Friday 15 January 2016

ஒ நெஞ்சே நீ தான்...

வாழ்கையின் நடுவயதிலிருக்கும் மனிதர்கள் அவர்கள்  கடந்து வந்த வாழ்க்கையில்  சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களைத்  திரும்பிப் பார்த்தால் அது பெரும்பாலும் பொறுப்பிலாமல் அலைந்த நாட்களாய்த்தானிருக்கும் . அந்த வயதில்  ஏற்படுகிற நட்புப் போன்ற காதல்  பெரும்பாலும் பொறுப்புக்கள் வந்து விழும்போது  அற்பாயுளில் மறைந்துவிடும்  நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பையும் காதலையும்  தொடரும் வகையில் வாழ்க்கை முறையை  அமைத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள்...
                                             
                                  ஊரில இளம் வயசில் வளர்ந்தது டவுனுக்கு கிட்ட உள்ள கொஞ்சம் மூச்சு விட நெருக்கமான, அந்நிய மனிதர்கள் அருகில்  சுற்றி  வர வசிக்கும், நாகரீகம் கொஞ்சம் அதிகமா அட்டகாசம் போட்ட   நல்லூரில்  கிராம வயல் வெளிகள், பனை மரக் கூடல், ஆறு, போன்ற அழகிய வண்ணாத்திப்பூச்சி கிராமிய லோக்கேசன் உள்ள இடத்தில இருந்து நான் வளர்ந்த இடம் வெகு தூரத்தில் இருந்தாலும், என் அயல் வீட்டு  நண்பர்களுடன் இயற்கைக்கு நெருக்கமான , இயற்கை இன்னும் இயற்கையாகவே இருந்த , எங்களின்  நண்பன் அருணா வசித்த அளவெட்டி என்ற வலிகாமம் மேற்கில் இருந்த ஒரு கிராமத்திற்கு சைக்கிளை எடுத்து கொண்டு, வீட்டில

                    " வயல் வெளிகள் பார்த்து கும்பளாவளைப் பிள்ளையாரை  கும்பிடுடப் போறம் "

                            எண்டு சொல்லிப் போனாலும் ,உண்மையில் அந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் அந்த ஊரில பனை மரக் கூடல் அதிகம் , அதால பனை மரத்தின் முக்கிய பயன்பாடு அதிகம் இருந்தது ,

                                           அளவெட்டி எல்லா யாழ்ப்பான கிராமம் போல இருந்தாலும்,கொஞ்சம் அதிஸ்டமாக  அதன் கிழக்கில, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் மேற்கு விளிம்பில் தொடங்கி , நிறைய வயல் வெளிகள் பச்சையும், மஞ்சளுமாகக்  கம்பளம் விரிக்க, வடக்கில் அம்பனைக்கு கிட்ட உள்ள இடத்தில் வயல்களை நிரப்பிய குளங்கள் மாரி மழைக்கு   நிரம்பி  எழுதிய முன்னுரையின் தொடர்ச்சியாக, வலிகாமப் பெண்களின் இடுப்புப் போல ஒடுங்கித் தொடங்கி, அகன்று, ஆழமாகி வயல்களுக்கு நடுவால் சாரைப்பாம்பு போல வளைந்து வளைந்து யாழ்பாணத்தில் ஓடிய ஒரே ஒரு ஆறு எண்டு சொல்லும் வழுக்கை ஆறு,

                                அளவெட்டிக் கிராமத்தின் பருத்திச் சேலைக்குப், பட்டுச் சரிகை போட்டு  மாரி காலத்தில் மஞ்சள் நிறத்தில் தண்ணி தேங்கியும், தேங்கிய தண்ணி சில நேரம் அராலிப் பாலத்துக்கு கீழால வழிந்தோடி அராலிப் பண்ணை தரவைக் கடலில் விழும். அந்தக் கிராமிய லோக்கேசனை இப்படிதான் ஹைக்கூ கவிதை வடிவத்தில் சொல்லலாம். பாரதிராஜா படங்களில் பார்த்த கிராமியப் பிரமிப்பை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு அளவெட்டி அலாதியான அழகை அபரிமிதமாக அளிக்கொட்டிக் கொண்டு இருந்தது 

                                 நாங்கள் நண்பர்கள் சும்மா ஒரு பம்பலுக்குத் தான் அந்த நேரத்தில் கள்ளு எப்படி இன்னிக்கும், எப்படிப் புளிக்கும்   எப்படி வெறிக்கும் போன்ற வில்லேச் விஞ்ஞானி ஆராய்ச்சி நோக்கத்தில் அதை எப்பவாவது குடிப்பது. டவுனுக்கு கிட்ட உள்ள சில இடங்களில் கற்பகதருவின் புளித்த பதநீர் விற்கும் ரகசியமான வீடுகள், வெளிபடையாக  விற்கும் கோப்பிரேசன் என்ற கள்ளுத் தவறணை ஒதுக்கமான இடங்களில் இருந்தாலும் நாங்கள் அதில் இருட்டோடு இருட்டா ஒதுங்கித்  தாக சாந்தி செய்யத் தன்னும் முடிவதில்லை,

