Sunday 15 November 2015

நடிகன்

இளமைக்காலம் அளவுகள் இல்லாத  காலத்தின் இடை வெளி.  அதில் இலக்கிலாமல் அலைந்தால்  ஒரு கட்டத்தில் ஞானம் பிறக்க வைக்கும், அல்லது நினைவுகளின் சேமிப்புக் கிடங்கில் எதோ ஒரு ரகசியமான இடத்தில மிகவும் ரசிக்க வைக்கும் சம்பவங்களை எங்களை அறியாமலே பதுக்கி  அடுக்கி வைத்திருக்கும், 

                                                   ஒரு நாள் அதைத் திறந்து பார்க்க தூசு பிடித்த பூஞ்சன வாசத்துடன் ஒரு கதை நமக்கு முன்னே விரியலாம்,

                                                    

யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் கோட்டை நல்லூரில் முத்திரைசந்திக்கும் கவ்வியன்காட்டுகும் இடையில் உள்ளது! இந்த அரண்மனையில் "பூதத் தம்பி "என்ற படம் 23 ஆண்டுகளின் முன் எடுக்கபட்டது! அந்தப் படம் இலங்கைய முதல்முதல் காலனி ஆக்கியாண்ட  போத்துகீசரை  எதிர்த்துப் போராடிய ஒரு மன்னனின் வரலாறை உலகத்துக்கு தெரியப்படுத்தி சொன்னது . 

                                             நான் அதில் நடித்திருந்தேன், ஏனோ தெரியவில்லை அதில நான் நடித்த வரலாறு உலகத்துக்கு தெரியவரவே இல்லை!.

                           கல்வியங்காட்டில் உள்ள அந்தப் படம் எடுத்த  வசந்த மாளிகை சங்கிலியனோட உண்மையான "நல்லூர் ராஜதானி " அல்ல. உண்மையான முத்திரைச்சந்தையில் யமுனா ஏரிக்கு அருகில் இப்ப ஒரு சேர்ச் உள்ள இடத்தில இருந்த கோட்டையைப்  போத்துக்கீசர் அழித்து,அந்த கோட்டையின் கற்களையும்,பழைய நல்லூர் கோவில அழித்து அந்தக் கற்களையும் எடுத்தே யாழ்பாணம் கோட்டையை கட்டிய்யதாக ஒரு வரலாறு உள்ளது.


                                                   உண்மையில் "பூதத் தம்பி " படமெடுத்த அந்தப் பழங்கால  வீடு போல உள்ள அரண்மனை  மாளிகை அவரோட வைப்பாடிகள் வசித்தஇடம் எண்டு படம் எடுத்தபோது சொல்ல கேட்டுருக்கிறன்!

                                             

 "பூதத்தம்பி " என்ற அந்த வரலாறுப் படதை எங்கள் ஊரில் எங்க வீட்டின் அண்மையில் வசித்த கல்யாணப் புரோகர் தட்சணமூர்த்தி எடுத்தார். அவர் ஒரு தமிழ் அறிஞ்சர்.புலவர் என்றும் அவரைச் சொல்லுவார்கள். அவர்தான் அந்தப் படத்துக்கு திரைக்கதை,வசனம் எழுதிய நினைவு இருக்கு .

                                                      வீடியோக் கமராவில் அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்தார்கள்.ஒளிப்பதிவாளர் விஜயா ஸ்டுடியோ என்ற சிங்கள திரைப்படங்கள் எடுத்த நிறுவனத்தில் பெரிய எரிபிலெக்ஸ் கமராவில் கமராமான் ஆக வேலை செய்தவர் என்று சொன்னார்கள். 

                                          

சின்ன வயசில சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் போல வர ஆசைப்பட்டு அந்த படத்தில நடித்த கேவலத்தை சொல்லுறன்! 

                                                 நான் வாட்ட சாட்டமா காத்தவராயன் போல நெஞ்சை நிமித்திக்கொண்டு அந்த இளந்தாரி நாட்களில் இருந்ததால், எங்கள் அப்பாவின் நண்பர் தட்சணாமூர்த்தி அதில பூதத் தம்பி அரசனுக்கு " பொடிகார்ட்" அதுதான்,சேவகன் பாத்திரம் கொடுத்தார். 

