Sunday, 24 May 2015

உயிர் தேடும் ரோசேத்தா ..

சென்ற  ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் பூமியில் நாங்கள் " பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால்.. " என்று பாடிக் " கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந்து " திருவெம்பாவை பாடும் நேரம் விண்வெளியில் ஒரு உலக அதிசயம் நடக்கப்போகுது என்று எதிர்பார்த்தது,,,கடைசியில் வெற்றிகரமாக நடந்தது. 

                                பில்லியன் மைல்கள் வின் வெளியில் இருந்து , இருள் வெளிகள் தாண்டி வரும் அந்த மில்லியன் வருடங்கள் பழமையான செய்தி இன்றை வரை நாங்கள் நம்பும் இந்த உலகத்தில் முதல் உயிர் எங்கிருந்து வந்தது என்ற பல அறிவியல்ப் புத்தகங்கள் சொல்லும் உண்மைகளைப் பிரட்டிப் போடலாம், சமய புத்தகங்களின் நம்பிக்கைகளுக்கு ஆப்பு வைக்கலாம் இந்த வால் வெள்ளியில் இறங்கியுள்ள செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்கள். 

                                எங்களின் சித்தப்பு,பெரியப்பு பிரபஞ்சத்தில் வேற ஒரு கிரகத்தில் இருக்கலாம், அத்தை மகளும்,மாமன் மகளும் அன்றமிடா கலக்சியிலும் இருக்கலாம் போன்ற  முக்கியமா இதுவரை அறியாத பல விசியங்களை எங்களுக்காக Comet Churyumov–Gerasimenko பில்லியன் மையில் தூரத்தில் இருந்து ஒரு செய்தியாக கொண்டு வந்து இருக்காலம், சிலநேரம் இதில எதுவும் நடக்காமலும் புஸ்வானம் போலவும் போகலாம், அது என்ன எண்டு சொல்லுறேன்..

                                       பத்து வருடம் முன்  " உன் விழியில் விழுந்தேன் வின் வெளியில் பறந்தேன் கண் விழித்து சொப்பனம் கண்டேன்... "எண்டு சினிமாப் பாட்டுப் பாடிக்கொண்டு, அஸ்டர் பெல்ட் என்ற சனிக்கிரக பாறைத் தொகுதியின் இடியப்பத் தட்டு போன்ற வட்ட வளைவுகளின் விளிம்பில்  இருந்து " இனிக் கூட்டுக் குடும்பம் சரி வராது நான் தனிக் குடித்தனம் போறேன் " எண்டு சனியன் பிடித்து ,தப்பியது ஒரு விண் கல் ,,அது வால் வெள்ளியாகி நீண்டுகொண்டே நீந்தத் தொடங்கியது. 

                               அதுதான்   தடவிக்கொண்டு  எங்கள் சூரியக் குடும்பத்துக்கு உள்ளே  குறுக்க மறுக்க வந்த  கொமெட் என்ற Comet Churyumov–Gerasimenko வால் வெள்ளி. இந்த வால்வெள்ளியின்  " ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படு முடைப் பருந்து பார்த்திருக்கும் " கூந்தலைப் குறி வைத்துத் தேட அனுப்பிய நூறு கிலோ அழகு தேவதை ரோசேத்த Rosetta (spacecraft) சென்ற மாதம் அது தேடிக்கொண்டு இருந்த வால்வெள்ளியை பில்லியன் மையில்கள் அலைந்து, இடையில சில வருடம் தொடர்பு இழந்து, மறுபடியும்  சென்ற மாதம் 67P/Churyumov–Gerasimenko வால் வெள்ளியைக் கண்டுபிடித்துக்  கண் அடித்து, அதன் கமராக் கண்களைத் திறந்து எங்கள் நெஞ்சில பாலை வார்த்து  வால் வெள்ளிகளின் வாசல்க் கதவைத் தட்டிய Space rendezvous சம்பவம் தான் அது.

                                       எங்களின் சூரியத் தொகுதிக்கு கொஞ்சம் வெளியே ,அதன் விளிம்பில் சூரியனின் ஈர்ப்பு சக்தி கையை விடும் தூரத்தில் என்ன இருக்கு, என்ன நடக்குது எண்டு யாருக்கும்  தெரியாது,அங்கெல்லாம் சட்டலைட் அனுப்பி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு இன்னும் எங்களிடம் தொழில்நுட்பம் இல்லை. ஒரே வழி அந்த பிரபஞ்ச வெளியில் இருந்து எங்கள் எல்லைக்குள் வரும் ஒரே ஒரு நல்ல தகவல் காவியான வால்வெள்ளிகளை மட்டும் வளைச்சுப் பிடிச்சு விசாரிக்கலாம்,அதுதான் பத்து ஆண்டுகள் முன் ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மில்லியன் டாலர் விழுங்கிய இந்த வால்வெள்ளி 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி பிடிக்கும் அந்த விண் வெளித் திட்டம். 

                                 அமரிக்காவின்  நாசா விஞ்ஞானிகள் தான் இதை முதலில் செய்ய இருந்தார்கள். வல்லரசு அமரிக்க பொருளாதாரம் சரிந்து விழ, காங்கிரஸ் " நாயைப்பிடி வால் வெள்ளி வேண்டாம் " என்று அந்த திட்டத்துக்கு காசு கொடுக்கவில்லை. வால்வெள்ளி எங்கள் சூரியத் தொகுதியை அண்மிக்கும் இந்த சந்தர்பத்தை இழக்க விரும்பாத ஐரோப்பிய  விஞ்ஞானிகள் துணிந்து இதில இறங்கினார்கள், நம்பினால் நம்புங்க , இதில மிகப் பெரிய ஆச்சரியம் இந்த  வைர மூக்குத்தியில்ஒரு விண்கலத்தை இறக்கி அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்வை  நடத்தப்போகும் European Astronaut Centre  விஞ்ஞானிகள் குழுவில் முக்கால் வாசிப்பேர் பெண் விஞ்ஞானிகள். 

