Monday, 9 November 2015

அன்னக்கிளி முதலாளி,

சம்மனசுகளின் வீராதி வீரன்கள்  வந்தார்கள் ,போனார்கள்,வென்றார்கள் ,தோற்றார்கள் என்று காலம் கையை விசுக்கிகொண்டு  நடுவீதியில் தனிப்பட்ட  உத்தியில் வரலாற்றை எழுதிச் சென்ற யுத்த காலத்திலும்  அதன் பாதை ஓரங்களில் புனைவு எழுத்துக்கள் எதுவுமின்றி  சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில்  யார் யார் உபரியாக  விழுந்தார்கள் என்ற குறிப்புக்களை  இன்னுமொரு கதை எழுதிக்கொண்டு சென்றது

                                                   அன்னக்கிளி முதலாளி, என்னடா இது ஒரு பொம்பிளையின் பெயரில் உள்ள ஒரு ஆம்பிளை என்று  இந்தப் பெயர் தொடங்கும் போதே உங்களுக்கு குழப்பமாக  இருக்கும். பெயர் தான் அப்படியே தவிர அவர் முழுவதும் ஆம்பிளை, எங்களின் ஊரில் இருந்த ஒரேயொரு பேக்கரி அன்னக்கிளி பேக்கரி. அதன் உரிமையாளர் அவர். அதால அன்னக்கிளி முதலாளி என்ற பெயர் வந்தது.

                                          பிறத்தி  ஊரில் இருந்து வந்து  ஏன் அன்னக்கிளி என்று பாண் பேக்கரிக்கு பெயர் வைத்தார் என்று வெளிப்படையாக யாருக்கும் அவர் சொன்னதில்லை. ஆனால் அன்னக்கிளி என்ற அன்னம், கிளி போல இருப்பாள் என்று சிலருக்கு மட்டும் சொல்லியிருகிறார். அவர் ஊரில் அவருக்கென்று ஒரு காதல் கதையோ,அல்லது கலியாணக் கதையோ இருந்திருக்கலாம். அதுபற்றி எங்கள் ஊரில் யாருக்கும்  எதுவும் தெரியாது என்றதுதான் உண்மை.

                                           அந்த அன்னக்கிளி பேக்கரிக்கரியை அடையாளம் காண்பது பெரிய விசியமில்லை , அதுக்கு  பக்கத்தில  போறணைக்கு அடுப்பு எரிச்சு தணல் விழுத்த எப்பவுமே வன்னியில் இருந்து கொண்டுவந்த பாலைக்குத்தி ,முத்திரைக்குத்தி விறகு லோட் குவிந்து கிடக்கும். மலைபோல பறிச்சுக் போட்டுக் கிடந்த அந்த விறகு லோட்தான் ஒரு நாள் விடிகாலை ரெண்டாம் வடிப் பாண் போறணையில் வெந்துகொண்டு இருந்த நேரம் அன்னக்கிளி முதலாளிக்கும், அன்னக்கிளி பேக்கரிக்கும் எதிர்பாராத நேரத்தில் அழிவைக் கொண்டுவந்தது .

                                           நாற்பது சொச்சம் வயசிலதான் அன்னக்கிளி முதலாளி அந்த பாண் பேக்கரியை நடத்தினார். முதலாளி போல வெள்ளையும் சொள்ளையுமா உடுத்திக்கொண்டு கசியர் மேசையில் காலை ஆட்டிக்கொண்டு இருக்கும் மற்ற முதலாளிகள் போல அல்ல அவர் . அவர்தான் அதில பாஸ் என்ற பாண் போடுற வேலையில் இருந்து ஏறக்குறைய எல்லா வேலையையும்  செய்தார்.

                                           பேக்கரிக்குப் பின்னால இருந்த தென்னம் வளவில அஸ்பெஸ்டஸ் கூரை போட்ட  ஒரு சின்னச்  செங்கல்  வீட்டில  தனியாச்  சமைச்சு சாபிட்டுக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு குடும்பம் என்று ஒருவரும் அந்த வீட்டில் இல்லை. ஆனால் பேக்கரியில் பகல் நேரம் ஒரு பொம்பிளை முன்னுக்கு நிண்டு வேலை செய்வா, அவாதான் பாண் பணிஸ் விக்குறது. மாத  சம்பளத்துக்கு வேலை செய்தா. அவாவும் நடுத்தர வயதுப் பெண்மணி ஆம்பிளையள் ஓடுற சைக்கிளில் மிதிசுக்கொண்டு அயல்க் கிராமத்தில இருந்து  வேலைக்கு வருவா,


                                      பேக்கரியில் ஒரு கடுகஸ்தோட்டை மலையகத்தை சேர்ந்த ஒரு இளம்  பொடியனை வேலைக்கு வைச்சு இருந்தார். அவனைக்  கைவேலைக்கு வைச்சு இருக்கிறன் என்று சொல்லுவார், எப்பவும் அந்தப் பொடியனுக்கு

                                  "   தம்பி டேய். அதுக்கு .வேலையக் குடுப்பம் வாடா ,,இதுக்கு வேலையக் குடுப்பம் வாடா.."

                                              எண்டுதான் அவனுக்கு வேலை உத்தரவு கமான்ட் கொடுத்துக்கொண்டு இருப்பார், அப்படி " வேலையக் குடுப்பம் வேலையக் குடுப்பம் "என்று அடிக்கடி சொல்லி அவனுக்கு வேலை காட்டிக்கொண்டு சொல்லுறது அவர் சிங்கள ஆட்களிடம் இருந்து பழகிய சிங்கள வார்த்தையின் தமிழ்ப் பிரயோகம் போல இருக்கலாம்.அல்லது வேற ஏதும் அர்த்தமா எண்டு எனக்குத் தெரியாது.

