Saturday, 8 October 2016

அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து..

அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து...இப்பிடி ஒரு பார்வையில் ஒரு பெண்ணின்தனிமனுஷி வாழ்கையின் வீழ்ச்சியை கவிதைகள்போலவே எழுதத் தொடங்கினேன். " எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி "என்று பெண்களைச் சொல்லும் ஆணாதிக்க சமுதாயப் பின்னணியின் அவலத்தை என்னையும் அறியாமல் எழுதவைத்தது. ஏன் அப்படி எழுத ஒரு உத்வேகம் வந்தது என்றால் அதுக்கு எனக்கு விடை தெரியவில்லை!
                                             காதல் ஒரு கண்ணைக்கட்டிவிட்ட பாதையில் பூக்களின்வாசனையை முகர்ந்துகொண்டே கற்பனையில் மிதந்து பயணிக்கும் ஒருவித ஆக்சிடோசின் ஹோர்மோன்கள் நேரம் தவறிய நேரம் எழுதிய புதுக்கவிதை . அதன் அடுத்தகட்டம் கலியாணம் . அதென்னவோ அவளவு இலகுவாக இருப்பதில்லை. ஒருவேளை சுவாரசியமாக இருந்தாலும் அதை வருடங்களாய் நீடிப்பது ஒரு மன்மத அம்புகளை இடைவிடாமல் எய்தும் கலை.

                                                       அதில் உள்ள வாழ்வினைக் குழப்பமே அனுபவம். ‘அனு’ என்பதற்கு ‘அடுத்த’ என்று பொருள் என்கிறார்கள். ‘பவம்’ என்பதற்கு ‘பிறப்பு’ என்று பொருள். மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும், புதிதுபுதிதாய் பெற வேண்டும் எனும் தூண்டுதலை உடையது ‘ இந்த அனுபவம்’. முற்றுப் பெறாதது. வாழ்வின் மீதான ருசி நிறைவை ஏற்படுத்துமாயின் அது அனுபவமல்ல அது ‘அனுபூதி’. என்கிறார்கள் அதயும் விரட்டிவிட முடியாது.
                                              
                                                         அனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து. தனித்த மனுஷியாக வாழும் ஒரு பெண்ணின் தோற்றுப்போன காதல் பற்றியது. அதில எல்லாப்பெண்களும் ஏதோவொருகட்டத்தில் தங்களை ஏதோவொரு சம்பவத்தில் இணைத்துக்கொண்டு மறுபரிசீலனை செய்யும் சாத்தியங்களைச் சொல்லும் கவிதைகள்.இப்போதைக்குக் கவிதைகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
                                               
                                                       இதெல்லாம் ஒரு பெண்களின் உரிமை பற்றி வாய்கிழியக் கத்தும் பெண் கவிதாயினிகள் எழுதவேண்டிய மனக்குமுறல். நான் சும்மா பரிசோதனை முயற்சியாக " அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி ஆயிரம் பொன்னை அரை க்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி " என்று பெண்களை மட்டம் தட்டும்  சமுதாயத்தில் இருந்துகொண்டு பெண்கள்  புத்திசாலிகள் என்ற  கொன்செப்டில்  எழுதுகிறேன்.
                                                      
                                                    சிலநேரம் உப்பில்லாத சாம்பாருபோல இருக்கலாம். என்னோட எழுத்துமொழி வீச்சு இவளவுதான். உங்களுக்குப் பிடித்து இருந்தால் கருத்து சொல்லுங்க. இல்லாவிட்டால் கடந்துபோங்க. யாரையும் இழுத்துப் பிடித்தி இருத்தி வைத்து ரத்தவாந்தி எடுக்க வைக்கும் நோக்கத்தில் இவைகளை எழுதவில்லை.!