                                                 ஒரு வரலாற்று அரச படம் . பல காட்சிகள் எங்கள் வீராளி அம்மன் கோவிலில் ,அந்தக் கோவிலில் இருந்த சங்கிலியனின் வாளுடன் எடுத்தார்கள். 

                              

பூதத் தம்பி ஒரு யாழ்ப்பாண மன்னன், போத்துக்கீசர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னன் என்று வரலாறு சொல்லுது. ஆனால் அந்தப் படத்தில் ஜனரஞ்சக திரைக்கதைக்காகவா  அல்லது வேற நோக்கங்களுக்காககவா  சில மாற்றம் செய்து எடுத்தார்கள் என்பது அப்போது புரியவில்லை . 

                                                    முக்கியமா அந்த மன்னன் ஒரு பாதிரியாருடன் சேர்ந்து சமரசம்,சமாதான உடன்படிக்கை எல்லாம்  செய்வது போல எல்லாம் வரும். இப்படிப் பரங்கிகளுடன்  டிப்பிலோமாடிக்கா  தாஜா மாஜா செய்வதை ராஜதந்திரம் என்று புரோக்கர் சொன்னார். அதுவும்  தமிழ் மன்னன் உண்மையாகவே அப்படியெல்லாம் ஒரு வீரமானமன்னன் செய்வானா என்று அப்பவே குழப்பமாக இருந்தது

                                      

அந்த நாட்களில் வீட்டுக்கோ,நாடுக்கோ பிரிஜோசனம் இல்லாமல் கட்டாக்காலி மாடுகள் தரவையில் மேயிற மாதிரி  ஊர் வம்பில அலைந்ததால், நடிகனாகியாவது உருப்படுவம் எண்டு ஜோசித்து, வீடில அம்மாவிடம்

                              " பூதத் தம்பி படதுல முக்கிய வேடத்தில சேவகனா நடிக்கிறன்" 


                                   எண்டு சொல்ல ,அவா கோவத்தில


                                           " கொப்பர் உனக்கு அரசன் எண்டு பெயர் வைக்க,நீ போய் அரசனுக்கு எடுபிடியா ,சேவகனா நடிக்கிறாய் எண்டு சொல்லுறாய் ,வெட்கமா இல்லையா ?" 


                             எண்டு பேசினா,நான்,


                                       "சூப்பர் ஸ்டார் ரஜனியே 16 வயசினிலே இல பரட்டை என்ற வில்லனாதானே அறிமுகமானார் அணை " 


                                            எண்டு சமாளித்தேன்.


அதில சம்பளம் இல்லாம சும்மா நடிச்சன்! சேவகன் என்பதால், மன்னனுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் திரிந்ததால் ஒரு வசனம் தன்னும் பேச சான்ஸ் கிடைக்கவில்லை.! 

                                                     எங்கள் வீராளி அம்மன் கோவிலில் மன்னன் பூதத்தம்பி கும்பிட வரும்போது " பகைவர்களைத் தாக்கி அழிக்கும்  வீரமாகாளியம்மா " என்ற பாடல் கம்பிராமாக மன்னன் நடந்து வந்து அம்மனைக் கும்பிட்டு சண்டைக்கு வெளிக்கிடுவது போல ஒளிப்பதிவு செய்தார்கள். அந்தப் பாடலைப் பின்னர் உள்ளூர் இசைக்குழுக்கள் மேடைகளிலும் பாடினார்கள்

                                            அந்த நேரம் யாழ் முனிசிப்பால்டி மேயராக இருந்த சிவஞானம்  அய்யா முக்கிய பாத்திரத்தில் அதில பாதிரியாராக நடித்துருந்தார்! அந்தப் படத்தை சில மாதங்களின் பின் வெளியிட்டு,யாழ் நகரதில அப்போது யுத்தகாலதில இருந்த எல்லா " மினிசினிமாவிலயும்" கட்டாயம் காட்டும்பாடி அப்போது யாழ்பாணத்தை ஆண்டவர்கள் உத்தரவு போட்டதால்  பல "மினி சினி மாவில்" அதை வேண்டா வெறுப்பாக திரையிட்டார்கள்.

                                       மக்கள் என்னோட நடிப்பை எப்படி ரசிக்கிரார்கள் எண்டு பார்க்க நானும் போய் "மினி சினிமாவில்" கடைசி வாங்கில இருந்து பார்த்தேன்.நான்


                                  " வீராதி வீர , வீர பாராகிரம பூதத் தம்பி மன்னன் வாறார் !" 


