நெம்பி வளைந்து முயட்சித்து விளங்கிக்கொள்கிறார்களா ? இல்லை முகத்துக்கு முன்னே முகஸ்துதி போடும் மனப்பான்மையில் தூக்கிப்பிடிக்கிறார்களா ? என்பது போன்ற கேள்விகள் ஒவ்வொருவரின் தனிப் பார்வையில் மிகவும் அந்தரங்கமானவை.

                                                                 அதே நேரத்தில் ஊர்கூடித் தேர் இழுத்து அந்தத் தேரைத் தெருவில விட்டுப்போட்டு ஓடிப்போன மாதிரி தெளிவற்ற படிம உருவகங்களையும், நினைவுப் பிம்பமங்களையும் , கட்பனைகளைக் கட்டுடைத்தல் என்றும் , மர்மக் குறியீடுகள் , ஐந்தாம் பரிமானம் என்று கவிதைமொழியின் மிக உயரத்தில் ஜீவன்முக்தி நிலை அடைந்திருக்கிறதாக நம்பும்படியாகக் கவிதைகளும் வந்திருக்கின்றன .

                                                               நேரடியாகச் சொல்ல வழியிருந்தும் தலையைச் சுற்றிவந்து மூக்கைத் தொடுகிறார்கள் , வாசிக்கிற என்னைப் போன்ற ஞானசூனியங்ககளுக்கு  " வார்த்தைச் சித்து விளையாட்டு " பிடிபடாது, அப்பிடி இல்லை என்று முயன்று வாசித்தால்   சுத்திற சுத்தில கொம்மாவும்  கொப்பரும்  கோச்சியும் வீட்டுக் கோடியெல்லாம்  சுத்தி , தலையும்  கிறுக்குப்பிடிச்சு சுற்றி உலகமும் ஒருக்கா சுற்றும்.  

வழக்கம்போல முகநூலில் எழுதிய என் சொற்கட்டமைப்பு  முயட்சிகளைத் தொகுத்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் 

முற்றிலும் 
புதிதானவொரு 
நெருக்கத்தை 
உரையாடலற்ற மவுனத்தில் 
கட்டியெழுப்பவேண்டும். 
புதிய பெயர்,
புதிய சிரிப்புகள் ,
புதிய கோபங்கள்,
புதிய சைகைகள்
புதிய பார்வைகள்
புதிய அர்த்தங்களும்தான் ,
ஏனெனில்
பழையவை அனைத்தும்
பேச்சு வார்த்தைகளில்
பிளவுற்று பிரிந்து
அர்த்தமிழந்து ஸ்தம்பித்துவிட்டன !


...........................................................................

கவிதை பற்றி 
பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த 
இன்றையநாள் 
முடிவத்துக்குள் 
மூச்சைப்பிடித்து சொல்கிறேன்
உங்களிடம்
கவிதைமனது இல்லையென்றால்
உங்களிடம்
எதுவுமேயில்லை. !


...................................................................

இக்காட்சியை
வேறெங்கோ பார்த்த நினைவு.
அப்போதைய
வாசனைகளும் கூட
இப்போதும் 
நுகரும்படியாகவிருக்கு ,
மின்னி மறைந்து
மிகவும் ஆச்சரியப்படுத்திய
எதையுமே
நம்பக்கூடாதென்கிறது
சபல மனது,
ஒரு
குற்றத்தை
ஏற்றுக்கொள்வதாகவே
நான் இதை
அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். !


.......................................................................

சலிப்புத்தரும்படியாக
எரிய வேண்டிய சுடர்
சப்பென்று 

அணைந்துகொண்டிருந்தது
அப்போதும்
அந்தக் கவிதையை 
தொடர்ந்து 

வாசித்துக்கொண்டிருந்தேன்
பின் வந்து கொண்டே
என் 

முடிவு பற்றிய 
அனுமானத்தோடும்
அது
இசைந்து விடலாமென்று
நம்பிய போதுதான்
அதிர்ந்துபோனேன்!


......................................................................

என்
ஆர்வங்களின்
துவக்கங்களையும்
அதன் முடிவுகளையும்
அவள் 
அடக்கத்துடன்
கேட்பதுமில்லை
தீர்த்துவைப்பதுமில்லை,
குறிப்பிடத்தக்கதாக
ஏதாவது நிகழவேண்டுமானால்
நான்
அடிவானம் போலவே
அமைதியாகவிருக்கவேண்டும்
அவளோ
வெளிச்சங்கள் மறுக்கப்பட்ட
மற்றொரு தருணத்தில்
ஒரு
எரிநட்சத்திரத்தைப்போல
உட்பிரவேசித்து
மறைந்துபோய் விடுவாள் !


................................................................

