Tuesday, 11 October 2016

" உள்ளேயும் வெளியேயும் "

இவைகள்  கவிதைகளா  என்று  எனக்குச் சொல்லும்  அதிகாரம்  இல்லை. நீங்களே வாசித்தபின் ஒரு முடிவுக்கு வாங்க. சிலநேரம் இதை  எல்லாம் வாசிக்க   வைத்து   உங்கள்  பொன்னான  நேரத்தை வீணடிக்க வைத்து இருந்தால் ,தயவுசெய்து என்னை   மன்னித்துக்கொள்ளுங்கள். அப்படி  இல்லை என்று   இதில் ஒரு  கவிதையாவது உங்கள் நெஞ்சை மெல்லத் தொட்டுத்  திறந்திருந்தால்  அதுப்பற்றிய  கருத்தை சொல்லுங்க.
                                                   
                                                     தமிழ்மொழி  என்  தாய்மொழி . என் வாழ்வின் தவிர்கமுடியாத  தடம் . இது என்னோட  அந்நிய மொழிச்சுழல்  வாழ்வில்  எழுதுவதுக்கு எப்படி   என் ரகசியக் கனவுகளை விடியுமுன் எப்போதும் " உள்ளேயும்  வெளியேயும் "  விரித்து  வைத்து  விடுகிறது  என்பதுக்கும்   என்னிடம்  விளங்கங்கள்  இல்லை . காரணம்  நானே தமிழ்க் கலாசாரத்துக்கு   மிகவும்  ஒத்துவராத  ஒரு  இரவல்க் கலாச்சாரத்தைக்  கடன்வேண்டி   " உள்ளேயும்  வெளியேயும் " வாழுந்துகொண்டு  இருக்கும்  அற்ப அத்துப் பூச்சி .


                                                       நான் வசிக்கும் தொடர்மாடிவீடு  அதன்  " உள்ளேயும்  வெளியேயும் " பார்க்கும்   விசியங்கள் சில  நேரம்  என்னை அளவுக்கு அதிகமாக   உசுப்பிவிட்டு " உள்ளேயும்  வெளியேயும் "  வேடிக்கை  பார்ப்பது  போலவும் இருக்கு. அப்படி  நான்  பார்த்து அவைகளுக்கு உயிர்கொடுத்த கவிதைகள் தான் இவைகள். "  உள்ளேயும்  வெளியேயும்  " அங்காங்கே சிதறிக்கிடந்த சிலதை ஒன்றாக்கியுள்ளேன் .இனி இந்த  ஸ்டைல்லில்  எழுத விருப்பமும்  இல்லை ......மென்று விழுங்கும்

