Wednesday 4 March 2015

ஆடும் நினைவுகள் மட்டும்....

 சென்ற கிழமை சிசிலியா ஒஸ்லோவுக்கு  வெளியே ஸ்பில்பேர்க்  என்ற கிராமமும் நகரமும் ஓடிப்போய்க்  கலியாணம் கட்டிக்  கலந்த இடம் போல  உள்ள   அவளின் பைன் மரப் பழைய வீட்டுக்கு  மரத்தால் வேலி அடைக்க வேண்டும்  வாறியா  என்று கேட்டாள்.சிசிலியா  என்  உயிர்  நண்பி அதால  போனேன். அங்கே போன பாதையில் ஒரு இடத்தில நிறைய ஆடுகள் வெட்டையில் இலையுதிர்கால இறுதிப்பகுதியில் உயிரைவிட நின்ற புற்களை மேய்ந்துகொண்டிருந்தது. 

                          நல்ல  வெய்யில் நிலமெல்லாம் வெளிச்சம்  விரிச்சு வைச்சு இருக்க, இலையுதிர்கால இலவம்பஞ்சுக்  குளிரும் வெளிய இருந்தது. கார்க் கதவு  ஜன்னல  இறக்க மரங்களின் மஞ்சள் இலைகள் கழட்டி விட்ட வாசங்கள் வடக்கில் இருந்து வந்த காற்றில் மிதந்து வந்தது , ஆடுகளை நிறையக் காலம் கவனிக்காமல் விட்டதால் ,

                       " சிசில் , கொஞ்சநேரம் இங்கே உன் காரை   நிறுத்த முடியுமா, ,,இந்தத் தோட்டவெளிகள்  நல்லா  இருக்கே,,கொஞ்சம்  நிண்டு  பார்திட்டுப் போவமா "

                              "  ஹ்ம்ம்,,நல்லாத்தான்  இருக்கு, இப்பிடி  இடங்கள்  நீ முன்னம் பார்த்ததில்லையா "

                               "  இல்லை,,சிசில் ,,இப்படியான தோட்டங்கள்  உள்ள இடத்தில்தான் நானே  பிறந்து வளர்ந்தேன் ,,ஆனால் ஆடுகள்  பார்க்க வேணும் போல இருக்கு "

                         "  ஒ...ஆடுகள் இன்னும்  நல்லா  இருக்குத்தான்,, சரி நானும் பார்க்கிறேன்..ஆட்டுக்கு  எண்டு  என்னமும்  கதை வைச்சு இருக்கிறியா "

                               " ஹஹஹா,,எப்படித்  தெரியும்  சிசில் "

                            "  இவளவு  நாள்  உன்னோடு  இழுபடுறேன்  இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது  உற்றுப் பார்த்தால்  அதுக்குள்ளே ஒரு கதை  குந்திக்கொண்டு இருக்குமே "

                            " அட அட  இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா  சிசில்  " 

                         "  அப்படியா,  மோட்டுக்  கழுதை  ,அதை  நீ சொல்லுறாய்  எனக்கு,,நீ சும்மா  காத்தையே  பிடிச்சு வைச்சு அதையும் உருவிக்    கதை எடுத்து விடுறவன்  ஆச்சே  "

                            "   ஹஹஹா,,அதென்னவோ உண்மைதான்..சிசில்,,ஒரு  பத்து  நிமிஷம் நிண்டு போட்டுப்  போவோம்,,ஓகே  தானே "

                                    என்று கேட்டேன். அவள் மெர்சிடஸ்பென்ஸ் கொம்பிரசர் காரை நிற்பாட்டினாள். ஜேசுநாதரின்   மந்தையில் இருந்து  தவறிய வெள்ளாடு " தேவனே  என்  பாவங்கள்  தன்னை வேண்டிக்கொள்ளுங்கள் " என்று கதறுவது  போல வாழும்   எனக்கும் ஆடுகளைப்  பார்க்க  நினைவுகள் சிறகை விரித்து மெல்ல மெல்ல மேல் எழுந்து தொண்டையை  அடைத்துக்கொண்டது. 
                                           
                                    ஊரில  எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா, நாங்கள் சின்ன வயதில் அப்படிதான்  இடைஞ்சல்ப்பட்டு வளர்ந்தோம். 

                                                  அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரணம் வளவைச் சுற்றி நிறைய மரங்கள் இலை குழைக்குப் பஞ்சமில்லாமல் நாலுபக்க சுற்று வேலிக்கு சாட்சியா நின்றது.

                                   ஆடு எங்கட வீடில நின்டதால் ஆட்டுக்கு பெரிய லாபம் ஒண்டும் இல்லை,அது நிண்டதால எங்களுக்குப் பெரிய நஷ்டமும் சொல்லும் படியா ஒண்டும் இல்லை.வீட்டு பின் வளவு முழுவதும் அருகம் புல்லும்,கோரைப் புல்லும் அள்ளு கொள்ளையா வளர்ந்து கிடந்த காணியில் ஆடு அது பாட்டுக்கு மூன்று நேரமும்  மூத்திரம் பேஞ்சு கொண்டு , 
மூன்று நேரமும்   மேஞ்சு கொண்டு நிக்கும்.

