Wednesday, 9 January 2019

வழிதவறிய பெருவெளி...

ஒரு அபாரமான  சம்பவத்தை , ஒரு ஆழமான  அனுபவத்தை , அல்லது ஒரு அகலமான நினைவை சுருக்கமாகக் கவிதைமொழியில் சொல்லாடலாக்கி "நச்  "என்று ஒருவிதமான  கச்சிதமான  வடிவதுக்குள் எழுத்தில் கொண்டுவருவதுதான் உள்ளதிலேயே சவாலான விசியம்.
                                                             
                                                           வார்த்தைகளை அளவுக்கணக்கு இல்லாமல் அவிழ்த்துப் போட்டு , விலாவாரியாக  உருவகிக்கிறேன் பேர்வழி என்று உள்ளதெல்லாத்தையும்  உளறிக் கொட்டாமல்   ஒரு  குறுகிய வடிவத்தில் இருப்பதால் அவைகள்  எப்போதும் வாசிக்க இலகுவாக இருக்கும். அதேநேரம் அர்த்தங்கள் பிரம்மாண்டமாயும் இருக்கும் . 

                                                           இந்த எழுத்துருக்கள்  சென்ற வருடம் 8 th , 9 th  January இந்த ரெண்டு நாட்களில் முகநூலில்  எழுதியவைகள் . சிலசமயம் ஜோசித்தால் எனக்கே  பின்மண்டை கிறுகிறுக்குது எப்படி இப்படியெல்லாம்  எழுத முடிந்தது என்று அதுவும் ரெண்டே ரெண்டு நாளில். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கு அது அது அந்த நேரம் வந்து சேரும் என்று முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள். அதனால்   எழுதவரும் போது எழுதிவிடுவது நல்லது, இதயத்திலிருந்து  எழுந்துகொள்கிறது அதைச் செய்த திருப்தி  .

                                                                                பின்னொருநாள் நாடியையும் தாடியையும் தடவிக்கொண்டு  விட்டத்தை அண்ணாந்துபார்த்துக் கொட்டாவிவிட்டுக்கொண்டு    எழுதுவத்துக்கு எதுவுமே இல்லாதது போன்ற ஒரு வெறுமை வெளிக்குள் சலித்துப்போன  மனப்பிரமை வந்து சேர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கும் என்று இன்றைக்கு நான் நினைப்பதுபோல இன்னொரு மனிதருக்கும் நேரலாம் , இல்லையா ? 


*
மவுனம்தான்
இட்டுநிரப்பிக்கொண்டிருந்தது
அதுக்குப்பிறகு
நானாகி நீயும் 
நீயாகி நானும்
பேசவேயில்லையே !

*

மழைக்கூந்தல்
துவட்டியபடியே
விரதமிருந்து
பனிப்பூக்கள் சொரியும் 
நீர்மேகம் !

*

அந்தத்
தேன்வண்டின்
முதல்க் காதல்த்தோல்வி
முதல் சந்திப்பில் 
முத்தமிட்ட
வாசமில்லாத மலர்!

*

குரைக்கவைத்து
நாயை
உறங்கவிடாமலாக்கியது
சதிரான சத்தங்களும் 
திகிலான இரவும்
பழியெல்லாம்
அப்பாவி நிலவுக்குமேல் !

*

நுனிக்காம்பில்
காலைப் பனித்துளி
அந்தநேரம்தான்
விடாப்பிடியாக 
ஊஞ்சலாட விரும்புகிறது
இலை !

*

வானம்
அடர் இரவுகளில்
சில்லறைத்தனமாகப்
பிச்சைதான் எடுக்கிறது, 
அலுமினியத்தட்டில்
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்கள் !

*

தந்திரமான
குளிர் நீரோடை
தலைகுனிவு நாணல்கள்
பிறகெப்படி
தனித்துவமிழக்காத
நிலவும் சேர்ந்தே
மிதந்து கிடக்குது ?

*

செறிவான
முன்னேற்பாடுகள்
குறைவான
அத்தியாவசியங்கள் 
இத்தனை
சுழிப்புகளை எதிர்பார்க்கவில்லை
வாழ்க்கை !

*

வெளிச்சம்
உந்திப்பறக்கமுடியாமல்
உறைந்துவிடத் தொடங்குகிறது ,
குளிர்காற்றில்
செதுக்கிக்களைந்த
இலைகள் !

