Monday, 7 December 2015

சல்லிமுட்டி

வாழ்க்கை போலத்தான் ஒரு கதையும் எங்கே தொடங்கும் எப்படி முடியும் என்று சொல்லவே முடியாது. நாசமாப்போன இந்தக் கதை எங்கள் ஊரில் பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும் அம்மச்சியா குளத்துக்கும் நடுவில் தொடங்கி வட அமெரிக்காவில் இருக்கும் போஸ்டன் ,மசாசூசெட்,நியூ ஜோர்க்,பிலடெல்பியா  என்று அலைந்தது. ஆனால் வலிகள் என்னவோ ஒரே மாதிரித் தான் வாட்டி எடுத்தது .

                                                          இருவத்தி எட்டு  சொச்சம் வருடங்களின் முன்னர் நடந்த கதையை இப்ப திருப்பிப் புரட்டிப் போட்டு தூசு தட்டுவதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகுது என்றுதான் நினைச்சுக்கொண்டு இருந்தேன், ஆனால் அந்தக் கதை ஒரு காதல் கதை. அதுக்கு இன்னும் ஒரு முப்பது வருடம் சென்றாலும் மல்லிகைப்பூ வாசம் இருக்குமென்று சத்தியமா நினைக்கவேயில்லை. அதுதான் காதல் அழிவதில்லை என்று எழுதியே வைத்தார்கள் போலும்.

                                   வன்னியில் உள்ள உடையார்கட்டில் பிறந்த வித்தியா எங்களின் ஊரில் வந்திருந்து அட்வான்ஸ்  லெவல் படிச்சாள். வித்தியாவின் அம்மா, ஜப்னா  கம்பஸில் பிசிகல் சயன்ஸ் படிச்ச அவளின் அக்கா. ஒரு குட்டித் தங்கச்சி இவளவுதான் குடும்பம். அவளின் அப்பா முல்லைத்தீவு எடிகேசன் டிப்பார்ட்மெண்டில் கணிதத்துறையில் ஆசிரியப் போதனாசிரியர் வேலை செய்தார். அதால் லீவு நாட்களில் இவர்கள் உடையார்கட்டில் இருந்த அவர்கள் வீட்டுக்குப் போவார்கள்.

                                  வித்தியா ஓ லெவல் வரை வன்னியில் படிச்சாள். அட்வான்ஸ் லெவலுக்கு அந்த வன்னிப் பாடசாலையில் அப்பிளிகேசன் போட்டு விட்டு யாழ்பாணத்தில் வந்திருந்து பிரைவட் டுயுட்டரியில் அப்பனுக்குத்ப் தப்பாமல் பிறந்து கணிதப் பிரிவில் படிச்சாள். டியூசன்   எல்லாம் ஓடி ஓடிப்  படிச்சாள். அப்படி செய்தால் பரிட்சை முடிவுகள் வர வன்னி கட்டவுட் மார்க்ஸ் உடன் கம்பஸ் போகலாம். அப்படிப் பலர் அந்தநேரம் செய்தார்கள், செய்து வென்றார்கள். அதில யாருக்கும் ஆட்சேபனையும் இருக்கவில்லை.

                                         எங்கள் ஊரில் பெரிய கட்டு மதில் கட்டின வளவில் இருந்த ,புருஷன்  அனுராதபுரதில ஆர் எம் ஒ என்ற அரச மருத்துவ அதிகாரியாக  வேலை செய்ததால் தனியாக இருந்த, பணக்கார, அப்போதிக்கரி அண்ரியின் பெரிய வீட்டின் பின்பக்கம்  இருந்த பகுதியை அனெக்ஸ் ஆகப் பிரித்துக் கொடுத்த சின்ன இடத்தில இருந்தது அவளின் சிக்கனமாக வாழத்தெரிந்த சின்னக் குடும்பம். 

                                     அவளின் அம்மாவும் மூன்று பெண்பிள்ளைகளுக்கும் குருவி கூடு கட்ட சுள்ளி பொறுக்கின மாதிரி  சீதனம் சேர்க்கவோ தெரியவில்லை கணக்குப் பார்த்துதான் வாழ்ந்தது போல இருந்தது . ஒரு கிழமையில் ரெண்டு நாள்த் தான் குருக்கள் வளவுச்  சந்தியில இருந்த  சுப்பிறமணியம் கடையில மரக்கறி வேண்டுவா. அதுவும் மூச்சு வாங்குமட்டும் பேரம் பேசித்தான் அதையே வேண்டுவா .

                                            நாலு பெண்கள் மட்டுமே இருந்த அந்த வீட்டுக்குள்ள வித்தியாவுக்கு  சந்தடி சாக்கில காதல் சிக்னல் போட்டுப் பார்க்க முதல் எதிரியாக இருந்தது யூனிவெர்சிட்டியில் படிச்சுக்கொண்டிருந்த அவளின் அக்கா.  எங்களின் குளத்தடிக் குருப்பைக் கண்டாள் உள்நாக்கு இழுத்த நேரம் உச்சந்தலை வலிச்ச மாதிரி  மண்டையை திருப்புவா. கண்ணை உருட்டி படிச்சு உருப்படாதவங்கள் என்பது போலப் பார்ப்பா. அவள் அக்காவைப் பொறுத்தவரை படிக்க வேணும், கம்பஸ் போக வேணும், அரசாங்க வேலை எடுக்க வேண்டும், இந்த மூன்றும்தான் மூடு மந்திரம். காதல் ,கலியாணம் ,கத்தரிக்காய் கண்ணிலையும் காட்டக்கூடாது .

                               அப்போதிக்கரி அண்ரியின் பெரிய வீட்டுக்கு அருகில தான் எங்களின் இளமைக்கால  குளத்தடிக் குருப்  விபரம் தெரியாத பொடியன்கள் விடலைப்பருவத்தில் சோலி சுறடுக்குப் போகாமல் அவங்கள் பாட்டில் விளையாட்டித் திரியுறாங்கள் என்ற நிழல் மறைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது. அப்படி இயங்கவில்லை பல வில்லங்கமான சில்லெடுப்புக்களில்  குளத்தடிக் குருப் மெம்பர்களின் பங்களிப்பு இருந்தது என்று  பழங்கிணத்தடி வீராளி அம்மனுக்கு மட்டும் நல்லாத் தெரியும் .

