Friday, 5 August 2016

அன்னாமிக்கா மேலும் பன்னிரண்டு கவிதைகள்

......................................................................022

என்கைகள்
எப்படி எனக்குச்
சொந்தமோ அதேபோல
முதல்முறையாக
அனாமிக்காவை 
எழுத ஜோசித்த போது

ஆழமாகியே
ஊடுருவிவிடுவாளென்ற
முக்கியத்துவங்கள் தெரியவில்லை

காலம் இழுத்துவிட்டு என்னிடம்
சிதறிப்போயிருந்த
சிந்தனைகளில்
அவளை மெல்ல உருவாக்கி
பேய் நடக்கும் இரவுகளிலும்
வெய்யில் சிதறும் பகலிலும்

மழை  சினக்கும்  நாட்களிலும்  
உலாவவிட்டேன்

கனவுகளைத் தேடித்திரியும்
வாழ்கையில்
அவள் வார்த்தைகளின்
அர்த்தங்களை
முடிந்தவரை உடைத்ததில்லை
உரையாடல்கள்

நெருக்கடிகளை ,
அவலங்களுக்குள் சிக்கவைக்கும்
விசித்திரமான கேள்விகளுக்கு
திசைகாட்டிய பதில்கள்
உண்மையைப் பொய்த்ததில்லை

எளிதாகச் சொல்லமுடிகிற
மொழியைப் பரிசோதனை செய்து
போகிறபோக்கில்
யாரோ ஒருத்தியைதான்
அப்படி சிருஷ்டித்தேன்
முடிவில்
அவளே அனாமிக்காவாகி வந்தாள்


...................................................................023


இரத்தம் தோய்ந்த
செய்திகளில்
அதிகாலை விடியும் போது
அனாமிக்கா
முகத்தை இறுக்கிக்கொள்கிறாள் 

போதனைகளின்
இரைச்சலடங்கிய பின்னும்
அமைதி என்னவோ
தடுமாறுகிற நாட்கள்
இருப்பைக் கேள்வியாக்குதென்பாள்

வெடியோசைகளோடு
விடியல் எழும் நாட்டில்
நானிருந்து வந்தேனென்பது
அவளுக்கும் நன்றாகத் தெரியுமென்பதால்
அன்பைப்போதிக்கும்
அடிப்படைகள் அதி தீவிரமாகிவிட
அப்பாவிகள் பலிபீடங்களிலென்றேன்

இரட்சிப்புத் தேவதைகளின்
வருகைதரு நேரத்துக்கு
முன்னதாக
பேய்களுடன் போராடுவதுக்குப்
பொறுமையுடன்
சமரசம் செய்யவேண்டியுள்ளதென்பாள்

நம்பிக்கைகளைக் கைவிட்டு
நேரடியாகவே
கடவுளிடம் பொறுப்புக் கொடுப்பதில்
அறுதியிட்டுக் கூறமுடியாத
உறுதி மொழிகளில்
ஒருநாள் நானும்
இன்னொருநாள் நீங்களும்
அதன் பின்னொருநாள் அனாமிக்காவும்
ஆகுதி ஆகலாம்.


..................................................................024

இப்பவும்தான்  
அந்த ஒரேயொரு 
நம்பிக்கை வார்த்தையை 
எல்லாவிதமாயும் கற்பனை செய்து 
ஒடுங்கிக்கொண்டிருகிறாள் 
அனாமிக்கா

பொறுமைகளுக்கும்
பொறாமைகளுளுக்கும்
அவளே பலியாகிய பொழுதுகளில்
அவனோ
இன்னுமொருதிக்கும்
எப்படியெல்லாமோ
கற்பனைகளில்
கதைகளையடுக்கி வைக்க
ஆர்வமாக இருக்கலாம்

வஞ்சம்செய்யும்  இரவு
வாவென்று அழைக்கும்
நினைவுகள்
இதயத்தை இறுக்கிப்பிடிக்க
பூந்தென்றல்க் காற்று
பின்மாலைப் 