                                              எண்டு சொல்லிக்கொண்டு, மன்னனுக்கு அருகில்  கொலைவெறியோட வரும், முதல் "சீன் "இல ஒருத்தரும் என் நடிப்பைப் பார்த்து விசில் அடிக்கவில்லை! கவலையாக இருந்தது! 


                                                  ஒரு நடிகனை ஆராதிக்கத் தெரியாத மோட்டு ரசிகர்கள் இருக்கும் இந்த ஊரில இருந்து ஒரு வெற்றிபெற்ற  சூப்பர் ஸ்டார் நடிகனாக வர முடியுமா என்று அப்பவே குழப்பமான சந்தேகங்கள் இருந்தது .அதால் படத்தின் இடையில் எழும்பி வந்திட்டேன். 

                                          வெளிய வந்து படம் முடிய மினி சினிமா வாசலில் நின்று என் முகத்தைக் காட்டிக்கொண்டு நின்றேன்,அப்பவும் என்னை ஒருத்தரும் அடையாளம் காணவில்லை. அவன் அவன் என்னை டிக்கட் கிழிக்கிறவன் எண்டு நினைச்சு சும்மா பார்த்துக்கொண்டு போனாங்கள். 


                                           ஒரு நடிகனை  அவளவு கேவலப்படுத்திபோட்டு போனாலும் அதில ஒரு பாடம் படித்தேன்,இனி சைட் ரோல் எண்டுற உப நடிகனாக இனி வாற எந்தப் படத்திலும் நடிப்பதில்லை.நடித்தால் முக்கிய வேடம்,இல்லாட்டி சும்மா இருப்பது என்று 

                                      

பூதத் தம்பி படம்  அதுக்குப் பிறகு என்ன ஆனது எண்ட வரலாறு  எனக்குத் தெரியாது! 

                                                   இடை இடையே புரோக்கர் வீட்டுக்குப் போய் அவரோட கதைத்துக்கொண்டு  இருப்பது. சில நேரம் அவர் பேசி பொருத்தம் முடித்த கலியாணப் பேச்சுக்கள் சரிவரும் போது,பொம்பிளை பார்க்க,,மாப்பிளை பார்க்க அவர் போகும் வீடுகளுக்கு என்னையும் கூ ட்டிக்கொண்டு போவார். ஆனால் நான் ரகசியமா  வேற என்னவும் படம் எடுக்க திரைக்கதை எழுதுறாரா எண்டு திரி விட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தேன். 

                                      அந்த இடைப்பட்ட மாதங்கள் கலியான ராசி மாதங்கள். அதால் அவர் அவரோட மெயின்  கலியாணம் பொருத்தும் பிசினஸ் இல பகல் எல்லாம்  நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தார். சில நேரம் இரவு அவரோட அலுவலகத்தில் களைத்துப்போய் நிற்பார். கொஞ்ச மாதங்களின் பின் நடிக்க   இன்னொரு சான்ஸ் வந்தது , அதுவும் புரோக்கரிடம் இருந்துதான் வந்தது. 


ஒருநாள் புரோக்கர் தட்சணாமூர்த்தி

                        " பூதத்தம்பியில நல்லா நடிச்சியே(?) இன்னுமொரு குடும்பப் படம் எடுக்கிறன் நடிக்கிறியா,  "


                                "   ஓம் "


                           " அரச படத்தில சேவகன் வேடம் தந்து உன்னை அறிமுகப்படுத்தினத்துக்கு நன்றி இல்லாமல்,,புறு புறுதுக்கொண்டு திரியிராயாமே,,"


                           "   இல்லை,,சும்மா ஆட்கள் சொல்லி இருப்பாங்கள் 


                             " சாடை மாடையாக் கேள்விப்பட்டன், சொல்லு,,உண்மையைச் சொல்லு "


                             "   இல்லை,,கொஞ்சம் கோபம் தான்  என்னோட திறமை அதில வெளிவரவில்லை என்ற ஆதங்கம் "


                             "  இது குடும்பப் படம்  இதில முக்கிய பாத்திரம் தாரேன், நடிக்கிறியா   ?"