அமைதி எல்லாவற்றையும்
வரவேற்பு வாசல்களில்
கழட்டிவிடும் உத்தேசத்துடன்
ஒரு சிட்டுக்குருவியின்
மெட்டுப் போலத்தான்
தொடர்மாடி உள்நுழைவுக்கதவு
அழைப்புமணி
சிணுங்கும் போதெல்லாம்
அன்பொழுக அழைக்கும்,
அது யாராக இருக்கும் ?
எதற்க்காக அவசரம்மென்று ?
காலடிஓசைகளைக் கேட்கும்வரையில்
அறியவே முடிவதில்லை,
சின்னக் குழந்தைகள்
ஏறி உஞ்சலாடி உலாப்பாடி
பஸ் ஒட்டும் போது
இடறலாக தட்டுப்பட்டதுண்டு,
வீடு மாறிப்போன ஒருத்தி
ஒரேயொருமுறை
இலக்கம் மாற்றி ஒற்றியதுக்காய்
மன்னிப்புக்கேட்டாள்,
நடுச்சாமம்
மப்பு மயக்கத்தில்
துப்புக் கிடைக்காத ஒருவன்
தூசனத்தில் திட்டியிருக்கிறான்,
திறப்பைத் தவறவிட்ட
அயல்வீட்டு வெள்ளைமனிதன்
அதிகாரமாக அடித்து எழுப்பியிருகிறான்,
மற்றப்படி
தவறுதலாக யாருமே அதை
அமுக்கியதில்லை,
பரஸ்பர விருந்தினர்களோ
நெடுநாளைய நண்பர்களோ
தற்காலிக காதலிகளோ
நெருங்கிய உறவினரோ
விசாரிக்கவும் யாரும் வருவதேயில்லை
அதனாலோ தெரியவில்லை
என்னை அதுவொரு
பிச்சைக்காரன் போலவே பார்க்கும் !
என்அந்தரங்கம் பாதிக்காத வரையில்
என்ன வந்தது ?
ஒரு அழைப்புமணியின்
பரிகசிப்புக்கள் நிறைந்த பார்வையில்
முட்டாளாகவே இருப்பது
எவளவு பாதுகாப்புத் தெரியுமா ?.........................................................................................................குறுக்குவாக்கில்
நாற்பத்தெட்டு அங்குலங்களில்
வண்ணத்திரையில் 
மிகத்தெளிவான நிறங்கள்
பருத்தித்துறை வடையின்
தட்டுத் தடிப்பில்
நடுவீட்டில் டியிட்டல் டெலிவிசன்,
பார்க்கமுடியாத அவசரங்கள்
திரத்திக்கொண்டிருக்கும் போதும்
கொஞ்சிக் கேட்கும்
தித்திப்பு அவதானிப்புக்கள்
கன்னம் உரசிவிடு என்று கெஞ்சும்,
எப்பாவது
அதன் திரையைத் திறந்தால்
எரிச்சலூட்டும்படியாக
சுதேசிய சேவையின்
தலைப்புச்செய்திகளில்
குண்டுவெடிப்பில் தலைகள் உருளும்,
உலகத்தின் எல்லாவிதமான
இம்சைகளையும்
தொலைதூரக்காட்சியாக்குவதை
எதற்கு நான்பார்க்கவேண்டும்?
நாட்டு நடப்பில்
நல்லதே காட்டுவதுக்கில்லையாவென்று
நீரலைகளை ஏங்க வைக்க
கால்களை நீட்டிவைத்து
சோபாவில் சரியும்போது
ஒரு படத்தோடு நெருக்கமாகி
என்
பார்வைகளைச் சிதறடிக்காமல்
இழுத்துப்பிடிக்கும் தந்திரம்
முடிவுவரை உக்காரவைக்கும்,
தொண்ணுற்றி ஒன்பது
தேவையற்ற சனல்களின்
சாத்தியங்களுக்கு
மாதாமாதம் படிஅளந்தாலும்
எப்போதாவதில்லை எப்போதுமே
மிகநல்ல மோகினிகளின்
மிகவும் கேடுகெட்ட சாத்தான்களின்
கனவுகள் எழுந்துவந்து
கதைகள் சொல்லப்போவதில்லை
அதனால்
அதுவும் இருந்திட்டுப்போகட்டும்!.......................................................................................எல்லை கடந்துபோய் ஆட
ஒருபக்கச் சுவரில்தான்
ரெண்டு சிறிய ஜன்னல்களும்
ஒரு இரட்டை ஜன்னலும்,
அதுவும் 
ஐந்தாவதுமாடி மலைகளோடு
பசுமையாக இமைகளேறி
முண்டிக்கொண்டிருக்கும் திசையில்,
அதன்
கனவுக்காட்சிப்படுத்தல்
பிரதேசங்களை மட்டுமே
வரையறையற்று
விழிவீசிப் பழகிவிடவேண்டுமென்று
அடம்பிடிக்கும்,
இது மாதிரி அபத்தங்களை
அதிகாலையில்
எதிர்கொள்ளவே வேண்டும்,
நின்றவாக்கிலேயே
குமுறிக் கொண்டிருக்கிறது
ஜன்னலோரமரங்கள்,
மழைத்துளிகளின் தூரத்தில்
முகடுகளில் சன்னமாகத் துவங்கி
சரிவுகளின்அடியாழதுக்கு மன்றாடி
ஒப்பனைகளற்ற பாவனை
இங்கிருந்து அங்குவரை
பரவிக்கொண்டு பரபரக்கிறது,
அதன்
அகலத் திறந்து பார்வையில்
ஒருபொழுதேனும்
கற்பனைகள் நிலைகொள்வதில்லை
இந்த
இலையுதிர்காலம்
பருவங்களின் வரப்பிரசாதம்
தந்ததிலேயே சிறந்தது,
வேறென்னசொல்ல
அற்புதமான மனக்காட்சி
சங்கேதங்களின் பின்னிணைப்பு
அடைபட்ட விருப்பங்களில்
மறந்துபோய்விட்ட
எல்லாவற்றையும் திறந்துவிடுகிறது
நாலு ஜன்னல்களும் !.........................................................................................பத்துப்பேரைக்
கூட்டிக்கொண்டுவந்து
உக்காரவைத்து உரையாடுவது போல
பண்பலை வானொலி
உளறிக்கொண்டிருக்கும்,
அதிர்வுகள் அலைக்களிக்காத
இசை அமுங்கிவரும்
ஒரு
அடக்கமான மூலையில்தான்
அதை வைத்திருக்கிறேன்,
ஊரெல்லாம்
உறங்கிய பின்னிரவில்
முடிவில்லாக் கனவுகளுக்கும்
வடிகால்தேடும் அரவணைப்புக்களுக்கும்
நேயர்விருப்பம்போலக்
காதல் பாடல்கள் எடுத்துத்தரும்,
கவனிக்கப்படாத
பகல் முழுவதுக்குமான
தருணங்களின் கணங்களில்
முக்கிய செய்திகள்
காற்றோடு போய்விடும்,
அக்கறை எடுக்கவேண்டிய
காலநிலை பற்றியெல்லாம்
பருவ விபரம் சொல்லும்
நான்தான்
சித்தம்போக்கு சிவன்போக்கென்று
எது பற்றியும் கவலைகொள்வதில்லை,
என்
மவுனமான வெற்றிடத்தில்
இன்னொருவிதமான
பயணத்தின் தொடக்கத்தை
ஆற்று நீரலைகள் போலவே
அதுதான்
நேற்றும் இன்றும் எழுதிக்கொண்டிருக்க
நான்
காற்றிலேறி நீந்திக்கொண்டிருக்கின்றேன்
அதையும் சொல்லிவிடுகிறேன்.............................................................................................உங்களுக்கு
எதுவெல்லாம்
முக்கியமோ
அதுவெல்லாம் போல
என் கிட்டார் 
எனக்கு ,