                                              ஆடு  அறுக்கப் போற நேரம் காது குத்துற   அலட்டல் என்று நீங்க நினைச்சாலும்   அந்தக்  குளத்தடிக் குழப்படிக் குருப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் சொல்லத்தான் வேண்டும் . ஏனென்றால் வித்தியாவின் எதிகாலத்தை ஏறக்குறைய சின்னாபின்னமாக்கும் அளவுக்குக் கொண்டு வந்த சல்லிமுட்டி என்ற  நல்ல பொடியனும் அந்தக் குழப்படிக்  குருப்பில்தான் இருந்தான், அவன்தான் பினாஸ் மினிஸ்டர் போலப் பொறுப்பிலேயே இருந்தான் எண்டுதான் சொல்ல வேண்டும்

                                  எங்களின் ஊரில கதவழிப்பட்ட எல்லாக் கதைகளிலும் குளத்தடிக் குருப் வந்து இருக்கு. அம்மாசிய குளத்தையும் அதுக்கு அருகில் இருந்த வயல்வெளி,வீராளி அம்மன் கோவில்,  கிரிகெட் கிரவுண்ட் , இருட்டுப் புளியமரத்தடி , தேய்வேந்திரத்தின் மாந்தோப்பு ,பால்ப்  பண்ணை வளவு,  இவைகளைத் திட்டமிடும் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கிய அதில இருந்த மெம்பர்களுக்கும்  படிப்புக்கும் நாலஞ்சு கிலோமீட்டர் இடைவெளி .  வீட்டில உள்ள வேலையத் தவிர வெளிய உள்ள அத்தனை அலுப்புகளிலும் தலையை விடுவது தான் சத்தியப் பிரமாணம் எடுத்த கொள்கை. குளத்தடிக் " குழப்படிக் " குருப்.இந்த நடுவில வாற "  குழப்படி " என்ற வார்த்தை தான் சட்டப்படி பதியப்பட்டஎங்களின்  ட்ரேட் மார்க் .

                                 மற்றப்படி அந்தக் குருப்பில்  நிறைய ஒற்றுமை இருந்தது. என்னவும் கும்பலாக நாங்க செய்யிற திருகுதாளங்களில்  ஒருத்தனாவது பிடிபட்டாலும் உயிரே போனாலும் உண்மை சொல்ல மாட்டோம். சொல்லக்கூடாது . அற்ப  ஆசைகளைக் காட்டினாலும் மற்றவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். அப்படி யாரவது மற்றவனை மாட்டி விட்டது தெரிஞ்சா அவன்தான் கந்தசாமி மாமாவின் மரவள்ளி தோட்டத்துக்கு பனை வடலி கருக்கு மட்டை வேலிக்கால பொட்டுப் போட்டுப் போய்,பதுங்கி இருந்து சத்தம் வராமல் கிண்டி  கிழங்கு இழுத்துக்கொண்டு வந்து சுட்டுத் தரவேணும். அப்படிதான் அதுக்கும் தண்டனை கடுமையாக இருக்கும்.

                                      ஆம்பிளைத் துணை இல்லாமல் குஞ்சுகளைப் பொத்தி வைச்சுக்கொண்டு இருந்த  வித்தியா குடும்பம் ஆபத்தான ஏரியாவில் இருந்து அவளுக்குத் தெரியும். அவள் அக்காவுக்கு நல்லாத் தெரியும்,பாவம் அவள் அம்மாவுக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனாலும் குளத்தடிக் குருப் அரசியல்சாசனப்படி நாங்கள் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கக்கூடாது. இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற ஜனநாயக விழிமியங்களில் கடுமையாக இருந்தோம். அதை மீறினால் அந்த மெம்பர்தான் பால்ப் பண்ணை வளவில கள்ள இளனி இறக்கப் பிளான் போட்டா மரத்தில ஏறவேண்டும்.அதுதான் பணிஸ்மென்ட் .

                                            வித்தியா வீடு போலக் கொன்ரோல் அதிகமான வீட்டுகளில் தான் காதல் உயரமான மதிலையில், கம்பிக் கதவையும் ஏறிக் கடந்து சத்தமில்லாமல் நுழைஞ்சு வைரஸ் கிருமிபோலப் பரவி , நுழைஞ்ச அடுத்த சில மாதங்களில் வரிஞ்சு கட்டிக்கொண்டு  அந்த வீட்டின் அமைதியையும் நின்மதியையும் கெடுக்கும் என்று குளத்தடிக் குருப்பில் வெம்பிப் பழுத்துப் போய் இருந்த எங்களுக்கு நல்லாவே தெரியும். ஏன் அதுதான் புவனேஸ்வரி,பாவானி ,ஜேசுதாசன்  வீட்டிலையும் நடந்தது , அதுவே வித்தியா வீட்டில கொஞ்சம் வித்தியாசமா நடந்து.அவளவுதான்

                                           வித்தியா எப்படி அழகா இருந்தாள் என்று நான் சொல்லப்போறதில்லை. ஏற்கனவே பெண்டுகளை அவர்களின் சொண்டில இருந்து ....எல்லாம் தடவி வழிச்சுத் துடைச்சு அடிப்பாதம் வரை வர்ணிக்கிறதைத் தவிர உன்னோட கதையில் குறைந்த பட்சம் கொள்ளிக்கட்டையால சுண்டு விரலில சுட்ட மாதிரியான  யதார்த்த ரியாலிட்டி என்று ஒரு மண்ணும் இல்லை என்று பலர் புலம்பித் திரிவதால், அவளை ஒரே வரியில் சொல்லிப்போட்டு அங்காலே பாஞ்சு போறன், மவுனராகம் படத்தில வாற ரேவதி உங்களுக்கு தெரியும் தானே,அந்த நடிகையின்  ஈ அடிச்சான் கொப்பிதான் வித்தியா, இது  போதும் தானே.

                                        குளத்தடிக் குருப் எங்களின் ஊரில அந்த நேரம் எங்களின் வயதில் இருந்த பெட்டைகளுக்கு ,அவள்களின் அப்பன், ஆத்தா வைச்ச பெயரை அங்கால தூக்கிஎறிஞ்சு போட்டு நாங்கள் எப்பவுமே ஒரு காரணஇடுகுறிப் பெயர்  சுத்தமான தமிழில் வைப்போம் . அப்படிதான் புவனேஸ்வரிக்கு அங்கொடை எண்டும், ஊர்மிளாவுக்கு சோலாப்பூர் செருப்பு எண்டும் ,பவானிக்கு தட்டாப்பருப்பு  எண்டும் வைச்சம், அதுபோல வித்தியாவுக்கு வித்தியாசமாக ஆங்கிலத்தில் உடையார்கட்டைச்  சுருக்கி UK எண்டு வைச்சம் .

                                     அப்போதிக்கரி அண்ரி வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி வசித்த  விக்கினேஸ்வரனை அவனோட வீட்டில விக்கி எண்டுதான் சொல்லுவார்கள். நல்ல வசதியான குடும்பம் . அவனோட  அப்பா சாராயம் கள்ளமா வித்தாப் பிடிக்கிற காலால் திணைக்கள இன்ஸ்பெக்டர் . அவன்தான் எங்களுக்கு சொக்கன் கடையில வடையும் ப்ளேன் டீயும் வேண்டித் தருவான். இரவில புளியமர இருட்டில ரகசியமா ஊதிப்பழக ட்ரைனிங் எடுத்த நேரம்  ஊதுவத்துக்கு ஊதுவத்தியும் வேண்டக் காசு தருவான். 

