Thursday 12 May 2016

ஐந்து விதமாகிய நாட்கள் ...


..........................................................
இப்போதைய
உன்
புறக்கணிப்புகளை
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை
அப்போதெல்லாம்
குங்கும நாட்களில்
நூறு மடங்கு
கொஞ்சிப் பேசிக்
கொண்டாட்டங்களுக்குக்
குறைவில்லாமலிருந்ததடா
இதயமில்லாதவனே
என்கிறாள்
எனக்கென்றொரு
இதயம்
இயங்காமலிருப்பதுவும்
நல்லதுக்கே கச்சியேகம்பநாதா
இல்லாவிட்டால்
அது நூறு துண்டுகளாக
சிதறி வெடித்திருக்கும்.
.

.............................................................

வெய்யில் 
என்னோடு சேர்ந்து நடக்க
எப்பவுமே ஆசைப்படுவது
ஒருநாளும் அது
நடந்தேறியதில்லை
நிழல் மட்டும்
முன்னுக்கும்
பின்னுக்கும்
சரிவிலும்
சமாந்தரமாயும்
பக்கவாட்டிலும்
இணை பிரிவதில்லை
சிலநாட்களின்
உச்சிப் பகல்களில்
எனக்குள்ளும்
மறைந்து கொண்டு
ஒளித்து விளையாடுது.
.

...........................................................

நீராரும் கடலுடுத்த 
நிலமடந்தைக் கெழிலொழுகும்
நாட்டில்
தேர்தல் அறிக்கை பார்க்கிறேன்
டெலிவிசனில
ரெம்ப கொடுமையா இருக்கு
என்கிற தோழிக்கு
தக்கசிறு பிறைநுதலும்
தரித்தநறுந் திலகமுமே
அழகாக
அலங்கரிக்கப்பட்ட
பொய்களைப்
பார்த்துக்கிட்டு இருக்கேன்
என்று உண்மையைச்
சொல்லுங்க
என்கிறேன் நான்

...........................................................

முன்னமெல்லாம்
தண்ணியில்லாக் காட்டுக்கு 
மாற்றலாக்குவேன் என்பார்
மேலதிகாரி
அதைக்
காதில வேண்டாமல்
கணக்கெடுக்காமல்
காலை ஆட்டிக்கொண்டு
அசட்டையாக இருப்பது
இப்பெல்லாம்
நெட்வேர் கனெக்சன் இல்லாத
ஏரியாவுக்கு
இடம்மாற்றுவேன் என்று வெருட்டுறார்
உண்மையாகவே
உயிர் போகும்போலப்
பயமாய் இருக்கு.
.............................................................
கொலுசு நல்லாருக்கா.
நீ வெள்ளிக் கொலுசு வாங்கித்தரேன்னு 
கவிதை எழுதின
அடுத்த்நாள் வாங்கினேன்
மிஞ்சியும்
பஞ்சி பிடிக்காமல்
வேண்டி அணிந்தேன்
என்கிறாள் அவள்
உன்
மின்னும் கொலுசும்
பின்னும் மிஞ்சியும்
எனக்குத் தெரியலைடி
பட்டைவெடிச்ச
உன் பாதங்களை கொஞ்சவா
என்கிறேன் நான்
தேவையா
இந்த உத்தரிப்பு
காலக் கொடுமைடா சாமி .
....................................................