யாருக்கும்
தெரியாமல்
அதை சித்திரவதை
செய்தாலும்,
என் வாழ்க்கையை
உறைபனிக் குளிர்போல
உறைந்துபோய் விடாமல்
வைத்திருக்கிறது ,

எனக்கு
இசை நண்பர்கள்
அதிகம் கிடையாது
அதனால்
தரம் பற்றிய
பிரச்சனையில்லை,

என்னுடைய
கிட்டார் உளறல்களை
அயல் வீடுகளில்
கேட்காமல்
கதவை இறுக்கி
வைத்திருக்கிறேன் ,

படுக்கையில்
மல்லாந்துபடுத்து
வாழ்க்கை பற்றிய
கவலையற்று
கலைந்த கனவுகளுக்கு
விரும்பிய
இசை வடிக்கலாம்,

எது
எப்படியோ
சுவாரசியமற்ற
வாழ்கையில்லிருந்து,
சுகதேகியாகப்
பாதுகாத்துக் கொள்ள
எப்பவுமே
தேவையாயிருக்கிறது
இந்த கிட்டார்!
........................................................................................

உறைபனிவரப்போவதை
நினைத்து விகசித்து
இப்போதே
விளையாடிவிடவேண்டுமமென்பதுபோல
அந்தச் சிற்றோடை
அவசரப்படுத்துகிறது,
ஒரு நரி
வெருட்டிய கால்அடையாளங்களும்
கரையில்ப் பதிந்திருக்கு,
தொடர்மாடிக்குப்
பின் ஒதுக்கமா வழிவதால்
அதிகம் கவர்ச்சியும்
கவனிப்புகளும்
கிடைக்காதபோதும்
சலனமான அமைதி இரவில்
மனதுக்குள் உள்ள போராட்டமாக
அது குரல் எடுத்துப்
பாடுவதைக் கேட்கலாம்,
மனித நடமாட்டம்
மருந்துக்குமில்லை,
ஒளிவுமறைவுகளோடு
காலநேரம் கடத்தும்
இலையுதிர்கால வெளிச்சம்
சிலநேரங்களில்
மினுக்கிவிட்டு அரிதாரம்பூசும்,
குழந்தைகளைநெருங்கவிடாததை
அது
மிகப்பெரிய குற்றமாக
பிரகடனப்படுத்தியது,
இரக்கப்பட்ட
வளைந்த மரங்கள்
விழுத்தும் நிழல்களில்
வசந்தகால வாழ்க்கை நினைவுகள்
பிரதிபலிப்பாக ஒட்டியிருக்கு,
திசைவழி தவறி வந்தசில
வாத்துக்களும்
ஒரு தனிப்பறவையும்தான் அதன்
இப்போதைய துணை!
இப்படிக் கடைசியில்முடிக்க வைத்ததே
ஆதரவற்ற வார்த்தைகள்தான்
சிற்றோடையைப் பொறுத்தவரை
கடைசியாக என்பதும் சரியானது அல்ல.!.......................................................................................................நெருப்புஅபாயமணி 
எப்ப அலறும் என்று சொல்லமுடியாது
ஆனால்
எப்பாவதுஒருநாள்
சாவு வீட்டில சங்கு போல
குய்யோமுறையோ என்று
சுதாகரிபுகளைக் கதறவிடும்,
அப்போதுதான்
அது என்னையும்
என் பாதுகாப்பையும் கவனிப்பது
மண்டைக்குள் மணியடிக்கும்,
அதன்
வெளியேற்றும் உத்தேசங்களுடனான
கர்ணகொடூர சத்தம்
குரல்வளையை நெரித்து
பிரசவகாலப் பெண்ணின்
வலிபோல முறையிட்டு
செவிப்பறையைக் கிழிக்கும்,
எழுந்துபோய்
சோம்பலாக கதவை நீக்கலாக்கி
என் ஒடுங்கிய நடைபாதைக்
கொரிடோரில்
புகைவருகுதா என்று பார்ப்பது,
அவளவுதான்
நான் தப்பித்தேன் என்ற
என்னோட சுயநலம்சார்ந்த
தற்பாதுகாப்பு,
யார் வீட்டில் அகாலமாகவோ
அலட்சியமாகவோ
என்னவும் நடந்திருக்கலாம்
அதையெல்லாம் ஏற்பதற்கு
அசாத்தியமான மனமும்
முனைமழுங்கிய நேசிப்புகளும் வேண்டும்.
சிலநேரம்
நட்டநடு ராத்திரியில்
இதயராணி ஒருத்தியுடன்