                         "  ஹ்ம்ம்,நடிக்கிறன் புலவர் ,,என்ன கதை அது "


                         " குடும்பக் கதைதான்,,குடும்பங்களுக்குள்ள  வாற சிக்கல் ,பிக்கல்,பிடுங்கல் தான் வேற என்ன, "


                              "அப்படியா,,அம்மாவுக்கும்  முத்துராமன் போல நான் நடிக்க விருப்பம், அவாவுக்கு முத்துராமனை விட்டா வேற ஒருத்தருக்கும் நடிக்கத் தெரியாது எண்டு நினைப்பு "


                          " இது கொஞ்சம் அப்படியான கதைதான் "


                         " அம்மா பாலச்சந்தர் படம் என்றால் உயிரை வாசலில் விடுவா,,அவாவுக்கு  கட்டாயம் இந்தப் படத்தில நான் நடிச்சா அள்ளுகொள்ளையாய் சந்தோசம் எழுப்பி எடுக்கும் "


                            " ஆனால் கதையை வேற ஒரு கோணத்தில் யாரும் சொல்லாத, இதுவரை யாரும் செல்லாத பாதையில் சென்று திரைக்காவியம் ஆக்கப்போறேன் "


                     " ஒ,,கேக்கவே நல்லா இருக்கே,,அதுக்கு என்ன பெயர் புலவர் "


                        " புரியாத புதிர் என்று பெயர் வைச்சுதான் திரைக்கதை எழுதி இருக்கிறேன் , இதிலயும்  பூதத்தம்பி டீம் ஐத் தான் களமிறக்கப் போறேன் "


                      " அப்படியா,,அந்த திரைக்கதை எழுதிய பேப்பர்களைத் தர முடியுமா,,"


                              "  என்னடா  சுடுகுது மடியப் பிடி எண்டு பெண்டுகள் பிள்ளைப்பெறுவுக்கு அடி வயித்தில கையை வைச்ச மாதிரி நிக்குறாய் "


                                     " இல்லை   படிச்சுப் பார்த்தால்,,,நடிக்க இப்பவே கற்பனையில் நடிச்சு பிராக்டிஸ் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறன்."


                            " சரி,,தாரன்,,ஆனால் முக்கியமான சில சம்பவங்கள்,,அதில இன்னும் எழுதவில்லை,,," 


                     "இதென்ன பிரகண்டம்,,நீங்கள்  முழுக்கதையும் எழுதாமல் படம் எடுக்க மாட்டிங்களே  " 


                                     " எழுதினா சில நேரம் உன்னைப்போல ஆட்கள் அதை வாசித்து என்னோட டேர்னிங் பொயின்ட்ஸ் எல்லாத்தையும் கொப்பி அடிச்சுப் போடுவாங்கள் என்று அதுகள் பேபரில் எழுதவில்லை, படம் எடுக்கிற ஒன் த ஸ்போட் இல்தான் அது விரியும் "


                                      என்று பேப்பர் கட்டு ஒன்று கொண்டுவந்து தந்தார்,அதை வாசித்துப் பார்த்தேன்,ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் சில சம்பவங்கள் ஒன்றை ஒன்று இடைவெளி விட்டுத் தொடர,,மொத்தத்தில் அதன் தலைப்பு புரியாத புதிர் போலத்தான் அந்தத் திரைக்கதை இருந்தது. 


                                              யாருக்குத் தெரியும் அந்த தொடராத இடைவெளிகளில் தான் பெரிய வளைவுகள் திருப்பங்கள் இருக்கும் போல. பெரிய பெரிய டைரக்டர்கள் அப்படிதானே இயக்குவார்களாம் படங்களை, டைரக்டர் ஸ்ரீதர் சூட்டிங்  நடக்கும் ஒன் த ஸ்பொட்ட்டில் வைச்சுத்தானே திரைக்கதையையே ஜோசிப்பாரமே. 

                                  

நிறைய நம்பிக்கைகளுடன் அன்று பின்னேரம்  வீட்டை வந்து, கால் முகம் கழுவிப்போட்டு கண்ணாடியில் காகக் கூடு போல காடை வத்திப்போய் அநாதரவா எண்ணை தண்ணியில்லாமல் கிடந்த  தலைமயிரை இழுத்து நிமிர்த்தி  ரஜனி போல பக்கவாட்டு சரிச்சு விட்டுபோட்டு மறுபடியும் அம்மாவிடம் 

                            " புரோக்கர் குடும்ப்பப் படம் எடுக்கிறார்,,அதில முக்கிய ரோல் இல நடிக்கப் போறேன் ,,கொஞ்ச நாளில் படப்பிடிப்பு தொடங்கப் போகுது "