                               ஆனால் பேக்கரியில் அவன்தான் அவருக்கு வலது கை போல இயங்கிக்கொண்டு இருந்ததால் அப்படி சொல்லி இருப்பார் போல. மற்றப்படி அவரோட ரெண்டு கைகளின் உழைப்பையும் நேரத்தையும் அதிகம் விழுங்கியது அவரோட பாண் பேக்கரி.

                                      வீராளி அம்மன் கோவிலுக்கு கொஞ்சம் தள்ளி, அம்மன் கிளை சங்கக் கடைக்கும், ஞானப்பிரகாசம் ஹோட்டலுக்கும்  நடுவில் அன்னக்கிளி பேக்கரி ஒரு றாத்தல் பாண் போல முன்னுக்கு கல்வனைஸ் சீட் போட்டு விசாலமான தாழ்வாரம்  தள்ளிக்கொண்டு நிக்கும் ஒரு கடையில்தான் இயங்கியது. மசுக்குட்டி மாமிக்கு சொந்தமான அந்தக் கடையை மாச வாடகைக்கு எடுத்து பின்னுக்கு செங்கல் அரி கல்லு வைச்சு போறனை கட்டி பேக்கரி ஆக்கினார்

                                     வெளி வாசலை மறித்து உள்ளுக்கு யாரும் போக முடியாத மாதிரிப் பெரிய கண்ணாடி சோக்கேஸ் முன்னுக்கு வைச்சு அதுக்குள்ளே எப்பவும் கொம்புபணிஸ், மாலு பணிஸ் ,சீனி பணிஸ், அடை பணிஸ்  என்று எப்பவும் ஏதாவது ஒரு பணிஸ் அதில இலையான் பறக்கப் பறக்கக் காத்திருக்கும். ரோட்டில நிக்கவே முறுக்கி வெந்த பாண் வாசமும் சிலநேரம் வாட்டுற ரக்ஸ் வாசமும் வரும்.

                                அந்த சோக்கேசுக்கு கொஞ்சம் உள்ளே ஒரு மரமேசையும் கதிரையும் இருக்கும். மேசை கதிரையில் எப்பவுமே கோதுமை மா வெள்ளைச் சீலை விரிச்ச மாதிரி படிந்து இருக்கும்.  மேசைக்கு மேலே சுவரில சின்னத் மரத்தட்டில விளக்குக் கொழுத்தி ஒரேயொரு சாமிப்படம் மட்டும் தொங்கிக்கொண்டு  இருக்கும். 

                                               பேக்கரி திறந்த நேரம் அந்தப் படத்துக்குப் போட்ட பூமாலை வாடி நாரோடு சருகுபோல ஒட்டிக்கொண்டு இருக்க அந்தப் படத்தில இருந்த அம்மன் ஒரு பெரிய குடைபிடிக்கும் நாக பாம்புக்குக்  கீழே சம்மணம் கட்டி ஒருகாலை மற்றக்காலுக்கு மேலே தூக்கிப்போட்டுக்கொண்டிருந்த  படத்தில அருள்மிகு நாகபூசனி அம்மன் என்று எழுதி இருந்தது. அன்னக்கிளி முதலாளியின் குல தெய்வமாக  அந்த அம்மன் இருந்திருக்கலாம்..

                                       அன்னக்கிளி முதலாளி வேட்டிதான் கட்டிக்கொண்டு இருப்பார். அதுவும் ஒரே ஒரு வேட்டியத்தான் மாற்றிக்கட்ட வேற வேட்டி இல்லாத மாதிரி அதைதான் எப்பவும் கட்டி இருப்பார். அந்த வேட்டி வெள்ளை நிறத்தை வருடங்களின் முன் இழந்து, எண்ணையும், மாவும், சாம்பலும்,  சேர்ந்து ஒரு விதமான நாவல்க்கலரில் இருக்கும். 

                                                       அதை நெருப்பில போட்டாலும் எரியுமா என்று சந்தேகம் கிளப்புவது போலப்  பாண்டல் பிடிச்சுப் போய் இருக்கும், மேலே சேட் ஒண்டும் போடாமல் வெறும் உடம்போடுதான் அன்னக்கிளி முதலாளி அதுக்குள்ள அந்த வேட்டியை மடிசுக் கட்டிக்கொண்டு வேலை செய்வார்.
                             
                                         சில நேரம்  கசியரிலையும் அந்தப் பாண்டல் பிடிச்ச  வேட்டியோடை தான் இருப்பார். இரவுப் பாணுக்கு மாக் குளைச்சு மேசையில் அது புளிக்கக் கிடக்கும் நேரம்  அந்தப் பாண்டல் பிடிச்ச வேட்டியோட வெளியால வந்து ரோட்டில நிண்டு விடுப்புப் பார்ப்பார்.

                                                ஒருநாள் அன்னக்கிளி முதலாளி கட்டி இருந்த வேட்டியை அம்மச்சியா குளத்தில தோச்சு , பக்கத்துக்கு வயல்க் காணியில் காத்துக்கு எழும்பிப் பறக்காமல் நாலு மூலையிலும் இழுத்து நாலு சின்னக் கல்லு வைச்சு பரவிக் காயவச்சுப்போட்டு கோவணத்தோட குளதுக்க இறங்கிக் குளிச்சுக்கொண்டு நின்டநேரம் அவடதுக்கு வந்த ஒரு  மாடு அவரோட வேட்டியை இழுத்துக்கொண்டு போனதைப் பார்த்திட்டு குளதுக்க நிண்டு கத்தி இருக்கிறார்.