                          முக்கிய காரணம் நாங்கள் டவுனில உள்ள பாடசாலைகளில் படிச்சுக் கிழிக்கிறேன் பேர்வழி என்று எழுப்பமாகப் பவுசு விட்டுக்கொண்டு திரிந்ததும்  யாரவது கண்டால் அது வீட்டுக்கு தெரியவந்தால் அது பெரிய வாழ்க்கைப் பிரச்சினையாக  வெடிக்கும் என்ற நிலைமையும் இருந்தது . அதை விட அது அயல் அட்டை ஊருக்குள தெரிந்தால் யாரும் பொம்பிளை தரமாட்டார்கள் என்ற எழுதப்பாடாத விதிகள் ஊருக்குள் இருந்தது. என்னோட , அம்மாவே எப்பவும்

                                   " குரங்கிண்ட கையில கொள்ளிக் கட்டையை கொடுத்து கூரையில் ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்த மாதிரி , குடி வெறியில் விழுந்தால்,சாதி சனம் மதிக்காது,கலியாணம் கட்ட பொம்பிளையும் தரமாட்டார்கள், அந்த சீரளிஞ்ச பழக்கத்தை மட்டும் பழகாதையடா, அயல் அட்டை முகத்தில முழிக்க ஏலாமல் வரும் "  என்று எப்பவும் சொல்லுவா ,

                                அதால வாழ்க்கை முழுவதும் தனிக்கட்டையா இருக்க வேண்டி வரும் எண்டு வீட்டில சொன்னதாலும், என்னத்தை இழந்தாலும் கலியாணத்தை இழக்க விரும்பாததால் ,ஒரு நாளும் அந்த இடங்களுக்குப் போவதில்லை.

                                     இப்படி வெகு தூரத்தில் உள்ள அளவெட்டி கிராமத்தில் எங்களை யார் எண்டு அங்கே இருக்கும் பனை மரங்களுக்கே தெரியாது, இப்படியான எங்கள் இக்கட்டான அவல சூள்நிலையில் நாங்க கண்டுபிடித்த இடம் தான் அளவெட்டியில் இருந்த பத்துப் பனையடி என்ற இடத்தில இருந்த பூலோக சொர்க்கம். 

                                                 எங்கள் வீட்ட்டடியில்  இருந்து சைக்கிள்  மிதிச்சு, கே கே எஸ் ரோட்டின் இடைஞ்சல் போக்குவரத்துகால் சுழிச்சு ஓடி,  நகர சந்தடி நெரிசல் குறையும் வரை மிதிச்சு, இணுவில் தாண்டி சைக்கிள்  மிதிக்க கொஞ்சம் வெங்காய தோட்டங்கள் வெளிக்கிடும். மருதனாமடம் தாண்டி மிதிக்க புகையிலைத் தோட்டங்கள்  மூக்கை பிடுங்கத் தொடங்க சுன்னாகம் வரை சைக்கிளை மிதிக்க ஏறக்குறைய வலிகாம கிராம அடையாளம் தொடங்கும். சுன்னாகத்தில் சந்தை வளைவில் திருப்பி வலது பாக்காம மிதிக்கக் கிரவல் ரோட்டு சைக்கிளை தூக்கி தூக்கி எறிய கந்தரோடைக்கு குறுக்கால சைக்கில் மிதிக்கவே அளவெட்டி வாசம் அடிக்கும்.

                           வழுக்கை ஆற்றுப் பாலத்துக்கு மேலால சைக்கிளை மிதிக்க வழுக்கை ஆறு சின்னதா ஒரு கோடு போல அம்பனை வயல் நடுவில் கிடந்தது நெளியும். வலிகாமம் தெற்கையும், வடக்கையும் பிரிக்கும் சந்தியில் சைக்கிளை இடது பக்ககமா சரிச்சு மிதிக்க அளவெட்டி வரவேற்கிறது என்ற தகரப் பலகைக்கு பக்கத்தில ஒரு இலுப்பை மரம் சடைச்சு நிண்டு சிரிக்கும்.அப்படி  சைக்கிளை இடது பக்கம் திருப்பாமல் நேராக விட்டா சித்தங்கேணி வட்டுக்கோட்டை மூளாய் சுழிபுரம் என்று போகலாம்.

                                                  அளவெட்டிக்கு நாங்க போனவுடன் முதல் போறது ஆசுகவி விநாசித்தம்பி அவர்களின் சின்னக் கோவிலிலுக்கு. அங்கே போய் அவர் கையால திருநீறு வேண்டிப் பூசிக்கொண்டு, சில நேரம் பாவ மன்னிப்புப் போல , கும்பளாவளைப் பிள்ளையாருக்கும் ஒரு கும்புடு போட்டு வைச்சிட்டு ,பத்துப் பனையடி என்ற இடத்தில பனை மரங்களுக்கு கீழே இருந்த கோபிறேசனுக்கு ஒரு அஞ்சு லீடர் பிளாஸ்டிக் கானை எடுத்துக்கொண்டு நான்தான் போவேன், 

                              பத்துப் பனை கோபிறேசனுக்கு உள்ளுக்கு தென்னம் குத்தியை நாலு பக்கமும் அணைச்சு, நடுவில மணல் போட்டு நிரப்பி வயதான பலர் எப்பவும் கள்ளுப் பிலாவைக் மணலில நட்டு வைச்சுப்போட்டு

