Wednesday, 19 April 2017

போட்டோகிரபி ..இரண்டாம் தொகுப்படங்கள்

                                                          ஒரு மழை நாளில் ஏரிக்கரை எப்படி இருக்குமென்று விடுப்புப்பார்க சில நாட்கள் முன் அந்தப்பக்கம் போனேன் சூல் கொண்ட கருமேகங்கள் மழைக்குத் தயாராக முன்னெப்போதுமில்லாதவாறு மிக மிக அமைதியாக இருக்கும் சொங்ஸ்வ்வான் ஏரிக்கரை . இந்த ஏரிக்கரையை இதுவரை எடுத்த படங்களில் இது ஒன்றுதான் அதன் அழகையும் பரிமாணத்தையும் அலங்காரம் ஏதுமற்ற சிலாகிப்புக்களை கொஞ்சம் ஒத்துக்கொள்ளும்படியாக ஒரு நேச்சர் போட்டொகிராபிக்கு அண்மையாக வந்திருப்பது போல இருக்கு . ஒரு மொபைல் போனில் இவளவு ஆர்டிஸ்ட்க் டெப்த் வருவதே அபூர்வம். எப்டியோ வந்து விழுந்து அசத்தி என்னையும் மகிழ வைத்த இந்தப் படம் ஒரு நம்பமுடியாத ஆச்சரியம் 

                                                                 வெய்யில் வண்ணாத்திப்பூச்சிகளோடு விளையாடவேண்டிய இந்த மாதங்களில் ஒஸ்லோவை சிணுங்கி சிணுங்கிக் குளிக்கவார்க்குது கோடை மழை. வீட்டு ஜன்னல் வழியாக மழையை ரசிப்பது என்பது ஒரு அனுபவம். அதே மழையை வீதியெல்லாம் சொட்டுச் சொட்டுச் துளிகளோடு நனைந்துகொண்டே அலைவது இன்னொருவிதமான நேரடியான அனுபவம். மழைக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகுது அதுபாட்டுக்கு அப்பப்ப அழுது வடிந்துகொண்டே இருக்கு. நகரமும் அதன் கண்ணீர்த் துளிகளை துடைத்துகொண்டியிருக்கு.
                                                                புல்வெளிகளை அப்படி யார்தான் அடிச்சுப் பிழிஞ்சு கழுவி எடுத்துத் தோய்ச்சுக் காய விடுகிறார்களோ தெரியவில்லை. ஒரு சின்ன மழையோடு அசைக்கமுடியாத உற்சாகம் அவைகளுக்குத் தொற்றிக்கொள்கிறது. அந்த நேரம் பார்த்து மாவிலை தோரனம்கட்டி நிறைகுடமாக ஒரு கலியானவீட்டையே மஞ்சள் வெய்யில் நடத்திவிடுகிறது சொன்ங்க்ஸ்வான் ஏரிக்கரையில் . எழுதுவதுக்கு வார்தையற்று நானோ வாயடைத்து நிக்க தன் பங்குக்கு செண்டிமெண்ட் முகூர்த்தங்கள் முடிய முன்னர் ஒரு புகைப்படத்தைப் பனோராமிக் என்ற வெளிவிரிநிலை ஸ்டைலில் எடுத்துவிட்டாள் மஹாலக்ஷ்மி.


                                                        ஆர்கிஸ்எல்வா நதியை நேற்று அது ஆரம்பிக்கும் இடத்துக்கு அண்மையாக சந்திக்க முடிந்தது . மரியடால்ஸ் என்ற இடத்தில நதி கால் நனைக்கும் அளவில் தண்ணியோடு நடமாடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் இறங்கி இந்தப்படம் எடுத்தேன் ,நதி என்னை ஏறெடுத்தும் கவனிக்காமல் அதுபாட்டுக்கு அசைந்துகொண்டிருந்தது
                                                           சொங்ஸ்வான் ஏரிக்கரை முழுவதும் விதம் விதமாய்க் கோடை மலர்கள் புதர்களை மண்டிக்கொண்டு மெல்லிய வடதுருவக் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருகின்றன. அவைகளின் நோர்க்ஸ் பெயர்கள் எனக்குத் தெரியாது. முடிந்தவரை விதம்விதமானமலர்களை அந்த எரிக்கரையைச் சுற்றி நடந்த போது படம் எடுத்துள்ளேன். பெயர்களை நோர்வேயில்வசிக்கும் நண்பர்கள் சொன்னால் அறிந்துகொள்ளலாம் என்ற துணிவில் ஒவ்வொன்றைப் போடுகிறேன்.

