Friday, 20 November 2015

சிசிலியா

கலாச்சாரத்துக்கும் அறிவியலுக்கும் எப்பவுமே ஒத்துப்போவதில்லை என்று தெரிந்தாலும் பல விசியங்களை வெளிப்படையாகப் பேச முடியாத வாழ்வியல் பின்னணியில் இருந்து வேறுபட்டு ,சுதந்திரமான கருத்துக்களை சொல்லவும், கேட்கவும் , கலந்துரையாடவும் முன்னேறிய நாடுகளில் எப்பவுமே சாத்தியங்கள் வாசல்களை அகலமாகத் திறந்து வைத்திருப்பது ஒரு அதிஸ்டம்.

                                      முக்கியமாக பெண்கள் , அவர்களின் உரிமைகள் பற்றி என்னைப் போன்ற ஒருவன் என்னைப்போலவே தமிழ்க் கலாச்சாரப் பிண்ணனி உள்ளவர்களுடன் பேசினால் விதண்டாவாதம் வந்து சிலநேரம் வெறும் வாயில் உளறி  அடி உதையும் அவல் போலக் கிடைக்கும். ஆனால் சிசிலியாவோடு கதைத்தபோது வேற மாதிரி ஆச்சரியங்கள் கிடைத்தது. 

                                         இந்த வருடம் கோடை வெய்யில் அளவுக்கு அதிகமாக ஒஸ்லோ நகரத்தை வெளிச்சமாக்கி ,வெப்ப நிலையை அதிகரித்து வைத்திருந்த ஒரு  வெள்ளிக்கிழமையன்று  சிசிலியா அவள் வேண்டிய புது வோசிங் மிஷினை நகர அங்காடியில் இருந்து ஏற்றி அவள் வீட்டில் பறிச்சு அதைப் பொருத்த  உதவி செய்வியா என்று போனில கேட்டாள்.

                             " ஏற்றிப்   பறிக்க முடியும்,,அதைப் பொருத்தும் தொழில்நுட்ப விசியங்கள் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது சிசில் , அதெல்லாம் நீதான் செய்ய வேண்டும் ஓகேயா  "

                              "  ஹஹஹா அதென்ன பெரிய வேலையா, கட்லோக் இருக்கும், அதைப்     பார்த்து பொருத்தலாம்,,"

                                  " சரி  நீ சொல்லிதா சிசில்  நான் செய்து பார்கிறேன் "

                          " குழாய் எங்க பொருத்தமாய் ஓட்டுறது எண்டு எனக்கு நல்லா தெரியும் ,,"

                                  "     ஹஹஹாஹ, என்னடி உனக்கு இண்டைக்கு கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்குற மாதிரிப் பிசத்துறாய்  ,"

                                     " நீ சும்மா  பார்த்துக்கொண்டிரு நான் அதெல்லாம் செய்வேன் ,,என்ன வாரியா, சொன்கன் ப்ரிவில்லிக் சென்றாளில் வந்து நில்லு ,எனக்கு அங்கே ஒரு மீட்டிங் இருக்கு 

                          "   சரி  வா  சிசில் "

                               "   மீட்டிங்   முடிய , நான் கார்ல  ஏத்துறேன், அலனாபுருவுக்குப் போக வேண்டும்  "

                                "  சரி வா ,,அது  ஏத்தி இறக்கி பொருத்தி முடிய,,,பின் இரவு சொயிஸ் பப் இக்கு போகலாம்,,மார்டினும்  ,ஆமுண்டும் ,ஜோன் எரிக்கும் இன்று வாறதா சொன்னார்கள் ,,நீயும் வருவியா சிசில் "


                                சிசிலியா என்ற சிசில் என்னோட பிரெண்ட். பிரெண்ட் என்றால் பிரெண்ட். வில்லங்கமா வேற ஒன்றுமில்லை. நிரந்தரமா இன்னும் யாரையும் கலியாணம் கட்டவில்லை.  என்னை விட எட்டு வயசு குறைந்தவள். நேர்ல பார்க்க என்னைவிட பதினைந்து வயது குறைந்தவள் போல இருப்பாள்.  குதிரைச்சவாரி செய்வாள், பணக்காரி , திருப்பி தாறதா ஒரு நாள் சொல்லி அவசரத்துக்கு கேட்டால் உடன காசு தருவாள். தந்திட்டு சொன்ன நாளுக்கு மறக்காமல் போன் அடிச்சு " வையடா காசை  " என்று அந்தக் காசைக் கேட்பாள் 

                                    என்னோட நோர்வே நாட்டு நண்பர்களில் ஒரே ஒரு பெண் நண்பி.  ஒஸ்லோவிலும் அவள் வில்லா என்ற  தனி வீட்டில் கீழே வசித்தாள். அதன் மேல்வீட்டை வாடைக்கு விட்டிருந்தாள் . மத்திய நோர்வேயில் உள்ள மிக மிக அழகான வால்ரஸ் என்ற இடத்தில பெருங்குடியில் பிறந்தவள். அதனாலதானோ தெரியவில்லை மிக அழகா, உயரமா இருப்பாள். ட்ரோன்ஹேய்ம்  யூனிவேர்சிட்டியில் படித்தவள். அதிகம் பேச மாட்டாள்,நிறையச் சிரிப்பாள் . முக்கியமா நிறைய விசியம் தெரியும், சுருக்கமாக சொன்னால் " இளமை இன்டர்நெட்  "
                               
                                        வயதானவர்களுக்கு வயதானதை மறக்கவைக்கும் பல நிகழ்வுகளை அன்றாடம் நிகழ்த்திக்காட்டும் அந்த  இடத்துக்கு சிசிலியாவுக்காகப்   போய்க் காத்திருந்தேன் . இன்னும் இளமையாக இருக்கும் எனக்கும் , என்னை விட அரைவாசி இளமையாக இருக்கும் சிசிலியாவுக்கும் எந்த விதத்திலும் அந்த இடம் சம்பந்தமில்லை. ஆனால்  சிசிலியா அந்த மாதிரியான சமூக நிறுவனத்திற்க்கு காசு ஒதுக்கும்ஒஸ்லோ நகரசபையில் அதன் தலைமை அலுவலகத்தில் எக்கொனொமிஸ்ட் ஆக  வேலை செய்கிறாள். என்னை சந்திக்க மட்டுமே அந்த இடத்துக்கு வரச்சொல்லி இருந்தாள்.

                                      அங்கே போய் ஒரு சவுகரியமான சோபாவில் வெளியே ஜன்னலுக்கால மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிசிலியா ஏற்கனவே வந்து அந்த பெரிய அறையின் தொங்கலில் இருந்த இன்னுமொரு பெரிய அறையில் மீட்டிங் வைச்சுக்கொண்டு இருந்தாள். அது முடிய என்னை வந்து சந்திப்பதாக சொன்னாள். அதால அந்த அறையில் இருந்த புத்தக அலுமாரியில் இருந்த புத்தகங்களின் தலைப்பை மேய்ந்து கொண்டு இருந்தேன். ஒரு நோர்வே மொழிப் புத்தகம் மிகவும் இளமையாக " இளம்பெண்ணே உனக்கு " என்ற ஒரு தலைப்பில் அழகா இளம் " டீன் ஏச் " பெண்களின் படம் போட்டு இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து கொஞ்சம் வாசித்தேன்.