                                       அஷ்ட லஷ்மி  கடாட்சம் போல அப்பப்ப கையை விட்டுத் துலாவி சில்லறை புரட்டுவதே அவன் எங்க குருப்பில் இருந்தபடியால் தான் .  அதால சல்லிமுட்டி எண்டு காரணப் பெயரை வைச்சம். பத்தாம் வகுப்போடு படிப்பு  உள்ளே  இறங்கி செரிமானம் ஆகக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்ததால்  லண்டனுக்குப் போகப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்தான். அவன் குடும்பம் வைப்புச் சொப்பு உள்ள வசதியான குடும்பமாக இருந்ததால் அவன் வெளிநாடு போவான் போலத்தான் இருந்தது .

                                           நாங்கள் எல்லாம் புகை அடிச்சுப்போன றாத்தல் அரிக்கன் லாம்பு போல கறுப்பா இருந்த நேரம் சல்லிமுட்டி நல்ல வெள்ளையாக இருந்தான். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசாக வளரும் வாளிப்பு அவன் முகத்தில்,உடம்பில்,அவன் போடும் உடுப்புக்களில் இருந்தது உண்மை. நரி நாரி உழைவுக்கு நல்லெண்ணெய் தடவின மாதிரி தேகத்தில் ஒரு மினுமினுப்பு இருக்க இங்கிலீஸ் வேற அப்பப்ப அவிட்டு விடுவான்.

                                        சல்லிமுட்டிக்கும் வித்தியாவுக்கும் நடுவில ரண்டு வீடுதான் தூரத்தை  இடைவிட்டு  இருந்தது.ஒன்று  பெட்டிசம் பாலசிங்கம் வீடு. மற்றது மசுக்குட்டி மாமியின் வீடு. ரெண்டுமே காதலுக்கு சிக்னல் போட்டு நல்லா எண்ணை  தோச்சு திரிச்சீலை திருகி விட்டு  நுழைக்க இடைஞ்சல் இல்லாத வீடு . காதலைப் பத்த வைக்கிறது தான் கஷ்டம். பத்தீட்டுது என்றால்,பிறகு அங்க இங்க பிடிச்சுப் பிடிச்சு நுழைஞ்சு கொழுந்துவிட்டு எரியும். இந்த " அங்க இங்க பிடிச்சுப் பிடிச்சு நுழைச்சு விடுறதுக்குத் தானே " நாங்கள் நண்பேண்டா என்று சொல்லிக்கொண்டு ஒரு குறுப்பாவே இருந்தோம், வேற என்னத்துக்கு இருந்தோம்,நீங்களே  சொல்லுங்க பார்ப்போம்

                                 யாழ்பாணம் அந்த நேரத்தில எந்த நேரம் எங்க இருந்து வரும் எண்டு தெரியாத அகோரமான பொம்பர் அடியில் அதிர்ந்து கொண்டு இருந்தது.தரை வழியாக முன்னேற முடியாத இராணுவம் விமானப்படையால் வான் வழியாகச்  சரஸ்வதிப் பூசைப் படையல் போல  அள்ளிக் கொட்டிக் கொண்டு இருந்தது .விமானத் தாக்குதல் படு பயங்கரமாக இருக்கும்  அதால எல்லா வீடுகளிலும் பங்கர் என்ற பதுங்குகுழி வெட்டி அதுக்கு மேல தென்னங்குத்தி பரவி அதுக்கு மேலே மண் மூட்டை அடுக்கி அதுக்கு உள்ளதான் பொம்ப்ர் பம்பரம் போல சுழரும் நேரம் சனங்கள் ஓடிப் போய்ப் பாதுகாப்பாக  இருப்பார்கள்.அதை எல்லா வீடுகளிலும் கட்டாயமாக வெட்டச் சொன்னார்கள் .

                                       அப்போதிக்கரி அண்ரி வீட்டில பங்கர் வெட்ட ஆம்பிளைகள் இல்லை. அவா இன்ஸ்பெக்டர் அண்ரிக்கு அதைச் சொல்ல, அதை விக்கியின் அம்மாவும்  இன்ஸ்பெக்டரும்  வீட்டில கதைச்ச நேரம் கேள்விப்பட்ட சல்லிமுட்டி நல்ல ஒரு சந்தர்பத்தை நழுவ விடாமல் ,எங்களைக் கொண்டு வெட்டு விக்காலமே எண்டு சொல்லி இருக்கிறான் . இந்தக் கதைவழி திருப்பி மற்றப்பக்கம் உணவுச் சங்கிலி போலப் போய் வித்தியாவின் அம்மாவுக்கு சேர்ந்த நேரம், அந்த வீட்டில் நாங்கள் உள்ளிட்டு பங்கர் வெட்டுவதுக்கு முதல்  எதிர்ப்பு வித்தியாவின் அக்காவிடம் இருந்து வந்திருக்கு. எப்படியோ கோட்டை அடிபாட்டில் பொம்பர் அடி அகோரமாக ஒருநாள் எங்களுக்கு அழைப்பு வந்தது .

                                           நாங்கள் இப்படியான மனிதாபிமான உதவிக்கு எப்பவுமே தயார். சல்லிமுட்டிதான் கட்டாயம் ஆம்பிளை உதவி இல்லாத   அப்போதிக்கரி அண்ரிக்கு வெட்டிக்குடுக்க வேண்டும் என்றான். ஆனால் அந்த பெரிய வீட்டில இருந்த சின்ன வித்தியா குடும்பத்துக்குதான் அவன் அதிகம் கவலைப்படுற மாதிரி இருந்தது . ஆனால் எங்களின் மண்வெட்டிப் பிளானுக்குள்ள இன்னுமொரு மாஸ்டர் பிளான் இருக்கு என்று நாங்கள் கதைச்சுக்கொண்டு இருந்த நேரமே பைபிள் மேல் நம்பிக்கை உள்ள ஜேசுதாசன் உதுக்கு நான் வரமாட்டான் எண்டு சொல்லிட்டான். அதால ஆறு பேரைச்  செலட் செய்யப்பட்டார்கள். நொள்ளைக் கண்ணா, ஜெகதீஸ், பித்துக்குளி ,ஐஸ்பழம் ,இவர்களுடன் என்னையும் சேர்த்தான் சல்லிமுட்டி.