                                         முக்கியமா இழுப்பு வியாதியால் அவதிப்பட்ட என்னோட ஒரு தம்பிக்கு ஆட்டுப்பால் தேவைக்கு தான் ஆடு எப்பவும் எங்கள் வீடில் நின்றாலும்,அது குட்டி போட வைக்க அதுக்கு கலியாணம் கட்டும் நிகழ்வு வருஷத்தில் ஒரு முறை எப்பவம் நடக்கும், மற்றப்படி ஆட்டுப் புழுக்கை எங்கள் வீட்டின் பின்னால நின்ற வாழை மரத்துக்கு உரமாக,ஆட்டுக் குட்டிகள் எங்கள் வீட்டின் நடு ஹோலில் துள்ளி விளையாடும் செல்லப் பிள்ளைகள் போல வளரும்.

                                         எங்கள் வீடுக்கு கொஞ்சம் தள்ளி இலுப்பையடி சந்தியில் இருந்த " ஆட்டுக்கு விடுற சங்கரன் " என்பவரின் வீட்டில்தான் கெடாய் ஆடுகள் இருந்தது, " ஆட்டுக்கு விடுற சங்கரன் " எண்டு அவரை சொல்லுவார்கள் ,அப்படிச் சொல்லவதால் எசகு பிசகா தப்பாகா நீங்க நினைக்கக்கூடாது, அவரிடம் நிறைய சீமைக் கெடாய் வைத்து ஆட்கள் கொண்டு வரும் மறியாடுகளுக்கு கொஞ்ச நேரம் கலியாணம் கட்டி வைப்பதால் அவரை அப்படி சொல்லுவார்கள். 


                                               சங்கரனும் சுருட்டைத் தலை முடியோட ,வாட்ட சாட்டமான சீமைக் கெடாய் போல எழும்பின ஆம்பிளை,எப்பவும் சாரத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டு ,சீமைக் கெடாய் போல நாடியில் கொஞ்சம் ஆட்டுத் தாடி வைச்சு அதை எப்பவும் தடவிக்கொண்டு இருப்பார்.

                                 ஆடு எப்பவும் கத்தி சத்தம் எழுப்பாது. அமைதியா ஆடாய்ப் பிறந்து தொலைத்த பாவத்தில் எங்களை பார்த்து பெரு மூச்சு விட்டுக் கொண்டு அடுத்த பிறப்பிட்க்கு ஏங்கிக் கொண்டு இருக்கும்.ஆனாலும் கொட்டிலில் கட்டின இடத்திலையே , கழுத்து இழக் கயிறில் ஒரு வட்டத்தில் நிண்டு சுழரும் ஆடு சில நாட்கள் திடீர் எண்டு அதிகாலை ஏக்கமாக

                         " செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே "..

எண்டு 16 வயதினிலே படத்தில வார பாடல் போல

                          " என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே "

              என்று கத்தும், அந்த சத்தம் சொல்லும் சந்தம் கொஞ்சம் விரகதாபம் போல இருக்க அம்மா உசார் ஆகி எங்க வீடுக்கு கொஞ்சம் தள்ளி அரசடிக் குறுச்சியில் வசித்த எங்க வீடில தென்னை மரம் ஏறி தேங்காய் பிடுங்கும் நட்சத்திரம் என்பவரை கையோட போய்க் கூடிக்கொண்டு வரச் சொல்லுவா,

                        நட்சத்திரம் வயதானவர்,வேட்டி கட்டிக்கொண்டு வருவார்,மேலே சேட்டு போடமாட்டார்,ஒரு சால்வையைக் கழுத்தில சுற்றிக் கொண்டு தென்னை மரத்தில ஏறுற மாதிரி கெந்திக் கெந்தி நடப்பார், வாயில எப்பவும் வெத்திலை போட்டு, பெரு விரலில் நிரந்தரமா சுண்ணாம்பு வைச்சுக்கொண்டு அதை இடைக்கிடை நாக்கில ஒரு இழுப்பு இழுத்து போட்டு, ரெண்டு விரலை சொண்டில வைச்சு அதுக்கு நடுவால பளிச் எண்டு துப்புவார் .

                      அவர் தான் ஆட்டை சங்கரன் வீடுக்கு இழுத்துக்கொண்டு போவார், அவரை கண்டால் ஆடு கொஞ்சம் கலியாணக் களை வந்த பெண்கள் போல சந்தோசம் ஆகிடும். உண்மையில் ஆடு கிளுன்வங் குழையை கையில வைச்சுக்கொண்டு அவர் இழுத்துக்கொண்டு போனாலும் ஆடு,குழையில இண்டரெஸ்ட் இல்லாத மாதிரியும்,கலியாணத்தில இண்டரஸ்ட் போலவும் விறுக்கு விறுக்கு எண்டு நட்சத்திரத்தை இழுத்துக்கொண்டு முன்னால போகும் .ஒரே ஒரு முறை நானும் ஆட்டுடன் சங்கரன் வீடுக்கு ஆடு கலியாணம் கட்டுறது பார்க்கப் போயிருக்கிறேன்...