                 " ஜி ஜி பொன்னம்பலம் என்னத்துக்கு சிறிமாவிண்ட அரசாங்கத்தோடு ஒட்டினது..எஸ் டவுள் யு ஆர் டி  பண்டாரநாயக்கா  என்னத்துக்குத் தனிச் சிங்களச்   சட்டம் கொண்டுவந்தது ... "

                          எண்டு கதையில கைலாசம் போய்க் கொண்டு இருப்பார்கள், நான் சில முறைதான் போய் இருந்தாலும் அந்தக் கோபிரேசன் மனேயர் பல வருட அறிமுகம் போல சிரிப்பார்,

                                  " உங்களை போல சின்னப்  பொடியளுக்கு கள்ளு விக்க சட்டம் இல்லை, சாமாசத்துக்கு தெரிய வந்தா பைன் அடிப்பாங்கள் " எண்டுவார் ,

                              பெரிய பரலில் இருந்து பிளாஸ்டிக் கோப்பையில் அள்ளி என்னோட அஞ்சு லிட்டர் கானுக்கு ஊற்றும்போது,

                                       " பார்த்தா படிக்கிற பொடி போல இருக்கு, அஞ்சு லிட்டர் கான் கணகில இப்பவே இழுக்க வெளிக்கிட்டா ,பின்னடிக்கு சீவியம் கிழியப் போகுதே "

                               எண்டு சொல்லித்தான் கள்ளு அள்ளி நிரப்புவார், கடைசியில் அவர் சொல்ல வேண்டியதை சொன்ன மாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பார், அவளவுந்தான்,

                    ஒரே ஒரு முறை ஒரு வயதானவர்,

                    " கொஞ்சம் பொறு வாறன், நாசமாப் போன நாடுக்குள்ள ஞாயி ற்றுக் கிழமை நரி  நாரி உளைவுக்கு  நல்லெண்ணெய் தேடிச்சாம் கதை  போல கோதாரி விழுவார் என்னத்துக்கட்ட இந்த இளந்தாரி வயதில குடியில விழுகிறன் எண்டு நிக்குரீங்களடா   " 

                  எண்டு என்னோட கையைப் பிடிச்சு இழுத்து நிற்பாட்டி 

                       " எடேய் வம்பில பிறந்துகளே , என்னத்துக்கடா இப்ப இந்த கானில இவளவு கள்ளு " 

                     எண்டு கேட்டார் ,

                            " அம்மா அப்பம் புளிக்க வைக்கக்  கள்ளுவேண்டிக் கொண்டு வரச்சொல்லி சொன்னா, அதுதான் வேண்டிக்கொண்டு போறேன் எனை அப்பு " எண்டேன்,

                        அவர் " நாசமறுப்பு , அதுக்கு ஒரு எப்பன் அரைப் போத்தல் கள்ளு காணும் தானே, விளுவாரே " எண்டு கேட்டார்

                              ,நான் " இண்டைக்கு எங்க ஊரில்ல எல்லார் வீடிலையும் அப்பம் புளிக்க வைக்கப் போகினம் எனை அப்பு, அது தான் எல்லா வீட்டுக்கும் சேர்த்து அஞ்சு லிட்டர் கான் நிரப்பி வேண்டிக்கொண்டு போறேன் "

                         எண்டு சொன்னேன். அவர் சுருட்டை வாயில பத்த வைச்சு ஜோசித்தார்,ஆனால் எடக்கு முடக்கா ஒண்டும் சொல்லவில்லை.

                              அந்தக் கள்ளைக், கைக் குழந்தையைக் கொண்டு வாற மாதிரி பக்குவமாய்க் கொண்டு வந்து, முதலில் விபரமா சொன்ன பனோராமிக் லோக்கேசனில், வண்ணாத்திப்பூச்சிகள் பறக்கும் வழுக்கை ஆற்றம் கரையில், இந்தக் கரையில் இருந்து குடிப்போம்,அந்தக் கரையில் மாடுகள் வந்து நிண்டு எங்களைக் குழப்பமா பார்த்துக்கொண்டு இருக்க, சில நேரம் ஒரு வயதான மனிதர், ஆற்று தண்ணியில் சீலைகளைத் தோய்த்து,ஒரு கல்லில " விசுக் விசுக் விசுக் " எண்டு தலைக்கு மேலால் சுழட்டி சுழட்டி வெளுப்பார்.

                                   தூரத்தில் ஆள்காட்டிக் குருவிகள் கீழுக்கும் மேலுக்கும் வால் காட்டிக்கொண்டு பறக்கும், அராலிக் கடலில் இருந்து வரும் உப்புக் காற்றின் வாசம் வயல் வெளியின் வானவெளி எங்கும் வீசி அடிக்க , அம்பனைப் பனங்கூடல் பனை மரங்களின் காய்ந்த காவோலைகள் ஒன்றோடு ஒன்று உரசி " கர கர " எண்டு சத்தம் எழுப்ப, அந்த சத்தத்துக்கு குல்யில்கள் குளறி அடிச்சு பறந்தோட, நாங்கள் எப்பவுமே இளையராவின் பாடல்கள் வாய் விட்டு வயல் முழுவதும் அதிரப் பாடி, அஞ்சு லிட்டர் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் மண்டி முடிய, வெறும் கானில மேளம் அடிச்சு ,

                          " போனால் போகட்டும் போடா ,,இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா "

                             எண்டு , ஆற்றில விழுந்து நீந்திக் குளிச்சு , அருணா வீட்டை போய் சில நேரம் சாப்பிடுவம்.