பொழுதுகளும்
அவள் சேலையின் நுனியை
கொசுவமாக இழுதுப்பிடித்தன

காதல் என்பது
அனாமிக்காவுக்கு
வைராக்கியமான பெறுமதிகள்
வெகுமதிகளாகக் கிடைக்காத
கடைசி மூச்சு முடிச்சுக்கள்

அவனுக்கோ
அப்பப்ப வெளியேற்றிவிடும்
வியர்வை போலிருக்கலாம்

அல்லது 
ஆடிக்கோ  ஆவணிக்கோ 
கரை தட்டும் நிழல்

நீங்களே நெஞ்சத்தொட்டுச்
சொல்லுங்க
இன்னும் எத்தனைநாள்தான்
அனாமிக்கா

இப்படியே அவளுக்குள்ளேயே பேசி
அற்ப காரணங்களில்
சமாதானமாகிக்கொண்டிருப்பாள்?

............................................................................025

சிறைப்பட்டு விடுபடாத
மனதின் வீரியமிழப்புகளை
அனாமிக்கா
அட்சரஷக்திகளாக ஆட்கொண்டு
காயத்திரி மந்திரம் சொல்லும்போது 
அறையே பிரகாசமாகிவிடும்

அதிகாலை
சாம்பிராணி வாசங்களினூடாக
அனாமிக்கா
விழித்துக்கொள்ளும் போது
உற்சாகப் பறவைகள்
அதிசிரத்தையாக
மரக் குருத்துக்களை விசாரிக்கும்

ஒருங்கிசைவான ஒலி
பரவிவிடும் இன்கிதங்களுக்கு
என்ன அர்த்தமென்று கேட்பேன்
அதுவாகியே
அறிவைத் தூண்டி
உண்மை அறியும்
உயர் நிலைக்கு உயர்துமென்பாள்

எல்லா விருப்பங்களையும்
பூர்த்தி செய்து கொடுக்கும்
எதாவதாகவொன்றை
அது விவரிக்கலாம்
அதை விட வேறொன்றில்
விபரிப்பது கடினமென்றாள்

வெள்ளிகிழமை காலை
ஆன்மீகத்தை
அனுபவிப்பது போலவே
நாள் முழுதும் வேலை செய்வதில்
மூழ்குவது அரிது
என்று நானும் சொல்லிவைத்தேன்

படைப்பின் புதிர்களைப் பற்றி
பேசிக்கொள்ளும் சின்ன உரையாடல்
நினைவுக்கு அப்பாற்பட்ட
முற்றிலும் மாறுபட்ட
மவுனமாக இருக்குமென்று
அவளும் சொல்லும் போதே
ஜன்னல் விழிம்பில்
இளமஞ்சள் தெறிக்கும்

.................................................................026

ஏதோவொரு
அவதி அந்தரிப்பில்
வெளிக்கிட்டுப்போன அலையை
ஆழிக் கடல்
கரை சென்று மீண்டாலும் 
மறுபடியும் சேர்பதில்லையென்றாள்
அனாமிக்கா

வடிவங்கள் இழந்துபோன
நுரை அலைகள்
கடற்கரை எங்கும்
விரிந்து கொண்டு வந்து
எம்பிக் குதித்து
மோதிய சரிவில் அழிவதைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒரு கடலின்
உப்புக்கரிக்கும் கதையைக் கூட
மேல்நிலைக் காற்று
நம்பி ஏற்பதுமில்லை
தன்னோடு சேர்த்து மிதக்கும்
ஒரு மீன்கொத்திப் பறவைக்கும்
அது எதுவும் அவிழ்பதில்லையென்றாள்

கடந்துகொண்டிருக்கும்
காலத்தின் மேகங்கள்
கடல் வெளிக்கு
எந்த நிழலும் தருவதுமில்லை
ஆனாலும்
உனக்கும் தெரியுமே
ஆழமறியாத
இன்னொரு பருவத்தில்
எப்படிக் கொந்தளிப்புக்கள்
அச்சமூட்டுவதாக மாறிவிடுமென்று

முடிவில்
சமுத்திரங்களின் ரகசியங்கள்
போலியானவையென்று
சொல்லும் தைரியம்
இன்னும் யாருக்கும் வரவில்லையென்றாள்
ஏமாந்த சில தரவைக்கடல்களை
மட்டும்தான் தைரியமாக
விமர்சிக்க முடியுமென்றாள்

நான்
கரையெல்லாம்
சிப்பிகளுக்கும் சோகிகளுக்கும்
நடுவிலோடும்
நண்டுகளின் வரைபடங்களில்
அனாமிக்காவின் வரிகளுக்கு
அர்த்தம் தேடுகிறேன் .