                    சங்கரன் வீட்டு வாசலில் நாங்க ஆட்டோட நிக்க, சங்கரன் வந்து எங்கள் ஆட்டைப் பார்த்திட்டு ,

                     " சரி உள்ளுக்க கொண்டு வாங்கோ "

எண்டு சொல்லிப்போட்டு,

                       " சித்தப்பு , இவன் சின்னப் பொடியன என்னத்துக்கு இதுக்க இழுத்துக்கொண்டு வந்தனி "

                       எண்டு சொல்லிபோட்டு என்னை உள்ளுக்க விடவில்லை, எப்படியோ எங்க ஆடு வெளிய நிண்டு

                             " தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன் "

                                          எண்டு ஏக்கமா கத்த ,உள்ளுக்கு நிண்டு சீமைக் கெடாய்கள் எல்லாம் ஒரே நேரத்தில வில்லங்கமா தமிழ் சினிமா படத்தில வார வில்லன்கள் போல சத்தம் எழுப்பி சிக்னல் கொடுக்க, கொஞ்ச நேரத்தில எங்க ஆடு உள்ளுக்குப் போய்,கொஞ்ச நேரத்தில கலியாணம் கட்டி, கொஞ்ச நேரத்தில முகம் முழுவதும் சந்தோஷ திருப்தியுடன் வெளிய வந்து, திரும்பி எங்க வீட்டுக்கு வர மாட்டன், புகுந்த வீட்டிலேயே வாழப்போறேன் எண்டு அடம்பிடிக்க, அதுக்கு கிளுவங் குழையை காட்டியும் அது அசையிற மாதிரி தெரியவில்லை கடைசியில், அதைக் கொற இழுவையில் குழறக் குழற இழுத்துக்கொண்டு வந்தோம். 


                                            ஆடு வீட்டுக்கு வார வழி முழுவதும் சத்தியவான் சாவித்திரி நாடகம் போட்டு கொண்டு வந்து கொட்டிலில் கட்டிய பின்னும் கிடந்தது

                            " என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே "

என்று அழுது வடிந்து ஒரு கிழமையில் அடங்கி விட்டது.. bஆடு கொஞ்ச நாளில் வயிறு பெருக்குறதைப் பாத்து ,அம்மா ,

                     " அடி வயிறு இப்படி சளியுது இந்த முறையும் கெடாய்க்குட்டி தான் போடும் " எண்டா,

                         அதுக்கு பிறக்கு வாயும் வயிறும இருந்த ஆட்டுக்கு நாங்க பின்னேரம் சந்தியில் இருந்த பிலாப்பழ ஆச்சி வீடில போய் பிலாக் குழை குத்திக்கொண்டு போடுவோம். ஒரு வெள்ளிகிழமை காலை ஆடு முனகுற சத்தம் கேட்டு கொட்டிலுக்குப் போய்ப் பார்க்க ஆடு,ஏறக்குறைய குட்டியை வெளிய தள்ளி,வேதனையில் முகத்தை வைத்துக்கொண்டு நிக்க,அம்மா எங்களை அது குட்டி போடுறதை கிட்ட இருந்து பார்க்க விடவில்லை ,


                                             ஆட்கள் பார்த்தல் ஆடு  குட்டி போடாது எண்டு சொன்னா, எப்படியோ போட வேண்டிய நேரத்தில ஆடு குட்டியைப் போட்டுதான் ஆகும் எண்டு அவாவுக்கு சொன்னா பிரச்சினை வரும் எண்டு தெரிந்ததால் ஒண்டும் சொல்லவில்லை,

                                       தாய்  ஆடு முக்கி முக்கி பின்னங்காலை மடியப் பணிய வைக்க  ஆட்டுக்குட்டியின்  கால் நாலும் தான்  முதலில்  அதன் ஜனன உறுப்பில் இருந்து வர அம்மா  காலைக் கொஞ்சம் வெளிய  இழுத்து இழுத்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தாய் ஆடு இறுக்கி முக்கின முக்கில குட்டியைக்  கொளக் என்று  வெளிய தள்ளி விட்டது 

                               ஆட்டுக் குட்டியோடு ஊர்அரிசித் தவிட்டுக்  கஞ்சி போல நிறையத் திரவங்களையும்  தாய் ஆடு வெளிய தள்ளி விட்டது. குட்டி அந்தத் திரவத்தில் முழுதாக நனைந்து கால் நாலையும்  உதறி ஆட்டி அந்த இடத்தையே சகதி ஆக்கிவிட்டது. அதன் உடம்பு பச்சையாக இருக்க குளிரில் நடுங்கற மாதிரி அதன்  முழு உடம்பும் நடுங்கிக்கொண்டிருந்தது .

                                   அம்மா குட்டியின் முகத்தை சீலையால் துடைத்து , சளிபோல வாயில இருந்து வடிஞ்சதையும் கையால  வழிச்சு எறிஞ்சு அதன் முகத்தை மேல தூக்கி  மூக்கை பிடிச்சு  காற்றுவாங்கக்  கொடுத்தா. குட்டி கொஞ்சம் கொஞ்சமா நாலு பக்கமும்  தலையத் திருப்பி  மூச்சு விடத் தொடங்கத்  தாய் ஆடு வந்து நாக்கால குட்டியின் உடம்பு முழுவதையும் நக்கி எடுத்தது .