காலத்தின்
புரிதலில்க் கவிஞ்சன் ,
மரணத்தருவாயில்
அவனின்
அழியாப் 
படைப்பொன்று ,
அதட்குள்
குற்றவுணர்ச்சியின்றி
உயர் தராதரங்களை
நிர்ணயம் செய்து வைத்தது
எதுவாயிருக்கும் ?


..................................................................


உள்ளேயும்
வெளி உலகோடும் ,
ஓரேகாலத்தில் வாழழும் .
சிரஞ்சீவிகளைப்
பார்த்திருக்கிறீர்களா ? ,
ஒருவேளை
உங்களுக்கு
அறிமுகங்களிருக்கலாம்,
சிதைத்து
மறுபடியுமெடுத்துப்
புத்துப்பித்துக்கொள்வதை
உயிர்வாழ்தலென்று
நான் நினைக்கிறேன்
இதில்தானே
ரசனைக்கும்
எதிர்பார்ப்பிற்கும்
கருத்துமுரண்பாடு வருகிறது !


.....................................................................

கவிதைகளில்
மையங்கொண்டுவிடும்
தனிப்பட்ட வெறுப்பு
கிஞ்சித்துமில்லை.
அலட்சியங்களின் 
அலைக்கழிப்புக்களில்
ஒரு
மலர் வாடிக்கொண்டிருக்கும்
இயலாமை ,
இதயசுத்தியுடன்
எழுதப்பட்டதெனினும்
என்
கண்களின் முன்னே
அது 

இறந்துகொண்டிருப்ப்பதைப்
பார்க்க விரும்பவில்லை. !


...................................................................

படிமங்களை நீக்கி
வேகமெடுக்கும்
வர்ணனனைகள் எழுப்பும்
கலவரம்
சடுதியாகவொரு 
நெஞ்சுவலியை உண்டாக்குகிறது,
எனக்குத் தெரியும்.
இது
வெறும் பொழுதுபோக்கல்ல.
வரிகளுடன்
மொத்தக் கவிதைககுள்
அணுகி இறங்கும் போது,
இறுக்கிக்கொண்டு
பிடித்துப்போவது
மரணத்தையும் எதிர்கொண்டு
விரட்டியடிப்பது போலிருந்தது !


....................................................................

நிறைய
நாட்களாய்
அறிமுகமில்லாத
நிழலின் சாயலில்
தேடிக்கொண்டிருந்தேன் ,
மனதெல்லாம்
தெம்புகள் சேரும்போது
வலிந்து ஜோசிப்பேன் .
ஒருகட்டத்தில்
எல்லா முயட்சிகளும்
கைவிடப்பட்டுக்கொண்டது,
நேற்றிரவு
தூக்கத்தில்த்தான்
நெகிழ்ச்சியூட்டும் வகையில்
அந்த ஒரு வரி
எதேச்சையாகக் கிடைத்தது !


.........................................................................

உன்னிப்பாகக்
கவனித்தீர்களானால்
மேடையின்
பின்புலமாகவிருக்கும்
திரைச்சீலைகள் கிடையாது.
அசைவையும்
அசைவின்மையையும் வடிவமைக்கும்
சோடனைகள்
வியர்த்து விடுகின்றன,
மிகச் சுருக்கமான
கடைசிக் கேள்வியோடு
காட்சி நிறைவடைகிறது.
நடிகர்கள்
வெளியேறுகிறார்கள்.
முடிவடைந்துவிட்டதென்று
கடந்த காலத்தை
மூச்சிழுத்து
மரணமும்
புறப்படுகிறது !


........................................................................

ஜீவத்துடிப்போடு
மாசுபட்ட இடங்களிலேயேதான்
கண்ணீரில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது !
சூனியப்
பின் விளைவுகளின்
பரிமாணங்கள்
ஊறணிகளெல்லாம்
முழுமையாய் வெளிப்படுகிறது !
மறுதுவக்கத்தைப் பற்றிய
எதிர்கால
அசாதாரண முயற்சிகள்
இழுபறி நிலையில் !
தீமைகளையாவது
சிந்திக்க
இன்றைக்குமொரு
வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது
தண்ணீர் !


........................................................

எனக்குக்
குரல் மட்டும்
சிறிது காலம் பரிச்சயம்,
முகத்தை
மையமாக வைத்து 
உற்றுப் பார்க்கும்
தைரியம் இருந்ததில்லை,
உறைபனிக்காலம்
சாதாரணங்களின்
வழக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தது !
ஒரு
அந்நியோன்னியத்தை
வலிந்துகொண்டு
உருவாக்க நினைக்க
விழுந்துவிடாத வேதனையின்
துக்கங்களைப்
பாடலாக்குவதை நிறுத்திவிட்டது
அந்தப் பறவை !