Tuesday, 15 October 2019

மூன்றாவது மழை !

அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரச்சொற்கள் போன்று ரகசியமாக கவிதைக்கென்று எந்தக் கவிதைமொழியும் இல்லை. சாதாரண சொற்களே சரியான இடத்தில வந்து அமர்ந்துகொள்ளும் போது இன்னொரு படி மேலேறிவிடலாம் சொல்லவரும் செய்தி.    


                                                                       துயரங்களோடு பொறுமையையும்    அசைத்துப் பார்த்துக்  கொண்டே இருக்கிற வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்துக்குப் பின்னாலும் மேஜிக்கல் ரியலிசம் போல ஒரு அபத்தமான மனவெளிச்சி பலசமயங்களில் நம்மை அறியாமல் சேர்ந்துகொள்ளும். அதை அப்படியே எழுதாமல் கொஞ்சம் வெட்டிக் கொத்தி சுருக்கமாக்கிப்  படிமவித்தைக்காட்டினால் சற்றியலிஸ்ட் வகைக்கவிதைகள் எல்லாருக்குமே சாத்தியம்தான்  !

                                                                                   மென்மையான   மொழிக்கு மிக  அருகில் இருக்கவே விரும்புகின்றன நவீனபுதுக் கவிதைகள் . புதுக்கவிதைகளுக்கான   கவிவிதிமுறை என்று  இதுவரை  கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு விதிகள்  என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்? எண்ணங்களை  ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றதுக்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவைதான் .


                                                                         திறமை  சார்ந்த ஒரு விடயம் எழுதிக்கொண்டிருப்பது . அதை அதிகம் ஈடுபட  திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு புதுமுயட்சி எழுத்தும் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது.


                                                                           இந்தக் கவிதைகள் முகநூல் சுவரில் எழுதிப்பதிவிட்டவைகள் .மின்னேறிஞ்சவெளியில் தொகுத்துப் பகிர்ந்துகொள்கிறேன் பகிந்துகொள்கிறேன்  !


*
வீடுகளின் தாழ்வாரங்களில்
மாட்டிக்கொண்டிருந்தது
கோமேத நிறத்தில்
இருட்டு !
ஆத்மாவின் 
ஆர்பரிப்புகளில் 
நினைப்பதைத் தெரியப்படுத்தும்
பேரமைதி !
சிறு கூட்டமாக 
பறவைகள் பறந்தபோது
தியானித்துக்கொண்டிருந்த
தனிமரம்
இலைகளை அசைத்துக்கொண்டது !
கிசுகிசுத்தபடி
எவ்வளவுநேரம்
இதையெல்லாம் பார்த்தபடி
காத்திருந்ததென்று தெரியவில்லை
கதவிடுக்கில்
வெளிச்சம்  கசிந்தபோது
உள்நுழைந்துவிட்டது
காற்று !


*


நினைவுத்தரவு
சொல்லிய விவரங்களுடன்
அந்தத் தோற்றம் ஒத்துப்போனது !
இள நரை
ஐம்பதுகளின் ஆரம்பக்கட்டம் ,

ஆனாலும்
இளமையின் தடயங்கள் ,
அடையாளம் தெரிய
கண்களில் அசாதாரண அமைதி,
அம்சமாகத் தேர்வுசெய்யும்
பெண்மயிலின் நீள்கழுத்து ,
எல்லாத்துக்கும் பொதுவான
புன்னகை !
வறண்டுபோன
ஞாபக மடிப்புகளுக்குள்ளிருந்து
பெயரை உடனடியாக மீட்கமுடியவில்லை !
போதுமான இவைகளுடன்
தயக்கமில்லாமல்
பத்துநொடியில்
பழைய முகத்தைப் புதிப்பித்து
அறிமுகம் செய்திருக்கலாம் !
ஏனோ தெரியவில்லை
பெரும்பாலான முனைப்புகள்
அந்தக் கட்டம்வரை போவதில்லை !
அன்று அப்படியே
தூரநின்று விலகிவிட்டேன் !*


ஏதொவொருவிடத்தில்
சிதறிவிடுவது போலிருக்கும்
தனிமைக்குரலின்
தாய்மொழி எதுவென்று தெரியவில்லை !
காற்றைப் பிழிந்துகொண்டு