                                  67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளியை 1969 இல் கண்டு பிடித்தவர்கள் இரண்டு சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த கால இரசிய விஞ்ஞானிகள் , அதனால் அவர்கள் இருவரின்  Churyumov–Gerasimenko பெயரைச்   சேர்த்து வெள்ளிக்கு வைத்துளார்கள். ஒருவர் Comet Churyumov இன்றைக்கு உள்நாட்டு சண்டையில் சாப்பிடவும் வழி இல்லாமல் அகதிகள் அலையும் உக்ரேன் நாட்டவர், மற்றப் பெண் விஞ்ஞானி வலந்தினா Gerasimenko  கசாகிஸ்தான் நாட்டவர். அவர்களின் கணிப்பில் 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி ஒரு நாள் எங்களின் எல்லைக்குள் வரும் எண்டு எழுதி வைத்துப்போட்டு மேல போய்ச் சேர்ந்து விட்டார்கள் ,அவர்களால் அப்போது அவளவுதான் செய்ய முடிந்தது,

                                உண்மையில் 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி எங்கள் சூரியத் தொகுதிக்குள் வந்த கொஞ்ச வருடங்களில்,எங்கள் கிரகத் தொகுதியில் உள்ள மிகப் பெரிய கோள் ஆனா, பூமிபோல ஆயிரம் மடங்கு ஈர்ப்பு விசை உள்ள வியாழன் என்ற ஜூப்பிடர் கிரகம் வியாழ தோஷம் பிடிச்சோ அல்லது வேற என்ன கோபமோ தெரியாது வால் வெள்ளியைப்  பலமுறை தாறுமாறா இழுத்து எறிந்தது ,அதன் பாதை பல சிரமங்களுக்கு மத்தியில் பில்லியன் மையில்கள் அலைய, அதைத் திரத்தி திரத்தி தேடி எங்கள் சின்னப் பெண் ரோசெத்தா டிசெம்பர்  மாதம் கண்டு பிடித்தா .

                                        நாங்கள் வசிக்கும் இந்த பூமிக்கு ஒரு நாள் ஆபத்து வின் வெளியில் இருந்துதான் வரும், அதோட எல்லாரும் கோவிந்தா தான்,முக்கியமா வால் வெள்ளிகள் ஆபத்தானவை ,எண்பதுகளில் வியாழக் கிரகத்துடன் மோதிய சூமேகர் லேவி என்ற வால்வெள்ளி அந்த கிரகத்தில் மோதி ஏட்படுத்திய பள்ளதுக்குள்ள எங்கள் பூமியைக்  கொண்டுபோய் வைக்கலாம்,அவளவு அகோர அடி,அப்படி ஒரு நிலைமை எங்களுக்கு வரும் போது எல்லா வீராதி வீரன்களும் ஓடிபோய் கெஞ்சப் போவது அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானிகளிடம் தான்,அவர்கள் தான் விழிப்பாக விண் வெளியை பார்த்து கொண்டு இருப்பவர்கள் .

                            உயிர் கொடுத்து  உயிர்  தேடிய  ரோசேத்தா சட்டலைட் பல சந்தர்பங்களில் வின் கற்கள்,வேறு பல  சோலார் கதிர்கள்,காமாக் கதிர்கள், குழப்பங்களில் இருந்து இந்த பத்து வருடங்களில் உயிரைக் கையில பிடிசுக் கொண்டு பிராயணம் செய்த பில்லியன் மைல்களில் பலமுறை மயிர் இழையில் தப்பி இருக்கு, மணிக்கு முப்பத்தி ஐயாயிரம் கிலோ மீட்டார் வேகத்தில் ஒரு நீள் வட்டப் பாதையில் பறக்கும் 67P/Churyumov–Gerasimenko வால் வெள்ளியை வண்ணாத்திப்பூச்சியை பிடிக்கிற மாதிரி பிடிக்க முடியாத சந்தர்ப்பம் இருந்தும் ,கடைசியில் ரேசோத்தா நெருங்கிய இந்த திட்டமே ஒரு அதிசயம் இப்படி முடிவில் வெற்றி அளித்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்...

                                       ஜெர்மனியில் உள்ள பிரான்க் போர்ட் அருகில் உள்ள  டாரம்ஸ்டேட் Darmstadt  நகரில் உள்ள ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி சென்டரில் European Space Agency (ESA) இருந்து ரோசெத்தாவை இயக்கிய  விஞ்ஞானிகள் சளைக்காமல், செவ்வாய் கிரகம் , வியாழக் கிரகம் இன் மைய நீக்க  சுழற்சி இளு விசையையும், ரோசெத்தாவில் பொருத்தியுள்ள சோலார் சக்கி எஞ்சின்கள், சின்ன ஹிபர்ஜோனிக் ரொக்கெட் உதவியில் அதன் பாதையைக்  கணித்து இயக்கி,அதைத் தேட வைத்து, மண்டையைப் பிச்சு பாதைகளைக் கணித்து இயக்க வைத்தும்,சில வருடம், எங்களை எல்லாம் அந்தரிக்க வைத்துப் போட்டு ரோசெத்தா பில்லியன் மைல்கள் விலகிப் போனதால் பூமியுடன் தொடர்பை இழந்து போய் இருந்தது, 