.
வலுவிழந்து 
கொண்டிருக்கின்றது
இரவு பூத்த நிலவு, 
பொறுமையோடு காத்திருக்கு
பொலிவான வானம், 
நீறு பூத்த மனது
விழுந்துவிடவில்லை,
சூடேற்றிக்கொண்டிருக்கு
குளிர்ந்த நிலம் ,
நீங்காத நேயத்திலும்
தத்துவம் சொல்வேன்,
உனக்கே உனக்காக
பரிவுணர்வுதான்
என் பிரதானமான
உள்ளுணர்வு,
நெளிவுசுளிவுகளோடு
ஓடிக்கொண்டிருக்கு

ஒரு தனி மனுஷியின்
வற்றாத ஜீவநதியின் 

நீரலைகள்  என் நாட்குறிப்பு !
.
.............................................................................. 001 

.

இரக்கமிக்கவன் என்பதும்
விட்டுக்கொடுத்துப் போகும்
வழிகளில் வாழக்கூடியவன் என்பதும்
எவளவு பெரிய பொய்
மாறாக
நீ
சுயநலமானவன்.
அப்படித்தான்
நீயே உனக்காக
பரிணாமத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற
மூளையும் அதற்கேற்ப
மாற்றி அமைந்திருக்கிறாய்,
அளப்பரிய பலம் பற்றிய
ஆய்வு முடிவுகள்
கருத்துக்களையெல்லாம்
தனி மனுஷியாக
விழுங்கவேண்டிய அவசியமெல்லாம்
எனக்கில்லை,
நீயொரு
வினோத விலங்கென்று
நீயேதான் நிரூபிக்கிறாய்.
.
...........................................................................002 

.

உன்
மனப்பான்மையே
இப்போதுமென்
எண்ணங்களை வடிவமைக்கிறது,
என்னில் குதித்து 
எனக்குள் ஆழம்காண
நான் ஒன்றும் ஞானி அல்ல
மிகச்சாதாரண மனுஷி,
நதியைப் பார்கிறேன்
தவறிய இலைகள்
தப்பமுடியாத தழைகளைகள்
இழுத்து ஓடும் வேகம்
கரையில் கைகட்டி நின்று
நீ
வேடிக்கை பார்க்கிறாய்
பின்னர்
நீரலைகளின் துள்ளோட்டத்தை
ரசானுபவக் கண்களோடு
கவிதை படைப்பாய்
நதியின் பிரவாகத்தைக்
என்னையே
விழுங்கப்போகிற அரக்கனாய்த்தான்
நான்அச்சமடைகிறேன் .
.
................................................................. 003

.

நாளைய நாளுக்கு
நாலு வாரம்முன்னே
திட்டுமிடுபவள் நான்
நீயோ
இன்று விடிந்ததே
இப்பவரை தெரியாதவன்,
பிறகு எதுக்குக்காக
இலையுதிர்காலம் பற்றிக்
குறை சொல்கிறாய் ?
ஒரு
தனிமனுஷியின் வைராக்கியத்தை
பணயம் வைத்து
காம்பு பழுத்த
மஞ்சள் இலையின் விழுதலோடு
நானும்
புறப்பட்டுப்போகும் திட்டத்தை
சென்ற வருடக் கோடையில்
முடிவுசெய்தேன்.
நீ
இதை வாசித்துச் சிரிப்பாய் !
நல்லாவே சிரித்துகொண்டிரு !
ஒன்றுசொல்கிறேன்
ஏற்கனவே
பேசிமுடித்து ஒப்பந்தமாகியபடியே
வேர்களுக்கு
உரமாகத்தான் அதிலும் போகிறேன்.
.
................................................................ 004

.

நீ
திருந்தி வந்துவிடுவாய்
என்பதில் நம்பியே
தளராத நம்பிக்கையில்
நம்பிக் கையை வைத்தேன்,
உனக்கு
யாத்திராவும்
மாயாவும்
கந்தர்வனும்
இரவிரவா இங்கிதம் செய்வதும்
நல்லாவே தெரியும்,
அது முற்றுப் பெறாத
படுக்கையறையில்
இச்சைகளைச் சுற்றிவைத்து
வாழ்வின் மீதேறி
ருசியைத் தூண்டுவதும் உண்மை,
அப்படியில்லாமல்
நிறைவை ஏற்படுத்துமாயின்
அது அனுபவமல்ல
விரட்ட முடியாத குற்றவுணர்வு,
அதை
தைரியமாய் எதிர்கொண்டால்
ஏணிப்படிகளாய் உன்னைச் செதுக்கும்
உளிகளாய் அமையுமென்று
தனித்த மனுஷியாய்
சொல்லியே அலுத்துப்போனேன்,
நீ
இப்பவும் என்னைக்
கடைநிலையில்
வாசல்படியாகவே வைத்திருக்கிறாய்.!
.
................................................................ 005

.