                                               உண்மையில் அடையாளப்படுத்தி வேறுபடுத்தும் வகைப்படுத்தலுக்கு என்ற அடிப்படையில் மலர்களுக்கு மனிதர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் மலர்கள் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பதை விரும்புமா என்று தெரியவில்லை.. பெயர் இல்லாமலே மலர்கள் அழகாகத்தானே இருக்கின்றன
                                                        என்னதான் நவீனங்கள் நகரத்தை அடிச்சுப்பிடிச்சு சுற்றிவளைத்து ஆக்கிரமித்து வானுயரங்களை தொட்டாலும் சென்ற நூற்றாண்டின் தொன்மங்களை மிச்சமாக வைத்திருக்கும் செங்கல்லுக்கு கட்டிடங்கள் தங்கள் ஆதர்சமாக எப்போதும் கட்டிக்காக்கும் பழமையில் கொஞ்சமும் விட்டுக்கொடுப்புகள் செய்வதில்லை. நடு ஒஸ்லோ நகரத்தில் இந்தக் கட்டிடம் கம்பிரமாக டொச்சு காலக் காலனித்துவ ஸ்டைல் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகிறது . இலங்கையில் இந்த டொச்சுக்கால ஆக்கிடெக்சர் ஸ்டைல் இல் நிறைய தேவாலயங்கள் இருக்கு...

                                                             

                                                                 வழிக்குறிப்புக்கள் ஏதுமற்ற காட்டுப்பாதை போலவே வாழ்க்கையும் திசைகாட்டிட இப்பவல்ல எப்பவுமே ஒரு பாதையைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமாக இருக்கு. பாதை முடிவில் இன்னும் பாதைகள் வேறு வேறு திசையில் பிரியலாம். முடிவே இல்லாத பாதைகள் சுற்றிச் சுற்றி வந்து தொடங்கிய ஒரே புள்ளியில் முடியலாம். துணிந்து காலடி வைப்பவர்கள் சிலர்தான் வழிகளில் உள்ள எல்லாத் தடைகளையும் தாண்டிக்கொண்டு வந்து இலக்குகளை அடைகிறார்கள்.

                                                           உனக்கான பாதைகள் எங்கோ இருக்கு, அதை காணமுடியவில்லை என்றால் நீயே உன் பாதையை உருவாக்கிவிடு என்று தன்னம்பிக்கை உள்ளவர்கள் சொல்கிறார்கள். ஏரிக்கரை முழுவதும் இப்படி பிரிந்து பின் சேரும் பாதைகள் நிறயவே வாழ்க்கை போலவே உள்ளது                                                             வாழ்க்கை ஒரு முடிவில்லா அலைகளுடன் முட்டிமோதி நீச்சலடிக்கும் பயணம்.அதுக்கு முதல் உட்சாக வேலையே தண்ணிக்குள் பாய வேண்டும்.நீந்துவது பற்றிக் கரையில் நின்று விவாதிப்பதில் அர்த்தமே இல்லை.யாரெல்லாம் தண்ணிக்குள் பாயத் துணிகிறார்களோ அவர்கள் வெற்றிக்கு அண்மையாகப் பயணிக்கும் சாத்தியங்களை அ திக்கமாக்குகிறார்கள் ஒஸ்லோவின் புறநகரம் குருண்லாண்ட் இல் ஆர்கிஸ்எல்வா நதிக்குள் வானத்தில் இருந்தது பாயும் மனிதர்கள் போன்ற சிட்பமும் ஒரு தத்துவம் வைத்துள்ளது..