                              அதன் பாதையில் இப்படி Hibernation நடக்கும் எண்டு கணித்து இருந்தார்கள், கணித்த படியே இந்த வருட ஆரமபத்தில் ரோசெத்தா தொடர்பை ஏற்படுத்திய சில வாரங்களில் அது கண்டு பிடித்த  67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி இன் அருகில் போய் எடுத்து அனுப்பிய தெளிவான படங்கள் இன்றைவரை மனித வரலாற்றில் முதல் முதல் ஒரு வால் வெள்ளியின்  பயோ டேட்டா எங்க சட்டைப்பையில்க்  கிடைத்து இருக்கு,

                                           பூமியில் உள்ள  தண்ணீர் முழுவதையும் கொண்டு வந்தது, முதல் முதல் உயிரை விண்வெளியில் இருந்து கொண்டு வந்தது வால் வெள்ளிகள் என்ற கொமெட் என்று பல விஞ்ஞான தியரிகள் இருக்கு,இதை உறுதி செய்யும் நிகழ்வாக, இப்ப ரோசெத்தாவிடம்  விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு எதிர் பார்க்கும் ஒரே  ஒரு கடைசி நிகழ்வு, அந்த நாலு கிலோ மீட்டார் நீள, ஆறு கிலோ மீட்டார் அகல மிதமான ஈர்ப்பு விசை உள்ள, கொஞ்சம் உருளைக்கிளங்கு போல இருக்கும் 

                                67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளியின் நிலப்பரப்பில் பைலே Philae (spacecraft) என்ற சிறிய சட்டலைட் பரிசோதனை ஆய்வு கூடக் கலத்தை இறக்கி,அதில தண்ணீர்,காபன்,வேற உயிர் உருவாகத் தேவையான ஆரம்பக் கட்டுமான கனிப்பொருள்கள்,அல்லது இதுவரை நாங்க பூமியில் அறியாத இரசாயனக் கலவைகளின் ஆதார கனிப்பொருள்கள் இருக்கா என்று அறியும் Docking and berthing of spacecraft நிகழ்வு நடக்கப் போகுது. ரோசெத்தா அது காவிக்கொண்டு பில்லியன் மைல்கள் அலைந்த பைலேயை இறக்கிப் போட்டு,அதில இருந்து தகவல்கள் அனுப்பியபின் மறுபடியும் அதைக் காவிக்கொண்டு வரப்போகுது,..

                                  இந்த திட்டத்தில் நோர்வேயில் இருந்து ஒஸ்லோ UiO யூனிவெர்சிட்டி இன் பிசிச்க்ஸ் டிபார்ட்மெண்டின்   எமிரேட்ஸ் பேராசிரியர்  காரே அக்ச்னஸ் Proff Dr. Kaare Aksnes  றோசெத்தாவின் பாதையை கணக்கிடுவதிலும் , எமிரேட்ஸ் பேராசிரியர் ஆர்னே பேட்டர்சன் Proff Dr.Arne Pedersen  டெக்னிகல் அட்வைஸ் கொடுப்பதிலும் , கொம்புயிடர் எஞ்சினியர் Dr.வோசயொச் மிலோச்  Wojciech Miloch  றோசெத்தாவின்  டேட்டா வை அனலைஸ் பண்ணுவதிலும் என்று இந்த    மூன்று அறிவியளாளர்கள்  European Space Agency (ESA) விஞ்ஞானிகளுடன் பங்கு பற்றி என்னைப்போன்ற மாங்கா மடையார்களும் வசிக்கும் நோர்வேயை ஒரு அறிவியல் நாடு எண்டு கவுரவ ப்படுத்தியுள்ளார்கள்....

                                      67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி தரப்போகும் தகவல் வெளியே உள்ள பிரபஞ்சத்தை நாங்கள் உள்ளே இருந்து ஆராயக் கிடைத்த ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம். யாருக்கு தெரியும் வான வெளியில் உள்ள தேவதூதர்கள் அதை எங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இதற்க்கு இடையில் பூமியில் உள்ள அசுரர்கள் எங்கள் சூரியக் கிரகத்தில் உயிர் வாழக் கூடிய ஒரே ஒரு கோள் ஆனா எங்கள் இந்த சின்ன பூமிக்  கிரகத்தை  ஆளை ஆள் பங்க்கு போட்டு, ISIS தீவிரவாதிகள் பல அப்பாவி சியா முஸ்லிம் மக்களைக் கொல்லலாம், நைஜீரியாவில் சிறுபான்மை  கிறிஸ்தவ மக்களை ஜிகாத்  தீவிரவாதிகள் போட்டு தள்ளலாம், உக்கிரேன் தீவிரவாதிகள் இன்னும் சில விமானத்தை சுட்டு விழுத்தலாம், இபோலா வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகள் முழுவதும் பரவலாம், ஹமாஸ் அனுப்பும் ராக்கெட்டுக்கு இஸ்ரேல் இன்னும் இன்னும் ரொக்கெட் அனுப்பி அப்பாவி பலஸ்தீன மக்களைக் கொல்லலாம்...... 