மழையின்
நதிநீர்க்கோலங்கள் விழுந்துகொண்டிருந்தன !
ஒரு குடைமரத்தின் கீழே
நிசப்தத்தில் ஒதிங்கியிருந்தேன் !
ஆக்ரோஷமான
பெருங்காட்டின் நீர்வீழ்ச்சி போலவே
யாருமற்றபோதும்
இரைச்சலாகக் கதைத்துக்கொண்டிருந்தது
அசை நேரம் !
வானமேகங்கள் தெளிவடைந்து
மென்மஞ்சள்த் தீற்றுகளுடன்
சமாந்தரமாக
உடன்பாடாகிக்கொண்டிருக்க
மழைத்துளிகள்
இப்போது மெலிந்துகொண்டிருந்தன !
மூடுதிரை விலக்கி
தலைநனைத்து நடைதொடங்க
அப்போதும்தான்
அனுமதியில்லாமல்
அருகே வந்துகொண்டிருந்தது
இன்னுமொரு அமைதிக்குரல் !*


நிச்சயமின்மை
இவ்வளவு தூரம் வந்தபின்னும்
தணியவில்லை !!!
அரைகுறையான
அந்தரங்க உணர்வு போல

சலனமுறும் கேள்விகள் !
அதே
சூழ்நிலைகள்தான் !!!!
வேறுபடுகிறது
ஆழப்புரிதலிலும்
வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிற
சிந்தனை அடுக்குகள் !
தரிசனங்களிருக்கும்
ஒரு சமாதிநிலையின்
நீட்சியாக இது இருக்கலாமோ ?
சிலர் நொறுங்கிவிடுகிறார்கள்.
சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.
சற்றே ஓய்ந்ததுபோல தோன்றிய தருணம்
சொல்ல முயன்று
தோற்றுபோகிற துயரம்
அதுவுமொரு சுகம்தான் !*


சரியாகக் கணிப்பிடமுடியவில்லை
எவ்வளவு நிசப்தத்தை
அடைகாத்துவைத்திருந்தேனென்று !
அனுதாபத்துடன்
மன்னிப்பை முன்னிறுத்தி 

விழிக்கரையில் புன்சிரித்து
கைகுலுக்கும் போதே
பரஸ்பரமாக
ஏதோவொன்று கசிந்துவிட்டது !
அவளின்
இளம்பழுப்பு முகம்
திரண்டெழுகிறதைத் தவிர்க்கமுடியவில்லை!
பார்த்த சந்தர்ப்பத்தில்
ஒரு காரணத்துக்காக
வேண்டுமென்றதை மறைத்து
மீண்டு உச்சரித்து
தாழ்வுணர்ச்சியை வெற்றிடமாக்கியிருக்கலாம் !
உண்மையென்னவோ
இன்னொரு காரணத்துக்காக
சொற்களை வெளியேற்றிவிடமுடியவில்லை !
குற்றஉணர்வு எப்போதும்
மனசாட்சியின் மேல்மட்டத்தில்
நல்லவேளை
வார்த்தைகள் மனதிலேயே !*


பெயருக்கு ஏற்றபடி
ஒன்றிரண்டுகளைத்தவிர
மற்றெல்லாம் பிரமிப்பு !
ஆழ்கடலிலும்
ஆழமான கம்பள விரிப்புகள் ,

நீர்க்குமிழிகள் பிரகாசமான
தொங்குவிளக்குகள்,
அலங்கார மரச்சட்டங்களில்
ரம்மியமான வர்ணத்தெளிப்புகள் !
எதிர்பார்த்துபோலவே
புராதனமான நுண்கலைக்கூடத்தில்
அழுத்தமான
செல்வச்செழிப்பின் ஆக்கிரமிப்பு !
நூற்றாண்டுகளின்
காலாவதியான செழிப்பைக் காட்டிய
உலகியல் லவ்கீயத்தினுள்ளும்
சிலநேரங்களில்
விரோதமான விதிமுறைகளும்
புகுத்தப்பட்டுவிடுகின்றது போலிருந்தது
ஒரு
அறைக்குள் நுழைந்தபோது
சுவரின் உயரத்தில்
மனிதத்தின் தொடர்ச்சியாக
அன்னை தெரஸாவின் ஒளியுருவ ஓவியம் !*