                                குட்டி போட்ட பிறகு இளங்கொடி எண்டு ஒன்று வெளியே சொப்பிங் பாக்கில தண்ணி நிரப்பின மாதிரி ஆட்டின் ஜனன உறுப்பில் இருந்து இறங்க அதையும் போடுறதை அம்மா கிட்டத்தில் இருந்து பார்க்க விடலை, பார்த்தால் இளங்கொடி போடாது எண்டு சொன்னா ஆடு இளங்கொடியை வலியோடு முனகி முனகிப் போட்ட உடனையே அம்மாவே கூப்பிட்டு

                             " இளங்கொடி போடப் போக்குது போட்ட உடன அதை எடுத்து மாட்டுத்தாள் பேபரில் சுற்றி பாசல் பண்ணி அம்மச்சியா குள ஆலமரத்தில் கட்ட " சொன்னா,

                        " ஏன் அப்படிக் கட்ட வேண்டும் " எண்டு கேட்டதுக்கு

                             " அப்படி செய்தால் குட்டி நல்லா வளரும் "

                      எண்டும் சொன்னா. சொன்ன படியே செய்தோம்.ஆல மரத்தில ஏற்கனவே குட்டிகள் நல்லா வளர வேண்டும் எண்டு மரம் முழுவதும் வேற பல பொட்டல்கள் மரத்துக்குப் பாரமாகத் தொங்க்கிக் கொண்டு இருந்தது .

                               வீட்டை வர தாய் ஆட்டின் மடி தொங்கிக்கொண்டு இருக்க,அதன் முலைக்காம்பில் இருந்து பால் வடிந்தது,அம்மா அந்தக் கடும்புப் பாலை கறந்து எடுக்க, குட்டி மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டே ,

                         " என்னோட பாலை எதுக்கு பிறந்தவுடனே களவு எடுகுரிங்க, .....இந்த வீட்டில என்னோட சீவியம் கிழியத்தான் போகுது .. "

                               என்பது போல இயலாமையில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, அம்மா அந்தப் பால் முழுவதையும் எடுத்து சட்டியில ஊற்றிக் காச்ச அது மஞ்சள் நிறத்தில திரண்டு வந்தது ..

                        போட்ட கெடாய் குட்டியை முதல் நாள் முழுவதும் ஆடு வாஞ்சையுடன் நாக்கால நக்கிவிட அது ஒண்டுமே தெரியாத மாதிரி அப்பாவியாப் படுத்தே கிடந்து ,எங்களை


                                        " நான் ஏன் பிறந்தேன், நான் ஏன் பிறந்தேன்,நான் ஏன் பிறந்தேன்"

                                                       என்பது போலப் கண்ணை முழிச்சுப் பார்க்கிற மாதிரியும்,பார்க்காத மாதிரியும் கிடந்தாலும் , அடுத்தநாள் அது நாலு காலில் எழுத்து நிக்க முயற்சித்து ,தாய் மொழி கொஞ்சம் பழகி ,ரெண்டு நாள் தடுமாறி விழுந்து , மூன்றாம் நாள் பாலன்ஸ் பிடிச்சு,நாலாம் நாள் நாட்டியம் கொஞ்சம் ஆடப் பழகி, அஞ்சாம் நாள் எங்கள் அடுப்படியில் ஆட்டுப் புழுக்கை போட்டு, ஆறாம் நாள் வீட்டு நடு ஹோலில் மூத்திரம் பெய்து. ஏழாம் நாள் அது எங்கள் குடும்ப அங்கத்தினர் ஆக,ஏறக்குறைய அதை பார்த்துக்கொண்டு இருப்பதே சுவாரசியமா இருந்தது. அது வீடு முழுவதும் ஓடித் திரியும், 

              " என்னை ஏன் பெத்தாய் என்னை ஏன் பெத்தாய் " 


                          எண்டு அம்மா ஆட்டோடு சண்டை பிடிக்கும் , முகத்தை முகத்தோடு உரசும் , முன்னம் காலில் துள்ளிக் குதிக்கும், பின்னம் காலில் பாயும் ,பின்னுக்கு வாழை மரங்களுடன் கிளித் தட்டு விளையாடும்,கிணத்தை எட்டிப் பார்க்கும்,களைத்துப் போய் ஓடி வந்து


                           " பால் முழுவதும் எனக்குதான் " என்பது போல முட்டி முட்டி உறிஞ்சி உறிஞ்சிப் பால் குடிக்கும் ,


                          மார்கழி மாதம் அடை மழை நேரம் , ஆட்டுக் கொட்டில் தகரத்தில் மாரி மழை அள்ளிக் கொட்டி டொக்கு டொக்கு எண்டு விழுந்து அதிர வைக்கவும், மழைக் குளிரிலும் ஆட்டுக்குட்டி பயந்து இரவெல்லாம் கத்தும். சத்தமில்லாம் இருட்டோ இருட்டா அதை வீட்டுக்க கொண்டு வந்து வைச்சால், அது வீட்டுக்க நிண்டு

                           " அம்மே அம்மே , அ ம்மே அ ம்மே ,அம் மே அம் மே , அ ம் மே அ ம் மே "

எண்டு அம்மாவையும் கொண்டுவா எண்டு கத்தும்,அந்த சத்தத்தில் அம்மா எழும்பி

                                 " இவன் என்னடா மனுசரை அசந்து நித்திரை கொள்ளவிடாமல்க் கொல்லுறான் ,ஏண்டா மிருகங்களை வீட்டுக்க கொண்டுவந்து உயிரை எடுகுறாய், நீ பேசாமா போய் ஆட்டுக் கொட்டிலுக்க படடா "  எண்டு சண்டை தொடக்குவா .