                              " மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா,,,ஹ்ம்ம்இது   குடும்பப் படம் என்டுறாய்  ,கட்டாயம் நடி ,முத்துராமன் போல நடி ,சரி என்ன கதை அது? "


                                "  அதுதான் எனக்கும் புரியாத புதிரா இருக்கு "


                              " படம் எடுக்கத் தொடங்க முதலே இப்பிடி சீலம்பாய் கிழியுது,,இதெங்க இந்த சீலடி சிலம்படி போய் முடியப்போகுதோ தெரியல்லையே,,சரி நீ என்னவா அதில நடிக்கிறாய்    "


                                    " அதுவும் தெரியாது,,நாளைக்குத் தெரியும்  புரோகர்,வரச் சொன்னார் நாளைக்கு காலை நேரத்தோட "


                               "  பலாச்சந்தர் படம் போல வந்திச்சு எண்டா,,நல்லா சனங்கள்  ரசித்துப்  பார்குமடா,,நீ  முத்துராமன் போல நடியாட,,குரங்குச் சேட்டை விடாமல் ,,ஒழுங்கா புரோக்கர் சொல்லித் தாற மாதிரி நடியடா "

                                    
                            
அடுத்தநாள் காலையில கண்ணாடியில் முகத்தை  " முள்ளும் மலரும் " ரஜனிபோல ஸ்டைலா  சரிச்சு சரிச்சுப் பார்த்தேன்,தலைமயிரை " தர்ம யுத்தம்"  ரஜனிபோல ஒருக்கழித்து சைட்டில் விழுத்திப் பாத்தேன்,,இருந்த சின்ன மீசையை " பதினாறு வயதினிலே " ரஜனி போல " இது எப்பிடி இருக்கு ,இது எப்பிடி இருக்கு " என்று டயலக் சொல்லி தடவி விட்டு ரெண்டு பக்கமும் இழுத்து விட்டேன் ,முகத்தை  இறுக்கி வைச்சு " முரட்டுக்  காளை " ரஜனி போல கீழ் வெட்டுப் பார்வையில் பார்துப்போட்டு 

                               கிணத்தில ஓட்டை வாளியில அள்ளிக்  குளிச்சுப்போட்டு, எங்களின்  வீட்டு ஹோலில இருந்த பிடிச்சு வைச்ச பிள்ளையார் சிலைய தொட்டுக் கும்பிட்டுட்டு ,வீராளி  அம்மன் கோவிலுக்கு குசினியில இருந்த சம்பலுக்கு வேண்டி வைச்சு இருந்த  தேங்காயை அம்மாவுக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டுபோய்  உடைச்சு போட்டு, நல்லூர் கந்தனுக்கு கப்பூரம் ஒன்று கடனா சுப்பிரமணியம் கடையில வேண்டிக்  கொளுத்திப்போட்டு, தட்சனாமுர்த்தியிடம் போய் ,குடும்பப்  படத்தில வாற  குணசித்திர நடகர்  போலவே கை ரெண்டையும் கட்டிக்கொண்டு  பவ்வியமா நிண்டன் !


                                  அவர் ,நாடிய தடவிக்கொண்டு ,டைரக்டர் எ சி திருலோகச்சந்தர்  போல கையால சீன் போட்டு ,
டைரக்டர் பாலச்சந்தர்  போல ரெண்டு கையின் சூப்பிர விரலையும் பெரு விரலையும் சேர்த்து  பெட்டியாக்கி அதில ஆங்கிள்  பிடிச்சுப் பார்த்து , கொஞ்ச நேரம் டைரக்டர் பீம்சிங்  போல ஆழ்ந்து ஜோசித்துப்போட்டு . கடைசில டைரக்டர் ஸ்ரீதர் போல கையைத் தட்டிப்போட்டு  என்னை தலையில இருந்து கால் வரை பார்த்திட்டு


                                     "  உண்னாதத் தான் சொல்லுறன் உன்னை மனதில நினைத்துதான்  உன்னோட தோற்றத்தைக் கற்பனை  செய்து பார்த்துதான் சொல்லுறேன் 


                                    எண்டு சொல்ல .நான் நினைச்சன் இந்த படத்தில கட்டாயம் குடும்பப்பாங்கா நடித்து , தாய்குலத்தைக்  கதறிக் கதறி  அழவைத்து , படத்தை எப்படியும் வெற்றியாக வர நடித்துக்  கொடுக்க வேண்டும் எண்டு மனதளவில் சபதம் எடுக்க ,