..........................................................................027

முடிச்சுக்களை 
முகை அவிழ்க்கவென்றே 
உள்ளிருக்கும் 
ஏதோவொண்றை 
வெளியே உள்ளதைப் போல 
வித்தியாசமாக
விபரிக்கிற படங்களை
அனாமிக்கா பதிவு செய்வாள் .

சின்னக் சதுரமான
சட்டத்துக்குள் அவள் பார்வை
விழி விளிம்புகளைத்
தேர்வாக்கி ஒடுங்க வைக்க
நீ விழுந்து எடுப்பதுக்கே
வித்தியாசமாக
வளையவேண்டியிருக்கிறதே என்பேன் ,

கவனிக்கப்படாத
பரிமாணங்களைப்
உள்வாங்கும் காட்சி
முடிந்தவரை சொல்லவேண்டிய
எல்லாத்தையும்
இழுத்து வைக்குமென்பாள்

அவள் முகத்தில் விழும்
பொன்னிற முடிகளுக்கு நடுவில்
இடைவெளி எவளவு இருக்குமென்று
கணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து
தற்செயலாக

ஆழமான ஆத்மாவின்
மூச்சு முட்டலை
விரும்பிய விதத்தில்
மிகைப்படுத்தி
அகலமாக்க விரும்பாமல்
நேரான நிகழ்வாக முடித்து விடுவதே
நிழல்ப்படம் என்றாள் .


.

............................................................................028

சிற்றோடைகள்
ஒரு புள்ளியில்
வெள்ளங்களைச் சேர்த்துவிட
ஆறு அகலமாகுமிடத்தில்
அனாமிக்கா 
ஆரவாரிப்பாள்

நீரின் ஓட்டத்தில்
காலநேரப்பரிமாணம்
சரிவுகளுக்கு ஏற்றப்படி
நீண்டு கொண்டும்
குறைந்து கொண்டும்
வழுக்கிவிடுகிறதென்று
ஐன்ஸ்டைன் சொன்னார் என்பாள்

கரைகளோடு செய்துகொண்ட
ஒப்பத்தங்களை மீறிக்கொண்டு
பல நேரங்களில்
இரகசியமான அதன்
வேகத்தின் தோற்றுவாய்
எங்கிருக்குதென்பது
யாருக்கும் தெரியாதென்றாள்

எனக்கோ எப்போதும்
ஆறென்பது
அதே இடத்தில நிற்பது போலிருக்க
அதன் தண்ணியில்
சலனமற்ற நுரைகள் தோன்ற
அது இறந்துவிட்டது
போலவே நினைத்து விடுவேன்

அனாமிக்கா
ஆற்று நீரலைகளை
சமாந்தரமாக்கிவைத்து
நிலப்பரப்பில் படரவிடுவாள்
ஏனென்று கேட்டாள்
மலைத்தொடர்சிகளும்
நதி மூலங்களும் தான்
முடிவில்லா எல்லைகளுக்கு
முக்கியத்தும் கொடுப்பதில்லையென்பாள்


.......................................................................029

மழை
சந்தோசப்படுவதே
அதன் தண்ணீர்த் துளிகளில்
என்று சொன்ன போது
அனாமிக்கா 
அவள் கண்ணீரை
மறைப்பது போலிருந்தது

மழையையாவது
அதன் போக்கில்
அழுது பெய்து முடித்துவிட
அவள் வரம் கேட்டபோது
நான் தாழ்வாரத்தில்
ஒதுங்கியிருந்தேன்