                                                அந்தப் புத்தகம் இளம் பெண் பிள்ளைகள் வயதுக்கு வரும் போது ஏற்படும் உடலியல் மாறுபாடுகள், மனவியல் வேறுபாடுகள், அவை சம்பந்தமான சந்தேகக்  கேள்விகள் , அவற்றுக்கு நம்பிக்கை தரும் பதில்கள், பெண்ணியல் பற்றிய நிறைய விஞ்ஞான தகவல்கள் என்று சுவாரசியமாக இருந்தது அந்தப் புத்தகம்.  இளம்  பெண்களின் ஒவ்வொரு பருவ நிகழ்வும் அழகாக படம் போட்டு விளக்கி இருந்தார்கள்.

                                                          அதை வாசித்தபோது உண்மையாகவே என்னோட மரமண்டை மூளையில் எவளவோ விசியங்கள் அன்றுதான் ஆச்சரியமாக மணி அடித்தது. முக்கியமா ஒரு பெண்ணின் கருமுட்டை  வெறும் ஐந்தரை மணித்தியாலங்கள் தான் உயிர்ப்புடன் கருப்பை வாசலில் காத்திருக்கும் என்றும், ஒரு ஆணின் விந்து ரெண்டரை நாட்கள் வரை உயிர்ப்புடன் உள்செலுத்தப்பட்ட பின் இருக்கும் என்றும் போட்டிருந்தார்கள். அதனோடு சேர்ந்த பல விசியங்களை " சயண்டிபிக் அப்புரோச்சில் " அழகாக,எளிமையாக எழுதி இருந்தார்கள்.

                                                       அதே புத்தகத்தில் ஒரு சின்னக் காட்டூன் படம் போட்டிருந்தார்கள்.ஒரு  டீன்ஏச்  இளம் ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் ஒரே கட்டிலில் படுத்து இருப்பார்கள். ஆனால் அந்தக் கட்டில் " அப்பர் டெக் " என்ற ரெண்டு தட்டுக் கட்டில் ,பொடியன் மேலேயும், அந்தப் பெண் பிள்ளை கீழேயும் படுத்திருந்து ஜோசிக்கிரார்கள்,பொடியன் ஜோசிக்கிறான்  " இவளுக்கு மேலே படுத்து இருப்பாதால்  இவள் கர்ப்பம் ஆகிவிடுவாளா " என்றும் அந்தப் பெண் பிள்ளை " இவனுக்கு கீழே படுத்து இருப்பதால் இவன் என்னைக் கர்ப்பம் ஆக்கி விடுவானோ " என்றும் ஜோசிக்கிறாள் .

                                                  இளையவர்களின் ஆதராமான சந்தேகத்தை  எளிமையாக விளக்க அப்படி ஒரு காட்டூன் வடிவில் கொஞ்சம் ஜோக் ஆகப் போட்டு இருந்தது, அதைப் பார்த்து சிரித்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை மூடி வைக்க முன்னுக்கு சிசிலியா நின்றாள்

                                     " இப்ப என்னத்துக்கு இந்தப் புத்தகத்தைப் பார்த்து சிரிச்சனி,என்ன எழுதி இருக்கு,,எனக்கும் சொல்லு நானும் சிரிக்கிறேன் "

                                        என்றாள் , நான் அந்தப் பக்கத்தைக் காட்டினேன்,ஹஹஹஹா எண்டு சிரிச்சாள், பிறகு அநதப் புத்தகத் தலைப்பை பார்த்தாள், வேற பக்கம்களையும் புரட்டிப் பார்த்தாள்,பார்த்திட்டு

                                  " ஒ இந்தப் புத்தகமா  இவளவு நேரமும் இண்டரஸ்ட் ஆக வாசித்துக்கொண்டு இருந்தாய் ,,"

                              "ஹ்ம்ம்  " 

                                 "  என்ன படிச்சுப் புரிந்து கொண்டாய்,,நல்ல விசியம் என்னவும் இருந்தா எனக்கும் சொல்லேன் "

                                     "   சயன்ஸ்  தான்  எழுதி இருந்தாங்க ,," 

                                    "  .உன்னோட வாயல லேடிஸ் ஒன்லி மாட்டார் கேட்க்க சுவாரசியமா இருக்கும் ,,சொல்லு "

                                 " ஹ்ம்ம், ஒரு பெண்குழந்தை  வயதுக்கு வரும் போது உடலியியலில் நடக்கும் மாற்றங்களை அழகாக எழுதி இருக்கிறார்கள், எங்களின் நாட்டில் இப்படியெல்லாம் வெளிப்படையாக இதை பேசவோ,எழுதவோ மாட்டார்கள்..  "

                              "    ஒ உங்கள் நாட்டிலும்   பெண்குழந்தைகள்   வயதுக்கு வருவார்கள் தானே ,,அதில  என்ன குழப்பம்,, சரி வா, காருக்குள்ள இருந்து கதைத்து கதைத்து கடைக்குப் போவோம் "

                                  என்றாள். காருக்க ஏறி பெல்ட் போட்டு, போட்டிருந்த எப் எம் ரேடியோவை ஆப் செய்து போட்டு , லிப்ஸ்டிக் எடுத்து சொண்டில ரெண்டு இழுவை இழுத்துப்போட்டு,டாஸ் போட் கண்ணாடியில் பார்த்து தலைமயிரை ஸ்டைலா முன்னுக்கு இழுத்து விட்டுப் போட்டு , ஜி பி எஸ் நேவிக்கேசனில் அலனா புறு  எண்டு அடிச்சுப்போட்டு ,காரை ஸ்டார்ட் செய்து, ரிவேஸ் எடுத்து , ஒஸ்லோவுக்கு போகும்  கொஞ்சம் நேரான வேகப் பாதையில் இறக்கினவுடன சிசிலியா கதையைத் தொடக்கினாள்.

                                 " சொல்லு,உங்கள் நாட்டில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தால் என்ன செய்வார்கள்,,ஒரு ஸ்ரீலங்கன் தமிழ் குடும்பம் அதுக்கு ஒரு விழா எடுத்ததை இங்கே ஒஸ்லோவில் ஒரு அல்பத்தில் படங்கள் பார்த்தேன் "

                                      " ஹ்ம்ம்,,அப்படிதான் இரவல்  சீலையை நம்பி இடுப்புக் கந்தையைக் கழட்டி  எறிந்த மாதிரி செய்வார்கள் .