                                    திரைக் கதை ஆசிரியர், வசனகர்த்தா, டைரக்டர், தயாரிப்பாளர் என்ற முக்கிய தகுதியில் இருந்த  புரோக்கர் தட்சணாமூர்த்தி என்னோட சீன் வர இடத்தை  இப்படி தொடங்கினார்


                         " முக்கியமான கட்டத்தில தான் நீ இந்தப் படத்துக்க என்டர் பண்ணுறாய், பார் சும்மா விசில் பறக்கும் அந்தக் கட்டத்துக்கு ,,


                                 " அய்யோ,,அய்யோ  இதைக் கேட்கவே இப்பவே காது  ரெண்டிலும் சில்வண்டு கிளம்பின மாதிரி   விசில் பறக்குது  " 


                                "  நாலு பேர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை மொரிஸ் மைனர் கார்ல ஏத்திக் கடதிக்கொன்டு போய் கதற கதற கற்பழிக்கிறாங்கள் ,"


                                    "  என்னது "


                                     " நீ தான் அந்த நாலுபேருக்கும் தலைவன், உன்ட உடம்பு சேப்புக்கு வலு பொருத்தமா பொருந்தும்  "


                             "   என்னது "


                                  " இதில நீ ஒழுங்கா உணர்ச்சி கொப்பளிக்க நடிச்சி எண்டா பிறகு  நோ சான்ஸ் எங்கேயோ போயிடுவாய் " 


                             " என்னது  


                         " எதுக்கு இப்ப எல்லாத்துக்கும் என்னது என்னது  எண்டு மண்ணெண்ணெய் வண்டில்காரன்  வயல் அறுப்பு நேரம்  டீசல் டக்ரில ஏறின கதை போல   நெளிப்புக் காட்டுறாய் "


                              "  நோ சான்ஸ் எண்டா அதுக்குப் பிறகு படமே எனக்கு நடிக்கக் கிடைக்காதா."


                           " டேய் நோ சான்ஸ் எண்டா அதில்லையடா அகராதி பிடிச்சவனே,,நோ சான்ஸ் எண்டா நீ பெரிய நடிகன் ஆகிடுவாய் அதை சொல்லுறேன் மோடயா  "


                           " ஹ்ம்ம்,போயும் போயும் ஒரு கற்பழிப்புக் காட்சியிலயுமா  ஒருத்தன் உணர்ச்சி கொப்பளிக்க நடிப்பான்,,


                                  "  ஓமடாப்பா  அதிலதான் நடிக்கிறது கஷ்டம் தெரியுமோ,,அதுவும் வில்லன் போல,,அகோரமான வில்லன் போல எல்லாராலும் நடிக்க ஏலாது தெரியுமே  " 


                                        "   என்ன சீவியமடா இது,,அம்மா அந்த சீனில நடிக்க விடமாட்டா எண்டு நினைக்கிறன் "


                            " அப்ப வேற என்னத்துக்கு நடிக்கப் போறாய் "


                         " குடும்பப் படம் என்டிங்க குணசித்திரமா நடிக்க ஒரு ரோல் தாங்களேன்,,"


                                             "  அதெல்லாம்  இல்லை,,நீதான் வில்லன்,,கற்பழிப்பு வில்லன்  " 

                                          "  சரி  பிறகு  என்ன நடக்குது,,பிறகாவது ஒரு நல்ல சீன் வருகுதா  " 

                                          "  இல்லை,,உன்னை அந்தப் பெட்டையின் காதலன் வந்து அடிச்சு போட்டு பொலிசில பிடிசுக் கொடுக்க,,நீ ஜெயிலுக்குப் போறாய்,,அதோட உன்னோட காட்சிகள் முடியுது,,உன் கதையும் முடியுது,,கதைக்குத் தேவைப்பட்ட மாதிரிதான் உன்னைப் போட்டு இருக்கிறேன்   "

                                   "  ஹ்ம்ம்,, இது நல்லாவே இல்லை,,கேட்கவே நல்லா இல்லை "