நாய்க்குட்டியுடன் உரையாடும்
ஒரு குழந்தையின்
பிரியமான குதூகலங்கள் !
மொழியின் முதல் சொல்லை அறிந்ததுபோல
வாலாட்டுகிறது நாய்க்குட்டி,

அதைத் தன்மொழியில் சொல்லிப்பார்த்துக்
கண்களைப் பரவசமாக்குகிறது,
நேரிடையாகவோ
அல்லது ஏதேவொன்றுடன் தொடர்புபடுத்தியோ
உள்வாங்கிக்கொள்கிறது ,
துள்ளிக்குதிக்கும்
ஒவ்வொரு நிமிடத்திலும்
அதன் எதிர்வினைகள்
குழந்தையின் சந்தோஷத்திலே குவிக்கப்படுகிறது .
ஒரு வயதானவர்
அநாவசியமான அந்நியோன்னியத்தை மாட்டிக்கொண்டு
அச்சமுறுத்தும் பாணியில்
நிகழ்சம்பவத்தை உற்றுப் பார்க்கிறார் !
எதிர்பாரத இடறலில்
நாய்க்குட்டி
பின்னம் கால்களுக்குப் பின்வாங்கிவிடுகிறது !
நாய்க்குட்டி
நினைத்திருந்தாலும் நினைத்திருக்கலாம்
ஒருபொழுதிலும்
குழந்தை
பெரியவளாய் வளர்ந்துவிடக்கூடாதென்று !*


காலடியோசையில்
கதவுக்குப் பின்னால்
யாரெல்லாம் இருக்கிறார்கள் ?
மறுபுறமாக மர்மமாகவிருக்கும்
எதிர்பார்ப்பே ...

காத்திருப்பை நகர்த்துகிறது !
அவ்வப்போது
காரசாரமான உரையாடலில்
ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வருகிறது
விவாதிக்கும் சத்தங்களும்
வேறு சில ஓசைகளும் !
அந்தரங்கத்தை மறைக்கும்
திரைச்சீலை நிழலுருவங்கள் !
இருட்டுவதுக்குள்
யாரவது வெளியே வந்தாகவேண்டும்
அல்லது
யாருமேயில்லையான மனப்பிரமையா ?
சலிப்பாகி
அந்தப்பக்கம் பார்க்கவேயில்லை !
இன்னொரு முறை
நிதானமாகக் கவனித்தபோது
ஒருவிதத்தில்
காலத்தைக் கடந்துவிட்டதைப்போல
எல்லாம் அந்தந்த இடங்களில். !*


அமர்ந்திருந்தவர்
முன்னும் பின்னுமாக
ஆடிக்கொண்டிருந்தார்.
பலவிதமாக உடம்பை வளைத்தபடி
உந்துருளும் பிடிவளையத்தை இயக்கி

சரிவான இறக்கத்தில்
நிதானம்தவறாமல் இறங்கினார் !
காலத்தின் எச்சசொச்சமாக
விதித்துவைக்கப்பட்ட
முஸ்டிகளின் முடிவிடத்தில்
அதீத தன்னம்பிக்கை !
நெருங்கிக் கவனித்தபோது
காற்றுப்போன பலூனைப் போல
முகச்சுருக்கங்கள் !
மௌனத்தால் தோற்கடிக்கப்பட்டு
மென்மையாகியிருந்தது
கால்கள் இல்லாத மனிதனின்
கண்கள் !
மறுபடியும்
ஏமாற்றமடைய விரும்பவில்லை.
இரண்டில் எது
என்னை மிகவும் அச்சுறுத்தியதென்று
தீர்மானிக்க முடியவில்லை.!*


வழக்கத்தைவிட
அசந்து கிடக்கும் விழிகளில்
நேரிடையாகவே சிக்கிக்கொள்ளும் பின்னிரவுகள்
மெதுவாகிவிட்டது போலிருக்கிறது !
உள்ளீடுகளைப் பாதிக்காதவரையில்