                                          அளவெட்டியில் கிராமதில் வசித்த அருனேஷ்வரன்  என்ற  அருணா அந்த ஊரில படித்துக்கொண்டிருந்த போதும் , எங்களின் யாழ்ப்பான  டவுன்  தனியார் கல்வி நிறுவனத்தில் படித்த அயல் நண்பர்கள் மூலமா எங்களுக்கு அறிமுகம் ஆகி,கொஞ்ச நாளில் எங்க டவுன் அயல் அட்டைக்கே அறிமுகமாகி, ஏறக்குறைய எங்களின் வீட்டில் வந்து இரவும் தங்கி நிற்பான், நாங்க அவன் வீட்டுக்கு போறம் எண்டு வீட்டில எண்டு சொல்லிப்போட்டு ,அளவெட்டிக்குப் போய் பனை மரத்துக்கு கீழ நிற்போம்,

                              அருணா எங்கள் நட்பில்,அயலில் அறிமுகம் ஆனது போல நாங்களும் அளவெட்டி போகும் போதெல்லாம் அவனின் அயலில் கொஞ்சம் அறிமுகமாக, அவன் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பெண்ணின் முகமும் எனக்கு கொஞ்சம் பிரகாசமாக அறிமுகமாக அவள் ஒரு முறை நாங்க அருணா வீட்டில, பக்கிஸ் பெட்டியில மேளம் அடிச்சு பாட, தலையைக்குனிந்து கொண்டு வெட்கமா வந்து, கொஞ்சம் துணிந்து எங்களுடன் நட்பாக, சிரித்து கதைத்தாள்,நான் கிட்டார் அடிப்பேன் எண்டு அருணா அவளுக்கு சொல்ல,

                        " உண்மையாவா, ,ஏன் நீங்க கிட்டார் கொண்டு வந்து இங்கே எங்களுக்கும் அடிசுக் காட்டலாமே "

                     எண்டு சொன்னாள்,நாங்க அவள் ஊருக்கு வாறதே வேற ஒரு விசியம் அடிக்க எண்டு எப்படி சொல்ல முடியும்,,நீங்களே சொல்லுங்க பார்ப்பம்,, 

                          ஒவ்வொரு முறை நாங்க அளவெட்டி போனால், அவள் அருணா வீட்டுக்கு வருவாள், ஒரு கட்டத்தில் எங்கள் எல்லாருக்கும் நல்ல ப்ரெண்ட்டான பின் ஒருநாள் நான் அவளுக்கு

                     " நால்லூர் தேர் திருவிழாவுக்கு எங்க வீட்டுக்கு வரலாமே ,அருணா வரும் போது, "

                             எண்டு சொன்னேன்,,அவள் ஜோசிகாமலே முகம் எல்லாம் சிரித்து,,

                                 " உண்மையாதான் சொல்லுரின்களா , உண்மையாதான் சொல்லுரின்களா, உண்மையாதான் சொல்லுரின்களா 

                               எண்டு மூன்று தரம் கேட்டாள்,நாலாம் தரம் கேட்க முதல் நானே சொன்னேன்,

                              " சப்பர திருவிழா இரவு வந்து எங்க வீடில தங்கினிங்க எண்டால் காலையில் வசந்த மண்டபப்  பூசை இடிபடாமல்ப்  பார்க்கலாம்,  அப்ப வாங்க  "

                               எண்டு  சொன்னேன் அவள் முகத்தை கையால மூடி, திரும்பத் திறந்து நம்ப முடியாமல் என்னைப் பார்த்தாள்,

                       " அப்பாவிடம் கேட்டு சொல்லுறேன்,எனக்கு நால்லூர் திருவிழா,தேர் பார்க்க சரியான விருப்பம்,அருணா அண்ணாவும் வாற படிய அப்பா ஓம் எண்டுதான் சொல்லுவார்,,நீங்களும் எல்லாரும் டவுனில படிச்சாலும், நல்லா எங்களைப் போல அன்பா பழகுரிங்க "

                               எண்டு கிராமத்து பெண் போலவே அப்பாவியா சொன்னாள், நாங்க என்னத்துக்கு அளவெட்டிக்கு வாறம் எண்டு அவளுக்கு எங்க விளங்கப் போகுது,எண்டதை நினைக்க உலகத்தை சுத்தவும் ஒரு எல்லை வேண்டும் எண்டு நினைச்சாலும்,அதுகளை வெளிய சொல்லவே இல்லை . அருணா வீட்டுக்கு வெளியே நிறைய வேப்ப மரங்கள்  நின்றது அதுக்குக் கீழே கதிரைகளைப் போட்டு அருணாவும் என்னோட மற்ற நண்பர்களும் கரம்போட் அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள் , 