                                      மாடு அவர் கத்தின சத்தம் கேட்காமல் ,வேட்டியை வைச்சு காலால உழக்கி விளையாட , குளதடிக்கு சும்மா சுருட்டுப் பத்த வைச்சுக்கொண்டு வயல் வெளியப் பார்க்க வந்த புண்ணியக் குஞ்சியைப்  பார்த்திட்டு , அன்னக்கிளி முதலாளி

                                     "   சித்தப்பு,,மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                       என்று சொல்லப் புண்ணியக் குஞ்சிக்கு அவர் சொன்னது விளங்கவில்லை ,அன்னக்கிளி முதலாளி நீந்தத்தெரியாமல் குளத்துக்கு இறங்கிட்டார் எண்டு

                              "  டேய் அன்னக்கிளி   நீ ஏன் காணும் நீந்தத்தெரியாமல் குளத்துக்கு இறங்கினனி.."

                                            "   சித்தப்பு,,மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                       " உனக்கேன் இந்த தெரியாத  வேலை,    இப்ப நடுக்குளத்துக்க  நிண்டுகொண்டு சுடுகுது மடியப்பிடி என்டுறாய் எனக்கும்  நீந்த தெரியாதே .."

                                     "   சித்தப்பு,  எனக்கு நீந்தத் தெரியும் ...,நானே ஒரியினல் தீவான் ....அங்கால மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                  " பேந்தும்பார் ,,அட அறுவானே  நீ ஏன்  நீந்தத்தெரியாமல் குளத்துக்கு இறங்கினனி,,

                                         "   மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                 "   கொஞ்சம் பொறு பண்டிகள்  உங்கால உழுகுதுகள் ..தெய்வேந்திரம் நிக்கிறானோ  எண்டு பாக்கிறேன்  "

                                " அய்யோ சித்தப்பு எனக்கு நீந்தத் தெரியும் சித்தப்பு , அங்கால மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                               " அட கோதாரி விழுவானே, நீச்சல் அடிக்கத் தெரியாட்டி ,ரெண்டு ஒல்லித் தேங்காயைக் கட்டிக்கொண்டு தப்புத் தண்ணிப் பக்கமா  இறங்கி இருக்கலாமே "
                               
                        "  சித்தப்பு , அங்கால மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு... எட்டிப் பிடியனை சித்தப்பு "

                             " டேய் பிரளுவானே ,,நீ என்னத்துக்கடா இப்ப குளதுக்க  இறங்கி குளிக்க நினைச்சனி, உண்ட வீட்டில தானே ஒரு சின்னக் கட்டுக் கிணறு இருக்கே ,பேக்கரில பாணையும் பணிசயும் போட்டமா அதுமுடிய கிணத்தில நாலுவாளி அள்ளித் தலையில ஊத்தினமா எண்டுறதை விட்டுப்போட்டு.. ..எனக்கு   இப்ப வாற விசருக்கு ..."

                               கடைசீல அன்னக்கிளி முதலாளி நீந்திக் கரைக்குவரமுதல்  மாடு வேட்டியை சேத்துக்க இழுத்த இழுப்பில அது நாலாக் கிழிஞ்சு ,குளத்தடி கன்னாப்பத்தை முள்ளுக்கால மிச்சத்தையும் இழுத்து துண்டு துண்டாக் கிளிசுப்போட்டுப் போட்டுது. அன்னக்கிளி முதலாளி நீந்திக் கரைக்கு வந்த சொல்லத்தான்  புண்ணியக் குஞ்சிக்கு என்ன நடந்தது என்று விளங்கிச்சு என்றுதான் நாங்களே நினைச்சம்

                                          " அடக் கோதாரி விழுவானே,,,மாடு நீ கட்டுற அந்த உறண்டல் வேட்டியத் தானே இழுத்துக்கொண்டு போனது,,,ஹ்ம்ம்,,மாட்டுக்கே  பொறுக்க முடியேல்லப் போல அதை நீ கட்டிக்கொண்டு இருக்கிறது,,அதுதான் இழுத்துக்கொண்டு போட்டுது,,நடந்தது   நல்லதுக்குத் தானே  போல கிடக்கு  "

                                எண்டு சொல்லி    புண்ணியக் குஞ்சி கழுத்தில  சுத்தி இருந்த " ஓம் நமசிவாய " என்று நந்திப் படம் போட்ட சால்வையைக் கட்டக் கொடுக்க அதைக் கட்டிக்கொண்டு அன்னக்கிளி முதலாளி பேக்கரிக்கு போய் இருக்கிறார். அதுக்குப் பிறகு மாட்டுக்கு மட்டுமில்லை புண்ணியக் குஞ்சிக்கும் பயம் அவர். ஆனால் புண்ணியக் குஞ்சிக்குப் பாம்புக் காது. அவர்

                                       " இவன்  வடுவா ,,பெரிய விண்ணன்  சிங்கள நாட்டில  சிங்களவனுக்கே சிரட்டையில  கப்பூரம் பத்த வைச்சு   வெசாக் காட்டினவன் ,, இவனுக்கும் , இவன்ட வேட்டிக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் எண்டுதான் அப்படி செய்தன்  "

                                       எண்டு பிறகு சொல்லி இருக்கிறார். புண்ணியக்குஞ்சியும் சும்மா ஆள் இல்லை  எங்கட ஊரில நடமாடிய நாற்பது நடிகர் திலகத்துக்கு இணையான ஒரு நடிகர். அவர் இல்லாமல் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வே இல்லை. அல்லது அவர் இல்லாமல் ஒரு கதையே எழுத முடியாது. அப்பிடியான ஒரு   கரக்டர் .  

                                 பேக்கறியே  சீவியம் என்று இருவத்தி நாலு மணித்தியாலமும்  இயங்குவதால்   முழு நேரமும் அவருக்கு பேக்கரியில் ஏதாவது ஒரு வேலை இருப்பதால்  ஒரு இடத்தில நிக்காமல் சுழண்டு எறும்பை விட சுறுசுறுப்பான அன்னக்கிளி முதலாளி  இளவயதில் சிங்கள நாட்டில் அவர் இருந்த நேரம் மலையாளத்தானிடம் பாண் போடுற டெக்னிக் அவர் பழகி இருக்கிறார், அப்படிதான் சொல்லுவார்.