                                 ஒருநாள்க் காலை ..... 


                       ஆட்டுக் கொட்டிலில் சிலமன் ஒண்டும் இல்லை எண்டு வந்து எட்டிப் பார்க்க,ஆடு அலங்கோலமாய் விழுந்து கிடந்தது, அதன் வாயில நுரை தள்ளி, முகத்தில இலையான் மொய்க்க, ஆட்டுக் குட்டி அப்பவும் பால் குடிக்க ஆட்டை இடிச்சு இடிச்சு எழுப்ப, ஆடு எழும்பவில்லை,அம்மா வந்து பார்த்திட்ட ,

                            " கொஞ்சநாள் ஒரு மாதிரி தான் நிண்டது, நான் நினைச்சது சரியாதான் போச்சு "
                      

                                               எண்டு சொன்னா,வேற ஒண்டுமே சொல்லவில்லை. குட்டி எங்களை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டு அம்மா அம்மா எண்டு கத்த,அம்மா ஆட்டுக் கல்லில் இருந்துகொண்டு,

                      " வாழை மரத்துக்கும், மாதுளை மரத்துக்கும் நடுவில கிடங்கு வெட்டச் " சொன்னா.


                            " அவடதில தானே  முன்னம்  கறுத்தப்  பூனை செத்த போது தாட்டோம்  அம்மா "

                               " பூனை  இப்ப உக்கி மண்ணோடு மண்ணாகி இருக்கும் ,,நீ வெட்டு  முதல் "

                                   "   வேற  இடத்தில  தாப்போம்  அம்மா "

                              " என்னடா  உனக்கு  இப்ப வந்தது ,,நான்  சொல்லுறன்  வெட்டு எண்டு நீ சங்கிராந்தி வைக்கிறமாதிரி  கதைக்கிறாய் "

                              "  ஆடு  பாவம்,,அதுக்குக் தனி  இடம்  தனிக்  கிடங்கு  வெட்டினால் நல்லம்  அம்மா "

                                   "   டேய்  செத்துப்போன  ஆட்டை வைச்சு  என்ன  நீ கொஞ்சிக் கொண்டு இருகிறாய் ,,புழுக்கப் போகுதடா  அது "

                          "    சரி  நீங்க  சொன்ன இடத்திலையே  வெட்டுறேன் "

                          மண்வெட்டியை  எடுத்துக்கொண்டு போய்க் கிடங்கு வெட்ட ஆட்டுக் குட்டி அப்பவும் கிடங்கைச் சுற்றி துள்ளி துள்ளி ஓடி விளையாட ,அம்மா ஆட்டை இழுத்துக்கொண்டு போக சொன்னா,எனக்கு ஆட்டைப் பாக்க பாவமா இருக்க,அதை தூக்கிக்கொண்டு போக முயற்சிக்க அது பாரமா இருக்க,அம்மாவுக்கு கோவம் வந்திடுது,

                              " பின்னம் காலில பிடிச்சு இழுத்துக் கொண்டு போடா, செத்த ஆட்டை வைச்சு கொண்டு இவன் என்னடா தாலாடுப் பாடிக்கொண்டு நிக்குறான் ,இழுத்துக்கொண்டு போடா "

                              எண்டு சொன்னா,நான் நிலத்தில தேயும் எண்டு முடிந்தளவு ஆட்டுக்கு நோகாமல் அதை இழுக்காமல் தூக்கியே கொண்டு போய்க் கிடங்கில வளர்த்தினேன்,

                              ஆடு கிடங்கில கிடந்தது மேல பார்த்துக்கொண்டு இருந்தது, அதுக்கு போற வழிக்கு ஒரு தேவராமாவது பாடி வழி அனுப்பி மண் போடுவம் எண்டு நினைக்க அந்த நேரம் பார்த்து ஒரு தேவாரமும் நினைவில வரவில்லை ,

                           " அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா, அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா ,,"

                                என்ற சினிமாப் பாட்டுதான் திருப்பி திருப்பி நினைவு வந்தது. இந்தப் பாட்டு செத்த வீடுக்கு உதவாது எண்டு போட்டு வீட்டுக் ஹோலில இருந்த பிள்ளையார் சிலையில இருந்து கொஞ்சம் திருநீறு எடுத்துக்கொண்டு வந்து அதன் தலையில பூசிப்போட்டு,

                          " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு ...................... "

                          எண்டு பாடி முடிய, ஆடு ஒருக்கா தலையை சரிச்சுப் பார்த்திட்டு திருப்பி படுத்திட்டுது,மண்ணை சலிச்சு மூடிப்போட்டு அதுக்கு மேலே செவ்வரதம் பூ ஒரு கொப்போடு பிடுங்கிக் கொண்டு வந்து வைச்சுப்போட்டு, ஆட்டுக்குப் பிடித்தமான கிளுவங் குழையும் கொஞ்சம் மேல குத்தி வைச்சு முடியும் வரை அம்மா ஆட்டுக் கல்லில் இருந்து பார்துக் கொண்டு இருந்தா,


                          " இப்ப  என்னத்துக்கு  ஆட்டுக்கு  தேவாரம்திருவாசகம்  படிக்கிறாய்  " 

                       "  அதுவும்  ஒரு  ஆத்மாதானே  அம்மா  " 