                             வித்தியா அதிகமா சனிக்கிழமை தான் வீட்டில நிற்பாள் என்றான் சல்லிமுட்டி,அதனால அந்த நல்ல நாளையே தேர்ந்தெடுத்து ,புண்ணியக் குஞ்சி வீட்டுக்குப்போய் எக்ஸ்றாவா ரெண்டு மண்வெட்டியும், மதியாபரணம் டீச்சர் வீட்டில போய் அலவாங்கும் எடுத்துக்கொண்டுபோய்  அப்போதிக்கரி அண்ரி வீட்டுக்குப் போய் ரோட்டுக் கதவுக்க மன்னார் அடிபாட்டு டீம் போல நின்டோம் . அப்போதிக்கரி அண்ரி உள்ளுக்க வரச்சொல்லி கூட்டிக்கொண்டு போய் எங்க வெட்டலாம் ,எப்படி வெட்டலாம் என்று கேட்டா .

                       "  எங்களுக்கா இப்ப பங்கர்,,,,உங்களுக்குத் தானே  அண்ரி...உங்களுக்கு என்ன மாதிரி வேணுமோ அதேபோல வெட்டலாம் ..பின் வீட்டு ஆட்களும் பாவிக்கிற மாதிரி வெட்டலாமே "

                                       என்று சல்லிமுட்டி சொன்னான். நாங்கள் அதுக்கு முதல் ஒரு இருவது பங்கர் ஊருக்குள்ள வெட்டிக்கொடுத்திருப்போம். வித்தியாவை வெளிய இழுத்து எடுப்பது, அவளோடு தான் கதைப்பது  எங்களின் அந்தப் பிளானில் முக்கியம் என்று சல்லிமுட்டி சொல்லி இருந்தான் ,அதால நாங்கள் பேசாமல் ஹீரோயின் என்டர் பண்ணக் காத்திருந்தோம் .

                          " பொறுங்கடா வாறன்,,நான் தனிய,,எனக்கு என்னத்துக்கு தனி பங்கர் .. ம்,,பின்னால வீட்டில மூன்று பிள்ளையளும் ,,ஒரு அம்மாவும் இருக்கினம்,,அவையளும் வந்து இறங்கிற மாதிரி வெட்டினாத்தான் நல்லம்,,அதுகளும்  பாவமெல்லே "

                     "  ஓ அண்ரி,அதுதான் நல்லம்,அவயளை வரச்சொல்லுங்களேன் ,அவையின்ட பிளான் என்ன எண்டு கேட்ப்பம்  " 

                             "   அதுகள் வீட்டில கம்பசில படிக்கிற ஒரு பெடிச்சி இருக்கிறாள் அவளுக்கு இதுகள் விளங்கும் "

                                   "    ஓம்,,அன்ரி ,,அவயளை  வரச் சொல்லுங்கோ "

                            "   என்னது  அந்தப் பிள்ளைகளை முதலே தெரியுமோ,,பழக்கமோ "

                                     "   இல்லை,அன்ரி,,இப்ப பழகினாப் போச்சு "

                                     "  என்னடா ,நீ ,,இப்பிடி சொல்லுறாய்,,இன்ஸ்பெக்ட்டர் வீட்டு பொடி தானே நீ,,விக்கி தானே உனக்குப் பெயர் "

                                        "   ஓம்,ஓம் அன்டி "

                                 "  கதை பேச்சு என்னவோ சவட்டுரா மாதிரி கதைக்கிறாய் "

                                " அப்படி ஒண்டும் இல்லை அன்டி,,அம்மா தானே பங்கர் வெட்டிக்கொடுக்கச் சொல்லி,,எங்களை உங்களோடு பொருந்தி கதைச்சு ஒழுங்குபடுத்தி விட்டவா "

                                   " ஓமோம்,,,நான் அறிமுகம் ஆன அயலடடைப்பொடியள்என்று தானே வீட்டுக்கு எடுத்தேன், அதுவும் மனுசன் இல்லாத நேரம் , இல்லாட்டி  நான் நிண்டது வந்தது போனதுகளை வீட்டுக்கு அடுக்க மாட்டேன் தெரியும்தானே "

                                         "  ஓம் ஓம் அன்டி,,நீங்க ஒண்டுக்கும் ஜோசிக்க வேண்டாம்,,நாங்க நல்ல பிளான் போட்டு வைச்சு இருக்கிறோம்,,பங்கர் உங்களுக்கு சொல்லப்பட்ட மாதிரி வடிவா வெட்டுவம்,"

                                 என்று ஏற்கனவே போட்டு வைச்ச பிளான் படி சொன்னான் சல்லிமுட்டி. என்னதான் பிளான் "  A  *" , சந்தனத்தில பிள்ளையார் பிடிச்ச மாதிரிப் போட்டு வைச்சு இருந்தாலும் பின் வீட்டில இருந்து சொர்ணமக்கா  போல கம்பஸ்காரி வந்தாள் என்றாள் என்ன சொல்லுவாள் என்பது பற்றியும், அதுக்குப் பிறகு அவளை  வழிக்குக் கொண்டுவர  பிளான் " B  "யை வைச்சு  நாக்கு வழிக்கவும் எங்களிடம் " ஒன் த ஸ்பொட் " இல் பிளான்   ஒன்றும் கைவசம் இருந்ததில்லை. முதல்  " ஒன் த ஸ்பொட் " இல் பிளான் எடுத்துவிடும் திறமை உள்ள மண்டையுள்ள ஒருத்தனுமே அந்த மண்வெட்டி டீமில் இல்லையே . 

                       அப்போதிக்கரி அண்ரி பின் வீட்டுக்கு போய்க் கதவைத்திறந்து உள்ளே  கதைக்க போனவுடனேயே மதிலுக்கு பக்கத்தில நிண்ட ஆணைக்கொய்யா மரத்தில கிடந்த காய், பிஞ்சு, பழம், எல்லாத்தையும் உருவிப் பிடுங்கி காட்சட்டை பொக்கட்டுக்க அடைஞ்சிட்டம். ரெண்டு செவ்விழனி மரத்திலையும் இளனிப் பதமா நாலு குலை பிள்ளைத் தாச்சிகளின் வயிறுபோல தள்ளிக்கொண்டு நிண்டது ,அதயும் வடிவாக் கவனிச்சு வைச்சுட்டம் .