கனவில் சல்லாபிக்கும் போது
அது
ஒரேயடியாக அரக்கப்பரக்க
உதறி எழுப்பிவிடும்போது
வாய்க்குவந்தபடி திட்டியிருக்கிறேன்,
காலையில் அதைநினைக்க
வெட்கமாகவிருக்கும் !..............................................................................................அந்தப் பழுப்புநிலக்கரி நிற 
வயதான பூனைக்கு
எத்தனை வருடங்கள்
வயதாகியிருக்குமென்று
அது அசைந்த விதத்தில் சொல்லமுடியவில்லை,
நடையில் தள்ளாடினாலும்
ரோமமீசை முகத்தில்
வீறாப்பை விட்டுக்கொடுக்காமல்,
பச்சைப் புதருக்குள்
முறுக்கிக் குறுக்கிக்கொண்டிருந்தது,
ஒருவிதமான
கணக்குமுடிக்கும் தீர்மானிப்புக்களுடன்
நாட்களை எண்னுகிறது
அந்தப்பழைய வீடும்,
சின்ன வயசில்
இதேபோல பழுப்புநிற பூனையை
யூரியா சாக்கில் அடைச்சு
நடுச்சாம இருட்டில் மறைத்து
மீன்கடைச் சந்தையில்
கருவாடுவைச்சுக் கடத்திக்கொண்டுபோய்க்
கை விட்டது நினைவுக்கு வந்தது
அந்தப் பூனை
காலையில் அடுப்படியில் படுத்திருந்தது!
இந்தப் பூனைக்கும்
அந்த சம்பவம் தெரியும்போல
கோவத்தில மியாவ்வ்வ்வவ்வ்வ் என்றதில்
முப்பது சொச்ச வருடங்களின்
குற்றவுணர்வு எதிரொலித்தது.
இந்தப் பூனையைப்பற்றி
இதுக்கு மேலும்
புனைவுகளை நீட்டமுடியாது
என்று நினைக்க
பூனை குந்தியிருந்து
வாலை முன்னுக்கு இழுத்தெடுத்து
நாக்கால நக்கி எடுக்க
எனக்குத் தெரிந்த எல்லாப் பூனைகளும்
ஒரு தள்ளாடும் கனவுக்குள்
அழிந்தேபோய்விட்டன!.....................................................................................................என்னோட
ஞாபகசக்தி சரியென்றால்
ஆறுமாதங்களின் முன்
துருவக்கரடி படமிருக்குமிந்த
தேறலீனும் நைலோனும்
பருத்தியும் பின்னியிளைந்த
மிதியடியை வாங்கி
வாசலில் போட்டு வைச்சேன்,
சென்ற உறைபனிமுழுவதும்
உள்நுழையும்போது
சப்பாத்துக் குதிகளைத் தேய்த்தே
துருவக்கரடி இப்ப
தவளை போலாகிவிட்டது,
மிதியடியை
வேறென்ன தலையில் தூக்க்கிவைச்சு
சடையையா துடைப்பார்கள்?
கால்கடந்த இவளவு
இடப்பட்ட காலத்தில்
வெறுங்காலை வைத்த போது
குறுனிக்கற்கள் குத்தியதால்
ஒரேயொருமுறைதான்
வெற்றிடத்தூசியிழுப்பானை
அதன் முகத்தில் தேய்த்து
ஒத்துழைத்துவிட்டது நினைவிருக்கு,
நான்
குனிய நிமிராத
அவளவு சோம்போறியென்று
அதுக்கு நல்லாவே தெரியும்,
நேற்று
மோனோலிசா படம்போட்ட
புத்தம்புதிய மிதியடியைப் பார்த்தேன்
அதை விற்கமுயன்றவளின்
சிரிப்புக்கு அர்த்தம் விளங்கவில்லை.
இன்னும் வாங்கவில்லை
ஒருசமயம் வேண்டினால்
இந்த மிதியடியை
ஒரு நட்ச்சத்திரப் பால்வீதியிரவில்
ஒன்பதாம் மாடிக்கு ஏறிப்போய்
விசிக்கிவிட நினைத்து இருக்கிறேன்
அதுக்கும்
ஒரு நாளாவாது
பறக்கும் அசை இருக்கும்தானே !.....................................................................................மடிக்கணணி