                       " விட்டா செத்துப்போன   ஆட்டுக்கு நூற்றி எட்டு சங்கு வைச்சு சங்காபிசேகம் செய்வாய் போல இருக்கே "

                             " இல்லை  அம்மா  அது பாவம்,,எங்களோடு வாழ்ந்து இருக்கே "

                                    "  டேய்  அது  கால்நடை ,,காலால் மட்டும் நடக்கும்,,அதுக்கு  எங்களைப்போல  ஜோசிக்கத் தெரியாது "

                        "   ஹ்ம்ம்,,,ஆனால்  நான்  அப்படி  நினைக்கவில்லை  "

                            என்றேன்  . அம்மா  அதுக்கு  ஒண்டும் சொல்லவில்லை,

                                      அம்மா அந்த ஆட்டுக் குட்டியை பிறகு கொஞ்சம் வளர வித்தா, அதுக்குப் பிறகு எங்கள் வீட்டில் ஆடு வளர்க்கவில்லை,ஆட்டுக் கொட்டிலை கொஞ்சம் சிமெந்து போட்டு ஒரு ஸ்டோர் போலக் கட்டி ,அந்த இடத்தில ஒரு காலத்தில் ஆடு நின்ற நினைவுகள் மட்டும் அதன் சுவர் முழுவதும் அப்பி இருந்தது . காலம் வரைந்த கோடுகளில் ஆட்டின் உருவமும் ,சத்தமும்  மட்டும் அதில இருந்தது 


                                                           ஒரு கட்டத்தில் நாங்க எல்லாருமே அந்த வீட்டை விட்டு தேசிக்காய் மூட்டையை அவுத்துக் கொட்டின மாதிரி ஒவ்வொரு பக்கத்தால சிதறிப் போன்னோம், ஆடு வளர்த்த அம்மா அமரிக்கக் கண்டத்தில,ஆட்டுப்பால் முட்டு வருத்ததுக்குக் குடிச்ச தம்பி கனடாவில.   மற்ற  உடன் பிறந்த  சகோதரங்கள் கார்த்திகைக்குப்  பின் மழையும் இல்லை கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை என்று 
 ஒவ்வொரு நாட்டில, ஒவ்வொரு கோலத்தில.

                        இது தான் வாழ்க்கை.!!!.




அன்றோமிடாவின் அலை பாயும் கூந்தலில்...

எங்கள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வசிக்கக்கூடிய கிரகங்கள் இருக்குதா என்று சில நண்பர்கள் என்னிடம், நான் என்னவோ நாசாவில் அஸ்ட்ரோ பிசிக்ஸ் வின்ஞானி வேலை பார்ப்பது போலக் கேட்டார்கள். இப்படிக் கேள்வி பலருக்கு இருக்கு, அதுக்கு முக்கிய காரணம் வேற்றுக் கிரக வாசிகள் வந்தார்கள்,போனார்கள் எண்டு நிறையக் கதைகள் இருக்கு, அதெல்லாம் இன்னும் நிரூபிக்க முடியாத சுவாரசியமான கதைகளாகவே இருந்த போதும் அது பற்றி எழுதிய கவர்ச்சியான புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்றும் இருக்கு, 

                         அதில உள்ள இன்னுமொரு குழப்பம் அப்பப்ப நாசா வேறு புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது எண்டு தலைப்பு செய்தி கொடுப்பதும், அது அங்கேயும் போய்க் காணி வேண்டி வீடு கட்டலாம் எண்டு கொடுக்கும் ஆர்வமும் காரணம், இன்றைவரை 305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ள விபரம் நாசா சயன்ஸ் நியூஸ் சொல்லுது.

                                நாங்க வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் பிரமாண்டமானது, அதுதான் முதல் பிரச்சினை எங்கள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே இன்னும் ஒண்டுமே உறுதிபடுத்தும் அளவில் கண்டு பிடிக்க தடையா இருப்பது. எங்கள் சூரியக் குடும்பத்து கோள்களில் மனிதர்கள் போன்ற உயிர்கள் வாழும் கிரகம் இல்லை,போனாப் போகுது எண்டு செவ்வாய்க் கிரகத்தில் பக்டிரியா போன்ற மைகிரோ லெவல் உயிர் இருக்கலாம்., அயலில் உள்ள அல்பா செந்தூரி சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தில் சித்தப்பா,பெரியப்பா,அத்தை,மாமி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அங்கே போகவே ஒளியின் வேகத்தில் நாலரை வருடம் பிரயாணம் செய்ய வேண்டும்,

                                           ஒரு ஒளி ஆண்டு 9.5 டிரில்லியன் கி.மீ, இன்னும் ஒளியின் வேகத்தில் பறக்கும் தொழில் நுட்பம் தியரி வடிவிலேயே இல்லை. அப்புறம் எப்படி வேறு கோள்கள் இருக்கு எண்டு உலகக்கோப்பை காலப் பந்து ஸ்கோர் விபரம் போல சிம்பிளா சொல்லுரார்கள் எண்டு கேட்பிங்க, சொல்லுறேன். ஆனாலும் உண்மையில் புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி அண்மையில் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லுரார்கள். முக்கியமா எங்கள் பால் வீதி கலக்ஸ்ஸிக்கு மிக அருகில் உள்ள ஒன்றுவிட்ட உறவு முறையான அன்றோமிடா கலக்ஸ்சியின் அலை பாயும் கூந்தலில் நிறைய நம்பிக்கை நட்சத்திரங்கள் இருக்கு எண்டு சொல்லுறார்கள் 