                                 ரோசெத்தா விண்வெளியில் உயிர் இருபதுக்கான சாத்தியங்களை " வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே " என்பது போலத் தேடுது . நாங்க இங்கே இருந்து அல்பிரேட் நோபெல்  தண்டவாளம் போட்டு ரெயில் ஓட வைக்க ரெயில்வே சுரங்கம் அமைக்க பாறைகளை இலகுவாகப் பிளக்கக் கண்டு பிடித்த  " டையினமைட் கன் பவுடர் " வெடி மருந்தை துப்பாக்கி ரவைகளிம் , பீரங்கியின் குண்டுகளி லும் , நீண்ட தூர ரொக்கெட்டிலும்  நிரப்பி வேண்டிய மட்டும்  உயிர்களை அழிக்கிறோம்....  

 (.இந்த படத்தின் பின்னே இருப்பது தான் அந்த வால் வெள்ளி . படத்தில் என்னுடன் நிற்பது நோர்வே அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி Dr, Camilla Andrsen . ரோசெத்தா பற்றிய நிகழ்வுக்கு போன போது எடுத்தேன். )
ஒஸ்லோ 26.28.14

காலம் செய்த கோலமடி......

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களில் யாரோ ஒருவர், எப்போதோ  ஒருதரம் தங்கள் வாழ்நாளில் சந்தித்த மிகவும் விரும்பாத விபத்துப் போன்ற சம்பவம் ஒன்று நடந்த சில செக்கன்களில் சொல்லும் வார்த்தை

                               " அட, கொஞ்சம் அசந்திட்டமே, இல்லாட்டி இதை வேற விதமா செய்து இருக்கலாம் " ,

                                         அல்லது

                          " அட இது முதலே தெரியாமல் போச்சே "

                                                         என்பது. அப்படி சொல்லத்தான் முடியும் காலத்தில் ஒரு மில்லி செக்கன் பின் நோக்கிப் போய் அதைத் தடுக்கவோ, அல்லது காலத்தில் மில்லி செக்கன் முன்னோக்கிப் போய் அந்த சம்பவம் நடக்கப் போறதை முன் கூட்டி அறியவோ  முடியாது, 

                          ஆனால் மொடேர்ன் பிசிக்ஸ் சொல்லுது இதெல்லாம் சாத்தியம் எண்டு. எப்படி என்றால், முதலில் காலம் என்ற நேரம் என்றால் சயன்ஸ்படி என்ன எண்டு விளங்கினால்த் தான் மிச்சம் விளக்கும், இதுக்கு மேலே இந்தக் கட்டுரையை வெள்ளி திசை, ஒம்பதில வியாழன்  கிரக பலன் உள்ள நல்ல காலம் நடப்பவர்கள் வாசிக்கவும்.

                                   மற்ற மங்குசனிக்  கால திசை நடக்கும் வாசகர்கள் வாசித்து இன்னும் அதிகம் துன்பம் பெறவேண்டாம். இதோட விட்டுப் போட்டு " கத்தி " படத்தில சமந்தா இடுப்பை நெளித்து உளுந்து அரைப்பது போல ஆடும்  "செல்பி புள்ள..  "  பாடலைப் போட்டு  நேரத்தை மறந்து  ரசித்துக்  கேட்டு புண்ணியம் சேருங்க. 

                                      காலத்தில பிரயாணம் செய்யலாமா எண்டு உங்க எல்லாருக்கு நிறைய குழப்பம் வருவது போல எனக்கும் என்னோட டீன் ஏஜ் வயசில் காதல் வருவதுக்கு பதிலா இந்த சந்தேகம் வந்ததுக்கு முதல் காரணம் இசாக் அசிமோவ் என்ற எழுத்தாளரின் சயன்ஸ் பிக்சன் கதைகள், அதை தொடர்ந்து வந்த ஸ்டார் வார் ,பட்டில் ஸ்டார் கலஸ்டிக்கா போன்ற கற்பனையான சயன்ஸ் படங்களைக் காதல் வரவேண்டிய இளவயதில் நம்பவே முடியாமல் திகிலாப் பார்த்தது.

                                      இன்றைக்கும் தியரி வடிவில் நிறைய சாத்தியங்கள் உள்ள அதை எப்படி நடைமுறையில் பிரக்டிகலா செய்வது எண்டு ஏறக்குறைய இந்த நுற்றாண்டு முழுவதும் மண்டயப் போட்டுக் குழப்ப வைக்கும் காலப்பயணம் என்பது ஆதாரமாக, காலம் என்பதும் இடம் என்பதும் ஒண்டுதான் எண்டு சொன்ன ஐன்ஸ்டைனின் தியரியில்த் தொடங்குது...  

                                      அடிப்படையில் ஒளியில், அதன் வேகத்தில் காலம்  தொடங்குது. அதில்தான் ஓடுது. நிலையாக நிற்கும் ஒருவருக்கும்,வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவருக்கும் இடையில் நேரம் என்பது பிரபஞ்ச அளவில் வேறுபடும், அதே நேரம் பூமியில் அருகில் நின்று பார்க்கும் எங்களுக்கு அதை உணரமுடியாது. குழப்புறேனா, சரி எளிமையாக  பாட்டி வடை சுட்ட கதை போல சொல்லுறேன் ..!