                                      மேசையில் அறுவத்தேழு கிலோ கோதுமை மாமூட்டையை அவரும் அந்த கடுகஸ்தோட்டைப் பொடியனும் தூக்கிப்போட்டு ,அதை நடுவில குளம் போல வெட்டி அதுக்குள்ளே தண்ணி ஊத்துரத்துக்கு மட்டும் தான் அந்தப் பொடியனை அவடதில வைச்சு இருப்பார், அதுதான் அவரின்  பஞ்சதந்திரம். 

                             பிறகு பொடியனை தட்டுகளுக்கு எண்ணை தடவச் சொல்லி வெளிய அனுப்பிப்போட்டு சீனியும்,உப்பும்,ஈஸ்ட்டும் போடுவார்,அதை மருந்து போடுறது என்று சொல்லுவார், அந்த அளவுப் பிரமாணம் ஒருவருக்குமே அவர் காட்டுவதில்லை. அவளவு தொழில்நுட்ப ரகசியம் அது.

                         "  தம்பி டேய் வாடா,,வேலையக் கொடுப்பம் ,,அங்கால பிடிச்சு வேலையக் கொடு ,,நான் இங்கால பிடிச்சு  வேலையைக் கொடுக்கிறன் "

                                                  என்று   மருந்து தண்ணியோடு கலந்த நேரம் அன்னக்கிளி முதலாளியும், கடுகஸ்தோட்டைப் பொடியனும் மேசைக்கு இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் நிண்டு இழுத்து,உருட்டி, பிரட்டி மல்லுக்கட்டி குழைக்கத் தொடங்குவார்கள், நெற்றியில்,புறங்கையில் இருந்து வியர்வை வடியும் அதைத் துடைக்கத் துணியும்,நேரமும் இல்லாமல்  அதையும் சேர்த்துதான் மாவோடு குழைப்பார்கள்,

                                                   குழைச்சு முடிய மேசையில் ஒருக்களித்து அதை ஒரு பழைய வேட்டியால் மூடுவார் அன்னக்கிளி முதலாளி. அவர் கட்டி இருக்கிற வேட்டிக்கும் மாவை மூடும் வேட்டிக்கும் அதிகம் நிற வேறுபாடு இருந்ததில்லை. மூடிப்போட்டு ரெண்டு கையாலும் அதுக்கு ஒரு தட்டு தட்டிப் பதம் பார்ப்பார்.அது சேத்துக்க காலை வைச்ச மாதிரி சதக் சதக் எண்டு சத்தம் எழுப்பும்.

                                        "    எட,,தம்பி நீ போய் போறணைக்கு வேலையக் குடடா

                                       "  சரிங்க  முதலாளி "

                                        " நான் முன்னுக்கு கொஞ்சம் முகத்துக்கு காத்துப் பிடிச்சிட்டு வாறன்."

                                  "  சரி முதலாளி "

                                           "   இண்டைக்கு அனல் வெக்கை அதிகமா இருக்கு  ஈஸ்ட்  டக்கெண்டு வேலையக் கொடுக்கும் போல இருக்கு,,"


                                        " சரி ,முதலாளி,,நான்  வாறன் "

                                         ",எதுக்கும்  சுருக்கெண்டு  வந்து படக்குப் படக்கெண்டு ரெண்டு பேரும் சேர்ந்து வேலையக் கொடுப்பம் ."

                                             கடுகஸ்தோட்டைப் பொடியனும் மா குழைச்சு முடிஞ்சு கையோட போறணைக்கு விறகு ஏற்றப் போவான், நாலஞ்சு பெரிய குத்தியை கோடாலியால பிளந்து போறணையில் தள்ளி நெருப்பு பத்த வைச்சுப்போட்டு ,பாண் அச்சுக்கு ஒரு பழைய சீலையைக் கிழிச்சு அதை தேங்காய் எண்ணைக் கானில இறக்கி தோச்சு ஒவ்வொரு பாண் அச்சா வேகமாகப்  போடத் தொடங்குவான், அந்த எண்ணைச் சீலையும் அன்னக்கிளி முதலாளி கட்டி முடிசுக் காலாவதியான வேட்டி போலதான் இருக்கும்.

                                                       நடுச் சாமம் பழையபடி அன்னக்கிளி முதலாளி பொங்கி எழும்பி நிக்கிற மாவை ரெண்டு கையாலும் தட்டிப் பார்ப்பார். அது குண்டியில தட்டின  மாதிரி சத்தம் எழுப்ப, முஸ்டியைப் புறங்கையால இறுகிப் பிடிச்சு ரெண்டு குத்துக் குத்திப் பாப்பார் , கொஞ்சம் மாவைக் கையில கிள்ளி பிதுக்கிப் பாப்பார், முன்னுக்கு வந்து நாகபூசனி அம்மன் படத்து விளக்கின் திரியப் பத்த வைச்சு கும்பிட்டுப் போட்டு,


                            "  அடேய் தம்பி ,,வாடா வாடா வேலையக் கொடுப்பம் , மா எழும்புது ,விறுக்கு விறுக்கெண்டு  போளி பிடிப்பம் , இண்டைக்கு மா கொஞ்சம் தண்ணிபாடா மசியுது கையில அடிமாவை வைச்சுக்கொண்டு விசிக்கி விசிக்கித்தான் நிறுக்க வேணும் போல கிடக்கு, திராசைப் பிடிச்சு வேலையைக் குடடா  தம்பி .. இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை ."