                                         அப்போதிக்கரி அண்ரி வித்தியாவின் அம்மாவைக் கையோடு கூட்டிக்கொண்டு வந்தா, இந்த ரெண்டு பழசுகள் தப்புறதுக்கா நாங்க பங்கர் வெட்ட வந்தம் எண்டு நாங்கள் ஆளை ஆள் பார்த்தம். அப்போதிக்கரி அண்ரியும் வித்தியாவின் அம்மாவும் ஒரு பிளானும் போடவில்லை, வித்தியாவின் அம்மா,

                        " கொஞ்சம் பொறுங்கோ ,டொக்டர் அண்ரி எனக்கும் ஒண்டும் விளங்குதில்லை, என்னோட பெட்டையளைக் கேட்ப்பம் " ,

                       எண்டு சொல்ல்லிக்கொண்டு போய்க் குசினிப் பக்கமாக இருந்த ஜன்னலுக்கால  

                            "  சத்தியா, சத்தியா,,எடி பிள்ளை,,இங்க ஒருக்கா வானை ராசாத்தி,,இங்க பெடியங்கள் பங்கர் வெட்ட வந்து நிக்குறாங்கள்,,எல்லாரும் உடன ஓடியாந்து இறங்க எங்க வெட்டின்னா லேசா இருக்குமெண்டு சொல்லணை ,,"

                                 என்று சொல்ல கம்பஸ்காரி  பின் கதவால் வெளிய வந்தாள், வந்து படி இறங்கி நிலத்தில கால் வைச்சுப் போட்டு ரெண்டு அடி பின்னுக்கு எடுத்து வைச்சாள். எங்களை வடிவாப் பார்த்தாள். மண்வெட்டிகளைப் பார்த்தாள். அலவாங்கைப் பார்த்தாள், எங்கள் மண்டைகளை நல்லா உற்றுப் பார்த்தாள்,

                            "  எனக்கு நேரமில்லை அம்மா , செமஸ்டர் டெஸ்ட் வருகுது  அதுக்கு தீசிஸ் எழுதிக்கொண்டு இருந்த என்னை என்னத்துக்கு இப்ப கூபிட்டு வைச்சு கேட்குறிங்க அம்மா, எனக்கு உதுகள் ஒண்டும் தெரியாது,,வித்தியாவை கேளுங்க அவள் சொல்லுவாள் சிலநேரம்  "

                                   எண்டு சொல்லிப்போட்டு உள்ளுக்கு போட்டாள் . நாங்க சல்லிமுட்டியப் பார்த்தோம் .அவன் " அவள் வருவாள் பாருங்கடா " என்பது போல சைன் லான்குவேயில்  சைகை கொடுத்தான் . கொஞ்ச நேரத்தில் வித்தியா " மன்றம் வந்த தென்றலுக்கு நெஞ்சம் வர  நேரமில்லையோ ...."என்பது போல சிரிச்சுக்கொண்டு வந்தாள்.

                               நாங்கள்"  L " போல வெட்டுவமா எண்டு கேட்க்க அவள் " W " போல வெட்டினால் தான் நல்லம் எண்டும் அதில் நிறைய நிலப் பிரமாண அடர்திப் பாதுகாப்பும் , குண்டின் மிகை சோனிக் அதிர்வு ஒலிகள் நேரடியாக உள் நுழைய முடியாமை  இருக்கு எண்டும், சுவர் மதில் கட்டிடங்களுக்கு அருகில் வெட்டக்கூடாது அதுகள் இடியும் போது வாசல் மூடப்படலாம் என்றும்  ஒரு சிவில் எஞ்சினியர் போல கைகளால் பேசிக்கொண்டு , அழகான குழந்தைக் குரலில் விளக்கம் சொன்னாள்.

                              அது  அப்போதிக்கரி அண்ரிக்கும் வெட்டுக் கொத்து ரெண்டையும் தவிர வேற ஒண்டும் அறியாத மண் வெட்டி ,அலவாங்கு போட்டு மலையையும் பிளக்க  மட்டும் நல்லாத் தெரிந்த  எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவள் பிற்காலத்தில் ஒரு எஞ்சினியர் ஆக வரும் சாத்தியங்கள் நிறையவே இருந்தது. இருந்தது என்ன , அவள் அமரிக்காவில் போஸ்டனில் உலகப்புகழ் மஸ்சாஸ்சுசெட் M,I,T இல் Phd  செய்து   அப்படிதானே ஸ்ட்க்ரக்சறல் எஞ்சினியர் ஆக வந்தாள்.

                              நாங்கள் பங்கர் வெட்டுற வீடுகளில் நல்ல சாப்பாடு தருவார்கள்.சில இடத்தில காசும் தருவார்கள்.  எங்களுக்கு பாடிப் பாடி வெட்ட நேரம் போறது தெரியாது. ஆழம் இறங்கிக்கொண்டு போகும்,  அப்போதிக்கரி அண்ரி நாரிய ரெண்டு கையாலும் இடுப்போடு பின் பக்கமா சேர்த்துப்  பிடிச்சுக்கொண்டு , சல்லிமுட்டியப் பார்த்து  

                                 " நாரிக்க குத்துது..தலையும் லேசுவா சுத்திர மாதிரிக் கிடக்கு, பிரசர் குளிசை போடப்போறேன் "

                                "  ஓம், ஓம் அன்டி  ,,நீங்க  போய்ப்படுங்கோ,,நாங்க  பின்னேரதுக்கு இடையில வெட்டி ,குத்தி எல்லாம் அடுக்கி மண் பரவிப் போடுவோம் "

                                  " நீங்கள்  வெட்டுங்கோடா பொடியள்,,மண்வெட்டியள்  கவனம் ஆளை ஆள் பிராக்குப் பாத்து கால் வழிய மாறி மாறிப் போட்டுடாதையுன்கோடா,பிறகு மருந்துகட்ட இங்க மனுசனும் இப்ப இல்லை "

                                  "  ஓம்,ஓம் அன்டி  ,,அதெல்லாம் வெண்டு தருவம்,,ஜோசிக்காதையுங்கோ.மண் மூட்டையும் சைட்டுக்கு அடிச்சு விடுறோம்  "

                                    " தண்ணி விடாச்சா செவ்விழனிக்குலை ஒன்டை இறக்கிக் குடியுன்கோடா ..   " 

                                   " ஓம்,ஓம் அன்டி  , சொல்லிட்டீங்க எல்லோ  , இனி அதிலையும்  எங்கட பொடியள் வெண்டு தருவாங்கள் ,,ஜோசிக்காதையுங்கோ மரத்தை மொட்டை அடிச்சுப்போட்டுத் தான் போவாங்கள் "

                                     " சரி பின்ன  வெட்டுங்கோடா பொடியள்,  சொல்லிப்போட்டேன் , மண்வெட்டியள்  கவனம் ஆளை ஆள் பிராக்குப் பாத்து கால் வழிய மாறி மாறிப் போட்டுடாதையுன்கோடா,பிறகு மருந்துகட்ட இங்க மனுசனும் இப்ப இல்லை "

                                        எண்டு நாரியப் பிடிச்சுக்கொண்டு வீட்டுக்கு உள்ள போட்டா. போக முதல் வித்தியாவுக்கு  என்னவோ அட்வைஸ் செய்துபோட்டு போனா அப்போதிக்கரி அன்டி. அந்த அட்வைஸ் எங்களோடு கவனமா இருக்க சொன்னாவா, அல்லது ஒழுங்கா பங்கர் வெட்டுறாங்களா என்று பார்க்கச் சொன்னாவா ,  அல்லது இளனி மரத்தை மொட்டை ஆக்கிப்போடுவாங்கள் பார்த்துக்கோ பிள்ளை என்பதா என்று அறியமுடியவில்லை.