                                      அதுக்கு முதலில் பிரபஞ்சக் "காலம் அல்லது நேரம் என்றால் என்ன எண்டு தெரிய வேண்டும். நேரம் அல்லது காலம் இயற்கையின் பிரபஞ்ச ஆதார விதிப்படி , முதல் முதல் நடந்த பிரபஞ்சப் பெரு வெடிப்பு என்ற பிக் பாங் இல் இருந்து முன்னோக்கிப் பாயும் ஒளியின் வேகத்தில் தான் காலம் தோன்றியது, அதுக்கு முன்னம் காலம் இல்லை, இடமும் இல்லை,கோள்கள் ,நட்சத்திரங்கள், விண்கற்கள் , வீடு , வாசல் , கார் ஒண்டும்  இல்லை , நமிதாவின் இடுப்பும் இல்லை, உண்மையைச் சொன்னால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 

                                           அந்தக்  காலம்,  நேரம் என்ற இயற்பியல் வடிவில் எய்து விட்ட அம்புபோல பல ஃப்ரேம்களாக (Frames) முன்னுக்குத் தான் போகுது, இன்று வரை ஒரு நாளும் பின்னுக்கு போனதில்லை. ஆனால் எங்கள் நினைவுகள் பின்னுக்குப் போவது போல அதால் போக முடியாது.  ஆனால் மொடேர்ன் பிஸிக்ஸ் இல் காலமும், இடமும் ஒன்றாகி அதில நேரத்தை ஸ்பேஸ் டைம் என்ற நான்காவது பரிமாணமாக சொன்னார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். 

                                    அதை மிகை ஒலி சூப்பர் சொனிக் விமானத்தில் பறக்கும் ஒருவரையும், அதையே நிலத்தில் நின்று பார்க்கும் ஒருவருடன் சார்பு வேகத்தில் ஒப்பீட்டு செய்து மிகை ஒலி வேகத்தில் பறப்பவரின் கால வேகம் மில்லி மில்லி செக்கன்கள் குறைவு என்பதை இலத்திரனியல் அணுக் கடிகாரத்தில் அளந்து எழுபதுக்களில் நிருபித்தார்கள். ஆனால் அந்த மில்லி செக்கன்கள் மிகச் சிறிய காலத்தில் பின்னடைவில் இருப்பதை வைத்து ஒண்டுமே பிரக்டிகலா செய்யமுடியாது.  

                                        ஸ்பேஸ் டைம் என்பதே உண்மையில் அஞ்சாவது பரிமாணம்,  முதலில் ஒரு பரிமாண, இரு பரிமாண மற்றும் முப்பரிமாணங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கம் சொன்னால் தான் அஞ்சாவது பரிமாணமே விளங்கும் . பரிமாணம் (Dimension) என்பது “ magnitude of something in a particular direction especially length or width or height”ஆகும்.  லூயிஸ் கரோல் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம் " அலைஸ் இன் வொண்டர் லான்ட் " உண்மையில் பரிமாணங்களுக்கு இடையில் பயணம் செய்யும் புத்தகம்.

                                            தெருவில கரண்ட் வயரில் -" ஒன் லைனில் " ஒரு குருவி இருக்கு என்று வைப்போம் அந்தக் குருவி  அந்த வயரில்  எங்குள்ளது? வயரின்  ஏதாவது ஒரு மூலையின் தொங்கலில்  இருந்து இரண்டு மீட்டர்  தூரத்தில் எண்டு சொன்னால் அது  ஒரு பரிமாணம் ஆகும். இங்கு அந்தக்  கோடு ஒரு பரிமாணத்தில் இருப்பதால்  இங்கு ஒரு பரிமாணத்திலேயே அந்தக் குருவி இருக்கும் இடம் சொல்லலாம் .

                                               இளம் வயதில் காதலிகளுக்குக்  காதல்க் கடிதம் எழுதிய காகிதத்தில், அதை எழுதி முடித்து கடைசியில், அந்தப் பெண்ணின் இதயத்தைத் திருடும் நோக்கில் எப்பவும் ஒரு இதயம் படம் வரைவமெல்லா, வரைந்த அந்த இதயப்  படம் அந்த காகிதத்தில் எங்கிருக்கிறது என்றால்? முன்பு சொன்னதைப் போல ஒரு பரிமாணத்தில் சொல்ல முடியாது. காரணம், அந்த இதயம் படம் எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

                                   ஆனால்  இப்படிச் சொல்லலாம் அந்த இதயம் அந்த காகிதத்தின் ஒரு மூலையில் இருந்து 3 cm வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 cm வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும் இடத்தில என்று சொல்லலாம். இது விபரம் மிகச் சரியாக அந்த இதயம் இருக்கும் இடத்தைக்  கண்டுபிடிக்கும். இப்பொழுது அந்த இதயம் பேபரில்  இருப்பது இரு பரிமாணங்களில் ! 

                                      அடுத்து ஒரு அறையை எடுத்துக் கொள்ளலாம்.  அறை என்பது, நீளம், மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணத்துடன் மூன்றாவதாக “உயரம் / ஆழம்” என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வது. அந்த அறையில் ஓய்விலுள்ள ஒரு  குருவி சரியாக எந்த இடத்தில் இருக்கிறது ? “ஒரு மூலையில் இருந்து ஒரு மீட்டர்  வலமாகவும் (X-Axis), அங்கிருந்து ரெண்டு மீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) மூன்று மீட்டர்  சென்றால் கிடைக்கும்” எனக் கூறலாம். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்.

                                 இதை  perpendicular முறையில் சொல்ல வேண்டும் எண்டு சொல்லுறார்கள். perpendicular என்றாள் என்ன எண்டு சொல்லுறது எண்டால் அது கொஞ்சம் அட்வான்ஸ் பிசிக்ஸ் விளங்கினால் தான் முடியும் .அதை நான் சொல்ல முயன்றால் எனக்கே  மண்டைக்குள்  இருக்கிற கொஞ்ச சரக்கும் வெளிய போயிடும் .அதால அதை இப்போதைக்கு விடுவம். பெறகு ஒருநாள் சொல்லுறேன்.