                                      " என்ன ஒரு சோடனை,,ஹ்ம்ம்,,சும்மா  பாபிலோனியன் தொங்கு பூங்கா போல சோடிச்சு ,,யப்பா,,பார்க்கவே  அழகு ..,உண்மையா என்னதான் செய்விங்க "

                                " யெஸ்,,அதைதான் சாமத்திய வீடு எண்டு எங்கள் பக்கத்து மனிதர்கள் சொல்லுவார்கள் ,, "

                               " சரி அதை ஏன் செய்கிறார்கள்,,பெண்பிள்ளைகள் வயதுக்கு வருவது ஒன்றும் உலக அதிசயம் இல்லையே,,இயல்பா உடம்பில நடக்கும் பயோலோயிகள் ,அனோடோமிகள் மாற்றம் தானே ,,"

                              " அதுதான் எங்களுக்கு கொண்டாட்டம்,,எங்கள் கலாசாரத்தில் பெண்களை கொண்டாடுவது ஒரு சம்பிரதாயம்,,அதைவிட  வருடத்தில் குறைந்தது அஞ்சு கொண்டாட்டம் நடக்கும்,,அதில பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் இதுவும் ஒரு கொண்டாட்டம் "

                             "  ஒ ஆனால் நிறைய மனிதர்கள் வருவார்களே, எங்க இருந்தப்பா இவளவு ஆட்கள் வாறாங்க,,பெரிய முயூசிக் கொன்சேர்ட்டுக்கு வாற மாதிரி  "
                              
                                " அது உண்மைதான் நெருங்கிய உறவினர், நண்பர்கள் இப்படிக் கொண்டாடங்களில் தான் ஒன்று சேர்வார்கள், அதுகள்  குடும்பங்களின் நெருக்கத்தை அதிகரிக்கும் ஒரு சம்பவம்,,உங்களுக்கு  கிறிஸ்மஸ் போல "

                                " ஒரு வருடத்தில் ஒரே ஒருமுறைதானே கிறிஸ்மஸ் வருகுது எங்களுக்கு,,சரி அந்த சாமத்திய வீட்டில் என்ன ஸ்பெசல் ஆக அந்தப் பெண்ணுக்கு செய்வார்கள் "

                                    " தலைக்கு தண்ணி வார்ப்பார்கள் "

                                     " என்னது தலையில குளிக்கிறதா,,,அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு ஆட்கள்,,இவளவு  சோடனை,,கொண்டாட்டம் "

                           " ஹ்ம்ம்,,அடிப்படையில் அதுதான் , அறுகம் புல்லைப் புடுங்கி  பாலில போட்டு, அந்தப் பாலை பூசுமஞ்சள் தடவிய தலையில ஊற்றி தலைக்கு தண்ணி ஊற்றிக் குளிக்க வார்ப்பார்கள்.."

                          " அதென்ன  அறுகம் புல் ,,ஹெர்பல் சாம்பூவில் கலந்திருக்குமே ஆலோவீரா  என்ற ஹெர்பல் அதுவா ,,பூசு மஞ்சள் ,அதென்னப்  பா ,,ஒருவகை சம்பூ  அல்லது பொடி லோஷனா ,,"

                             "  இல்லைப்பா அருகம்புல் அது  இங்கே இல்லை,,பால் அதுதான் கவ் மில்க்,,பூசு மஞ்சள் அதுதான் சமையலுக்குப்  பாவிக்கும்  டெர்மரிக்  "

                             " ஹ்ம்ம் ,,பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டி என்ன குற்றமா,,அல்லது  அந்தப் பெண்ணுக்கு அதுக்குப் பிறகு ஒழுங்கா மாதவிடாய் வராதா,,,,"

                                 " அதெல்லாம் வரும்,அல்லது முத்திப் பிந்தி வந்தாலும் வர வேண்டியது எல்லாம் வரும் அது பிரச்சினை இல்லை ,,இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்,,ஆனால் மஞ்சள் அது இயற்கையான கிருமி நாசினி  அது வைச்சுக் குளிச்சா யாருக்குமே நல்லதுதான் "

                              " ஹ்ம்ம்,,வேற  என்ன செய்வார்கள்,,அந்தப் பெண்ணை தேவதை போல அலங்கரித்து மேடை போல ஒண்டில சாமி போல வைச்சு பூசை செய்வார்களா "

                              "  ஹஹஹஹா அது பூசை இல்லை,,ஒரு வித ஆராதனை,,ஆராத்தி எண்டு சொல்லுவார்கள்,,எங்கள் நம்பிக்கைப்படி ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைச்சுதான் அந்தப் பெண்ணின் எதிர்கால  ருது திருமண  சாதக பலனே கணிப்பார்கள்,,,"

                           "  அப்படியா ,,என்னடா சொல்லுறாய் "

                                        "   அதன் அடிப்படையில்தான் அநதப் பெண்ணின் திருமணம் அமையும்,, அவர்களின் கலியான பேச்சு ஆரம்பமே சாமத்திய வீட்டில் இருந்து தொடங்கலாம் "

                                 "   ஒ ,,அப்படியா,,,இண்டரஸ்டிங் ,,ஒ கலியாணம் தொடங்குமா,,வாவ் எவளவு நல்லா இருக்கு கேட்கவே "

                    "அது ஒரு நல்ல ஆரோக்கியமான சடங்கு,,வயதுக்கு வந்த பெண்ணின் உடல்நலத்தை  முன்னிறுத்தி பல விசியங்கள் செய்வார்கள் " 
                                            
                                                 " ஆனாலும் அந்தப் பெண்ணின் சோடனையப் பார்க்க எனக்கே கால் ரெண்டும் குறுகுறுக்குது, எனக்கு அப்படி யாருமே செய்யவில்லையே  என்று, நான் ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் "

                          " கிழிஞ்சுது,,நீ அங்கே பிறந்திருந்தால்,,அங்கே இருந்து  கொண்டு அய்யோ நான் ஒரு நோர்ஸ்கியாப் பிறக்கலையே என்று ஏங்குவாய் "

                          " இல்லை,,எனக்கும் அங்கே சாமத்திய வீடு நடந்து இருக்குமெல்லா,,அழகா சோடிச்சு என்னையே எல்லாரும் கவனித்துப் பார்க்கிற மாதிரி ஒரு நாள் கிடைக்குமென்றால் எவளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா, ஒரு பெண்ணாக இருந்து அதை உணர்ந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் "
                           
                              "உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே  பலர் தங்களைப்   கவனித்துப் பார்க்க வேண்டும் என்கிற மாதிரித்  தானே சோடிச்சுக்கொண்டு திரிகிறார்கள் ,பிறகென்ன அதுக்கெண்டு ஒரு ஸ்பெஷல் நாள்  "

                                              இந்த இடத்தில இதையும் சொல்லத்தான் வேண்டும். உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் அழகை ஒருகணம் யாராவது உற்றுப்பார்க்க வேண்டும் என்ற அவாவில் தானே இயங்குகிறார்கள். கோடிக்கணக்கான டாலர் பிரளும் அழகுசாதன, முகப் பவுடர், அழகு சோடனைப் பொருட்கள் விற்பனை நடப்பதே பெண்களுக்குப் பின்னே உள்ள அந்த சைக்கோலோயியை அடிப்படையில் வைத்துக்கொண்டு தானே . இந்த முகப்பவுடரில் ஏமாந்து வாழ்கையை முழுதாகத் தொலைத்த ஸ்ரீராமன்கள் நிறையப்பேர் இருக்கிறார்களே.