                       நான் அது விளையாடவில்லை , எனக்குக் கரம்போட் விளையாடவும் தெரியாது. அருணா வீட்டுக் கிணற்றடியில் பயிற்றம் கொடி நட்டு இருந்தது, அதில நிறைய பயிற்றம் பூ பஞ்சுபோலப் பூத்து தொங்கிக்கொண்டு இருந்தது,நான் அதை ஆர்வமாகக் கிட்டப் போய்ப் பார்த்துகொண்டு இருந்தேன் ,பின்னுக்கு அவள் குரல் கேட்டது 

                            " என்னது  பயற்றம் கொடியை முயூசியத்தில் சயன்ஸ் எக்ஸ்சிபிசன்   பார்க்கிற மாதிரி அதிசயமாப் பார்குரிங்க ,,இதுக்கு முதல் பார்த்ததே இல்லையா "

                               " இல்லை,,இவளவு கிட்டத்தில் பார்த்ததே  இல்லை,,எங்களின் வீட்டுப் பக்கம்  இப்படி எல்லாம் அதிசயங்கள்  இல்லையே "

                      " ஒ.அப்படியா,,அருணா அண்ணா ஆட்களோடு கரம்போட் விளையாட விருப்பம் இல்லையா."

                        " எனக்கு அது விளையாடத் தெரியாதே "

                         " ஹஹஹா,,அதென்ன பெரிய கஷ்டமா அடி கட்டையால  மற்றக் கட்டைகளை அடிச்சு எதிர்ப் பக்கம் உள்ள ஓட்டையில் விழுத்துறது ,,இதென்ன பெரிய விசியமா "

                           "  நான் அடி கட்டையை அடிச்சேன் என்றால்  பிறகு அதை அளவெட்டி முழுக்கத் தேட வேண்டி வரும் "

                      " ஹஹஹ   ஹஹா, ஹஹ   ஹஹ   ஹா "

                         " அதுக்கேன் இப்பிடிக் கிடந்தது பெருமாள் கோவில் உண்டியல் குலுக்கின மாதிரி  சிரிகிரிங்க ,பிரெண்ட்ஸ் எல்லாம் பார்கிறாங்க ,,"

                          " ஹஹஹஹா,நல்லாப் பாக்கடும்,,எனக்கு வயிறு நோகுது சிரிச்சு "

                             " சரி,,சிரிச்சு முடியுங்க "

                        " ஒரே முசுப்பாத்தி ,,குழந்தைப் பிள்ளைகளே கரம்போட் விளையாடுவாங்க ,அடி கட்டை  அதை அடிக்கத் தேவை இல்லை,,சும்மா சுண்டினால் போதும் "

                            " ஹ்ம்ம்,,,அதுக்கும்  எனக்குப் பொறுமை இல்லையே ,,நம்மக்கு என்ன என்னதில இண்டரஸ்ட் இருக்கோ  அதில் எல்லாம் மட்டுமே நேரம் போவது தெரியாமல் ஈடுபடலாம் ,,இல்லையா  அப்படிதானே "

                              "  ,ஹஹஹஹஹா, ,பிறகு எப்படி கிட்டார் வாசிக்குரிங்க,,அதுக்குப்  பொறுமை எங்கிருந்து வந்தது "

                         " அது  இப்பதான்  பழகிக்கொண்டு இருக்கிறேன்,,,அதில  என்னவோ இண்டரஸ்ட்  இருக்கு "

                   " ஹ்ம்ம்,,அப்படிதான்,,உங்களுக்கு வேற என்ன இண்டரஸ்ட் "

                     " வேற ஒன்றும் சொல்லும்படியா  இன்னும்  இல்லை "
                        
                      " ஹ்ம்ம்,,அளவெட்டியில் என்ன இண்டரஸ்ட் உங்களுக்கு,,என்ன இங்க பிடிச்சு இருக்கு உங்களுக்கு "

                        " அளவெட்டியில் எனக்கு என்ன பிடிச்சு இருக்கு எண்டு சொன்னால்,,பிறகு நீங்க என்னோட கதைக்க மாட்டிங்க "

                          " ஒ அதென்ன,,,எனக்கு சொல்லுங்க,,ப்ளிஸ் ,,எனக்கு  சொல்லுங்க "

                          " ஹ்ம்ம்,,அந்த இண்டரஸ்ட் க்குத்தான் நாரி முறிய எங்க ஊரில இருந்து சைக்கிளை மிதிசுக்கொண்டு வாறமே "

                          " ஹ்ம்ம்,,,எனக்கு விளங்கவில்லை ,,என்னமோ சொல்லுரிங்க,,இனி எப்ப இங்க வருவிங்க,,வாற சனிகிழமை இரவு ஜெனரேற்றர்,  டெக் வாடைக்கு எடுத்து வைதேகி காத்திருந்தாள்  படம்  எங்கட வீட்டில போடப் போறோம்,,நீங்க வருவிங்களா "

                         " அதில நல்ல நல்ல பாட்டுக்கள் இருக்கே,,கெசட்டில் பாட்டுக் கேட்டிருக்கிறேன் படம் இன்னும் பார்க்கவில்லை,,சரி வைதேகி ஏன் காத்திருந்தாள்  ,,சொல்லுங்க "