                                                  ஒஸ்லோவில் ஒரு மழை நாளின் மாலை நேரம். காதலர்களை நெருக்கமாக்கிவிட்ட குடை. நடைபாதையில் வெள்ளித் தெறிப்புக்கள்.மெலிய சாரல் போடும் தூறல் புழுதியைக் கழுவி எடுக்கும் பாதை. நீளவே நடக்கும் நீண்ட நிழல்கள். ரகசிய சதிக்குத் தயாராகும் மம்மல் இருட்டு. மஹாலக்ஸ்மி வண்ணக் கலரில் எடுத்த படத்தைக் கறுப்பு வெள்ளைக்கு மாற்றிவிட மழை இன்னும் அதிகமாக காட்சியை நனைப்பது போலிருக்கு எனக்கு. உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

                                                       வெய்யிலோ மழையோ தென்றலோ புயலோ உங்கள் பாதைகளில் சந்தோசங்களை விதைத்துச் சென்ற அந்த நாலு நண்பர்களை மறக்கவே வேண்டாம் என்கிறது காலம். தனிமரங்கள் தோப்பாவதில்லை தனி மனிதர்களின் தனிமையாகிய எதிர்மறையான இடைஞ்சல்கள் வாழ்க்கை இடைவெளிகளை நிரப்ப வரும்போது தட்டிக்கொடுத்த அந்த நாலு நண்பர்கள் சும்மா வந்துபோனவர்கள் இல்லை. அவர்களின் பெறுமதிகள் நேற்றைகளை மறந்து, நாளையை ஜோசிக்க விடாமல், இன்று கிடைத்த ஒரு நாளை முழுமையாக வாழவைத்துவிட்டு போவது பற்றிய நம்பிக்கை உத்தரவாதங்களைத் தாராளமாகத் தரலாம். நம்மைச் சுற்றி அன்பான ஒரு உலகத்தை நாங்களேதான் உருவாக்குகிறோம்.அதில் தோற்றுப்போனால் அதுக்கும் நாங்களேதான் காரணம் போலிருக்கு 

                                                       ஒஸ்லோவின் நயாகரா . நேற்று பாதையை தவறவிட்டு ஆற்றின் போக்கில் நகரத்தைத் தேடியபோது இந்த இடம் தட்செயலகாச் சந்திக்க வேண்டி வந்தது . மரியடால்ஸ் நீர்வீழ்ச்சி இந்த இடத்தில்தான் ஆர்கிஸ் எல்ல்வா ஆறாகப் பரிணமித்துப் பிரமாணம் எடுக்குது என்று நினைக்கிறன்.                                                        நேற்று ஒஸ்லோவில் உள்ள சாகனை என்ற பழமையான ஒரு சிறிய இடத்தில ஒரு திறந்தவெளி இசை நிகழ்ச்சி .. வெயிலோடு மனிதர்கள் இளைப்பாறி இசையில் திளைக்கிறார்கள் ..
                                                                 
வெய்யில் தான் பேசுவதுக்கு வெளியே அழைத்திருக்கும் போல . என் இளமைக்காலத்தில் இப்படி ஒரு நண்பர்கள் பட்டாளம் அம்மாசியா குளத்தடி கிரிகெட் கிரவுண்டில் இருந்தது. உருப்படாத விசியங்கள் பேசிக்கொண்டு இருட்டும் வரை உலகமே அழகா இருந்தது அப்போது. இப்போது அவர்களில் சிலர் உயிரோடு இல்லை. பலர் என்னைப்போலவே உலகமெங்கும் சிதறிப்போன கதைகளால் மட்டும் ஏனோதானோவென உலாவுது நினைவுகள் ....ஏரிக்கரை சொங்க்ஸ்வானில் மஹாலக்ஸ்மி இதையும் கிளிக்கினாள்..