                                         நாங்கள் மேல் சேட் எல்லாத்தையும் களட்டிப் போட்டு, லோங்க்ஸ்சை முழங்கால் வரை மடிச்சு விட்டுப்போட்டு வித்தியா வி சேப் பெட்டி போல கோடு கீறிய இடத்தில வெட்டத்தொடங்கினோம். சல்லிமுட்டி சேடும் கழட்டவில்லை. நெஞ்சு பட்டனை நல்லாக் கீழ இறக்கித் திறந்து போட்டிருந்த நாலு பவுன் சங்கிலியை வெளிய தெரியிற மாதிரி விட்டுப்போட்டு எங்களுக்கு லீடர் போல ஒரு மண் வெட்டிய மண்ணில பாட்டில விழுத்திப்போட்டு அதில குந்தி இருந்தான் . 

                                            எங்களோட இறங்கி வெட்ட வரவில்லை. எங்களுக்கு எப்படி மண்வெட்டி போடுறது  எண்டு எங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச வித்தையை என்னவோ அவன்தான் கண்டு பிடிச்ச மாதிரி ஓடர் போட்டுக்கொண்டு இருந்தான். வித்தியா எங்களை  மிக மிக இயல்பாக எந்தப் பந்தாவும் போடாமல் நிண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

                                      வித்தியா  சல்வாரி  ஹக்கொபா ப்ரில் வச்ச மேல் சட்டையும், சிவப்பும் கறுப்பும் சதுரமாகக் கட்டம் போட்ட பாவாடையும் போட்டிருந்தாள். கை மணிக்கட்டு ரெண்டிலும் நிறையக் கலர் கலரா நேர்த்தி வைச்ச நூல் காப்புக் கட்டி இருந்தாள். நகங்களைக்  கூட அழகாக அளவோடு வெட்டி மஜந்தாக் கலர் நெயில் பொலிஸ் அடிச்சு இருந்தாள். 
அவள் தலைமயிர் அப்படியே மவுனராக ரேவதிபோல அலைபாய்ந்து கொண்டு இருந்தது. அப்புறம் வெறுங்காலில் செம்பாட்டு மண்ணில  நின்றாள். அந்த கால்கள் காமராசனின் ஹைக்குவின் கடைசி வரிபோல குறுனிக்கற்களோடு உருண்டு  விளையாடிக்கொண்டிருந்தது.

                                      ஒருத்தன் வன்னியில அலியன் யானை இருக்கா எண்டு கேட்டான், ஒருத்தன் பாலப் பழம் பிசுக்கு பிசுக்கு எண்டு கையில ஒட்டுமா எண்டு கேட்டான் , ஒருத்தன் இரணைமடுக்குளத்தில முதலை இருக்கா எண்டு கேட்டான். இடியன் துவக்கு எப்படி இருக்கும் என்று பித்துக்குளி   கேட்ட நினைவு இருக்கு . எங்களுக்குள் இருந்த  வன்னி என்ற காட்டுப்பகுதி பற்றிக்  கேள்விப்பட்ட சந்தேகங்களைக் கேட்க   வித்தியா  எல்லாக் கேள்விக்கும் விளக்கமா பதில் சொன்னாள் . 

                                        வித்தியா  இடியன் துவக்குத்  தான் பார்த்ததில்லை என்று சொன்னாள், இரனைமடுத் தண்ணியில் வரும் அஞ்சாம் வாய்க்கால் நீர் வழியில் தான் அவர்கள் சிறுபோகம் நெல் வயல் செய்வதாகச் சொன்னாள். மற்றக் கேள்விகளுக்கு அவள் இயல்பாக  சொன்ன விவரணங்களைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. 

                          " பேசாமல் வன்னியில போய் காட்டுக்க கட்டுத் துவக்கால சுட்டு மிருகங்களை வேட்டையாடி சீவிக்கலாம் போல இருக்கு "

                                                    என்று ஜெகதீஸ் சொன்னான்  .  வித்தியா சொன்ன விசியங்கள் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை,  மன்னாரில்  ,பண்டிவிரிச்சானில், உயிலங்குளளத்தில் ,விடத்தல்தீவுவில் காடுகளில் இருந்தவர்களும் அந்த பங்கர் வெட்டில் இருந்தார்கள் . சும்மா கேட்டுக்கொண்டு இருந்தார்கள் . 

                                       சல்லிமுட்டி மட்டும் கேட்கவேண்டும் என்று நினைத்த சில கேள்விகளை எங்களுக்கு காது கேட்காது என்பது போல நினைச்சுக்கொண்டு வித்தியாவுக்கு அருகில் நிண்டு இடை இடை அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான். நாங்கள் வித்தியாவைக் கேள்வி கேட்பது பிடிக்கவில்லை போல முகத்தை வைச்சுக்கொண்டு சல்லிமுட்டி மேல நின்றான். நாங்கள் அடிமைகள் போல கீழ இறங்கி இறங்கி வெட்டிக்கொண்டு நின்டோம்.

                                           மத்தியானப் பகல் உச்சி வெய்யில் தணல் அள்ளி எறிஞ்ச மாதிரி கொழுத்தி எறிஞ்சு கொண்டு இருந்தது . வித்தியா பக்கத்தில நின்டதோ தெரியாது நாங்கள் மண்வெட்டிய மின்னல் வேகத்தில போட்டுக்கொண்டு போறதைப் பார்க்க  போறபோக்கில நிலாவரைக் கிணறு போலத் தோண்டி தண்ணியும் கண்டுடுவம் போல வேலை போய்க்கொண்டு இருந்தது . நொள்ளைக்கண்ணா தான் கொஞ்சம் கோபமா குரலை உயர்த்திக்கொண்டு,

                                "  சல்லிமுட்டி என்னடா,,கும்பாபிஷேகதுக்கு கோபுரத்தில குடம் வைக்கிற குருக்கள் போல நிக்குறான், இவனுக்கு நாளைக்கு குளத்தடியில் அலுப்பு வைக்கிறான் பார்,,எடுப்பு கூடிப்போச்சு , தம்பி நீ தலைகால் தெரியாமல் ஆடாதை "

                                         என்று எங்களுக்கு மட்டும் கேட்கிற மாதிரி.சொல்லிக்கொண்டு இருந்தான், அதைத்தான் நாங்களும் நினைச்சுக்கொண்டு இருந்தோம் வெளிய சொல்ல விரும்பாமல். எப்படியோ கொஞ்ச நேரத்தில பித்துக்குளியும் ,

                           " டேய் பாருங்கடா , இவன்ட்ட கிள்ளிப்போட்டு படப்போற அல்லிராணி விளையாட்டை ,  சல்லிமுட்டி   ஒரு முடிவோடாதான் இதை தொடக்கிறான்டா . வித்தியா நல்ல விபரம் தெரிந்தவள் போல கதைக்கிறாள். இவனிண்ட பருப்பு இவளிட்ட நாலு நாள் ஊறவைச்சு அவிச்சாலும் வேகாது போல இருக்கு "

                                எண்டு அவனும் புறு புறுத்தான். ஆனால் சொன்னா நம்பமாட்டிங்க இளம் பெண்களுக்கு ஈஸ்ட்றோயன் ஹோர்மோன் பாயும் போது எது பிடிக்கும், யாரைப் பிடிக்கும் என்று மாட்டுச் சாணக்குறி போட்டு பார்த்தாலும் பிடிபடாது. ஏனென்றால் சல்லிமுட்டி போட்ட  அற்ப குத்துக்கரணம் எல்லாம் விவரமான வித்தியாவுக்கு பிடித்ததால் தானே பின் நாட்களில் அவள் வாழ்கையில் சாவு வரைக்கும் அவனுக்காகத் துணிந்தாள்  என்று கேள்விப்பட்டோமே.   