                                           நான்காவது பரிமாணம் என்பது “நேரம்”.அதே அறையில், அந்தக் குருவி  பறந்து கொண்டே இருக்கும் பொழுது, அதன் இடம் மாறும். அந்த பறவையின் சரியான / நிலையான இருப்பிடத்தை காண நமக்கு நான்காவதாக ஒரு பரிமாணம் தேவைப்படுகின்றது. இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், ஒரு மூலையில் இருந்து ஒரு மீட்டர்  வலமாகவும் (X-Axis), அங்கிருந்து ரெண்டு  வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) மூன்று மீட்டர் சென்றால், அந்த பறவை ஒரு குறிப்பிட்ட ‘நேரத்தில்’ இருந்த இடம் கிடைக்கும். இங்கு இந்த நான்கு பரிமாணங்களும் இருந்தால் தான்  இயங்க்கிக் கொண்டு இருக்கும் அந்தக் குருவியின்  இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்...

                               இந்தப் பிரபஞ்சம் என்ற யுனிவேர்ஸ் உண்மையில் நாங்கள் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாத பதினொரு பரிமாணத்தில் இருக்கு என்கிறார்கள். வெறும் நீளம், அகலம், உயரம் என்பனவே நமது அறிவின் வீச்சில் உணரக்கூடியவை ,அப்புறம் நேரத்தை மணிக் கூட்டில பார்த்தாப் போச்சே எண்டு கேட்பிங்க, ஆனால் நாங்க பார்க்கும் நேரம் வேற பிரபஞ்ச நேரம் வேற. நேரமே பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி ஓடுது, ஏன் விண் வெளியில் மிதக்கும் ISS விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் கைக்கடிகாரம் எங்கள் நேரத்தை விட சில மில்லி செக்கன்கள் வித்தியாசம், ஏன் அப்படி என்றா அதுக்கு நேரத்தை ஈர்ப்பு விசையும் பாதிக்கும் என்கிறார்கள்.  

                                                 நாங்கள் நம்பும் நேரம் உண்மையில் ஒரு மாயை. 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்க பரிமாணங்களை நேரம் கட்டிப் போட்டு வைச்சுள்ளது. அந்தப் புதிரை விடுவித்தால் நிறைய விசியம் செய்யலாம். காலம் என்பது  நான்காவது பரிமாணம் என்று  Theory ரீதியில் ஏற்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு மனிதனால் ஒரு பரிமாணம், இரு பரிமாணம், மூன்று பரிமாணம் உள்ள பொருட்களை மட்டுமே உணரமுடிகிறது.? ஏன் எனில் நாங்கள் நான்கு பரிமாண ஆட்கள். எங்கள் எல்லா முயற்சியும் அதுக்குள்ளே தான் கிடந்தது சுழரும்,அதை மீறினால் நிலைமை வில்லங்கம் ஆகும் 

                                         நம்பிக்கையில் எப்பவுமே கை வைத்து, நம்பிக்கையோடு சாத்திரம் சொல்பவர்கள் ,குறி சொல்பவர்களை, கைரேகை பார்பவர்களை ,காண்டம் வாசிபவர்களையும், அதை நம்பிக்கையோடு நம்புபவர்களை தவிர, ஏன்  வேற  ஒருவரால் இன்னொருவரின் எதிர்காலத்தை இறந்த காலத்தை கூறமுடியாமல் இருக்கிறது ?, ஏன்  ஒரு நான்கு பரிமாண ஆளால் நான்கு பரிமாணத்தில் முன்னும் பின்னும் பார்க்க முடியாமல் இருக்கிறது ? போன்ற ஆதாரமான சயன்ஸ் கேள்விக்கு விடை இன்னும் பிரக்டிகலா இல்லை. 

                                         ஆனால் ஒரு சதுரப் பெட்டியை தலை கீழாகப் புரட்டி கையை உள்ளுக்க விட்டும் துலாவிப் பார்க்கலாம், ஹமாஸ் விடும் ஏவுகணையை இஸ்ரேல் இடையில்  பறக்கும் ஏவுகணை விட்டு அடிக்கலாம் ,ஆனால் நேரத்தில் கையே வைக்க முடியாது. அதை விளங்கிக்  கொள்வதே கடினம்தான் . நிறைய முன்னுக்குப்பின் முரணான விசியங்கள் அதில இருக்கும்..

                                           தியறிப்படி உள்ள ஸ்பேஸ் டைம் என்பது பல ஃப்ரேம்களாக (Frames) நடந்து கொண்டிருக்கிறது ,அதை உணர முடிந்தால்,அதுவும் ஓர் ஐந்து பரிமாண ஆளால் ஸ்பேஸ் டைமை உணரமுடியும் என்றால். அவர்களால் எமது இறந்த, எதிர் காலத்தை துல்லியமாக கூற முடியும். என்பது தியரி படி இருக்கு . அப்புறம் நாங்களே பெட்டி படுக்கையைக் காவிக்கொண்டு நாமே ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து விட்டோமானால் காலத்தில் பிரயாணம் செய்யலாம்! இதை தான் "Time Travelling" என்கிறார்கள் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது இன்னும் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை. அதில ஏகப்பட்ட குழப்பம் இருக்கு. கொஞ்சக் குழப்பத்தை  சொல்லுறேன். 

