Friday, 1 June 2018

திமிங்கலங்களின் நிழற்படங்கள் !

 வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக  வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்க    எந்தவிதமான பொறுப்புகளும் இல்லாமல் எதயும் எழுதலாம் என்று  சோஷல்மீடியா கொஞ்சநாளா ஒரே கலவரம்,  போராட்டம் , எழுச்சி , படுகொலை என்று அமர்களமாகப் போய்க்கொண்டு இருந்தது,  அனைவருடனும் நட்பாகப் பழகி,  கைகுலுக்கிய முகநூல் நட்புகள் , ஏதோ வானத்தில் இருந்து குதித்த நீதிமான்கள் , நியாயவான்கள்  போல பிரிந்து நின்று வாதாடிக் கொண்டார்கள் .


                                      இந்தமாதிரியான விசியங்களில் எனக்கு சுத்தமாக அறிவு என்பது இல்லை.  அதனால சும்மாதன்னும்  நாலு இடத்தில செய்திகளை சுரண்டி எடுத்து அவிச்சுவிட்டாலும் , அரசியல் விமர்சனம் என்பது  ஒரு  எழுத்துக்கலை, அது எனக்கு கைவராத கைங்கரியும் , முருங்கை பருத்தால் தூணாகுமா?  அதனால சும்மா மூக்கை நுழைக்காமல் மவுனமாக இருக்கவேண்டி வந்தது .


                                                 டக்டரால விழுந்தவனை லேன்ட்மாஸ்ட்டர் ஏறிமிதிச்சா மாதிரி கும்மாயிங் கும்மாயிங் என்று குளறியடிச்சு புலம்பெயர் தமிழ்க் குஞ்சானுக்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். நம்ம நாட்டு விடுதலையையே ஒற்றுமையாக நின்று வெல்லமுடியாமல் நாசமாக்கிய இந்த ஏழறிவு  அறிவுஜீவிகள் எதுக்காக இந்தக் குதி குதிக்கிறார்கள் என்று  வாசித்தபோது மன உளைச்சல் தான் வந்தது அதிலிருந்து   கவிதைகள் எழுதும் உட்சாகமே காணாமல் போய்விட்டது.


                                                 சரி இந்த இடைப்பட்ட  காலத்தில்   ஏற்கனவே எழுதியவைகளை தொகுக்கும் முயட்சியில்  இந்த எழுத்தகு முயட்சிகள் முன்னர் ஆங்காங்கே  நிலைத்தகவலில் எழுதியபோது சிதறியவைகள்


கொஞ்சம் 
பழக்கமானதுதான் 
கரடு முரடான பாதை,

கொஞ்சம் தன்னும் 
நெருங்கிவர மறுக்குது 
புறநகரம் ,


நலம் விசாரிப்புகளற்ற
இந்த ஊரில்
அடிக்கடி
கைகுலுகிச் சிரிக்கும்
சுமுகமான நண்பர்களில்லை


நீயும்
இந்த ஊர்தானேப்பா என்று
குளிர்காற்று
குத்திக்காட்டினால்
மந்த புத்திக்காரன் போல
மவுனமாயிருப்பேன் !


.............................................................

விறைப்பிழந்து
உருகியுருக்குலைந்து

வழிந்தோடிகொண்டிருக்கும்
பனிப்பாளங்கள் !


முன்னுக்கு
வேலைக்கமர்த்திய 
பொறுப்பாசிரியை !


பின்தொடர்ந்து
எறும்புகள்போல .
தூங்குமூஞ்சிக் .
குழந்தைகள்
நிதானமான நடையில்

அண்ணளவான
முதுகுச் சுமைகளோடு
வரிசைகட்டிப்போகிறார்கள் !


ஒரு தடவை
கீழே விழுந்தெழும்பினால் .
இன்னொரு முறை
எங்கே சறுக்குமென்று
பாடம் சொல்லிக்கொடுக்கிறது
உறைபனி !


.................................................................

பூனைகளை
அதிகம் நெருங்குவதில்லை
அவைகளின்
தும்பு மயிர்
உள்நுழைந்தால் ஒவ்வாமை ! 


அவைகளின்
சவ்கரியமனப்பான்மையில்
பொறாமை !


அவைகள் போல
முன் எச்சரிக்கையாக
நடக்கமுடியாதென்பதில் ஈகோ !


ஒத்துக்கொள்கிறேன்
கொடுமை என்னதெரியுமா ?


ஒருவருக்கொருவர்
பொய் சொல்லிக்கொள்ளமாட்டோம்
என்றவை
சத்தியம் செய்துதரச்சொல்லும்
நேர்ப் பார்வையில்த்தான்
நான்
எரிந்து விடுவேன் !