                                         என்று திராசிலை பிச்சுப் பிச்சுப் போட்டு அளந்து அதை உடனையே கையில உருட்டி மடிச்சு அச்சில போடத் தொடங்குவார். அவர் அந்த வயசிலையும் வேகமா அச்சுப் பிடிப்பார்,  கடுகஸ்தோட்டைப் பொடியன் அவர் அளவுக்கு வேகமாக அச்சுப் பிடிக்க மாட்டான் ,அவருக்குப் பின்னால ஓடுற மாதிரி தடுக்கித் தடுக்கி அச்சுப் போட்டு முடிய, பிறகு பாண் அச்சில பொங்கும் வரை ஒரு சின்ன இடைவேளை,

                                   அந்த நேரத்தில  அன்னக்கிளி முதலாளி ஒரு பெரிய பித்தளை மூக்குப் பேணியில் தேத்தண்ணி நிரப்பிக்கொண்டு வந்து பேக்கரிக்கு முன்னால கொஞ்சம் வெளியால காத்து வேண்டிக்கொண்டு நிற்பார். ஆனால் மாப் புழிச்சு பாண் அச்சில எழும்புற வாசத்தைக் காற்றில் எப்பவும் கவனித்துக்கொண்டிருப்பார்.

                                                கடுகஸ்தோட்டைப் பொடியன், எரிஞ்சு முடிஞ்ச விறகுதணல் எல்லாத்தையும் போறணையில் பெரிய ஒரு கொக்கத்தடி போன்ற கம்பியால பரவி சூட்டை  சூளைக்கற்களில்  ஏற்றி கொஞ்ச நேரம் போறனைக் கதவை இறுக்கி மூடி வைப்பான், பிறகு திறந்து  அவளவு தணலையும் வெளிய இழுத்துப்போட அன்னக்கிளி முதலாளி  வந்து கையை உள்ளுக்கு விட்டு சூடு பார்ப்பார்

                                 "  கணகணப்பு கணக்கா இருக்கடா தம்பி இப்ப வேலையக் குடுப்பம்  ,அங்க இங்க ஏமலாந்தாமல்  சுருக்கெண்டு  வேலையக் குடுப்பம் ,,தட்டுகளை  ஏத்துவமடா ,,தூக்கி  ஓவ்வொன்றாய் அனுப்படா தம்பி "

                                    அதுதான் கடைசி ஆனால் வேகமான வேலை. கடுகஸ்தோட்டை பொடியன் பாண் அச்சுக்கள் அடிக்கின பெரிய தட்டுகளை கவனமாக தூக்கிக்கொண்டு வந்து ஒவ்வொன்றாய் நீளமான  பெரிய இரும்பு சவளில் வைக்க அன்னக்கிளி முதலாளி மெதுவாக அதை போறணைக்கு உள்ளே அனுப்பிக்கொண்டிருப்பார். ஒன்றோடு ஒன்று முட்டாமல் போறணைக்கு உள்ளே வைப்பது அவரின் கைவந்த கலை

                                                 இதுதான் உண்மையில் மிகவும் டெக்னிக் தேவையான அனுபவம் பேசும் வேலை, ஏனென்றால் பாண் பஞ்சு போல எழும்பி நிக்கும் அந்த நேரம் அங்கால இங்கால தட்டுப்பட்டிச்சோ புசுக் என்று சப்பையா இறங்கிடும்,பிறகு அதை வைச்சு ஒண்டுமே செய்ய முடியாது, சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி  வாட்டி எடுத்து ரக்ஸ் மட்டும் போடலாம் .

                                       பிறகு ஒரு சின்ன இடைவெளி. ஆனால் அந்த நேரம் அன்னக்கிளி முதலாளி எங்கயும் போக மாட்டார்,போறணை வாசலில் சவளைப் பிடிச்சுக்கொண்டு ,இடைக்கிடை போறனைக் கதவைத்திறந்து பார்த்துக்கொண்டு ,கையை உள்ளே விட்டு சூடையும், பாணின் நிறத்தையும்,வாசத்தையும் ஒரு கைதேர்ந்த ஆயுள் வேத மருத்துவர் போல  கவனித்துக் கொண்டிருப்பார்

                                      "  தம்பி டேய். வேலையக் கொடுப்பம் .நிறமடிக்குதடா,,சுருக்கா இறக்குவம்,,சாக்கை எடுதுக்கொண்டு வாடா வேலையக் கொடுப்பம்."

                                 எண்டு சொல்லு ஒவ்வொரு தட்டா போறணையில் இருந்து இழுத்து வெளிய எடுக்க,கடுகஸ்தோட்ட பொடியன் சாக்கால அதை அணைச்சுப் பிடிச்சு தூக்கிக்கொண்டு வந்து பேக்கரி நடு ஹோலில் நிலத்தில வைச்சுப் போட்டு ,உடனே வெந்து வெதுப்பி வந்த பாணை அச்சுக்களில் இழுத்து எடுத்து பிரட்டுவான் அப்படி செய்யாவிட்டால் பாண் வேர்த்து மழையில  நனைச்ச கோழி மாதிரி சுருங்கிப் போயிடும் .

                                        இந்த நேரம் முதல் வடிப் பாண் வாசம் ரோட்டுக்கே சுழண்டு வரும் ,நாங்கள் பொடியன்களா இரவு கோவில் திருவிழாவில பாட்டுக் கோஸ்டிகளின் நிகழ்ச்சி பார்த்திட்டு இந்த நேரம் வந்து பாண் வேண்டுவம். தொட்டுத் தின்னக் கறி இல்லாமலே ஒவ்வொருத்தனும் வெளியால ரோட்டில இருந்து ஒரு றாத்தல் அச்சுப்பானை விழுங்குவம். 