                                       உண்மையா ஜோசித்துப் பார்த்தால்  காலத்தை நாங்க முன்னும் பின்னும் அறிஞ்சா அதன் பின் சுவாரசியமான வாழ்கை போயிடும்,  ஆனாலும் டைம் ட்ராவல் சம்பந்தமாக, இவ்வளவு நாட்களும் விஞ்ஞானிகளுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிற முக்கியமாக இரண்டு விஷயங்களில் முக்கியமானது  கால வெளியில் பிராயணம் செய்ய வேண்டுமென்றால் ஒளியின்  வேகத்துக்கு இணையான வேகத்தில் பிராயணிக்க வேண்டும்.  ஒளியின் வேகத்துக்கு கிட்ட நெருங்க நாம் பிரயாணம் செய்யும் வாகனத்தின் திணிவு நினைக்கமுடியாத அளவு அதிகரிக்கும் , அதை இயக்க ஒரு நட்சத்திரம் எரியும் அளவு பில்லியன் அளவு சக்கி வேணும்...இப்போதைக்கு அதைக்  கனவுதான் காண முடியும் நம்மளால் . 

                                          அப்படி பிராயணம் செய்ய கூடிய எந்தவித வாகனமும் இப்ப இல்லை. ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்ய செய்ய காலத்தில் பின்னோக்கி செல்லலாம், அல்லது இன்னுமொரு இலகுவான ஆனால் தியறிப்படி உள்ள ஒரு விளக்கம்  நாலாவது பரிமாணத்தில் இருந்து அஞ்சாவது பரிமாணத்துக்கு உள்ள போக ஒரு பாதை வேண்டுமே  அந்த பாதைகளை  புழுத்துளைகள் (Worm Holes) என அழைக்கும்  மிக மிக நுண்ணிய குழாய் பாதைகள் இருக்கு எண்டு சொல்லுறார்கள். ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் அளவுக்கு இன்னும் விஞ்ஞானம்  எங்களிடம் இல்லை

                       ஒரு உதாரணத்துக்கு,

                                    மொடேர்ன் பிசிக்ஸ் நம்பும் பக்தர்களின் கடவுளான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தில்  என்னால்  பயணிக்க முடிந்தால் எனக்கு  வயது கூடாது, குறையாது  நிலையாக நிக்கும் எண்டு சயன்ஸ்படி சொல்வதில்லை ஆனால் நானே  வேற ஒரு பரிமாணம் ஆகிவிடுவேன்  என்கிறார்கள். ஆனால் என்னைச்  சுற்றி இருக்கும் உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் வயது கூடிக்கொண்டே இருக்கும்! நீங்க எல்லாம் கிழடுதட்டி ,அறளை பெயர்ந்து பிசத்தும் நேரம் நான் நல்ல தெளிவா அப்பவும் இருப்பேன், வயது போகாது  நான் ஏறக்குறைய  இப்ப இருப்பது போலவே இருப்பேன் மாறவேமாட்டேன். நினைக்வே எவளவு சந்தோசமா இருக்கே.

                                     உங்களுக்கு அப்பவும் காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது. 2014 இல் நான் ஒளியின் வேகத்தில் புறப்பட்டேன் என்றால், 30 வருடத்தின் பின்னரும் நான் அதே 2014 இல் தான் இருப்பேன் . ஆனால் நீங்க  2034 இக்கு போயிருப்பீர்கள் , நான் மறுபடி நோர்மல் வேகத்துக்கு வந்து பார்க்க , உங்களில் சிலருக்கு ஆண்டு திவசமும்,சிலருக்கு பல வருட நினைவாஞ்சலியும் முடிந்து இருக்கும்.

                                                   இப்படி உங்களை வெறுப்பு ஏற்றினாலும், இப்படி ஒளியின் வேகத்தில் செல்லும் ஒருவரை நீங்கள் யாருமே பார்க்க முடியாது! நாங்க ஒவ்வொரு நாளும் பார்க்கும் சூரிய ஒளி Photons என்ற அணு, அது ஒளியின் வேகத்தில் சூரியனில் இருந்து எங்கள் பூமிக்கு வர எட்டு நிமிடம் எடுத்து வருகுது, இது நிகழ்காலத்தில் எங்களுக்கு  நிகழுது. இதே பூமி  இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். எங்களுக்கு வந்த ஒளி சூரியக்குடும்பதில் தொங்கலில் உள்ள புலூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.

                                              அந்த வேகத்தை நம்மால் பார்க்க முடியாது. கடவுள். தேவர்கள், ஆவிகள் இவைகள் இப்படி இயங்குபவை எண்டு திருமந்திரம், சிவஞானபோதம், போன்றவற்றில் சொல்லி இருக்கு எண்டு எழுதியுள்ளார்கள்.தவம் செய்யும் முனிவர்கள் அவர்களின் ஜோகநிலையில் எழும்பும்  ஏழாவது அறிவில்  இந்த காலப் பரிமாணங்களை முன்னுக்கும் பின்னுக்கும் முக்காலமும் அறியும் ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள் என்று இந்து சமயத்தில் சொல்லுறார்கள். அப்புறம் சயன்ஸ் பிக்சன் எழுத்தாளர் வேற்றுக் கிரக மனிதர்கள் இப்படிப் பிரயாணம் செய்பவர்கள் எண்டு சொல்லி எழுதி,அந்தப் புத்தகங்கள் நல்லா விற்று அதை எழுதியவர்கள் வேற்றுக்கிரக மனிதர்கள் புண்ணியத்தில் கோடீஸ்வரர் ஆகி இருக்குறார்கள். 