                                  "  சரி ,,இப்ப நீ என்னத்துக்கு அதிகம் கலவரம் ஆகுறாய், சாமத்திய வீடு தமிழரின்  எளிமையான  கொண்டாட்டமாக இருந்தது , இப்ப சில தமிழ் வீடுகளில் ஆடம்பரமும், தங்களின் பணக்காரத்தனத்தை காட்டவும் வெளிக்கிட்டு   திண்டாட்டமும்  ஆகிவிட்டது சிசிலி "

                              " எனக்கும் ,பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்க வார்த்து  இருந்தா,,நல்ல கலியாணம்  கிடைத்து இருக்கும் போல,,,அதுகள்  வைச்சு தலை முழுக்காட்டாததால் தான்,,ரெண்டு தரம்  போய் பிரண்ட் பிடிச்சும்,,ரெண்டு பேரும் ஆறு மாதத்தில ஓடிட்டாங்கள் போல  " 

                                     " ஹஹஹா சிசிலி நீ என்ன ஒரு லொயிக் இல்லாமல் குழந்தைப் பிள்ளைகள் போல ஜோசிக்கிறாய் ,அல்லது என்னோட காலை வாருரியா "

                                      " இல்லை ,,நான் உண்மையத்தான் சொல்லுறேன்,,நான் ஒரு கலாச்சாரா அடையாளம் இல்லாத வெறுமையில் வாழ்வது என்னோட எண்ணங்களைப் பாதிக்குது,,அதன் பாதிப்பு என் நடத்தையில் எதிரொலிக்கலாம் " 

                                   " யப்பா சாமி  நான் தெரியாம உனக்கு எல்லாம் சொல்லிபோட்டேன் ,,உன்னோட  போய் பிரண்ட்ஸ் ஓடிப்போனதுக்கு  பால் அறுகு பூசுமஞ்சள் காரணமில்லை "

                              "என்னடா சொல்லுறாய் , எனக்கு என்ன குறைச்சல் சொல்லு ,எனக்கு நீ சொல்லும் விளக்கம் கேட்கக்  கவலையா இருக்கு  " 

                                        "  அதுக்குக் காரணம்  உன்னோட அணுகுமுறை . உன் வாழ்க்கை முறையில் உறவு என்பதை நீ எப்படி நடைமுறையில் கடைப்பிடிப்பது என்பதில் தங்கி உள்ளது # 

                             "நீ  எப்பவும்  என்னோட அன்பா கதைக்கமாட்டாய்,,என்னை ஏண்டா  திட்டுறாய்,, எப்பப்  பார்  இப்பிடியே கதைக்கிறாய் ,, எனக்கு அழுகை வருகுது தெரியுமாடா   "

                                 " உனக்கு ஒண்டும் குறைச்சல்  இல்ல இப்பவே தேவதை போலதானே இருக்கிறாய்.."

                              " ஹ்ம்ம்,,உண்மையாவா சொல்லுறாய், நான் அதிகம் கதைகிறேனா ,"

                                " ஹஹஹாஹ்,,சினிமாவில் கவர்ச்சி நடிகை அதிகம் கதைத்தால் யாரும் ரசிக்கமாட்டார்கள், ,அவள் சும்மா உடல் மொழியால் பேச வேண்டும் எல்லாரும் ரசிப்பார்கள் "

                                " என்னது என்னைப்பார்த்தால் கவர்ச்சி நடிகை போலவா இருக்கு,,இப்ப அலனா புரு  போறதுக்கு இடையிலேயே என்னட்ட அடி வேண்டிச் சாகப்போறாய் "

                            "  ஆமாடி மோட்டுக் கழுதை, சிசிலி  ,நீயே நேற்றுதான் சாமத்தியப்பட்ட மாதிரி மினுக்கு மினுக்கு எண்டு மினுக்கிக் கொண்டு அணில் பாயும்  செவ் இளனிக் குரும்பை , மாலையில் மொட்டு விட்ட மல்லிகை போல இருகிறாய் " 

                           "   ஹ்ம்ம்,,,உண்மையாவா சொல்லுறாய்,,உண்மையாவா சொல்லுறாய் "

                               "  ஆமாடி,,மோட்டுக் கழுதை உண்மையாதான் சொல்லுறேன் சிசிலி, நீ  நாயுண்ணி மலர்களுக்கு நடுவில்  நாகதேவன்துறை  செம்மங் குண்டில  செளிர்த்து வளர்ந்த செந்தாமரை போலவே இருகிறாய்  "

                             அந்த உரையாடல் முடியும் போது அலனாபுறுக்கு வந்திட்டம், முன் இருட்டு இருட்டி விட்டது, சிசிலியா காரைப் பார்க் பண்ணிப்போட்டு ,இறங்கி உள்ளுக்குப் போய் கொஞ்ச நேரத்தில் கையில பேப்பர்களோடு வந்தாள், காரைப் பின்னுக்கு விநியோகிக்கும் வாசலுக்கு கொண்டுபோய் டிக்கிய திறத்து அதில வோசிங் மிசினை ஏற்றி முழுவதும் உள்ளே தள்ள இடமில்லாமல் பின் கதவை அரைவாசி மூடி பெல்ட் போட்டுக் கட்டி மெல்ல மெல்ல ஓடிக்கொண்டு வந்தோம். அவள் வீட்டுக்குப் போற வழி முழுவதும் ஒன்றும் பேசவில்ல,எப் எம் ரேடியோவைப் போட்டுடுத் தனக்குள்ள சிரிச்சுக்கொண்டு வந்தாள்   ,

                                                   வோசிங் மிஷினை அவளோட வீட்டில கொண்டு வந்து இறக்கி வைச்சு முடிய, சிசிலியா வந்து உடனையே பைப் லைன் எல்லாம் இழுத்துப்போட்டு பொருத்துவாள் என்று நினைக்க ,அவள் சம்பெயின் வைட் வைன்  போத்தலும் ரெண்டு சம்பையின் கிளாசும் எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைச்சாள், மேலுடுப்பைக் கழட்டிபோட்டு ரெண்டு நூலில தொங்க விட்ட மாதிரி  ஒரு சின்ன ஸ்போர்ட்ஸ் பெனியன் போட்டிருந்தாள்.  

                            " சிசிலி,,,என்னாச்சு ,,நீ இப்ப பைப் லைன் எல்லாம் கொழுவவில்லையா , நீதானே அது செய்யுறது எண்டு சொன்னாய் ,அதையும் என்னையே  செய்யச்சொல்லி  வேலை காட்டப்போறியா  .."

                           "  இல்லை,  நீ  ஏன் கிடந்தது பதறுகிறாய் ,,நீயே  கொழுவு,,கட்லோக்கைப் பார்த்துக் கொழுவு,கஷ்டம் இல்லை,,மூண்டு விதமான பைப் லைன் தான் வரும்,நீ பிடிப்பாய்,,ஒரு ஆம்பிளை வியர்க்க வியர்க்க வேலை செய்யுறது பார்க்க ஆசையா இருக்கும் ,,அவங்கள் தான் மச்சோ ஆண்மை உள்ள ஆம்பிளைகள் .. "

                              " அடிடா சக்கை எண்டானாம் , சரி ,,நான்  கொழுவிப் பார்கேறேன்,,நீ என்ன இப்பவே வைன் போதில்லை திறக்கிறாய்,,இரவு சொயிஸ் பப் போற பிளான் இல்லையே "

                               " ஹ்ம்ம்,,அங்கேயும் பிறகு போவோம்,,இன்றைக்கு என்னவோ ரொமண்டிக் மூட் ஆக இருக்கு,, வெளிய வெயில் சூடு,,ஹ்ம்ம்,,உள்ளுக்கும் எல்லாம் சூடாக் கொதிக்குது ,,ஹஹஹாஹ் ,,என்ன ஜோசிகுறாய்,,வீட்டுக்கு உள்ளே என்றேன் " 