                                       கோள்கள் தனியா சுயமாக ஒளி உமிழ்வதில்லை, நட்சத்திரங்கள் என்ற சூரியன்கள் ஒளியுமிழும், அதால தான் இருட்டான வானத்தில் நிறைய வெள்ளிகள் மின்னுது. அதை நாங்க பார்க்க முடியும். பிரபஞ்சத்தில் கோள்கள் தனியாக இல்லை,எப்படியோ ஒரு சூரியனையோ,அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூரியனையோ சுற்றிக்கொண்டுதான் கோள்கள் இருக்கும், எங்கள் சூரியன் ஆடிக்கொண்டு இருக்கு, காரணம் அதை சுற்றி பல கோள்கள் சுழறுவது, அந்த கோள்களை இழுத்து வைத்து இருக்கும் சூரிய ஈர்ப்பு விசை,கோள்களின் பருமன்,சரிவு ,தூரம் கொடுக்கும் சமனற்ற தன்மையில் உருவாகும் இழுவிசை எங்கள் சூரியனை வைச்சு ஆட்டுது. 

                        எங்கள் கண்ணுக்கு அது ஆடுறது தெரியாது, ஆனால் ஆடுது, அதே போல பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள தொலை தூர நட்சத்திரங்கள் ஆடுது, அப்படி ஆடும் நட்ச்சத்திரங்களை சுற்றிக்கொண்டு கோள்கள் இருக்கலாம் எண்டு சொல்லுறார்கள், அதை கெப்ளர் போன்ற விஷேட தொலை நோக்கிகளால் அவதானித்து கோள்களில் இருப்பிடம்,அளவு,சொல்லுறார்கள்.

                                      பூமியிலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் கெப்லர் 186எஃப் என்ற ஒரு கோள் பூமி போலவே இருக்கு எண்டும், காதல் செய்து கலியாணம் கட்ட மிதமான வெயிலும், தொட்டில் ஆட வைக்க மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த கோளில் மதுபான வடி சாலைக்கள் உருவாக்க தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் சொன்னார்கள். கேட்க சந்தோசமா இருந்தது,இதை விட வேற என்ன ஒரு புதுக் கோளில் வேண்டும் ,சொல்லுங்க பார்ப்பம், ஆனாலும் அது பூமியைவிட 10 மடங்கு பெரியதாகவும், பாறைகள் நிறைந்தும், அதிக ஈர்ப்பு சக்தியுடன் இருக்கிறது என்றும் சொல்லுறார்கள்.

                                    சில வருடம் முன்னர் வின் வெளிக்கு அனுப்பிய கெப்ளர் தொலை நோக்கியின் அல்பா,காமா கதிர்கள் புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடல் தொடங்கியபின் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன . இதுவரை கோள்கள் எண்டு அடையாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை சில வருடங்களியே வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதில் பூமி போலவே சாதிச் சண்டை ,இனச் சண்டை,மொழிச் சண்டை,மதச் சண்டை,எல்லைச் சண்டை பிடிக்கக் கூடிய கிரகங்களும் இருக்கு எண்டும் உத்தரவாதம் தந்து நெஞ்சில பாலை வார்க்கிறார்கள் நாசா ஜோன்சன் ஸ்பேஸ் செண்டர் விஞ்ஞானிகள்.

                                        நாங்கள் ஏன் வேறு பூமி போன்ற கோள்களை வேலை மினக்கெட்டு தேட வேண்டும் எண்டு ஒரு கேள்வி இருக்கு .ஒரு காரணம் சில வேளை எங்களைப் போலவே மனிதர்கள் அங்கே வசித்தால்,தொடர்பு ஏற்படுத்த , அடுத்த முக்கிய காரணம் எங்கள் எல்லார் தலை விதியிலையும் ஏற்கனவே எழுதி இருக்கு. நாங்கள் வசிக்கும் பூமியை இன்னும் சில மில்லியன் வருடத்தில் எங்கள் சூரியன் விழுங்கி, அதுவும் வெடித்து சிதறப் போகுது,அந்த நேரம் மனித இனம் வேறு ஒரு கிரகத்தில் இடம் தேடித் போக வேண்டும்,அதுக்கு இப்பவே வேற கிரகம்,அண்மையில் உள்ள சூரிய தொகுதியில் தேடிப் பிடிச்சு வைக்க வேண்டும் , மில்லியன் வருடங்களில் ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்யும் தொழில் நுட்பம் வரப்போகுது.