                                                   சில நேரம் அன்னக்கிளி முதலாளி வெங்காயம் பச்சை மிளகாய் தருவார் பாணோடு தின்ன . பாண் இவளவு ருசியா இருக்கே எண்டு நினைக்க அன்னக்கிளி முதலாளியின் பாண்டல் வேட்டி நினைவுக்கு வரும்,,,ஆருக்குத் தெரியும்  அதாலதான் பாண் அவளவு ருசியா இருந்திருக்கலாம்...

                                       பாண் தட்டில இறங்கிற நேரமே வெளியால சைக்கிளில் பெரிய மரப்பெட்டி கட்டி அதில பாணை அடுக்கி சில்லறைக் கடைகளுக்கு விநியோகிக்கப்  பல ஊர்களுக்கு ஓடுற " லைன் " காரங்கள் வந்து நிற்பாங்கள் .அவங்கள் ஒரு பக்கத்தால பெட்டியில் அடுக்கி முடிய மிச்சப் பாணை சோக்கேசில் கடுகஸ்தோட்டைப் பொடியன் அடுக்குவான் .அதுவும் கொஞ்ச நேரத்தில சனங்கள் வந்து அம்மியடிச்சு வேண்டிக்கொண்டு போகுங்கள்.

                             "    தம்பி டேய்,,இண்டைக்கு ரெண்டு கிலோ சீனியில் கல்பணிஸ் வெட்டலாம் போல இருக்கு, ..ஒரு மணித்தியாலம் பஞ்சிப் பாக்காமல் வேலையக் குடுப்பமா, ,..மாவுக்கு நான் மருந்து போடுறேன் நீ அதக் குழைக்க எனக்கு உதவியா வேலையைக் குடுத்திட்டுப் போறியா "

                                 எண்டுவார்.    காலையில் எப்படியும் கல்பணிஸ்,,கொம்பு பணிஸ்..அடைக் கேக்  .அல்லது வேற  ஒரு சுவிட் ஐட்டம் அன்னக்கிளி முதலாளி போடுவார், பள்ளிக்கூட நாட்களில்  இரவு சமன் கறியும் அவிச்ச உருளைக்கிழங்கும் கலந்து உள்ள அடைஞ்சு மாலு பணிஸ் போடுவார் ,அதுக்கும் பொடியன் தான் மா குழைப்பான், மிச்சம் அச்சுப் பிடிச்சு ,தட்டில போட்டு போறணைக்குள் ஏத்தி இறக்கிறது  எல்லாம் அன்னக்கிளி முதலாளி தனியாத்தான் செய்வார்.

                                                 . கடுகஸ்தோட்டப்  பொடியன் மலையகத்தில் இருந்து யாழ்பாணம் வந்ததே இயக்கத்துக்கு சேர.அவன் சேர்ந்து அதில சில வருடம் இருந்த நேரம் ஒரு சண்டையில் காலில காயம்பட்டு  அதன் பின் விலத்தி, ஒரு இளம் பெண்ணை காதலித்து கலியாணம் கட்டமுதல் முதல் பிள்ளை பெற்று அதன் பின் பயத்தில்  திருப்பி மலையகம் போக முடியாததால் எங்கள் ஊரிலேயே இருந்தான்  

                                   பிறகு எப்படியோ  அன்னக்கிளி பேக்கரியில் வேலைக்கு சேர்ந்து   எஸ்டேட்டில் லயனில கஷ்டத்தில் இருந்த  வயதான தாய் தகப்பனை யாழ்பாணம் வரவழைத்து  ஒரு வாடகை வீட்டில இருந்தி வைச்சு சாப்பாடு போட்டுக் காப்பாற்றிக்கொண்டு இருந்தான்.அந்த நேரம் அவனுக்கு மூன்று பிள்ளைகள், மூன்றும் சின்னதுகள்.

                                        இரவு வேலை முடிய ,கையில நாள் சம்பளத்தை வேண்டிக்கொண்டு அவன் வீட்டை பாணும் பணிசும் கட்டிக்கொண்டு போயிடுவான்.  அன்னக்கிளி முதலாளி  இரவெல்லாம் வேலை செய்த களைப்பில் வீட்டை போய் சரிஞ்சு படுக்க என்று பெரிதாக நேரம் ஒதுக்குவதில்லை . அந்தப் பொம்பிளை தான் பிசினஸ் கவனிச்சுக் கொண்டு இருப்பா. ஆனால் பகல் நேரம் பேக்கரியில்  அவர் நடமாட்டம் இருக்காது . சிலநேரம் குளத்தடி வயல்வெளிப் பக்கம் உலாத்துவார் .

                                           சிலநேரம் பாண் விக்காமல் மிஞ்சிக் கிடந்தா எல்லாத்தையும் ஒரு யூரியா சாக்கில கட்டி அதைக் கொண்டுபோய் வீராளி அம்மன் கோவிலில நிண்ட மயூரி என்ற யானைக்குட்டிக்கு  வாயில ஒவ்வொன்றாக் கொடுப்பார். கோவில் கிணற்றில இருந்து பெரிய வாளியில் தண்ணி இழுத்துக்கொண்டு வந்து வைப்பார், 

                                                   மயூரி அதை உறுஞ்சி அவருக்கே திருப்பி அடிச்சு விளையாடும் , பெரிய வாளியில் தண்ணி இழுத்துக்கொண்டு வந்து அள்ளி அடிச்சு தேங்காய் மட்டையால உரசி மயூரிரைக் குளிப்பாட்டுவார் . பிறகு அதன் தலையை, பின்னம் கால்களை நெற்றியைத் தடவி விட்டுக்கொண்டு இருப்பார். மயூரிக்கு  அவர் மொழி விளங்கும் அவரை தும்பிக்கையால விளையாட இழுக்கும், சந்தோசத்தில் அம்மாவையோ அல்லது அப்பாவையோ நினைத்து  சின்னக் குரல் எழுப்பிப் பிளிரும் .