ஒன்பது மாதங்கள்
நீ
ஓடிப்போய்ஒதுங்கி நின்று
ஒழித்துக்கொண்டிருந்தாய்,
வாயும்வயிறுமா
வாந்தியை வாய்வரை எடுத்தே
தனி மனுஷியாக வாழ்ந்தேன்,
அம்மா வீட்டிலேயே
பன்னீர்க்குடம் உடைந்து
பாடை ஏறுவதுபோலவே ஏற்றி
அழுக்கான பிரசவவாங்கில்
கடைசி நிமிடம்
எங்கள்
மகள் பிறந்தாள்!
நான் தப்பிவிட்டேன்
ஆண்டவனுக்கு நன்றி
அவளும் தப்பியேவிட்டாள்!
நேற்று நீவந்து
உன் உயிரை மறுபதிவுசெய்த
எங்கள் மகள்
யாருக்குப் பிறந்தாள் என்று
இரத்தமரபணுப்பரிசோதனை
செய்தேபார்க்கவேண்டும் என்கிறாய்!
உனக்கு எதுக்கு
இல்லாத பிள்ளைக்கு வீண் செலவு?
அதைக் கேட்டபோது
அந்த ஆசுப்பத்திரியில்
நானும்
உன்மகளும்
செத்தேபோனோம்
இப்ப சந்தோஷம் தானே உனக்கு.?
.
................................................... 006

.

சந்தோஷங்களில்
சந்தேகத்தை வேண்டுமென்றே
உள்நுழைத்து
வானவேடிக்கையாக்கிப் பார்த்ததே
நீதான்,
எனக்குதான்
உன்னைத்தவிர
எல்லாமனிதர்களும்
அன்பின்வடிவாகவேயிருந்தார்கள்,
அதிகாலை அலாரத்தோடு
மணியடித்த பால்க்காரன்,
மொட்டைமாடியில்
உடட்பயிட்சி செய்த பக்கவீட்டுக்காரன்,
அம்மி பொழியவந்த
சின்னதான நோஞ்சல்ப் பையன்,
ஐயப்ப சாமி கோவிலில்
அப்பாவின் வயது ஐயர்,
மின்சார இணைப்ச் சீராக்கிச்
சரிசெய்தவந்த வயதான ஐயா,
கொஞ்சம் தாமதித்த
தபால்க்காரன்,
நீதான்
யாரையுமே விட்டுவைக்கவில்லையே!
நீ
எல்லாரையும் திட்டிக்கொண்டு
போயேபோய் விட்டது சந்தோஷம் !
இப்போதுதான்
தனித்த மனுஷியாக
எல்லா ஜன்னல்களையும்
வாசல்க் கதவுகளையும்
அகலத் திறந்து வைத்திருக்கிறேன்
காற்று
சுதந்திரமாக வந்து போய்க்கொண்டிருக்கு!
.
....................................................................... 007

.

விட்டில்ப் பூச்சிகளும்
சிம்மினி விளக்கும் போலத்தானே
வாழ்ந்துகிழித்தோம்
உன்
வெளிச்சத்தில் 
விழுந்துகொண்டிருக்க
ஆசைப்பட்டதெல்லாம்
உனக்குப் புரியவேயில்லை
நெருக்கத்தையும்
இறுக்கி மறுதலித்து
விலத்திவிலத்தியேயிருந்து
ஒரு நாள்அந்தத்
தற்பெருமை வட்டத்தை
நீ
ஒரு முடிவோடு கடந்த போது
நானும் வெளியேறிவிடுவேன்
என்றெல்லாம்கூட
நினைத்திருப்பாய்,
தைரியமானவைகளையே தேர்வுசெய்த
தனிமனுஷியாக
அந்த விளிம்புகளைத்தன்னும்
எழுந்து சென்று
நான்
இதுவரையில் விசாரித்ததேயில்லை!
உன்
பொய்த்துப்போன முகமூடிகளை
அரங்கத்தைவிட்டு வெளியேறி
இனியாவது கழட்டிவிடு
அவையுனக்குப் பொருந்தவேயில்லை !
நானோ
மிகமிக வைராக்கியமாக
இப்பவும்
சோடனைகள் எதுவுமின்றி
மேடையின் நடுவில்தான் நிக்கிறேன்!
.
.......................................................................... 008