அதிகமதிகமாய் மேசையிலதான்
ஆரவாரமாயிருக்கும்,
சிலநேரம்
பஞ்சுப் படுக்கையில்
பணிவாகக் கிடந்தது கொஞ்சும்,
பலமிழந்த நேரம்
சொகுசு சோபாவில்
அடக்கமான அமைதியாகவிருக்கும்,
ஒருநாள்த்தன்னும்
அதன் ஆசையை மதித்து
மடியிலணைத்து வைத்திருந்ததேயில்லை!
அதன் அசைவுகளை
நானே அகங்காரமாய்க் கட்டுப்படுத்த
அது எப்போதும்போல
என் இழுப்புக்கள் எல்லாத்துக்கும்
மறுப்பின்றி
இசைந்தபடியேயிருகிறது !
என் கழுத்து வலிக்கு அதுதான்
காரணமென்று
குற்றம்சாட்டியுள்ளேன்!
நேர மணித்துளிகளை
விழுங்கிவிடுவதாக
வெறுப்பாகி உள்ளேன்!
இல்லாத பிரைச்சினைகளை
கோர்த்துக் கொடுக்குதென்று
குமுறியிருக்கிறேன்!
இயங்க மறுத்து அடம்பிடித்த
ரெண்டு திரைகளின்
முகத்தில் குத்தி உடைத்துமிருக்கிறேன்!
ஆனாலும்
சலிக்காமல் இணையவலையில்
சல்லடை போட்டுத்தேடி
எனக்குப்பிடித்த
பரந்து விரியும் உலகத்தை
அதுதான்
காலத்தோடு கலந்துரையாடித்
திறந்தே வைக்குது,
அதன் ஜன்னல்களில்
அபரிமிதமாக ஆக்கிரமிக்கும்
முடிவில்லாத் தேடல்களில்தான்
நானே இயங்கிக்கொண்டிருக்கிறேன் !................................................................................வெறியேற்றவேண்டிய
பியர் மது எல்லைகடந்து
மயக்கும் போதுதான்
எல்லா உண்மைகளையும்
கக்கிவிடு என்று
கபடமான மொழி சொல்கிறது,
அப்பவும்தான்
சில மரியாதைகள்
வார்த்தைகளை வாயில் தடுக்குது,
பார்துப் பார்த்துப்
பதுங்கிப் போவதில்
உண்மைகளுக்கு உடன்பாடு இல்லை,
முத்திப்போன
முடக்கொத்தான் வெடித்ததுபோல
மதிப்பவர்கள் என்றபலர்
மிகமிகத் தந்திரமான
பின்மேடையில் கண்களைக்கட்டும்
வித்தைத் திருடர்கள்,
தெரிந்தும் விட்டுவைக்கவேண்டியுள்ளது!
உங்களைப்போலத்தான்
எனக்கும்
தலைக்குமேலே ஆயிரம் சோலி
சாவித்திறப்பு ஓட்டையில்
வலது கண்ணை வைத்து
ஆராய்ச்சி செய்ய நேரமில்லை,
நல்ல நண்பர்கள்
நீ எப்படி வீனாகிறாய்
என்பதையும்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்,
இயலாமையில் இன்றைக்கு
வெளியே பூக்களை
முகர்ந்துகொண்டிருக்கிறேன்
அதில வந்த ஆமணக்கம் வாசத்தில்
என் விருப்புக்களே
நிரம்பிவிட்டது !