                                     கம்பஸ்காரி இடை இடையே கையில பேப்பர் கட்டுடன் எட்டிப் பார்த்தாள். அவளோட குட்டித் தங்கச்சி வந்து

                               " அம்மா எல்லாருக்கும் சமைக்கிறாவாம் சின்னக்கா, இவயளுக்கு இப்ப குடிக்க தேத்தண்ணி வேணுமா எண்டு கேட்டுக்கொண்டு வரச் சொன்னா  " 

                                   எண்டு சொன்னாள், பிறகு நாங்கள் எப்படிக் கிடங்கு வெட்டுறம் எண்டு பார்க்க கிட்ட வந்தாள். நொள்ளைக்கண்ணா கழுத்தில கட்டி இருந்த கறுப்புக் கயிறில என்ன தொங்குது எண்டு கேட்டாள். சல்லிமுட்டி அதுக்கு, 

                               " டேய், உங்களுக்கு தேத்தண்ணி வேணுமாடா இப்ப,, அல்லது அரைவாசிக்கு கொண்டு வந்து போட்டு சைட் எல்லாம் மட்டம் புடிச்சிட்டு மேல வாறிங்களாடா , பால் தேத்தண்ணியா, அல்லது ப்ளேன் டீ யா உங்கட அம்மா ஊத்தப்போறா, இவங்கள் என்ன குடுத்தாலும் மாடு தவிட்டுக் கஞ்சி இழுத்த மாதிரி இழுத்துக்கொண்டு  குடிப்பாங்கள்,,எனக்கு அங்கர் பால்மா  போட்ட டீ மட்டும்தான் குடிச்சுப் பழக்கம் "

                      "  ஹ்ம்ம்,,நான் போய் அம்மாட்ட சொல்லுறேன் " 

                         என்று அந்தக் குட்டித் தங்கச்சி சொல்லிக்கொண்டு போகமுதல் ,வித்தியா அவளிண்ட கையை இழுத்து 

                 " எல்லாருக்கும் பால்டீ போடச் சொல்லுங்கோ அம்மாட்ட சூட்டி "

                               என்றாள். நாங்கள் சல்லி முட்டியப் பார்த்தோம். அவன் சேட் கொலரை மேல இழுத்து விட்டு உள்ளுக்கு காத்துப் போக கையால விசிக்கிக் கொண்டு இருந்தான்.

                                 அதுக்குப் பிறகும் வித்தியா அவடத்திலதான் நின்றாள். நாங்க விட்ட முசுப்பாத்திப் பகிடிகள்  எல்லாத்துக்கும் சிரிச்சு சிரிச்சு பதில் சொன்னாள். அவள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மசுக்குட்டி மாமியையும் ,,அவாவின் செட் அப் ஆக இருந்த மாப்பிளை மாமாவையும் வைச்சு நாங்க கதைச்ச  டபிள் மீனிங் கதைகளை ,அதன் அர்த்தம் விளங்கினாலும் ரசிக்க விரும்பவில்லை போல மவுனமாக இருந்தாள். மாப்பிள்ளை மாமா யார் எண்டு கேட்டாள். ஐஸ்பழம் அதுக்கு 

                            " மாமி வீட்டில ஒரு கிளி வளர்கிறா தெரியுமா உங்களுக்கு,,ஒருநாள் அதிட்டப் போய்க் கேளுங்கோ அது சொல்லும் மாமா யார் எண்டு "

                            என்று  சொன்னான். நாங்க எல்லாருமே ஹஹஹஹஹா சிரிச்சம் . 

                               " டேய் உழவாரம்,,நீ தாண்டா இவங்களுக்கு வெடி கொழுத்திப் போட்டு கதை கிண்டி விட்டுக்கொண்டு நிக்குறாய்,,இப்ப இறங்கி வந்து உனக்கு செவிட்டில ரெண்டு போட்டா எல்லாம் அடங்கும் "

                          என்று எனக்குச் சொன்னான்.என்னை உழவாரம்  எண்டுதான் குளத்தடிக் குறுப்பில் சொல்லுவாங்கள். அதுக்கு  ஜெகதீஸ், 

                         " டேய்,,இப்ப நீ கிடங்குக்க இறங்கினா ,,உன்னைப் போட்டு மித்திசு இதுக்குள்ள தாட்டுப்போட்டு,மண் இழுத்து மூடிப் போட்டு ஓடிப் போயிடுவம்,,கரட்டி ஓணாண் போல வெருட்டாதை " 

                         என்றான், அதுக்கும்  நாங்கள்   எல்லாரும் சிரிக்க  வித்தியாவும் சிரிச்சாள். சல்லிமுட்டிக்குக் கோபம் வந்திட்டுது 

                               "  டேய்,கழுதைகள் ,,இடம் தந்தா வாயால மடம் கட்டுவியலே,,ஏண்டா உங்கட கொசப்புக்  கதைகளை இப்ப கதைக்கி ரிங்க, அதுக்குத்தானே குளத்தடி ஆ வெண்டு திறந்து கிடக்கு,,வாயப்  பொத்திக்கொண்டு  முதல் ஒழுங்கா வந்த வேலையை முடியுங்கடா,
 இவங்கள் இப்பிடித்தான் டீசென்ட் டிசிப்பிளின் தெரியாத செம்மறி ஆடுகள் போல வித்தியா "

                                                   "     ஹ்ம்ம் "

                                                  "  ,,,எங்க என்ன கதைக்க வேண்டும் எண்டு தெரியாது,, ..நீங்க குறையா எடுக்க வேண்டாம் வித்தியா  "

                                                       "      ஹ்ம்ம் "

                                    " என்ன எல்லாத்துக்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்டு மண்டையை ஆட்டுரிங்க வித்தியா "

                                         "  ஹ்ம்ம் "