                         " எனக்கு எப்படித் தெரியும்,,நானும் இனித்தான் பார்க்கப்போறேன்,,பார்த்திட்டு சொல்லுறேன்,,அதில ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காற்றாடி போல் ஆடுது என்று ஒரு பாட்டு இருக்கு ,,கேட்க என் நெஞ்சே காற்றாடி போல ஆடும் "

                              " ஹ்ம்ம், நல்லா மயில்த் தோகை  விரித்து ஆடும்  போலதான் இருக்கு ,,நீங்க சொல்லுற விறுத்தத்தைப்  பார்க்கவே "

                         " அவ்வே அவ்வே,,ஆனால் எனக்கு அதில உள்ள இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ பாட்டுதான் அதிகம் விருப்பம்,,ஏன் தெரியுமா " 

                        " எனக்கு எப்படித் தெரியும் நீங்களே உங்க பொன்னான வாயால சொல்லுங்க "

                      " ஹஹஹா,,நான் பரதநாட்டியம் படிச்சு இருக்கிறேன்,,அதால அதில வாற ஜதி, அலாரிப்பு ,அடவு  எல்லாம் நல்லா இருக்கும் "

                             " ஒ ,,பரதநாட்டியம் வேற ஆடுவிங்களோ,,கொஞ்சம் ஆடிக் காட்டுங்களேன் , பதஞ்சலி முனிவர் பெயரால் புண்ணியமாப் போகும் "

                          " எங்க ஆட "

                      " ஒ சிதம்பர நடராஜா சபையில்த்தான் ஆடுவின்களோ, சலங்கை ஒலி போல  இந்தக் கிணத்துக்கட்டில ஏறி நிண்டு ஆடுங்க "

                             " ஹஹஹஹா ஏன் நான் உசிரோட இருக்கிறது பிடிக்கவில்லையா ,,சொல்லுங்க பிடிக்காட்டி நானே கிணத்துக்க குதிக்கிறன் "


                          " சும்மா பகிடிக்கு சொன்னேன்,,,,முதலில் உங்க வீடு எங்க இருக்கு,,"

                         "  எங்க வீடா ,,இந்தக் கிணத்துக்க எட்டிப் பாருங்க,,இதுக்குள்ளதான் இருக்கு ,,ஹஹஹஹா "

                            "  ஹஹஹஹா.. "

                             " உங்களுக்கு அம்பனை தெரியுமா "

                               " எனக்குப் பனை மட்டுமே தெரியும் "

                         " ஹஹஹா,,உருப்பட்டமாதிரித்தான் "

                        " ஏன் உங்க வீடு அம்பனையிலா இருக்கு,,அதெங்க இருக்கு "

                         " ஹ்ம்ம்.. எங்க வீடு  இந்த ஒழுங்கையின் தொங்கலில் உள்ள பழைய காலக் கல் வீடு ,, முன்னுக்கு ஒலையால வேன்ஞ்ச பத்தி பந்தல் போலப் போட்டு இருக்கும் , அவடம் தான் அம்பனை ,அருணா அண்ணா எங்களின் கிட்டத்து சொந்தக்காரார் அவர் அப்பாவும் என்னோட அம்மாவும் மாத்து சம்ப்பந்தம் செய்த வழியில் சகலன் சகலி  முறை "

                      "  ஹஹஹா,,இதெல்லாம் ஏன் சொல்லுரிங்க "

                    " இல்லை,,நீங்க பயப்பிடாமல்,தயங்காமல் எங்க வீட்டுக்கு வரலாம் அதுக்கு சொல்லுறேன்,வருவிங்களா,வைதேகி காத்திருப்பாள் "

                         " என்னது ,எனக்கு வைதேகியைத் தெரியாதே,,அவா  எதுக்கு எனக்காக காத்து இருக்க வேண்டும்,,சொல்லுங்க "

                          " அய்யோ கடவுளே,,அது அந்தப் படத்தோட பெயர்,,,அதுதான் நாங்க போடப்போறோம்,,அருணா அண்ணா வேற ரெண்டு படம் கொண்டு வாருவார் என்று சொன்னார் ,,நீங்க வருவிங்களா "

                       " என்னோட மற்ற பிரெண்ட்சைக் கேட்க வேணும்,,அவங்க வந்தாதான் வருவேன்,,இல்லாட்டிப் பம்பல் இல்லையே.."

                         "  ஒ உங்களுக்குப் பிரெண்ட்ஸ் அவளவு முக்கியமா "

                      " ஓம்,,அவங்கள்தான் பிளான் போடுறது,,நான் பின்னால இழுபடுறது "

                     " அட அட அட அட...என்ன ஒரு கொள்கை. இப்பபிடித்தான் வாழவேண்டும், சரி வராட்டி விடுங்க,,இன்னொரு நாள் பகல் வாங்க எங்க வீட்டுக்கு,,அதுக்கும்  உங்க பிரெண்ட்ஸ் வந்தாலா இழுபட்டுக் கொண்டு வருவிங்க "

                           " ஹஹஹஹா,,எனக்கு இப்ப பதில் சொல்ல தெரியலை ,,"

                       " ஒ ,,ஹ்ம்ம்,,நான் கேட்கிற ஒண்டுக்கும் ஒழுங்கா பதில் சொல்லவில்லை,,இதுக்கு மட்டுமா சொல்லப்போரிங்க   ,ஹ்ம்ம் "