                                            என்று சொல்லி ஜன்னல் எல்லாத்தையும் திறந்துவிட்டாள்,நான் கட்லோக்கை பார்த்து ஒரு மாதிரி எல்லா பைப் லைன்னும் கொழுவிப் போட்டு, சுடுதண்ணி, பச்சைத் தண்ணி , ரெண்டையும் திறந்து போட்டு  முதல் முதல் மிசினைப் போட்டேன்.அது பூனை புறுபுறுத்த மாதிரி மெல்லிய சத்தத்துடன்  சுற்றத் தொடங்க, சிசிலியா வந்து பார்த்தாள். கையில கொண்டு வந்த ஒரு சம்பெயின் வைன் கிளாசைத் தந்து தன்னோட வைன் கிளாசுடன் முட்டி மோதி

                   " சியேர்ர்ர்ர்ர்ர்ஸ்  ஒரு கிளாஸ் குடிச்சிட்டு சாப்பிடப் போறியா "

                                                 என்று கேட்டாள், எனக்கு வேண்டாம் என்றேன், அவள் என்னமோ மைக்கிரோ அவனில சூடாக்கி சாப்பிட்டாள் ,எனக்கு ஒரு கிளாஸ் வையின் வாயில வைச்சா பிறகு சாப்பிடமாட்டேன்,,பிறகு தண்ணி தண்ணியா உள்ளுக்கு விட்டாத்தான் தாகசாந்தி தீரும். ஆனால் வைன் என்னோட விருப்ப லிஸ்டில்  இல்லை, அதனால  அந்த ஒரு கிளாஸ் வைன் கிளாசை வைச்சு சூப்பிக்கொண்டு அவளோட மூன்று பூனைகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிசிலியா குளிக்கப் போறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு துவாயைக் கட்டிக்கொண்டு வந்தாள், 

                               " இப்ப நீ இண்டைக்கு சொன்ன பால் அறுகு மஞ்சள் வைச்சு தலையில குளிச்சா எப்படி இருக்கும் ,,ஹஹஹஹா,,இன்றைக்கு இரவு ருது கலியாணம் என்னவும் நடக்க சான்ஸ் கிடைக்குமா ...ஹஹஹஹா...சொல்லு நீ தானே சாத்திரம் எல்லாம் நல்லா சொல்லுறாய் .."

                               "  இப்ப    பால் அறுகு மஞ்சள் வைச்சு தலையில குளிச்சுப்போட்டு வெளிய போனால் கலியாணம் கிடைக்காது,,,உனக்கு சன்னிதான் பிடிக்கும் ,,போடி போய் முதல் குளியடி,,வைன் வாயில மணந்தால் சொயிஸ் பப்புக்கு உள்ள விடமாட்டான் "

                                  "  ஹ்ம்ம்,,பாத் ரூம் கதைவைத் திறந்து போட்டு குளிக்கவா ,,உனக்கு ஒண்டும் ஆட்சேபனை இல்லைதானே "

                                 " உன்னோட வீட்டில நீ என்னத்தை வேண்டுமெண்டாலும் திறந்துபோட்டுக் குளி. எனக்கு ஒரு மண்ணும் இல்லை.ஹஹஹஹஹஹா"

                            " இப்ப என்னத்துக்கு இப்பிடி அலாவுதீன் அற்புத விளக்குக்  கண்டு பிடிச்ச மாதிரி  சிரிக்கிறாய்,,சொல்லு "

                            " கதைவை மூடிக்கொண்டு குளியடி,,உன்னோட பூனைகள் என்னத்தையும் பார்த்து மிரளப் போகுதுகள் "

                              " ஹிஹிஹிஹிஹிஹி,,அதுகளுக்கு எல்லாம் நல்ல பழக்கம்,,,,நீ மிரளாமல் இரு ..அது  போதும்..பிறகு  நான் அம்புலன்சுக்கு அடிக்க ஏலாது "

                                       நான் ஹோல் சோபாவில் மடிஞ்சு இருந்துகொண்டு டெலிவிசனில் " ஜக்தன் போ சார்லிகெட் " என்ற  " விவசாயி காதலியத் தேடுறான் " என்ற நோர்வே நாட்டு நாட்டுப்புற விவசாயி கண்ணாபிண்ணா எண்டு காதல் தேடும்  நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன். கொள்கையைத் தளர்த்தி  வாயில நனைச்சதால இனி எல்லாம் ஒண்டுதான் என்று  வைன் போதில்லை சரிச்சு உள்ளுக்க விட்டுக் கொண்டிருந்தேன். 

                               சிசிலியா குளிச்சு முடிச்சு நடு  உடம்பை மட்டும் மறைக்கும் குறுக்குக் கட்டில  துவாயைக் கட்டிக்கொண்டு  பாத்ரூம்  கதவில எட்டிப் பார்த்தாள் , அதுக்குப்பிறகும்  ஒரு மணித்தியாலம் சோடினை போட்டு வெளிய வந்தாள்.துவாயைக் கட்டிக்கொண்டு ஹை ஹீல்ஸ் போட்டு ஒரு மாதிரி வில்லங்கமா சொண்டைக் கடிச்சாள் . நான்   மேலே இருந்து கீழே போட்டிருந்த ஹை ஹீல்ஸ் வரைக்கும் ரெண்டுதரம் ஆச்சரியாமா பார்த்தேன் .அவள் அழகு அப்படி சுண்டியிழுக்கும் அழகு 

                                தலை மயிரை மர்லின்மன்றோ போல நடுவகிடில் பரப்பி ரெண்டு பக்கமும் பொப் பிடிச்சு இருந்தாள். கண் இமைக்கு போட்ட மஸ்கார இஸ்தான்புல்லுக்கு வரச்சொல்லி அழைப்பு விட்டது, சொண்டில லிப்ஸ்டிக்  கலீல் ஜிப்ரானின் காதல் கவிதையில் தோச்சு எடுத்த மாதிரி இருக்க, ஐய் ப்ரோ இல் பெண்மயில் நிண்டு அகவும் சத்தம் வந்தது. கழுத்தில கோகினூர் வைரம் வைச்ச பென்டன்  போல என்னவோ போட்டிருந்தாள், 

                                 டொல்லஸ் கபானா  இத்தாலியன் வெஸ்ட் போட்டு ,அதுக்கு மேலே லியுவான் மொண்டே பிரெஞ்ச்  கலெக்சன் சமர் கோட் போட்டு கீழே ஒரு ஹென்னேஷ் அண்ட் மாரிஸ் லெதர் குட்டைப் பாவாடை,,அதுக்கு கீழே முழங்கால் முட்டி வரை நீண்ட ரெட் லேடி சப்பாத்து. தோளில மைக்கல் குரோஸ்  செலிபிரிட்டி நம்பர் வன் ஹான்ட்பாக் கொழுவியிருந்தாள் . எல்லாம் சேர்ந்து இண்டைக்கு இரவு என்னவோ வில்லங்கம் வரப்போகுது போலதான் இருந்தது.