                          " உன்னோட விறைச்ச மண்டையன் சேப்புக்கு வசனம் பேசி குடும்ப்பபாங்கா நடிச்சா எடுபடாது 


                               " ஹ்ம்ம்,, இது வேற விதமா  எல்லோ அதுவும்  குரங்கு இளனிக் கோம்பைக்குள்ள  கையை  விட்டு உதற முடியாமல் மாட்டின மாதிரி எல்லோ  எடுபடப்போகுது "

                                 " சும்மா கிரந்தம் கதையாதே,   உன்னோட மண்டை விறாஸ் போல உள்ள முகத்தை  மனதில நினைத்துதான்  உன்னோட தோற்றத்தையும்  கற்பனை  செய்து பார்த்துதான்  இந்த ரோலுக்கு செலக்ட் செய்தேன் "

                                 என்றார்,எனக்கு நடிப்பிலேயே  வெறுப்பும் , சினிமாவில்  கோபமும் அவடதில வைச்சே  வந்தது,


                                                அந்த கற்பழிப்பு கூட்டதுக்கு தலைவனா நடிப்பது பற்றி முடிவு  ஒண்டும்  பதில் சொல்லாமல் வீட்டில வந்து ஹோலில இருந்த பிள்ளையார் சிலைய வெறுப்பா பார்த்துக் கொண்டிருந்தேன், 

                                                ஊருக்குள்ள கற்பழிப்பு சீனில நடிச்சா மானம் போயிரும். அம்மாவுக்கு குமார் பிள்ளையைக் கற்பழிக்கிறது என்ற வார்த்தையைக் கேட்டாலே கொலை செய்யிற கோபம் வரும். அதைவிட கற்பழிக்கிற கூட்டதுக்கு  தலைவனா நடிச்சா அம்மா அடுத்தநாளே வீட்டை விட்டு அடிச்சு கலைச்சுப் போடுவா. அதை எல்லாம் ஜோசிதுக்கொண்டு இருக்க ,அம்மா வந்து

                                 " கதை கேட்கப் போறான் எண்டு சொன்னியே,புரோகர்,இந்தப் படத்தில உனக்கு என்ன வேடம் தந்தார் ,,சொல்லு என்ன கூத்து நடந்தது "


                      "     ஹ்ம்ம் "

                      "பாலச்சந்தர்  கதை போல சொல்லி இருப்பாரே,,"

                         " கிழிச்சார் , கொதி  வருகுது  அந்தாள் சொன்ன திரைக்கதை, சும்மா இரன  வெறுப்பைக் கிளப்பாமல்  "

                             "   புலவர் நல்ல குடும்ப விசியங்களை அவதானித்து எழுதும் விசியம் உள்ள மனுஷன்  "

                              " கண்டறியாத பாலச்சந்தர் "


                             " ஏண்டா அந்தாள திட்டுறாய்,,யார் பெயரை இழுத்தும் கதை பாலச்சந்தர் பெயரை மட்டும்  இழுத்து கதைசாய் எண்டா வாயில போடுவேன் "


                                     "  இப்பவே பின் மண்டையத்  தடவி   பிடரியில போட்ட மாதிரிதான் இருக்கு அவர் கதை சொன்ன விறுத்தம் "

                                         "   நான் தானே சொன்னேன் முத்துராமன் போல நடி எண்டு ,,அதுக்கும் இப்ப என்ன பிரச்சினை உனக்கு "

                            " கண்டறியாத முத்துராமன் "


                            " டேய்..என்னடா எல்லாரையும் பேசுறாய்,,புரோக்கர் என்னடா கதை சொன்னார்,,நீ என்னவா நடிக்கிறாய்,,அதை மட்டும் சொல்லு உன்னோட கிடந்தது பிரகண்ட்டப் பட எனக்கு நேரமில்ல "


                            " சரி நான் நடிக்கிற சீன் மட்டும் சொல்லுறேன்,"


                           " சரி சொல்லு அதைதானே இவளவு நேரமும் கேட்கிறேன் நீ பாஞ்சு விழுகிறாய் "


                            " வேற ஒண்டும் கேட்கக்கூடாது,,சொல்லவும் மாட்டேன் "


                         "  இல்லை கேட்க மாட்டேன் ,நீ சொல்லு "


                          " நாலு மண்டை விறாசுக் குத்தியங்கள் ஒரு குமர்ப்பிள்ளையை மொரிஸ் மைனர் கார்ல  கடத்திக்கொண்டுபோய்க்  கற்பழிக்க முயற்சிக்கிறாங்கள் "