அதைப்பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமில்லை,!
விழிப்பு வரும்போது
தரையோடு சரியாகத் தொடர்புகளின்றி
நுழையமுடியாத ஓரிடத்தில்
மிதந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு !
அதையும் சமாளிக்கலாம் !
மூச்சொலியில்
உறக்கப் பேரிரைச்சல்கள்
அது நேர்மையாகவே பயமுறுத்துகிறது,
நடுநெஞ்சின் மீது அழுத்துவதுபோல
அருவருப்பான முகச்சுளிப்பில்
காற்றில் அடித்துப்போட்ட கனவுகளிலிருந்து
வியர்த்துக்கொட்டி முழித்துக்கொள்ள
நகர்ந்துகொண்டிருப்பதன் வேகம் தெரியாமல்
அசைந்துகொண்டிருக்கிறது காலம் !*


சொற்களால்
எண்ணங்களை வெற்றிடமாக்குவதைப்பற்றி
மறுபடியும் மறுபடியும்
திருத்தி எழுதிக் கிழித்துப்போட்டது
ஒரு மணித்தியாலம் போலிருந்தது !

விசித்திர உருவத்துடன்
உள்ளபடியே ஒப்புவிக்க
மொழிக்கு என்னோடு என்ன விரோதம் ?
முறைத்துக்கொள்ளும்
வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து
எழுதக் கற்றுக்கொள்ளும்
என் மீது நானே எரிந்து விழுகிறேன் !
என்னைப் பார்க்க
எனக்கே பாவமாக இருக்கிறது !
வார்த்தைகள் தரும் அர்த்தங்களை
சுயத்தாலே நிரப்பமுடியாதபோதில்
அதற்குள் கனமே இல்லாமல்ப்போய்விடுகிறது !
ஒத்துக்கொள்கிறேன்
நேசமுள்ள வாசனைகளையோடு
தேர்ந்தெடுத்து வைத்திருந்த
பிரியமான வார்த்தைகளை சொல்லிப்பார்க்க
ஒரு நிமிஷம்தான் எடுத்தது !*


மயக்கங்களைத் தொலைத்த
மேகங்கள்
சும்மா உலாத்திக்கொண்டிருந்தன !
சட்டென்று
விழித்தெளிம்பித் தலையாட்டியபடி

தனக்குரிய
தன்னியல்பில் பின்தொடர்கிறது
பனிக்காற்று,
வெயிலில் பழுப்பான
நடுப்பகலைப் பார்த்த
வெண்மையான மாலைநேரம்
சாம்பல்நிறமாக
எளிமையாகவிருக்கும்
அடிமனதுக்குள் விழிப்புணர்வு !
குழந்தைத்தனமாக
தனக்குரிய பின்தளத்திலிருந்து
காலநேர எல்லைகளை விரித்துகொண்டு
ஏகாந்தப் பெருவெளி !
அழுத்தமாகிக்கொண்டிருக்கும்
இன்னொரு சாயங்காலம்,
இன்னொரு பூங்கா.*


பொழுது போகாத நேரத்தில்
இப்படித்தான்
வாசல்களைத் திறந்துவைக்கின்றன
திவலைத் தூறல்கள் !
ஒரு ஓவியத்திலிருந்து

நிறங்கள் கரைந்து வழிவதைப்போல
தனக்குள்ளே சிலிர்த்துக்கொண்ட மின்னலுடன்
அடுத்த காட்சிக்கு விரைகிறது
சாதாரணமானவொரு மழைநாள் !
ஒட்டிப்பிறந்தது போல
அசாதரணமாக இரண்டு மழை ஒரேநேரத்தில் !
முதல் மழையின்
இடிமுழக்க நொடியில்
என்னைச் சுற்றி நடந்தவர்கள்
குடை விரித்து ஒதுங்கிக்கொள்ள
மழை அவர்களை விலத்திவைத்தே பொழிகிறது !
ரெண்டாவது மழை
எப்போதும்போல்
ஏதோவொரு யோசனையுடன்
ஏதோவொரு கனவு கண்டுகொண்டு
நடைவழியை சுத்தமாகக் கழுவிக்கொண்டிருக்கிறது !
நான்
நனைந்து கடந்துகொண்டிருக்கிறேன் !
எதிர்பாராத திருப்பத்தில்
மூன்றாவது மழையும் சேர்ந்துகொள்கிறது
அது பிரத்தியேகமாக
எனக்குளே பெய்கிறது !*