.
நீயும்
ஓரளவுக்காவது
ஒத்தாசையாக இருப்பாய்
அபத்த சூழ்நிலைகளில்
என்னை விட்டுக்கொடுக்கமாட்டாய்
சமதர்மமாயிருப்பாய்
அப்படிதான்
காதலித்தபோது அனுமானமிருந்தது,
முதன் முதலாக
உன்
அம்மா வந்தபோது
சேலைத்தலைப்பை பிடித்து
நீயோ
அடியோடு மாறிவிட்டாய்,
விரிவாகச்
சொல்லிகொடுத்த
ஏதேதோ வார்த்தைகளை
அகாலவேளைகளில்
பிரயோகிக்கத்தொடங்கினாய்,
உனக்குத்
திடீர் என்று சீதனம்
ஆண் சிங்கமென்பதால்
கவுரவம் ஆகிவிட்டது,
உன் சாதி வேறு
சொல்லிக்காட்டத் தொடங்கிய போது
மேலெழுந்துவிட்டது.
எனக்குச் சமயமில்லை
கடவுள் எல்லாம் ஒன்றுதான்
உனக்கோ உன் ஆகமம்
ஒரு இரவோடு சதிராடத்தொடங்கியது,
நல்லாவேதெரியும்
உன்
அம்மா வந்தபிறகுதான்
நீ
இப்பிடி ஆவேசமாய் அதிகாரமானாய்
இதுக்குப்பிறகும்
நமக்கிடையில் எப்படி
அன்றில்ப்  பறவைகளின்
அன்பிருக்க முடியும்?
.
.......................................................................... 009

.
கொண்டாடும்போதே
நான்
என்னை இழந்துவிட்டேன்
நீயோ
எங்கள் காதலை

மறைக்கச் சொன்னாய்
என்ன காரணம் ?
நீயாக
இதுவரை சொன்னதேயில்லை !
உன் சிரிப்பில் மயங்கி
என்னையே கொடுத்தேன்
அப்பவும் நீ
தயங்கியே தள்ளிப்போட்டாய்
துணிந்து ஒருநாள்
என் வீட்டில் சொல்லியேவிட்டேன்!
கதைத்துமுடிக்க
அப்பாவே வரச்சொல்லி அழைத்தபோது
நீயும்தான்
ஸ்ரீராமன் போலவந்தாய்
உன் முகத்தைப்பார்த்துகொண்டே
நான்
எங்கெல்லாமோ பறந்துகொண்டிருந்தேன்,
உன்
கன்ன வழுவழுப்பை கவனிக்க
உன்மனது
என்னவெல்லாத்தையுமோ
எடைபோட்டுக்கொண்டிருந்தது,
நீ எப்படியோ
பழைய வீட்டின் பெறுமதிபார்த்தாய்,
அள்ளிப்போடும்
பவுணின் சாத்தியங்களையும்
தவறாமல்க் கணக்கிட்டாய்,
என்
அக்கா தங்கச்சியின்
சொத்துப் பகிர்வுகளில் குறியாகவிருந்தாய்,
அப்பவும்
வாழ்ந்தேவிடவேண்டுமென்ற
காதல்தான் கண்ணை மறைத்தது.
ஒரு தனிமனுஷியாக
இப்பவும் ஒத்துக்கொள்கிறேன்
அந்தஇடத்தில்தான்
என்
மிகப்பெரிய தோல்வியில்
என்னையும் தொலைத்தேன்.