எந்தப் பாதையில் நனைந்தாலும்
திரும்பிச் செல்லும் வழியை
ஜோசித்துக்கொண்டேசென்றதில்ல
ஆனாலும்
ஒருமுறைகூட
அடைந்ததேயில்லை
தூறல்கள் தட்டி எழுப்பிய நேரம்
தேடிப்போன
புழுதி மண்வாசனையை என்றாள்

மழை
அதன் வாழ்க்கை வடிசலில்
விழுந்துகொண்டேயிருக்க
கனவுகளில் வரும்
மழையில் மட்டும் நானோ
தெப்பலாகக் குளித்துவிடுகிறேன் என்றேன்

மழைக்கான
வளைகாப்பு வானவில் என்ற
அனாமிக்கா
சாரல்த் துளிகளில்
இறகையைத் தோய்த்துக்கொண்டு
பறக்கவே முடியாமல்
வந்திறங்கிய ஒரு பறவையை
தன் வலியோடு ஒப்பிட்டு
இரக்கமாகப் பார்த்தாள் .


....................................................................030

நடுக் கோடையில்
ஓ வென்று
திறந்தவிட்ட ஜன்னல்கள்
அந்த மர வீட்டின்
நெடுங்கால வாசங்களை 
வெளியே விட்டது

உறைபனிகுளிரில்
அதன் சுவாசங்கள் ஈரமாக
கதகதப்பான
வரவேற்பு மூலைகளில்
குழந்தைப்பருவ சிரிப்புக்களை
பாதுகாத்து வைத்திருகிறது

அனாமிக்காவின்
மிகப் பழைய வீட்டின்
வெளி நிறங்கள்
நினைவுகள் போலவே
மங்கிக்கொண்டிருப்பது
மறுக்க முடியாத உண்மைதான்

சிவப்புநிற பைன் மரவீட்டின்
கொல்லைப்புறத்தில்
அப்பிளும் பியர்ஸ் மரங்களும்
முன்னுக்கு ரெண்டு
மேப்பிள் மரங்களுடன்
வசந்தகாலப் பறவைகளின்
வேடந்தாங்கல்

அந்த வீடு
எல்லாவிதமான துன்பங்களிலும்
அசையாமல் இருக்க
அனாமிக்கா
நடு ஹோலில் இருக்கும்
பழைய பியானோவில்
பாட்டு வாசிப்பாள்

இதையெப்போது
விக்கப்போகிறாய் என்றேன்
ஒருபோதுமே
ஏமாற்றம் தராத கனவுகளை
மரச்சட்டங்களின்
இடைவெளிகளில்
இறுக்கி வைத்திருப்பதால்
எப்போதுமே விற்பதட்கில்லை
அப்படி ஒரு நிலைமை வந்தால்
நானே
வீடாக மாறிவிடுவேன் என்றாள் .


................................................................................031

அரிக்கன் திரி வைச்ச லாம்பு
வெளிச்சங்களை
வெளிய கசியவிட்டு
இருட்டை முடிந்தவரை
சிதறடித்துக்கொண்டிருந்த 
மம்மலான மழைநாள்

அனாமிக்கா
ஈசல் பறந்து கொண்டிருந்த
சிம்மினியில்
கீறல் விழுந்த கோடுகளில்
வெளி வந்த ஒளி
வழி குனிந்து விட்டு
அமங்கலமாக
வளைந்துகொண்டிருப்பதைத்
தொட்டுக்கொண்டிருந்தாள்

அவசியமான நட்பும்
அருகில் முரண்பாடுகளும்
இப்படியானவொரு பொழுதில்தானே
தொடங்கியதை மறந்து
பிறகெதற்காக
அந்தச் சந்திப்புக்களை
தற்செயலான விபத்தென்கிறாய்
என்று கேட்ட நேரம்
மவுனத்தை உடைத்தேன்

அனாமிக்கா
உதட்டு வரை வந்த
பிடிவாதமான வார்த்தைகளை
நெருக்கித் தள்ளி
உள்ளேயே வைத்திருக்க
அதன்பின்
பார்வையால்ப் பேசிய
உரையாடல்கள் தொடர்ந்தது .