                                         சிசிலியா எனக்கு ஒரு விலை அதிகமான  புது சென்ட் பாஸ்ட் செபஸ்தியான் சேட் கொண்டு வந்து தந்தாள். அவள் ரோம் சுற்றிபார்க்க  இத்தாலி போனபோது ஒரு டசின் வேண்டிக்கொண்டு வந்ததா சொன்னாள். அளவு எனக்கு சரியா இருந்தது,,நானும் பாத் ரூமில் போய் அரைக் குளியல் குளிச்சிட்டு அந்த சேட்டப் போட்டுக்கொண்டு வந்து போக வெளிக்கிட 

                                   " இண்டைக்கு இரவு எனக்கு கலியாணம் நடக்கப்போகுது ஏன் சொல்லு பார்ப்பாம் "

                              "   ஹ்ம்ம் தெரியலை ,நீயே சொல்லு சிசிலி "

                             " நான் இப்ப தலைக்கு வைச்சுக் குளிச்ச  லோசனில்  பாலும்,,பாலாடையும் ,,ஆலோவீராவும்  தேனும் ,,அதுதான் மில்க் அண்ட் ஹணி  ஆலோவீரா  சேர்த்து செய்தது எண்டு போட்டு இருந்தது "

                               " அடி,,செருப்பால,,,,அய்யோ,,உனக்கு தெரியாமல் நான் விளக்கப்பட்டுத்தப்போய் இப்ப நரி சிங்கதிட்ட மாட்டி தப்பி ஓடி வந்து வாசிக சாலையில் உதயன் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மாதிரி மாட்டிட்டனே "

                               "  என்னடா  சொல்லுறாய் "

                                "அடியே எருமை மாடு ,,நீ போட்ட சம்புக்கும் பால் அறுகு பூசுமஞ்சளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை,,இப்ப நீ வெளிக்கிடுற ஸ்டைலுக்கு கலியாணமில்லை..யாரும் இழுத்து வைச்சுக் கற்பழிக்கப் போறாங்கள் "

                                 "  ஹஹஹஹா,,நீதானே என்னோட வாராய்..யார் வரப்போறான் என்னோட சேட்டை விட "

                                   "  அட  நானே ஒரு பயந்தாங்கொள்ளி ,எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா போல அவசரத்தில எஸ்கேப் ஆகிற ஆள்டி மோட்டு  எருமை "

                                   "   இன்னும் ஒரு கிளாஸ் வைன் அடிச்சிட்டு இறங்குவமா,,அடுத்த  தேபாணா  ட்ரைன் 21. 06 இக்கு கீழ ஸ்டேஷன் அடிக்கு  வரும் ,,பாட்டி முடிய நீ டாக்சியில் போ,,நான் காசு தாரன் ,,நானும் டாக்சி அடிச்சுதான் வருவேன் "

                                 "   ஹ்ம்ம், "

                                    "அல்லது  இன்றைக்கு இரவு என்னோட வீட்டில தங்கேன், எனக்கும் இரவெல்லாம்  ஜாலியா கும்மாளம் அடிச்சுப்போட்டு டக் எண்டு  கரண்ட் நின்று லைட் எல்லாம் அணைந்த மாதிரி  தனியவர  வெறுப்பா இருக்கும் "

                                    "  இல்லை,,சிசில்,,எனக்கு அது சொல்ல முடியாது இப்ப,,,பிறகு போறநேரம் பார்க்கலாம்,,,,

                                   "  என்ன நடக்கும்  சொல்லு,,உன்  வாயால சொல்லடா  என் கந்தர்வா "

                                       "  என்ன நடக்குது  எண்டு முதல்ல சொயிஸ் பப் புக்கு போவோம்,,மாட்ரின் ரெண்டு மெசேஸ் அனுப்பி இருக்கிறார்,,எங்க நிக்கிரம் எண்டு கேட்டு "

                            நான் ஒரு போத்தல் வைட்வைன் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடித்ததால்  ஒஸ்லோ சிட்டிக்கு நடுவால் நடந்து போகவே வெறி போல ஆட்டியது, சிசிலியா உற்சாகமாக கையை விசிக்கிக்கொண்டு " Reidun Sæther " என்ற நோர்வே பாடகி பாடிய " High on love " பாட்டுப் பாடிக்கொண்டு, நடைபாதை மனிதர்களை பார்த்துக்கொண்டு,  கத்திக்கொண்டு கடந்து போன சோமாலியர் கதைப்பது போல வேடிக்கையாக மிமிக்கிரி செய்துகொண்டு  வந்தாள். எனக்கு நடக்கிற மாதிரி இல்லாமல் கொஞ்சம் மிதக்கிற மாதிரி இருந்தது ஒவ்வொரு அடியும் 

                                       சொயிஸ் பப்புக்கு நாங்க போய்ச் சேர்ந்த நேரம் வெளி வாசல் வரைக்கும் அது நிரம்பி இருந்தது,பலர் இருக்க இடமில்லாமல் நிண்டுகொண்டு குடித்துக்கொண்டிருந்தார்கள் , " மெட்டாலிக்கா  ஸ்டைல்"  இசைக்குழு ஒண்டு லைவ் ஆக உள்ளே மேடையில் வாசித்துக்கொண்டு இருந்தார்கள்,அவர்களின் முயூசிக் சத்தம் மரம் அறுக்கிற மிசினில இருந்து வாறது போல வெளிக்கிளம்பி கண்ணாடி ஜன்னல் எல்லாத்தையும் அதிர வைத்தது. 

                                          பப் வாசலில் போய் வெளிக் கதவின் கண்ணாடியை  வெறியில இடிக்கப் பார்த்தேன்,அதில  நின்ற " டோர் வக்த் "  என்று சொல்லும்  வாசல் சிக்கியூரிட்டி என்னைக் கட்டாயம் வெறியா என்று செக் பண்ணுவான் என்று நினைக்க,அவன் என்னை உள்ளுக்கு விட்டான்,,உள்ளுக்கு கதவைத்திறந்து கொண்டு போய் ஒருத்தனின் நெற்றியில் மோதினேன்,,அவன் திரும்பிப் பார்க்க முதலே பக்கத்தில நின்டவனின் மண்டையில் மோதினேன் ,பின்னால பார்க்க சிசிலியா உள்ளுக்கு வரவில்லை,திரும்பிப் பார்ப்பமெண்டு  திரும்ப பூமி ஒருக்கா மற்றப் பக்கம் சுத்திச்சு ஜன்னலுக்கால பார்க்க  சிசிலியாவை மறிச்சு வைச்சு இருந்தான், ஒரு மாதிரி மிதந்து கொண்டு வெளிய வந்து  


                               "  ய்ய்வளை  யேயேன் மமாமாறிச்சு வைஸ்ஸ்ச்சு  றிருக் ருகிறாய்,,ய்ய்வள் யேன் பிரிரிரெண்ட் யின்னோட வென்ந்தாள்,,லுள்ளே வேறும் ஸில்ல நோண்பர்கள் யேங்களுக்காக கா ஆத்துக்கொண்டு யிய்யிருக்கிறார்கள்,,அவ்வவர்கள் ஒரு மேசையே புக் ப்னப்ண்ணி வைத்து யிஈருக்கிறார்கள்  "


                            "    பிரதர்,,நீ ஓகே,நீ நிதானமாய்க்  கதைக்குறாய் ,நிதானமாய் நிக்குறாய் ,,இவள் கொஞ்சம் நடை தடு மாறுகின்றாள் ,,கொஞ்சம் பொறு நான் அஞ்சு நிமிடம் கவனித்துப் போட்டு உள்ளே விடுறேன் "