                                        தொண்ணுத்தி ஒன்றில்  யாழ்ப்பாணமே  செல் மழையில்  அதிர , இராணுவம் சிங்கக் கொடியை  ஏற்றிவைச்சுக்கொன்டிருந்த  யாழ் கோட்டையை நானா நீயா பிடிக்கிறது எண்டு அகோரமாக சண்டை நடந்துகொண்டிருந்த நாட்களில் ,  ஒரு நாள்ப்  பின்னேரம் சீப் பிளேன் எங்களின் ஊரைச் சுற்றி சுற்றி வட்டமிட்டது . 

                                      அப்பெல்லாம் சொல்லுவார்கள்  யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எண்டுறது போல  சீப் பிளேன் சுற்றிப் படம் எடுத்தா, விமானப்படை  அதை வைச்சுத் தான்  பொம்பர் அனுப்பி அடிக்க " ஏர்ரியல் மப்பில் " பிளான் போடுவார்கள் என்று. ஓரளவுக்கு எதிர்பார்த்த மாதிரியே அடுத்த சில நாட்களில் விமானத்தாக்குதல் திசைகளும் இலக்குகளும் இல்லாமலே அதிரும் 

                                     அன்னக்கிளி முதலாளிக்கு  ப்ளேன் சத்தம் எண்டா பயம் .  பின்னேரம் மேசையில் மூன்று அறுவத்தேழு கிலோ மா மூட்டையை வெட்டிப் போட்டு அதுக்குத் தண்ணி ஊத்தி மருந்து போட்டிட்டு  வெளியால வந்து ரோட்டில நிண்டு சீப் பிளேன் சுத்திரதைப் பார்த்தார்,  கடுகஸ்தோட்டைப் பொடியனும் வந்து நின்று வானத்தைப் பார்த்தான். 

                                        அவன் இயக்கத்தில இருந்தவன், சில சண்டைமுனைகளில் நின்று உடம்பில பீஸ்  பாஞ்சு காயம் பட்டவன்.  பொம்பர் சண்டைப் பிளேன்  ,அவ்ரோ பரல் குண்டு தள்ளும் பிளேன் , பெல் ரக ஹெலி அடி எல்லாதுக்கும்   ரைபிளை ஓட்டோவில விட்டும், மனுவலாயும்   திருப்பிப் பதிலடி திரத்தி திரத்தி அடிச்சவன்  அவனுக்கு சீப் பிளேன்  பறக்கிறது சும்மா பட்டம் பறக்கிறது போல

                                     "  அட..என்ன  நம்மட பேக்கரியையே சுத்துற மாதிரி வளைச்சு வளைச்சு வேட்டைத் திருவிழா போல  சுத்துறான்,, "

                                     "  இல்லங்க முதலாளி அவங்கள்  சும்மா ரெக்கி  எடுக்க இப்பிடி  எல்லா  இடமும் சுத்துவாங்க "

                                     "   இங்கனேக்க எங்கயோ கிட்டவாப் பாத்துதான்  இனி பொம்பர்காரன் வேலையக் குடுக்கப் போறான் போல "

                                          "  அவனுக்கு  பார்க்கிறது  எல்லாமே இயக்கக் காம் போலதான்  தெரியும் முதலாளி,,இப்ப பிட்டி கலிவரால் வைச்சு லேசர்  ரவுண்ட்ஸ்  போட்டால்  குழறிக்கொண்டு  ஓடுவான்  "

                                           "  ..எனக்கெண்டா இது நல்லாதாப் படேல்ல, சூரன்போர் போல  கிடந்தது சுத்துறானே  "

                                "   இவங்கள்  ஒருநாளுமே  டாக்கெட்  எடுத்து அடிக்க மாட்டாங்கள்,,சும்மா குத்திப்போட்டு  ஓடுவாங்க முதலாளி "

                                    "  ,,இதுக்குள்ள தான் எங்கயோ வேலையக் குடுக்க அலுவல் பாக்கிறாங்கள் போல கிடக்கு ."

                                     " இப்ப கையில ஜிபிஎம்ஜி   லோங் பரல்  எல்லேம்ஜி   ரைபிள் இருந்தால் நாலு வெடி  வைக்கவே ஓடுவான் "

                                            "  என்னடா  தம்பி  சொல்லுறாய்.. இப்ப நாளைக்கு  என்னமோ நடக்கப்போகுது "

                                          "  அதுவும் சொல்ல முடியாது ,,அவனுக்கு குண்டு தள்ளினால் தான் சம்பளம் அதுக்காக  எங்கயும்  தள்ளுவான்கள் முதலாளி "

                                    "   .அட  தம்பி நீ வாடா  நாங்கள் முதல் மாவுக்கு வேலையக் குடுப்பம்.."

                          என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்க போட்டார். அந்த நேரம் வீராளி  அம்மன் கோவிலில் நின்ற மயூரி  அவரை நினைச்சுக் கத்தியது அவருக்குக் கேட்டது 

                             எங்களின் ஊரில அந்த நேரம் இயக்கதிண்ட சமையல் காம் ஒன்று இருந்தது.  அதில சமைச்சுத்தான் மற்ற அரசியல் முகாங்கள்,  சண்டைமுனையில்  சென்றியில் நிக்கிற போராளிகள் எல்லாருக்கும் சாப்பாடு போறது. பழைய  தார்ப் பீப்பா தகரத்தால உயரமாக மறைச்சு அடைத்திருந்த அந்த வீட்டுக்குள்ளே இருந்து பெரிய அண்டாவில அரிசி அவியிற வாசம் வரும் .