                                      " இதில ஒருத்தனுக்கு இங்கிலீஸ் தெரியாது, வட்  ஸ் யுவர் நேம் எண்டு கேட்டாலே கோழி திருடுறவன் போல முழிப்பான்கள் ,எல்லாம் அரையும் குறையுமா படிச்சுப்போட்டு நிக்கிறவங்கள் "

                                                "        ஹ்ம்ம் "

                                           " ஆக்களிண்ட மூஞ்சியையும் மோரக்கட்டையையும் பாருங்கோ வன்னி உழுவன் மாடுகள் போல "

                                               "  அப்பிடி சொல்ல வேண்டாம்  பாவம்,,அது "

                                                 "  நான் தான் இந்த பிளானை போட்டுக்கொடுத்தேன்,,இல்லாட்டி இந்த பங்கரையும் உடையார் வளவில் நிக்கிற கோணல் புளியமரம் போல தான் வெட்டுவாங்கள் "

                                           "    ஹ்ம்ம் "

               
                                " என்ன எல்லாத்துக்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்டுறிங்க   இவங்கள் இப்பிடித்தான் டீசென்ட் டிசிப்பிளின் தெரியாத செம்மறி ஆடுகள் போல வித்தியா "

                                                           என்று பத்தடி எழும்பிப் பாஞ்சான். வித்தியா ஒரு ரியாக்சனும் கொடுக்காமல் அதுதான் அவளோடு பிறவியிலேயே ஒட்டிக்கொண்டு வந்த  ஸ்டைல் போல கேட்டுக் கொண்டு இருந்தாள். ஏன் சல்லிமுட்டி பவுசு விடுறான், தன்னை முன்னிறுத்திக் கொண்டு இருக்கிறான் . முக்கியமாக எதுக்கு அப்பாவி போல முகத்தை வைச்சுக்கொண்டு வில்லங்கமான கேள்விகள் கேட்கிறான் எண்டு சந்தேகமா இருந்து இருக்கலாம்.

                               அவள் அதை நினைவு வைச்சு இருவது  வருடங்களின் பின் டோஹா கட்டார் ஏர்போட்டில் அவள் ட்ரான்ஸ் அட்டிலாண்டிக் பாதையில் கட்சானியா  லுப்தான்சா விமானம் ஏறக்காத்திருந்த  ட்ரான்ஸ்சிட்  லவுஞ்சில், விளாடிமீர்  மொஸ்கோவா  போகும் பிளை வித் எமிரேட்ஸ்க்குக் காத்திருந்த என்னை தற்செயலாகக்  கண்ட போது, காதல் எங்கே அவளை அந்த அப்பாவி முகத்தை நம்பிய போது விழுத்தியது என்று அழுது அழுது சொன்னபோது  அதையும் சொன்னாளே.

 .................வாழ்க்கை போலத்தான் ஒரு கதையும் எங்கே தொடங்கும் எப்படி முடியும் என்று சொல்லவே முடியாது. நாசமாப்போன இந்தக் கதை எங்கள் ஊரில் பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும் அம்மச்சியா குளத்துக்கும் நடுவில் தொடங்கி வட அமெரிக்காவில் இருக்கும் போஸ்டன் ,மசாசூசெட்,நியூ ஜோர்க்,பிலடெல்பியா  என்று அலைந்தது. ஆனால் வலிகள் என்னவோ ஒரே மாதிரித் தான் வாட்டி எடுத்தது . ஒரு குளக்கரையில் உருவான காதல் ஏன்  ரெண்டு கோடுகள் சந்திக்காத பாதையில் உள்ளங்களைத்  திசை மாற்றியது என்ற   பயணத்தை..............

,,,,,,,,,,,,,,,,,தொடராக எழுதுகிறேன்.....
.
.
                       
                                                                 

Enkeyum Eppothum Sankiitham ..M.S.Vஒரு "சிம்பிள்" கதை! ஒரு இசைகுழு இந்தியாவில் இருந்து மலேசியா போய் இசைநிகழ்ச்சி செய்ய,அந்த இசை குழுவின் கிட்ராருக்குள் ஒரு பெண், ஒருவித நிர்பந்தத்தால போதைவஸ்து வைத்து கடத்த,அதே பெண்ணை அந்த குழுவின் முதன்மைப் பாடக்ர் மலேசியாவில காதலிக்க, அந்தப் பெண் கான்சர் இருப்பதை மறைத்து காதல் செய்ய,கமரா மலேசியா ,சிங்கபூரை 360 பாகையில் சுழண்டு படம் பிடிக்க, நாங்கள் எல்லாம் தியேட்ரில் "ஆ " எண்டு வாய்பிளந்து பார்க்க, வெள்ளி திரைகள் கிழிய கிழிய உலகம் எங்கும் ஓடியது "நினைத்தாலே இனிக்கும் "!
                                   இந்த படத்தில காமடிநடிகர் யாரும் இல்லை ,ஆனால் இதில நடித்த எல்லாருமே காமடி பண்ணுவார்கள். " Bodyய இந்தியா எடுத்திட்டு போறிங்களா ,இல்லை இங்கே மலேசியாவில அடக்கம் பண்ணபோறிங்களா " எண்டு பூர்னம் விஸ்வநாதன் சொல்லும்போது தியேட்டர் அத்திவாரமே அதிரும்!
                                      "இது ஒரு தேனிசை மழை"அப்படித்தான் அப்போது படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. படத்தின் முடிவு கூடஜெயபிரதா சாகிறதை காட்டவில்லை K.பாலசந்தர் ,பதிலாக , "சிம்பலிக்கா " ,ஜெயபிரதா ரத்தவாந்தி எடுக்க, "இனிமை நிறைந்த உலகம் இருக்கு" பாடலைபாட படம் முடியும் ! அருமையான பாடல்கள் படம் முழுவதும். மெல்லிசை மன்னர் M.S.V ,கவியரசர் கண்ணதாசன் கூட்டணி பின்னிஎடுத்த படம் !
                                அந்தப் படத்தில் "ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்" எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய சிங்கப்பூரின் வீதிகளில் போதைமருந்து செலுத்தப்பட்ட பெண்ணாக ஜெயப்பிரதா ஆடிப்,பாடிய பாடல் சூப்பர் "சர்-ரியலிசம் ".இந்தப் படத்தில் தமிழ்த்திரையுலகத்தின் பெரும் பெண்பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வாணி ஜெயராம், எஸ்.ஜானகி, நால்வரும் ஜெயப்பிரதாவுக்கு இந்த ஒரு படத்திலேயே பாடியிருக்கிறார்கள். இப்படியொரு வாய்ப்பு வேறெந்தக் கதாநாயகிக்கும் வாய்த்திருக்கிறதா என்று தெரியவில்லை!....
                              கவலைகள் மறக்கு வைக்கும் உல்லாசப் பாடல்களின் கவிதைத்தொகுப்பு "நினைத்தாலே இனிக்கும் " அதை இப்ப நினைத்தாலும் இனிக்கிறது...,