...............................................................................

உன்
கடுங்கறுப்பு நிற
சின்னச் சப்பாத்துக்கள்
இனியுனக்குப் பொருந்தவேபோவதில்லை
அதன் வார்களையும்
நோகடிக்க விரும்பாமல்
தத்தித் தாவி நடைபயின்ற
வித்தைகளையுமது மறக்கவில்லை,
உன் உலகம் போலவே
பாதங்களும் இப்போது பெரிதாகிவிட்டது,
என் 
கனவுகள் போலவே
அதுவும் காலம்கடந்து விட்டது,
நீயிப்போது 
என்னைவிடஉயரமான
பெரியதனமான பெரிய மனுசி,
என்ன காரணமென்று 
சொல்லமுடியாததும்
விழுங்கமுடியாதுமான 
ஒரு நீண்ட பிரியமான நினைவில் 
மெல்லவே நோகாமல்த் துடைத்து
இப்பவும்தான் அதை
மிகமிக முக்கியமாக
எப்போதும் பார்க்கும்படியான
அடக்குத்தட்டில் வைத்திருக்கிறேன்
நீ வரும்போது
அதைப் பார்ப்பாய் 
அதைப்பற்றிப் கேட்பாய்யென்று 
நப்பாசையுடன்நினைப்பது
நீயோ அதைத்தவிர 
வேறெல்லாம் விபரிப்போடு கதைப்பாய்
காசுக்கொடுப்பனவுக்
கணக்கு வழக்குளில்
உனக்கு எப்போதும் தெளிவிருக்கும்
அதிலுன் பிஞ்சுவிரல்களின்
அக்குள் வியர்வைவாசம் 
இப்பவும் அப்பியிருக்கு
அதுவும் 
எனக்குமட்டுமே தெரியும்
இன்னொருமுறை 
நீயும் பிறக்கப்போவதில்லை
நானும்
அந்த வாசத்தில் சுவாசம் இருக்கும்வரை
இறக்கப்போவதில்லை.!


................................................................................