                                   இப்ப முக்கியமான ஒரு காலத்தில் பிரயாணம் செய்யும் வசதியான Worm Holes என்பது என்ன எண்டு சொல்லுறேன் , எளிமையான  உதாரணமாக , பண்ணைக்காரன் பெண்டில் பனங்காய் உருடின மாதிரி ,ஒரு பனங்காயை எடுப்பம், பனங்காய் மிகவும் வழுக்கும் தன்மை உடையது. அதை உருட்டும் பனை ஓலைப் பாயும்  மிக மிக தட்டை. இவை இரண்டுமே முப்பரிமாண பொருட்கள், ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பனங்காயில்  நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள் மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது.  

                                         இது நான்காவது பரிணாமமான ஸ்பேஸ் டைம் என்ற நேரத்திலும்  காணப்படுகிறது . இவை அளவிடமுடியாத அணுவைவிட  மிக மிக சிறிய இடைவெளிகள், ஆனால் ஸ்பேஸ் டைமில் விரைவான குறுக்கு பாதை அவைகள். பல மில்லியன் வருடங்கள் முன்னுக்கும்,பின்னுக்கும் உள்ள  நேரத்தையும், வேறு பிரபஞ்சங்கள் உள்ள  இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன ,இந்த மிகச் சிறிய துளைகளுக்கு ஊடாக  எங்களால் பொஞ்சாதி, சின்ன வீடு , பிள்ளை குட்டிகளை இழுத்துக் கொண்டு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு  போக முடியாதா அளவில் காணப்படுகிறது.

                          அப்படிப்பட்ட மிக நுண்ணிய வார்ம் ஹோல்ஸ்  இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கு. ஏன் நீங்க அதை வாசித்துக்கொண்டு இருக்கும் கொம்புடர் உள்ள அறையிலேயே இருக்கு, இந்த துளைகளில் விஞ்ஞானிகள் செய்ய நினைப்பது இந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கி அதற்குள் ஒரு உயிரையும், அந்த உயிரைக் கடத்தும் ஒரு வண்டியையும் நுழைத்து, ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் அனுப்ப வேண்டும். ஏறக்குறையா ஒரு வெண்வெளி வீரனை அனுப்புவது ,அதுதான் தியரி, நடக்குமா , அதுதான் தெரியலை !

                            காலத்தில் பிரயாணம் செய்யும் போது முன்னோக்கி போகலாம்,பின்னோக்கி போக முடியாது, போனாலும் அவர்கள் காட்சிகளைதான் பார்க்க முடியும். செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது எண்டும்,அப்படி இல்லை அதுக்கு பரலல் யுனிவெர்ஸ் என்று ஒண்டு இருக்கு எண்டு சொன்னாலும் அதில உள்ள " கிராண்ட் பாதர் பரடொக்ஸ் " என்பது ஒரு பெரிய குழப்பம்,உதரணமா நான் காலத்தில் பின்னோக்கிப் போய் என்னோட அம்மா வேம்படியில் படிக்கிற நேரம் சந்தித்து

                    " நான் தான் அம்மா உங்க எதிர்காலத்தில் உங்க நின்மதியைக் கெடுக்கும்  மகன் "

                                                     எண்டு சொன்னால், ஒரு வேளை அம்மா கலியாணமே கட்டாமலே இருந்து இருகலாம் , அதைவிடக் குழப்பம் நான் என் அம்மாவையும்  அப்பாவையும் கலியாணமே கட்ட விடாமல்க் குழப்பினால், அப்புறம் நான் எப்படி எதிர்காலத்தில் பிறந்திருப்பேன் ,சொல்லுங்க பார்ப்பம் , இந்தக் குழப்பம்தான் " கிராண்ட்பாதர் பரடொக்ஸ் " என்பது. ஆனால் காலத்தில்  பின்னோக்கி செல்லுதல் சாத்தியம் எண்டும் ஒரு படம் போல பார்க்கலாம், செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதில எந்த மாற்றமும் செய்ய முடியாது எண்டு சொல்லுறார்கள்.

                                       parallel universe எனும் கோட்பாட்டின் படி இறந்த காலத்துக்கு செல்ல முடியும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity இல்  எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம் என்று உத்தரவாதம் தரும் இந்த time travellingபல ஃப்ரேம்களாக (Frames) நடந்து கொண்டிருக்கிறது மில்லியன் வருடங்கள் முன்னால் ,காலத்தில் எங்களுக்கு முன்னால் விஞ்ஞான வளர்சியில்இருக்கும் மனித இனம் , வார்ம் ஹோல் என்ற விஞ்ஞான விந்தையை கையாண்டு , அங்கிருந்து ஏன் பின்னோக்கி எங்களைச் சந்திக்க அட்லீஸ்ட் விஜய்யோட  " கத்தி " படத்தை ஒரு டுரிஸ்ட் போல ஆவது பார்க்க யாருமே வரவில்லையே?   அப்படி விஞ்ஞானம் முன்னேறிய  எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே ? என்று நீங்கள் கேக்கலாம். 

                                           சொன்னா நம்ப மாட்டிங்க, நான் அப்படி எதிர்காலத்தில் இருந்து " வார்ம் ஹோல் " என்ற வழியால வந்த ஆள்தான். வந்த இடத்தில நான்  வந்த " டைம் டவர்லிங் " வாகனத்துக்கு ஒழுங்கா இன்சூரன்ஸ் கட்டவில்லை எண்டு என்னை இங்கே விட்டுப் போட்டு போயிட்டாங்கள், அப்படி தெரியாமல் இங்கே மாட்டிய ஆள்தான், அதால " காலம் செய்த கோலமடி... " எண்டு இப்ப இந்தக் கட்டுரையை  உங்களுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன்...

ஒஸ்லோ 09.11,14