                                " அட,,சொல்லு சொல்லு பிறகு, அதாரது அந்த குமர்ப் பிள்ளை,,எங்கட அயலட்டைப்  பிள்ளையோ  "

                                           "  நான் அந்தக் காரைத் வெறுங் காலில் ஓடித் திரத்திக்கொண்டு போய் ஒரு கையால மொரிஸ் மைனர்  காரை மடக்கிப் பிடிச்சு  மற்றக் கையால அந்த நாலு மண்டை விறைச்சவங்களையும்  பேரையும் முகத்தில  அடிச்சு முழங்காலை நொறுக்கி, "

                                         "  பிறகு ,,சொல்லு  சொல்லடா, குமர்ப்பிள்ளை எண்டும் பார்க்காமல் கடதுரான்களே  "

                                             "  இடுப்பில உதை உதை எண்டு உதைச்சு அவங்கள நொறுக்கி எடுத்து  குளறிக் குழறித் தப்பி சிதறி ஓட வைச்சு அந்த குமர்ப் பெண்ணைக் காப்பாத்துரன், "

                                " அட,,அட  நான் பெத்த பிள்ளை  எல்லா நீ,,பிறகு  சொல்லு,,சொல்லு  என்ன நடந்தது "

                                    " அந்த இளம் குமார்பிள்ளை நன்றியாக என்னப் பார்த்து  சிரிப்பா, "

                          " ஓ,,,இதென்ன  ,  அவள்  எங்கட சாதி சனமே,,என்னன்ட்டு  அது விசாரிக்காமல் உன்னைப் பார்த்து சிரிப்பாள் ,சரி  சொல்லு,,பிறகு "

                               " உடன காமரா ஒரு மஞ்சள் செவ்வரத்தம் பூவையும் ,ஒரு சிவப்பு செவ்வரத்தம் பூவையும் பக்கத்தில பக்கத்தில குளோசப்பில் காட்டும்   .."

                          " அட..இது  பார்த்தியே  எப்படி  புலவர் காதலை அழகா தொடக்கிறார்  என்று "


                          "  ஓம்,   இதுதான் நான் வார ஒப்பிங் சீன் ,, "     

                                 என்றேன்....அம்மா,  திடுக்கிட்டு, 


                         " பரவாயில்லையே, நாலு மனுசருக்கு பயன்படுறமாதிரி படத்திலயாவது நடிக்கிறியே,அதுவே பெரியவிசியம் ! கட்டாயம் நடி , அந்தக் குமர்ப் பிள்ளையை காப்பற்றின படியால்  இனி  இதுக்குப்   பிறகு வாற கதையில் கட்டாயம் முத்துராமன்  போல நடிக்க வேண்டிய குடும்ப  சம்பவங்கள் வருமடா,,,


                           "   என்ன வரும்,,விசரா  உங்களுக்கு "

                           "     நான் முதலே சொன்ன்னான் எல்லோ இது பாலச்சந்தர் படம் போலதான் வருமடா ,கட்டாயம் ஒரு அந்தரிச்ச குமார் பிள்ளைய கழிசடை காவாளிகளிடமிருந்து காப்பாற்றி   நடிக்கிறாய் பார் "

                             "   அதில என்ன மண்ணாங்கட்டி எனக்கு வரும் "

                                    "   அப்பவாவது ஊருக்குள்ள சனம் உன்னையும் ஒரு மனுசனா மதிக்குமடா " 

                                 

அம்மாவுக்கு  நான் ஒரு பதிலும் சொல்லவில்லை, ஆனால் கோவத்தில ஒண்டும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு இருந்தேன் . 

                                                எல்லா மனிதர்களின் வாழ்கையே படமாக்கப்படாத  ஒரு திரைக்கதை தானே. அம்மாவுக்குப் பொய் சொன்னது பிழை போல இருந்தது. பொய் சொல்லாமல் உண்மையை சொல்லி இருந்தால் என்னோட சீவியம் கிழிஞ்சு இருக்கும்.

                                    எப்படியோ என்னோட   நல்ல காலம் புரோக்கர் அந்த புரியாத புதிர் என்ற  படம் அதன் பின்  நான் யாழ்பாணத்தில் இருந்த காலத்தில்  எடுக்கவில்லை. 


                                             சிலநேரம் அதன் பின் எடுத்தாரா என்பது என்னைப் பொறுத்தவரை இப்பவும் ஒரு  புரியாத புதிர் !
.