                                என்றான்,கொஞ்ச நேரத்தில் சிசிலியா உள்ளுக்கு வந்திட்டாள்,வந்து முதல் கொஞ்சநேரம் மாட்ரின், ஆமுன்ட்,ஜான் எரிக்குடன் கதைச்சுப்போட்டு ஒரு " ப்லோடி மாரி " கொக்டையில் எடுத்தாள், அதை அவள் உறிஞ்சி முடிக்க முதல் நான் மூன்று " ஜெகமாஸ்தர் சொட் " அடிச்சு முடிச்சிட்டேன், பிறகு அவள்  ஒரு " கியூபா லிபரே "  கொக்டைல் எடுத்தாள், அது முடிய முதல் நான் ரெண்டு " சிர்மனோவ் வோட்கா " சொட் உள்ளுக்கு தள்ளிட்டேன் ,கடைசில 

                          " என்னது  பந்தயக் குதிரை ஓடி முடிச்சு தொழுவத்தில தண்ணியை முகத்தால இழுத்த மாதிரி இழுக்கிறாய்,,"

                       " இந்தப் பப்பில் ஒரு மண்ணும் எனக்கு நடக்காது,,இது  என்னோட சொந்த வீடு போல,,நீ பிசத்தாதை "

                                   "  இண்டைக்கு என்னவோ நடக்கப்போகுது ,எனக்கு கடைசியா இன்னும் ஒரு  கொக்டைல் எடுக்கலாம் போல இருக்கு,,"

                             "   ஒண்டும் வராது  டான்ஸ்  ஆடு ,,இயல்பா இரு,,என்ஜாய்  பண்ணு ,,உலகத்தை மற..முக்கியமாய் நாளை என்பதே இல்லை என்று நினை சிசிலி "

                                  "  இப்பவே உன்னோட கண் நாலாத் தெரியுது,,நீயே சொல்லேன் ஒரு ரொமாண்டி ஆன கொக்டைல்  "

                            "  செக்ஸ் ஒன் த பீச் "

                             " என்னது,,இது,,உனக்கு  வெறி ஏறிட்டுது போல,,,ஹ்ம்ம்,,இவளவு கெதியா உனக்கு ஏறாதே இரும்பு மனிதா,,,என்னாச்சு இன்று "

                            " ஹ்ம்ம்,,உனக்கு செக்ஸ் ஒன் த பீச் என்று ஒரு கொக்டைல் இருக்கு தெரியுமா, டொமினிக்கன் ரிப்பப்பிளிக் தான் அதன் பிறப்பிடம், கரிபியன் தீவுகளில் அது பேமஸ். மலிபு வெள்ளை ரம் விட்டு செய்வாங்கள் ,இங்கே இருக்கா  என்று கேள் " 

                           "  வாவ்,,வாவ்,,உனக்கு வெறி எண்டாலும்,,முக்கியமான விசியங்களை மறக்க மாட்டாய்,,,வாவ் வாவ் செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா  அய்யோ பெயரைக் கேட்கவே உடம்பெல்லாம் கிளுகிளுப்பா இருக்கே,,நான் ஜாமைக்கா  , பார்படாஸ் போய் இருக்கிறேன் ,,ஆனால் இந்த கொக்டைல் கேள்விப்பட்டதில்லையே .." 

                                     " ஹ்ம்ம்,,,நீலக் கடல் அலை உன் காதுகளில் தாலாட்டும் , தளர் மேனி தள்ளாடும் , இனி விட்டால் நானே பிசத்துவேன்,,வா இன்னும் கொஞ்ச நேரத்தில் இது மூடப்போறாங்கள், தொர்ஸ்கோ சதுக்கத்தில் துருக்கிக்  கடையில் டோனர் கெபாப் சாப்பிடுவம், ஓகேயா உனக்கு " 

                                " ஓகே ,வாவ் ,,,வாவேன் எஞ்சேல்பேர்ட் ஹம்பர்டிக்கின்   ஸ்பெனிஷ் ஐஸ் பாட்டு வாசிக்குறாங்க  என்னோட சலசா ஆடேன்,,நீ நல்லா சலசா  ஆடுவாயே , ஹ்ம்ம்,,அது  முடியுது  ,கொஞ்சம் பொறு பிளமிங்கோ பாட்டு வாசிக்குறாங்க டான்ஸ் ஆடிப்போட்டு வாறன் ,,என்னோட கொக்டைல்லைப் பார்த்துக்கொள். என்னோட கைப் பையையும் தாரேன் பத்திரமாப் பார்த்துக்கொள் " 

                                  எனக்கு லத்தின் அமரிக்கன் டான்ஸ் ஆடத்தெரியும்,ஆனால் அந்த நேரம்  ஆடியிருந்தால்  பிறகு அது சிவபெருமானின் ஊழித்தாண்டவம் போலதான் ஆட வேண்டி வருமென்பதால் ஆடவில்லை.  சிசிலியா அதுக்குப் பிறகு ஒரு முக்கால் மணித்தியாலம் தாங்கோ, சலசா,  பிளெமிங்கோ, மரிம்பா , இங்கிலீஷ் வால்ஸ், ரிதம் அண்ட் ப்ளுஸ்,  எல்லா நடனமும் பலரோடு சேர்ந்து ஆடினாள். 

                                           சிசிலியா  ஒரு அருமையான நடனக்காரி , நடனத்தை ஒழுங்காகப் படித்தவள் . அவள் வெட்டி வெட்டி  நடக்கும் போதே  கால்களில் சந்தம் தவறாத தாளம் வரும்.  அவள்  இடுப்பே ஒரு  பதஞ்சலி முனிவரின்   பரத நாட்டிய நடனம் ,  அவளை அனைத்துப் பிடித்து ஆடிய ஆண்கள் அவளை வேண்டுமென்றே நெஞ்சில் நெரித்து, பின் புறத்தை தடவி விட்டு , முத்தம் கொடுக்க முயட்சித்துகொண்டிருந்தார்கள் , நான் கடைசி " ஐரிஷ் ஸ்கொச் விஸ்கி சொட் " ஒன்றை குடிக்க முடியாமல் குடிச்சுக்கொண்டிருந்தேன் ,

                                        சொயிஸ் பப் அதிகாலை மூன்று மணிக்கு மூடினார்கள். வெளியே டாக்சிக்காரர்  கொண்டையில் மஞ்சள் லைட் போட்ட கார்களில் வரிசையாக நின்றார்கள், தற்காலிகமாக ஜோடி சேர்ந்த இரவுக் காதலர்கள் யார் வீட்டுக்குப் போவதென்று பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள் , அதிகம் குடித்த ஒரு ஜென்டில்மேன் பாதை ஓரம் குந்தி இருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார், ஒஸ்லோ நகரம் நீலமாக விடிந்திருந்தது, சிசிலியா நடக்க தடுமாறிக்கொண்டிருந்தாள்,வாய் உளறிக்கொண்டு  

                              " செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா  செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா,,,யப்பா சாமி என்ன ஒரு கொக்டைல்,"

                                    " ,ஹ்ம்ம், ரசிதுக்குடி அதை அது காளிதாசன் கண்ணதாசன் பருகத் தவறிய  தேன் சிட்டுக்குருவியின் தெய்வீக மதுரசம் "

                                  "    என்னடா  உளருராய்,,நோஸ்ர்கில்  சொல்லு,,உன்  மண்ணாங்கட்டி  தமிழ்  எனக்கு  புரியாது  என நண்பனே "

                             "   இப்ப  எனக்கு உலக மொழிகள் எல்லாமே ஒண்டுதான்,,என்னை விடுடி சிசில்,,எனக்கு வெறிடி செல்லம்" 