......................................................................

வானத்தில் மிதப்பது போல
மாலைப் பொழுதுகளில்
நன்றாக
அலங்காரம் செய்தாய் ,

நான் 
வழியனுப்பிவைக்க
நுழைந்தபோது
பார்க்க விருப்பமில்லாமல்
சுவரைப் பார்த்து
விழி திரும்பிக் கொண்ட
முகமில்லாத
பொழுதுகளில்
என்
பகல்கள்
இரவாகிவிடுகிறது !


..................................................................


நம்பவைத்துவிடுகிற
மொழியில் 
ஒத்துக்கொள்கிறேன் 
இப்பெல்லாம் 
அடிப்படையில் நானொரு

வாயிருந்தும்
வார்த்தையில்லாதவன்

தூங்கிவழியும்
முகத்தை வைத்துக்கொண்டு 
என்
வியர்வையோடு நடந்து

கனவில்க் கடக்கும் வார்த்தைகள்
என்
வாழ்வின் மிகத்தனிப்பட
எனக்கே எனக்கான

அனுபவம்.!

.......................................................................

தனிமைத்துணையை
இழுத்துக் கொண்டு
திசையறியா அலைச்சலில்
எப்போதோ மறைத்துவைக்கப்பட்ட
ஆத்மாவின் ஆழத்தில்
சடாரென திறந்துகொள்ளும்
பழைய அனுபவம் .
அதுக்குள்ளே
உலகத்தின் ஊர்வலம்அபூர்வமான காட்சிகள்
ஆவணப்படுத்தப்பட்ட மாதிரி உணர்கிறேன் .
நான் பார்க்கும் உலகத்தைதான்
நீங்களும் பார்கிறீர்கள்,
ஆனால்
நானதை வேறுவிதமாகப் பார்ப்பேன்
அதனால் முதுகின் பக்கம்
உலகமகா பொய்யன் என்கிறீர்கள்


..............................................................................


நீங்கள்
போகவிரும்பாத பாதை
உங்களுக்காகவே

நான்
பயணிக்கிறேன்
என்

வழிகளின் முடிவில்
சென்ற நூற்றாண்டின்

தீர்க்கதரிசியொருவரை
தற்செயலாகச் சந்திப்பதை
தொடர்புறுத்திப் பார்ப்பது
அலாதியான அனுபவமாக இருக்கலாமோ ?
உண்மையிலேயே
அதைத்தான் தாங்கமுடியவில்லை,,


.......................................................................
ஒவ்வொருநாளும்
அறிமுகமின்றி
மோசமாகிக்கொண்டிருக்கும்
தனிமை !
வெளிச்சங்களிலும் 
துணிச்சல்
போய்விடுகிறது !
கனவொன்றை
நேரில் பார்ப்பது போல
அங்குமிங்கும்
நடந்துகொண்டிருக்கும்
நினைவு !


.................................................................

யாரும் 
யாரோடும் 
காத்திருப்பிலும் 
கதைக்கவில்லை ,
உணர்வுகளில் 
சேகரித்து வைக்கவும்
நினைவிடுக்கில்
இடம் பிடிக்கவில்லை
கவனமாகப் பட்டியலிடப்பட்ட
இணக்கமுள்ள
பரஸ்பர உடன்பாடுகள் !
சென்றடைய வேண்டிய
வெகுதூரத்தில்
இன்னொரு
அணுகக்கூடிய புகலிடம் !
ஆனாலுமென்ன
நாலு மணித்தியாலம்
ஒரேயிடத்தில்
நான் !


..................................................................

அசௌவ்கரியமான 
திணிப்புக்களிலும் 
மிகவும் மென்மையானவள், 

பிடித்தமான
கவிதைகளை 
உறுதிப்படுத்துவாள் ,
வடிகட்டிகளைச்
சமாளிக்கத் தெரிந்தவள்,


விதம்விதமாக
மின்னஞ்சல்கள் எழுதுவாள்,
குறிப்பாகத்
திமிங்கலங்களின் நிழற்படங்களில்
மகிழ்ந்துகொள்வாள்,


என்
வெளிப்படையான எழுத்துப்பிழைகளை
நகைச்சுவையாக்குவாள்,
என்ன காரணமாக
இருக்கக்கூடும் ?


தலையசைத்துவிட்டுக்
கடந்து செல்ல
எளிமையானவற்றைக்
கடினமாக்கி
அர்த்தம் புரிந்துகொள்கிறாள் ?


......................................................................