ஒரு இறுக்கமான
ஆத்ம தெளிவு உள்ளீடாகப்
பிரகாசமான போது
அனாமிக்கா
மெல்லெனச் சிரித்தாள்
அவள் மேலாடையின்
வாசனைகளில்
ஈசல்கள் முத்தத்தை
எதிர்பார்ததாய்.
மதணோத்சவம் ஆரம்பித்தது.


..............................................................................032

அதிகாலையே
காலம் எழுந்திருந்தும்
கருங்கல்லுப்போல
அசையாமலிருக்க
நடக்கப் போகிற 
ஏதோவொரு பிறழ்வுக்கு
பூசுமஞ்ச வெய்யிலே
வெள்ளையாக மாறிவிட்டது

அனாமிக்காவின்
வெடி வார்த்தைகளில்
உலர்ந்த கோபங்கள்
ஏறி உக்காந்துகொண்டு
இன்றை வரை
பேசிய எல்லாவற்றையும்
கேலிசெய்துகொண்டிருந்தது

நீட்டிக்கொண்டிருந்த
பழுப்பு முகத்தில்
மூக்கு சிவந்திருக்க
பாட்சாதாபங்களில்
களைத்துப் போன கண்களில்
திவலைகள் திரண்டு கொண்டிருந்தது

திட்டியே முடித்துவிட
வேண்டுமென்பது
ஆவேசமாக வரும் போதுதான்
தர்க்கம் என்பது
விசித்திரமான திசையறிந்து
என் மனது வியப்பாகிவிடும்

ஓரப்பார்வையில்
ஒதுக்கி வருடித் தள்ளும்
புரிந்துணர்வில்
தொடர்ச்சியாக எப்போதும்
என் குழப்பங்களோடு
பொறுமையாகி ஒருங்கினைபவள்
அனாமிக்கா

இன்றொருநாள்
வாசனை உரிமைகளோடு
செல்லச் சண்டை
அதிலும்
அணைத்துக்கொண்டே
விடுபட்டுப்போன பக்கங்களில்
படிக்காமல் தவறிய
நேசிப்புக்கள் தான் அதிகமாக
வெளிவந்தது .


...............................................................................033

முழுவதுக்குமான 
முழுமையான துணையைப் 
பரஸ்பரமான அன்பால் 
தேர்ந்தெடுக்க்க முடியுமாவென்று 
அனாமிக்காவிடம் 
விசாரித்த போது
அவளையேயிழந்து
காதலில் எப்போதாவது
விழுந்தெழும்பினாளா
என்றெனக்குத் தெரியாது

உலர் சருகுகள்
மெல்லிய காற்றின் சிநேகத்தில்
சரசரத்து உராய்ந்துகொண்டிருக்க
எதையோ சொல்வதுக்கு
அவதியுடன்
பைன் மர இலைகளில்
அமைதி பதுங்கியிருந்த
ஒற்றையடிப் பாதையில்தான்
அந்தக் கேள்வி கேட்கப்பட்டது

எல்லாவிதமான
நம்பிக்கைகளும் ஒருநாள்
உடைந்துபோகும் போல
அவள் கண்களில்
தீர்மானமிருந்தது
உதடுகளை இறுக்கி
எப்போதோ உடைந்து போன
ஒரு வார்த்தையைத் தேடினாள்

நீல வானத்தைப்
படுக்கைக்கு அழைத்த வண்ணம்
மஞ்சள் அடிவானம்
காமம் சூல்கொள்ளும் இரவின்
அர்த்தயாமத்துக்கு
கந்தர்வ மயக்கம் நெருக்குவதைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்

அனாமிக்கா
முகத்தில் பிரகாசமாகி
அழுத்தங்கள் இல்லாத
பொறாமையோ போட்டியோ
தேவையற்ற நிசப்தமான
ஆழமான மவுனத்தில்
தன்னைக் கரைத்துக்கொண்டிருந்தாள்
ஹ்ம்ம்
அவளும் ஒருமுறை
விரும்பியோ ,விரும்பாமலோ
காதலில் இடறியிருப்பாளென்றே
நம்புகிறேன்.


.