                          "  நாங்க வரா விட்டாலும் நீங்க நல்லூர் தேருக்கு வாங்க,அதை மிஸ் பண்ண வேண்டாம் ..சரி தானே "

                             " ஹ்ம்ம் ,மிஸ் பண்ணவே மாட்டேன்,,இப்பிடி சந்தர்ப்பம் கிடைக்கிறதே அரிது...... விடுவேனா...... ,,நான் வீட்டுக்கு போகப்போறேன்,,இன்று செரியான  வெய்யில் நீங்க போகும்போது தொப்பி போட்டுக்கொண்டு போங்க,,இல்லாட்டி மண்டையில் வெயில் கொதிக்கும்,,சும்மா அங்கே இங்கே சுத்தாமல்,,ஒழுங்கா வீட்டுக்குப் போங்க,,இல்லாட்டி எனக்கு கோபம் வரும்,,பிறகு கதைக்க மாட்டேன் ,சரியா "

                          "    சரி, உங்களுக்கு என்ன பெயர் இவளவு அளந்துகொண்டு இருக்குரிங்க ,,உங்க பெயர் சொல்லவில்லையே   "

                           " என்னது, அளக்கிறேனா ,,,இப்பிடியா கதைப்பிங்க,,எனக்கு கோபம் வருது,,ஹ்ம்ம்,,இப்ப அழுகை வருது,,நான் ஆசையாக் கதைக்குறேன்,,அளக்குறேனாம்.   இப்பிடியா கதைப்பிங்க,,போங்க நீங்க,,என்னோட பெயர் சொல்லமாட்டேன் "

                        "  அட அட நான் சும்மா முசுப்பாத்திக்கு சொன்னேன் ,,கோவிக்கவேண்டாம்,,ஆனாலும் உங்களுக்கு கோபம் வரும்போது முகம் அழகா இருக்கு  "

                                " ஹஹஹஹஹா,,உண்மையாவா,,என்னோட தலையில ஐஸ் வைக்கவில்லை தானே "

                             "  இல்லை,,உங்க பெயர் சொல்லுங்க,,பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்களையே பிடிச்சுத் தின்னுற மாதிரிப் பார்த்துக்கொண்டு கரம்போட் விளையாடுறாங்க இப்ப போகக் கேட்பாங்கள் என்னடா ரீல் விட்டனி எண்டு "

                          " ஒ நல்லா ரீல் விடுவிங்களோ,,அய்யோ பயமா இருக்கு,,நான் அப்பாவிப் பெண்,,உலகம் தெரியாத அத்துப்  பூச்சி,,"

                            " ஹலோ,,என்ன கிண்டலா ,,நான் ஏன் உங்களுக்கு ரீல் விட்டு ஏமாற்றவேண்டும் சொல்லுங்க "
  
                            "  அய்யய்யோ,,கோபம் மூக்கில முட்டிக்கொண்டு வருகுதே,,இப்பிடித்தான் கோபம் எப்பவும் வருமா "

                     " அதை விடுங்க,,உங்க பெயரைச்சொல்லிப்போட்டுப் போங்க "


                       " ஹ்ம்ம்,,,வைதேகி  என்றே வைச்சுக்கொள்ளுங்களேன்  "


                       "  ஹஹஹஹா,,சரி,,வைச்சாப் போச்சு. "

                                 எங்களின்  வீடு நால்லூர் கோவிலுக்கு மிக அருகில் இருந்ததால். தேர், தீர்த்தம், இரண்டு நாளும் எங்க வீடு சொந்தகாரர், நண்பரகள் வருகையால் அத்திவாரமே  அதிரும். அப்படி வரும் எல்லாருக்கும் நாங்க சாப்பாடு கொடுப்போம். வாற சனங்களும் சேர்ந்து அம்மாவுடன் சமைபார்கள். தனிமை என்பது கிடைக்காவிட்டாலும் அலாதியான நாட்கள் அந்தத் திருவிழா நடக்கும் இருவத்திஐந்து நாட்களும். நல்லூர் கோவிலில் தீர்த்தம் அன்று கொடி இறக்கி அடுத்தநாள் பூங்காவனத் திருவிழாவோடு புயலோடு மழை பேஞ்சு விட்ட மாதிரி அமைதியாக இருக்கும் எங்களின் ஊர். 

                             அந்த வருசத் திருவிழா தொடங்கவே அருணா எங்க வீட்டுக்கு வந்திட்டான் . அவன் ஒரு நல்ல முருக பக்தன். காலையில பிரதட்டை கோவில் நாலு வீதியைத் சுற்றி அடிப்பான். விரதம் இருப்பான். எனக்கு அந்த நம்பிக்கைகளில் ,கொஞ்சமும் நம்பிக்கை இல்லாததால் நல்லுர்க் கோவிலடிக்கு அதன் நாலு  வீதிப்பக்கத்துக்கு சும்மா தன்னும்  விடுப்பு பார்க்கவும் போறதில்லை, 

                                 சப்பர திருவிழாவுக்கு எங்க வீடுக்கு அவள் வந்தாள், நான் அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

                  " தேர், தீர்த்தம், இரண்டு நாளும் வீடில நிண்டு பார்த்துட்டுப் போகலாமே மகள் "

