Sunday 8 March 2015

பெண்ணாக மட்டும் இருக்கவிடுங்கள்...

அவசர உலகத்தின்
ஆரவாரங்களில்
ஒதுக்கி வைக்கப்பட்டு
தனித்திருக்கும்
அலட்சியத்தில் 
உருக்குலைந்து கிடக்கிறது
ஓரு
ஓவியம்.
இரைச்சல்
நிறைந்திருக்கும்
நகரத்தில்
வார்த்தைகள் தவறிய
வாழ்கையில்
கேட்கிறது
ஊமையொருத்தியின்
விசும்பல்சப்தம்.
நீண்டநாள் சேர்த்து வைத்து
பேசுவதுக்கு
காத்திருக்கின்ற
ஓராயிரம் வார்த்தைகளின்
பிரிதலும்
கூடுதலும்
இப்படித்தான் நிகழ்கிறது
பெண்ணுரிமை
விவாதங்களின்
முன்னுரிமை பேசும்
தீர்ப்புக்களின்
கடைசி வரியிலிருந்து
முன்னேற முடியாமல்
தடுமாறிக்
குப்புறக் கவிழ்க்கிறது
யதார்த்தம்
எல்லாமாக
இருக்கும்
அவளைப்
பெண்ணாக
மட்டும்
இருக்கவிடுங்கள்.

நாவுக் அரசன் 
ஒஸ்லோ 08.03.15