இரவு
நேரத்தில்த்தான்
வேதனைத்தரும்
மன உளைச்சலாகிறது
இருட்டு !


இன்று
இறந்து விடுவது போலவே
தூங்கமுடிந்தால்
அதைப் பற்றி
நாளைக்கு உங்களிடம்
நிறையவே
கதைக்கப்போகிறேன் !


................................................................

சில்லறையான
சிரிப்புகள்
பரிமாறப்பட்டும்
முக்கிய காரணத்தை பற்றி 
அவளிடம்
கதைத்துமுடிவெடுக்க
இன்னும்தான்
தைரியம் வரவில்லை.!


நிலமையைச் சமாளிக்க  
நம்பிக்கை இல்லாமல் 
முடிவு குறித்த 
வேறு நல்ல  பதில்கள்
இருக்கிறதா ?
எனக் கேட்டேன். 

நிற்கும் இடத்தில் நின்ற 
வழக்கமான பதில் !.

ஒரேயொரு  
சுவாரசியத்தை  எதிர்பார்த்தேன்!

ஈர்ப்பு அவ்வளவுதானா...?
முன்னதை விட
அதிகாரமாகத்தானிருந்தது
முகம் ,
யூகித்திருப்பாள்
என்றும்தான் நினைக்கிறேன்!


............................................................

நினைப்பதைப் போல
என்னைத் தவிர
வேறுயாருமே
ஏறெடுக்கவில்லை !
அசைக்கமுடியாத 
தன்நம்பிக்கை
அவளுக்குள் ,
சம்பிரதாயமில்லாத
பாதையில்
வாழ்வு என்ற படிமத்தை
ஒரிரு வரிகளில்
எழுதிவைத்துவிட்டு
இறப்பைக்
கடந்துவிட்டாள் !.


............................................................

விவாதத்திற்குட்படுத்தி
அதில்
எதிர்பார்க்காமலேயே
நுழைந்துவிடும்
எதை ரசிக்க?


அந்த
வார்த்தைகளின் அழகையா?
அதட்குழிறங்கும்
அர்த்தங்களின் அசைவையா ?
அதட்குரிய
சம்பவக் காட்சியையா ?
அதன்
நகர்வு புரிபடாத
மறு கணத்தையா?


நமக்குள்
உருவாகிக்கொள்ளும்
ஒரு வகையான
குழப்பம்,
இறுகப்பிடித்து
ஆளையே உலுக்குவதுபோன்ற
உரையாடல்கள் !


......................................................................

கால்களைச் சுற்றி
விடைபெறுகிற
பனி
பொழிந்து கொண்டிருக்கு !


பறவையின் 
பாரமில்லாத
உதிர் சிறகு
சுழன்று கொண்டிருக்கும்
குளிர் காற்றில்
பாதை தேடுகிறது !


குறுக்கும் நெடுக்குமாய்
நிழலாக நகர்ந்து
விளிம்புகளைக் காட்டுது
துருவ வெய்யில் .!


தனக்குரிய இடத்துக்குப்
பிரவேசிக்கும்
கடைசிப்
பயணமென்பது
எவ்வளவு பெருமைக்குரியது !


.........................................................................

கோட்டோவியம் போலவே
தீட்டிச்சென்ற
அன்றைய
பகல் முழுவதிலும்
மௌனம்
அவஸ்தை போலிருந்த
அந்தக்
குறிப்பிட்ட தருணம்
உனக்கு
நினைவில்லையென்றாய் !


அமைதி
மனதுக்குள்ளிருந்து
அலையடித்துக் கொண்டிருந்த
இரைச்சல்
எப்படியிருந்ததென
அன்றைய
இரவுமுழுமைக்கும் .
எனக்கு
நல்ல நினைவிருந்தது . !


..............................................................

என் 
ஞாபகத்தில் தங்கியிருக்கும் 
மொழியறிவு 
சரிதானாவென்று பார்க்க 
அந்தப் 
புத்தகத்தை
வேகமாகத் திருப்பினேன்,


ஒரு
புதையலைப் பார்த்ததுபோல
சிக்கிக்கொண்ட
ஆழ்மனம் தாவியது.!


சொல்லாடல்களின்
பரவசத்தில் திளைத்து
தொட்டு நகர்த்தி
ஒரே மூச்சில் படிக்கமுடியவில்லை . !


பாதியில் வெட்டப்பட்ட,
பழைய சம்பவத்துக்குத்
திரும்புவது போலிருந்தது!


நினைவழிவுக்கு
எதிரான
மனச்சாய்வுகளுடன்
இனியெப்போதும்
போராடவேண்டியுள்ளது.!