*

எல்லாத்தையுமே
கொடுத்துவிட்டுப்போய்விட்டது
நடுக்கோடைமழை !
நனைத்த யாருமே 
நன்றியோடு இரங்கவில்லை !
கூரைக்கு மட்டும்
அடங்காத சோகமுகம் !
தாள்வாரத்தில்
சொட்டுச்சொட்டாக
கண்ணீர்த்துளிகள் !

*
மூன்றாம்
சாமக்கனவு
ரகசியமாக ஏற்படுத்தும்
உக்கிர சலனங்கள்,
ரெண்டாவது
வெண்பனிப்பொழிவு,

*

உருவப்
புரிதலின்றிதான்
நிராகரிக்கப்படுகின்றன
ராத்திரிகளை 
விடியலாக்கிவைக்கும்
வெள்ளிகள் !

*

ஏராளம்
காதல் உத்தரவாதங்கள்
ஒன்றாகவே
விசிறிக்கொள்ளும் போதும்
மொழியை
விறைக்கவைக்குது
நினைவிலொரு
தனிக்கவிதை !

*

மழை
தேங்கவைத்த
சிதறல் வெள்ளத்தில்
காணாமல்ப்போன
நிலவின்
நீர்த்த வாசனை !

*

பின்னிரவின்
பிரத்யேகப் பார்வை
திருடப்படுகிறது
தீங்கிளைப்
பயங்கள் அடர்த்தியான
கறுப்புநிறத்தில் !

*

முந்தநாளிருந்து
பிரிந்துபோன நேற்று
நாளையிலிருந்து
இடப்பெயரும் நாளைமறுநாள்
தத்தளிப்பு
இன்றைய மனநிலை !

*

ஒரு பக்கம்
நிறையா வெறுமை
இன்னொரு மறுபக்கம்
தோல்விகள்
பின்னுக்கு
அந்நியமாகிப்போனவர்கள்
ஒரே ஒரு நம்பிக்கை

எதிரில் நீங்கள் !

*

விவாதங்களின்
பயங்கர விரட்டல்
துல்லியமான
எதிர் விமர்சனம்
எதிர்பார்ப்புகள் தரும்
ஏமாற்றம்
இடையில் நிகழும்
பயணம் !

*

வழி தளரும்
நடைபாதை
விழிக் காத்திருப்புகளின்
சூட்ச்சுமங்களை
நிலைமழுங்க வைத்த
நாட்குறிப்பு !

*

வலியைக்
கவிதைக்குள்
வழிக்குக்கொண்டுவந்ததே
வெளிப்படும் பாவத்தில்
நுழைந்துகொண்ட
விதி !

*

அவதானிப்பில்
நீட்சிகுறித்த பயம்
ஓய்வாக
மரக்கிளையிலும்
சிறகை
நீள விரித்தபடியே
பறவை !

*

உள்ளெல்லாம்
திருப்த்தியின்மை
அத்திவாரமில்லாத
அந்தக் கணத்திலும் 
வெளிநோக்கி
அந்தமெல்லாம் முடிவில்லா
வாழ்வு சுரக்கிறது !

*

இருட்டில்
மின்மினிப்பூச்சிகளோடு
சலசலசலசலக்கும்
அதே
நதியில்தான்
மூழ்கிக்கொண்டிருக்கிறது
பிசுக்கேறிய
நகரத்தின் இரைச்சல் ! 

*
நேர்த்தியான நீள்பாதை
தெருவிளக்கின்
நீளமான நீலவெளிச்சம்
சட்டென்று 
விபரீதமாகக்
குறுக்குவழியில் இறங்கினேன்
கூடவந்த நிழல்
பின்வாங்கிவிட்டது ! 

*
நான்
அவஸ்தைகொடுத்துத்தான்
பிறந்திருக்கிறேன்
அம்மாவின் 
மடிவயிறு முழுவதும்
தழும்புகள் !

*

அமைதி நகரம்
நீண்ட நிசித்தூக்கம்
வழிதவறிய
பெருவெளிகளிலும் 
காத்திருக்கிறது
வெண்பனி !

*

தவறி விழுந்த
சருகின் மேல்
நீர்ப்போக்கில்
ஆற்றுக்கு 
அடங்காத பெருமிதம்
வழிகாட்டி நகர்த்தும்
இரு கரைகளை
யாருமே
மதிப்பதில்லை !


*
காற்றில்
உல்லாசமாய்
ஏறிப்பயணிக்கும்
இன்றைய மனம் 

கதை சொல்லியினுடைய
விதை !