                                              அதுக்குப் பக்கத்தில் இருந்த வெறுங் காணிக்க எப்பவுமே வன்னியில் இருந்து கொண்டுவந்த பாலைக்குத்தி ,முத்திரைக்குத்தி விறகு லோட் குவிந்து கிடக்கும். மலைபோல பறிச்சுக் போட்டுக் கிடந்த அந்த விறகு லோட்தான் அது ஒரு முக்கியமான சமையல் சாப்பாடு வழங்கல் முகாம் என்பதுக்கு அடையாளமாக இருந்தது.

                                          சீப் பிளேன்  சுத்தி மூன்றாம் நாள் அதிகாலை  விடிய முதலே சியாமாச்செட்டி  பொம்பர் சத்தமில்லாமல் மேகங்களுக்குள் மறைந்து வந்து, வளம் பார்த்து சுழண்டு, செங்குத்தாகப் பதிந்து, சமாந்தரமாக இறங்கி ,அன்னக்கிளி பேக்கரியின் கூரயையும் பின்னால நிண்ட தென்னை மரங்களையும் உரசிக்கொண்டு ரெண்டு அறுவது கிலோ பொஸ்பரஸ் குண்டைக் கழட்டி விட்டது. 

                                                 அதில ஒண்டு போறணைக்கு பின்பக்கம் வெடிக்க, மற்றது தென்னை மரம் ஒன்றின் அடியோடு விழந்து தென்னை மரத்தை அடியோடு தூக்கி நாலு வீடு தள்ளி எறிஞ்சுது. 

                                      அதுக்குப் பிறகு இன்னொரு பொம்பர் விறகு லோட்டை குறிவைச்சு ரொக்கட் அடிக்க அது அன்னக்கிளி பேக்கரிய சுற்றி விழவில்லை. கொஞ்சம் விலத்தி பின்னுக்கு இருந்த வீடுகளில், இன்னும்  விலத்தி பண்ணைக் காணிக்க, என்று  கிட்டதட்ட முக்கால் மணித்தியாலம் பொம்பர் வெறி  பிடிச்ச விசர் நாய் போல தாறுமாறா  பறந்து , உறுமி உறுமித்  தாழப்பறந்து ,ரேஸ்பண்ணி எழும்பி , சுற்றி வளைத்து டாக்கெட் எடுத்து ஒரு   பத்து ரொக்கட்டை இலக்கு இல்லாமல் அடிச்சுது

                                            அந்த அடி  ஒஞ்சு ,பொம்பர் உறுமல் மெல்ல மறைந்த  பிறகுதான் ஆட்கள் தலையை பங்கர்களுக்கு உள்ளால எடுத்து எட்டிப்பார்த்து ரோட்டுக்குப் போக, அன்னக்கிளி பேக்காரி அரைவாசி எரிந்து  புகை பொஸ்பரஸ் வாசத்தோடு குபு குபு எண்டு கறுப்புப் புகை எழும்ப,முன்னுக்கு  வைரவர் கோவில் கிணத்தில வாளியில தண்ணி அள்ளி பேக்கரி வாசலுக்கு ஊற்றி நெருப்பை அணைச்சுப் போட்டு உள்ளுக்குப் போய்த் தேட

                                         அன்னக்கிளி  பேக்கரி  இருந்த  இடத்தில  வெறும் தகரம்,ஓடு,சீமேந்துச் சுவர், பாண் தட்டுகள், பாண் அச்சுகள் எல்லாம் சுருட்டிப் பிழிஞ்ச மாதிரி  குப்பை மேடுதான் இருந்தது. கந்தக வெடிமருந்து வாசம் மூக்கில நுழையவே தலைச் சுத்துற மாதிரி வந்தது. கூரை எரிஞ்சு இடிஞ்சு விழுந்து கிடந்த இடத்தில கையில பாண் தட்டுக்கு  எண்ணை போடுற சீலைத்துணியை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு கடுகஸ்தோட்டைப் பொடியன் சிதறிக் கிடந்தான், அவனோட இடுப்புக்கு மேலே அவன் என்று சொல்ல எதுவுமே இருக்கவில்லை .

                                        அன்னக்கிளி முதலாளியத் தேடித்   பின்னுக்குப் போறனைப் பக்கம் ஓடிப்போக, அவர் போறணை வாசலில் சரிஞ்சு போறணை இடிபாட்டுக்குள் நெஞ்சு மட்டத்துக்குப் புதையுண்டு  கிடந்தார். மூச்சு இருக்கா முகத்தைத்  தூக்கிப் பிரட்டிப் பார்க்க பின் மண்டையில் அரைவாசி இல்லை. 

                                        அப்பிடியே அதில அவரை  போட்டுட்டுடு தோண்டி இழுத்து எடுத்து  என்னத்தாலையும்  மூடுவம் என்று துணி என்னவும் இருக்கா என்று பேக்கரிக்க தேட ஒரு மூலையில் ஒரு பெரிய தேயிலை அடைச்சு வாற மரப்  பெட்டி கிடந்தது

                                  அதைத் திறந்து பார்க்க  நிறைய வெள்ளை வேட்டி அடுக்கி வைச்சுக் கிடந்தது. இழுதுப்பாக்க இதுவரைக்கும் கட்டாத புது வேட்டிகள்  கொம்பனி சீல் கூடக் கழட்டாமல் கிடந்தது, அந்தப் பெட்டிக்குள்ள பூச்சி  வராமல் இருக்க மூட்டைப் பூச்சி மருந்து உருண்டைகள் நிறைய போட்டு வைச்சு இருந்தது . அதில சில வேட்டிகளை  எடுத்துக்கொண்டு வந்து அன்னக்கிளி முதலாளியை  தூக்கி கொண்டு வந்து மூடுவம் என்று இடிஞ்சு விழுந்த போறனை அரிகல்லுகளைக் கிண்டி  இழுத்தம் .

                              அப்பவும்   அன்னக்கிளி முதலாளி போறணைக்கு உள்ள பாண் அனுப்புற பெரிய இரும்பு சவளை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு கிடந்தார் .