.
....................................................................... 010


உன்
மதுப்பழக்கம்
மிகப்பெரிய பிரைச்சினையாக
உனக்குத்தான் இருந்தது
எனக்கல்ல
உன்னைத் திருத்திஎடுக்கவே
கேள்விகளில் எதற்க்காகக்
குடித்துக்கொண்டேயிருந்தாய் என்றேன்
அது
உனக்குமே புரியவில்லை
விவரமாக விவாதித்த போது
மிக இலகுவாக
பிடிக்காத பழியை மட்டும்
என்மேலே வீசுவதில்
ஒரு இரவுகூட விடிந்ததில்லை
எத்தனைநாள்
வேண்டுமென்றே
என் புத்தகங்களின் மேல்
காரித்துப்பி
கிழித்து எறிந்தாய்
எத்தனை மாலைப்பொழுதில்
வீடு முழுவதும்
மூத்திரம் பெய்தாய்
அன்பின் மிகுதியால்
அதையும் கழுவித்துடைத்தேன்
ஒரு தனிமனுஷியாக
இப்போதெல்லாம்
வீடெல்லாம் சுத்தமாக இருக்கு
வசவுகள் இல்லாத
அதன் வாசனைகளில்
இரவெல்லாம்
மல்லிகைப் பூக்கள் விரிகிறது
நீ
இப்பவும் வேறொங்கோ குடித்துக்கொண்டிருப்பாய்
இப்போதுதான் உன்னைக்
கேள்விக் கேட்ட யாருமேயில்லை
அது
எனக்கும்தான் வேதைனையாக இருக்கு.!
.
......................................................................... 011


யாரோவோருதியின் பெயரை
இரவெல்லாம்
விடாமல்ப் பிசத்தினாய்
யாரவள் என்று நான்கேட்டதேயில்லை
நீயாக
அவளைத் தேவதைபோல
என்னோடு ஒப்பீடுசெய்து
விவரணம் கொடுத்து விவரித்ததாய்
அவள் கன்னம்களைக்
காஸ்மீர் அப்பிள் என்றாய்
அவள் நிறத்தை
வெள்ளை முயல் என்றாய்
அவள் சிரிப்பைப்
பால்ப் பாயாசம் என்றாய்
அவள் நடையை
அன்னப்பறவை என்றாய்
இன்னும் என்னமெல்லாமோ
உடல் மொழியாக்கி அபிநயித்து
விபரமாய் சொன்னாய்
அவள் அழகானவள்
என்பதில்
எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை
ஆனால்
அவள் இப்போது
என்னைவிட அன்பானவள் என்றாய்பார்
அதில்த்தான்
முதல்ப் பிளவு விழுந்தது
ஒருதனி மனுஷியின் சபதம்
உன்னோட அந்த வார்த்தை
ஒருநாள் உன்னைப் பலிவேண்டும்
அந்தக் கணத்தில்
நினைவெடுத்து நிட்சயமாகவே
நீ என்னைநினைப்பாய்
அப்போது
எல்லாமே முடிந்துபோயிருக்கும்
.
................................................................... 012


நவராத்திரி
அணையா விளக்குகள்
எரிந்துகொண்டிருக்கு
அவைகளின்
திரிகள் கருகும் வாசம் வருகுது
நான்
எதற்க்காக இன்னொரு ஒளிநடனத்தில்
உன்
அன்பானவார்த்தைகள்
எதிரொலிக்குமென்று
காத்திருக்கிறேன்
எந்த மொழிக்கும்
நிழலிலத் தன்னும்
நெருங்காதவன்
நீதான்
என்னிடம் இப்போதும் எப்போதும்
இனியும் புயல்களுக்கு
முகம் கொடுக்கும் தைரியம்
இல்லவேஇல்லை
என்னிடம்
இந்தச் சாமி அறையிலிருந்து
உனக்கும்
எனக்குமான காதலைத்தான்
துடைத்துஎறியவேமுடியவில்லை
என்
கதறல்களுக்கு சத்தமில்லை
இதயமேஇறுக்கிப் பூட்டிவிட்டது
விதம்விதமான
சாம்பிராணி வாசனைகளில்
நீ
எப்பவும் என்னோட இருகிறாய்
அதை முகர்ந்துகொண்டு
காற்று பாதை தவறவிட்ட
வெற்றிடத்தில்
வாழ்ந்துவிடுவேன்.
.
....................................................................... 013


.