                              சும்மா டாக்சியில் ஏறிப் போற மாதிரி எல்லாரும் இந்தப் பூமியைக் கைவிட்டு வேற ஒரு கோள் போயே ஆக வேண்டும், அங்கே போயும் கோள் மூட்டவும் ஒரு கோள் இருக்கும் அந்த நேரத்தில், கடைசியா பெட்டி படுகையோடு ,நானோ டெக்னோலோயியில் டிக்கெட் புக் பண்ணி, ஹிலியம் 3 என்ற ஹைபர் எனேர்யி சக்தியில் இயங்கும் இன்டர் கலக்ஸ்சி ரொக்கெட் இல் சுப நேர ராகு காலம் பார்த்து , வலது காலை வைச்சு ஏறும் நேரம் மறக்காமல் காணி உறுதி, காணி எல்லைச் சண்டை வழக்கு போட்ட பதிவுகள் , நகை நட்டு, அடிப்பெட்டியில் மறைச்சு வைச்ச சீட்டுப் பிடிச்ச காசு, நிலத்துக்க தாட்டு மறைச்சு வைச்ச வைப்பு சொப்பு எல்லாத்தையும் மறக்காமல் அந்த நேரம் எடுத்துக்கொண்டு போனால் சரி,


                  அவளவுதான் , ஜோசிக்கிற மாதிரிப் பெரிய கஷ்டம் ஒண்டும் இல்லை.

.

சந்தேகமில்லாத காரணங்கள்..

நியாயம் 
பெற்றுக் கொள்ள 
முடியாத
இறந்தகால 
அநியாயம் ஒன்றின் 
பெறுமதியை
நியாயப்படுத்த 

முயற்சிப்பது போல
கவிதை எழுத
சந்தேகமில்லாத
காரணங்கள்
தேவைப்படுகிறது......

மனம் நிறைந்து
மறந்து போன
காதல்ப் பாடல்களை
மறுபடியும்
கிட்டாரில்
ரசித்து வாசிக்க...

சொல்லாமலே
தொலைந்து போன
கவிதைகளைத்
தேடி எடுத்து
இதயத்தோடு நேசிக்க,

இரக்கமில்லாமல்
இழந்து போன
வார்த்தைகளை
நித்திரையில்
உளறிப் பிசத்த,

சந்திக்காமலே
கடந்து போன
காலதுக்காக
காலம் கடந்து
கண்ணீரோடு 

கவலைப்பட ,

பதட்டத்தில்
பார்க்க மறந்த
கடிதங்களுக்கு
பரிதாபத்தில் 

பதில் போட,

அந்நியப்படுத்த முடியாத
இவைகளை வைத்து
நிகழ் காலத்தில்

புனைகதைகள்
எழுதித் தள்ள
காரணங்கள்
தேவைப்படுவதில்லை,

ஆனால்
ஒரு கவிதை எழுத
மூன்று காலத்திலையும்

சந்தேகமில்லாத
காரணங்கள்
எப்பவுமே
தேவைப்படுகிறது!.


.

நாங்கள் மறந்த போதும்.....,

குச்சு ஒழுங்கைகள் 
மனம் உவந்து 
ஒன்றையும் 
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு 

விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை.....

வீட்டைக் காலி செய்து
போனவர்கள்
வழி முழுவதும்
திட்டித் தீர்த்த
இயலாமையின்
வார்த்தை....

கல்யாணத்தின்
மங்களத் தொடக்க
ஊர்வலத்தில்
தவிலோடு
நாதஸ்வரதிலிருந்து
வழிந்த
" வாராய் என் தோழி
வாராயோ ",

மரண வீட்டின்
கடைசி
ஊர்வலத்தில்
பாடைக்கு முன்னால
இழவுப் பாடகர்கள்
செத்துக்கொண்டே
பாடிச் சென்ற
பட்டினத்தார் பாடல்....

வண்ணாத்திப் பூச்சியைத்
திரத்தி திரத்தி பிடிச்ச
குழந்தைகளின்
எண்ணமெல்லாம்
வஞ்சகமில்லாச்
சிரிப்பு ....

ஒழுங்கை முழுவதும்
தனக்கே சொந்தம் எண்டு
உயில் எழுதிவைச்சு
ஓயாமல் குரைத்த
தெருநாயின் ஓலம்,...

மாலைக் கருகலில்
பதுங்கி மயங்கி
நெருங்கிக் கிறங்கி
நின்று
காதலர்கள் சொன்ன
ரகசிய வாக்குறுதிகள் ....

வெத்திலை பாக்கை
போட்டு மென்று
விழுங்கி
சிவப்பாகக்
காறித் துப்பியவர்களின்
கரகரப்புக் குரல் ,

தலைகரன வெறியில்
தறிகெட்டு
வேலியப் பிடிச்சு
தவண்டு வந்தவர்களின்
நடு இரவுத்
தத்துவ முத்துக்கள் ,

நிறுத்தி நிறுத்தி
சிணுங்கியே
கீதம் இசைத்த
தபால் காரனின்
சைக்கிள் மணி ,

"அம்மா பால்
அம்மா பால் "
என்று
குரலில்ப் பால் கறந்த
பால்காரனின்
வெள்ளைக் குரல் .....

அய்யா
புண்ணியத்துக்கு தர்மம்
போறவழிக்கென்று
படலையத் திறந்தவனின்
அலுமினியத் தட்டில
சிதறி விழுந்த
சில்லறை ..

அவசரத்துக்கு
நிண்டுகொண்டே
ஓரமாக
ஒண்டுக்கு
ஒதுங்கியவனின்
மரியாதையை
இழந்து போன
மவுனம்....

நின்று நிதானமா
ஜோசிக்கும் நாங்கள்
நல்லதையும்
கெட்டதையும்
மறந்த போதும்.....,

குச்சு ஒழுங்கைகள்
மனம் உவந்து
ஒன்றையும்
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு
விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை
!.


.