                                " ஜமைக்காவில் போட் ஒப் ஸ்பெயின் தீவில  பொப் மார்லி பாட்டுக்கேட்டுக் கொண்டு ,,பறக்கிற மாதிரி இருக்கு ,,உனக்கு தெரியுமா எனக்கு இப்பவும் கவலையாக இருக்கு "

                               "  உனக்கு என்ன கவலை இப்ப ,,சொல்லு சிசிலி "

                                   " கலியாணம் தொடங்குமா,,வாவ் எவளவு நல்லா இருக்கு கேட்கவே ..ஆனாலும் அந்தப் பெண்ணின் சோடனையப் பார்க்க எனக்கே கால் ரெண்டும் குறுகுறுக்குது,,எனக்கு அப்படி யாருமே செய்யவில்லையே  என்று,,நான் ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் "

                           " போச்சுடா,,விடியக்காலை, மூன்று மணிக்கு ஆரம்ப்பிசிட்டியா "

                               "  இல்லை,,எனக்கும் அங்கே சாமத்திய வீடு நடந்து இருக்குமெல்லா,,அழகா சோடிச்சு என்னையே எல்லாரும் கவனித்துப் பார்க்கிற மாதிரி ஒருநாள் கிடைக்குமென்றால் எவளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா,,ஒரு பெண்ணாக இருந்து அதை உணர்ந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் .."

                         " ஹ்ம்ம்,,,அதில ஒரு மண்ணும் இல்லை ,,சம்பா விளைஞ்சு சரிஞ்சு கிடக்க உம்பார் இல்லாமல் ஊர்க் குருவி திண்டிச்சாம் அதுக்குள்ளே ஒருத்தி  சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சம்மணம் கட்டி இருந்தாளாம்  என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் எங்கள் ஊரில் "

                          " சம்பா விளைஞ்சு சரிஞ்சு கிடக்க உம்பார் இல்லாமல் ஊர்க் குருவி திண்டிச்சாம் அதுக்குள்ளே ஒருத்தி  சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சம்மணம் கட்டி இருந்தாளாம்  ,,இதுக்கு என்ன அர்த்தம் "

                         "   எனக்கு அர்த்தம் நோர்ஸ்கில் சொல்ல முடியாது சிசில்,"  

                        "  இல்லை,,என்னோட அம்மாவும்,,அப்பாவும்  எனக்கு மூன்று வயதில் பிரிந்து விட்டார்கள்,,நான் தனியா சில காலம் அம்மாவோடு,,சில காலம் அப்பாவோடு வளர்ந்தேன்,,எனக்கு ஒரு பெண்ணாக என்னோட இதயத்தின் மென்மையான பிரதேசங்களில் நினைவு கொள்ளும்படி ஒரு கொண்டாட்டமுமே என்னை முதன்மைப்படுத்தி நடக்கவேயில்லை,,அது எவளவு வேதனை தெரியுமா ,,,உனக்குப் புரியாது "

                         " ஹ்ம்ம்,,அதுக்கு இப்ப என்னதான் செய்ய முடியும்,,சிசிலி  சொல்லு,,"

                           "எனக்கும் ,பால் அறுகு பூசு மஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டி இருந்தா,,நல்ல கலியாணம்  கிடைத்து இருக்கும் போல,,,அது வைச்சு தலை  முழுக்காட்டாதால் தான்,,ரெண்டு தரம்  போய் பிரண்ட் பிடிச்சும்,,ரெண்டு பேரும் ஆறு மாதத்தில ஓடிட்டாங்க "

                        "  ஹஹஹஹஹஹாஹ்  ஒ அதுவா இப்ப பிரசினை,உனக்கு இப்ப வெறி சிசிலி  "

                          " போடா மடையா,,,ஒண்டுக்கும் உதவாத மடையா,,,"

                           " ம்,,....................................."

                          "  நீ என்னை சில நேரம் மோட்டுக் கழுதை எண்டு திட்டுவாய்,,நீ யார் தெரியுமா,,நீ ஒரு காட்டுப் பண்டி,,எருமை மாடு,,,கருங் குரங்கு,,ஹஹஹஹா,,,காணுமா ,,இல்லை இன்னும் வேணுமா 

                     "  ஹஹஹ ,,இப்போதைக்கு,,இன்றைய இரவுக்குக்  காணும்  சிசிலி "
      
                      "  என்ன ஹஹஹஹஹஹா, உனக்கும் இப்ப வெறி ,,,உன்னால என்ன செய்ய முடியும் "

                        " எனக்கு வெறிதான்,,சரி  உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு "

            " எனக்குப் பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டிவிடு " 
                                      

                 " ஹஹஹா  ஓகே,,வா, கேபாப் சாப்பிட்ட முதல் ,விடிய விடியத் திறக்கிற பாக்கிஸ்தான் சில்லறைக் கடையில ஒரு போத்தல் பால் வேண்டுவம், குருண்லான்ட் பார்க்கில கொஞ்சம் புல்லுப் புடுங்குவம், இந்தியன் ரெஸ்ரோரெண்டில் கொஞ்சம் தந்தூரி கோழிக் காலுக்குப் பூசுற சிவப்புத் தூள் வேண்டுவம் எல்லாத்தையும் தலையில தப்பி உன்னை ஆர்கிஸ் எல்வா ஆற்றுக்க முக்கி எடுக்கிறான், அதோட உனக்கு கலியான ராசி தொடங்கும்,,ஓகே  யா."

                         "  ஹ்ம்ம்..இன்றைக்கு நீ என்னோட வீட்டை வாவேன்,,ப்ளிஸ் ,,எனக்கு தனிமையா இருக்கு, ப்ளிஸ், "

                                என்று  சிசிலியா அன்று முழுவதும் மூன்று அடி தள்ளி நின்றவள் என் கைகளைப் பிடித்துக் கேட்டாள் , நான் ஒன்றும் சொல்லவில்லை , அவளை ஒரு டாக்சி பிடிச்சு உள்ளுக்க தள்ளி அடைஞ்சு போட்டு, டாக்சிக்காரனின் நம்பரை வேண்டிக்கொண்டு , என்னோட வீட்டுக்கு போறதுக்கு கடைசி நைட் பஸ் எடுக்கிற இடத்துக்கு நடந்து போய் கடைசி நைட் பஸ்ஸில் நெரிச்சுக்கொண்டு போய் இறங்கிற நேரம் தடுமாறி விழுந்து எழும்பி வீட்டுக் கதைவை அரைமணித்தியாலம் திறப்புப் போட்டு திறந்து டமார் எண்டு கட்டிலுக்கு  அருகில் நிலத்தில் விழுந்து படுத்திட்டேன்.

                                                     அடுத்த நாள் ,மத்தியானம் போல சிசிலியா போன் அடிச்சு எழுப்பினாள் ,நேற்று என்ன நடந்தது எண்டு கேட்டாள், நான் எனக்கு என்ன நடந்தது எண்டு கொஞ்சம் கொஞ்சமாக  நினைவுகளை மீட்டு எடுத்துக் கொண்டிருக்க அவள் , 

                                           " நேற்று இரவு ஒன்றும் நினைவில்லை,,ஆனால் கனவில் கலியாணம் கட்டுற மாதிரி கனவு வந்தது " 

                                          என்று சொன்னாள், 

                                       "  போடி மோட்டுக் கழுதை " 

                             எண்டு சொல்லிப்போட்டு நான்  போனை வைச்சிட்டேன்.