                           எண்டு அம்மா சொல்ல அவள் சந்தோசமா என்னைப் பார்த்து தலையை ஆட்டி சிரித்தாள், அம்மா

                                "நீர் என்ன  சொல்லுறீர் பிள்ளை , இவன் உங்கட ஊருக்கு வந்து ,அருணா வீடில வந்து வாலைச் சுருட்டி வைச்சுக்கொண்டு இருப்பனா, இந்தக் குரங்கு  அனுமார் வாலயம் வந்த மாதிரி ஒரு இடத்தில  இருக்க மாட்டானே "

                                எண்டு என்னைப் பற்றிக்  கேட்டா , அவள் வாயைக் கையால பொத்திக்கொண்டு சிரித்தாள், தேர் திருவிழா இரவு எங்களின் வீட்டிலேயே நின்றால் அந்த தேவதை .என்னோட அம்மாவுக்கு நல்ல விருப்பம் அந்தப் பெண்ணில் என்பது எனக்கு கொஞ்சம் சந்தோசமாக  இருந்து, என் சகோதரிகள் கொஞ்சம் சந்தேகமாகத்தான் என்னையும் அவளையும் பார்த்தார்கள்.ஆனால் நல்ல நெருக்கமாக அவளோடு பக்கத்தில் இழுத்து இருத்தி வைத்துக்  கதைத்தார்கள். 

                          ஒரு இளம் பெண் தனிய வந்து எங்களின்  வீட்டில நட்பா இருப்பது ஒரு அதிசயம் அந்த நாட்களில் யாழ்பாணத்தில்.  ஆனாலும் அவளுக்கு என்னோட அம்மா, மற்ற பேர்களைப் பிடித்து இருக்கலாம், ஒருவித எதுவுமே அசம்பாவிதமாக நடக்காது என்ற பாதுகாப்பு உணர்வு அவள் கண்களில் இருந்தது. எங்கள் வீட்டில் பிறந்து வளர்ந்த ஒருவர் போலவே நடு வீட்டுக்க சிரிச்சு சிரிச்சு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டு இருந்தாள். 

                         நல்லூர் தேர்த்திருவிழா இரவு எங்கள் சொந்தகாரச் சனங்ள் வீடில இரவு முழுவதும் கச கச எண்டு கதைத்துக்கொண்டு கச்சான் கொட்டை உடைத்து திண்டுகொண்டு இருந்த நேரம். நான் அப்ப கிட்டாரில் பழகிய முதல்ப் பாடலான, " ஒ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்...." பாடல் நல்லா நெஞ்சத்தைக் கிள்ளுற மாதிரி வாசிப்பேன், அது எப்படி இளம் மனத்தைக் கலக்கும் என்பது பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும்.அதைவிடக் காதல்,அது  இபோலா வைரசை விடக் கெட்ட சாமான்.சும்மா காற்றிலேயே பரவிப் பத்த வைக்கும் என்பது அந்த வயசிலேயே நல்லாத் தெரியும் . 

                                        இரவு உறவினச் சனங்கள் எல்லாரும் படுத்தபிறகு, கிட்டாரை எடுத்துக் கொண்டு வந்து   வெளியே எங்களின் வீட்டுக்கு முன்னால் உள்ள கறுத்தக்கொழும்பான் மாமரங்கள் சடைச்சுக் கிளை விட்டுத் தலை முழுகிய இளம்பெண் தலையை அவிட்டு விட்டு விரிச்ச இடத்தில பிளாஸ்டிக் கதிரையைப் போட்டு,அதில இருந்து  " ஒ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்...."பாடல் வாசிக்கத்  தொடங்கினேன்

                             மேற்கு வானத்தில அஷ்டமி சந்திரன் அரைவாசியா பிரகாசிக்க, மாமரத்து இலைகளுக்கு நடுவால அது அள்ளி எறிஞ்ச பால் நிலவு உடைந்து துண்டு துண்டாக விழ , தனிமையில் இருட்டுக்கு பயந்த ஒரு நத்து மஞ்சவன்னா மரத்தில இருந்து பாக்கு வெட்டி போல டிக்கு டிக்கு என்று கத்த, கோவிலைச் சுறிப் போட்டிருந்த ஐஸ்பழக் கடைகளில் இருந்து வந்த ஜெனரேடர் சத்தத்தையும் மேவிக்கொண்டு சந்தியில் இருந்த ஞானப்பிரகாசம் தேத்தண்ணிக் கடையில் இருந்து  ஏ எம் ராஜாவின் இரவின் கடைசிப்  பாடலாக " தனிமையிலே இனிமை காண முடியுமா, நல் இரவினிலே  சூ ரியனும் தெரியுமா .....  " .பாடல் நசிந்து ஜூலை மாதக் காற்றில் சூடாக ஏறிக் கொண்டு வர ...

                            அவள் எழும்பி வந்து எங்களின் வீட்டு போட்டிக்கோவில் ,  எனக்கு முன்னால் ,இருட்டில முழங்கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு சீமெந்துக் கட்டில் இறுக்கமாகக்  குந்தி இருந்தாள்.

பாடிய  கீதங்கள் பாகம்  ரெண்டில் தொடரும்...... 
.
.
.